யமுனா ராஜேந்திரன்
1
தமிழ் சினிமா மீதான இருவிதமான அரசியல் தலையீடுகள் முனைப்புப் பெற்று வருகிறது. முதலாவதாக தமிழ் தேசிய அரசியலின் வேட்கையாக சினிமாத் தலைப்புகள் தூய தமிழில் வைக்கப்பட வேண்டும் எனும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இரண்டாவதாக ஒழுக்க அரசியலின் அடிப்படையில் தமிழ் சினிமாவில் பாலுறவுச் சித்தரிப்புகள் தொடர்பாக தமிழ் தேசியத்தை நம்புகிறவர்களிடமிருந்து திட்டமிட்ட வகையிலான எதிர்ப்புகள் திரண்டு வருகிறது. தொல்.திருமாவளவன், பா.கிருஷ்ணசாமி, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இவ்வாறு தமது கண்டனங்களை முன்வைத்து வருகிறார்கள். தூய தமிழப் பெயர்கள் தொடர்பாக தயாரிப்பாளர்கள் தமது வியாபார அணுகூலங்களின் பொருட்டும், இயக்குனர்கள் அது தம்மீது ஏற்படுத்தும் பொருளாதார அழுத்தங்களின் பொருட்டும் இந்தக் கோரிக்கைக்கு வளைந்த கொடுத்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். பண்பாட்டு அம்சங்களைவிடவும் இதில் பொருளாதார ஆதாய அம்சங்களே முன்னுரிமை பெறுகிறது.
கமல் ?ாஸன் போன்று ஒரு சிலர் மட்டுமே இதற்கு மாற்றான அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் புழங்கும் மக்கள் மொழிக்கு மாற்றை வன்மமாகத் திணிக்கும் முயற்சி எனவும் இதனை வரையறுத்திருக்கிறார்கள். தூய தமிழ் தொடர்பாக தமிழ் தேசியவாதிகளின அழுத்தம் சிருஷ்டிகரமான படைப்பாளிகளின் மீதான வெஞ்சினமாகவும் வெளிப்படக் கூடிய எதிர்கால சாத்தியம் இருக்கிறது. இன்றைய உலகின் ஆதிக்க மொழியாகவும் அதீத தொடர்பாடல் மொழியாகவும் இருக்கிற ஆங்கில மொழி அகராதியை எடுத்துக்கொண்டால், அம்மொழியின் ஆதாரச் சொற்கள் பாதியாவும் பிறமொழிச் சொற்கள் மறுபாதியாகவும் ஆகி முழுமைப்படுவதனை நாம் பாரக்கவியலும். பண்பாட்டு உலகவயமாதலின் காலத்தில் மொழித்தூய்மை என்பது நம்மை முன்னோக்கி இட்டுச்செல்லும் எனத் திட்டவட்டமாகக கருதுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. தமிழ் மொழியில் அன்றாட பாவனையில் கலந்து விட்ட வெகுமக்கள் மொழியிலுள்ள பிற மொழிச்சொற்களை அகற்றுவது சாத்தியம்தானா என்ற மிகப் பெரும் கேள்வியும் இதில் பொதிந்துள்ளது.
இதுவன்றி புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு எனும் மருத்துவ அடிப்படையில் ரஜினிகாந்த் மீதும், அரசியல்வாதிகளின் அன்றாட நடவடிக்கைகளின் மீது விஜயகாந்த் கேள்வி எழுப்புகிறார் எனும் அதிகார அடிப்படையில் அவர் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒழுக்க,அதிகார அரசியல் அடிப்படையில் தலையீடு செய்கிறார்கள். எவ்வகையிலும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது மட்டுமே பாட்டாளி மககள் கட்சியினரது அறுதி நோக்கமாகவிருக்கிறது என்பது தமிழக அரசியல் வரலாறு. ஒழுக்க அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் அதிகார சமரசத்தில் அவர்கள் வீழக்கூடிய சாத்தியங்கள் மட்டுமே இதில் அதிகம்.
பாய்ஸ், விருமாண்டி போன்ற படங்களைச் சுற்றி எழுந்து எதிர்ப்பின் கருத்தியல் கூறுகளைப் பாரப்போமாயின், பாய்ஸ் தொடர்பாக முன்வைக்கப்பட்ட மார்க்சியர்களி(பாபா உமாநாத்) திராவிடக் கழகத்தவர்( வழக்கறிஞர் சரஸ்வதி) போன்றவர்கள் தவிரவும் பிறரது அபிப்பிராயங்கள் வெறுமனே ஒழுக்கவாத அடிப்படையிலானது எனப் புரிந்துகொள்ள முடியும். பாய்ஸ் படத்திலுள்ள பெண்களின் உடல் மீதான வன்முறையை இந்திய சமூகத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறையின் தொடரச்சியாகப் மார்க்சியர்கள் மட்டுமே பரிந்து கொண்டிருக்கிறார்கள்.
திரைப் படங்களில் பாலுறவுச் சித்தரிப்பு தொடர்பான பிரச்சினையில் மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன. பெண் உடலை நுகர்பொருளாக்கிச் சித்தரிப்பது அதில் முதலானது. பெண் உடலின் மீதான வன்முறையை ருசிகரமாக்கிச் சித்தரிப்பது இரண்டாவது. மூன்றாவதாகப் பெண் உடலை வன்முறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் விடுவிப்பதன் பொருட்டு அதன் இன்ப நோக்கைச் சித்தரிப்பது. பெண்விடுதலையோடு தொடர்புடைய மிகமுக்கியமான சித்தரிப்பு மூன்றாவது வகையிலானது. பா.கிருஷ்ணசாமி மூன்றாவதான பரிமாணத்தைக் கூட ஒழுக்கவாத அரசியலின் அடிப்படையில் எதிர்க்கிறார். கமல் ?ாஸன் படங்களில் இருக்கும் முத்தக் காட்சிகள் பாலுறவுக் காட்சிகள் தொடர்பான அவரது ஆட்சேபங்கள் அதனையே மெயப்பிக்கினறன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் அபிப்பிராயங்கள் கூட இவ்வகையில் திட்டவட்டமாகத் தெளிவுபட வேண்டிய தேவை இருக்கிறது.
விருமாண்டி படம் தொடர்பான, தமிழ் சினிமாவில் சாதிய வன்முறை மீதான விசாரணை என்பது கமல் ?ாஸன் தவிர்த்த விஜயகாந்த் அர்ஜீன் அத்தோடு காவலிதுறை வன்முறைப் படங்களினி மீதுதான் திருப்பப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் முதன்முதலாக தமிழ் சினிமா விமர்சனத்தை சாதீய வன்முறை மீதான விமர்சனமாகத் திருப்பியிருக்கும் பா. கிருஷ்ணசாமி அவர்களின் நோக்கு எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. வன்முறையைச் சித்தரிப்பது என்பதிலும் இரண்டு விதமான பரிமாணங்கள் உண்டு. முதலாவதாக அதிகார வரக்கத்தினதும் ஆள்பவர்களினதும் அமைப்புரீதியிலானதும் வன்முறை நேரடியாகவும் உளவியில் ரீதியிலும் வெளிப்படுவதை நாம் அவதானித்த அதற்கு எதிர்பார்வையை முன்வைப்பது. இரண்டாவதாக அதிகாரத்திற்கு எதிரானதும் விடுதலை நோக்கியதுமான எதிர்வன்முறையைச் சித்திரிப்பது. தமிழ் சினிமாவில் இன்றும் அதிகமும் இடம் பெற்றிருப்பது முதல்வகையிலான வன்முறைதான். இரண்டாம் வகையிலான எதிர்வன்முறை என்பது இங்கு தனிநபர் சாகசமாகவே சித்தரிப்புப் பெற்றிருக்கிறது.
