வலி தந்த மணித்துளிகள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

சாமிசுரேஸ்


தொடரூந்து நிலையம்
பெயர்ப்பலகை மாறுகிறது

காத்திருக்கிறேன்
கால்களின் கீழே சலசலத்தோடுகிறது நதி
நதியின் பெருக்கைத் தின்னாமல்
முக்கியங்களைத் தொலைத்து
மூலைக்குள் மனிதர்கள்.

விடியலின் மரணத்துளிகளை விழுங்கிக்கொண்டிருக்கும்
இந்த சர்ப்பங்கள்
சில நொடிகளில் தூய்மையை இழக்கும்.

இருத்தலில் இல்லாத பொருளை
கனவுகளுக்குள் திணித்து
முடமாய் அலையவிடுவதில்
சுகம்காணும் வேலிகள்.

தேடலில்லாத உலகம்
சுற்றளவுகளில் வலிக்கிறது.

நீண்ட கணப்பொழுதுகளில்
பார்வைகளின் முள் அதிர்வுகள்
மௌனமாய் எரியும்.

சில மணித்துளிகளை அலையவிட்டு
கால்களை நிலையாய்ச் செருகி
பூஜ்ஜியமாய் முடங்குகிறது காலம்.

இந்தப் புதிய யுகம்
உன் இருப்புக்களை விழுங்கிவிடும் சந்தேகமில்லை
எதிர்கொள் மரணம் வருகிறது.

ஒவ்வொரு முகங்களிலும்
வெவ்வேறு நிறங்களைப் பூசிக்கொண்டலைகிறது உடல்.

காத்திருக்கிறேன்
பெயர்ப்பலகை மாறிக்கொண்டிருக்கிறது.

எனைச்சுட்டுப்பொசுக்கியபின்
நடுங்கியபடி அலைகிறது காற்று


எனக்கெதிரே
உணர்வுகளின் வேற்றுமை வெளிப்பாடுகள்
ஒவ்வொன்றாய் தொங்கியபடி சுற்றின


நான் வெட்கித் தலைகுனிகிறேன்
அழுகித் தொலைகிறது இன்னொரு விதி
ஆற்றுப்படுகையில்லா மைதானமாய்.


நேரம் மறைகிறது
வழுக்கியோடிய அமைதியினூடே
மறைந்துகொண்டிருக்கிறது நதி


நெருப்புப் பூத்த மேனியாய்
என்னுள் இருந்த
கடைசித்துளி சொற்களும் கரைய
இதுவே என் இறுதிச் சொல்லாயிற்று

26.12.2007


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்

சாமிசுரேஸ்