வடக்குமுகம் ( நாடகம் )

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

ஜெயமோகன்


அரங்கு

=====

வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை .திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். . வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை.

மேடையில் எப்போதுமிருப்பவர்கள் பத்து பின்னணிப் பொது நடிகர்கள். நடனம் போன்ற அசைவுகள் கொண்டவர்கள். ஒரே போல இறுக்கமான, தனித்தன்மை ஏதும் இல்லாத உடையணிந்தவர்கள் இவர்கள். [தேவையென்றால் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.] அரங்கின் அனைத்து தேவைகளையும் இவர்கள் தங்கள் உடல்மூலம் நிரப்ப வேண்டும். போர்களத்துப் பிணங்கள், ஓநாய்கள், புரவிகள், யானைகள், திடாரெனத் தோன்றும் தெய்வங்கள், நினைவுகளில் ஓடும் பிம்பங்கள், கோட்டைச் சுவர்கள் வாசல்கள், அரண்மனைத் தூண்கள் திரைச்சீலைகள் அனைத்துமே இவர்களுடைய அசைவுகள் மூலம் உருவாகி வருபவை. அசைவுகள் நடனத்தன்மை கொண்டவை. இதில் முடிந்தவரை கற்பனைக்கு இடமுண்டு. இவர்களுடைய நிழல்களும் இந்நாடகத்தில் பங்கு வகிக்கலாம். உதிரிக் கதாபாத்திரங்களும் இவர்களே. அக்கதாபாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப இவர்கள் சில ஆடைகள் , அணிகளை பயன்படுத்தலாம். அவற்றை மேடையிலேயே அணிந்துகொண்டு அக்கதாபாத்திரங்களாக மாறியும் , கழற்றி திரும்பிவந்தும் , நடிக்கலாம். தெய்வங்கள் மிருகங்கள் போன்றவற்றின் வேடங்களுக்கு மெல்லிய முகமூடிகளையும் இவ்விதம் பயன்படுத்தலாம்.

காட்சி துவக்கம்

==============

திரை விலகுவதற்கு முன்னரே உக்கிரமான போர்க்கள ஒலிகள் துவங்கி விடுகின்றன. மரணக் கதறல்கள், குதிரைகளின் கனைப்புகள், ரத சக்கர ஓசைகள், யானைப் பிளிறல்கள், ஆயுதங்களின் உலோக ஒலிகள். ஒலிகள் உச்சத்துக்கு சென்று மெல்ல மெல்ல தணிந்து இரவின் ஒலிகள் ஆக மாறுகின்றன.

கூகைகளும் நரிகளும் ஓநாய் கூட்டங்களும் கழுதைப் புலிகளும் போடும் ஒலிகளின் கலவை பிறகு ஓங்குகிறது. செத்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் மனிதர்களின் முனகல்கள், கதறல்கள் , மன்றாடல்கள் . . .

திரை விலகி தெரிவது குருஷேத்ர ரண களத்தின் ஓர் இரவுக் காட்சி. ஆங்காங்கே தீப்பந்தங்கள் எரிகின்றன. தொலைவில் ஒரு குரல் ‘அம்மா! ‘ என்று வீரிடுகிறது. ஒரு பிணத்தைக் கடித்துக் கொண்டிருந்த நரி ஒன்று பதறி விலகி ,உறுமுகிறது.

அரங்கின் தரையில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு பிணத்தின் கால் மட்டும் மெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது.

கழுதைப்புலி ஒன்று எச்சரிக்கையுடன் முகர்ந்தபடி ஓரத்திலிருந்து வருகிறது. அரங்க ஒளியைக் கண்டு அரண்டு சட்டென்று பின்வாங்கி மீண்டும் மூக்கை நீட்டுகிறது. பதுங்கி முன்னகர்ந்து வந்து முகர்ந்து பார்க்கிறது. காலின் அசைவை கண்டு திடுக்கிட்டு பின்னகர்ந்து ‘ஹிஹ்ஹி ஹிஹி ‘ என்று ஒலியெழுப்புகிறது. அவ்வொலியை வேறு பல இடங்களில் வேறு கழுதைப்புலிகள் திருப்பி எழுப்புகின்றன. நரி வெருண்டு ‘கீ ‘ ஒலி எழுப்புகிறது. தலையைத்தாழ்த்தி முனகியபடி பின்வாங்குகிறது .

கழுதைப்புலி அந்த அசையும் காலை பாய்ந்து கவ்வுகிறது. குதறி இழுத்து, வாலாட்டி, துள்ளுகிறது. கடிபட்டவன் வலியில் நினைவு பெற்று அலறுகிறான். சட்டென்று எழுந்து உட்கார்ந்து விடுகிறான். கடும் பயத்தில் உடல் துடிக்க ‘உதவி !உதவி !காப்பாற்றுங்கள்! ‘ என்று கூவுகிறான். கழுதைப்புலி அவன் கைகளை பாய்ந்து கவ்வுகிறது. இரு உடல்களும் சேர்ந்து துடித்துப் புரள்கின்றன.

கடிபட்டவன் மேலும் கத்துகிறான். ‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! ‘ அவன் கையில் ஒரு வேல் கிடைத்துவிடுகிறது. அதை எடுத்து கழுதைப் புலியை அடித்து துரத்துகிறான். அது ‘உய்ய் ‘ என்று வேதனை ஒலி எழுப்பி விலகுகிறது. வேலை வீசுகிறான். ஊளையிட்டபடி கழுதைப்புலி பாய்ந்து மறைகிறது.

கடிபட்டு காயமடைந்த வீரன் ரத்தம் வழிய எழ முயல்கிறான். அவனுக்கு ஒரு கால் இல்லை. ஒரு கையில் விரல்கள் அறுபட்டு போய்விட்டன. வலியில் முனகியபடி ,அவ்வப்போது வாய்விட்டு அரற்றியபடி ,எழுந்தும் விழுந்தும் ,எதிர்த்திசை நோக்கிச் செல்கிறான்.

சட்டென்று அதிர்ந்து நின்று விடுகிறான். அவன் முன் வேறுஒரு கழுதைப் புலி செவிகளை விடைத்தபடி, தலையை மண்ணுக்குத் தாழ்த்தி விரைப்பாக நிற்கிறது. அவன் வீணாக ‘போ, போ ‘ என்கிறான். பின்னால் திரும்பிப் பார்க்கிறான். அங்கே இன்னொரு கழுதைப் புலி. அதற்கு பின்னால் இன்னொன்று.

அவன் பிரமை பிடித்து உறைந்து நிற்கிறான். அசைவுகளே இல்லாத உக்கிரமான கணங்கள். நீண்டு நீண்டு செல்கின்றன அவை.

ஒரு கணம். மூன்று கழுதைப் புலிகளும் ஒரே அசைவாகப் பாய்ந்து அவன்மீது படிகின்றன. அவனுடைய மரணக்கூச்சல் அரங்கைப் பிளக்கிறது. சதையை பிய்த்துக் குதறி இழுக்கும் மிருகங்களின் உக்கிரமான உறுமல்கள் கூடவே முழங்குகின்றன.

சற்று தள்ளி குவிந்த அம்புகள்மீது மல்லாந்து படுத்திருக்கும் வெண்தாடி நீண்ட வயோதிகர் திடுக்கிட்டெழுகிறார். ஒருசில கணங்கள் ஒன்றும் புரியாமல் தடுமாறுகிறார்.

வயோதிகர்: , என்ன ? (விழித்துக் கொண்டு) கழுதைப்புலிகள் . . . (தன் உடலில் தைத்திருந்த அம்புகளை பிடுங்கி வீசுகிறார். அவருக்கு குறிதவறுவதில்லை. வள்ள் என்ற ஒலியுடன் ஒரு கழுதைப்புலி விழுந்து துடிதுடித்து மடிகிறது வாயில் ரத்தம் சொட்டும் குடலுடன் இன்னொன்று தலைநிமிர்ந்து பார்க்கிறது. அடுத்த அம்பில் அதுவும் அடிபட்டு விழுந்து பாய்ந்தோடி விழுந்து துடித்து மடிகிறது. மூன்றாவது கழுதைப்புலி தப்பியோடுகிறது.]

முதியவர்: கொடுமை!

(குடல் சரிந்து தொங்க, ரத்தம் வடியும் உருவமாக அந்த வீரன் எழுந்து அமர்கிறான்)

வீரன்: நன்றி பிதாமகரே. மிகவும் நன்றி. தங்களுக்குத்தான் எத்தனை வீரம், எவ்வளவு கருணை!

முதியவர்: நீ யார் ?

வீரன்: ஒரு பிணம். குருஷேத்ரப் போரிலே லட்சோப லட்சம் பேர் மாண்டார்கள். மாளவிருக்கிறார்கள். மிகச் சிலருக்கு மட்டும்தான் பெயர் இருக்கிறது. தங்கள் கருணைக்கு நன்றி. தாங்கள் மகிழலாம். இந்த ரணபூமியில் இப்போது பல்லாயிரம் பிணங்களை நாய்நரிகள் கடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றன. தாங்கள் சற்று சமாளித்துக் கொண்டு எழ முடிந்தால் வெகுதூரம் வரை தங்கள் கருணையின் எல்லையை விரித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது.

முதியவர்: நீ யார் ?

வீரன்: எனக்குப் பெயரில்லை. துரதிர்ஷடவசமாக என்மீது பாய்ந்த அம்புகளிலும் உயர்குல வீரர்களின் பெயர்கள் இல்லை. எனக்கு சரித்திரத்தின் இருண்ட நரகம் காத்திருக்கிறது. சூதர்களின் சொற்கள் அந்த ஆழம்வரை வந்து சேர்வதில்லை

முதியவர் : யார் நீ ? எந்த படை ?

வீரன்: உங்கள் உடலில் தைத்திருப்பவை உயர்தர வெள்ளிப்பூச்சுள்ள அம்புகள். செங்கழுகின் இறகு பதிக்கப்பட்டவை. நீங்கள் அரசகுலத்தவர் அல்லவா ? உங்கள் தாடியைக் காணும்போது….பெருமைக்குரியவரான பீஷ்ம பிதாமகர் நீங்கள்தான் என்று எண்ணுகிறேன்…

பீஷ்மர்: ஆம். (வலியுடன் முனகி) உன் பேச்சு என்னை பயமுறுத்துகிறது. (மெதுவாக அசைந்து) யார் நீ ?

வீரன்: தெரியவில்லையா ? (எழுகிறான்) என்னைத் தெரியவில்லை ?

பீஷ்மர்: யார் ?

வீரன்: உற்று பாருங்கள். என்னைத் தெரியாதவர்கள் உண்டா என்ன ?

(பிணங்கள் மிக மெல்ல நிழல்களுடன் சேர்ந்து எழுகின்றன. அவற்றின் பார்வைகள் வெறித்திருக்கின்றன.)

பிணங்கள்: (சேர்ந்து) தெரியவில்லையா ? இவ்வுலகில் எங்களை தெரியாதவர் யார் ?

பீஷ்மர்: மரணம்!

(பிணங்கள் மெல்ல கூடி இணைந்து ஒரு வடிவமாகின்றன. கீழே வெறித்த வாயுடன் சிம்மம். அதன்மீது நான்கு முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட தேவதை)

பீஷ்மர்: (உரக்க) மிருத்யூ தேவி! (கைநீட்டி) தாயே என் நேரம் வந்து விட்டதா ?

மரணதேவி: இல்லை குழந்தை. உனக்கு இன்னமும் கேள்விகள் மிஞ்சியிருக்கின்றன.

பீஷ்மர்: அம்மா என்னால் தாங்க முடியவில்லை. என் உடம்பெங்கும் கடும்வலி நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு அசைவும் வலிக்கிறது. ஒவ்வொரு எண்ணமும் வலிக்கிறது. ஒவ்வொரு கணமும் வலியால் ஆனதாக உள்ளது.

மரணதேவி: வலி என் துணைவி. என் தூது.

பீஷ்மர்: போதும், நான் தயாராக இருக்கிறேன்.

மரணதேவி: நான் காத்திருக்கிறேன். இன்றும் சில நாட்களுக்கு குருஷேத்ரமே என் ஆடரங்கம்.

பீஷ்மர்: அன்னையே உன்னுடைய பசிக்கு எல்லேயேயில்லை என்று சாத்திரங்கள் கூறுகின்றன. ஊழித்தீ பட்டபோது பிரம்மனின் நிழல் மண்ணில்விழ அதிலிருந்து பிறந்தவள். சிருஷ்டியைப் போலவே மகத்தானவள். என்றுமே உன்னை நான் வெறுத்ததில்லை. என் தியானத்தில் கண்களை மூடிக்கொள்ளும்போது தெரியும் முதல் தரிசனமே உனது புன்னகைதான். என்றோ நான் என்னை உனக்கு ஒப்படைத்து விட்டேன்.

மரணதேவி: ( கலைந்து பெண்ணாகி ,மெல்ல அருகே வந்து ,பீஷ்மரின் நெற்றியைத் தொட்டு) காத்திரு குழந்தை. நீ என்றுமே என் பிரியத்திற்குரியவன்.

பீஷ்மர்: உன் கரங்கள் குளிர்ந்திருக்கின்றன. மார்கழிக் காலையில் தளிரிலைகள் போல. இன்னும் எத்தனை நாள் நான் காத்திருக்க

வேண்டும் ?

மரணதேவி: இந்தப் போர் முடிவது வரை. உனது மரணம் தட்சணாயணம் தாண்டி உத்தராயணத்தில்தான்…

பீஷ்மர்: அதுவரை இந்த வலி . . . அதைவிட இந்த பிணங்கள் மத்தியில் அரைப்பிணமாக கிடத்தல்…

மரணதேவி: நீ பிறருக்குச் சொல்வதற்கு சில சொற்கள் உள்ளன குழந்தை. அதைச் சொல்வதற்கு முன் நீ இறக்க முடியாது.

