விடியும்- நாவல் – (22)

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


செல்வம் நேராக சலூனுக்கு வந்தபோது அப்போதுதான் வெட்டி முடிந்தவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அரைவாசியாகிப் போன தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியிடம் முறைத்துக் கொண்டிருந்தார். வாசலுக்கு முதுகு காட்டிக்கொண்டு துண்டால் கதிரையைத் தட்டிவிட்டு கடைசியாகக் காத்திருந்தவரின் பக்கம் திரும்பிய போது வாசலில் செல்வம் நிற்பதைக் கண்டார் அந்தோனி.

“ஆரது செல்வம் தம்பியோ, இது எப்ப வந்தது ? .. .. .. .. முகத்தில் ஆச்சரியம் வழிந்தது.

அவன் கனடாவால் வந்த விசயம் அவருக்கு முன்னமே தெரிந்திருக்கும். சலூனுக்கு வராமல் எந்தச் சங்கதியும் தப்புவதில்லை. இருந்தும் அவர் காட்டிய அந்த ஆச்சரியத் தொனிப்பு அவருக்கே உரித்தான மரியாதைப் பாங்கு.

“வாங்க தம்பி இப்ப முடிஞ்சிரும் என்று நிலபாவாடை விரித்து வரவேற்றார். செல்வம்; வாசல்சாக்கில் காலைத் தட்டிக் கொண்டு உள்ளே வர, அவர் தும்புக்கட்டையை எடுத்து கொத்து கொத்தாய் இறைந்து கிடந்த முடியை மூலையில் ஒதுக்கிவிட்டு காத்திருந்தவருக்குக் கண்சைகை காட்டினார். அவர் ஆசனத்தில் ஏறியிருந்ததும் சட்டைக் கொலரை விரித்து போர்வை போர்த்து பூட்டூசி குத்தி இறுக்கி விட்டார்.

பொலிஸ்குறொப் என்;றார் இருந்தவர். பொலிஸ்குறொப் என்றால் ஒட்ட வெட்டுவது. ஒட்ட வெட்டுவதற்கு அப்படியென்ன அங்கு இருக்கிறது என்று தேடினான் செல்வம். பல்லு தேய்ந்து போன ஐந்தாறு சீப்புகளில் ஒன்றைத் தெரிந்தெடுத்து கத்தரிக்கோலை சடக் சடக்கென அடித்து நறுக்கத் தொடங்கினார் அந்தோனி.

‘பொலிஸ்குறொப் ‘ .. .. .. .. அவனுக்குப் பிடிக்காத வார்;த்தை.

அப்போதெல்லாம் அப்பாவோடுதான் சலூனுக்கு வருவான். தவறு – அப்பா அவனை இழுத்து வருவார் என்பதே சரி. நல்லா ஒட்ட வெட்டி விடு அந்தோனி என்பார். முன்மயிர் நெற்றியில் தவழ்ந்து கோபுரமாய் கிளம்பி நிற்க வேனும் அவனுக்கு. அதெல்லாம் செல்லாது அப்பாவிடம். அடித்தால் போலிஸ்குறொப்தான். அளந்து பார்த்தால் அரை இஞ்சியும் தேறாது.

