எஸ் அரவிந்தன் நீலகண்டன்
விவிலிய பிரச்சாரகர்களின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் உருவகங்களில் ஒன்று ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ யாகும். யூதர்கள் மோசேயால் வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துவரப்பட்ட நிகழ்ச்சியே அது. சிறுவர்களுக்கான விவிலியப் பாடல்கள் முதல் கிறிஸ்தவ இறையியலின் தத்துவம் வரையாக இந்நிகழ்ச்சி ஒரு படிம உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவ மேற்கு மாற்று கலாச்சாரங்களை எதிர்கொள்ளும் போது ‘மற்றவரைக் ‘ (the other) காண்பதிலும் இவ்வுருவகம் வரலாற்று ரீதியாக முக்கிய பங்காற்றியுள்ளது. இதனை முழுமையாக அறியும் முன்னர் ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ எனும் உருவகத்தினை யூதர்கள் காண்பதற்கும் கிறிஸ்தவ இறையியல் காண்பதற்கும் இருக்கும் வேறுபாட்டினை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
யூத சமயத்தினர் இதனை தம் வரலாற்று நிகழ்வாக காண்கின்றனர். இந்த ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ இன்றைய இஸ்ரேலே அன்றி உலகமல்ல. யாத்திராகமம் என அழைக்கப்படும் இந்நிகழ்வில் நடைபெற்றவை அன்றைய காலகட்டத்தில் அன்றைய சூழலை அடியொற்றி நடந்தேறிய விடயங்களேயாகும். எனவேதான் 1947 இல் தாங்கள் புனித பூமியாக கருதிய இஸ்ரேல் பிரதேசத்தை பிரிவினை செய்திட சம்மதித்தது. ஆனால் அதனை இன்று பாலஸ்தீனியர் என அழைக்கப்படுபவர்கள் சம்மதிக்கவில்லை. இன்றைய அகழ்வாராய்ச்சி முடிவுகள் யாத்திராகமம் கூறும் நிகழ்வுகளை மெய்ப்பிக்கவில்லை. இவ்வுண்மையை யூத ரபாய்களே தமது சமயத்தவரிடம் கூறுவதும் யூதர்கள் மாற்று மதத்தினர் மற்றும் கலாச்சாரத்தவருடனான சந்திப்பினை ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ எனும் சட்டகம் மூலம் காணவில்லை என்பதனைத் தெளிவாக்குகிறது.
எபிரேய (Hebrew) புனித நூல் கிறிஸ்தவ இறையியலில் பழைய ஏற்பாடு எனப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான யூதர்களுடன் இறைவன் செய்த ஒப்பந்தம் -விருத்த சேதனம் அடையாளமாக- குறித்தது இது எனவும் இயேசுவின் வருகைக்கு பின்னர் ‘புதிய ஏற்பாடு ‘ -இயேசுவின் இரத்தத்தின் மூலம்- உருவாகிறது எனவும் அது இயேசுவின் இரத்தத்தின் அடிப்படையில் ஆதிபாவம் கழுவப்படும் அனைவரும் இறை அரசிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாகிறார்கள் எனவும் கிறிஸ்தவ இறையியல் கூறும். ஆக கிறிஸ்தவ இறையியல் பார்வையில் ‘பழைய ஏற்பாட்டில் ‘ இருக்கும் வசனங்களுக்கு புதிய பொருள் கிடைக்கிறது. உதாரணமாக, ‘ஸீயோனின் குமாரியே ‘ என்பது போன்ற பதங்கள் கிறிஸ்தவர்கள் அவரவர் சார்ந்த திருச்சபையை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ என்பது கிறிஸ்தவ இறையியல் சட்டகத்தில் எவ்வித பொருள் அடைந்தது என்பதும் ‘இவ்வாக்களிக்கப்பட்ட பூமி ‘யின் தொன்மத்தில் இருக்கும் நிகழ்வுகள் வரலாற்றில் எவ்வித சம்பவங்களை உருவாக்கின என்பதும் ‘மற்றவர்களாக ‘ கிறிஸ்தவ இறையியலால் அடையாளம் காணப்படுவோர் அறிந்து கொள்ளவேண்டிய விசயங்களாகும்.
