வெந்நீர் ஒத்தடம்!

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

சபீர்



வலிக்காத நேரங்களில் எனது வலது முழங்காலை எனக்கு மிகவும் பிடிக்கும். கால்பந்தாட்டத்தின்போது ரைட் அவுட்டிலிருந்து ஜாகிர் பாஸ் செய்த பந்தை ரைட் இன்னிலிருந்து வாங்கி கோலாக்கிய பள்ளிக் காலந்தொட்டு பல்லவனில் படியில் தொங்கி பயணம் செய்தது வரை மிக உதவியாக இருந்தது, இப்பொழுது சில காலமாகத்தான் வலிக்கத் துவங்கியிருக்கிறது.

வலிக்குக் காரணம் வயது தொடர்பான தேய்மானமோ மூட்டின் திரவத்தில் வழவழப்புக் குறைவோ எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது. ஆனால், வலிக்குக் காரணம் வேறு.

ஆறு மாதங்களுக்கு முன்பதாக என் ஐந்து வயது மகனோடு மாலை நாலு மணியைப்போல ஒரு மலையும் மலை சார்ந்த பகுதியுமான மேடு பள்ளமான தரையில் ஒற்றைக்கு ஒற்றையென கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது,
“வேகமா அடி டாடி” என்ற மகனின் உசுப்பேத்தலுக்கு சிலிர்த்து ஓங்கி பந்தை மட்டும் உதைவதற்கு பதிலாக, பார்வையின் ஒளிமுறிவு பிறழ்ந்ததால் பந்தை ஒட்டியிருந்த புற்குண்டையும் சேர்த்து எத்த… ராஜ்கிரண் கடிக்கும் குறுத்தெலும்புக்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு டிஜிட்டல் சப்தமும் தாங்க முடியாத வலியும் முழங்காலில் தெறிக்க நான் காலைத் தூக்கிப் பிடித்துக் கதறினேன்.

டீப் ஹீட், கோடாலித் தைலம் மற்றும் வெண்ணீர் ஒத்தடம் போன்ற சில்லறை சிகிச்சையில் மயங்கி என் பிரியமான வலது முழங்கால் வலி துறந்து வலுவானது! உள்ளுக்குள்ளே வஞ்சம் வைத்துக் காத்திருக்க அது ஒன்னும் தமிழ் வில்லன் நாசமாக்கிய கதாநாயகனின் குடும்பம் அல்ல என்பதால் நானும் முழங்கால் வலியைப் புறக்கணித்தேன்.

சென்றவாரம்வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

ஓர் அரைகுறைத் தூக்கத்தின் அதிகாலை விழிப்பில் லேசான வலியோடு எழுந்த நான் எல்லா நிவாரணிகளையும் பிரயோகித்தும் பயனின்றி வலி உக்கிரம் காட்டியது.

முறையான முன்பதிவு செய்தும் காத்திருப்புகளுக்குப் பிறகு கண்டேன் டாக்டரை. எலும்பு தொடர்பான துறையில் பேராசிரியர் என்ற பெயர்ப் பலகை பதித்த கதவு தள்ளி உள்ளே நுழைந்தேன்.

அந்த டாக்டர் பார்பதற்குச் சிறு வயதில் ஹார்லிக்ஸ் குடிக்காமல் வளர்ந்த குழந்தைபோல் சற்று நோஞ்சானாகத்தான் இருந்தார். நான் என் முழங்காலைத் தொட்டும் தடவியும் என் பிரச்சினையைச் சொல்ல அவர் என் முகத்தைப் பார்த்தே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு படுத்துக்கச் சொன்னார்.

பரிசோதித்துவிட்டு எக்ஸ்ரே எழுதித்தந்தார். அதையும் பார்த்துவிட்டு, “லிகமென்ட் கட்டான மாதிரி தெரியுது” என்று யூகித்துவிட்டு, இந்தக் கட்டுரையின் நோக்கமான எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கச் சொன்னார்.

எம் ஆர் ஐயின் விரிவாக்கம் தெரிந்து வைக்கும் அளவிற்கு மருத்துவ ஞானமோ முன் அனுபவமோ இல்லாததால் ஸ்கேனிங் என்றவுடன் எனக்கு என் இரண்டாவது குழந்தையைக் கருவுற்றிருந்த மனைவியை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச்சென்றது நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் அல்ட்ரா சவுன்ட் பரிசோதனையை ஸ்கேன் என்றுதான் சொல்வோம்.

பரிசோதனை அறையே கும்மிருட்டாக இருக்க மனைவியின் வயிற்றில் ஜெல் தடவி அல்ட்ரா சவுன்ட் மொவுஸை பரவலாக நகர்த்திக் கருவின் நிலையை அறிவார்கள். எங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் மகவு இருந்ததால் இம்முறை ஆண்குட்டிக்கு ஆசைப்பட்ட என் மனைவி ஸ்கேன்ல “கவனமா ஆணா பெண்ணா என்று பார்த்து வெச்சிக்கிங்க” என்று சொல்லி வைத்திருந்தாள்.

ஆனால், எவ்வளவு முயன்றும் ஸ்கேனில் தெரிவது ஆணா பெண்ணாவென்று எனக்குப் பிடிபடவில்லை. நல்ல சமயற்காரனின் சாம்பார் சட்டி கொதிப்பதை நெகெட்டிவ்வில் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் தெளிவில்லாமல் இருந்தது மானிட்டரில் அந்த ஸ்கேன் பிம்பங்கள்.