அவனுக்கு அழுகை கூட வரும் – எதற்காக தலைமயிர் வெட்டுவது ? தலை வடிவாயிருக்கத்தானே! பிறகேன் ஒட்ட வெட்டி மொட்டையாக்குவான் ? அப்பாவிடம் நேரே சொல்லப் பயம். குட்டு விழும். அம்மா மூலம் ஒருநாள் நியாயம் கேட்டு தூது அனுப்பினான். ‘பிள்ளையின்ர ஆசைக்குத்தான் விடுங்கோவன் வெட்ட ‘ என்று அம்மா சொன்னதற்கு – ‘உனக்கொன்டும் விளங்காது சும்மாயிரு, வெக்கைக்கு தலை வேர்க்கும். தலை வேர்த்தா தடிமன் பிடிக்கும். தடிமன் பிடிச்சா நீ குளறுவாய். விருப்பமென்டாச் சொல்லு அவன்ர விருப்பத்துக்கு விடுறன் ‘ என்றார் அப்பா. அம்மாவினுடைய பலவீனத்தின் உயிர்நாடி பிடித்து அச்சொட்டாய் அடித்தார் அவர். அதன்பின், ‘நீயாச்சு உன்ர அப்பாவாச்சு என்னன்டாலும் பட்டிழுத்துப் பாருங்க ‘ என்று அவனை தொப்பென்று கைவிட்டு விட்டாள். பொன்னுத்துரை மாமாவுடன் வந்தால் அப்படியில்லை. கொஞ்சம் ஈவுசோவு காட்டுவார். ‘அவன்ர விருப்பத்துக்கு வெட்டிவிடு அந்தோனி ‘ என்பார். செல்வம் முன்னுக்கு விடுகிற பம்ப் அந்தோனிக்குத் தெரியும்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா மாமா எல்லாருமே அங்கேதான் வெட்டுகிறார்கள். வித்துவான் வீணை வாசிப்பது போல அந்தோனியின் விரல்கள் தலைகளில் நளினம் செய்வதை வெட்டக் காத்திருக்கும் நேரங்களில் கண்வெட்டாமல் பார்ப்பான் செல்வம். வாடிக்கையாளரின் தலை அவரது ஆளுகைக்குள் வந்ததுமே மனதில் ஒரு படம் விழுந்து விடும். இன்னாருக்கு இன்ன வெட்டு பொருத்தம் என்ற மனக்குறிப்பு பட்டென்று பதிந்து விடும். பிறகு, கண் பார்க்க கணக்கு பிசகாமல் ஒரு படிமுறையில் கை நறுக்கிக் கொண்டே போகும்.

நெற்றியில் விழும் முன்மயிரை முன்னமே சீவி ஒரு பக்கமாக ஒதுக்கி விடுவது முதல்படி. உடனே வெட்டிக் குறைக்க மாட்டார். அது – கடைசியாக, கவனமாகக் கையாள வேண்டிய பகுதி என்பது அவரது தொழில்முறை அனுபவம். பிடரியிலிருந்து தொடங்கி பக்கமயிர் எடுத்து சைட் பர்ன்ஸ் செதுக்கி விடுவது அடுத்த படி. அதன்பின், முன்னம் பாதுகாத்து வைத்திருந்த முன்மயிரை விரல் இடுக்கில் சொருகி தூக்கிப் பிடித்து வெட்டிய பகுதியோடு விகிதாசாரம் பார்த்து அளந்து நறுக்கி விட்டாரானால் முகம் பளிச்சென்று துலங்கிவிடும்.

வெட்டி முடிந்து திருப்தியானதும் மிருதங்கத்துக்கு சுருதி சேர்க்கிற மாதிரி நோகாத தாளத்தோடு ஒரு மசாஜ் கொடுப்பார். அது முடிய, கழுத்திலும் காதடியிலும் குட்டிக்குறா பவுடர் கொட்டி பக்குவமாகத் துடைத்து விட்டு இறுதிப் படிக்கு வருவார். உச்சி வகிடெடுத்து ஒழுங்காக சீவி விட்டு சொல்வழி கேளாமல் திமிறும் முடிகளை தேடித்தேடி சொடுக்குவார். அது – அவரது பைனல் டச். சோறு போடுகிற தொழிலை நுட்பமாகச் செய்தால்தான் அவருக்கு திருப்தி.

