வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

மத்தளராயன்


பாலக்காட்டுக்கும் ஆலப்புழைக்கும் போக வேண்டியவன் ஹைதராபாதுக்குத் திசை மாறிப் பறந்தது தனிக்கதை.

இடவ மாச மழை ஆரம்பம், குடும்பத்து மூத்தவர்கள் ஊர் நீங்கியது, பிந்தியவர்கள் குடும்ப வரலாற்றில் என்னை விடக் குறைந்த ஞானம் உடையவர்கள் என்று புலப்பட்டது ( ‘கிறிஸ்துவாளா ? நம்ம குடும்பத்துலேயா ? ‘) இன்ன பிற காரணங்களால் கடைசி நிமிடத்தில் மலையாளக் கரைக்குப் பயணம் ரத்தானது.

ஹைதராபாத்துக்கான பயணச் சீட்டுகளும் கூடவே இருந்ததால், உடனே கிளம்பு அங்கே.

ஹைடெக் பூமியில் இந்த வாரத் தொடக்கத்தில் தற்காலிகமாக சந்திரபாபு நாயுடுவிடமிருந்து புகழைப் பறித்துக் கொண்டு நீக்கமற நிறைந்து இருந்தவர் மீன் வைத்தியர் கவுடா. ஆஸ்துமாவுக்கு நிவாரணமாக உயிருள்ள சிறிய மீனை விழுங்கத் தரும் இவர் வைத்தியத்துக்காக ஒரு பைசா கூட வாங்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில தினங்களில் தான் இந்த மருந்து வழங்கப்படுகிறது.

ஆந்திர சபாநாயகர், அமைச்சர்களில் தொடங்கி லட்சக் கணக்கில் மீன் மருந்துக்குக் காத்திருக்கிறார்கள். இந்திய மருத்துவக் கழகம் கவுடாவிடம் ‘புருடா விடறியாய்யா ? ‘ என்று விளக்கம் கேட்டிருக்கிறதாம்.

கவுடா தருவது மருந்தாக இல்லாமல் இருக்கலாம். இவர்களுக்கு என்ன போச்சாம் ? அவர் மருந்தாகத் தருவது மீன் இல்லை. நம்பிக்கை. அதுவும் ஒரு கன்சல்டேஷனுக்கு ஆயிரம் ரூபாய் என்று பிடுங்காமல் முழுக்க முழுக்க இலவசமாக.

ஒரு பக்கம் இப்படி மீன் மருந்து சிகிச்சை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் முதல்வர் நாயுடுகாரு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார். பொதுப் பணித்துறை, நலத்துறை நடவடிக்கைகள் இன்னும் கணினிமயமாக்கப் பட இல்லையாம். இப்படி ஆமை வேகத்தில் நீங்கள் எல்லோரும் செயல்பட்டால் ஈ-கவர்னன்ஸ் எப்போது வரமுடியும் என்று அவர் எகிற அதிகாரிகள் சாவதானமாக மத்திய அரசின் மேல் பழி போடுகிறார்கள்.

நாயுடு குத்தகைக்கு எடுத்த கேயு பேண்ட் டிரான்ஸ்பாண்டரை இந்த மாதிரி அரசுப் பணிகளுக்கான செயற்கைக் கொள் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருக்கிறதாம்.

நான் சொல்றேன் செய். மத்திய அரசை நான் பாத்துக்கறேன்.

நாயுடு நெஞ்சு நிமிர்த்தி முழங்குகிறார் பத்திரிகையின் முதல் பக்கத்தில்.

கூடவே ஹைதராபாத் பதிப்பு டைம்ஸ் ஓஃப் இந்தியா பத்திரிகையில் தினசரி மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறார் நாயுடு. வித்தியாசமான மனிதரோ இல்லையோ, சின்சியாரிட்டி என்பதற்கு மறுபெயர் சந்திரபாபு நாயுடு என்று இருக்கும்.

ஹைதராபாத் விமானத் தளத்தில் சென்னை விமானத்துக்காகப் பாதுகாப்பு சோதனை.

சட்டைப் பையில் இருந்த மொஃபைல் தொலைபேசியை முன் ஜாக்கிரதையாக அணைத்து வைத்திருந்தேன்.

‘ஓண் இட் ‘

காவலர் சொன்னார்.

உரிமையை எப்படி நிரூபிப்பது ? அதை வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டதே. பில் எல்லாம் எங்கேயோ.

அவரிடம் இதைத் தயக்கத்தோடு சொல்ல, பலமாக மறுத்தபடி திரும்ப ‘ஓண் இட் ‘.

என்னோடது தான். என்னோடது மட்டும் தான்.

துண்டைப் போட்டுத் தாண்ட யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வலுக்கட்டாயமாக மொஃபைலை வாங்கி, அதை இயக்கினார்.

சரி போங்க.

சேட்டன் மலையாள உச்சரிப்பில் ‘on it ‘ என்று சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்.

‘உங்க மொஃபைலை ஆன் பண்ணச் சொன்னாங்க. என்னோடதை ஆப் செய்யச் சொன்னார் அந்தப் போலீஸ்கார அம்மா ‘

பாதுகாப்புப் பரிசோதனை முடிந்து வந்த என் மனைவி சொன்னாள்.

இப்படி இருந்தால் அப்படியும் அப்படி இருந்தால் இப்படியுமாக மாற்றச் சொல்லிச் சோதனை செய்வதற்குத்தான் அவர்களுக்குச் சம்பளம் என்றேன்.

***

‘புலி நகக் கொன்றை ‘ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்.

அசோகமித்திரனின் இந்த ஒற்றை வரியே போதும் இந்த நாவலைப் படிக்கத் தூண்டியதற்கு.

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினை

புள்ளிறை கூருந் துறைவனை

உள்ளேன் தோழி படா இயரென் கண்ணே

என்று அம்மூவனார் எழுதிய ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் ஞாழல் (புலிநகக் கொன்றை மரம்) நாவல் தலைப்பாகிறது.

‘தோழி கேள். நான் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன். யாரை ? எவன் நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கிறதோ அவனை. என் கண்களுக்குச் சிறிது தூக்கம் கிடைக்கட்டும் ‘ என்ற பொருளமைந்த இந்த அகத்துறைப்பாடலில் வரும் புலிநகக் கொன்றை அதை மீறிப் படர்ந்த வாழ்க்கை பற்றிய படிமமாகிறது.

பி.எ.கிருஷ்ணன் என்ற மத்திய அரசு அதிகாரி இதுவரை ஆங்கிலத்தில் ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று தெரியாது. ஆனால் இந்த ஒரு படைப்பே அவரைக் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் நிறுத்துகிறது.

கதையின் சாராம்சம் இது –

பொன்னா பாட்டி சாகக் கிடக்கிறாள். எந்தப் பொன்னாப் பாட்டி ? நாங்குநேரி ஜீயரின் மடைப்பள்ளியில் புளியோதரைப் புலியாகக் கரண்டி பிடித்தவரின் ஒரே பெண். லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் ஒரே மகன் ராமனுக்குப் பெண்டாட்டியானவள்.

போஜனப் பிரியனான ராமன் சாப்பிட்ட நேரம் போகச் சற்றே பொன்னாவுடன் படுத்து எழ, நம்மாழ்வார், பட்சிராஜன் (பட்சி), ஆண்டாள் என்று மூன்று குழந்தைகள். அப்புறம் ஒரேயடியாகப் படுத்துத் திருநாடு அடைந்து விடுகிறார் அவர்.