பீஷ்மர்: தாயே, நான் எப்போதுமே எவரிடமும் வாதிட்டதில்லை. உபதேசம் செய்ததுமில்லை.

மரணதேவி: (சிரித்து) ஆயுதமே உனது வழி இல்லையா ?

பீஷ்மர்: ஆம் நான் ஷத்ரியன்.

மரணதேவி: இக்கணம் வரை நீ அப்படியே உன்னை உணர்ந்திருக்கிறாய். ஏனெனில் உன் உடலின் ஊற்றுக்கள் திறக்கவேயில்லை.

உன்னிலிருந்து எதுவும் முளைக்கவில்லை. எனவே நீ உனக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டாய்.

பீஷ்மர்: (பெருமூச்சுடன்) ஆம்.

மரணதேவி: உன் பொறுப்புகளை முழுக்க நீ உணர வேண்டும். இந்த ரணகளத்தில், தழல்க்கதிர்கள் போல உன்னை எரிக்கும் அம்புக் படுக்கையில் . . .

பீஷ்மர்: என் மனம் வெறுமையாக இருக்கிறது தேவி.

மரணதேவி: நேற்றுவரை அதில் நிரம்பிக் கனத்து வழிந்தது உன் தன்னகங்காரம். அது முழுக்க ஒழுகி மறையட்டும். அப்போது உனக்கான சொற்கள் ஊறும். அதைச் சொல்ல உன் உதிரத்தின் மறு நுனியைத் தேடி உன் மனம் பதைக்கும் . . .

பீஷ்மர்: என் உதிரமா ?

(மரணதேவி நகைக்கிறாள்)

பீஷ்மர்: என்ன சொல்கிறாய் தேவி ?

மரணதேவி: நீ சொல்ல வேண்டியவற்றையெல்லாம் சொன்னபின் உனக்கும் சில சொல்லப்படும் . . .

பீஷ்மர்: யார் ? என்ன ?

மரணதேவி: நான் எப்படி அதைச் சொல்லமுடியும் ? (சிரித்தபடி) ஆனால் எனக்கு எல்லாமே தெரியும். எல்லாவற்றையும் முடித்து வைப்பவள் நான். முடிவில்தான் எல்லா அர்த்தங்களும் உருவாகின்றன.

பீஷ்மர்: எனக்குத் தெரியும் அது யாரென. அவன் அருகே செல்லும் போதெல்லாம் என் ஆத்மா இனிய நறுமணமொன்றை உணந்தது. தாயருகே செல்லும் குழந்தை போல் ஒரு குதூகலத்தை அது உணர்ந்தது. அவன்தான். அவன்தானே ?

மரணதேவி: நான் எப்படிச் சொல்ல முடியும் ? இருவேறு அரங்குகளுக்கு நடுவே தொங்கவிடப்பட்ட கரியதிரை என்பார்கள் என்னை.

பீஷ்மர்: ஆம்; அவன்தான். அவன் வேடம் போடுகிறான். விளையாடுகிறான். இங்கே காமகுரோத மோகம் கொண்டு ரத்தம் சிந்தும் லட்சோப லட்சம் எளிய ஆத்மாக்களைக் கண்டு சிரிக்கிறான். தர்மத்தையும் அதர்மத்தையும் இரு சக்கரங்களாகக் கொண்டு ஓட்டும் சாரதி . . . அவன்தான். நான் நன்றாகவே அறிவேன்…

மரணதேவி: பதற்றம் கொள்ளாதே . . . காத்திரு.

பீஷ்மர்: ஆ! எத்தனை எளிய உண்மை. எத்தனை பக்கத்தில் அது இருந்திருக்கிறது அகங்காரத்தின் மெல்லிய திரைக்கு அப்பால் . . .

(பயங்கரமான ஊளைகள். கழுதைப்புலி குரைப்புகள். மரணதேவி சிதைந்து மறைந்து பிணங்களாகிறாள்.)

பீஷ்மர்: (பெருமூச்சுடன் வானத்தைப் பார்க்கிறார்) எத்தனை கோடி விண்மீன்கள். முடிவற்ற விழியசைவுகள். அவை மூதாதையர் பார்வைகள் என்பார்கள். இமைகள் துடிதுடிக்க அவர்கள் குனிந்து எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (காற்று ஒன்று மெல்லிய ஒலியுடன் கடந்து செல்கிறது) அவர்களுடைய பெருமூச்சுகள் போல இளம் காற்றுக்கள். என்ன நினைக்கிறார்கள் அவர்கள் ? முடிவற்ற காலத்தில் நின்றபடி பார்க்கும்போது இந்த மரணவெளி அவர்களுக்கு எப்படிப் பொருள்படுகிறது ? காமம் குரோதம் மோகம். அர்த்தமில்லாத வேகங்கள். ஆம், ரத்தம் உடலில் இருந்து வழிய வழிய அனைத்துமே அர்த்தமிழக்க ஆரம்பிக்கின்றன. எல்லாம் வெறும் ரத்தம்தான். இந்தக் குருஷேத்ர பூமியில் இப்போது எவ்வளவு ரத்தம் கொட்டிப் பெருகி உலந்து கொண்டிருக்கிறது. உடல்களிலிருந்தபோது அது உணர்ச்சி வேகங்களாக இருந்தது. ஆசை வெறியாகவும் ,தீராத குரோத வெம்மையாகவும் ,முடிவேயற்ற தர்க்க நியாயங்களாகவும், நுரைத்துச் சுழித்தது. மனிதர்கள் சிறிது ரத்தத்தை அவ்வப்போது இழப்பது மிகவும் நல்லது. அவர்களுக்குள் குமுறும் அழுத்தம் சற்று குறையும்.

(வெகுதூரத்தில் ஒரு குரல் ‘யார் ? ‘ ‘யார் ? ‘ பின்பு அலறல். ‘நீயா ? ‘ பிறகு விம்மி அழும் ஓசை. அடங்கிய குரலில் அவன் கூவுகிறான் ‘தாயே! நீ தானா ? சீக்கிரம் வா. ‘ ஒரே மெல்லிய பெண்குரல்ச் சிரிப்பு. பிறகு அமைதி. ஒரு நரி ஊளையிடுகிறது.)

பீஷ்மர்: மரணம். எவ்வளவு இனிமையானது. பாலைவனத்துக் கோடையில் மழை பொழிவதுபோல அவளுடைய குளிர்ந்த வருகை. அம்மா! (வலியுடன்) அம்மா!

(மயங்குகிறார். தூரத்தில் காலடியோசைகள். பேச்சுக் குரல்கள். நரிகள் பயந்து போய் குழறும் ஒலிகள்)

பீஷ்மர்: யார் ?

(பந்தங்கள் ஒளிர நிழல்கள் ஆட மூவர் வருகின்றனர். உடலில் விழுப்புண்களுடன் வெற்றுத் தோள்களுடன் துரியோதனன். அவனுக்குப் பின்னால் துச்சாதனன். சற்று தயங்கியவனாக கர்ணன்)

துரியோதனன்: தாத்தா வணங்குகிறேன்.

பீஷ்மர்: புகழும் மகத்துவமும் உன்னை அடைவதாக!

துரியோதனன்: வலி நிரம்ப உள்ளதா ?

பீஷ்மர்: ஆம். அதற்கென்ன ? ஷத்ரியனுக்கு வலி விதிக்கப்பட்டுள்ளதுதானே ?

துரியோதனன்: (கோபத்துடன்) அந்த நபும்சகனை நீங்கள் கொன்று வீழ்த்தியிருக்க வேண்டும் தாத்தா. வெல்ல முடியாத உங்களை அந்த மனிதப் பிண்டத்தைக் காட்டி வென்று விட்டார்கள் பேடிகள்.

பீஷ்மர்: நான் வீரர்களுடனே பொருத விரும்புகிறேன்.

துரியோதனன்: மூடத்தனம். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னியுங்கள். உங்களைக் கொல்ல வந்தவன் அவன். ஒரே அம்பில் அவனை நீங்கள் வீழ்த்தியிருக்க முடியும் . . .

பீஷ்மர்: அவன் கொன்ற இழிவு என் பெயருடன் சேர்ந்து சூதர் நாவில் வளரும் . . .

துரியோதனன்: சூதர்கள். யார் இவர்கள் ? நாணயங்களை விட்டெறிந்தால் பரியை நரி என்று பாடும் பதர்கள். ஷத்ரியன் வாழ்வதே சூதர்களால் பாடப்படுவதற்குத்தானா ?

பீஷ்மர்: இல்லை. ஆனால் ஷத்ரியனுக்கு மறு பிறப்பு உள்ளது. சூதர் நாக்கு மூலம் அவன் மீண்டும் பிறக்கிறான், பிறகு இறப்பதேயில்லை. எனக்குச் இந்தச் சிறிய வாழ்வைவிட அந்தப் பெரிய வாழ்வே முக்கியமானது.

துரியோதனன்: வெற்றிதான் பாடல் பெறும்.

பீஷ்மர்: இல்லை குழந்தை. எப்போதுமே மகத்தான தோல்விகள்தான் பாடல் பெறுகின்றன.

துரியோதனன்: ஏளனத்துடன் அதற்காக நான் தோற்க வேண்டும் என்பீர்களா ?

பீஷ்மர்: விதியின் முன் தோற்பது மட்டுமே மகத்தான தோல்வியாக இருக்க முடியும்.

கர்ணன்: இது கோழைகளின் சித்தாந்தம்

பீஷ்மர்: நான் ஷத்ரியர்களுடன் மட்டுமெ பேச விரும்புகிறேன்

கர்ணன்: உங்கள் கணிப்பில் ஷத்ரியன் மீது மீன்வாடை அடிக்குமோ ? இல்லை கங்கை கரைகளின் சேற்று வாடை ?

பீஷ்மர்: (சிரித்து) நீ இதை முன்பு சொல்லியிருந்தால் உனக்கு என் அம்புகளால் பதில் கூறியிருப்பேன். மூடா. எல்லா ஷத்ரிய குலங்களும் சேற்றில், நீரில் முளைப்பவையே. வெற்றி மூலம் ஷத்ரியன் பிறக்கிறான்.

கர்ணன்: என் வெற்றிகளை நீர் காண்பீர்.

பீஷ்மர்: இதுவரை நீ கண்ட வெற்றிகள் என்ன ? தானமாக கிடைத்த அங்க நாடு. சுயம்வரமின்றி கிடைத்த மனைவி. நட்பு நாட்டின் ராணுவத்தில் தலைமைப் பதவி.

கர்ணன்: (கடும் கோபத்துடன் வில்லை எடுத்து) பீஷ்மரே

பீஷ்மர்: என் உடலில் தேவையான அளவுக்கு அம்புகள் இப்போதே உள்ளன, தேரோட்டி மகனே.

கர்ணன்: உங்கள் வரண்ட அகங்காரம் உங்களை வீழ்த்தியது. இந்த அம்புத்தழல் மீது நீங்கள் காத்திருப்பது என் வெற்றிகளை காணத்தான். குருஷேத்திரத்தில் பாண்டவர் தலைகள் உதிரும்போது பொறுக்கி எடுத்து கொண்டுவந்து உங்களுக்குக் காட்டுகிறேன்.

பீஷ்மர்: (பெருமூச்சுடன் கண்களை மூடி) ஒரு போதும் அப்படிச் செய்யும் துரதிருஷ்டம் உனக்கு வாய்க்காமலிருக்கட்டும் . . .

கர்ணன்: (நிலை குலைந்து போய்) என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே ?

(பீஷ்மர் பதில் கூறவில்லை)

துரியோதனன்: [வியப்புடன் ] நீ அவரை பிதாமகர் என்று முதல் முறையாக கூறுகிறாய் கர்ணா.

கர்ணன்: ஆம் எனக்கும்தான் அது ஆச்சரியமாக உள்ளது.

துரியோதனன்: பிதாமகரே நாளைய போரில் துரோணர் தலைமை தாங்குகிறார். என் வெற்றிக்கு உங்கள் ஆசி தேவை.

பீஷ்மர்: உனக்கு என் ஆசி எப்போதுமே உண்டு.

துரியோதனன்: நீங்கள் என்னை வெற்றியடைய வாழ்த்தவில்லை.

பீஷ்மர்: அப்படி எவரால் வாழ்த்த முடியும் ? வெற்றி தோல்விகள் ஒரு பெரும் பகடையாட்டத்தின் அன்றாட நிகழ்வுகள் மட்டுமே.

துரியோதனன்: இப்படி நீங்கள் ஒருபோதும் பேசியதில்லை.

பீஷ்மர்: ஆம். ரத்தம் குறைகிறதல்லவா ?

துரியோதனன்: எங்களை வாழ்த்துங்கள் மீண்டும்

பீஷ்மர்: என் வாழ்த்துக்கள் (கண்களை மூடியபடியே) ரத்தம் . . . ரத்தம் . . . என்னிடமிருந்து விலகி ஓடுகிறது . . . விசித்திரமான மனப்பிரமைகள்.

(ஒளியும் ஒலியும் மெல்ல மாறுபடுகின்றன. துரியோதனனும் கர்ணனும் விசித்திரமான இளிப்புடன் கண்களை விழித்தபடி சுற்றி வருகிறார்கள்)

துரியோதனன்: (இளித்தபடி) பிதாமகரே உங்கள் உடலை நான் உண்ண விரும்புகிறேன். திடம் கொண்ட அந்த புஜங்கள் எத்தனை ருசியாக இருக்கும்.

கர்ணன்: வில்லாளியின் விரல்கள் எனக்கு . . .

துச்சாதனன்: இதயம் எனக்கு

(ஓநாய்கள் போல உறுமியபடி அவர்கள் அவரை உண்ணுகிறார்கள். கடித்து கிழித்து இழுத்து, சண்டையிட்டு)

பீஷ்மர்: ஆ!