செல்வம் சலூனை ஏற இறங்கப் பார்த்தான். முந்திப் பார்த்ததற்கு முக்காலே மூனு வீசமும் மாற்றமில்லை. அதே பூவேலைப்பாடுள்ள இரட்டை ஜன்னல்கள் – ஒன்றின் கண்ணாடி உடைந்து காட்போட் மட்டை இறுக்கியிருந்தது. அதே பொருக்கு வெடித்த சுவர்கள் – வெள்ளைக்காவி கண்டு வருசக் கணக்காயிருக்கும். வெள்ளாட்டுக்குட்டியை கையில் ஏந்திய இயேசு பெருமான் – அண்ணாவும் பெரியாரும் சிரித்துக் கொண்டிருக்கும் அதே புராதனப் படங்கள். பிளாஸ்டிக்மாலை போட்ட அன்னை வேளாங்கன்னி மாதா படம் புதிய வரவு. அதனடியில் தொங்கிக் கொண்டிருந்த ஊதுபத்திச் சாம்பல். கொழுவியிருந்த கலண்டரில் ஏதோ கணக்குகள் பென்சிலால் எழுதப்பட்டிருந்தன. அங்கும் இங்கும் வாய் பிளந்து கிடந்த நிலம். அத்தனையையும் மீறி கழுவித் துடைத்த மாதிரி ஒரு சுத்தம் தெரியத்தான் செய்தது. அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது போலவும் ஒன்றுமேயில்லா விட்டாலும் எல்லாம் இருப்பதைப் போலவும் ஒரு நிறைவு.

ஒருவர் சைக்கிளை வாசலில் நிற்பாட்டி வந்து தலையிழுத்தார். கேட்டுக்கேள்வியில்லாமல் பவுடர் போட்டுக் கொண்டார். தலை வளந்திற்றுது என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். கண்ணாடியில் தெரிந்த தன் தோற்றத்தில் திருப்தியுறாமல் எதிர்க்; கண்ணாடிக்கு மாறினார். சில கண்ணாடிகள் நம் முகத்தை நன்றாகக் காட்டத்தான் செய்கின்றன. எந்த இடத்தில் மாட்டப்படுகிறதோ அந்த இடத்தின் பின்புல ஒளியைப் பொறுத்து முகத்தில் ஒரு அமைதி தெரிவதை அவனும் அவதானித்திருக்கிறான்.

கொஞ்சம் அலுவல் கிடக்கு. நான் பின்னேரமா வாறன் என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் ஓசியில் மேக்கப் போட்டுக் கொண்டவர் போய்விட்டார். அவர் போய்க் கொஞ்ச நேரத்திலேயே வெட்டிக் கொண்டிருந்தவரது பணி முடிந்து அவரும் நடந்து விட – கதிரையை துண்டால் விசுக்கி தட்டிக் கொண்டே வாங்க தம்பி என்று அழைத்தார் அந்தோனி. அவன் ஏறியிருந்ததும், இருக்கிறதில் வெள்ளையாயிருந்த துண்டெடுத்துப் போர்;த்தினார். அவனது முகத்தை ஒரு தரம் ஆழமாகப் பார்த்துவிட்டு அர்த்தத்துடன் சிரித்தார்.

“பொலிஸ்குறொப் தானே ? ”

பகிடியை உடனேயே புரிந்து கொண்டு வாய்விட்டுச் சிரித்தான் செல்வம். சலூனில் வேறு யாருமில்லை. தலைக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தபடியே அந்தோனி சொன்னார்.

“முடிஞ்சா அங்கேயே இருந்திருங்க தம்பி”

“எங்க ? ”

“வெளிநாட்டில”

“ஏன் அண்ணன் ”

“எங்களைப் பாருங்களன், காய்ஞ்சு கருவாடாய்ப் போய்க் கிடக்கிறம் ”

அவன் சிரித்தான்.

