விடியும்!-நாவல்- (33)

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அவன் நிலத்தில் கால் வைக்கவில்லை, அதற்குள் ஜீப் சத்தம் கேட்டு ஓடி வந்த செவ்வந்தி கதவுக் கொழுக்கியைக் கழட்டிக் கொண்டே “தம்பீர ரிசல்ட் வந்திற்றண்ணா” என்றாள். அவள் முகம் முழுக்க விரிந்த அடுக்குமல்லிகையின் பூரிப்பு.

“மாவட்ட மட்டத்தில ரெண்டாவதா வந்திருக்கிறான்.” இறங்கி எட்டி வந்தவனிடம் மூச்சு விடாமல் சொன்னாள். வந்ததும் வராததுமாக வாசலிலேயே வைத்துச் சொல்வதற்கு காலையிலிருந்து காத்திருந்தவள் போலவே தோன்றினாள்.

வீட்டிலுள்ளவர்களின் கவலையோ சந்தோசமோ பதட்டமோ அவனிடம் உடனே தொற்றிக்கொண்டு விடும். இப்போது கொண்டு வந்த குழப்பமானது தங்கையின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கவில்லை. வயிற்றுக் குத்தோடு வந்தவனுக்கு வடை பாயசத்தோடு படைத்து என்ன புண்ணியம்! இருந்தாலும் தங்கையின் மகிழ்ச்சிக்கு உரிய மரியாதை காட்ட வேண்டும். அதைக் காட்டுவதற்கு – பரீட்சைப் பெறுபேறு பற்றி விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க வேண்டும். அப்போதுதான் அவள் உற்சாகம் கெடாமலிருக்கும். அடுக்குமல்லிகை வாடாமலிருக்கும்.

“என்னம்மா ரிசல்ட்”

“3ஏபி”

“எதில பி ?”

“பிசிக்ஸ். றீகரெக்சனுக்கு எழுதிப் போட வேனும்”

பாசான விசயத்தை தங்கை பறந்து பறந்து சொல்லிவிட்டாள். மூதூருக்குப் போய் பெயிலாகி வந்த விசயத்தைச் சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை. தம்பியிடமிருந்து தீர்க்கமான முடிவு வந்திருக்கிற நேரம் பார்த்து பரீட்சை முடிவும் வந்திருக்கிறது. இரண்டு முடிவுகளுக்கும் எட்டாத தூரம். எவ்வளவுதான் தலையால் குத்தி நின்றாலும் இரண்டையும் ஒன்றாக வெளியிட்டு உங்களைக் குழப்புவதே என் வேலையென்று கங்கணம் கட்டிக் கொண்டு காலம் செயலாற்றியது போல் விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது.

“அம்மா என்ன செய்யிறா ? ”

“அர்ச்சனை செய்யப் போயிருக்கிறா”

“அப்பா ?”

“கூடப் போயிருக்கிறார்”

“ரிசல்ட் எப்ப வந்தது ?”

“காலமைதான். பள்ளிக்கூடத்தால வந்து சொல்லீற்றுப் போனவையள் ”

நெஞ்சை நிரப்பிக் கொண்டு வந்தது. ‘அடப்பாவீ..கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாமேடா தம்பி. ‘

“அண்ணா“

“ம் “

ஏதோ கேட்க அடுக்கு எடுக்கிறாள் எனப் புரிந்தது. தம்பியைக் கண்டாங்களா ? எப்படி இருக்கிறான் ? வருவானா ? ஏன் கூட்டி வரேல்லை ? வேறென்ன கேட்கப் போகிறாள்.

திடாரென நெருப்புத் தணலில் மிரித்தது போலிருந்தது. தங்கச்சியைப் போலத்தானே அக்காவும் இருப்பாள். இவ்வளவுக்கும் மூர்த்தியிடம் ராணி விசயத்தைக் கேட்டிருந்தால், குடி கெட்டுது! விறுக்கென்று அடுத்த வளவுக்கு வந்தான். போர்ட்டிகோ மூலையில் கழட்டப்பட்ட சப்பாத்துகள் வலது இடது மாறியிருந்தன. விறாந்தையில் விழுந்திருந்த நீள்சதுர வெய்யில் வெளிச்சத்தில் சுளகு தெரிந்தது. இன்னும் உள்ளே போக, அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் ராணி.

“தம்பி எங்கயம்மா ? “

“பாத்ரூமில, கூப்பிடவாண்ணா ?“

அதற்குள் சாறனில் மாறிக் கொண்டு வந்தான் மூர்த்தி.