வன்முறையிலுள்ள அதிகார சார்பு வன்முறையும், அதிகாரத்திற்கு எதிரான வன்முறையும் தமிழ்சினிமாவில் குழப்பியடிக்கப்பட்டிருக்கிறது. காவலிதுறை அதிகாரியாகி விளிம்புநிலை மக்களைக் குரூரமாகக் கொனறழிப்பவன்தான், அதே விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக நின்று இங்கே அதிகாரிகளை நையப்புடைக்கிறான். எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெறும் வன்முறைக்குமி இப்போதைய காவலிதுறைபிபடங்களில் இடம் பெறும் வன்முறைக்கும் இடையிலான இரண்டு குணருப மாறுபாடுகளை இங்கு நாம் அவதானிப்பது நல்லது. எம்.ஜி.ஆர். படங்களில் வெகுமக்களின் வன்முறையும் தனிநபரின் வன்முறையும் இணை நிலையில் அதிகாரத்திற்கு எதிராக அவர் வழி வெளிப்படுவதைப் பாரக்கவியலும். அதைப்போலவே குற்றிவாளிகள் எனும் அளவில் விளம்பு நிலை மாந்தர் மீதான காவலிதுறை நடவடிக்கையின் பின், எம்.ஜி.ஆர் அவர்களைக் குரூரமாகக் கொன்றொழிப்பதில்லை, காவல் துறை வசம் நீதி விசாரணைக்காக ஒப்படைப்பார். ஆனால் இன்று வெகுமக்களின் அதிகார எதிரப்பு வன்முறை என்பது துப்புரவாக இல்லாமல் தனிநபர் வன்முறை மட்டுமே முன்வைக்கப்படுகிறது. குற்றவாளிகள் எனப்படும் விளம்புநிலை மாந்தர் மீதான காவல்துறை வன்முறையென்பது அவர்களைக் குரூரமாகக் கொன்றொழிப்பதின் மூலம் காட்சிரூபமாகிறது.
வன்முறை பாலுறவு போன்ற மிக ஆதாரமான பிரச்சினைகள் குறித்தும், அதைச் சித்தரிப்பதிலுள்ள சமூக விளைவுகளி குறித்தும், தணிக்கை விதிகளின் மூலம் இவைகளின் மெது கட்டுப்பாடு விதிப்பது குறித்தும், உலக சினிமாவில் ஒரு நுீற்றாண்டாகவே விவாதங்கள் நிகழ்ந்து வந்திருக்கிறது. இவை இரண்டையும் சித்தரிப்பதிலுள்ள அறவியல், அழகியல், அரசியல் அம்சங்கள் குறித்து மார்கசியத்தினால் உந்துதால் பெற்ற மகத்தான திரைப் படைப்பாளிகள் திரையில் பேசியிருக்கிறார்கள். நுகர்வு நோக்கிற்கு எதிரான இன்ப நோக்கை மையமாக்கொண்ட பாலுறவு சாரிந்த பிரச்சினைகளை இந்தப் படைப்பாளிகள் பேசியிருக்கிறார்கள். சகலவிதமான அதிகாரம் சாரந்த வன்முறைகளுக்கும் எதிரான விடுதலை சார்ந்த எதிர்வன்முறை குறித்த இந்தப் படைப்பாளிகள் பேசியிருக்கிறார்கள். இலத்தீனமெரிக்க திரைப்பட இயக்குனரான கிளாபர் ரோச்சா போன்றவர்கள் வன்முறையின் அழகியல் சாரந்த பிரச்சினைகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று தோன்றியிருக்கும் வன்முறையும் பாலுறவும் தொடர்பான திரைப்பட விவாதங்கள் அதனது ஒழுக்கவாத அடிப்படையிலிருந்து நகரவில்லை. அதனது குழப்பமான அரசியல் பரிமாணமே தற்போது வெளிப்பட்டிருக்கிறது. படைப்பாளிகள் இப்பிரச்சினைகளைச் சித்தரிப்பதிலுள்ள திரைப்பட அழகியல் அம்சங்கள் இவ்விவாதங்களில் துப்புரவாக நிராகரிக்கரிப்பட்டிருக்கிறது. இந்திய தமிழக சூழலில் இப்பிரச்சினைகள் மிகமுக்கியமாக தணிக்கைக் குழவின் அதிகாரங்களோடும், அதன் மீதான வெகு மக்களின் அழுத்தங்களோடும் தவிரக்கவியலாத வகையில் பிணைக்கப்பட்டிருக்கிறது.
2
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் அசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலறவுக்க எட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே ஒரு சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களுடன் உறவு கொள்கிற மத்தியதரப் பெண்கள் குறித்து செளஜன்யமாக அதில் படித்த மத்தியதரவயதுப் பெண்கள் கருத்துச் சொல்லிருக்கிறார்கள். மேற்கத்திய அமெரிக்கப்படங்களில் பள்ளிப் பிள்ளைகளுன் பாலுறவு சித்திரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பாலுறவு, வன்முறை, பள்ளிப் பிள்ளைகள், தலைமுறை இடைவெளி போன்ற பிரச்சினைகள் இன்று சர்வதேசிய கரலாச்சாரப் பிரச்சினையாக இருக்கிறது. தமிழகமும் தமிழ்ச் சினிமாவும் இதிலிருந்து தப்பமுடியாது. தகவல் தொழில்நுட்ப ஊடகத்தின் வளர்ச்சியுமிஎமது நாடுகளில் இளம் பெண்களிடம் தோன்றியிருக்கிற உடுப்பு மோஸ்தர் தொழில் மீதான கவர்ச்சியும் இன்று பாலுறவு சம்பந்தமான மதிப்பீடுகளை மாற்றி விட்டிருக்கிறது பாலுறுப்புகளும், முன்பு மறைக்கப்பட்ட பெண் உடலினது பகுதிகளும் இன்றைய உடை நாகரிகத்தினால் வெளிப்படையாக ஆகியிருக்கிறது. வயது வந்தோருக்கான படங்களும் நீலப்படங்களும் எமது ச
மூகங்களின் நள்ளிரவு அலைவரிசைகளில் பாரக்கக் கிடைக்கிறது.
உலகவயமாதலுக்கும் நுகர்வுக் கலாச்சாரத்துக்கும் ஆட்பட்டிருக்கும் கீழை நாடுகளைச் சேர்ந்த எமது இளைய தலைமுறை இதனது பாதிப்புகளில் இருந்து தப்பமுடியாது. தொலைபேசி அழைப்பு மையங்கள் நமது நாடுகளுக்கு பாரிய அளவில் இடம்பெயரும் அதேவேளையில் நமது இளைய தலைமுறையினரின் ஆங்கில உச்சரிப்பும் நடை உடை பாவனைகளும் நுகர்வுத் தேர்வுகளும் மாறுகின்றன. ஒரு புதிய மத்தியதர வர்க்கம் சார்ந்த இளைய தலைமுறை இதனால் உருவாகியிருக்கிறது. அவர்கள் இன்று அதிகமும் பயணம் செய்கிறார்கள். பல் கலாச்சாரங்களை அறிந்து கொள்கிறார்கள். தேடிச் செல்வதும் புதிய அனுபவங்களில் ஈடுபடுவதும் இவர்களது உலகக் கண்ணோட்டமாக ஆகிவருகிறது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக் கனவு கானும் இந்தத் தலைமுறை, பாலுறவு சம்பந்தமாகவும் பழைய கட்டுக்களை மீறி வருகிறது. அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்கள் போலவே தமிழ் சினிமாக்களும் நுகர்வுக் கலாச்சாரப் பார்வையிலான இந்தப் பாலுறவுப் பிரச்சினைகளையும் தலைமுறை இடைவெளியையும் தமது படங்களில் சித்தரிக்க முயல்குறது.