இதை இப்ப எதற்குச் சொல்கிறேனென்றால், அப்படி ஒரு ஸ்கேன் அனுபவத்தை எதிர்பார்த்து அந்த ரேடியாலஜி மையத்திற்குச் சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

எந்த மருத்துவச் சாயலும் இல்லாமல் ஏதோ சினிமா ஷுட்டிங் ஸ்தலம்போல சுத்தமாக எந்த சப்தமுமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

வரவேற்பில் எனது மருத்துவக் காப்பீட்டு அட்டையையும் மருத்துவரின் காகிதக் கட்டையும் வாங்கிக்கொண்டு காத்திருக்கச் சொன்னவன் அலைபேசியிலோ தொலைபேசியிலோ எங்களிடமோ யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்தான். எப்படித்தான் முடிகிறதோ! டி வி முன்னாலான காத்திருப்பில் அரபு நாடுகளின் மக்கள் புரட்சி செய்திகள் சொல்லிக் கொண்டிருக்க திரையின் மூலையில் ஒரு சிறு கட்டத்தில் வாய் பேசாதோருக்கான சைகை மொழியும் செய்தி சொல்லிக் கொண்டிருந்தது.

என் முறை வர வெகு நேரம் ஆகவில்லை. ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் பணியாளினிடம் என்னை ஒப்படைக்க அவள் முன்னாலே போக நான் பின்னாலே போனேன். சுவிட்ச் இல்லாமல் சென்ஸார் பொருத்தப்பட்ட தானியங்கிக் கண்ணாடிக் கதவுகள் சில கடந்து ஒரு சிற்றறையை காண்பித்து உடை மாற்றிவிட்..சாரி…மாற்றிக்கொள்ளச்சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

எல்லா உடையும் களையப்பட்டு சினிமா கவர்ச்சி நடனிகள்போல் மெல்லிய கவுன் போடச்சொன்னது விதி. நானோ விதியை மதியால் வென்று(?) முட்டிக்காலுக்கும் ஜட்டிக்கும் என்ன சம்மந்தம் என்ற தெளிவிலும் ஓர் அசட்டுத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியிலும் ஜட்டியைக் கழட்டவில்லை. மற்றபடி நான் போட்டிருந்த கவுனில் என்னை வெட்கம் பிடிங்கித் தின்றது

ஆயிற்று, தொடர்ந்து முழங்காலில் மாவுக்கட்டு போன்றதொரு தயார்நிலை எலெக்ட்ரானிக் சாதனைத்தைப் பொறுத்தி எம் ஆர் ஐ இயந்திரத்தினுள் செலுத்தியபோது மின்சார சுடுகாடு நினைவுக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் எம் ஆர் ஐ இயங்க கட்டுப்பாட்டு அறையில் சுலைமானி சாயாவும் அலைபேசியுமாக அரபி ஒருத்தன் கணினித் திறையை கண்கானித்துக்கொண்டிருந்தான்.

இங்கோ கொஞ்சம் கொஞ்சமாக நானும் எந்திரமும் பரிச்சயமாகிப்போக அதன் இயக்கத்தின்போதான சுருதி சற்றும் பிசகாத இயக்க சப்தங்களுக்கு என்னுள் பாட்டெல்லாம் உருவாகியது:

எத்தனையோ பூவிருக்கு
எல்லாத்திலும் பொட்டிருக்கா
பொட்டுவச்ச பூவுன்னைத்
தொட்டு வச்சதாரு சொல்லு

காத்திருக்கு காத்திருக்கு
காடுஞ்செடியும் காத்திருக்கு
கார்மேகம் கரைவதற்கும்
கனமழை பொழிவதற்கும்

என்று கருவேதும் இல்லாமல் நிறைய பாட்டா வந்தது!

ஒவ்வொரு ஐந்து நிமிட டெம்போவுக்கும் இடையே சற்றே நிறுத்தி கை தட்டுவதுபோல் சப்தம் உண்டாக்கி மீண்டும் மீண்டும் தொடர்ந்ததால் கச்சேரி களை கட்டியது! இடையில் ஒரு குட்டித் தூக்கம்கூட போட்டேன்.

இப்படியாக ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அன்றியும், ஒரு லோயர் பெர்த்தில் பயணம் செய்த உணர்வோடு பிரிய மனமில்லாமல் பிரிந்தேன். இனி, கால் தூங்கினாக்கூட எம் ஆர் ஐ கேட்கனும் என்று நினைக்கும் அளவுக்கு இஷ்டமாகிப்போன எந்திரத்திற்கு பிரியாவிடை கொடுத்து வெளியேறினேன்.

ஹார்லிக்ஸை மீண்டும் நினைவுபடுத்திய மருத்துவர் ரிப்போர்ட்டெல்லாம் பர்த்துவிட்டு, ” ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. லிகமென்ட் ஸ்ட்ரெட்ச்சாயிருக்கு. லிகமென்ட் சப்போர்ட்டும் ஃபிஸியோ தெரப்பியும் சில வலி நிவாரணிகளும் ஒரு ஜெல்லும் போதும்” என்ற அந்த கணத்தில்தான், ஃபோனில் உம்மா சொன்னது தெளிவாக நினைவு வந்தது:

“அது ஒன்னுமில்ல சவ்வு அசைஞ்சிருக்கும். வெந்நீர் ஒத்தடம் கொடுத்து காலை நீட்டி நீட்டி மடக்கி, முழங்கால்ல மெல்லிசான துணியக் கட்டி, கொஞ்சம் தென்னைமரக்குடி எண்ணெய் தடவுனா நல்லாப்போயிடும்!”

Sabeer abuShahruk,

Series Navigation

சபீர்

சபீர்