நம்மாழ்வாருக்கு அப்போது புதிதாக எழுந்த தேசிய அலையில் கலக்க – வ.உ.சி, பாரதியோடு, காங்கிரஸ் தீவிரவாதிகளோடு செயல்பட விருப்பம். செயல்படுகிறான். கல்யாணம் ஆகி, மனைவி மது என்ற மதுரகவியைப் பிள்ளையாகப் பெற்றுக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறாள். தேசபக்தியும் வாழ்க்கையும் அலுத்துப்போய் நம்மாழ்வார் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

அறுபது வருடம் கழித்து நம்மாழ்வார் திரும்பி வரும்போது அம்மா பொன்னா இன்னும் உயிருடன் – உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள். தம்பி பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பெரிய வழக்கறிஞர். தங்கை ஆண்டாள் கன்னி கழியாமலேயே வாழ்க்கைப்பட்டு, அதேபோதில் கணவனைப் பறிகொடுத்து, இளமையில் விதவையாகி, சித்தம் தடுமாறி மனநோயாளியாக இறந்து போயிருக்கிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன்.

திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் (கதை சிப்பாய்க் கலக காலத்தில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை நீள்கிறது) மாணவர் போராட்டத்தின்போது கண்ணன் வேலையை இழக்கிறான்.

நம்மாழ்வாரின் பிள்ளை மது பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு இறக்கிறான். அவனுடைய மகன் நம்பி டாக்டராக, பெரிய பாட்டி பொன்னாவைக் கவனித்துக் கொள்வதோடு, தன் மனைவி ரோசாவோடு கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கிறான்.

நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைத்து நம்பி தான் அவரைச் சந்திக்க அங்கே போகிறான்.

ஆனால் நம்மாழ்வார் திரும்ப வரும்போது நம்பி நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, விடுதலையான பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கிறான்.

படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா தன் பிள்ளை நம்மாழ்வாரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையோடும் நம்பியின் நினைவோடும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.

கண்ணன் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று தில்லிக்குப் பயணமாவதில் கதை முடிகிறது.

1871-ல் பொன்னா பிறப்பதற்கு ஐம்பது வருடம் முன்னால் (அவளுடைய பாட்டனார் ஜோசியர் காலத்தில்) தொடங்கி அதற்கும் முன் இருபது வருடம் முன்னால் தொட்டு (கட்டபொம்மனைத் தூக்குப் போட்ட கி.பி 1799) இந்தப் பக்கம் நம்பிக்கு மகளாக இந்து பிறந்த 1972 வரை கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடம் நடக்கும் இந்தக் கதையை இப்படி மேலே கண்டபடி லீனியராகச் சொல்வது ஓர் அறிமுகத்துக்காகத்தான்.

நம்மாழ்வார் சொல்வது போல் இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்திற்குள்ளும் பறவைகள் சத்தமிடும், பூக்களை அழிக்கும், சில சமயம் மெளனமாக இருக்கும் ஒரு புலிநகக் கொன்றை மரம் இருப்பதை விவரிப்பதுதான் கதை என்று சொல்வது அதை விட எளிது.

பி.ஏ.கிருஷ்ணன் தன் ஆங்கிலக் கதையைத் தானே தமிழ்ப்படுத்தியிருப்பதில் கூடியுள்ள பிரதான பலம் தென்கலை வைணவர்களின் பேச்சும் பழக்க வழக்கமும் அப்படியே எழுத்தில் கொண்டு வர முடிந்தது என்பதுதான்.

பட்சி ஐயங்காரின் சீனியர் வக்கீல் சங்கர ஐயர் சொல்வது போல் ‘ இந்த ஐயங்கார் கூட்டமே ஒரு தினுசுதான். எப்படியாப்பட்ட ஐயங்காரா வேணா இருக்கட்டுமே. ஜட்ஜா இருக்கலாம். வக்கீலா, சப்ளையரா, க்ளார்க்கா, சன்யாசியா, தூர்த்தனா, ஏன் குஷ்ட ரோகியாக்கூட இருக்கலாம். இவாளுக்கு எல்லாம் எல்லோருக்கும் மேல உச்சாணிக் கொப்புலே தாங்கதான் உக்காந்திருக்கோம்னு நினப்பு ‘ தெறிக்கக் கொஞ்சம் கர்வம், கொஞ்சம் எள்ளல், கொஞ்சம் எடுத்தெறிதல். முக்கியமாக அந்த அரை மரியாதை விளி.