துரியோதனன்: (ஒளி ஒலி அறுபட , சாதாரணமாக நின்று) என்ன ஆயிற்று பிதாமகரே!

பீஷ்மர்: தாகம் . . .

துச்சாதனன்: சற்று மது அருந்துகிறீர்களா ?

பீஷ்மர்: வேண்டாம். எனக்கு ஏற்கனவே போதை.

துரியோதனன்: தண்ணீர் ?

பீஷ்மர்: இல்லை. இது நீருக்கான தாகம் அல்ல. (கண்களை மூடிக் கொள்கிறார்)

கர்ணன்: சித்தம் கலங்கிவிட்டிருக்கிறது.

துரியோதனன்: (வியப்புடன்) எத்தனை அம்புகள் ! ஆனாலும் மரணம் வரவில்லை.

கர்ணன்: மரணத்திற்கு எதிர்திசையில் ஓடும் ஏதோ ஒரு பெருவல்லமை அவருள் உள்ளது.

(சற்று நேரம் நின்றுவிட்டு திரும்பிச் செல்கிறார்கள்)

(தனிமையில் பீஷ்மர் கிடக்கிறார். கீழிருந்து ஒரு பிணம் மெல்ல எழுந்து சங்கு சக்கர கதாதாரியாக மாறுகிறது. எட்டு கரங்கள். முகத்தில் சுடரும் ஒளி. பின்னணியில் மெல்லிய ஆனால் ஓங்கிய குரலில் கீதை. ‘ ‘ சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ! ‘ ]

பீஷ்மர்: மகாபிரபு! (எழ முயல்கிறார். முடியவில்லை. ஏதோ இழுத்துக் கட்டியிருப்பதுபோல தவிக்கிறார் ) விடுங்கள் !விடுங்கள் என்னை!

விஷ்ணு: (சிரித்தபடி) உன்னால் முடியாது. (பேரொலியுடன்) மரணத்திற்கு எதிர்திசையில் ஓடும் ஏதோ ஒரு பெருவல்லமை உனக்குள் உள்ளது.

(ஒளி அணைகிறது. விஷ்ணு தனி உடல்களாக பிரிந்து பிணங்களாக தரையில் பரவுகிறார்)

பீஷ்மர்: (விழித்துக் கொண்டு) மாற்றமே இல்லாத இரவு. காலம் நகர்கிறதா ? (நட்சத்திரங்களைப் பார்த்து) விண்மீன்கள் இடம் மாறியுள்ளன. மிகுந்த விசையுடன் இம்மியிம்மியாக காலத்தை நகர்த்துகின்றன இவ்விண்மீன்கள். இன்னும் எத்தனை நேரம்! எத்தனை நாள்! (வலியுடன்) ! அம்மா . . .

(மீண்டும் மயங்குகிறார். தரையிலிருந்து உருவங்கள் எழுகின்றன. துள்ளி குதித்து மழலை பேசும் சிறு குழந்தைகள். சிரித்து கூவி ஆர்ப்பரித்து விளையாடுகின்றன.)

ஒரு குழந்தை: (ஓடி வந்து பீஷ்மரின் காலை பிடித்து மூச்சு வாங்க சிரித்தபடி) அப்பா இவன் என்னை பிடிக்க வருகிறான். போடா.

இன்னொரு குழந்தை: இல்லை அப்பா இவள்தான். நீ அப்பா காலை விடு. தூங்குகிறார் தெரியவில்லை.

முதல் குழந்தை: போடா காட்டுப் பன்றி

இரண்டாம் குழந்தை: நீ போடி வீட்டுஎலி.

முதல் குழந்தை: அப்பா பாருங்கள் அப்பா (காலை உலுக்குகிறது)

பீஷ்மர்: என்ன இது! என்ன இங்கே ?

முதல் குழந்தை: அப்பா இவன் என்னை வீட்டு எலி என்று சொல்கிறான். அப்பாவிடம் சொல்வேன் என்றால் போடி என்கிறான். போடி என்று சொல்லலாமா ? கெட்ட வார்த்தை தானே ?

இரண்டாம் குழந்தை: இல்லை அப்பா இவள்தான் . . . (வேகமாக) பொய் சொல்கிறாள் அப்பா. பொய் பொய் களவாணி. பொய் சொல்கிற களவாணி.

பீஷ்மர்: சரி சரி சண்டை போட வேண்டாம். இரண்டுபேருமே நல்லவர்கள்தான்.

முதல் குழந்தை: எனக்கு நீங்கள் முத்தம் கொடுப்பீர்களா ?

பீஷ்மர்: இங்கே வா (கட்டிப்பிடித்து) உம்மம் போதுமா ?

முதல் குழந்தை: இந்த முத்தம் இவ்வளவுதான் இனிப்பு. இன்னும் பெரிய முத்தம் வேண்டும்.

இரண்டாம் குழந்தை: அப்பா எனக்கு முத்தம் . . .

பீஷ்மர்: இங்கே வா. நீயும் பெரிய வீரன்தான். அப்பாவின் செல்லங்கள் தானே ?

முதல் குழந்தை: அப்பா நான் இனிமேல் கொஞ்சம்தான் இனிப்பு சாப்பிடுவேன். திரைச்சீலையை கிழிக்க மாட்டேன் (யோசித்து) பாலை கொட்டவும் மாட்டேன்.

பீஷ்மர்: மற்றவர்கள் எங்கே ?

முதல் குழந்தை: நீச்சலடிக்கிறார்கள்.

பீஷ்மர்: (பயந்து) நீச்சலா எங்கே ?

முதல் குழந்தை: அங்கே ஒரு சிவப்பான ஆறு ஓடுகிறது அப்பா. தண்ணீர் சூடாக இருக்கிறது. அதில் எல்லாரும் குதித்து நீச்சல் போடுகிறார்கள்.

இரண்டாம் குழந்தை: அண்ணா சொல்கிறான். அந்த ஆறு அம்மாவிடம்தான் போகிறது என்று. அதில் மிதந்து போனால் அம்மாவிடம் போகலாமாம்.

முதல் குழந்தை: அப்பா நான் அம்மாவிடம் போகிறேனே ?

பீஷ்மர்: அம்மாவா ? என்ன இதெல்லாம் ?நீங்களெல்லாம் யார் ?

(விழிக்கிறார். யாருமில்லை. பிணங்கள். ஒரே ஒரு கழுதைப்புலி மென்று கொண்டிருக்கிறது.)

பீஷ்மர்: யார் ? என்ன இதெல்லாம் ?

கழுதைப்புலி: (மென்றபடி) மரணத்திற்கு முந்தைய பிரமைகள்.

பீஷ்மர்: (தலையை உலுக்கியபடி) எனக்கு மனம் கலங்கிவிட்டதா ? மயங்கிவிட்டேனா ?

(கழுதைப்புலி உறுமியபடி தலைதூக்கி காதுகளை விடைக்கிறது)

பீஷ்மர்: இந்த பிரமைகள் எல்லாம் இதுவரை எங்கிருந்தன ? எனக்குள்தானே ? ஆனால் நான் இவற்றை காணவில்லை. தர்க்கத்தின் திரை மறைத்திருந்தது. ரத்தம் மறைத்திருந்தது. விசித்திரமான பிம்பங்கள்.

ஒரு பிணம்: (எழுந்து பீஷ்மரை உற்று பார்த்து) மரணம் என்பது அதுதான் உத்தமரே, அப்பிரமைகளிலிருந்து நம்மை பிரித்துப் பார்க்க முடியாமல் ஆவது.

இன்னொரு பிணம்: (எழுந்து உற்று பார்த்து) அத்துடன் நாம் வேறு பலரின் பிரமைகளுடன் கலந்து விடுகிறோம்.

மூன்றாவது பிணம்: பிரமைகளின் அலைகடலில் மிதந்தபடி அசைவற்ற கரையாக வாழ்க்கையை பார்க்கிறோம்.

நான்காவது பிணம்: ஆனால் கரை ஒரு விபரீதப் பிரமை போலிருக்கிறது.

ஐந்தாவது பிணம்: அதில் வாழும் மனிதர்கள் வெறும் நிழல்கள்.

(பிணங்கள் உணர்ச்சி ஏதுமின்றி சரிகின்றன. அமைதி. பீஷ்மர் முனகியபடி படுத்திருக்கிறார்)

கழுதைப்புலி: (மெல்ல முன்னகர்ந்து) நம்பாதீர்கள். மரணத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும். நான் மரணத்தையே தின்று வாழ்பவன். மரணம் என்பது குளிர்ந்த சதை. ருசியான மென்மையான சதை. கடிக்க முடியாத எலும்பு. நல்ல மணம் மிக்க ஏப்பம். அவ்வளவுதான் (யோசித்து ஒருமுறை சுற்றி வந்து) இல்லை. பின்பு நிலவு நோக்கி அமர்ந்து நான் எழுப்பும் ஊளைதான் மரணம் என்பது (குழம்பி, இருமுறை சொறிந்துகொண்டு) அதுவும் சரியல்ல. ஊளையிட்டு முடித்தபின் எனக்கு ஏற்படும் ஏக்கம் நிரம்பிய வெறுமைதான் மரணமா ? புரியவில்லை. (கோப வெறிகொண்டு முன்கால்களால் தரையைப் பிராண்டி) தெரியவில்லை [கனைக்கிறது]

பீஷ்மர் : ! இந்த இரவு! ஏதாவது ஒருபக்கத்தில் இது விடிந்தால் போதும். இருள் மிகப் பயங்கரமான ஒன்று ! அம்மா!

[தொலைவில் குழந்தைகள் சிரித்துக் குதூகலிக்கின்றன]

பீஷ்மர்: என்ன ஒலி அது ? விசித்திரமான பிரமைதான் . குழந்தைகள்[ முகம் மலர்ந்து] எங்கிருந்து வந்தன அவை ? அவற்றின் தாய் . . .

(சற்று தொலைவில் ஒரு குரல் ‘அவள் பெயர் உனக்குத் தெரியாதா என்ன ? ‘)

பீஷ்மர்: யாரது ?

குரல்: (நெருங்கி வந்து) நான்தான். என்னைத்தான் நீ உன் வாழ்நாளில் அதிகமாக உற்று பார்த்திருக்கிறாய்.

பீஷ்மர்: அறிமுகமான குரல் . . .

(ஒரு பிணம் மெல்ல எழுகிறது சட்டென்று அதன் முகம் ஒளி பெறுகிறது. அதன் நெற்றியில் ஒளிரும் ஒரு பொட்டு)

பீஷ்மர்: நீ யார் ?

எழுந்த பிணம்: என் பெயர் சரபிந்து. அம்புப் பயிற்சியின்போது குறி வைக்கப்படும் மையப் புள்ளிக்குரிய தேவதை நான். அம்புகள் தைக்கும் எல்லா உதிரத்திலும் ஒரு துளி எனக்கு அவிஸாக கிடைக்கும். உன் அம்புகளை நான் விரும்புனேன். ஏனெனில் அவை அனேகமாகக் குறி தவறுவதில்லை.

பீஷ்மர்: நான் உன்னை கேள்விப்பட்டதேயில்லை.

சரபிந்து: தேவதைகளுக்கு முடிவேயில்லை. மனிதர்களின் செயல்களிலிருந்து அவர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.

பீஷ்மர்: நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன் .அக்கேள்விகளுக்கு நீ ஏன் பதில் சொல்கிறாய் ?

சரபிந்து: ஏனென்றால் உன் எல்லா இலக்குகளுக்கும் நான் பிரதிநிதியாக இருந்திருக்கிறேன். உன் அம்புமுனையின் வேகத்திலும் கூர்மையிலும் ஒரு பகுதியை அவர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறேன். உன் எல்லா நண்பர்களையும் பகைவர்களையும் நான் அறிவேன்.

பீஷ்மர்: நண்பர்களையுமா ?

சரபிந்து: (சிரித்தபடி) நண்பர்களுக்கென சில ரகசிய அம்புகளை வைத்திருக்காத அம்புறாத் தூளி எங்குள்ளது ?

பீஷ்மர்: அப்படியானால் சொல், இந்தக் குழந்தைகள் யாருடையவை ?

சரபிந்து: அவை அம்பையில் உனக்கு பிறந்திருக்கக் கூடியவை.

பீஷ்மர்: (திடுக்கிட்டு) இல்லை. இது அவதூறு. நீ என்னை அவமதிக்க எண்ணுகிறாய்.

சரபிந்து: (பொருட்படுத்தாமல்) உனக்கும் அம்பைக்கும் இடையிலான ஒரு மெளன வெளியில் அவை வளர்ச்சியே இன்றி வாழ்கின்றன.

உங்களில் ஒருவர் இருக்கும்வரை அவை இருக்கும்.

பீஷ்மர்: பொய். பொய் சொல்லாதே

சரபிந்து: இதோ பார். இந்த நுண்வெளியில் உன் உதிரம் ஒரு நதியாக ஓடுகிறது. அது போகுமிடம் எது தெரிகிறதா ?

பீஷ்மர்: (சட்டென்று தளர்ந்து) ஆம்.

சரபிந்து: ஆனால் அது அம்பையை அடையப் போவதில்லை. அவளைச் சுற்றி அவளால் உருவாக்கப்பட்ட நெருப்பு வளையம் உள்ளது. பாலை நிலத்தில் புகுந்த நதிபோல உன் இச்சை வீணாகி மடியும்.

பீஷ்மர்: அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

சரபிந்து: அம்பையின் கடனை மீட்டாமல் நீ சாக முடியுமா ?

பீஷ்மர்: நான் உத்தராயணத்திற்காக காத்திருக்கிறேன். அவ்வளவுதான்.

சரபிந்து: (சிரித்து) சரி (எழுகிறது)

பீஷ்மர்: இரு. (தணிந்த குரலில்) நீ சொன்னதற்கு என்ன பொருள் ?

சரபிந்து: அம்பையின் கோபம் உன்னை சாகவிடாது. அவள் அமைதி அடைந்தாக வேண்டும்.

