சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த்
திரிந்து வரும்
வால்மீன் மீது கவண்கல் வீசி,
வயிற்றில் காயப் படுத்தினோம்!
வால் ஒளியில் வெளியேறும்
வாயுத் தூள்களை
வடிகட்டியில் பிடித்து வந்தோம்!
அண்ட கோள்களின்
ஆதித் தோற்றம் அறியவும்,
உயிர் மூலத்தை உளவவும்
ஏவிய
விண்சிமிழ் மீண்டது,
மண்மீது!
‘பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை! பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன! அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது! … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது. ‘
ஜொஹானெஸ் கெப்பளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]
“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ? வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் ? காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன! அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது! ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது!”
ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]
‘பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின! விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம். ‘
தாமஸ் டக்ஸ்பரி பணித்திட்ட மேலதிகாரி [Thomas Duxbury, Mission Project Manager (ஜனவரி 15, 2006)]
‘வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானப் பொக்கிஷம்! பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்!
டொனால்டு பிரெளன்லீ பணித்திட்ட பிரதம ஆய்வாளி [Donald Brownlee, Mission Principle Investigator (ஜனவரி 15, 2006)]
‘ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை! பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது! ‘
கார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் திட்டப்படி விண்மீன் தூசியில் நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும்! அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கும்! ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். மூன்றாவது திட்டம்தான் 2005 ஜனவரியில் ஆரம்பமான ‘ஆழ்மோதல் ‘ எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.
விண்வெளிச் சிமிழ் பாதுகாப்பாய் மீண்டது
ஏறக்குறைய ஏழாண்டுக்கு முன்பு (1999 பிப்ரவரி 7 ) ஏவுகணை வாகனம் டெல்டா: 7000 [Delta: 7000] கேப் கெனாவரல் ஏவுதளத்தில் 370 கி.கிராம் பளுத் தலையோடு கிளம்பியது. அதன் சிரசிலிருந்த விண்கப்பல் 106 மில்லியன் மைல்கள் விண்வெளியில் பயணம் செய்து, வொய்ல்டு-2 [Comet: Wild-2] என்னும் வால்மீனின் வால் வீச்சுத் துணுக்கு மாதிரிகளை ஒரு தேன்கூட்டுத் தட்டில் பிடித்துக் கொண்டு, திரும்பி அதே தூரம் பயணம் செய்து, 2006 ஜனவரி 15 ஆம் தேதி யூடா [Utah, USA] பாலை மணலில், தாய்க்கப்பலை விட்டு விண்சிமிழ் பாதுகாப்பாய் வந்திறங்கியது. தாய்க்கப்பல் விண்சிமிழைப் பிரித்து விட்டதும், புவியீர்ப்பு விசையில் கீழிறங்கி, சுமார் 10,000 அடி உயரத்தில் பாராசூட் குடை விரித்து, தரையை அணுகியது. பூமியிலிருந்த நீள்வீச்சு உட்சிவப்புக் கதிர் காமிராக்கள் [Long Range Infrared Cameras] குடை விரிவதையும், விண்சிமிழ் மெதுவாய்க் கீழிறங்குவதையும் தரையாட்சிக் குழுவினருக்குக் காட்டிக் கொண்டிருந்தன. முன்னால் அனுப்பப் பட்ட ஜெனெஸிஸ் விண்சிமிழ் தரைக்கு மீளும் போது குடை விரிக்க முடியாமல் போனதால், 2004 செப்டம்பர் 9 இல் யூடா பாலைத் தளத்தில் விழுந்து உடைந்து போனது!
2005 ஜூலையில் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக் குழியை உண்டாக்கி விட்டது! இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை! பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை! எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது!
விண்துகள் வால்மீன் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
2005 ஜூலையில் வால்மீன் ஆழ்குழித் திட்டம் [Deep Impact Program] நிறைவேறி வால்மீன் உடம்பில் என்ன என்ன பூர்வீகப் பண்டங்கள் புதைந்துள்ளன என்று விஞ்ஞானிகள் உளவிக் கண்டார்கள். 2004 செப்டம்பர் 9 ஆம் தேதி, பரிதியின் தூள்களை வெற்றிகரமாகப் பற்றி வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Solar Particles Program], இறுதி வேளையில் பாராசூட் குடை விரிக்க முடியாமல் யூடா பாலை மணலில் விழுந்து உடைந்து போனது! அதன் பிறகு வால்மீன் வொயில்டு-2 திட்டம் [Stardust: Comet Wild-2 Program] வெற்றிகரமாய் நிறைவேறி, விண்சிமிழ் வால்மீனின் தூள்களை மடியில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாய், யூடா பாலை மணலில் குடைபிடித்து வந்திறங்கியது!
ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் 100 மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஊர்ந்து கொண்டிருக்கும் வொய்ல்ட்-2 வால்மீனின் கருத்தலையை [Nucleus of Comet] 60 மைலுக்கு அருகில் பயணம் செய்து படமெடுத்தது ஒரு மகத்தான விண்வெளிப் பயண வரலாற்றுச் சாதனை! விண்சிமிழ் அண்டவெளிக் கற்களிடம் மோதிக் கொள்ளாமல், வால்மீன் வீச்சுத் துணுக்களால் காயப் படாது, வாயுத் தூள்களைப் பிடித்து வந்தது, முதன்முதல் நிகழ்ந்த விண்வெளி விந்தையாகக் கருதப் படுகிறது! ஸ்டார்டஸ்ட் விண்கப்பலின் முக்கிய குறிக்கோள் வொய்ல்டு-2 வால்மீனின் அருகில் பயணம் செய்யும் போது, வால்மீனின் வாயு ஒளிமுகில் [Comet ‘s Coma] திரட்சியில் மூழ்கி, அதன் வாயுத் தூசிகளை மாதிரியாகப் பற்றிக் கொண்டு மீள்வது. சில வான்மீன்களின் வாயு ஒளிமுகில் கோளம் [Coma] 60,000 மைல் விட்டமுடன் கூட இருக்கலாம் என்று அறியப் படுகிறது!