தமிழ் சினிமாவில் விக்கிரமன் ( புது வசந்தம்) யூகி சேது ( கவிதை பாட நேரமில்லை) ராபர்ட் ராஜசேகர் (பாலைவனச் சோலை) போன்றவர்கள் தனித்த அறையில் பாலுறவு தவிர்ந்து நட்புடன் வாழும் இளம் ஆண்கள் பெண்களைச் சித்தரித்தார்கள். அதே வகையில் கும்மாளம், காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்களில் பாலுறவை நேரடியாகச் சித்தரிக்காமல் பாலுறவு வேட்கையை மட்டும் நேரடியாகச் சித்தரித்தார்கள். ஆனால் துள்ளுவதோ இளமை, பாய்ஸ், இளசு ரவுசு புதுசு, குறும்பு போன்ற படங்கள் உடல் சார்ந்த பாலுறவையே காட்சியாகச் சித்தரிக்கப் புகுந்தன. துள்ளுவதோ இளமை படம் பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையால் வீட்டிலிருந்து வெளியேறும் பள்ளிப் பிளிளைகள், பிறர் வன்முறைககுகள் ஆட்படுவதையும், பாலுறவில் ஈடுபடுவதையும் சித்தரித்தது. இன்னும் அப்படத்தில் பாலுறவு கொள்ளும்போது பாதுகாப்பில்லாமல் அந்நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவே தனது தோழியை சகதோழி கோபித்துக் கொள்கிறாள்.
பாய்ஸ் படத்தில் விலைமாதுவை தாய் தகப்பனற்ற வீட்டுக்குக் கூட்டிவந்து, விடலைகள் உறவு கொள்ள எத்தனித்தமை விஸ்தாரமான காட்சியாக இடம் பெற்றது. இளசு புதுசு ரவுசில் பாலுறவு அனுபவம் பெறுவதற்காக பள்ளிப் பிள்ளைகள் விலைமாதர் விடுதிக்குச் செல்வது காட்டப்பட்டிருந்தது. விலைமாதர் விடுதியில் கைது செய்யப்படும் பள்ளிப் பிள்ளையின் தாய், அப்படத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள். பிற பிள்ளைகள் விலை மாதர் விடுதிக்குப் போவதற்குக் காரணமாக, பெற்றோர்களின் பொறுப்பற்ற வெளிப்படையான பாலுறவு நடத்தை சித்தரிக்கப்பட்டிருந்தது. குறும்பு படத்தில் பல ஆண் நண்பர்களைக் கொண்ட பெண் சித்தரிக்கப்பட்டிருந்தாள். அந்நண்பர்களுடன் அப்பெண் சாதாரணமாக முத்தம் தருதலிலும் ஈடுபடுகிறாள். தாய் தகப்பன் வீட்டில் இல்லாத வேளையில் அந்தப் பெண், அதே குடியிருப்பிலுள்ள தன் காதலனை உடலுறவு கொள்ளவும் வீட்டிற்கு அழைக்கிறாள். அந்தக் காதலனும் மருந்துக் கடையில் சென்று ஆணுறை வாங்கவும் செய்கிறான். தன் மகள் தான் இதில் ஈடுபடப் போகிறாள் எள்று தெரியாக பெண்ணின் தகப்பன், அந்தப் பையனை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். இன்னும் வேடிக்கையாக கல்யாணமான மத்தியதர வயது ஆணும் பெண்ணும் கூட பிறர்மனை விழைதல் விளையாட்டாகக் காண்பிக்கப்படுகிறது.
தமிழ் சினிமா பாலுறவுச் சித்திரிப்பு குறித்து புதியதொரு கட்டத்துக்கு வந்துவிட்டது. பாலுறவு அனுபவங்களை நேரடியாகத் தமிழப் படங்களில் சித்திரிக்கும் காலம் தொடங்கிவிட்டது. இது போட்ட காசு தரும் வியாபாரம் என்று பலருக்குத் தெரியும். தமிழ் வெகுஜனக் கலாச்சாரத்தில் இதற்கு உதாரணம் ஆனந்த விகடன் மணியன். புறன் மனை விழைதல் தொடர்பாக வெளிப்படையாக எழுதிய அவர்தான் தமிழின் முதல் பக்திப் பத்திரிக்கையைத் தொடங்கினார். தற்போது தொடர்ந்து பக்திப்படங்களை எடுத்து வந்த பாரதி கண்ணன் வயசுப் பசங்க எனப் படம் எடுத்து வருகிறார். பக்தியும் சரி காமமும் சரி விமர்சனமற்ற உணர்வ சார்ந்த விசயம். ஆகவேதான் போலிச் சாமியார்கள் பக்தியுடன் காமத்தையும் விஆயாட்டாக்கி ஆட முடிகிறது. மணியனும் பாரதி கண்ணனும் பக்தியையும் காமத்தையும் எப்படி வியாபாரம் செய்யமுடியும் என்பதற்கு சான்றானவர்கள். தனுஷின் அண்ணனான செல்வராகவன் நேரடியாக அமெரிக்கப் பாதிப்புக்கு உள்ளானவர். காமமும் கிளுகிளுப்பும் இல்லாமல் இனி தமிழ் சினிமா இல்லை என்கிறார் அவர். தனுஷ் சிம்பு போன்றவர்களின் வரவும், அமெரிக்க மனப்பான்மையுள்ள தமிழ் சினிமா இயக்குனர்களின் பிரவேசமும், கலாச்சார உலகவயமாதலும் சேர்ந்து இன்றைய தமிழ் பாலுறவுச் சினிமா உருவாகியிருக்கிறது.
இந்த இயக்குனர்களின் சித்தரிப்பு முறைகளும் கூட அமெரிக்க பாலுறவுப் படங்களின் சித்திரிப்புப் போன்றதுதான். பாலுறவு வேட்கை, இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தனிநபர் சமூக விளைவகள் போன்றவற்றைக் குறித்து நேரடியாகவும் காத்திரமாகவும் அமெரிக்கப் படங்கள் பேசுவதில்லை. அமெரிக்கர்கள், விடலைப் பையன்களின் சேட்டைகளில் இதுவும் ஒன்று என்கிற மாதிரித்தான் கேலிக்கூத்தாக்கி நகைச்சுவைப் படங்கள் எனும் போர்வையில் இதனைக் கொடுக்கிறார்கள். பாய்ஸ், இளசு புதுசு ரவுசு, குறும்பு பேர்ன்ற படங்களில் பாலுறவு நடவடிக்கையைத் தேடிச் செல்கிற அனைவருமே கேனப்பயல்கள் மாதிரி சித்திரிக்கப்பட்டிருப்பது இந்தவகையில்தான். குறும்பு படத்தில் வருகிற ஒரு குடும்பத் தலைவி, குடும்பத் தலைவன் இடையிலான பிறர்மனைக் காமம் கூட கேலிக் கூத்தாக்கப்படிடிருப்பது இவ்கையில்தான். அடிப்படையான தனிநபர் சமூக விளைவுகளைக் கொண்ட ஒரு பிரச்சினையை கேலிச்கூத்தாக்கிக் காசு பார்ப்பதுதான் இந்தப் படங்களின் இயக்குனர்களது நோக்கம். இந்தப் படங்களின் இயக்குனர்கள் எவருமே இந்தப் பிரச்சினையை தீவிரக் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை என்பது முக்கியமாக அவதானிக்கத்தக்கதாகும்.