பீஷ்மர்: எப்படி ?

சரபிந்து: அதற்காகத்தான் நீ காத்திருக்கிறாய். உன் மரணமும் உன்னருகே பொறுமையிழந்து நின்று கொண்டிருக்கிறது. . .

பீஷ்மர்: அம்பை !(வலியுடன் முனகியபடி) ஒவ்வொருமுறை உச்சரிக்கும்போதும் எரியம்பு போல வந்து தைக்கும் வார்த்தை

சரபிந்து: அறுபத்தெட்டு வருடங்களாக அவளுடைய பிரதிநிதியாக நான் உன்முன் இருந்திருக்கிறேன். எத்தனை ஆயிரம் அம்புகள். (சிரித்து) அம்பைக்கான உன் அம்புகள் எப்போதும் குறி தவறுவதில்லை.

பீஷ்மர் (அதை கவனிக்காமல்) அம்பை!

(சரபிந்து சரிந்து வடிவிழக்கிறது)

பீஷ்மர்: அம்பை!

(ஊளைகள், பலவிதமான கள ஒலிகள். அப்பால் வெகுதொலைவில் ஒரு சிரிப்பொலி. இளமை நிரம்பிய பெண்குரல்)

பீஷ்மர்: அம்பை!

(தலைவிரிக்கோலமாக ஒரு பெண் நிழல் அரங்கை கடந்து செல்கிறது)

பீஷ்மர்: ! (துடிதுடித்து எழுந்து விழுந்து வலியுடன் அலறுகிறார்) அம்பை!

(நிழல்கள் எழுகின்றன. அரங்கு முழுக்க அவை அலை மோதுகின்றன. பலவிதமான ஒலிகள் நகரம் ஒன்றின் சதுக்கம் போல தேர் ஓடும் ஒலிகளும் குதிரை கனைப்புகளும் மணியோசைகளும் கலந்த ஒலி)

பீஷ்மர்: காசிநாட்டரசனின் கோட்டை முகப்பல்லவா அது. ஆனால் அது அங்கே இருண்ட இறந்த காலத்தில் . . .

(கரிய முக்காடிட்ட ஒரு நிழல் நெருங்கி வருகிறது. குனிந்து அவர் முகத்தை உற்று பார்க்கிறது.)

பீஷ்மர் என்ன குளிர்! யார் நீ ? ஏனிப்படி குளிர்ந்திருக்கிறாய் ?

நிழல்: நான் நிழல். உன் நிழல்தான்.

பீஷ்மர்: ஆம். என்னைப் போலவே இருக்கிறாய். (சிரித்து) சீக்கிரமே நீயும் இவ்வுலகிலிருந்து விடைபெற்று செல்லவிருக்கிறாய்.

நிழல்: (சிரித்து) ஆம். கணை சென்று தைக்குமிடத்தையே அதன் நிழலும் சென்று தைக்கிறது.

பீஷ்மர்: எத்தனை காலம் எத்தனை தூரம் நாம் சேர்ந்தே தாண்டி வந்திருகிறோம் இல்லையா ?

நிழல்: நீ ஏங்கியதை கேட்டேன். உனக்கு மீண்டும் அவ்விடங்களில் போக விருப்பமா ?

பீஷ்மர்: விளையாடாதே ?

நிழல்: என்ன விளையாட்டு ? நம்மால் செய்யக் கூடாதது என ஏதுமில்லை. நாம் நம்பாததை செய்ய முடியாது. அவ்வளவுதான்.

பீஷ்மர்: நான் அம்பையை பார்க்க விரும்புகிறேன்.

நிழல்: ஏன் பார்க்க முடியாது ? பார்க்கலாம்.

பீஷ்மர்: எப்படி ?அவள்தான் இறந்துவிட்டாளே.

நிழல்: ஆம். அப்படியென்றால் நீ வாழும் காலத்திலும் இடத்திலும் அவள் இல்லை என்று பொருள். உனக்குத் தெரியுமா, பரு வெளியானது உத்தரீயப்பட்டை மடிப்புகள் போல மடிக்கப்பட்டிருக்கிறது. உன் காலமும் இடமும் ஒரு மடிப்புதான் அதில்.

பீஷ்மர்: அவள் இருக்கிறாளா எங்கே ?

நிழல்: ஒரு வேளை மிக அருகே. ஒருவேளை இதே இடத்திலேயே.

பீஷ்மர்: என் மனதில் பித்தேறுகிறது . . .

நிழல்: புகையிருக்கும் பாண்டத்தில் நீரும் புக முடியும். நீரும் புகையுமறியாமல் அதற்குள் வாசனை குடியிருக்க முடியும். அதற்குள் ஒளி புகுந்தால் எதுவுமே இடம் பெயர்வதில்லை. வேறுவேறு இடங்களையே அவை எடுத்துக் கொள்கின்றன. முடிவற்ற இடங்களின் அடுக்குகளையே நாம் வெளி என்கிறோம்.

பீஷ்மர்: நான் அங்கு நுழைய முடியுமா ? அவளைப் பார்க்க முடியுமா ? (உடைந்த குரலில்) ஒரு கணம் ஒரே ஒரு கணம் ?

நிழல்: எதற்கு ?

பீஷ்மர்: அவளிடம் நான் சொல்ல வேண்டிய ஒரு வரி. சொல்ல விட்டுப்போய்விட்டது. இத்தனை வருடங்களில் பல்லாயிரம் சொற்களாக மாபெரும் காவியங்களைவிட பெரிதாக அந்த வரி மாறிவிட்டது. மீண்டும் அவளை நான் சந்தித்தால் என்னை முன்பு தடுத்த அத்தனை மாயத்திரைகளையும் கிழித்து வீசுவேன். அவள் முன் என்னை திறந்து வைத்து, இல்லை, அந்த ஒரே ஒரு வரி போதும் . . . அதை மட்டும் சொல்லிவிட்டால் . . . (வெட்கி ,திணறி அமைதியாகிறார்.)

நிழல்: இந்த உடலுடன் நீ அங்கே புக முடியாது. ஒன்று செய்யலாம். நீ நுண் வடிவில் அங்கு செல்லலாம்.

பீஷ்மர்: எப்படி ?

நிழல்: நீ உன் ஆத்மாவை எனக்குகொடு. நான் என் உடலை உனக்குத் தருகிறேன். ஆனால் நீ இங்கு திரும்பிவிட வேண்டும்.

பீஷ்மர்: ஒரு சில நாழிகைகள் . . .

நிழல்: (சிரித்து) நாம் நமது காலக்கணக்கைப் போடுகிறோம். நிமிடங்கள், நாழிகைகள், நாட்கள், யுகங்கள். நீ திரும்பி வர எண்ணினால் போதும். எழுந்து வா.

(பீஷ்மர் எழுந்து கொள்ள நிழல் அவர் இடத்தில் படுக்கிறது.)

பீஷ்மர்: இது வேறு இடம். வேறு வாசனைகள். இங்கு நான் எதையோ விபரீதமாக வித்தியாசமாக உணர்கிறேன். (சுற்றி வந்து) ம் ஒவ்வொரு கணமும் கூடவேயிருக்கும் கால உணர்வு இங்கே இல்லை. எத்தனை கனமற்றிக்கிறது என் பிரக்ஞை! எத்தனை இலகுவாக இயங்குகின்றன என் எண்ணங்கள். காலம் என்பது நம் பிரக்ஞைமீது மாட்டப்பட்ட இரும்புக் கவசமா என்ன ? விடுதலையுணர்வு. ஆனால் விடுதலையுடன் இணைந்திருக்கும் அந்த பதற்றம் சற்றும் இல்லை!

(அவரெதிரே ஒரு கோட்டை வாசல். மக்கள் புழங்கும் ஒலி. ஒரு ரதம் தடதடத்து உள்ளே போகிறது. இருவர் பேசியபடி வருகிறார்கள்.)

ஒருவர்: அப்படியென்றால் எதற்கு சுயம்வரம் ?மன்னர் சால்வரை அழைத்து சம்பிரதாய மணமே பேச வேண்டியதுதானே ?

மற்றவன்: மற்ற மன்னர்கள் விடுவிடுவார்களா ? காசி மன்னர் மூன்று பெண்களுக்கும் ஒரே கணவர் என்பதில் தெளிவாக இருக்கிறார். பாரத வர்ஷத்தில் இன்று யார் காசி மன்னன் மகள்களை மணக்கிறார்கள் என்பதே பெரிய கேள்வி. அவன்தான் அடுத்த சக்ரவர்த்தி.

முதல்வன்: விசித்திர வீரியர் வருவாரோ ?

இரண்டாமவன்: யார், அஸ்தினபுரி மன்னரா ? அவனால் எழுந்து நடமாடவே முடியாது.

முதல்வன்: ஆனால் பீஷ்மர் . . .

இரண்டாமவன்: அவர் நித்திய பிரம்மசாரி.

முதல்வன்: இங்குதான் போல் மூள வாய்ப்பிருக்கிறது. யார் காசி மன்னன் மகள்களை மணக்கிறானோ அவனுக்கும் பீஷ்மரின் படைகளுக்கும் இடையே.

இரண்டாமன்: ஆம். சால்வர் என்ன செய்வார் . . .

பீஷ்மர்: ஆ! (வியப்புடன்) அதே இடம். அதே ஒளி நிழல்கள். அதே மனிதர்கள். அதே காட்சிகள். நான் என்ன செய்வது சற்று முன்னகர்ந்தால் அங்கு சென்றுவிட முடியும். (தாடியைத் தடவி) ஆனால் இந்த முதிய உடல்….

(ஒரு நிழல் முன்னகர்கிறது)

நிழல்: தோற்றம் என்பது ஓர் ஆடைதானே ?

இன்னொரு நிழல்: உத்தமரே தங்கள் புது ஆடைகள் இதோ

பீஷ்மர்: ஆம். அதே உடைகள்தான் இவை. அதே செம்பட்டு உத்தரியம். (உடைமாற்றுகிறார்)

நிழல்: உத்தமரே தங்கள் நகைகள்

பீஷ்மர்: அதே செம்பவள ஆரம். நான் நாற்பது வருடம் கழித்து வேகவதியில் தொலைத்தது. (அணிகிறார்)

நிழல்: உத்தமரே தங்கள் ரதம் . . .

(குதிரைகள் குளம்புதைத்து திமில் உதறி வந்து நிற்க ரதம் ஒசையிடுகிறது)

பீஷ்மர்: மீண்டும் இளமை! (தாடியை களைகிறார். தலை மயிரையும். கரிய தலை மயிர். இளமை நிரம்பிய தோற்றம்)

(உள்ளே பெருமுரசங்கள் ஆர்ப்பரிக்கின்றன)

பீஷ்மர்: சுயம்வர மேடை தயாராகிவிட்டது. (வில்லை சுண்டி நாணோசை எழுப்புகிறார்) காசிராஜன் மகள்கள் அஸ்தினபுரிக்கு மட்டுமே சொந்தம். ஏனெனில் பாரத வர்ஷத்தில் மீண்டும் ஒரு பெரும் போர் நடக்கலாகாது . . . (சேணத்தைச் சுண்டுகிறார் தடதடத்து கோட்டை வாசலுக்குள் புகுந்து கொள்கிறது ரதம். உள்ளே மீண்டும் முரசொலி. சங்கும் கொம்பும் மணியோசையும் எழுகின்றன. இருபாதசாரிகள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.)

ஒருவர்: யார் அவர் பீஷ்மரா ?

பிறிதொருவர்: சுயம்வரத்துக்கா ? நடுவயதில் இப்படி ஒரு ஆசையா ? அவரது பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று ?

(எட்டுக்கரங்கள் கொண்ட ஒரு தேவன் புரவி மீதேறி விரைகிறான்.)

முதல் மனிதர்: ! இது போருக்குரிய தேவன் அல்லவா ? களப்பலிகளை அவிஸாக உண்பவன்.

(நான்கு கரங்களுடன் இன்னொரு தேவதை புரவி மீதேறி உள்ளே விரைகிறது.)

இரண்டாமவர்: இவள் கண்ணீரின் தேவி. போர்த் தேவனின் மனைவி இவள். கணவனை எப்போதும் பின்தொடரும் பத்தினி.

முதல்வர்: என்ன நடக்கப்போகிறது.

இரண்டாமவர்: போர், அழிவு, வெறென்ன ?

(கோட்டைச்சுவர், மனிதர்கள் எல்லாம் கலைகின்றன. ஆள்க் கூட்டமாக மாறுகின்றன. நடனம், பாட்டு, ஜனநெரிசல். ‘ விலகு! விலகு! ‘ ஒலிகள். இரு சூதர்கள் பாடுகிறார்கள்)

பாடல்: (உரை போன்றது)

சூதர்களே

காசி மன்னன் குலத்தைப் பாடுவோம்!

கால பைரவன் அருள்

அவன் மடியில் மூன்று தேவதைகளாக

மலர்ந்தது

சக்தி ரூபமானவள் அம்பை

செல்வமோ அம்பிகை

கல்வியின் வடிவே அம்பாலிகை

முப்பெருந்தேவியர் அருள்க!

முழு முதலோன் அருள்க!

முக்கண் தேவன் அருள்மழை பொழிக!

(நெரிசல், கூக்குரல்கள், அனைவரும் அங்குமிங்கும் அலைமோதி சுழல்கிறார்கள். மணியோசை. பெருமுரசும் முழவும் அதிர்கின்றன. கூட்டம் மெல்ல நிதானமடைகிறது. உருமாறி அரண்மனை வாசல் கதவாகவும், சுயம்வர மண்டபத்து தூண்களாகவும், கவரி வீசும் சேடியராகவும் மாறுகிறது. நடுவே சுயம்வரத்துக்கு வந்த மன்னர்கள் சிலர் நிற்கிறார்கள். பெரிய பட்டுத் தலைப்பாகையும் கோலும் ஏந்திய நிமித்திகன் அரங்கு நடுவே வருகிறான்.)

