வெள்ளத்தில்…

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

பாரிஸ் அகிலன்.


நீயும் நானும் இல்லாதிருந்தபோது,
பல மில்லியன் வருடங்களாக,
எண்ணிலடங்காப் பிரக்ஞைகள்
தோன்றி மறைந்தன.

நீயும் நானும் இல்லாமற் போகும்போது,
இன்னமும் நீண்ட காலத்திற்கு
இன்னமும் எண்ணிக்கையற்ற
பிரக்ஞைகள் தோன்றி மறையும்.

நீயும் நானும் இருக்கும்போது,
உன்னையும் என்னையும் தாண்டி
எத்தனையோ சம்பவங்கள் சென்றுவிட்டன.
நீயும் நானும் கூட எத்தனையோ
சம்பவங்களைத் தாண்டிவிட்டோம்.

இதில் நீ, நான் என்பவற்றை அக்கறை
மையங்களாகக் கருதுவதை
;இனிக்கை விட்டுவிடுவோம்.

கரைபுரண்டு, அடங்கா மூரக்கங்கொண்டு,
அணையுடைத்துப்பாயும் வெள்ளத்தையதன்
செயல் வடிவத்தில் படம் பிடித்து,
ஒரு பிக்ஞையின் சில கணப்பரிமாணமாக,
புறத்திலிருந்து நோக்கியபோது
புலப்பட்டதைக் கூறிவிட நீ அல்லது நான்
கொண்ட பிரயத்தனங்கள்
காலாவதியடைந்து கலைந்து போயின.

நனோ செக்கன்களுக்கூடாக
நழவியோடிக்கொண்டிருந்த ஒரு
(உன்னுடைய அல்லது என்னுடைய என்றிராத)
பிரக்ஞையின் மீது நீயும் நானும் காலம்
தாழ்த்திப் பிரக்ஞை கொண்டபோது,
பிரமிப்பதற்கு மட்டும் ஒரு பிக்கோ செக்கன்ட்
அவகாசம் கிடைத்தது.

பிரவாகத்தில் நீ என்பதும் நானென்பதும் என்ன ?

கரைபுரண்டு, அடங்கா மூர்க்கம் கொண்டு,
அணையுடைத்துப்பாயும் வெள்ளப் பிரவாகத்தின்
மீதான பிரக்ஞை உன்னையும் என்னையும்
எதேச்சையாக ஒரே கணத்தில் தாண்டியபோது
நீயும் நானும் அப்பிரக்ஞையின் பயணத்திற்குப்
பாதையாகவிருந்தோம்.

நனோ செக்கன்களுக்கூடாக நழுவிக்கொண்டிருக்கும்
முடிவிலி எண்ணிக்கைப் பிரக்ஞைகளின்
முடிவுறாப் பயணங்களின் பாதைகளாக
நீயும், நானும், அவர்களும், எல்லோருமாக…

பிரமிப்பதற்குப் பிக்கோ சென்கன்ட் அவகாசம் உண்டு.

பிரக்ஞையின் மீதான பிரக்ஞை,
பிரக்ஞையின் மீதான பிரக்ஞையின்
மீது கொள்ளும் பிரக்ஞை,
பின்னர் இதன்மீது கொள்ளும் பிரக்ஞை.

கொள்ளடக்கங்களைக் கொண்டுள்ள கொள்ளுவான்களைக்
கொள்ளடக்கங்களாகக் கொண்டுள்ள கொள்ளுவான்கள்.

மொழியழிந்து, மொழியழிந்து,
வசமிழந்து போக,
கரைபுரண்டு, அணையுடைந்து வெள்ளம்பாய,
வழியிழந்து, வழியிழந்து…

இருப்புகளின் இரைச்சலுள்ள சந்தியிலே
நீயும் நானும் இருப்பது கண்டு பிரமிப்பதற்கு
இன்னமும் மிகுதியிருப்பது
ஒரு மில்லி செக்கண்ட் மட்டுமே.

Series Navigation

பாரிஸ் அகிலன்.

பாரிஸ் அகிலன்.