“அண்ணா தம்பியின்ர ரிசல்ட் கேட்டனீங்களோ“

“ஓமனை“

“தம்பிக்கு மொறட்டுவ கம்பஸ்தான் கிடைக்கும். இருங்கோ கோப்பி ஊத்திறன்“

செவ்வந்தி பிசிக்ஸ் பாடத்துக்கு றீகரெக்சன் போடப் போவதாகக் கூறுகிறாள். ராணி மொறட்டுவ கம்பஸ் கிடைக்கப் போவதாகச் சொல்கிறாள் – தம்பி வருவான் என்பதில் அவ்வளவு உறுதி. அவன் முன்னரும் கவனித்திருக்கிறான் – பொதுவாகவே சின்னம்மாவும் இப்படித்தான் எதையும் நம்பிக்கையுடனேயே பார்க்கிறாள். தானும் அப்பாவும் அப்படியில்லை. சின்னஞ்சிறிய ஏமாற்றத்தையும் எடுத்த எடுப்பில் நம்பிக்கையீனமான முறையில் பார்க்கும் குணம். நடக்காது என்று எதிர்மறையாகச் சிந்திக்கும் குணம்.

“ராணீட்ட சொன்னனீங்களா தம்பி ? “

“இல்லை“

“மாஸ்றரிட்ட கதைச்சிருக்கிறம் என்டு சொல்லுங்க. ரெண்டு பேரும் மாறிச் சொல்லக்கூடாது“

“மாமிக்கு என்ன சொல்லப் போறீங்க ?

“எப்படியும் இரண்டொரு நாளில உண்மையைச் சொல்லத்தான் வேனும். பாப்பம்“

“கோப்பியைக் குடிச்சிற்றுப் போங்க“

“இல்லைத் தம்பி டொயிலட்டுக்கு வருது. வாறன், ராணீட்ட சொல்லுங்க.“

அவன் திரும்பி வீட்டிற்கு வந்தான். அதே இடத்தில் இன்னும் நின்று கொண்டிருந்தாள் செவ்வந்தி.

“என்னண்ணா ? “

“மூர்த்தியிட்டை ஒரு விசயம் சொல்ல மறந்திற்றன் அதுதான் “

“கோப்பி போடட்டாண்ணா“. அவள் குசினிக்குள் போனாள். தெரு வாசலில் ஆட்டோ நிறுத்தும் சத்தம் – சின்னம்மாதான். அவன் உடுப்பைக் கழட்டி கொடியில் எறிந்து சாரத்திற்கு மாறி பின்பக்கம் விரைந்து கக்கூசுக்குள் பதுங்கிக் கொண்டான். சின்னம்மாவை நேருக்கு நேர் பார்க்கும் சக்தியை இன்னும் அவன் சேகரிக்கவில்லை. ஒளிச்சு மறைச்சு கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடுகிற நுனுக்கமும் தெரியாது. மறைக்கப் பார்த்தால் அடுத்த நிமிசமே மாட்டிக் கொண்டு விடுவான்.

கிணற்றடிக்கு வந்து இடைவெளி விடாமல், விட்டால் சின்னம்மா வந்து ஏதாவது கேட்க இடமாகிவிடும் என்று பயந்தவனாய் தலையில் அள்ளி அள்ளி ஊற்றினான். வாளி வாளியாகத் தோய்ந்தான். தலையை உணர்த்திக் கொண்டு வளவைச் சுற்றி முன் முற்றத்திற்கு வந்தான். துளசிச்செடி மாடத்தில் கொழுத்தியிருந்த கற்பூரத்தின் மெல்லிய வாசம் இன்னும் மணந்தது.

விறாந்தை சாய்மனக் கதிரையில் அப்பா கோயிலால் வந்த சந்தணப்பொட்டுப் பொலிவோடு இருந்தார். இன்னும் வேட்டி சால்வை கழட்டவில்லை. பக்கத்தில் போக கோயில் வாசம் வந்தது. நான் என்டா இந்த வருச வெக்கையைப் போல என்ர சீவியத்தில காணேல்லை என்று ஆருக்கோ சொல்வது போலச் சொன்னார். ஒவ்வொரு வருசமும் அப்போது எறிக்கிற வெய்யிலைப் பொறுக்க முடியாமல் இப்படித்தான் சொல்லுவார். அவனிடம் எதையும் அவர் கேட்கவில்லை. கேட்காதது ஒரு மாதிரியிருந்தாலும் கேட்டு விடுவாரோவென்ற பயமும் இருந்தது.