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படும் பரிதி மண்டல அண்டங்களை வடிவாக்கிய மூலப் பண்டங்களான பூர்வீகப் பச்சை மாதிரியை வொய்ல்டு-2 வால்மீன் கொண்டுள்ளதாக ஊகிக்கப் படுகிறது. மேலும் அண்டங்கள் உண்டாவதற்கு முன்பே கிடந்த பழுதுபடாத பண்டைய மாதிரித் தூள்களையும் வொய்ல்டு-2 வால்மீன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 2006 ஜனவரி 15 ஆம் தேதி, அதிகாலையில் மணிக்கு 29,000 மைல் வேகத்தில் மீண்டு, யூடாவின் ஸால்ட் லேக் சிட்டிக்கு 100 மைல் தூரத்தில் உள்ள பாலை மணலில் குடை பிடித்திறங்கிய விண்சிமிழின் மாதிரிகளை உளவு செய்ய, ஹெலிகாப்டரில் ஹூஸ்டன் ஜான்ஸன் விண்வெளி ஆய்வு மையத்துக்குக் [Johnson Space Center, Houston Texas, USA] கொண்டு செல்லப் பட்டது! அந்த மாதிரித் துணுக்குகளில் மயிரளவுக்கும் குன்றிய சுமார் ஒரு மில்லியன் வால்மீன் தூள்கள் பிடிபட்டிருக்கும் என்று நம்பப் படுகிறது!
வால்மீன் ஒளிமுகில் தூசி பிடிப்புத் திட்டத்தின் விபரங்கள்
1999 பிப்ரவரி 7: கெனாவரல் முனை ராக்கெட் ஏவு தளத்தில் டெல்டா-7000 ஏவுகணை சுடப்பட்டது.
2001 ஜனவரி 15: பூகோள ஈர்ப்பு விசை உதவியில் விண்கப்பல் ஸ்டார்டஸ்ட் வேக வீச்சில் [Flyby Gravity Swing] உந்தியது.
2002 ஆகஸ்டு 5: விண்வெளியில் ஸ்டார்டஸ்ட் விண்கப்பல் அண்டவெளித் தூசிகள் சேமிப்பு ஆரம்பம்.
2002 டிசம்பர் 9: விண்வெளியில் ஸ்டார்டஸ்ட் விண்கப்பல் அண்டவெளித் தூசிகள் சேமிப்பு முடிவு.
2003 ஏப்ரல் 3: விண்கப்பல் பரிதி நேரிணைப்பில் நுழைய நெருங்குதல்.
2003 ஏப்ரல் 18: விண்கப்பல் பரிதி நேரிணைப்பில் வெளியேற நகர்தல்.
2003 டிசம்பர் 24: விண்கப்பலின் வாயுத்தூள் குழம்பு [Aerogel] மாதிரி பற்றும் தேன்கூடு [Sample Collector] தலை தூக்கல்.
2004 ஜனவரி 2: விண்கப்பல் வொய்ல்டு-2 வால்மீன் நேரிணைப்பு, மாதிரி சேமிப்பு வெற்றிகரமாக நிகழ்கிறது.
2005 ஜனவரி 22: விண்கப்பல் பரிதி நேரிணைப்பில் நுழைய நெருங்குதல்.
2005 பிப்ரவரி 8: விண்கப்பல் பரிதி நேரிணைப்பில் வெளியேற நகர்தல்.
2006 ஜனவரி 13-14: ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் தாய்க்கப்பலை விட்டுப் பிரிகிறது.
2006 ஜனவரி 15: விண்சிமிழ் அமெரிக்காவின் யூடா பாலை மணலில் பாராசூட் குடைவிரித்துப் பாதுகாப்பாய் இறங்குகிறது.
பூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்
பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன!
****
தகவல்:
[Picture Credits: NASA Space Center, USA]
1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]
6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]
7. NASA – The Fiery Return of NASA ‘s Space Dust Cargo [Nov 29, 2005]
8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
11 Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
12 NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]
13 NASA Looks for Signs of Success from Celestial Broadside www.PhysOrg.com [2005]
14 Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]
815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]
15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/sc0707051.html
16 Thinnai Article on the Significance of Deep Impact http://www.thinnai.com/sc0715051.html
17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA ‘s Jet Propulsion Lab. Sky & Telescope Magazine [Feb. 2006]
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 19, 2006)]
- பாட்டி
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சேதிராயர்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- கடிதம்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- எச்சங்கள் இன்னும்
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஈரமான தீ
- அபத்தங்களின் சுகந்தம்
- கவிதைகள்
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- வீடற்றவன்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- முதலாம் தீர்மான கோட்பாடு
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- கைநுனி மின்மினி
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- சாத்தானுடன் போகும் இரவு
- விதிகளின் மீறுகை
- செரிபடட்டும்
- வீடு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்