வாலிபத்தின் வாசலில்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சுஜாதா சோமசுந்தரம்


இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மேகலையின் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது.களைப்பின் சுவடு தெரியாமல் காபியைக் கலக்கி மேசையில் வைத்துவிட்டு சிதறிக்கிடந்த புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் கொட்டிக்கிடந்த பொறுப்புகளை கண்ணுற்ற பிறகு வயதை நிர்ணயிக்காமல் இருக்க முடியாது.நாற்பத்து ஐந்து வயதில் சோர்ந்து போயிருந்த முகம் சோகக்கதைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது.

ஆனந்த்…சீக்கிரம் எழுந்திருப்பா…ஏற்கனவே பள்ளிக்கு செல்ல நாழியாகிவிட்டது.

தாயின் எழுப்பலுக்கு போர்வையை விலக்காமல் கண்களை மூடியபடி காபியை எடுத்துட்டு வாங்க என்றான்.

பல் துலக்கிட்டு குடிக்கலாமில்ல…மேகலை

அம்மா…அதை நான் சொல்லனும்.என்னை காலையிலேயே கோவப்படுத்தி பாரர்க்க வேண்டாம் வார்தத்தையில் வெறுப்பை கலந்து வீசினான்.

ஆனந்த்…வார்த்தைக்கு வார்த்தை வாதம்பேசி ஆரோக்கியத்தை கெடுத்துக்காமல் எழுந்து வா.நகர முயன்றவளை நிறுத்தினான்.

அம்மா…ஒரு இருநூறு வெள்ளி பணம் எடுத்து டேபிள்ல வையுங்க.நான் போய் குளிச்சிட்டு வந்தர்றேன்.போர்வையை வெடுக்கென்று விலக்கிவிட்டு எழுந்தான்.இந்த வார்த்தையில் இழைவு இருந்தது.

என்ன…. இருநூறு வெள்ளியா ?திறந்த வாயை மூடாமலேயே மகனை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

என்னமோ இரண்டாயிரம் வெள்ளி கேட்டதைப்போல வாயை பிளக்குறீங்க ?நான் ஒண்ணும் வெட்டி செலவுக்கு கேட்கல.போன் பில் கட்டதான் கேட்குறேன்.

என்னோட மூன்றுநாள் சம்பளம்ப்பா….மேகலை சற்று குரல் ஒடிந்தே பேசினாள்.

அதனால…நான் போன் வைத்துக்கொள்ள கூடாதுங்கிறீங்களா ?இதுக்குதான் அப்பவே கல்லூரிக்கெல்லாம் போகலைன்னு சொன்னேன்.பள்ளி படிப்போட வேலைக்கு போயிருந்தா ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்துர நிலை வந்திருக்குமா ?

எதுவுமே பேசாமல் எடுத்தெறிந்து பேசும் மகனுக்காக பணத்தை எடுத்து வைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்தாள்.கண் இமைக்குள் நின்றிருந்த தூக்கம் கண்ணீரோடு கரைந்தது.

தொலைபேசி மணியின் நீண்ட நேர சிணுங்களுக்கு பதறிக்கொண்டு எழுந்தாள் மேகலை.

ஹலோ…என்ற மட்டும் அமைதியாய் இருந்த உள்ளம் மறுபக்க செய்தியை கேட்டு நொறுங்கிப்போனது.

கடவுளே…! இதுயென்ன புதுப்பிரச்சனை.சோதனைகள் வர வேண்டியதுதான்.வாழ்க்கையே சோதனையாக இருந்தால் எப்படி நிமிர்ந்து நிற்பது.

ஆனந்த்…இரண்டு நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை என்றால் எங்கே செல்கிறான் ?தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தாள். எதார்த்த சந்தேகங்களை எடுத்தெறிய நினைக்கும் போதெல்லாம் பாழாய்ப்போன மனம் மறுத்து வாதம் பேசியது.ககண்களுக்குள் நின்று கலகலவென்று சிரித்த கள்ளம்கபடமில்லாத மகனின் முகத்தை இமைகளை கொண்டு இறுக மூடினாள்.இமைகளை கிழித்துக்கொண்டு வந்தவனின் இளக்காரமான வார்த்தைகள் இன்பக்கதவையே மூடியது.