இஸ்ரவேலர் இறைவாக்கினனான மோசேயின் மூலம் கர்த்தரால் வழிநடத்தப்பட்டபோது புறசாதியாரான மீதியானியருக்கு (Midinites) நேர்ந்த விளைவினை எண்ணாகமம் தெரிவிக்கிறது:
எண்ணாகமம்: அதிகாரம் 31: (7-18)
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டப்படியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம் பண்ணி புருஷர்கள் யாவரையும் கொன்று போட்டார்கள் (7) அவர்களைக் கொன்று போட்டதும் அன்றி, மீதியானியரின்யா ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்று போட்டார்கள் (8) அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்தீரிகளையும் குழந்தைகளையும் சிறை பிடித்து, அவர்களுடைய மிருக ஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையையும் மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு (9) அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து, (10) தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து, (11) சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் கொள்ளையிட்ட பொருள்களையும்…மோசேயிடத்திக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டு வந்து சேர்த்தார்கள். (12)…அப்போது மோசே யுத்ததிலிருந்து வந்த ஆயிரம் பேருக்குத் தலைவரும், நூறு பேருக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகள் மேல் கோபங்கொண்டு, (14)
அவர்களை நோக்கி: ஸ்தீரிகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டார்களா ? (15)பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதனால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.(16)ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்தீரிகளையும் கொன்று போடுங்கள் (17) ஸ்தீரிகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். (18) (விவிலிய தமிழாக்க பதிப்பு: Bible Society of India, Banglore)
இதில் மீதியானியர் செய்த பாவம்தான் என்ன ? ‘பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே ‘ என மோசே எதனைக் குறிப்பிடுகிறான் ? இதற்கான பதிலினை எண்ணாகமம் 25-ஆவது அதிகாரம் பகிர்கிறது. மீதியானிய பெண்களிடம் இஸ்ரவேலர் தம் மனதை பறிகொடுத்ததுடன் அவர்களது கடவுளான பாகால் பேயோரை வணங்கினர் என்பதுதான். அவ்வாறு மீதியானிய பெண்களை மணந்தவர்கள் (விவிலிய மொழியில் ‘வேசித்தனம் செய்தவர்கள் ‘) இருபத்திநாலாயிரம் பேர் ஏற்கனவே கொல்லப்பட்டனர் என்கிறது விவிலியம் (எண் 25:9). இது மோசேயின் ஆண்டவருக்கு சமாதானத்தை ஏற்படுத்தியது. இந்த ‘பக்தி வைராக்கியத்தை ‘ (எண் 25:11) காட்டியமைக்காக இந்த சாதனையைச் செய்தவனுக்கும் அவனது சந்ததிக்கும் நித்திய ஆச்சாரிய பட்டத்தினை மோசேயின் ஆண்டவன் வழங்கினார் (எண் 25:13)
இதில் கவனிக்க வேண்டியதென்னவென்றால், இருவர் மனமொத்து திருமணம் அல்லது உறவு கொள்வதை வேசித்தனமெனக் கருதும் மோசே ‘புருஷ சம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள் ‘ என பின்னாளில் கட்டளையிடுபவனாவான். இதெல்லாம் அந்த காலக்கட்டத்தில் ஏற்படும் படையெடுப்புக்களில் நடைபெறக்கூடிய அழிவுகள் தாம் எனக் கருதுவதே சரியானதாக இருக்கும்.
ஆனால் கிறிஸ்தவ இறையியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக கர்த்தரின் இரத்தத்தினால் பாவத்தைக் கழுவிய கிறிஸ்தவர்கள் ஏற்கப்பட்ட பின்னர் இந்த ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘யாக முழு உலகமும் மாறிவிட்டது. கானானின் பூர்விகக்குடிகளாக அனைத்து கிறிஸ்தவமல்லாத கலாச்சாரங்களும் மாற்றப்பட்டுவிட்டன. ஐரோப்பிய இனவெறிக்கப்பால் முகிழ்த்து நின்றது இம்மத பார்வைதாம். எனவே பூர்விகக்குடிகளில் கிறிஸ்தவத்தை ஏற்றவர்கள் மட்டுமே உயிர் பிழைக்க முடிந்தது. உலகின் வரலாற்றில் மானுட இனங்களின் மிகப்பெரிய அழிவினை நடத்திய இக்கோட்பாட்டின் செயலோட்டத்தை நாம் இத்தொடர்களில் காணலாம்.
வாக்களிக்கப்பட்ட பூமி : அமெரிக்க கண்டம்
பாப்பரசர் ஐந்தாம் நிகோலஸ் தமது அதிகார பூர்வ அறிக்கையில் ( ‘ரோமானஸ் போண்டிபெக்ஸ் ‘ ஜனவரி 8 1455) -இல் போர்ச்சுகல் அரசன் அல்போன்ஸா மற்றும் அவனது மகன் ஹென்றிக்கு உலகினைத் தேடி கிறிஸ்தவரல்லாத மற்றவரை குறிப்பாக விக்கிர ஆராதனையாளரான பேகன்களை (Pagans) வெற்றிக்கொண்டு, தேடிப்பிடித்து அதிகாரத்திற்கு ஆட்படுத்த மறுப்போரது சொத்துக்களைப் பறித்து என்றென்றைக்கும் அடிமைகளாக்கக் கட்டளையிட்டார். 1493 இல் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தைக் ‘கண்டுபிடித்தார் ‘ என அறிந்ததும், ஒரு பாப்பரசக் கட்டளை (Papal bull-Inter Caetera (May 3, 1493) வெளியிடப்பட்டது. அதன்படி இக்கண்டத்தை ‘கண்டுபிடித்தவர்கள் ‘ தமது முன்னோர்களுக்கு பெருமை அளிக்கும் விதமாக நடந்துக் கொள்ள வேண்டியது இத்யாதிகளுடன் ‘கண்டுபிடிக்கப்பட்ட ‘ மக்களுடன் கத்தோலிக்க மதத்தை பரப்ப வேண்டியதுமாகும். அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளுக்கு புனித மன்னிப்பு வழங்கப்படும் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ளலாம். (அண்மையில் அமெரிக்க பூர்விகக்குடியினரின் அமைப்புகள் போப் இரண்டாம் ஜான்பாலை பூர்விகக்குடிகளை நிலமிழக்கச்செய்யும் சட்டங்களின் அடித்தளமான இந்த பாப்பரசக் கட்டளைகளை மறுதலிக்குமாறு வேண்டின. போப் இரண்டாம் ஜான்பால் அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை.) இத்தத்துவங்கள் -அதாவது பூர்விக மற்றும் கிறிஸ்தவமற்ற மதங்களினை கடைபிடித்து வாழ்பவர்களின் சொத்துக்கள், உரிமைகள் மேலாக கிறிஸ்தவர்கள் உரிமை எடுத்துக் கொள்வதென்பது- கிறிஸ்தவ காலனியவாதத்தின் சட்ட ஒழுங்குமுறைகளில் முக்கிய அடிக்கல்லாக மாறியது. ‘கண்டுபிடிப்புக் கோட்பாடு ‘ என வழங்கப்படும் மனப்பாங்கு கிறிஸ்தவ காலனிய மதிப்பீடுகளில் முதன்மை பெற்றது.
மிசிநரி அலெக்ஸாண்டர் விட்டேக்கர் (1613), ப்யூரிட்டனான ஜான் வின்றாப்(1620) போன்றோரது எழுத்துக்களிலும் சரி, பிரசங்கங்களிலும் சரி வாக்களிக்கப்பட்ட பூமியின் சித்திரம் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது. தூய்மைவாத திருச்சபை (Puritan) விதிகள் பூர்விகக்குடிகள் மீது விதிக்கப்பட்டு பூர்விகக்குடிகள் அதனை மீறுவதைக் காரணம் காட்டி அவர்களது நிலங்களை வெள்ளைக் குடியேற்றக்காரர்கள் தமதாக்கிக் கொண்டனர். ஜான் வின்றாப் மட்டும் இவ்விதமாக 1250 ஏக்கர்களை தமதாக்கிக் கொண்டார்.(Hans Koning, The Conquest of America: How The Indian Nations Lost Their Continent (New York:Monthly Review Press, 1993), p. 69.) சாமுவேல் லாங்க்டன் ஜியார்ஜ் வாஷிங்டனை ‘அமெரிக்காவின் ஜோஷுவா ‘ எனக் குறிப்பிட்டார். (ஜோஷுவா குறித்து விளக்கமாக பின்னர் காணலாம்.) 1805 இல் ஜெபர்ஸன் தமது உரையில் அமெரிக்காவுக்கும் வாக்களிக்கப்பட்ட பூமிக்குமான இணைத்தன்மைகளை குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டார்: ‘I shall need…the favor of that Being in whose hands we are, who led our fathers, as Israel of old, from their native land and planted them in a country flowing with all the necessities and comforts of life. ‘ என்னதான் டெயிஸ்ட் (Deist) தாக்கம் இருப்பினும் அமெரிக்காவின் கிறிஸ்தவரற்ற பூர்விகக்குடிகளைப் பொறுத்தவரையில் வெள்ளை காலனியரிடம் செயல்பட்டதென்னவோ மோசேயை வழிநடத்திய விவிலிய தேவனின் பார்வைதான். 1823 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உச்ச நீதிமன்றத்தின் ‘ஜான்ஸன் v. மெக்கிண்டாஷ் ‘ வழக்குத் தீர்ப்பு அமெரிக்காவின் நிலவுரிமை ‘கண்டு பிடிப்போரின் ‘ ஏகபோகத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டது என்ற முறையில் வழங்கப்பட்டது. அமெரிக்க கிறிஸ்தவரற்ற பூர்விகக்குடிகளின் உரிமைகளை என்றென்றைக்குமாக மாற்றியமைத்த இத்தீர்ப்பு, அவ்வுரிமைகளின் மேலாக அமெரிக்க கிறிஸ்தவ குடியாளர்களின் உரிமையின் முதன்மையை நிலை நாட்டியது. அத்தீர்ப்பிலிருந்து சில வரிகள்: ‘இக்கோட்பாட்டிற்கு வேறெந்த ஐரோப்பிய சக்திகளைக் காட்டிலும் இங்கிலாந்தே பேராதரவினை அளித்தது. இவ்விசயம் குறித்த ஆவணங்கள் நிரம்ப உள்ளன. 1496 ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்தின் ராஜாங்கம் கபோட்களுக்கு கிறிஸ்தவரல்லாத மக்களின் தேசங்களைக் கண்டுபிடித்து அவர்களது தேசங்களை இங்கிலாந்து அரசரின் பெயரில் கைப்பற்ற சாசனாதிகாரம் அளித்தார். .. இந்த சாசனாதிகாரத்தின் உரிமை ‘அனைத்து கிறிஸ்தவ மக்களும் அறியாத தேசங்களின் ‘ மீதானதாகும். இத்தேசங்களை கபோட் இங்கிலாந்தின் அரசரின் பெயரால் கைப்பற்றி எடுக்க வேண்டியதுமாகும். இது பூர்விகக்குடிகளான கிறிஸ்தவரல்லாதவரின் நிலங்களை கையெடுக்கும் உரிமையையும் அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் இருப்பின் அவர்களின் நில உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுமாகும்…எனவே இக்கண்டத்தில் நில உரிமையை நிலைநாட்டியுள்ள ஐரோப்பாவின் அனைத்து தேசங்களும் பூர்விகக்குடிகளின் நிலங்களை தமதாக்கும் தம் நாட்டு மற்றும் பிற நாட்டவரின் கண்டுபிடித்தோர் ஏகபோக உரிமை விதியை ஏற்றுள்ளன. நமது புரட்சியின் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக …பிரிட்டனுக்கு சொந்தமாக இருந்த அரசாங்க அதிகாரங்களும் நிலத்தின் மீதான அதிகாரமும் நிச்சயமாகவே அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கு வந்துள்ளது….அமெரிக்க ஐக்கிய மாகாண அரசும் அதன் பண்பாடடைந்த குடிமக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த பரந்த விதியினை ஒப்புக்கொண்டுள்ளது. ஐக்கிய மாகாணங்கள் தாம் அடைந்த நில உரிமைகளை ஏற்கின்றன. ‘கண்டுபிடிப்பானது ‘ பூர்விகக் குடிகளுக்கு அந்நிலத்தின் மீதான உரிமைகளை வாங்குவது அல்லது போர் மூலமாக கைவிட வைப்பது எனும் கண்டுபிடிப்பாளரின் உரிமையை ஏற்கிறது. அது குறித்து சுயமாக சூழ்நிலைக்கொப்ப செயல்பட அதிகாரம் வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட நிலம் வென்றெடுக்கப்பட்ட நிலம் என கருதுவது என்னதான் அதீதத்தன்மை கொண்டதாக இருப்பினும்…அது இத்தேசத்தின் சட்டம் என்ற முறையில் கேள்விக்குட்படுத்த முடியாததாகும். எனவே பூர்விகக்குடிகள் வெறுமனே அமைதிக்காலத்தில் பாதுகாப்பளிக்கப்பட்டு நிலத்தில் தங்கியிருப்பவர்கள் என்றே கருதப்படவேண்டுமேயன்றி அவர்களுக்கு அந்நிலத்தை பிறருக்கு அளிக்கும் உரிமைகள் இல்லை. ‘
1830 இல் பூர்விகக் குடிகளை இடம்பெயர்த்தும் சட்டம் உருவாக்கப்பட்டது. 1820 கள் முதல் 1840கள் வரை செரோக்குகள் சாத்வாக்கள் ஆகியோர் தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து ஒக்லகோமாவுக்கு செல்லும்படி வற்புறுத்தப்பட்டனர். இப்பெயர்வு ‘கண்ணீரின் பாதை ‘(Trail of Tears) என்றாயிற்று. இதில் 4000 செரோக்குகள் உயிர் இழந்தனர்1864 இல் 8500 நவஜோ மக்கள் தம் பாரம்பரிய குடியிருப்புக்களை விட்டு நியூ மெக்ஸிகோவுக்கு செல்லவேண்டியதாயிற்று. இது ‘நெடும் நடை ‘ (Great walk) என வழங்கப்படுகிறது. இவையனைத்திற்கும் மேலாக சிறு சிறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி கிறிஸ்தவ காலனியவாதிகளுக்கு ஆதரவாக பூர்விகக்குடிகள் மீது கடும் இராணுவநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. போர்களில் பிடிபடும்,
அநாதையாக்கப்படும் பூர்விகக்குடிகளின் குழந்தைகள் மிஷிநரிகளால் கைப்பற்றப்பட்டு ‘பண்பாடடையவும்-கர்த்தரினை ஏற்கவும் ‘ செய்யப்பட்டார்கள். ஐரோப்பாவில் ‘கிறிஸ்தவரல்லாத பெற்றோர்களின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அப்பெற்றோர்களுடையதா அல்லது கிறிஸ்தவர்களுடையதா ?-பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகளை அப்புறப்படுத்தி அவர்களை கிறிஸ்தவர்களாக்குவது சட்டப்படி சரிதானா ? ‘ என்பவை சட்டரீதியாக விவாதிக்கப்பட வேண்டியதாக இருந்தது. ஏற்கனவே அமெரிக்க மற்றும் கனடா சட்டங்கள் அமெரிக்க பூர்விகக் குடிகளின் ஆன்மிக போதனைகளை தடை செய்திருந்தன. இந்நிலையில் ‘அமெரிக்க பூர்விகக்குடிகளின் குழந்தைகளை ‘ ஆப்பிள் குழந்தைகளாக்கிட (வெளியே சிவப்புத்தோலும், உள்ளே வெள்ளை ஐரோப்பிய மனமுமாக மாற்றிட) கல்வி நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன. குடும்பங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அந்நியக் கலாச்சாரம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சூழலில் பல குழந்தைகள் இந்த பள்ளிவிடுதிகளில் இறந்துவிட்டனர். 1869 முதல் அமெரிக்க ஜனாதிபதி யூலைஸஸ் கிராண்டின் ‘அமைதி உடன்படிக்கையின் ‘ ஒரு பகுதியாக பூர்விகக்குடிகளின் குழந்தைகள் விடுதிப்பள்ளிகளில் சேர்க்கப்படும் நடவடிக்கை ஆரம்பமாயிற்று. இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால் இந்த பள்ளிகளில் முதலாவது அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியை தொடங்கியவர் கேப்டன் ரிச்சர்ட்.ஹைச்.பார்ட் என்பவன். ‘மனிதர்களை காப்பாற்ற இந்தியர்களை கொல்லவேண்டும் ‘ எனும் வாசகத்தால் பிரபலமடைந்த இவன் ‘காட்டுமிராண்டிகளுக்கு பிறந்தவர்களை பண்பாடுடையவர்களாக்க ‘ இந்த பள்ளியை நிறுவினான்.கலிபோர்னியாவில் இவன் நடத்திய பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் பெற்றோரிடத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் பெற்றோர் வர அனுமதிக்கப்படாத விடுதிப் பள்ளிகளில் இக்குழந்தைகள் கிறிஸ்தவ கலாச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இங்கு குழந்தைகள் கடுமையாக உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டதுடன், தமது சொந்த கலாச்சாரம் சார்ந்த அனைத்து அம்சங்களும் அக்குழந்தைகளிடமிருந்து அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ வழிபாட்டு முறைக்கு அக்குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். நவஜோ குலத்தைச் சார்ந்த பின்னாள் பூர்விக உரிமை போராளி ஒருவர் தமது சிறுவயதில் தமது தாய்மொழியை பேசியதற்காக ஒரு முழு சோப்கட்டியை விழுங்கவைக்கப்பட்டார். 2001 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய கனடா திருச்சபை, ஆங்கிலிக்கன் திருச்சபை ஆகியவையும் அரசுமாக பூர்விகக்குடிகளின் 50,000 குழந்தைகள் கனடாவின் பள்ளிவிடுதிகளில் இறந்தமைக்கு பொறுப்பேற்கக் கடமைப்பட்டவை எனக் கூறுகிறது.
தென் அமெரிக்காவில் கத்தோலிக்க ஸ்பானியர்கள் அஸ்டெக்குகளிலும் இதர பூர்விகக்குடிகளிலும் கானான் பிரதேசவாசிகளைக் கண்டனர். சொல்லொண்ணாக் கொடுமைகளை அரங்கேற்றினர். இக்கொடுமைகளிலிருந்து தப்புவிக்க ஒரேவழி கத்தோலிக்கராக மாறுவதெனவும் அவ்வாறு மாறும் பட்சத்தில் கத்தோலிக்கராகும் பூர்விகக்குடிகளை அடிமைகளாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றுவதாகவும் கூறி -அதற்கு முயற்சிகளும் எடுத்து- வெகு செழிப்பாக மதமாற்றங்களை நடத்தியவர் டொமினிக்கன் கத்தோலிக்க பேராயர் (பிஷப்) பர்த்தலோமே டி லாஸ் காசாஸ். அவர் ஸ்பானிய படையெடுப்பின் நிகழ்வுகளை நூலாக எழுதவும் செய்தார். ‘Brevisima relacion de la destrucion de las Indias ‘ எனும் அந்நூல் 1552 இல் வெளியானது. 1583 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘எல்லாம் வல்ல ஆண்டவர் இம்மக்களை ஆடுகளைப்போல வலிமையற்றவர்களாகவும் மென்மையானவர்களாகவும் ஆக்கினார் அவர்களை எதிர்த்த ஸ்பானியர்களளோ பசியால் திமிறியெழும் சிங்கங்களையும் புலிகளையும் ஓநாய்களையும் போல. நாற்பது வருடங்கள் அவர்கள் இம்மக்களை படுகொலைகள் செய்தனர்; சொல்லொணாத துன்பங்களை சித்திரவதைகளை அளித்தனர்…இத்தீவுகளில் ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்னால் பூர்விகக்குடிகள் 30 இலட்சம் பேர்கள் இருந்திருப்பர் இன்றோ 300க்கும் குறைவானவர்களே இருப்பர்…ஸ்பானியர்கள் பந்தயங்கள் கட்டினர். ஒரே வெட்டில் ஒரு மனிதனை யாரால் நன்றாக வெட்டி பிளக்கமுடியும் ? மிகத்திறமையுடன் ஒரு கழுத்திலிருந்து தலையை சீவுவது …குழந்தைகளை தாய்களிடமிருந்து உருவி பாறையில் குழந்தைகளின் தலையை மோதி உடைப்பது… ‘
சுருக்கமாக சொன்னால் கானானில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட யாத்திராகம-எண்ணாகம-ஜோசுவா- தொன்ம நிகழ்வுகள் மறு-அரங்கேற்றப்பட்டன. ஒரு முக்கிய அதிகப்படி நிகழ்வும் நடந்தேறியது.
‘நமது மீட்பரையும் அவரது 12 அப்போஸ்தலர்களையும் மகிமைப்படுத்தும் படிக்கு பிடிக்கப்பட்ட பூர்விகக்குடிகள் 13 பேர் கொண்ட குழுக்களாக தீயிலிடவோ அல்லது தூக்கிலிடவோ செய்யப்பட்டார்கள். அவ்வாறு செய்கையில் சிலர் இரவு முழுவதும் ஜீவித்து ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். டொமினிக்கன் பாதிரிகள் இது தம்முடையவும் இதர ஸ்பானிய போர்வீரர்களுடையதுமான தூக்கங்களைக் கெடுப்பதாக இருப்பதால் அவர்களுடைய தொண்டைகளில் மரத்துண்டங்களால் அடைக்கும்படிக்கு உத்தர விட்டார்கள். ‘
அடுத்து : ‘வாக்களிக்கப்பட்ட பூமி : ஆப்பிரிக்கக் கண்டம் ‘
aravindan.neelakandan@gmail.com
எஸ் அரவிந்தன் நீலகண்டன் படைப்புகள்
- பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு
- உன்னதம் இலக்கிய இதழ்.
- ‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி
- உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்
- கடிதம்
- தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- வாஷிங் மெஷினும், மனுஷனும்!!
- அகமும் புறமும் (In and Out)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்
- தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்
- ‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து
- ‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்
- நிலாக்கீற்று -3
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2
- அப்பாவி ஆடுகள்
- நிவாரணம் வந்தது மனிதம் போனது!
- கீதாஞ்சலி (55)
- பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்
- ரிஷபன் கவிதைகள்
- ஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்
- ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1
- ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!
- எல்லாம் ஒலி மயம்
- பயம்
- கன்னிமணியோசை
- மஹான்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)