நிமித்திகன்: ஜய விஜயீபவ!

(அரங்குக்கு வெளியே வாழ்த்தொலிகள் முழங்குகின்றன)

நிமித்திகன்: இன்று சுக்ல பஞ்சமி. மகாமங்கல நாள். பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் இந்நாள் ஒரு பொன்னாள் என்று குறிக்கப்படும். ஏனெனில் கங்கையின் முடிவற்ற கருணையால் அமுதூட்டப்பட்ட காசி நாட்டின் அதிபர் தோல்வியறியா பெருங்குலத்து முதல்வர் மாமன்னர் . . பீமசேனரின் புதல்விகள் அம்பைதேவி, அம்பாலிகா தேவி, அம்பிகா தேவி ஆகியோரின் சுயம்வர நாள் என இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாரத நாட்டின் அத்தனை ஷத்ரிய குலங்களிலிருந்தும் இங்கே வீரர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை காசிநாட்டு செங்கோல் பணிந்து வரவேற்கிறது.

(முரசொலி: வாழ்த்துக் கூக்குரல்கள்)

நிமித்திகன்: இதோ காசிமன்னர், பரம் பொருளின் பாதவடிவான காலபைரவன் குலத்துதித்த வீரர், வெற்றியே வடிவானவர் எழுந்தருள்கிறார்.

(காவலர் பணிந்து வழிவிட காசிமன்னன் பட்டு பீதாம்பரங்களும் பொற்கிரீடமும் அணிந்தவனாக இரு மெய்க்காவல் வீரர் புடைசூழ வருகிறான். மன்னர்கள் வணங்கி வரவேற்கிறார்கள்.)

காசிமன்னன் (அரியாசனத்திலிமர்ந்து) இங்கு என் அழைப்பை ஏற்று வந்துள்ள பாரத வர்ஷத்தின் மாமன்னர்களை வரவேற்று தலை வணங்குகிறேன். வெற்றி, செல்வம், புகழ் ஆகியவற்றின் மெய்வடிவங்களான என் புதல்வியர் இன்று எவரை வரிக்கிறார்களோ அவனை பாரத வர்ஷமே தன் சக்கரவர்த்தி என ஏற்கிறது என்று பொருள்.

(வாழ்த்தொலிகள்)

அமாத்யரே சுயம்வரம் துவங்குவதாக!

நிமித்திகன்: இதோ பொற்கணம் இதழ்விரிக்கிறது. இளவரசியர் வருகிறார்கள்.

(மேடைக்கு அப்பால் வரும் இளவரசிகளைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மன்னர்கள் பரபரப்படைகின்றனர்.)

நிமித்திகன்: பெரிய இளவரசி அம்பை எவரை ஏற்கிறார்களோ அவரே மூவர்க்கும் மாலையிடுவார்.

(தொலைவில் மங்கல ஒசைகள். இளவரசிக்கு மன்னர்களை அறிமுகம் செய்து கோல்காரன் கூவும் புகழொலிகள்)

கோல்காரன்:(தொலைவில்) இவர் அங்க மன்னர் அஜயபாகு. பத்தாயிரம் யானைகளும் பத்தாயிரம் குதிரைகளுமடங்கிய மாபெரும் படையின் அதிபர். ஏழுபோர்களில் வெற்றி பெற்று தென்கங்கை பிராந்தியத்தை ஆள்பவர்.

(அரங்கில் பரபரப்பு. அனைவரும் அதே திசையைப் பார்க்கிறார்கள்.)

ஒரு மன்னன்: வானில் விடுக்கப்பட்ட செய்திப் புறா போல இளவரசி தன் இலக்கு நோக்கியே வருகிறார்கள்.

இன்னொரு மன்னர்: பெண் மனம் தாமரையிலை நீர் போல சஞ்சலம் மிக்கது. அது புறாவா இல்லை வண்ணத்துப் பூச்சியா என இறைவன்கூட கூறமுடியாது.

தொலைவில் கோல்காரன்: இவர் வங்க மன்னர் மகாபலன். இவருடைய வலிமை படகுகளில் உள்ளது. கங்கையையே தன் பாய்களால் மூடிவிடுமளவு படகுகளுக்கு உரிமையாளர். இவரது துறைமுகத்தில் திறைப்பணம் மரக்கால்களால் அள்ளப்படுகிறது என்பர் சூதர்.

ஒரு மன்னர்: இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் நடையில் போர்க்குதிரையின் நிமிர்வும் மிடுக்கும் உள்ளது.

இன்னொருவர்: எழுந்து படபடக்கும் தீத்தழல் போலிருக்கிறாள். அந்தபுரத்துக்குள் அடைபடும் பெண்ணல்ல இவள்.

முதல் மன்னர்: அக்கினி ஆக்கவும் அழிக்கவும் செய்யும்.

இரண்டாமவர்: இவள் அழகு அச்சம் தருகிறது. இவளை அடைபவன் இக்கணமே பலநூறு எதிரிகளை அடைந்துவிட்டான். (கோல்காரனின் குரல் நெருங்கி வந்து அரங்குக்கு வெகு அருகே கேட்கிறது. வாழ்த்தொலிகள்)

கோல்காரன்: இவர் காந்தாரத்து மன்னர் சுமித்ரர். வல்லமை மிக்க ரதங்கள் கொண்ட மாபெரும் படையின் அதிபர். உயர்ந்த சிவந்த மலைகளால் காவல் காக்கப்பட்ட நாட்டின் தலைவர்.

(வாழ்த்தொலிகள் எழ அம்பை கோல்காரன் துணைவர கையில் மாலையுடன் அரங்கில் பிரவேசிக்கிறாள்)

மன்னன் ஒருவன்: காட்டை உண்டு முன்னேறும் நெருப்பு . . .

இரண்டாம் மன்னன்: அவள் சால்வனையே நெருங்குகிறாள்.

முதல் மன்னன்: வறியவனின் மண்சட்டியில் வான் கங்கை இறங்குவது போல.

(வெளியே குரல்கள். ‘சால்வ மன்னர். ‘ சால்வரை! ‘ என்று ஆர்ப்பரிக்கின்றன. அரங்கில் அமைதி, துடிப்பு. அம்பை மாலையுடன் சால்வனை நெருங்குகிறாள்)

கோல்காரன்: இவர் சால்வர். செளபால நாட்டின் அதிபர். இந்த பாரத வர்ஷத்திலேயே வைடூரியங்கள் கிடைக்கும் ஒரே நாடு இதுதான். நமது நாட்டின் நட்பு நாடாக செளபாலம் இருந்து வருகிறது.

(வெளியே கூக்குரல்கள். உலோகக் கதவுகள் பேரோசையுடன் பிளக்க வீரர்களை உதறித் தள்ளிவிட்டு கையில் வில்லுடன் பீஷ்மர் நுழைகிறார்.)

குரல்கள்: பீஷ்மர்! பீஷ்மர்!

காசிமன்னன்: பீஷ்மரே தாங்கள் . . .

பீஷ்மர்: காசி மன்னரே உன் பெண்களை நான் இராட்சத மணமுறைப்படி கவர்ந்து செல்லவிருக்கிறேன். (அம்பு அம்பையின் கையிலிருந்த மாலையை விழச் செய்கிறது.)

காசிமன்னன்: என்ன ? (பாய்ந்தெழுந்து) யாரங்கே . . .

பீஷ்மர்: யாராக இருந்தாலும் என் வில்லுக்குப் பதில் சொல்லுங்கள்.

நிமித்திகன்: பீஷ்மரே தாங்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு…

பீஷ்மர்: விலகி நில் (நானோசை எழுப்புகிறார்) இந்த அரங்கிலிருந்து இளவரசிகளை நான் கவர்ந்து செல்லவிருக்கிறேன் தடுக்க எண்ணும் யார் வேண்டுமானால் என்னிடம் போட்டியிடலாம்.

சால்வன்: பீஷ்மரே வலிமை எப்பொழுமே வெல்வதில்லை. தர்மம் என்று ஒன்று உள்ளது.

பீஷ்மர்: இராட்சதமும க்ஷத்ரியனுக்கு தர்மம் தான்.

சால்வன்: (வில்லை நாணிழுத்தபடி) நில்லுங்கள் (பீஷ்மரும் சால்வனும் போர் புரிகிறார்கள். வெளியே மக்களின் கூக்குரல்கள். யுதங்களின் உலோக ஒலிகள்)

சால்வன்: என்னுடன் இணைந்து கொள்ளுங்கள் மன்னர்களே.

ஒரு மன்னன்: இது உனது போர் சால்வா. நாங்கள் எப்படியும் இளவரசியரை இழந்தாயிற்று.

(சால்வன் அம்பு பட்டு அலறி வீழ்கிறான். அவனது வீரர்களும் விழுகிறார்கள்.)

அம்பை: (கதறியபடி சால்வனை நோக்கி ஓடுகிறாள்) அநீதி! . . . இதை தடுக்க யாருமில்லையா ?.

(பீஷ்மரின் அம்பு அவள் தலையை தாக்குகிறது. கூர்மையற்ற அம்பு. அவள் மயங்கி சரிகிறாள். அவளை அள்ளியபடி பீஷ்மர் மறுபக்கமாக விரைகிறார்.)

மன்னன் ஒருவன்: ஒருவகையில் இதுதான் சரியான முடிவு. இளவரசியர் இருக்க வேண்டிய இடம் அஸ்தினபுரிதான்.

(அமாத்யன் ஒருவன் ஓடிவந்தபடியே கூவுகிறான்.)

அமாத்யன்: பீஷ்மர் இளவரசியர் மூவரையும் ரதத்தில் ஏற்றிச் செல்கிறார். சால்வனின் படைகள் அவரை தொடர்கின்றன. போர் ரதவீதியெங்கும் நிகழ்கிறது.

(இன்னொரு வீரன் ஓடி வருகிறான்.)

வீரன்: போர். செளபாலனின் படைகள் தெருக்களெங்கும் பிணங்களாக சிதறிக் கிடக்கிறார்கள்.

(இன்னொரு வீரன் ஓடி வருகிறான்.)

வீரன் 2: அரசே நமது கோட்டை முகப்பு வரை பிணங்கள். உதிர்ந்த பழங்கள் போல.

காசி மன்னன்: (பெரு மூச்சுடன்) தண்ணீர் வலிமையில்லாத கரையையே உடைக்கிறது. வரலாறு தன் திசையை அறியும் போலும்.

(எழுந்து தளர்ந்த நடையுடன் உள்ளே செல்கிறான். மன்னர்கள் கலைந்து குழப்பமாக பேசியபடி வெளியேறுகிறார்கள். சால்வனை அவன் வீரர்கள் தாக்கிச் செல்கிறார்கள். வெளியே பெரும் கூக்குரல்கள் அழுகையொலிகள். சாபங்கள்.)

வீரன் ஒருவன்: இனி காசி நாடு அஸ்தினபுரியின் நட்பு நாடு இல்லையா ?

இன்னொரு வீரன்: இங்கு நடந்தது மணம் அல்ல. ஓர் அரசியல் ஒப்பந்தம் தான்.

(அரங்கில் ஒளி மாறுபடுகிறது. அனைவரும் கலைந்து மறு வடிவம் கொள்ள அது அஸ்தினபுரியின் அரச சபையாகிறது.)

நிமித்திகன்: அஸ்தினபுரியின் அதிபர், குரு வம்சத்து வழித் தோன்றல், பாரத வர்ஷத்தின் சக்கரவர்த்தி விசித்ர வீரியர் வருகை!

வாழ்த்துக்கள்: ஜய விஜயீபவ.

(விசித்திர வீரியன் தளர்ந்த கூனல் நடையுடன் வருகிறான். அனைவரும் வணங்குகிறார்கள்.)

விசித்திர வீரியர்: (மூச்சிளைத்தபடி) தமையனார் பீஷ்மர் கிளம்பி விட்டாரா ?

அமாத்யர்: வந்து கொண்டிருக்கிறார் பிரபு.

(வெளியே வாழ்த்தொலிகள். பீஷ்மர் நுழைகிறார்.)

விசித்திர வீரியர்: வருக தங்களை எதிர்நோக்கியிருக்கிறோம்.

பீஷ்மர்: அமர்க. (அமர்ந்து) என்ன அமாத்யரே மகாமங்கல நாள் குறித்தாகி விட்டதா ?

அமாத்யர்: நிகழ் குறியும் செல் குறியும் தேர்ந்த போது நிமித்திகர்களில் சிலர் . . .

பீஷ்மர்: (பொறுமையிழந்து) என்ன சொன்னார்கள் ?

நிமித்திகர்: பிரபு, மன்னிக்க வேண்டும்.

பீஷ்மர்: அவர்கள் சொன்னதைச் சொல்.

நிமித்திகர்: கனல்துண்டை கம்பளத்தால் மூடி வைப்பது போல குறிகளுக்குள் ஏதோ ஒன்று மறைந்துள்ளது – இதுதான் அவர்கள் கூறியது.

விசித்திர வீரியர்: அண்ணா அது என்ன . . . எனக்கு குழப்பமாக உள்ளது.

பீஷ்மர்: (ஏளனமாக) அச்சம் என்பதை நீ குழப்பம் என்று சொல்வாய் போதும்.

(ஒரு வீரன் உள்ளே வந்து தங்குகிறான்)

பீஷ்மர்: என்ன ?

வீரன்: இளவரசி . . .

பீஷ்மர்: யார் ?

வீரன்: காசி நாட்டு இளவரசி அம்பா தேவியார்

பீஷ்மர்: அவனுக்கென்ன ?

வீரன்: தங்களைக் காண வந்துள்ளார்

பீஷ்மர்: (கோபத்துடன்) இங்கா ? இங்கு அது மரபல்ல.

(அம்பை உள்ளே வருகிறார்)

அம்பை: நான் இன்னும் இங்குள்ளவள் ஆகவில்லை.

பீஷ்மர்: (கோபத்துடன்) அதை தீர்மானிப்பது நீ அல்ல.

அம்பை: இந்த உடலில் உயிர் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று நான் தீர்மானிக்க முடியும்.

விசித்திர வீரியர்: என்ன சொல்ல விரும்புகிறீர்கள் இளவரசி.

அம்பை: நான் மனதால் செளபால நாட்டு மன்னர் சால்வனை வரித்து விட்டேன். அவரையன்றி எவரும் என்னை தீண்ட அனுமதிக்க மாட்டேன்

.

பீஷ்மர்: (கடும் கோபத்துடன்) என்ன ? (எழுந்து) என்ன பேச்சு இது ?

அம்பை: பேசாமல் இருந்துவிட்டால் சரியாகி விடுமா ?

பீஷ்மர்: நீ க்ஷத்ரியப் பெண்ணுக்குரிய நெறியை பின்பற்ற வேண்டும்.

அம்பை: சதுரங்கத்தில் காய். படுக்கையில் பொம்மை. வீரர்களைப் பெறும் வயிறு. இறுதியில் விதவை என்று ஏதாவது ஒரு வேடம் இல்லையா ?

பீஷ்மர்: (வாயடைந்து போய்) உன் குரலில் விஷம் இருக்கிறது.

அம்பை: பாதாளத்தின் விஷம் அழுதுதான்.

நிமித்திகர்: தேவி தங்கள் கூற்று முறையல்ல.

அம்பை: இராக்கதத்தை முறை என ஒப்புக் கொள்பவை உங்கள் சாத்திரங்கள்.

பீஷ்மர்: (தன்னை திரட்டிக் கொண்டு) உனக்கு என்ன தேவை ?

அம்பை: விடுதலை.

பீஷ்மர்: (சிரித்து) எதிலிருந்து ?

அம்பை: உங்களிடமிருந்து.

பீஷ்மர்: எந்தச் சரடு உன்னை கட்டியிருக்கிறதோ அதன் மறுபக்கமே என்னை கட்டியிருக்கிறது.

அம்பை: எனக்கு அலங்காரப் பேச்சு தேவை இல்லை. எனக்கு என் காதலரிடம் போக அனுமதி தேவை. உங்கள் யுதம் என்னை தடுக்கக் கூடாது.

பீஷ்மர்: நீ ஏற்கனவே கிளம்பி விட்டாய் நான் உன்னை தடுக்கவில்லை. ஆனால் நீ இன்னமும் சிறு பெண். இந்த ஆட்டத்தின் போக்கு உனக்குப் புரியவில்லை. நீ . . . (தயங்கி) நீ போகலாம் . . . உனக்கு நன்மைகள் வருவதாக.

(அம்பை எதுவுமே பேசாமல் திரும்பி செல்கிறாள்.)

பீஷ்மர்: யாரங்கே.

காரியக்காரன்: பிரபு.

பீஷ்மர்: இளவரசி அவள் விரும்பிய இடத்திற்குச் செல்ல ஆவன செய்யுங்கள்.

விசித்திர வீரியர்: என்னை அம்மா பார்க்க வேண்டும் என்றார்கள். இப்போது இந்தத் தகவலை அவர்களிடம்….

பீஷ்மர்: அவர்கள் அழைத்ததே இதற்காகத்தான் செல். (பெரூமூச்சுடன்) என் வணக்கத்தை கூறுக.

(விசித்திர வீரியர் செல்கிறார்.)

பீஷ்மர்: யாரங்கே ?

ஒரு வீரன்: (வந்து வணங்கி) பிரபு யாரை அழைப்பது ?

பீஷ்மர்: வேண்டாம். நீ எனக்கு சற்று மது கொண்டுவா. நில். சற்று கடுமையான மது . . .

அமாத்யர்: நான் விடைபெறுகிறேன் பிதாமகரே.

பீஷ்மர்: உம் (எழுந்து அமைதியிழந்து நடை பயில்கிறார். மது வருகிறது. அருந்துகிறார். மீண்டு அருந்துகிறார்.

பீஷ்மர்: மனித நாடகம்! (கோபம் கொண்டு) பைத்தியக்காரப் பெண் . . . அறியாமையும் அகரங்காரமும் சேர்ந்து (மீண்டும் உலவி, மெல்ல தணிந்து) பரிதாபத்திற்குரியவள். பேதை . . .

(அரங்கு ஒளி மாறுபடுகிறது. ஒரு நிழல் பீஷ்மரை நெருங்கி மெல்ல பேச முற்படுகிறது.)

நிழல்: பீஷ்மரே, உங்கள் மனம் ஏன் அமைதியிழந்திருக்கிறது ?

இன்னொரு நிழல்: மிக அழகான ஒரு புண். தீக்காயம் போல எரியும் ரணம் . . .

பீஷ்மர்: (நின்று) என்ன ? (சுற்றி வந்து) யாருமில்லை. ஆனால் எவராலோ கவனிக்கப்படுவது போலிருக்கிறது. விசித்திரமான மனப் பிம்பங்கள். (மதுக்கிண்ணத்தை தூக்கிப் பார்த்து] பாதாளத்து நிழல்கள் கரைந்திருக்கும் இந்தத் திரவம்

முதல் நிழல்: பீஷ்மரே, அவள் அவனைக் காதலிக்கிறாள்.

இரண்டாம் நிழல்: ஒரு வேளை அவன் அவளை ஏற்றுக் கொள்ளக் கூடும்.

முதல் நிழல்: ஒரு போதுமில்லை. அவன் என்ன மூடனா.

இரண்டாம் நிழல்: ஆனால் காதல் எல்லா நியதிகளுக்கும் அப்பாற்பட்டது.

முதல் நிழல்: அவள் அவனை விரும்புகிறாள் அவள் அவனை விரும்புகிறாள்.

பீஷ்மர்: சே! (கிண்ணத்தை வீசுகிறார்)

ஒரு வீரன்: (ஓடி வந்து) பிரபு அழைத்தீர்களா ?

பீஷ்மர்: இல்லை. நீ போகலாம். (அறையை பார்க்கிறார் அசைவற்ற தூண்கள்) ஆம் இந்த மதுதான் காரணம். விசித்திரமான ஒரு பிரமை.

நிழல்களால் சூழப்பட்ட ஒரு போர்க்களத்தில் அம்புகள் மீது படுத்திருக்கும் ஒருவன். பிணங்கள் அழுகும் வீச்சம். மீண்டும் மீண்டும் வரும் கனவு. மிக அருகே இருக்கிறது அக்கனவு. சற்று கால் தடுக்கினால் நான் அதற்குள் விழுந்து விடுவேன் என்று படுகிறது.

(தளர்ந்து நடந்து மறைகிறார். ஒளிமாறுபட அரங்கில் உருவங்கள் கலைகின்றன. ஒரு அரண்மனைக்குரிய ஒலிகள் எழுகின்றன. வாசல் காவலர்கள். சேவகர்கள். நிமித்திகன் முன்வந்து சங்கு ஊதுகிறான்.)

நிமித்திகன்: செளபால நாட்டு அதிபன் மகாபலன் சால்வ மன்னர் வருகை.

(வாழ்த்தொலிகள்)

சால்வன்: (காயங்களுக்கு கட்டு போட்ட உடலுடன் வந்தபடியே) ஆம் அமாத்யரே ஒரு வகையில் அது நல்லது தான். நான் பீஷ்மரை எதிர்த்தேன் என்பது நிறுவப்பட்டாயிற்று. அது போதும் எனக்கு. ஆனால் அஸ்தினபுரியின் படைபலத்தை எப்படி எதிர் கொண்டிருக்க முடியும் ?

அமாத்யர்: (கூட நடந்தபடி) ஒரு போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. நாமும் கோழைகளல்ல. ஆனால் போர் உக்கிரமாகும்தோறும் அழிவு அதிகம்.

சால்வன்: ஆம். விதி இம்முறை கருணையுடனிருக்கிறது.

(உள்ளிருந்து ஒரு வீரன் வருகிறான்)

வீரன்: ஜய விஜயீபவ.

சால்வன்: என்ன ?

வீரன்: காசி நாட்டு இளவரசி தங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள்.

அல்லன்: (குழம்பி) யார் ?

வீரன்: அம்பாதேவி

சால்வன்: தனியாகவா ?

வீரன்: அஸ்தினபுர அமாத்யர் மற்றும் வீரர்களுடன்.

சால்வன்: வரச் சொல்.

(வீரன் போகிறான்)

அமாத்யர்: மன்னரே இது ஒரு சோதனை. மன்னனுக்கு அரச கடமைகளுக்கு அப்பால் எந்த உறவுகளும் இல்லை என்பதை நினைவு கூருங்கள்

.

(அம்பை உள்ளே வருகிறாள்)

சால்வன்: (அவளை கூர்ந்து பார்த்து) இளவரசியார் மேலும் அழகு பெற்றிருக்கிறீர்கள்.

அம்பை: (அவனுடைய கேலியை உடனே புரிந்து கொண்டு) தங்கள் பேச்சு புரியவில்லை.

சால்வன்: அஸ்தினபுரியில் மிதமான தட்பவெப்பநிலை என்பார்கள்.

அம்பை: நான் அங்கே தங்கவில்லை. உங்களை பார்க்க வந்தேன்.

சால்வன்: தங்கள் நோக்கம். ?

அம்பை: நான் இருக்க வேண்டிய இடம் இது என்று தான்.

சால்வன்: எப்படி ? நீங்கள் பீஷ்மரால் கவரப்பட்டவர். விசித்திர வீரியருக்காக உறுதி செய்யப்பட்டவர்.

அம்பை: கவர்வதற்கு நான் எவருடைய சொத்துமல்ல. ஏன் ஆத்மாவும் முழுமையும் சுதந்திரமும் கொண்டதுதான்.

சால்வன்: ஆனால் ஆத்மா உறவுகளில் மரபுகளில் சிக்கியிருக்கிறதே. ஆறு கரைகளுக்கு கட்டுப்படுவது போல.

அம்பை: நான் பேச வரவில்லை. நான் தங்களை மட்டுமே எண்ணினேன். தங்களை மட்டுமே என்னால் ஏற்க முடியும்.

சால்வன்: ஆனால் நீங்கள் கைப்பற்றப்பட்டவர் பிறருடைய உடைமை.

அம்பை: அப்படியானால் நான் என்ன செய்வது ?

சால்வன்: பீஷ்மருடைய உடைமை நீங்கள். அவரிடமே திரும்புங்கள். உங்களை அவரிடமிருந்து கைப்பற்றும் வல்லமை எனக்கில்லை.

அம்பை: உங்கள்மீது என் உள்ளம் கொண்ட காதலை உதறுகிறீர்களா ?

சால்வன்: நான் சுயம்வரத்துக்கு வந்தேன். ஆனால் விதி நம்மை சேர்த்து வைக்கவில்லை . . .

அம்பை: (குரோதத்துடன்) விதியல்ல, உங்கள் கோழைத்தனம்.

சால்வன்: (கோபம் கொண்டு) ஆமாம். கோழைத்தனம்தான். பீஷ்மரின் அம்பால் மரணமடைய நான் மூடனில்லை.

அம்பை: (கசப்புடன்) மிகப்பெரிய புத்திசாலி.

சால்வன்: உன் குறிப்பு எனக்குப் புரியாமலில்லை பெண்ணே. (சட்டென்று சிரித்து) நீ மிகப்பெரிய முட்டாள். காசி மன்னன் மகளாக உன்னை ஏற்க மாமன்னர்கள் வரிசையில் நிற்பார்கள். பீஷ்மரின் பிச்சையாக உன்னை யார் ஏற்க முன் வருவார் ?

அம்பை: (அதிர்ச்சியுடன்) சால்வ மன்னரே. அப்படியானால் நீங்கள் என்னிடம் கண்டது என் தந்தையின் செல்வமும் படைபலமும் மட்டும் தானா ?

சால்வன்: இதில் என்ன ஐயம் ? உன்னைவிட பத்து மடங்கு பெரிய அழகிகள் என் அந்தபுரத்தில் நிரம்பியிருக்கிறார்கள். (குரலை தணித்து) காசி மன்னன் மகளாக அன்றி, பட்டத்தரசி பட்டம் இன்றி, நீ என் அந்தபுரத்தில் வாழ முடியுமென்றால் . . .

அம்பை: சீ, நீ ஓர் ஆண் மகனா ? உன் மீதா என் காதலை வைத்தேன் ?.

சால்வன்: கன்னியருக்கு காதல்கள் கை வளைகள்போல. ஒன்று உடைந்தால் இன்னொன்று .உடல் வளர வளர வேறு வேறு – என்றான் என் அரசவைக் கவிஞன் ஒருவன்.

அம்பை: எத்தனை குருடியாக இருந்திருக்கிறேன். உன் உடலும் மனமும் கூசுகின்றன. இந்தக் கணமே என் உடல் எரிந்து சாம்பலாகி விடலாகாதா என ஏங்குகிறேன்.

சால்வன்: கற்பெனும் தீ! நல்ல கற்பனை. நான் மருத்துவரைப் பார்க்கும் நேரம் இது. நீ என் அந்தபுரத்தையோ பீஷ்மரையோ தேர்வு செய்யலாம். (சிரித்து) சாபச் சொற்களால் செளபாலத்தை எரித்துவிடாதே . . .

(போகிறான். அமாத்யரும் தொடர்கிறார். அம்பை தனியாக நிற்கிளாள். அவளைச் சுற்றி நிழல்கள் மெல்ல அசைகின்றன. நிழல்களின் நடனம் அதிகரிக்கிறது. வேகம் கொள்கிறது. வெறி கொண்டு சுழன்றாடும் நிழல்கள். அம்பைக்கு தலை சுழல்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன. தடுமாறி விழுகிறாள். நிழல்கள் நிலைகொள்கின்றன.ஒளி குவிய நிழல்கள் கூடி இணைந்து நான்குமரங்கள்கொண்ட தேவைதை ஆகின்றன]

தேவதை: அம்பை!