“அங்க எப்படித்தம்பி சலூனெல்லாம் ? ”

“செய்கிற தொழிலுக்கு மட்டுமில்லை மனுசருக்கும் மதிப்புக் குடுப்பாங்க அங்க. கை நிறைய ஊதியம் கிடைக்குது. கார்ல வருவாங்க போவாங்க. யூனிபோம் போட்டிருப்பாங்க. நீங்களும் யூனிபோம் போட்டாலென்ன ? ”

“யூனிபோமா ? ”.. .. .. அப்பிராணியாக வாய் பிளந்தார் அந்தோனி.

“கைக்கும் வாய்க்குமாக அந்தா இந்தாவென்டு சீவியம் போகுது. எங்கட பிழைப்பு இந்த சீத்துவக்கேட்டில கிடக்குது”

“பிள்ளையள் என்ன செய்யினம் ? ”

“மூத்ததை மன்னாரில கட்டிக் குடுத்திற்றன். ரெண்டாவது பொடியன் சீமெந்துக் கம்பனியில வேலை. மூன்டாவது பொடியன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான். படிப்பான் போல கிடக்குது. ஏதோ முடிஞ்ச மட்டும் படிப்பிச்சு விடலாம் என்டு பாக்கிறன்.”

அந்தோனியில் ஒரு நல்ல குணம். வேறு ஆட்;கள் இருக்கும் பொழுது சொந்த விசயங்களை சொல்ல மாட்டார் தானும் கேட்கமாட்டார். நாலு பேர் வந்து போகிற இடம் என்னத்துக்கு வம்பு என்கிற மாதிரி. இங்கிதம் தெரிந்த மனுசன்.

“வெள்ளையுமடிச்சு ரெண்டு புதுக்கதிரை வாங்கிப் போட்டு இந்தப் பழம் கண்ணாடிகளையும் மாத்தி விட்டால் சலூன் இன்னம் வெளிச்சமாத் தெரியுமே அண்ணன்.”

“கேக்க நல்லாத்தான் இருக்கு. இந்த ஒரு கையாலதான் எல்லாம். ஏதோ இன்டவரைக்கும் கோடு பொலிஸ் என்டு ஏறாம காலத்தை ஓட்டிட்டன். கடைசிப் பொடியனை படிப்பிச்சு எடுத்திற்றன் என்டா போதும்.” என்றவர் – சுவரை நிமிர்ந்து பார்த்து விட்டு “ஒருக்கா வெள்ளையடிக்கத்தான் வேனும் பாப்பம் ”.. .. ..என்றார்.

பிடரிக்கு மிசின் பிடிக்கும் போது வாசலைப் பார்த்துவிட்டு சொன்னார்.

“தம்பி குறைவிளங்காதீங்க கேக்கிறதுக்கு”

“சொல்லுங்க அண்ணன்”

“உங்கட தம்பீட விசயம்! ? ”

இப்படி திடுமுட்டாய் கேட்பார் என்று செல்வம் எதிர்பார்க்கவில்லை. அவர் இந்த அயலைச் சேர்ந்தவர். விசயம் தெரிந்திருக்காவிட்டால்தான் புதினம். அதிலும் வாறவர் போறவர் தங்கள் கைச்சரக்குகளை அவிழ்த்து விட்டுப் போகும் இடம் அது. அன்றாடச் செய்திகள் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்படுகிற இடம். பலதும் பத்தும் வந்து காதில் படுவதை அவரால் எப்படித் தடுக்க முடியும்;!

செல்வமும் வாசலைப் பார்த்தான். ஆருமில்லை. அந்தோனியே சொன்னார்.