இதே பாட்டையில் அது ஒரு கனாக்காலம் எனப் பயணம் போகவிருந்த பாலுமகேந்திரா அந்தப் படத் தயாரிப்பிலிருந்து பின்வாங்கிவிட்டார் எனும் செய்தியும் வந்திருக்கிறது. தமிழ் சமூகம் இம்மாதிரிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருக்கவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லியிருக்கிறார் பாலு மகேந்திரா. பாய்ஸ் படத்திற்கு வந்த எதிர்ப்பிணையிட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவும் பாய்ஸ் படத்தின் மீதான வெகுஜனக் கண்டனத்தை முதிர்ச்சியுறா தமிழ் வெகுஜன மனோநிலை என்றே புரிந்திருக்கிறார். பாய்ஸ் படத்தில் சித்திரிக்கப்படுவது விடலைப் பையன்களின் பாலுறவு வேட்கை மட்டுமன்று, அப்படத்தின் காட்சிகள் சகல பெண்களின் உடல் மீதான வன்முறையை, அத்துமீறலைக் காட்சியாகக் கொண்டிருக்கிறது. பாலுறுப்புகள் தவிர ஏதுமற்றவர்கள் எனும் வகையில் அப்படத்தில் சகல வயதுப் பெண்களும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை பாலு மகேந்திரா போன்றவர்கள் ஞாபகம் கொள்ளவில்லை. விடலைப் பைன்களின் பாலுறவு வேட்கையை பல பத்தாண்டுகளுக்கு முன்பே அழியாத கோலங்கள் எனும் தமிழ் சினிமாவில் அனுமதித்தவர்கள் தமிழக மக்கள். ஏனெனில் அங்கு பெண் உடல் மீதான வன்முறையென்பது விகாரமான காட்சிகளாக இருக்கவில்லை. கலை அனுபவம்தான் அங்கு முக்கியமாக இருந்தது. காசு பார்க்கும் வியாபாரம் முக்கியமாக இருக்கவில்லை.
விடலைப் பாலுறவுப் படங்கள் அனைத்திலும் சித்திரிக்கும் இன்னொரு விசயம் பொறுப்பற்ற பெற்றோர்கள் பற்றியது. பிறர் மனை விளையும் பெற்றோரி, வீட்டு வேலைக்காரியுடன் காமுற்றோர், தமது பிள்ளைகள் முன்பே கலவி கொள்வோர், பிள்ளைகளைக் கவனியாது சமூகச் சேவைக்குச் சென்றுவிடுவோர், காசொன்றே குறியாக பாசத்தைத் தராதுவிடும் பெற்றோர் போன்றவர்களே பிள்ளைகளின் பாலுறவு நாட்டங்களுக்குப் பிரதான காரணங்கள் எனச் சித்தரிக்கப்படுகிறார்கள். பாய்ஸ் படம் மட்டுமே தகவல் தொழில் நுட்பமிதொலைக்காட்சிப் பிம்பங்கள், மோஸதர் தொழில்துறை போன்றவற்றைக் காரணமாகக் காட்டியது. ஆனால் அது இயக்குனரின் போலித்தனம் என்பது அந்தப்படத்தின் காட்சிகளாலேயே விளங்கும். ஏனெனில் தமிழ்ப்படமான பாய்ஸ்ஸில் இடம் பெற்ற மோஸ்தர்கள், உடைகள் போன்ற அனைத்துமே பாலுறவுத் தூண்டலை நோக்கம் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது.
பாலுறவுப் பிரச்சனை குறித்த படங்கள் தொடர்பான விவாதங்களை நாம் இரண்டு விதங்களில் இருந்து அணுகுவதால் மட்டுமே சரியான திசையில் பயணிக்க முடியும். எமது சமூகப் பண்பாட்டு விளைவுகள் சார்ந்தே பாலுறவுப் பிரச்சனையை அணுகமுடியும். பாலுறவு அனுபவம் தரும் சந்தோசம் என்பதை நமது சமூகம், அதனது விளைவுகள் சார்ந்து, வயது அடிப்படையில் புத்திபூர்வமாக முதிர்ச்சி அடைந்தோருக்கும், கல்யாண பந்தத்தில் நுழைந்தோருக்கும் மட்டுமே அனுமதித்திருக்கிறது. இப்படியான பாலுறவுப் பிரச்சனைகள், ஒழுக்கம் சார்ந்த தடைகளையும் தகர்த்து, தனிநபரின் பாலுறவுத் தேர்வையும் சுதந்திரத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சேதுமாதவனின மறுபிறவி, ஆர்.சி.சக்தியின் உணர்ச்சிகள், சிறிதரின் இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் உடலுறவு சார்ந்த விசயங்களைக் கூடக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மறுபிறவியில் உளவியல் பிரச்சினையால் மனவியோடு பாலுறவில் ஈடுபடமுடியாத கணவன் சித்திரிக்கப்பட்டிருந்தான். உணரச்சிகள் படத்தில் இளம் விதவையின் பாலுறவு வேட்கை சித்திரிக்கப்பட்டிருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அன்னியர்களுக்குடையில் தனிமையில் நேரும் பாலுறவு சித்திரிக்கப்பட்டிருந்தது. பாலுறவு என்பதும், பாலுறவு வேட்கை என்பதும் ஒரு அடிப்படையான மானுடப் பிரச்சினை. அதனது சமூக அறவியல் அடிப்படைகள் சாரிந்து அது ஏற்படுத்தும் பிரச்சினைகளை நிதானமாகப் பார்க்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாகவே ஓரு கலைஞனுக்கு உண்டு.
பாலுறவு சார்நத அடிப்படை வேட்கைகளைத் தற்போது 15-18 வயதுக்குள்ளேயே தலையிலும் உணர்விலும் பற்றிப் பிடிக்க வேண்டிய நிலைமையில், இளைய தலைமுறையினர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் விரும்புகிறோமோ இல்லையோ பாலுறவு அனுபவம் சார்ந்த வேட்கைகள் இவர்களிடம் சீக்கிரமாகவே தோன்றிவிடுகிறது. இதற்கான காரணம் நுகர்வுக் கலாச்சாரமும் உலகவயமாதலும் காட்சிக் கலாச்சாரத்தின் கட்டுதளையற்ற பரவலாக்கமும் தான் என்பதில் சந்தேகமில்லை. கனடாவிலும் சில மேற்கத்திய நாடுகளிலும் தமிழ் பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பள்ளிப்பிள்ளைகள் கர்ப்பத் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டுமென அரசு விரும்பகிறது. அந்த நிலை எமது நாடுகளுக்கும் பரவுவது தவிரிக்கவியலாமல் நிகழும்.
உலகவயமாதலின் பாதிப்பகளைத் தடு;த்து நிறுத்தமுடியாது. ஆனால் பள்ளிக் பிள்ளைகள் இதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் ஏற்படும் சாதக பாதகங்களை அந்தந்தப் பண்பாட்டுப் பின்புலத்தில் வைத்துச் சித்தரிக்கக் கூடாது எனச் சொல்வதும் சாத்தியமில்லை. பிரச்சினை பொறுப்புடன் விளைவுகள் சார்ந்து பார்க்கப்படவேண்டும். சதை வியாபாரிகளை நாம் இவ்வகையில் இனம் காணவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப்படங்கள் அனைவரும் பார்க்கக் கூடிய படங்களாக இருக்கமுடியாது. பிரச்சினைகள் சித்திரிக்கப்படுவதற்கு ஒப்ப, அந்தந்த வயது சார்ந்தவர்கள் பார்க்கப்பட முடிவதாக தணிக்கைச் சான்றிதழ்கள் அமையவேண்டும். இதனை பிரித்தானியா போன்ற நாடுகள் ஏற்கனவே கடைப்பிடித்து வருகின்றன. காற்றாட்டுவெள்ளமென பெருக்கெடுத்து வரும் உலகவயமாதலின் பாதிப்புகளைத் தடுக்கமுடியாது. ஆனால் நாம் பண்பாட்டு அணைகட்டி நிச்சயம் நெறிப்படுத்த முடியும்.
3
வன்முறையென்பதை நாம் உடல்சார்ந்த நேரடியுலான வன்முறை மற்றது உளம்சார்ந்த வன்முறை எனப் பிரித்துக் கொள்வது நன்று. ஏனெனில் உடல் சார்ந்த வுன்முறை உடலுக்கு ஊனத்தையும் செயல் முடக்கத்தையும், உடலுக்கு நிரந்தர அழிவையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏவப்படுவதாகும். இதன் உச்சம் மனிதக் கொலை. பண்பாட்டு ரீதியான வன்முறைகள் உளவியல் ரீதியானவை. மனிதனது ஆளுமையையும் அவனது பெருமிதத்தையும் அழித்து அவமானத்தை குறிப்பிட்டவர் மீது ஏற்றும் நோக்கம் கொண்டவை இத்தகைய வன்முறைகள். சாதியத் தீண்டாமை மற்றும் பெண்களின் மீதான நிந்தனைச் சொற்கள் போன்றவற்றின் வழி வெளிப்படுகிறது இவ்வகை வன்முறை.