அம்பை :யார் நீ ?

தேவதை: நான் உன்னை பிரியும் நேரம் வந்துவிட்டது . இத்தனை நாள் உன்னுடன் இருந்தவள்.

அம்பை: உன்னை நான் பார்த்திருக்கிறேன் நீ . . .

தேவதை: நான் கன்னிமையின் அதி தேவதை. ஐந்து வருடம் முன்பு நீ பருவமடைந்த நாளில் உன்னிடம் வந்தேன்.

அம்பை: (முகம் மலந்து) ஆம். நினைவிருக்கிறது.

தேவதை: உன் உடலிலும் உள்ளத்திலும் எத்தனை மொட்டுகளை மலர வைத்தேன் இல்லையா ? நீ பார்த்த மலர்களிளல்லாம் ஒளியை நிரப்பினேன். உன் தனிமையில் தொலைதூரத்து இசையானேன். நிலவு பொழிந்த இரவின் குளிரில் வினோதமான நறுமணமாக வந்து உன் ஆத்மாவிடம் உரையாடினேன்.

அம்பை: (குதூகலத்துடன்) ஆம். கனவும் இனிமையும் நிரம்பிய வருடங்கள்,

தேவதை: இது வாழ்வில் வசந்தம் அம்பை. பருவங்களிலேயே குறுகியது. வானவில் போல தோன்றும்போதே அழிந்து கொண்டிருப்பது. நான் உனக்களித்த இனிமைகள் உன் நினைவில் இறுதிக்கணம் வரை இருக்கும். முதிர்ந்து உதிரும் பருவத்திலும் என்னை நினைக்கும்போது உன் மனம் ஏங்கி கண்களில் நீர் துளிர்க்கும்.

அம்பை: நீ ஏன் என்னை விட்டுப் போக வேண்டும் ? ஏன் என்னுடன் இருக்கக் கூடாது ?

தேவதை: நான் விட்டுச் சென்றாக வேண்டும். அதுதான் இந்த நாடகத்தின் கதையின் விதி. பலர் வாழ்வில் நான் மெளனமாக அவர்களே அறியாமல் விடைபெற்று கொள்வேன். சிலருக்கு அப்படி ஆவதில்லை. ஓர் அதிர்ச்சி, ஓர் அவமானம், நெஞ்சில் எப்போதும் கரையாமல் கிடக்கும் ஒரு கடும் கசப்பு …அந்தஒரு கணத்தில் என்னுடனான உறவு அறுபட்டு விடுகிறது.

அம்பை: ஆம். நான் இப்போது உணர்வதுபோல அற்பமானவளாக என்னை என்றுமே உணர்ந்ததில்லை. என் உடலும் உயிரும் இத்தனை கனமாக என்றுமே இருந்ததில்லை.

தேவதை: இனி உன்னால் துள்ளி குதித்து ஓட முடியாது. இனிமேல் நீ கூவிச் சிரிக்க முடியாது. இனி உன்னால் எவரையுமே முழு மனதுடன் நம்ப முடியாது.

அம்பை: ஆம். சிறகுகள் உதிர்ந்துவிட்டன.

தேவதை: வருகிறேன் அம்பை. உன் மகிழ்ச்சிக்காக என் அழகுகள் இனிமைகள் அனைத்தையுமே அளித்திருக்கிறேன். உன் நினைவுகளில் என்றுமிருப்பேன்.

அம்பை: (கண்ணீருடன்) ஆம். உன் நினைவுகள் மட்டுமே எனக்குள் எஞ்சியிருக்கும்.

(தேவதை கலைந்து மறைகிறது. அம்பை குனிந்து அமர்ந்து விசும்புகிறாள். மறுபக்கம் இன்னொரு தேவதை மெல்ல உருக் கொள்கிறது. நான்கு கரங்கள். கனிகளினாலான மாலை அணிந்திருக்கிறது.)

தேவதை: அம்பை. அழாதே விழித்துக்கொள். உன் நாட்கள் இனிமேல்தான் துவங்குகின்றன.

அம்பை: (திடுக்கிட்டு) யார் ?

தேவதை: என்னை நீ அறியமாட்டாய். சற்று முன் உன்னிடம் விடைபெற்றாளே அவளுடைய தமக்கை நான். என்னை பெண்மையின் அதிதேவதை என்பார்கள். அவள் விடைபெற்ற கணமே நான் உன்னருகே வந்துவிட்டேன். இதுவும் இயற்கையின் நியதிதான்.

அம்பை: (பெருமூச்சுடன்) நியதி ! அதற்கு அடிபணிவதன்றி வேறு வழியில்லை.

தேவதை: சென்ற ஐந்து வருடங்களாக நீ ஒரு பொய்யான உலகில் வாழ்ந்தாய். என் தங்கைதான் பிரம்மன் இவ்வுலகுக்கு அனுப்பிய தேவதைகளிலேயே மிகப் பெரிய ஜாலக்காரி. அவளுடைய விளையாட்டுகளுக்கு எல்லையேயில்லை.உன் குழந்தை நாட்களில் உன் தந்தைக்கு காணிக்கை வந்த பாண்டிநாட்டு செம்பவள பளிங்கு வழியாக பார்த்து அக்காட்சியின் விசித்திரத்தில் நீ குதூகலித்ததுண்டல்லவா ?

அம்பை:ஆம்.ஒவ்வொரு காட்சியும் செம்பிழம்பாக எரிந்தும் குழைந்தும் ததும்பிக்கொண்டிருந்தது…

தேவதை: அதுபோன்ற ஒரு மாயமே நீ சென்ற ஐந்து வருடங்களாக கண்டவை அனைத்துமே…

அம்பை: அந்த அழகிய மலர்கள் ?

தேவதை: அவை ஒளிவிடுவது காயாகி கனியாகி விதைகளை உதிர்த்து நெற்றாக மாறுவதற்காகவே.அதை நீ காணவில்லை.

அம்பை[ ஆதுரத்துடன்] இசை ? அந்த இசை ?

தேவதை: கோடானுகோடி ஒலிகளினாலானது இப்பிரபஞ்சம் .ஒலிகள் உன் உணர்வுகளுடன் ஒத்திசைவுகொள்ளும் சில கணங்களை மட்டுமே நீ இசை என அறிகிறாய். ..

அம்பை [தளர்ந்து] உண்மை. இப்போது அது தெளிவாக தெரிகிறது

தேவதை: மிகத்துல்லியமாக சமன் செய்யப்பட்ட ஒன்று இப்பிரபஞ்சம். அழகு குரூரத்தால் . இனிமை கசப்பால் . நன்மை தீமையால். பகல் இரவால். தர்மம் அதர்மத்தால். வாழ்வு மரணத்தால்

அம்பை: மிகக் குரூரமாக . . .

தேவதை: (சிரித்து) துல்லியம் என்பது குரூரத்தாலேயே சாத்தியமாவது.

அம்பை: இந்த அற்பனை நான் ஆண்களில் முதல்வனாக எண்ணியதும் இந்த மனமயக்கத்தால்தான் போலும்.

தேவதை: நிச்சயமாக. முதற்காதலே மனித வாழவின் மிகப்பெரிய அசட்டுத்தனம். அதைப் பெறாதவர்கள் உண்மையான காதலின் அழுத்தத்தை ஒருபோதும் உணர்வதில்லை. பெற்று இழந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள். இனியவலியாக அந்நினைவு அவர்களிடம் தங்கிவிடும். வசந்தம் விட்டுச்சென்ற நறுமணம் போல.

அம்பை: ஆயினும் . . . எத்தகைய அற்பன். எத்தகைய மூடன். அந்தத் திரை கிழிபட்டு அவளைக் காணநேர்ந்த கணங்கள் . . . என் உடல் கூசுகிறது.

தேவதை: அந்தத் திரை மிக மிக விந்தையானது. அது நீ விரும்பாததை விரும்புவதாகச் சொன்னது. விரும்புவதை மறைத்தது.

அம்பை: விரும்புவதையா ?

தேவதை: ஆம். வீரத்தை. தன் புஜங்கள் மீது நம்பிக்கைக் கொண்ட ஆண்மகனை. நீ அவனை விரும்புகிறாய்.

அம்பை: யாரை ?

தேவதை: பீஷ்மரை.

அம்பை: (சீறி எழுந்து) சீ! நீயும் பசப்புக்காரிதானா ?

தேவதை: (யோசித்துப்பார்) தான் விரும்பியதை தயக்கமின்றி சென்று கைப்பற்றுபவனை பெண்கள் விரும்புவது இயற்கை.

அம்பை: ஒரு வேட்டைமிருகம் போல என்னை கைப்பற்றியவன்; இழுத்துச் சென்றவன் . . .

தேவதை: ஆம். அது உண்மை . அவன் உன்னை அவமதித்தான். உன் ஆத்மாவை அவன் பொருட்படுத்தவேயில்லை. ஆயினும் நீ அவனை விரும்புகிறாய். அவ்விருப்பத்தைக் கண்டு அஞ்சுகிறாய். அதை எண்ணி அருவருப்பும் கொள்கிறாய். ஆயினும் விரும்புகிறாய். விரும்பாமலிருக்க உன்னால் முடியவில்லை.

அம்பை: நான் அத்தனை இழிந்தவளா ? பிறவியிலேயே அடிமைத்தனம் கொண்டவளா ?

தேவதை: இல்லை. ஆனால் பெண். அவரை விரும்புவது உன் கருப்பை.

அம்பை: (கோபத்துடன்) இல்லை.

தேவதை: உனக்குத் தெரியும். கருப்பையின் தாபம் வேறு வகையானது. அது வலிமைக்காக ஏங்குகிறது. வலிமையை மட்டுமே அது பொருட்படுத்துகிறது. உடல் வலிமை, உள்ளத்தின் வலிமை, ஆத்மாவின் வலிமை.

அம்பை: என் கருப்பையை சுமப்பதுதான் ஆத்மாவின் கடமையா ?

தேவதை: இல்லை ஆத்மாவையும் கருப்பைதான் சுமக்கிறதா ? யாரறிவார் ? ஆத்மா கண்ணுக்குத் தெரியாத எஜமானன் ஒருவனின் வளர்ப்பு நாய். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

அம்பை: (மெல்ல தணிந்து) ஆனால் நான் தோற்க விரும்பவில்லை. என்னை நானே . . .

தேவதை: உண்மையில் இந்த ஆட்டத்தில் தோற்பது யார் என்று யாரும் கூற முடியாது. நீ அவரை உண்ணப் போகிறாய். அவரை வெறும் விதையாக மாற்றிவிடுகிறாய். அந்த விதை முளைத்து பேருருவம் கொள்கையில் இவர் உதிர்ந்து நெற்றாகி மறைவதைக் காண்பாய். அப்போது நீ அந்த வலிமையை உன் மடியில் கட்டி வைத்திருப்பவளாக இருப்பாய் . . .

அம்பை: இதே நாடகம்தான். மீண்டும் மீண்டும்.

தேவதை: ஆம் மீண்டும் மீண்டும். சலிப்பே இன்றி. ஓய்வேயின்றி. (சிரிக்கிறது)

அம்பை: நான் எப்படி பீஷ்மரிடம் திரும்ப முடியும், எந்த அடிப்படையில் ?

தேவதை: ஏனெனில் அவர் உன்னை விரும்புகிறார்.

அம்பை: அவரா ? அவரிடம் வெறுப்பல்லவா கொதித்தது ?

தேவதை: அன்பை வேறு எப்படி மறைக்க முடியும். ஆனால் கண்களுக்கு திரை போட மனிதனால் முடியாது.

அம்பை: நான் கவனிக்கவில்லை.

தேவதை: உன் மனம் கவனிக்கவில்லை. உன் ஆத்மா கவனித்தது. எந்தப் பெண்ணின் ஆத்மாவும் அதை தவறவிடாது.

அம்பை: ஆம். (வெட்கி முகம் மலர்கிறாள்) ‘

தேவதை: எழுந்துகொள். கண்களை துடை. நான் உன்னுடன் இருப்பேன்.

(தேவதை மறைகிறது. அம்பை எழுந்து புடவையை திருத்திக்கொண்டு வெளியே செல்கிறாள். வெளியே புரவிகள் கனைத்து சகட ஒலியுடன் ரதங்கள் கிளம்புகின்றன. அரங்கு மெல்ல ஒளியும் அசைவும் மாறி அஸ்தினபுரியின் அரண்மனையாகிறது.)

பீஷ்மர்: (உள்ளிருந்து வந்தபடியே) அமாத்யரே.

அமாத்யர்: அடியேன்.

பீஷ்மர்: காசிநாட்டு இளவரசி திரும்பி வருவதாகச் சொன்னார்கள். அவளை நேராக இங்கு இட்டுவரச் சொல்லுங்கள்.

அமாத்யர்: உத்தரவு (செல்கிறார்)

பீஷ்மர்: நாடகத்தின் மறுபக்கம் இனிமேல்தான் போலும்.

(வெளியே குரல்: ‘காசி நாட்டு இளவரசி அம்பாதேவி வருகை ‘)

பீஷ்மர்: புயல் வருவது போல! ஆம் அபடித்தான் . அவள் இயல்பு அது

(ஆனால் அம்பை மென்மையாக வெட்கி உள்ளே வருகிறாள்)

பீஷ்மர்: இளவரசிக்கு வணக்கம்.

அம்பை: (மெல்லிய குரலில்) தங்களுக்கு என் வணக்கம்.

பீஷ்மர்: தாங்கள் போன விஷயம் ?

அம்பை: அது பூர்வ ஜென்மம் போல. முடிந்த கதை.

பீஷ்மர்: (வியப்புடன்) சால்வனிடம் நான் பேசி . . .

அம்பை: வேண்டாம்.