அடுப்படிப் பக்கமிருந்து “அண்ணா வந்திற்றானா பிள்ளை ? “ என்று சின்னம்மா கேட்டாள்.

“அண்ணா குளிக்குது“

அவர்கள் பேசியதைக் கேளாதவன் போல் அவன் சுவாமியறைக்குள் புகுந்தான். திருநீறை அள்ளிப் பூசி கண்களை மூடி கைகூப்பினான். சாமி கும்பிடும் போது இடைஞ்சல் வராதென்பது உறுதி. எனவே, அவன் முடிந்த அளவு சாமி கும்பிடத் தீர்மானித்தான். காதுகள் கூர்மையாக இயங்கின.

“அண்ணன் ஏதும் சொன்னானாம்மா ? “

“இல்லை. அப்பா சாப்பிடுறீங்களா ?“

“அண்ணனும் வரட்டும் “

உன்னையும் ஏமாற்றி அவர்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றாதே. கும்பிடுவதென்றால் ஒழுங்காக கும்பிடு. பாசாங்கு பண்ணாதே. பிள்ளையாரா பேசினார், அவன் படத்தை உற்றுப் பார்த்தான். யாரோ வருவது போலிருக்க, கண்களை இறுக மூடிக் கொண்டு கவனித்தான். சின்னம்மா வந்து அர்ச்சனைக்கட்டுகளை மாடத்தில் வைத்ததும், ஊடு பத்தியிருக்கும் விளக்கை தூண்டி விட்டதும், விரலில் பட்ட எண்ணையை தலையில் தடவியதும், சிரத்தையோடு கும்பிடும் பக்த சிரோன்மணியை குழப்பாமல் உடனே வெளியேறியதும் அவனுக்குத் தெரிந்தது. எல்லாம் ஒரு ஊகம்தான்.

போதுமடா சாமி நீ என்னை கும்பிட்டது. போ வெளியே. சொந்த வீட்டிலேயே தில்லுமுல்லு பண்ணாதே. பிள்ளையாரோடு பெரிய தொல்லையாயிருந்தது.

“நான் நித்திரைக்குப் போகிறேன். போரில் நமக்குத் தோல்வி கிடைத்தால், என்னை உடனடியாக வந்து எழுப்பு. வெற்றி கிடைத்தால் எழுப்பாதே, காலையில் பேசிக் கொள்ளலாம்”.

போர் நடந்து கொண்டிருந்த ஒரு இறுக்கமான இரவில் தன் உதவியாளனிடம் நெப்போலியன் இப்படித்தான் சொன்னானாம். சின்னம்மாவிடம் சொல்லி விடலாம். என்ன, நாலு நாளைக்கு சாப்பிடாமக் கொள்ளாமல் பட்டினி கிடப்பா. அழுது வடிவா. எப்பவோ சொல்லத்தானே வேனும். கவலையான விசயத்தை அமுசடக்கமாக வைச்சிருக்காம உடன சொல்லிவிடுவதே எல்லாருக்கும் நல்லது. அவன் நெப்போலியனாக மாறத் தீர்மானித்தான். மனம் மாறுவதற்கிடையில் வெளியேயும் வந்தான்.

“பெத்த வயிறு” வாசலிலேயே காத்திருந்தது. கல்லாப்பெட்டியில் கை வைச்சு கையும் களவுமாகப் பிடிபட்ட கடைப் பையனைப் போல அம்மாவைப் பார்த்தான். சின்னம்மாவின் முகத்தில் கோயிலுக்குப் போய் வந்த சாந்தம் இருந்தது. பரீட்சை முடிவு தந்த கம்பீரம் இருந்தது. அவைகளை மெலிதாக மூடியிருந்த கவலையும் தெரிந்தது – கோயில் மண்டகப்படி பிரசாதத்தட்டுகளை பட்டுத்துணியால் மூடியிருந்த மாதிரி. இசகுபிசகாய் எதையும் சொல்லி விடாதே உன்னைத்தான் மலைபோல நம்பியிருக்கிறேன் என்று கெஞ்சிய கண்களோடு சின்னம்மா அவனைப் பார்த்தாள். நெப்போலியன் அந்தக் கணமே ஆளைவிடு என்று கழன்று கொண்டான்.

“சின்னம்மா”

“ம்

“தம்பி நல்லாயிருக்கிறான் சின்னம்மா”

“என்ர பிள்ளையைக் கண்டனியானை”

“மாஸ்றர் கண்டவர். படிச்ச பிள்ளை என்டு நல்ல மதிப்பாம் அங்க”

“நீ என்ன சொல்ல அடுக்குப் பண்ணுகிறாய்”. சின்னம்மா கேட்கவில்லை. பார்த்தாள்.