அவசர அவசரமாக கிளம்பிய மேகலை கல்லூரி முதல்வர் முன்,தன் மகன் மேல் சுமத்தப்பட்ட ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.வகுப்பு ஆசிரியர்கள் பலமுறை எடுத்துக்கூறியும் பள்ளி பிள்ளைகளை கிணண்டல்,கேலி செய்வதை நிறுத்தவில்லை என்பதை செவியுற்ற போது,இருதயமே எகிறி குதித்ததைப்போல துடித்துப்போனாள்.மேலும் வகுப்புகளை ஒழுங்காக கவனிப்பதில்லை,கொடுத்த வேலைகளை முறைப்படி செய்வதில்லையென அடுக்கிக் கொண்டே போனார்.

முதல்வரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது கண்களை மறைத்த சோகம் காதை அடைத்து நடையை தள்ளாடச்செய்தது.கீழே விழப்போனவளை கல்லூரி மாணவன் தாங்கிப்பிடித்தான்.

தன்னை தாங்கிப்பிடித்தது தன் மகனாக இருக்ககூடாதா ? என்ற நப்பாசையில் கண்களை திறந்தாள்.மகனை போலவே மனதும் ஏமாற்றியது.கணவனை மரணத்திடம் வாரிக்கொடுத்தபோது தளராத மனம் மைந்தனின் மனம் போன வாழ்வை எண்ணி தளர்ந்து நின்றது.

எந்தன் கருவில் உருவாகி, எந்தன் உயிரில் சுவாசித்து பெற்றவளையே பின்பற்றுவதாக எண்ணி இறுமாந்த என்னோட ஆனந்தா இப்படியெல்லலலாம் செய்வது ?நம்பமுடியாத நடையுடன் வீடுபோய் சேர்ந்தாள் மேகலை.

தாயிடமிருந்து பெற்ற பணத்தோடு சென்ற ஆனந்த் நண்பர்களுக்கு மத்தியில் செலவிட்டுக்கொண்டிருந்தான்.வயதிற்கு ஒத்துவராத நட்பு கூட்டத்தில் வாழ்க்கையை தொலலைத்துவிட்டு ஒற்றை கையில் சிகரெட்டும்,மற்றொரு கையில் மதுவுமாக ரசித்து ருசித்து சொர்க்கலோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.தான் செய்வது தவறு என தெரிந்திருந்தும் ஏற்றுக்கொள்ள வாலிபம் வளைந்து கொடுக்கவில்லை.

ஆனந்த் உயர்நிலைப்பள்ளிவரை படிப்பில் கெட்டிக்காரன் என பெயர் போட்டவன்.வாய் அதிராமல் வார்த்தைகள் சிதறாமல் மற்றவர்களை நோக வைக்காமல் பேசுவதில் அவனுக்கு நிகர் அவனேதான்.தனக்கென்ற கொள்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும்,சவாலோடு எடுத்து வைத்ததால்தான் வெற்றிதாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டு விலக மறுத்தாள்.அவனிடம் இருந்த ஓரே கெட்டப்பழக்கம் உறவுகளைக்கண்டு ஒட்டாததுதான்.காரணம் கேட்டால் பிடிக்கவில்லை என்று ஒதுக்கிவிடுவான்.

அப்படிபட்ட ஆனந்தா அடுக்கடுக்காய் தவறுகளை செய்துவிட்டு வார்த்தைகளில் அம்புகளை செருகி வீசுகிறான்.

தன் மகனை மட்டுமே உலகமென நினைத்து வாழும் அப்பாவி தாயின் அன்பு தோற்றது எப்படி ?தந்தையின் இழப்பு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கேட்கும் முன்னே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவளின் பரிவு மறைந்து போனது எப்படி ?

பதின்ம வயதில் மாணவர்கள் தட்டு தடுமாறி விழாமல் இருக்க முடியாது.தவறி விமுந்தவன் மட்டுமே வாழ்க்கையை சுலபமாக ஷெயிக்கிறான்.விழுந்ததே சுகமென நினைத்தால் எஞ்சுவது சோகம் மட்டுமே.இந்த இரண்டுங்கெட்டான் வயதில் கேட்பது,காண்பது,செய்வது எல்லாமே சரியாகப்படுகிறது.நல்லது கெட்டதுகளை அலசிபார்க்க பக்குவப்படாத மன இயல்பும்,நேரத்தை புரிந்துக்கொள்ளாத எண்ண ஓட்டங்களும் மாறி மாறி வந்த திசையையே மாற்றி விடுகிறது.