எம.ஜி.ராமச்சந்திரனை நாம் விவாதத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளக் காரணம். 1930 களில் தொடங்கிய தமிழ் சினிமாத் தயாரிப்பில் அவருக்கு முன்பாகச் சித்திரிக்கப்பட்ட தமிழ் சினிமா வன்முறை என்பது மல்யுத்தம் அல்லது வாள்வீச்சு சார்ந்த சரித்திரப் படங்களிலேயே இருந்து வந்திருக்கிறது. ரஞ்ஜன் ஆனந்தன் போன்றவர்களின் தொடர்ச்சியாகவே தமிழர் வீரத்தின் அங்கமாகவே இத்தகைய வன்மறைகள் இருந்து வந்திருக்கின்றன. நவீன ஆயதங்கள் திரட்டிக் கொள்ளப்பட்ட ஆயுதக் குழக்களின் வன்முறை, மத சாதிய அரசியல் ரீதியில் உடல் அழிப்பு சார்ந்த வன்முறைகள் அதற்கு முன்பான காலகட்டங்களில் சித்திரிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு. மன்னர்களுக்கிடையிலான போர்கள் சதிச் செயல்கள் கடற்கொள்ளையர்களின் சண்டைகள் மலைக்கள்ளர்களின் சாகசங்கள் பேர்னறனவே உடல்சார்ந்த வன்முறையாக இடம் பெற்று வந்திருக்கின்றன. ஆனால் மதம் சார்ந்த பெண்கள் சார்ந்த உளவியல் வன்முறை மெளனமான பிம்பங்களாக தொடர்ந்து இருந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் பண்பாட்டின் அம்சமாக சமூகத்தின் சகல அம்சங்களில் உறைந்திருந்ததான வன்முறையே இது.
எம.ஜி.ராமச்சந்திரனை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு நாம் தமிழ் சினிமாவில் வனிமுறைச் சித்திரிப்பின் வகையினங்கள் குறித்து அவதானிப்போம் என்றால் வனமுறையின் தன்மைகளை அவதானித்துவிட முடியும். (1). புதினைந்து பேரைத் தனிநபராக வீழ்த்துகிற சாகசம். (2). தேசபக்த காவலிதுறை மற்றும் படைத்துறை உளவுச் சாகசம் ( குடியிருந்த கோயில் மற்றும் ரகசியப் போலுஸி 115) சார்நத படங்கள் (3). விளிம்புநிலை மக்களின் தலைவனாக தலைமையேற்றுச் செய்யும் சாகசம் ( ஆயிரத்திலொருவன், நம்நாடு மற்றும் படகோட்டி) போன்றவற்றின் வழி அவரது படங்களில் வன்முறை என்பது இடம் பெற்றது.
எம்.ஜி.ராமச்சந்திரனின் படங்களில் இடம்பெற்ற வன்முறைகள் இரண்டுவிதமான அரசியல் பண்புகள் கொண்டவை. முதலாவதாக சட்டம் நீதியைப் பாதுகாக்கிற காவலிதுறை வன்முறையை படையினர் வன்முறையை அவரது படங்கள் நீதியானவை எனப் பற்றி நின்றன. இரண்டாவதாக மத சாதிய அம்சங்களில் ஒடுககுமுறைக்குள்ளானவர்களின் பக்கம் நின்று ஒடுக்குபவர்களுக்கு எதிரான வன்முறையின் நியாயத்தைப் பற்றி நின்றன. என்றாலும் வன்முறை குறித்த இறுதிப் பார்வையில் சமரச உபதேசமே அவரது சமூக நோக்காக இருந்தது.(3). பெண்களைப் பொறுத்து இன்று வரையிலான திராவிட அரசியல் கட்சிகளின் பார்வையான நிலப்பிரபுத்துவ பாலுறவு அறவியல்களையே (விவசாயி, எங்கள் தங்கம் மற்றும் கன்னித்தாய்) போதித்து வந்ததன் வழி பெண்களின் மீதான உளவியல் வன்முறையை எம.ஜி.ராமச்சந்திரனின் படங்கள் கொண்டிருந்தது.
கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பிரதானமாக வளர்ந்து வந்திருக்கிற வன்முறை வகையினங்கள் என்ன எனப் பார்த்தோமானால், கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்து வந்திருக்கிற மத சாதிய வன்முறைகளின் நேரடியான நிலைநாட்டல்களை நாம் புரிந்து கொள்ள முடியும். (1).பதினைந்து பேரை வீழ்த்துகிற நாயகன் ரஜினியிலிருந்து தனுஷ் வரை அப்படியே இருக்கிறார்கள். (2). எதிரிகளின் சமூக அடிப்படையும் அரசியல் அடிப்படைகளும் மாறிவிட்டாலும் கூட காவலிதுறை மற்றும் படையினரின் வன்முறை நீதியான வன்முறை எனப் போதிக்கும் படங்கள் அப்படியே இருக்கிறது. (3) சிறை வன்முறை தொடர்பாக மட்டுமே விமர்சன ரீதியில் ( மகாநதி மற்றும் பிதாமகன்) சில படங்கள் வந்திருக்கின்றன. (4). சாதிவன்முறை மண்வாசனைப் படங்களின் வழி நேரடியாகச் சித்தரிக்கப்படலாயிற்று. இப்படிச் சித்திரிக்கப்பட்ட வன்முறை வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொள்ளாததாலும் ஆதிக்கச் சாதிகளை மையமாகக் கொண்டிருந்ததாலும் ( தேவர் மகன் மற்றும் பாரதி கண்ணம்மா) முரண்கள் நேரடியாகச் சித்தரிக்கப்படாமல் கூடார்த்தத் தன்மை கொண்டதாகவே இருந்தது
கடந்த பத்தாண்டுகளுல் இந்துத்துவாவென்பது இந்தியாவின் அரசியல் பண்பாட்டுத் தளங்களில் ஒரு அதிகார சக்தியாக வேர்கொண்டயைடுத்து, மதம் சார்ந்த வன்முறையென்பது வெளிப்படையாகக் கூச்சநாச்சமின்றி இந்திய தேசபக்தி எனும் அடிப்படையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அர்ஜூனுடைய படங்களில் வில்லன்கள் பாகிஸ்தானிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஆகிறார்கள். விஜயகாந்தின் படங்களில் உள்ளுர் இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளோடு சேர்ந்து இந்தியாவில் நாச வேளைகளில் ஈடுபடுகிறார்கள். பாரதிராஜாவின் ஈரநிலம் போன்று கார்கில் யுத்தத்தை மையமாக வைத்து இந்திய படைத்துறை ஆதரவுப் படங்கள் தமிழில் வெளிவரத் தொடங்குகின்றன. இஸ்லாமிய மக்களின் மீதான வன்முறைக்கான அரசியல் இவ்வாறாக தமிழ் சினிமாவில் நேரடியாக வேரோடி வளர்கிறது.
