விபத்துநேர தீர்மாணங்கள்!

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

சபீர்



சட்டென
வேகம் குறைத்தன
வாகனங்கள்…
நெடுஞ்சாலை
கடக்க
கடுஞ்சாலையானது!

ஓட்டம் ஓய்ந்து
ஊர்திகளின்
ஊர்தல் துவங்கியது!

மற்றொரு சூவிங்கம்
மெல்லத் துவங்கி
மெல்ல நகர்ந்தேன்…

ஐந்து தடங்களிலும்
அணியணியாய் வாகனங்கள்
சில தடங்கள்
ஊர்வதும்
சில ஸ்தம்பித்தும்…

ஊர்தலினூடே
காரணம் கணிக்கையில்
வாகன சோதனை
சாரதி சோதனை
சாலை சீரமைப்பு
என
எல்லாம் போக
விபத்தோவென
நினைத்த மட்டில்
வேக
எல்லை மீறுவோர்மீது
கோபம் வந்தது!

குடுவைக் கழுத்தென
குறுகிய சாலையில்
சாத்தியப்படாத கோணத்தில்
முட்டிநின்ற வாகனங்கள்
விடுத்து
கீழே
ரத்தச் சகதியில்
உடல்கள் கண்டு
உலுக்கியது நெஞ்சு!

வேகம் வேண்டாமென
தீர்மாணித்தது
விபத்துகண்ட மனது.

மூன்றாம்நாள்…
பள்ளீக்கூடத்தில்
பிள்ளைகளின்
காத்திருப்பு
கவலைதர –

பரிச்சயமான
சாலையின்
வேக
உளவுக் காமிராக்களின்
ஒளிப்பிடங்கள் தவிர்த்து
அனிச்சையாய்
வேக வரம்பைக்
கடந்து
பறந்த
என்
வாகனத்துள்
முடங்கிக் கிடந்தன
தீர்மாணங்கள்!

Series Navigation

சபீர்

சபீர்