ஆனந்த் நல்லவன்தான்.வயது,சுற்றியுள்ள நண்பர்கள் வட்டம்,பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம்,புதிய கல்வி சூழ்நிலை ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தாய்க்கு அடங்காப்பிள்ளையாக வளர்ந்து நிற்கச்செய்தது.

தற்போதெல்லாம் தாயின் அனுசரனையான வார்த்தைகள் எல்லாம் அர்த்தமற்றவைகளாயின.வாலிபத்தின் வாசலில் நிற்பவனை வாசலில் நிறுத்தி கேள்வி கேட்பது கசப்பாகவே இருந்தது.

ஆனந்தின் மயக்க கொண்டாட்டங்கள் அவசர அவசரமாக மேகலையின் காதில் போடப்பட்டது.ஆனந்தின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளும் ஓரே நாளில் இடி இடியாக விழுந்ததை தாள முடியாமல் திணறினாள்.

கண்களில் வழிந்த நீர் எப்போது காய்ந்தது ;எப்போது உறங்கினோம்;எதுவுமே புரியாமல் கதவு திறக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த மேகலை கைகளால் முகத்தை அழுந்த துடைத்தபடி எழுந்து அமர்ந்தாள்.கிட்டதட்ட ஆறு மணி நேரம் சுமைகளின் இறுக்கத்தில் உட்கார்ந்தபடியே உறங்கியது இடுப்பை பின்னியது.

அம்மா…வேலைக்கு போகல ?தோளில் மாட்டியிருந்த பேக்கை தொப்பென்று சோபாவில் வைத்தபடி கேட்டான் ஆனந்த்.

பெத்தவகிட்டேயே முகத்தை அப்பாவி போல வைச்சிகிட்டு இவனால எப்படி நடிக்க முடியுது.மனம் பொருமியதை மறைத்துக்கொண்டாள்.

ஓய்வெடுக்காம பணத்துக்காக உழைச்சி உழைச்சி உன்னை கவனிக்காம போயிடக்கூடாது பாரு,அதனாலதான் வேலைக்கு போகல.

நான் என்ன குழந்தையா ? பக்கத்துல இருந்து பார்த்துக்க போறீங்க… ?

நீ குழந்தையாகவே இருந்திருந்தா நான் கூனிக்குறுகி நிற்க வேண்டிய கட்டாயம் வந்து இருக்காதில்ல.

அம்மா…நீங்க சொல்றது எதுவுமே புரியலை .வார்த்தைகள் வாய்க்குள்ளயே விழுந்தது.

தவறுகள் செய்துட்டு தெரியாதது போல நடிப்பது எவ்வளவு பெரிய சாமார்த்தியம் .

அம்மா…நான் எதுக்காகவும் நடிக்க தேவையில்லை.என்ன விசயம்னு சொல்லுங்க.

நான் உன்னோட கல்லூரிக்குப் போயிருந்தேன் மேகலை முடிக்கு முன்னே ,உங்களை யாரு அங்கே போகச்சொன்னது.கோவத்தால் முகம் குப்பென சிவந்தது.

ஆனந்த்…போக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி கையுல கொடுத்துட்டு கேள்வி கேட்கிறது அசிங்கமா இல்லை.வயது ஏறுதுங்கிறதுக்காக வார்த்தையும் நீளக்கூடாது,வாழ்க்கையும் மாறக்கூடாது.இப்ப சொல்லு..கல்லூரிக்கு ஏன்இரண்டு நாளா போகலை ?

அம்மா..செய்து முடிக்காது வேலைகள் அதிகம் இருந்ததாலதான் போகல. பாடங்கள் கடினமாயிருந்ததால நண்பர்கள்கிட்ட கேட்டு செய்துட்டு வர்றதுக்குதான் வெளியே போனேன்.

பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கொடுதளது வளர்த்தவகிட்டேயே பொய் சொல்லுறது கேட்க புதுசா இருக்குடா ஆனம்த்.