தாராளவாத அரசியலும் பகுத்தறிவுக் கொள்கையும் மதச்சார்பற்ற தன்மையும் கொண்டிருந்த திராவிட இயக்கங்களின் சமூகப்பார்வையின் விளைவாக தலித் மக்களுக்கு எதிரான நேரடியான வன்முறைகள் என்பது தமிழ் சினிமாவில் இடம் பெறவில்லை. காரணமாக தமிழ் சமூகத்தில் நேரடியாக அம்மக்களின் மீது உடல்சார்ந்த வன்முறையில் ஈடுபட்டுவந்த இடைநிலைச்சாதியினரின் கருத்தியல் சட்டகமாகவே தமிழ் சினிமா இருந்தது. யார் அந்த மக்களின் மீது வன்முறை செலுத்தி வந்தார்களோ அவர்களே அம்மக்களின்பால் பரிவு கொண்டவர்களாகவும் அவர்களுக்காகப் போராடுகிற தலைவர்களாகவும் (சின்னக்கவுண்டர், மறுமலர்ச்சி மற்றும் சேனாபதி) போலியாகப் படங்களில் சித்தரிக்கப்பட்டார்கள். இந்தப்படங்களிலும் தலித் மக்கள் குறித்த சித்தரிப்பென்பது பூடகமாகவும் கூடார்த்தமாகவுமே சித்தரிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் நேரடியான சாதிய அடையாளங்களுடன் சித்தரிக்கப்ட்ட பாத்திரங்கள் பிராமணர் கவுண்டர் தேவர் போன்ற சாதியினராகவே இருந்தனர். இன்னும் மகிமைப்படுத்தப்பட்ட பரோபாகாரிகளாக இந்தச்சாதியினரே தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டனர். பிராமணர்கள் புனிதப்படுத்தப்பட்ட அதே அளவு நையாண்டியாக்கப்பட்டும் வந்திருக்கின்றனர். காரணம் தயாரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் இயக்குனர்களாகவும் இவ்வகைப்படங்களில் இயங்கியவர்கள் தேவர்கள் கவண்டர்கள் போன்ற சாதியினர்தான். இவர்களது படங்களில் தலித் மக்களின் பிரசன்னம் என்பது இன்மைகளாகவும் ஓரங்கட்டப்பட்ட நிழல்களாகவுமே நடமாடினார்கள். ஆனால் வில்லன்களின் கையாட்களாகவும் சமூகவிரோதிகளாகவும் பேட்டை ரவுடிகளாகவும் சித்திரிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்களாகக் கிறித்தவர்களாக சேரி பாசை பேசுபவர்களாகவே இருந்தனர். கறுப்பு மக்களும் சேரித் தெலுங்கு பாசை பேசுபவர்களும் நக்கலுக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள். கவண்டமணி செந்தில் நகைச்சுவையின் பாதிபடங்கள் தலித் மக்கள் மீதான வன்முறை கொண்டவை என்றால் அது மிகையில்லை.
இந்தக்கட்டத்தில்தான் தமிழகத்தில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றன. கோயில் பூசைகளில் விலங்குகள் பலுயுடபிபடுவதற்கு எதிரான சட்டம் வருகிறது. மதமாற்றத் தடைச்சட்டம் வருகிறது. பசுவதைத் தடைச்சட்டம் குறித்த விவாதம் வருகிறது. இவையெல்லாவுமே சமூகத்திட்டங்கள் எனும் அளவில் தலித் மக்களதும் இஸ்லாமிய மக்களதும் வாழ்முறைக்கும் பண்பாட்டு நடைமுறைகளுக்கும் எதிரானது என்பது தெள்ளென விளங்கக் கூடிய உண்மைகளாகும். அரசியல் ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் தலித் மக்களின் மீதான வன்முறை அதிகரித்துவரும் அதே வேளையில் தமிழ்த் திரைப்படத்திலும் இஸ்லாமிய மக்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. தலித் மகிகளின் மீதான வன்முறை அதிகரித்துவரும் அதே வேளையில்தான், தமிழ் சினிமாவில் அக்கிரகாரத்துக்குக் குடியேறி அடிதடியில் ஈடுபடும் அன்னியர்கள், சேரிபாசை பேசும் கறுப்பு நிறமான சமூக விரோதிகள் மீதான காலிதுறை என்கெளன்டர் படங்கள் அதிகரித்து வருகிறது.
இஸ்லாமியர்கள் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கப்பட, சேரிமக்களும் உதிரிப்பாட்டாளிகளும் சமூகவிரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். சமூகவிரோதிகளாக அடையாளமற்றுச் சித்தரிக்கப்படுபவர்களின் வாழ்விடம் என்று நாம் பார்த்தோமானால், அவைகள் மீனவர் குப்பமாகச் சேரியாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களாக அவை சித்தரிக்கப்படுவதைக் கண்டு கொள்ள முடியும். அங்குதான் பெரும்பாலுமான தலித் மக்கள் வாழ்கிறார்கள். நகரப்பறத்தில் வந்து சமூகவிரோதச் செயலில் ஈடுபடும் ரெளடி, கதாநாயகனாலோ அல்லது போலீசினாலோ துரத்தப்படும் போது அவன் ஓடிஒளியும் இடம், நிச்சயமாகக் குப்பமாகவோ சேரியாகவோ நடைபாதைக்குடியிருப்பாகவோ ரெயில்பாதையோரங்களாகவோ அல்லது கைவிடப்பட்ட கட்டிடமாகவோ இருப்பதை நம்மால் காணமுடியும். அவர்களது சாவும் அங்குதான் முடியும். ஒரு வகையில் தலித் மக்களின் மீதான நேரடியுல்லாத பிம்பங்களின் வழி தலித் மகிகள் மீதான வன்முறைகள் இவ்வாறுதான் இன்று தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. காக்க காக்கவும் சாமியும் நிச்சயமாகவே இவ்வகையிலான படங்கள்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்துத்துவாவையும் சாதியாதிக்கத்தையும் அரசியல் ரீதியில் எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்கள், பண்பாட்டு அடிப்படையிலும் இதனை எதிரித்துப் போராட வேணிடிய நிலைமைக்கு உந்தப்படுகிறார்கள். அரசியல் போராட்டத்தில் எதிரிகள் நேரடியானவர்கள். களமும் நேரடியிலானது. ஆனால் பண்பாட்டு ரீதியிலான தமிழ் சினிமாவை விமர்சித்த போராட்டத்தில் எதிரிகள் நேரடியானவர்கள் அல்ல. எதிரி இங்கு உருவாகியிருக்கும் சினிமாச் சட்டகம். எதிரியாக இங்கு இருப்பது முன்வைக்கப்படும் காட்சியமைப்பு. எதிரியாக இங்கு இருப்பது சொற்களும் இசையும். எதிரியாக இங்கு இருப்பது நிகழும் சினிமா முன்வைத்திருக்கும் கருத்துருவம்.
4
அரசியல் அதிகாரத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் நேரடியான உறவு வெளிப்படையானது. திமுக அதிமுக மதிமுக நடிகர்கள் உண்டு. காங்கிரஸ் தொடர்ந்து முயன்றாலும் கூட அப்படியான நடிகர் கூட்டம் அதற்கு இல்லை. கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்து அப்படியானதொரு நடிகர் நடிகையர் கூட்டத்தை விடவும், சமூகத்தில் தாம் விரும்புகிறவாரான அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றத்தை வேண்டும் படைப்புகளையே எதிர்நோக்குவர்.
நிகழ்வில் இருக்கும் தமிழ் சினிமாவென்பது நான்கு விதமான அழுத்தமான அரசியல் அழகியல் பண்புகளைக் கொண்டது. (1) விளிம்புநிலை கலக எதிர்ப்பும் தேசிய அரசியலும் தொழில்நுட்ப ஊடகத் தேர்ச்சியும் கொண்ட மணிரத்தினம் அடியற்றிய படங்கள். (2)திராவிடப் பாரம்பர்யத்தினரின் நிலப்பிரபுத்துவ மாண்புகள் கொண்ட பெண் எதிர்ப்பு திரைப்படங்கள். (3) சங்கரை அடியற்றிய அரசியலையும் பாலுறவையும் அமெரிக்க ?ாலிவுட் பாணியில் தொழில்நுட்ப சாதுரியத்தடன் பிரதி செய்யும் இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்கள். (4) நிகழும் சினிமாவுக்கு உள்ளிருந்தபடியே மாற்றம் வேண்டி முயற்சி செய்யும் கமல் ?ாஸன் தங்கர்பச்சான் சேரன் பாலா போன்ற இயக்குனர்களின் படங்கள்.