“வந்தா கூட்டாற்றுப் போங்க என்று பொடியள் சொல்றாங்கள். தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பிறதுக்கு ஒழுங்கு பண்ணிக் கொண்டு கூட்டி வாறது நல்லது என்டு மாஸ்றர் சொல்றார்”

இந்த அண்டப்புழுகு அவன் ஒத்திகை பார்த்து வைத்திராத ஒன்று. நேரத்திற்குப் பொருத்தமாக வந்து விழுந்திருக்கிறது. முகம் ஒத்துழைக்கவில்லைத்தான். அதை செவ்வந்தி கவனித்ததை அவன் கவனித்தான்.

“செவ்வந்தி, பிசிக்ஸ் றீகரெக்சனுக்கு போட போம் எப்படி எடுக்கிறது ?”

“பிரின்சிபாலிட்டைச் சொன்னா பள்ளிக்கூடத்தால ஒழுங்கு பண்ணுவினம்.”

“பிசிக்ஸ் நல்லாச் செய்தவனா ?”

“85க்கு மேல வரும் என்டுதான் தம்பி சொன்னவன்.”

றீகரெக்சனுக்கு விண்ணப்பம் அனுப்புவதை விட அவனுக்கு இப்போதைக்கு அந்த இடத்தை விட்டு நகர வேண்டும். அம்மா அப்பா தங்கையின் பார்வைக் கணைகளிலிருந்து தப்ப வேண்டும்.

“பிரின்சிபாலிட்ட போய்ச் சொல்லீற்று வரவா ?”

“நான் டெலிபோன்ல சொல்றன் அண்ணா. நீங்க வெய்யிலில அலையாதீங்க.”

சின்னம்மாவும் செவ்வந்தியும் சாப்பாடு எடுத்து வைக்க குசினிக்குள் போனார்கள்.

“மற்றப் பொடியளின்ர ரிசல்ட் என்னவாம் ?”

“தம்பியிட பள்ளிக்கூடம்தான் எல்லாத்திலயும் நல்ல ரிசல்ட். எட்டுப்பேர் எஞ்சினியரிங், ஆறு மெடிசீன், ஒன்பது மனேஜ்மன்ட். இங்க தம்பீட்ட வர்ற பொடியன் சித்தார்த்தன் – அவனுக்கும் நல்ல ரிசல்ட் 2ஏ 2பி.”

கழுவிய கோப்பைகளை மேசையில் கொண்டு வந்து வைத்தாள் செவ்வந்தி. அதையடுத்து புட்டும் பால்சொதியும், சட்டி நிறைய ஆடையோடு தளதளத்த கட்டித் தயிரும் வந்தன.

“சட்டித்தயிர் எங்கால ?”. இப்போது இருக்கிற மனநிலையில் ”ரொம்ப முக்கியமான” கேள்வியைக் கேட்டான்.

“குணம் அத்தானுக்கு வீட்டிலிருந்து வந்ததாம்.”

சாப்பிடும் போது அப்பாவைப் பார்த்தான். அவர் அமைதியானவர். இன்று வழக்கத்துக்கும் அதிகமான அமைதியுடன் இருந்தார். கோயிலுக்குப் போய் பாரப்படுத்திவிட்டு வந்ததால் அப்படியிருக்கலாம். மாமாவின் ஞாபகம் வந்தது,

“சின்னம்மா, மாமா எப்படியிருக்கிறார் ?”

“நேற்று ஆள்விட்டுப் பாத்தவர் நீ வந்திற்றியோன்டு.”

இப்ப, அவனுக்கு கைகொடுக்கக்கூடிய ஒரே ஆள் மாமாதான். அவரைக் கொண்டுதான் இவர்களை ஆறுதல்ப்படுத்த வேனும். சாப்பிட்டு முடிந்த உடனேயே அவரிடம் போவதற்கு அவன் தயாரானான். தம்பியின் கடிதம் சட்டைப் பையில் இருப்பதை தடவிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டான். இப்போதைக்கு இவர்கள் கண்ணில் படாதபடிக்கு அதைப் பத்திரப்படுத்த வேண்டியது அவசியம் என்று மனம் சொன்னது.

ஏனென்றால் செவ்வந்தியோ அம்மாவோ அவனது ஊத்தை உடுப்புகளை தோய்க்க ஊறப் போடும் போது சட்டைப் பைகளை சோதிப்பது வழக்கம்.

mailto:karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்