நான் உண்மைறைதான்ம்மா சொல்லுறேன் என்ற மகனை முறைத்துப்பார்த்தாள்.எதுடா உண்மை.. ?போன் பில் கட்ட பணம் வாங்கிட்டு போனதா ?நண்பர்களோட உட்கார்ந்து பாடம் செய்ததா ?நாம் வாழ்ற வாழ்க்கையில தெளிவு இல்லேன்னா எதிர்காலம் இருட்டாயிடும்.

இப்ப என்ன உங்களுக்கு தெரியனும்,நான் கல்லூரிக்கு போகலன்னா இருட்டாயிடும்.

மகனை அன்பான பார்வையால் வருடிக்கொண்டிருந்த மேகலையை அலட்சியமாக பார்த்தபடி கூறலானான்.

என் நண்பர்கள் கட்டாயபடுத்தினதால கல்லூரிக்கு போகல. உங்ககிட்ட பொய் சொல்லி பணம் வாங்கிட்டு போனதும் அவுங்களுக்காகதான்.

இதை சொல்ல நா கூசல. புத்தியைக்கொண்டு போய் எவன்கிட்டேயோ அடகு வைச்சிட்டு பேசுற பேச்சை பாரு.துக்கத்தையும்,தூக்த்தையும் தொலைச்சிட்டு பாசத்தாலேயும் பணத்தாலேயும் வளர்த்த என்னைவிட அவனுங்க வார்த்தைகள் தேவவாக்கா போயிடிச்சா.உன்னோட ஒவ்வொரு செயல்களோட நேரடி பாதிப்பும் எனக்குதான். பிள்ளையை வளர்க்க தெரியாம வளல்த்துட்டாங்கிறதை நாலு பேர் நக்கலா பேசுறதை கேட்க கூடிய திறன் எங்கிட்ட கிடையாது.

அதுக்காக என்னை மாத்திக்க முடியாது.நண்பர்கள்ங்கிற வட்டத்துல நல்லா இருக்கேங்கிறதுதான் உண்மை.அறைக்குள் நுழைந்து தாழிடப்போனவனின் கைகளை ஓடிவந்து பிடித்த மேகலை,ஆனந்த்…பாதை மாறி வழிகாட்டுற நட்பு வாழ்க்கையை சீர்படுத்தாது.சகதின்னு தெரிஞ்ச பிறகும் ஒதுங்க நினைக்கனுமே தவிர விழுந்து பார்க்கிறது அறிவுக்கு தவறுன்னு தோணல.வேண்டாம்டா…மது,புகைபிடித்தல்,பொண்ணுங்கள கிண்டல் செய்யிறது எதுவுமே வேண்டாம்.நல்ல பிள்ளையா படிச்சி முன்னுக்கு வர்ற வழியை பாருடா.

சரி சரி..இன்றைக்கு இவ்வளவு போதும் அலுத்தபடி கதவை அறைந்து சாத்தினான்.

ஆனந்தனின் போக்கில் நாளுக்கு நாள் மாற்றம் நிகழ்ந்துக்கொண்டிருந்தது.மேகலைக்கு ஓரே தீர்வு அமுகைதான்.நாட்கள் நகர்ந்தது.ஆனந்த் பேருக்கு கல்லூரியில் அமர்ந்துவிட்டு வீட்டையே பாராக்கி குடிக்கவும் ஆரம்பித்தான்.

ஒவ்வொரு விடியலையும் மகன் திருந்துவான் என்று ஆவலோடு எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.நண்பர்களிடம் காட்டும் அக்கறையை தாயிடம் காட்ட மறுத்தது மகனின் மனம்

கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரங்களை நண்பர்களுடன் உல்லாசமாக செலவிட்டான்.நாட்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு செய்த தவறான செயல்களால் கையில் விலங்கிடப்பட்டது.பொது இடத்தில் பெண்களை கேலி செய்தற்காக கைது செய்யப்பட்டான்.நண்பர்கள் நாசூக்காக விலக ஆரம்பித்தனர்.

ஆனந்தின் ஆறுமாத திசைமாறிய வாழ்க்கை நண்பர்களால் சிறை கம்பிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது.காலத்தின் கட்டாயத்தில் நல்லவர்கள் என்று நம்பியவர்களெல்லாம் நயவஞ்சகர்கள் என உணர்ந்தபோது உலைகளத்து இரும்பாய் துடித்துப்போனான்.