தமிழ் அரசியல் பாரம்பர்யத்தில் எதிர்கலாச்சாரக் கூறுகளை முன்வைத்ததாகச் சொல்லப்படும் கலைஞர் கருணாநிதியிடமோ அல்லது திரைச் சிந்தனையமைப்பில் அவரை அடியற்றிய ஜெயலலிதா வைகோ போன்றவர்களிடமோ நிகழும் தமிழ் சினிமா சார்ந்து எந்த விதமான ஆக்கபூர்வமான தீவிர விமர்சன அபிப்பிராயங்களும் இல்லை.
அரசியல் அறம் சார்நத மதிப்பீடுகள் அவர்களது அரசியலில் இல்லாதது போலவே சினிமாவிலும் இல்லை. கட்சி மாறுகிற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்தது போலவே இவர்களது நடிகர் நடிகையர் குறித்த பார்வைகளும் படமாதிரிகள் குறித்த பார்வைகளும் அமைகின்றன. திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளோடு ஒப்பிட பிஜேபியின் இஸ்லாமிய எதிர்ப்பு, இந்துத்துவ தேசியத்தைப் பிரதிபலிப்பவர்களாக விஜயகாந்த் அரிஜ்னே¢ போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
பின்தங்கித் தேங்கியதொரு தமிழ்சினிமா சூழலில்தான் பா.கிருஷ்ணசாமி தொல்.திருமாவளவன் டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் தமிழ்சினிமாவின் பாலான அரசியல் தலையீடு, முக்கியமான அரசியல் கலாச்சாரப் பண்புகள் கொண்ட கலகக் குரல்களாக அமைகின்றன. தமிழ் சினிமாவில் மலிந்துள்ள சாதிய வன்முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் எதிரான குரல் பா.கிருஷ்ணசாமியனுடைய குரல். தொல் திருமாவளவன் தமிழப்படங்களின் மொழியுணர்வு, பண்பாட்டுச் சீரழிவு மற்றும் மொழித்தூய்மை குறித்துப் பேசுகிறார். டாக்டர் ராமதாஸ் தமிழப்படங்களில் ஆபாசம் புகைபிடித்தல் போன்றவற்றை நீக்குவதற்காக நேரடிப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் உள்ளார்ந்து நேரடியான ஆதிக்கம் கொண்டிருக்கும் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்தியல்கள் நிச்சயமாக தலித் மக்களுக்கும் விளிம்பநிலை மக்களுக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் பெண்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்தியல்களாகும். தயாரிப்பாளர்கள் முதலீட்டாளர்கள் விநியோகஸ்தர்கள் நடிகர் நடிகையர் இயக்குனர் போன்ற அனைவருமே பெரும்பாலும் இந்த உணர்வு நிலைகளைப் பிரதிபலிப்பவர்கள் அன்றி வேறில்லை.
நிலவும் தமிழ் சினிமா அமைப்பில் உள்ளிருந்து மாற்றத்தைக் கொணரும் சக்திகள் கணிசமாக இல்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். இது தொடர்பான ஒரு தந்திரோபாயம் நிச்சயமாகவே இடதுசாரிகளுக்கு இருந்திருக்க வேண்டும். சினிமாவில் இடையீடு செய்யக் கூடிய மக்கள் சக்து சார்ந்த சமூக அடிப்படையை அல்லது அரசியல் அடிப்படையை அவர்கள் திரட்டிக் கொள்ளாதது அதற்கான பலவீனமாக இருக்கலாம். சினிமா எனும் கெட்டிதட்டிய ஆதிக்க அமைப்பை உருவாக்கியிருக்கும் அரிசியலமைப்பை அவர்கள் சவாலுக்கு உரியதாகப் பார்க்கவில்லை.
நிச்சயமாகவே பா.கிருஷ்ணசாமி தொல். திருமாவளவன் போனிறவர்களின் இடையீடு ஆக்கப் பண்புகள் கொண்டவையே. டாக்டர் ராமதாஸின் கோசங்கள் தெளிவானவை அல்ல. பண்பாடு ஆபாசம் போன்றவற்றுக்கு அவரது வரையறைகள் என்ன என்பதைப் பொறுத்தே அவரது கருத்துக்கள் உரசிப் பார்க்கப்பட வேண்டும். மேலும் அவருடைய முன்னைய பிஜேபி சார்பும் அவரது பண்பாட்டுக் கோசங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. பா.கிருஷ்ணசாமியும் சாதிய வன்முறை, பாலியல் வன்முறை போன்றவற்றை முன்னிலைப்படுத்த, தொல். திருமாவளவன் தமிழ் தேசிய உண்ரவையும் தலித் உணர்வையும் ஒன்றிணைக்க முயல்கிறார். இவர்களது போராட்ட முறைகள் நேரடியாகக் கதாசிரியர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகையர்கள், பாடலாசிரியர்கள் போன்றவர்களை நோக்கியதாக அமைகின்றது.
நம்காலத்தின் மொழியியல் சார்நித அடிப்படையில் சொல்வதானாலிதிரைப்படம் எனும் கட்டமைப்பின் மொழி அடிப்படையையும் பிம்ப அடிப்படையையும் நோக்கி தமது எதிர்ப்பை அவர்கள் மையப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் கருத்துருவ ஆதிக்க அடிப்படைகளின் மீதான இவர்களது தாக்குதல் உடனடியாகவே எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே தணிக்கையமைப்புகள் இருக்க இவர்கள் ஏன் எங்களைக் கேள்வி கேட்கிறார்கள் எனச் சினம் கொள்கிறார் இயக்குனரான பாலச்சந்தர். இவர்களுக்கு எதிராக நாங்களும் தணிக்கை அமைப்புகள் அமைப்போம் என்கிறார் சரத்குமார். தனது ரசிகர் பலத்தை அரசியல் பலமாக முன்வைக்கிறார் கமல் ?ாஸன்.
உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற இந்த விவாதத்தில் சினிமா எனும் அமைப்பில் உள்ளார்ந்து இயங்குகிற ஆதிக்க நலன்கள் கொண்ட அனைவரும் இது குறித்து மெளனம் காக்கிறார்கள். இது மட்டுமல்ல, இயக்குனர் சங்கர் பாய்ஸ் பட விசயத்தில் தமிழகத் தணிக்கையமைப்பை மோசடி செய்த பாய்ஸ் சம்பவம் குறித்து, தமிழ் சினிமா சாரிந்த எவரும் இந்த நிமிடம் வரையிலும் குறைந்த பட்ச ஆட்சேபத்தைக் கூட எழுப்பவில்லை. இருக்கிற தமிழ் சினிமாவை இப்படியே காத்துக் கொள்வதில் இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை எவருக்கும் வியப்பளிக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ் சமூகத்தின் மாறிவரும் சக்திகளுக்கு எதிரான ஒரு சயாதீன அமைப்பாகத் தமிழ் சினிமா, தன்னை உருக்குப் போல நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இவர்களது இந் நிலைபாட்டுக்கு திமுக அதிமுக மதிமுக போன்ற திராவிடக்கட்சிகளும் பிஜேபி காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும் ஆதரவளிக்கும் என்பதனையும் இவர்கள் அறிந்தேயிருக்கிறார்கள்.
காலனியக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்திய தமிழ் சினிமா தணிக்கை அமைப்புகளின் நிர்வாக நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. மணிரத்தினம் போன்றவர்கள் அதனை முன்வைத்து வருகிறார்கள். மணிரத்தினத்தின் சமூக அரசியல் சார்ந்து, மணிரத்தினத்தின் ஆட்சேபங்கள் தணிக்கைக் குழவின் நடைமுறை வடிங்கள் பற்றியதாகும். பாய்ஸ் படத்திற்கு ஆதரவாக கருத்துரிமை வேண்டி செல்வராகவன் சங்கர் ரத்தினம் போன்றவர்கள் திரள்கிறார்கள். இவர்களது ஆட்சேபம் தணிக்கைக் குழவில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துருவிற்கு எதிரானது அல்ல என்பது வெளிப்படையானது.
