வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

எஸ்.அர்ஷியா



வலிகளில் தான் எத்தனை ரகம்? மனவலி. உடல் வலி. ரணமாகிப் போய்விடும் நினைவு வலி. வடுவைப் பார்க்கும் போதெல்லாம் வருடித் தரச்சொல்லி அனர்த்தும் வேதனை வலி. உயிர் வலி. மரண வலி. சில நேரங்களில் சந்தோஷம் கூட ஒருவித வலியை உணர்த்திவிடுவது உண்டு!

பென்சில் சீவும்போது, காய் வெட்டும்போது ஏற்பட்ட காயத்தின் வலியை நாம் அனுபவித்திருப்போம். அந்த வலி, உடம்பெங்கும் பரவி, நமக்குள் எப்படியானதொரு அதிர்வை ஏற்படுத்தி விடுகிறது? வெட்டுப்பட்டது விரலென்றாலும் காயத்தின் வலிக்கு, கண்கள் அழுகின்றனவே!

எனக்குத்தொ¢ந்த பணக்காரர் ஒருவருக்கு, கல் இடறி கால்பெருவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது. நகம்பெயர்ந்து லேசாக ரத்தம் கசிந்திருந்தது. அவ்வளவுதான். அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் அவரால் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவிலான மிகச்சிறிய காயம்தான் அது. ஆனால் அதற்கு அவர் செய்த அழிச்சாட்டியம் இருக்கிறதே…இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது!

தமிழகக் கடற்கரையோரங்களில் தினம் தினம் தோணிகளின் மூலம் வந்திறங்கும் தமிழ் மக்களின் மனதில் எத்தனை வலி இருந்தால், அவர்கள் பிறந்து… வளர்ந்து… தங்கள் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி பாடுபட்டு நேசித்த மண்ணை விட்டுவிட்டு, உயிரைத் தவிர கையில் வேறு ஏதுமற்ற அகதிகளாக வந்து இறங்குவார்கள்.இலங்கையில், நூறாண்டுகளுக்கும் மேலாக உ¡¢மைப்போர் நடத்தி, முப்பது ஆண்டுகளாகத் தூங்காத ராத்தி¡¢களையும் விடியாத பொழுதுகளையும் அனுபவித்துவரும் தமிழ் மக்களின் வாழ்நிலையை, அன்றாடப்பாடுகளின் பலதரப்பட்ட வலிகளை, இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளர் விஜயலட்சுமி சேகர், ‘வானம் ஏன் மேலே போனது?’என்ற கேள்வியை எழுப்பிக் கேட்டிருக்கிறார்.

வலிகளை உணர்ந்தவன் பலவான் என்று ஒரு பழமொழிக்கூட உண்டு!

அந்த பலம்தான் அவர்களை உயிர் வாழச் செய்கிறது. அதன் வெளிப்பாடே இந்தச் சிறுகதைத் தொகுப்பு. முற்றிலும் பெண்ணியத் தலத்தில் எழுதப்பட்டிருக்கும் மிக முக்கியமான இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினைந்து சிறுகதைகளும், வேறுவேறு விதமான வலிகளை பதிவு செய்து நமக்குள் அதிர்வை உண்டு பண்ணுகின்றன.

குண்டடிப்பட்டு காயம் ஆறிப்போய்விட்டாலும் அதன்வலியை பொறுக்கமுடியாமல் தினமும் அவஸ்தைக்குள்ளாகும் நான்குவயது சிறுவன். அன்றாடக் காலைக் கடன்களைக் முடிக்கவே அவன்படும் சிரமங்களை ‘அந்தரத்தில்’ சிறுகதையாய் வாசிக்கும்போதே மனம் கல்லாகச் சமைந்து விடுகிறது.”நேராக் கால் வைத்து நடக்கமுடியாதபடி வலி இருக்கின்றது. இருந்து கக்கா போக மாட்டான். போகும்போது சா¢யா அழுறான்… ஒரு கோப்ப பால் குடிச்சாலும் உடனே வயிற்று வலி. கக்கா போறான்…” குண்டுகளுக்கு சிறுவர்களைத் தொ¢வதில்லை. எத்தனை வலியைச் சுமந்திருப்பான், அந்தச்சிறுவன்?

‘அவள் நானாகி நாமாக…’ சிறுகதை, அனாதரவான நிலையில் நிராயுதமாக நிற்கும் தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும்,நஞ்சு குடித்து இறந்துபோன அக்காவின் இரண்டு குழந்தைகளையும் வாழ்க்கைச் சுமையாய் தூக்கித்தி¡¢யும் 76வயது தாயின் பாடுகளை விவா¢க்கிறது. பாலை வெயிலில் புரளும் வெம்புளுதிபோல் பழைய நினைவுகள் கண்ணைக் கா¢க்கின்றன எனும் வாசகம் நெஞ்சை அறுக்கிறது.

தமிழ் இளம்பெண்களுக்கு நோ¢டும் துயரங்களை அறிய ‘மொட்டுகள் மலரட்டும் – 1’சிறுகதையின் சில வா¢களே போதுமானவை.”நான்மட்டும் தலைதெறிக்க மாடிப்படிவழியே கீழே பாய்ந்து ஓடுகிறேன். எல்லாப்பக்கமும் இருளும் பற்றைகளுமே. ஓடிஓடி நீண்ட தூரம்வந்தும் என் மகளைக் காண வில்லை. பைத்தியம் போல் கத்துகிறேன். உடைந்த பலகைகளிலான புற்கள் முளைத்த கட்டிடம் ஒன்று தொ¢ய…உள்ளே ஓட…அதன் நீண்ட வராந்தா தொங்கலில் சின்னச்சின்ன நிக்கர்கள் அழுக்குப்பிடித்துக் குவிந்து கிடக்கின்றது. எதேச்சையாக அவ்வழுக்குப் பிடித்த நிக்கர் குவியலை என் கை தட்ட உள்ளே என் மகளின் நிக்கரும்” இதுதான் பெண்மக்கள் படும்பாடு என்பது, நம்முகத்தில் ‘சப்’பென்று அறைகிறது.

சைக்கிள் ஓட்டும்போது தவறி கீழே விழுவதையே அவமானமாகக் கருதும் ஒருபெண், மற்றவர்களின் பார்வையால் ஏற்படும் வலியை ‘வலி’ எனும் தலைப்பிலேயே பதிவு செய்திருக்கிறார். ஏமாற்றப்படும் பெண்ணொருவர் வயிற்றில் வளரும் கருவை அழிக்க முயன்று, அது முடியாமல் போகும்போது ஏற்படும் சமூக வலியை ‘கருகும் நாளை’ என்று உயிர்துடிக்க வைக்கிறார். இதுபோல, அம்மாவைப் பி¡¢ந்த வலி, அப்பாவைப் பி¡¢ந்த வலி, காதலனின் வக்கிர புத்தி அறிந்து விலகும் போது ஏற்படும் நுண்ணிய வலி, அண்டைவீட்டு மாமாவின் அணைப்பில் தொ¢யும் பாலியல் வலி, தனக்குக்கிட்டாத பெண்ணை விபச்சா¡¢யாகச் சித்தா¢த்து தனித்தனியே துவேஷத்துடன் கல்லெறியும் வன்மம் தெறிக்கும் வலி என்று விஜயலட்சுமிசேகா¢ன் ஒவ்வொரு கதையும் ஒருவலியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

தொகுப்பு முழுவதும் வலி சார்ந்ததாகவே இருக்கும் இப்படைப்புகளை வாசிக்கும்போது, நம்மை ஏதோ ஒன்று சூழ்ந்து கொண்டு நிற்பது போல, பிரமை ஏற்படுத்தும் புதுவலியையும் கூட உணர முடிகின்றது. இந்த வலிகளெல்லாம் திட்டமிட்டு எழுதி வடிவமைக்கப்பட்டவையா எனும் கேள்வியும் கூட நமக்குள் எழுகின்றது. ஆனால் தமிழ் மண்ணில் நம் மக்கள் படும் வேதனையின் படிமங்களாக அதைப் பார்க்கும்போது, யதார்த்தம் அந்தக் கேள்வியை பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

ஏற்கனவே படிமமாகியிருக்கும் தமிழ்ச் சிறுகதையின் வடிவத்தை, இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் தகர்த்து எறிந்துவிட்டன. பல சிறுகதைகள், தமிழில் வெளியாகும் வணிகஇதழ்களின் போஸ்ட்கார்டு அளவிலான சிறுகதைகளை விட வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், அது கொண்டிருக்கும் சரக்கிலும் தரத்திலும் உசத்தியாகவே இருக்கின்றன. அச்சும் வடிவமைப்பும்கூட நேர்த்தியாக இருக்கிறது.

இலங்கை மட்டக்களப்பு சூ¡¢யா அபிவிருத்தி நிலையம் வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பு, தமிழுலகத்திற்கோர் புதிய அனுபவம் என்றால் அது மிகுதியில்லை!


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா