வாழப் பழகிய சந்தன மரம்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

திலகபாமா சிவகாசி


அந்த அழகிய அறைக்குள்
பத்திரமாக நானிருக்க வைக்கப் பட்டிருந்தேன்

எனக்கான உணவுகளும், உடைகளும்
உன் புருச லட்சணங்களால்
பரி மாறப்பட பசியாறினேன்

வந்து போகும் இடைவெளியில்
சுகம் தந்து போவதாய் பசியாறிப் போனாய்

பசுமை இலைகள் சூரிய வெளிச்சமோடு
சுவரில் ஒட்டியிருந்த படமொன்று
உலகம் முன்னால் இருப்பதாய் எனை
மூளைச் சலவை செய்ய

அறைக்குள் தொங்கும் கூண்டுக் கிளி
எனக்கே எனக்கானதாய் அதிசயத்தாய்

சொகுசுப் பயணங்கள் கூட
சாத்தியப் பட்டது
மூடிய கண்ணாடிக் கதவுக்குள்
நான் ரசிக்க உலகம் கிடைத்தது
யாரை நான் காண எதை
நான் அனுபவிக்க என
நீீ தீர்மானித்தவைகளோடு பத்திரமாக

தாலி எனக்கு வேலியாம் சொல்லிக் கொண்டாய்
நம்பிக் கொண்டிருந்தேன்
நிலம் உன்னுடையதாக்க அன்று
நீ பத்திரம் எழுதியது
தாலியை பார்க்கும் போதெல்லாம்
வந்து போனது நினைவில்
எனக்கு முன்னால் இருந்திருந்த இயல்புகள்
என் இருப்புகளின் இயல்புகளை
மண்ணிட்டு மூட நினைக்க
நான் உடைபெடுக்கின்றேன்

அந்த அழகிய அ(சி)றைக்குள்
நான் இருந்த இடத்தில் நீ பார்க்க முடியாது
வேர்கள் விட்டிருந்தேன்
நாளை அவைகள் சுவர்கள் அஸ்திவாரம் தாண்டிப்
பயணிக்கும் மண்ணோடு

என் பயணங்களில்
விரிசல் விடத் துவங்கியிருக்கும் சுவர்கள்
எல்லைகளில்லா என் வாழ்வை
சுவர் சிதைத்து உருவாக்கும் வேர்கள்

வேர்களிலிருந்து கிளைகள் விரிக்கும்
சந்தன மரம் நான்
தெரிந்துதானோ என்னவோ
எனை அறுத்து அறுத்து
வாசம் கண்டு கொண்டிருக்கிறாய்
பத்திரமாய் இருப்பதாய் நீ கனவு
கொண்டிருக்க
என் கிளைகள் நிரப்பும் காதலோடு கூடுகள்

உனக்கு புரிய வைக்க அவசியமில்லாது
வாழப் பழகிய மரமது

mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி