வழிவிடுங்கள்….

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

த.எலிசபெத்


அன்றாடம் ஒவ்வொரு
வார்த்தைச்சாவடிகளைத் தாண்டி-என்
நிஜ வாழ்க்கைக்குள் நுழைய
நான் திண்டடிவிடுகிறேன்

எப்போது திருமணம்
வயது போகிறதே
வரனின்னும் பார்க்கவில்லையாவென்ற
வார்த்தைக்ககணைகளில்
வலிக்கிறதிதயம்

வனப்பான சொத்தும்
வாளிப்பான உடலை மட்டும்
வாழ்க்கைத்தகுதியாய் பார்க்கும்
வரன்களால் நானின்றும்
முதிர்க்கன்னிதான்
வினா தொடுக்குமெவரும்-என்
வலிகளுக்கு விடை தரவில்லை

இளையோரெல்லாம்
இல்லறத்திலிணைய-என்
இதயம் மட்டும்
விரக்திக்குள் சங்கமித்து விடுகிறது
காதலிப்பது பாவமென்றார்
காதல் தெய்வீக குற்றமென்றார்-நானிதற்கு
காததூரமோடினேன்

நான் பிறந்தது பாவமா
பெண்ணென்பது குற்றமா

அநுதாபம் தேவையில்லை
ஆறுதல் தேடுகிறேன்-உங்கள்
அறிவுரை தேவையில்லை
எனக்கொரு புது வழி தேடுகிறேன்
தூர விலகிடுங்கள்-என்
வாழ்க்கைப் பாதையில்
நான் பயணிக்க வேண்டும்
குற்றம் தேடும் அற்பரே
குறி சொல்லாதீர் -எனது
குறிக்கோளையடைய வேண்டும்
கண்ணீரில் நனைந்த -இந்த
பாலைவனம்
பசுஞ்சோலையாய் மாற வேண்டும்
என்னை சுமந்த சொந்தங்களுக்காய்
வாழ வேண்டும்-எனக்கு
வழிவிடுங்கள்
விதியென்று சதி செய்திடாதிருங்கள்….!!!!

Series Navigation

த.எலிசபெத்

த.எலிசபெத்