ஜீயரிடம் ஜோசியர் சொல்கிறார் –

‘ஸ்வாமியை விட்டா ஏழை வைஷ்ணவாளுக்கு யாரிருக்கா ? நீர் கைவிட்டுட்டார்னா நாங்க எங்க போக முடியும் ? ‘

பொன்னா தன் அப்பாவிடம் சொல்வது இது –

‘கவலையே படாதயும். எனக்கு என்ன குறச்சல் ? உமக்கு என்னோட மாமனார் நிலமை பத்தித் தெரியும். அப்புறம் அவர்கிட்ட ஏன் போறீர் ? ‘

ஆனாலும் சமயத்தில் மொழிபெயர்ப்பு காலை வாருகிறது.

‘சாமி, இப்பொ வருசம் என்ன ? தொண்ணித்தி ஒம்பதா ? இப்ப எல்லாப் பவரும் இவங்க கையிலதானே ? ‘

கும்பினி உத்தியோகஸ்தன் ஒருத்தன் கட்டபொம்முவைத் தூக்கில் போட்டதற்குக் கொஞ்சம் முன்னால் சொல்கிறது இது. ‘பவர் ‘ என்ற பிரயோகம் தமிழில் இருநூறு வருடம் முன் புகுந்திருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தில் தொண்ணித்தி ஒம்பது என்று வருடத்தைச் சொல்லி இருப்பார்கள் என்று தோன்றவில்லை. போன நூற்றாண்டு தொடக்கம் வரை பிரபவ, விபவ, தாது வருஷப் பஞ்சம் என்றுதான் மக்கள் நாவில் நடமாடியது.

அதே போல், தென்கலை வைணவர் அல்லாதார் எல்லோரும் நாவலில் உத்திரவாதமாக நெல்லைத் தமிழ் பேசுகிறார்கள்.

‘பாப்பான் பின்னாலே போறதெல்லாம் நம்ம பயலுகதானே. அவன் சொன்னதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போட்டுக்கிட்டு இவந்தானே அலையுதான். வெள்ளைக்காரனுவ சந்திரன்லே ஆட்களை ஏத்திப் போட்டானுக. ஆனா இவன் இன்னிக்கும் கிரகணமுன்னா ஜயருக்கு வாழக்காய் கொடுக்கான். தேங்காய் கொடுக்கான். பாப்பான் உன்னை ஏன் ஏச்சுக்கட்டுதான் ? ‘

நாங்குநேரியில் கூட்டம் நடத்த வந்த பெரியார் இந்தக் கருத்தை நிச்சயம் சொல்லி இருப்பார் – ஆனால் கொங்குத் தமிழில்.

இதெல்லாம் குறையென்று சொல்ல வரவில்லை. கிருஷ்ணனோடு எம்.எஸ் இந்த மொழிபெயர்ப்பைக் கட்டமைக்க உழைத்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் காலச்சுவடு பதிப்பக வெளியீடு இது. பல முனைகளிலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நூலின் அடுத்த பதிப்பிலாவது இதைக் கவனித்தால் நலம்.

தென்கலை பேச்சுமொழி மட்டும் புலிநகக் கொன்றையின் வெற்றிக்குக் காரணம் இல்லை.

சு.ரா ஜி.நாகராஜனைப் பற்றிச் சொல்லும்போது ‘நிகழ்காலத்தில் இரண்டு கீற்று. நிகழ்ந்து முடிந்ததில் இரண்டு கீற்று. இப்படி முடைகிறார் ஆசிரியர் ‘ என்பார். அது கிருஷ்ணன் விஷயத்தில் முழுக்க முழுக்க உண்மை. (ஜி.நாகராஜன் ‘புலிநகக்கொன்றை ‘ படிக்க இல்லாமல் போய்விட்டாரே! அவருடைய ‘நாளை மற்றுமொரு நாளே ‘ காட்டும் மதுரைக்குக் கொஞ்சமும் மாறுபாடில்லாத மதுரையைக் கிருஷ்ணனும் சித்தரிப்பது உபதகவல்).

ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை ‘புலிநகக் கொன்றை ‘யின் ஆங்கிலப் பதிப்பை விமர்சித்தபோது அது ‘மார்க்வஸின் ‘நூறாண்டுத் தனிமை ‘ போன்றது ‘ என்கிறது. எனக்கென்னமோ அது மார்க்வஸின் ‘பெரியாத்தா கருமாதி ‘ (Big Mama ‘s Funeral) போலத் தொடங்கி இன்னும் அலையகலம் அதிகமாகி விரிவதாகப் படுகிறது.

அப்புறம் கிருஷ்ணன் படம் பிடிக்கும் அசாதாரணமான சூழல் –

அக்கிரகாரத்தில் பெரியார் கூட்டம் நடக்கிறது. மாமிகள் அவசர அவசரமாகச் சமையல் முடித்து விட்டுப் பெரியார் பிராமணர்களைத் திட்டுவதைக் கேட்கத் திண்ணையில் உட்கார்கிறார்கள்.

கண்ணனுக்கு மதுரை லாட்ஜில் கம்பெனி கொடுக்க வந்தவள் இடுப்புக்கு அண்டக் கொடுக்கத் தலையணை தேடுகிறாள். அவன் நியூ சென்சுரி புத்தகக் கடையில் மலிவு விலைக்கு வாங்கிய சோவியத் பிரசுரங்களான லெனின் எழுதிய தொகுப்புகள் (மொத்தம் மூன்று வால்யூம் ) தலையணை இல்லாத குறையைப் போக்குகின்றன. ரவிக்கையைக் கழற்றி அவற்றை மூடிவிட்டுக் கண்ணை மூடி ‘வெள்ளைக் கலையுடுத்தி ‘ என்று சரஸ்வதி வந்தனம் சொல்லிவிட்டு அவற்றின் மேல் சாய்ந்து தயாராகிறாள்.

இன்னும் விக்டோரியா மகாராணி செத்ததற்காகக் குளிக்கும் ராஜ விஸ்வாச ஐயங்கார், கெம்பராஜ் அர்ஸ் நடித்த தமிழ்ப் படத்தைக்கூட டூரிங் கொட்டகையில் விடாமல் இரண்டு தடவை பார்க்கும் ஐயங்கார் மாமி, கல்லூரி நூலகரிடம் புத்தகம் கேட்டு அது கிடைக்காத கோபத்தில் அவருடைய கடுக்கன் மாட்டிய காதைக் கடித்துத் துப்பும் வெள்ளைக்காரத் துரை, ‘வெள்ளக்காரன் கடிச்சா விஷம்னா. இங்கிலீஷ்லேயே உளறிட்டுச் சாவுதான் ‘ என்று பயப்படும் காதில்லாத கடுக்கன்காரர், மலம் அள்ளுகிறவள் கையைப் பிடித்து இழுத்து அவள் தன் முகத்தில் மலத்தைப் பூசி ஊரைக் கூட்டத் தூக்கு மாட்டித் தொங்கும் பிராமண சங்க நிர்வாகி (இவன் பெரியார் கூட்டத்தில் சுக்ல யஜூர் வேதத்தில் சிருங்கார வர்ணனை இருப்பதைப் பற்றிச் சொல்லக் கேட்டு அதை எப்படியாவது படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்த ஐயங்கார் இளைஞன்!), சர்வாங்க சவரத்துக்கு உட்காரும் ஜெர்மன் ஐயங்கார் …

‘ஜெர்மன் ஐயங்கார் கால்களை விரித்து நின்று கொண்டிருந்தார். நாவிதன் அவற்றின் இடையே தன் வேலையில் ஈடுபட்டிருந்தான் ‘

கிருஷ்ணன் நாவலை ஆங்கிலத்தில் எழுதியபோது நாவிதர் வேலையில் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லியிருப்பாரோ ?

(புலிநகக் கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புதினம். காலச்சுவடு வெளியீடு)

****

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்