“தானும் தன்ர பாடுமா படிப்பென்டு திரிஞ்ச பிள்ளை. எனக்குத் தெரிஞ்சு கூடாத கூட்டங் கூடுறேல்லை. நான் கேள்விப்பட்ட மாதிரில கிறிஸ்மஸ் மூட்டத்தில நிறையப் பொடியள் இப்படிப் போயிற்றுதுகள். தானாப் போயிருக்க மாட்டார். அள்ளுப்பட்டு வந்த வெள்ளத்தில எடுபட்டுப் போயிற்றார் என்டுதான் நினைக்கிறன். எனக்கென்டா இதுகளின்ர போக்கு ஒன்டும் விளங்கேல்லைத் தம்பி”

செல்வத்திற்கென்றாற் போல் விளங்கியா விட்டது! எப்படி வளைத்து வளைத்து யோசித்தாலும் பிடிபடுவதாயில்லை. ஒருநேரம் தூரத்துக் கானல் மாதிரி ஏதோ தெரியும். பிறகு மறைந்து போகும். ஏன் போனான் எங்கு போனான் எப்படிப் போனான் – எதுவுமே விளங்கவில்லை. அம்மா அப்பா அண்ணன் அக்கா தங்கச்சி மாமா என்ற அன்புவலைக்குள் சிக்கியிருந்தவன் வலையை அறுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் போகும் அளவிற்கு என்ன நடந்தது!

“தம்பி ஒரு விசயம்!”

“ம்”

“பொடியள் மூதூர்ப் பக்கம் போயிருக்கிறதாத்தான் கேள்வி”

“ஆர் அண்ணன் சொன்னது ? ”

“இங்க ஊர்க்கதை கதைக்க வாற ஆக்கள் கதைச்சதுதான். அதில உண்மையும் இருக்கும்;”

“எனக்கு ஆரைத் தெரியும் அண்ணன் மூதூரில. ரெண்டு தரக்கா வெருகல் நேர்த்திக்கடனுக்குப் போயிருக்கிறன் அவ்வளவுதான். ”

“உங்கட தங்கச்சி புருசன் முந்தி மூதூரிலதானே படிப்பிச்சவர். அவரிட்ட கேட்டுப் பார்க்கேல்லையா!”

கையில் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு நெருப்புக்கு அலைந்த மாதிரி இருந்தது அதைக் கேட்டதும். தங்கச்சி புருசன்மாரோடு இன்னும் சரியாக முகம் பார்த்து மனம் தொட்டுப் பழகவில்லை. கோபமொன்றுமில்லை. தம்பி விசயத்தில் அக்கறை காட்டாததால் நெருங்கிப் பழக முடியாதபடி ஒரு தூரம். இதையெல்;லாம் பார்த்தால் சரிவராது. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. இன்றைக்கே போய் கேட்க வேண்டும்.

அவர் செல்வத்தின் பிடரியில் பவுடர் கொட்டி தலையிழுத்துவிட்டு எப்படியிருக்கு என்று கேட்கிற மாதிரி பார்த்தார். தலைவெட்டு திருப்தியாயிருந்தது. அதைவிட அவர் தந்த தகவல் ஆறுதலாயிருந்தது. எல்லாத்திற்கும் சேர்த்து நன்றி சொல்வதற்குப் பதிலாக ‘நீங்களெல்லாம் கனடாவில இருக்க வேண்டிய ஆக்கள் ‘ என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவருக்கும் வெட்கத்தோடு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

செல்வம் கதிரையிலிருந்து இறங்கினான். பையில் கைவிட்டான். சின்னம்மா எடுத்து வைத்த நானு}று ரூபாய் மடித்தபடி இருந்தது. அப்படியே கொடுத்து விட விருப்பம். அதற்கு அவர் ஏதும் சொல்லி விடக்கூடுமென்பதால் கொடுத்த உடனேயே திரும்பிப் பார்க்காமல் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நானு}று ரூபாயை பிரிக்காமல் அப்படியே கொடுத்து விட்டு ‘அப்ப நான் போயிற்று வாறன் அண்ணன் ‘ என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பினான். அவர் அதற்குள் விரித்துப் பார்த்துவிட்டார். தம்பி என்று கூப்பிட நிமிர்ந்தவர், அவன் அதற்குள் போய்விடவே, தாள்களைப் பார்த்தார்.

சீவிய காலத்தில் கிடைச்சிராத கூலி!

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்