விடிந்தபின் எல்லாம் மறையும்

This entry is part [part not set] of 15 in the series 20010422_Issue

ஜோன் ராஜரூபன்


சிாிக்கின்ற பொழுதில்
மாித்துப் போனாயே.
என் நண்பா.

என்னுடல் நோகாமல்
உன்னுடல் போர்த்தி
மண்ணைப் பொன்னாக்கலாம்
என்றது இதைத்தானா …

இது…
என் கரம் பிடித்து
நீ நடக்கும் காலம்.
காற்றோடு ஏன்
கலந்தாய்…
இன்னும்
உன் கரம்
நான் பிடிக்க
ஆசையா ?

ரணம் தாங்க
வழி சொன்னாய்
மரணம் பற்றி
மறந்தாயே…

முகம் புதைக்க
மார்பில்லை.
கவிழ்ந்தழ
மடியில்லை.
சாய்ந்துறங்கத்
தோளில்லை.
தட்டித்தர
கரமில்லை.
எதற்கும்
எதுவுமில்லை…

‘அப்பா ‘ என்றழைத்து
இன்றோடு
பத்தாண்டுகள்…

‘தமிழ் ‘ இனிமைதான்
‘காத்ல் ‘ இனிமைதான்
‘உயிர் ‘ இனிமைதான்

‘அப்பா ‘
அதைவிட உன் பெயர்.

எப்போதாவது
உன்னை கூப்பிடத்தோணும்

மலையுச்சிகள்
பாறைவெளிகள்
எங்கெல்லாம்
மனித தலைகள்
இல்லையோ

சத்தமாய்
கத்திப் பார்க்கிறேன்.
மனசின் ஆழத்தில்
இருந்து.
வலியோடு…

கேட்டதா
ஏன் மவுனம்
ஒருமுறையேனும்
என்னைக் கூப்பிடு…

ஏட்டுச் சுரைக்காய்
கறிக்குதவாது
என்றவனே
ஏன்
வெறும் நினைவுகள்
மட்டும்
விட்டுப் போனாய்…

நிலைப்பதில்லை
நீர்க்கோடுகள்.
நினைவுகள் மட்டும்… ?

கனவுகளில்
கலங்கலாக
உன் முகம்.
தெளிவில்லாமல்
உன் பேச்சு.
மேகங்களின் ஊடே
உன் சிாிப்பு.

விடிந்தபின்
எல்லாம் மறையும்
மனம் கீறிய
ரணம் தவிர…

Series Navigation

ஜோன் ராஜரூபன்

ஜோன் ராஜரூபன்