மக்கள் தணிக்கைக் குழக்களை முன் வைப்பதன் மூலம், அரசுசார் தணிக்கைக் குழவின் அடிப்படைகள் மீது மோதலை நோக்கம் கொண்டதாக, பா.கிருஷ்ணசாமி தொல். திருமாவளவன் போன்றவர்களது நடவடிக்கைகள் அமைகின்றன. தமிழ் சினிமா அமைப்பு கெட்டிதட்டிப் போனதற்கு அடிப்படையாக அமைகிற அரசியல் கலாச்சார அமைப்பில் மாற்றம் நோக்கியதாக, தமிழ் சினிமா கட்டமைப்புக்கு வெளியிலிருந்து – தயாரிப்பு நடிப்பு இயக்கம் விநியோகம் என எல்லா வகையிலும் வெளியிலிருந்து – அதன் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல், ஒரு மிக முக்கியமான அரசியல் பாய்ச்சலாகும். சமூகவியல் அடிப்படையில் மிகமிக முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வாகும் நடவடிக்கை, தலித் அரசியலாளர்களின் இந்நடவடிக்கை. இடதுசாரிகள் மேற்கொண்டிருந்திருக்க வேண்டிய இந்நடவடிக்கையை தூர தரிசனத்தடன் காலங்கடந்தேனும் தலித்தியர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
தலித்தியர்கள் மேற்கொண்டிருக்கும் இந்தக் கலாச்சாரத் தந்திரோபாயத்தின் சாதக பாதக அம்சங்கள் குறிப்பாக நோக்கத்தக்கதாகும். (1) தமிழ்ப் பண்பாடு, வன்முறை, ஆபாசம், மொழித்தூய்மை குறித்த தலித்தியர்களின் கருத்தாக்கங்களுக்கும் நிலவும் சமூக மதிப்பீடுகளுக்கும் உள்ள நெருக்கடியை ஒருவர் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் (2) பெண்கள் தம்மீதான பாலியல் சுரண்டல்கஆள் காட்சிப்படுத்தப் புகும்போதும், பெண் உடலின் மீதான வன்முறையை காட்சிரூபமாக முன்வைக்க படைப்பாளிகள் திரளும் போதும் சித்தரிப்பு முறை குறித்த அவதானத்தை வெறுமனே ஒழுக்க அரசியல் அளவு கோள்களால் மட்டும் எவரும் தீர்மானித்துவிடமுடியாது. (3), அனைத்துக்கும் மேலாக படைப்பாளியின் சுதந்திரம, படைப்புச் செயல்பாடு போன்ற நுட்பமான வெளிகளையும் ஒருவர் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கலாச்சார தளத்தில் கரணம் தப்பினால் மரணம் போன்றதொரு விளைவுகளையும் உருவாக்கிவிடக் கூடியதான நடவடிக்கையாகும் இது.
ஈழப் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியில் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. தவிர்க்கவியலாத இனப் போராட்டத்தினிடையில் வன்முறையினிடையிலும், பல்வேறு உளவியல் நெருக்கடிகளுடனும், இயல்பு வாழ்ககை பிறழ்ந்த நிலையிலும் வாழத் தலைப்பட்டிருக்கும் மக்கள,; பாலுறவு சார்ந்த நுகர்வுப் பண்பு கொண்ட படங்களால் செயல்முடக்கம் அடைவது என்பது இயல்பாகும். இதற்கு எதிரான நடவடிக்கைகளை வரலாற்று ரீதியில் அந்தச் சமூகத்தை வழிநடத்துகிறவரகள் மேற்கொள்ள வேண்டியதும் மிகச் சரியானதே ஆகும். இது என்றென்றைக்குமான காலங்கடந்த அணுகுமுறையன்று, மாறாக வரலாற்று ரீதியில் அவசியமான நிலைபாடாகும்.
ராணுவக் கொடுங்கோலர்கள் ஆட்சி செய்த இலத்தீனமெரிக்க நாடுகளை எடுதிதுக்கொண்டால், பாலுறுவுக் கொச்சைப் படங்களை அவர்கள் மட்டுமீறி அனுதித்தார்கள் என்று பார்க்கமுடிகிறது. ஏனெனில் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு எதிரான மக்களது எதிர்ப்புணர்வை ஆட்சியாளர்கள் இதன் மூலம் திசை திருப்ப முடிந்தது. மக்களைப் போராடுவதினின்று தடுத்து செயல் மலடர்களாக ஆக்க முடிந்தது. இவ்வகையில் வன்னியில் பாய்ஸ் படத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வரலாற்று ரீதியில் மிகச் சரியானதாகும்.
தமிழக சினிமாக்கள் சித்திரிக்கும் வன்முறை பாலுறவு போன்றவற்றுக்கு எதிராகவும், பண்பாட்டுச் சீரழிவுக்கெதிராகவும் போராட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனின் தலைமையில் தமிழ் பாதுகாப்பு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் நோக்கம் வன்முறை காமம் போன்ற பிரச்சினைகள் அதனது ஆதாரமான தன்மைகளுடன் சித்தரிக்கப்படாமல், நுகர்வு நோக்கங்களுக்காகச் சித்திரிக்கப்படுபவதற்கு எதிரானது எனில் மட்டுமே, தமிழகத்தின் பரந்துபட்ட அறிவுஜீவிகளையும் படைப்பாளர்களையும் தங்கள் பக்கம் இவர்கள் திருப்பமுடியும். தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வரலாற்று ரீதியில் அணுகுமுறையில் வித்தியாசங்கள் என்பது தவிர்க்கவியலாததாகும். வரலாற்று ரீதியில் வேறுபட்ட அணுகுமுறையின் வித்தியாசங்களைப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலேயே, தொல்.திருமாவளவன், பா.கிருஸ்ணசாமி, டாக்டர்.ராமதாஸ் போன்றவர்கள் மேற்கொண்டிருக்கும் தமிழ் சினிமா மீதான அரசியல் தலையீட்டின் விளைவு தங்கியிருக்கிறது.
5
காமத்தையும் வன்முறையையும், சாதிய வர்க்க ஆதிக்க நோக்கிலுமிவியாபார நோக்கிலும் நுகர்வுப் பண்ட நோக்கிலும், பெண் உடலுக்கு எதிரான வன்முறை எனும் நோக்கிலும், விகாரமாக்கிச் சித்திரிப்பது கூடாது என்பது வேறு, பாலுறவு வன்முறை போன்ற மனித வாழ்வின் ஆதாரமான பிரச்சினைகள் முற்றிலும் சித்திரிக்கப்படக்கூடாது என்பது வேறு. ஏனெனில் மனித ஆன்மா போலவே ஆண் பெண் உடல்களும் சகலவிதமான ஆதிக்கத்திலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் விடுபட வேண்டும். அவ்வாறு விடுதலை பெற்ற ஆண் பெண் உடல்கள் களியாட்டத்திலும் சந்தோசத்திலும் கலவியிலும் திளைத்தலும் வேண்டும். பெர்னார்டோ பெர்ட்டுலுீச,ு நகிசா ஒசிமா, ஸ்டான்லி குப்ரிக், கோவிந்த நிஹ்லானி, மணிகெளல் போன்ற உலக சினிமாக் கலைஞர்கள் சர்வதேசியத் திரைவெளியில் அதனையே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
***
yamunarn@yahoo.com
- கடிதம் ஜனவரி 6,2005
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- உயர்பாவை 3
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- tsunami aid
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமி உதவி
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- ‘சுனாமி ‘
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- மறுபிறவி
- அலைப் போர்
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- கவிக்கட்டு — 43
- கதவைத் தட்டிய கடலலைகள்
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- சுனாமி என்றொரு பினாமி.
- ஊழி
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- என் வேள்வி
- கிழித்து வந்த காலமே!
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- முட்டாள்களின் பெட்டகம்