தந்தை இறந்த பிறகு தனிமரமாய் நின்று தரணியில் தன்னை தழைத்தோங்க வைக்க உழைத்த அன்னைக்கு உதவாத பிள்ளையாய் இருந்துவிட்டேனே.! எந்தன் அவமானத்தால் உன்னை கொன்று,சுடச்சுட சொற்களால் நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டேனே..! அம்மா..உந்தன் காலடியில் காலம் முழுவதும் கிடந்து பாவப்பட்ட கண்ணீரால் பாதங்களை கழுவினால் என்னை மன்னிப்பாயாம்மா ?காற்று அடிக்கும் திசைக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் மரத்தைப்போல உன் சொற்களுக்கு கட்டுப்பட்டு வாழ காத்திருக்கும் மகனை அணைத்துக்கொள்வாயா ?தன் மனக்கண்முன் நின்ற தாயிடம் முறையிட்டு அழுதான்.

சிறைக்கம்பிகள் ஆனந்தை செதுக்கி செதுக்கி சிற்பமாக்கியது.மேகலை பலமுறை மகனை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றபோது கைதியாய் தாயை பார்க்க மறுத்துவிட்டான்.படிப்பாளியாய் பாரினில் வலம் வர வேண்டும் என்ற தாயின் இலட்சியத்தை சிறைக்கம்பிகளுக்குள் சிக்க வைத்தது எது ?ஆனந்தின் மனம் நாளுக்கு நாள் பக்குவப்பட்டுக்கொண்டே வந்தது.

ஓர் ஆண்டு சிறைவாசத்திற்கு பறகு வெளிவந்த போது உலகமே மாறிவிட்டது போலிருந்தது.ஆனந்த் தாயை கண்ட நொடியில் அப்படியே நின்றான். அந்த நிமிடம் நான்கு கண்கள் சந்தித்து மெளனமாக பேசிய மொழிகளை வார்த்தைகளால் ஈடுகட்ட முடியாது.

ஆனந்த்…! உனக்காக இந்த நுழைவாயில்ல எத்தனை நாட்கள் காத்துகிடந்திருக்கேன் தெரியுமா ?ஏண்டா..அம்மாவை பார்க்கமாட்டேன்னு சொன்னே.. ?

அம்மா..நான் நல்லவனில்லையே… ! எப்படிம்மா ஒரு குற்றவாளியா முன்னாடி நிற்கிறது.

ஆனந்த்…! எம் பிள்ளை நீ நல்லவன்தான்.ஆனா,உன் வயதுதான் குற்றவாளி.நான் வளர்த்த விதம் சரியானதா இருக்கும்போது போனவழியை நினைத்து புலம்புறதில் பயன் இல்லை.

அம்மா…உங்கள எப்படியெல்லாம் காயப்படுத்திருக்கேன்.என் மேல கோபமே இல்லையா.

ஒரு தாய் கோபப்பட்டா உலகம் தாங்காதுப்பா.பூமாதேவி எப்படி பொறுமையோடு தாங்கிட்டு இருக்காளோ அதே போலத்தான் தாயும்.எனக்கு ஏற்பட்ட மனக்காயங்கள் உன்னை பார்த்த விநாடியே காணாமல் போயிட்டு.உன் உடம்புல பட்ட நான்கு பிரம்படியின் காயங்களும் வலிச்சிக்கிட்டு இருக்குதுப்பா.

அம்மா…தடுக்கி விழுந்தாக்கூட தழும்பு ஏற்பட்டுவிடுமோன்னு பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை தடுமாறி போனதால ஏற்பட்ட வடுவின் மூலம் வாழ்க்கையையும்,வாழும் முறையையும் கத்துக்கிட்டு இருக்கேன்.இந்த தண்டனை என்னை முழுமையா மாற்றி உங்கிட்டேயே திரும்ப வச்சிருக்கு என்ற மகனை ஆவலோடு அணைத்துக்கொண்டாள் மேகலை.

முற்றும்.

இக்கதை ஒலி 96.8 வானொலியில் ஒலிப்பரப்பபட்டது.

சுஷாதா சோமசுந்தரம் ,சிங்கப்பூர்.

sathish@enrichco.com

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்