பீஷ்மர்: சால்வன் அஞ்சியிருக்கக் கூடும்.

அம்பை: அந்தப் பேடியின் பெயரை மறுமுறை நான் கேட்க விரும்பவில்லை.

பீஷ்மர்: இளவரசி ! (மேலே பேச முடியாமல்) ஆனால் (ஆனால் பீஷ்மரின் முகம் மலர்ந்துவிடுகிறது. அதை அம்பை கவனிக்கிறாள்.)

அம்பை: நான் தங்களிடம் வந்திருக்கிறேன்.

பீஷ்மர்: தங்களை முறைப்படி சால்வனிடம் அனுப்பியமை இந்த நாடறிந்தது. இப்போது தாங்கள் . . . மேலும் அம்பிகையை பட்டமகிஷியாக அபிஷேகமும் செய்தாகிவிட்டது . . .

அம்பை: நான் வந்தது தங்களிடம்

பீஷ்மர்: தேவி!

அம்பை: தங்கள் ஆத்மாவுக்கும் என் ஆத்மாவுக்கும் நன்கறிந்த விஷயம் எதுவோ அதைப்பேச நான் வந்திருக்கிறேன்.

பீஷ்மர்: புரியவில்லை

அம்பை: உங்கள் ஆத்மாவுக்கு புரியும்

பீஷ்மர்:உங்கள் குறிப்பு புரிகிறது. ஆனால் நான் எப்படி உங்களை ?

அம்பை: நீங்கள் என்னை கவர்ந்து வந்தவர். சாத்திர முறைப்படி நீங்கள் என் கணவர்.

பீஷ்மர்: தேவி . . . நான் என் தாய்க்கும் தந்தைக்கும் அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதனை நான் மீற முடியாது.

அம்பை: என்றென்றும் பிரம்மசாரியாக இல்லையா ?

பீஷ்மர்: ஆம். அது என் சபதம்

அம்பை: எதற்கு ? ‘

பீஷ்மர்: அது விதி

அம்பை: விதியல்ல, அது ராஜதந்திரம். மன்னர் சந்தனுவின் காலத்தில் இந்த இந்திரப் பிரஸ்தம் ஒரு சிற்றூர்தான். இதைச் சுற்றி காசியும் அங்கமும் பாஞ்சாலமும் பெரும் வலிமையுடனிருந்தன. படைபலத்தையும் உறவு பலத்தையும் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு சந்தனு மகாராஜா கங்கர் குல இளவரசி கங்கா தேவியை மணந்து உங்களைப் பெற்றார். பின்பு பாஞ்சாலத்தின் வலிமையைக் கண்டபோது படகுப்பலம் மிக்க பரதவர் குலத்தின் இளவரசி சத்தியவதியுடன் மண உறவு கொள்ள அவர் விரும்பினார். பரதவர் குல மன்னன் உங்களைக் கண்டு அஞ்சினான். ஆகவே சத்யவதி பட்டமகிஷியாக வேண்டும். என்றும் அவள் பெறும் பிள்ளைகள் மன்னர்களாக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான். நிபந்தனையை மீற முடியாது. ஆனால் பரதவர் குலத்தின் படகுப்படை அஸ்தினபுரிக்கு தவிர்க்க முடியாத தேவை. மன்னருக்கு வேறுவழி இருக்கவில்லை . . .

பீஷ்மர்: இது நானே எடுத்த விரதம்.

அம்பை: ஆம். இல்லையேல் சந்தனு மன்னர் உங்களை தவிர்த்திருக்கக்கூடும்.

பீஷ்மர்: (ஏளனமாக சிரித்து) என்னால் மன்னனாக முடியாதென்கிறாயா ?

அம்பை: நிச்சயமாக ஆக முடியும். ஆனால் அஸ்தினபுரியின் மக்கள் உங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். உங்களுக்கும் தம்பியருக்கும் போர் நடந்திருக்கும். அதில் பாரத வர்ஷத்து மன்னர்கள் பங்கு கொண்டிருப்பார்கள். போரும் அழிவும்தான் எஞ்சும். ஆனால் இன்று அஸ்தினபுரமே உங்கள் காலடியில் கிடக்கிறது. பாரதவர்ஷமே உங்களை மகாவிரதர் என்று போற்றுகிறது. . .

பீஷ்மர்: நான் என்றுமே போரைத் தவிர்ப்பவன்.

அம்பை: ஆம்; ஏனெனில் நீங்கள் ஆயுதங்களை அறிந்தவர்.

பீஷ்மர்: என்ன காரணத்துக்காக என்றாலும் நான் எடுத்த விரதம் எனக்கு முக்கியமானது. என் தந்தை மீதும் தாயின் குலம் மீதும் எடுத்த சத்தியம் அது. அதை நான் மீறவே முடியாது.

அம்பை: ஏன் ? இன்று அந்த விரதத்திற்கான தேவை எதுவுமே இல்லையே.

பீஷ்மர்: நான் சொல்லிவிட்டேன். அது என் விரதம்.

அம்பை: மகாவிரதர் என்ற பட்டத்தை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும் என்பதற்காகவா. . .

பீஷ்மர்: நான் அரசுப்பட்டத்தையே பெரிதாக எண்ணவில்லை.

அம்பை: ஏனெனில் அது உங்களுக்கு எளிது. ஆகவே அதில் அறைகூவல் ஏதுமில்லை. மகாவிரதர் பட்டம் உங்களை ரிஷியாக்குகிறது. தலைமுறைகள் தோறும் நீளும் பெரும் புராணக் கதாபாத்திரமாக்குகிறது . . .

பிஷ்மர்: (சிரித்து) பெண்ணே நீ இப்போது செய்து கொண்டிருப்பதென்ன என்று உனக்கே தெளிவிருக்கிறதா ? நீ அன்புக்காக வாதிடுகிறாய். உலகிலேயே இதற்குச் சமானமான மூடத்தனம் ஏதுமில்லை.

அம்பை: (சீற்றத்துடன்) நான் கெஞ்ச வேண்டுமா ?

பீஷ்மர்: அது பெண்களின் இயல்பு. ஆனால் அது உன்னால் முடியாது.

அம்பை: நான் ஏன் கெஞ்ச வேண்டும் ? நீங்கள் சொல்வது சாத்திரம் என்றால் அதன் உள்ளுறை என்ன என்று நான் கூறுகிறேன். அதில் என்ன பிழை ?

பீஷ்மர்: உன்னால் இதிலுள்ள பிழையை உணரவே முடியாது. (கடுமையாக) விவாதிக்கும் தோறும் நீ என்னிலிருந்து விலகி விலகிச் செல்கிறாய் . . .

அம்பை: (சொல்லிழந்து) நான் . . . நான் . . . (குரல் தணித்து) நான் தங்களிடம் . . . தங்கள்மீது . . .

பீஷ்மர்: (கடுமை மேலும் அதிகரித்து) உன் எண்ணம் எனக்குப் புரிகிறது. அது நடவாது.

அம்பை: ஏன் ? (அவள் முகம் உணர்ச்சி மிகுதியால் நெளிகிறது)

பீஷ்மர்: ஏனெனில் என் விரதம் . . .

அம்பை: (ஆக்ரோஷக் கூக்குரலாக) நிறுத்துங்கள். விரதமாம் . . . (மூச்சிளைக்க, தவித்து) வெறும் அகங்காரம். பிறருக்காக போடும் வேடம். சூதர்களுக்காக வாழும் வேடதாரி நீங்கள்.

பீஷ்மர்: நாம் இனிமேல் பேச ஏதுமில்லை என்று நினைக்கிறேன். (திரும்புகிறார்)

அம்பை: (சட்டென்று உடைந்து) தேவ விரதரே . . .

பீஷ்மர்: [அம்புபட்டவர் போல நின்று) என்ன ?

அம்பை: (தழுதழுத்த குரலில்) என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை இழந்தால் நான் அனைத்தையுமே இழந்தவளாவேன். (மண்டியிட்டு முகம் பொத்தி) நான் உங்கள் அடிமை. நான் சொன்ன அத்தனை சொற்களையும் மறந்து விடுங்கள். என் தாபத்தால் உளறி விட்டேன் . . . நான் உங்கள் தாசி. உங்கள் முன் . . .

பிஷ்மர்: (சிலை போல நின்று) நான் என் சொற்களை மீறுவதில்லை.

(அம்பை துடித்து தலைநிமிர்கிறாள். கண்ணீர் வழியும் கண்களுடன் அவரையே நம்ப முடியாமல் வெறித்துப் பார்க்கிறாள். முகத்தை மூடியிருந்த கரம் கீழிறங்கி வணங்குவது போல, பிரார்த்திப்பது போல மார்பில் இருக்கிறது.)

பீஷ்மர்: நீ போகலாம். உன்னை இனிமேல் நான் காண விரும்பவில்லை

[பிஷ்மருக்குப் பின்னால் இருண்ட மூலையில் அம்புப் படுக்கை மீது அவரது நிழல் தவிக்கிறது. எழ முயல்கிறது. அம்பை கண்களை பெருமூச்சுடன் துடைக்கிறாள் நிழல் தன் உடல் முழுக்க அம்புகளுடன் எழுந்து பீஷ்மரை நெருங்குகிறது. பதைபதைப்புமிக்க உடலசைவுகளுடன் பீஷ்மர் பின் நின்று பேச முற்படுகிறது.]

நிழல்: அவளுடன் பேசு. அவளை அழை. இது தான் தருணம். சில கணங்கள்தான். இனி மீண்டும் இத்தருணம் வரப்போவதில்லை. (பீஷ்மர் அதை கேட்கவில்லை. சிலையாக நிற்கிறார்.)

நிழல்: சொல். ஒரே வார்த்தைகள். சொல்லி விடு. இனி ஒரே ஒரு கணம்தான் . . . (பீஷ்மர் கேட்கவில்லை.)

நிழல் : (கோபத்துடன்) முட்டாள். இவள் நெருப்பு போன்றவள். உன்னை சுட்டெரித்து விடுவாள். அவமதிக்கப்பட்ட பிரியம் கடும் விஷயமாக மாறிவிடும் என்றறியாதவனா நீ ?

(பீஷ்மர் மெல்ல, தர்ம சங்கடமாக அசைகிறார்.)

நிழல்: சொல். சொல்லி விடு. வேண்டாம் வேறு எதையும் சொல்ல வேண்டாம். நில் அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்.

(அம்பை எழுந்து முந்தானையை சரி செய்து தலைமயிரை, ஒதுக்குகிறாள்.)

நிழல்: (பரிதவித்து) சொல். தேவவிரதா தயங்காதே. இந்த கணநேரத் தயக்கத்திற்காக உன் வாழ்நாள் முழுக்க தனிமையில் கண்ணீர் விடுவாய்

அம்பை: (அடைத்த குரலில்) நான் வருகிறேன். இனி தங்களைப் பார்க்க மாட்டேன்.

பீஷ்மர்: உனக்கு மங்கலம் நிறைவதாக!

அம்பை: (கடும் சீற்றத்துடன் தலை தூக்கி) என்ன ?

பீஷ்மர்: உனக்கு அனைத்து நலன்களும் நிகழட்டும்.

அம்பை: (கோபத்தில், ஆங்காரத்தில் முகம் கொந்தளிக்க) தங்கள் ஆசிக்கு நன்றி.

(அம்பை திரும்பிச் செல்கிறாள். நிழல் தலித்து சுற்றி வருகிறது.)

நிழல்: அவள் போகிறாள். அழை அழை .அம்பை என்று மட்டும் கூறு. (உரக்க) அம்பை நில்!

அம்பை: (நின்று திரும்பி) அழைத்தீர்களா ?

பீஷ்மர்: இல்லையே.

அம்பை: நான் ஒன்று சொல்லலாமா ? அதைச் சொல்லாமல் சென்றால் அச்சொற்கள் நெருப்பாகி என்னை எரித்து விடும். நீங்கள் என்னை மண்டியிட வைத்தீர்கள். என் ஆத்மாவை நெளியும் புழுவாக உணரச் செய்தீர்கள். அந்தக் கணம் உங்கள் அகங்காரம் தருக்கி நிமிர்ந்தது. (மிக அமைதியாக) அந்தக் கீழ்மைக்காக உங்களை நான் வெறுக்கிறேன். சால்வனைவிட உங்களை வெறுக்கிறேன். நானறிந்த மானுடர்களிலேயே கீழ்மகன் என்று உங்களை எண்ணுகிறேன். நீங்கள் . . .

பீஷ்மர்: (உக்கிரமாக சினம் கொண்டு) நிறுத்து! ஆம் நான் உன்னை ஏற்கவில்லை. ஏனெனில் நீ பெண்ணே அல்ல. எந்தப் பெண்ணும் தன் காதலை இப்படி அறிக்கையிடமாட்டாள். அதற்காக வாதிட மாட்டாள். நீ பெண்ணல்ல ஆண். போ, போய் கவசமும் கச்சையும் சல்லடமும் அணிந்து கொள். (தணிந்து, குரலிலும் கண்களிலும் மட்டும் குரோதமும் குரூரமும் எஞ்சியிருக்க) ஒன்று தெரிந்து கொள், பேடியான ஆணை பெண்கள் வெறுப்பது போலவே ஆண் தன்மை கொண்ட பெண்ணை ஆண்களும் வெறுக்கிறார்கள்.

(அம்பை ஒரு கணம் உறைந்து நின்று பிறகு வெளியே விரைகிறாள். பீஷ்மர் சட்டென்று தளர்ந்து நின்று, அவள் போன வழியே ஒரு அடி எடுத்து வைத்து, தயங்கி பின்னகர்கிறார். அவரது நிழல் சென்று அடங்குகிறது. வெளியே ஒரு வீரன் கூறும் வாழ்த்தொலி. பீஷ்மர் ‘உள்ளே வா ‘ என்கிறான்.]

வீரன்: (வந்து வணங்கி) பிரபு நான் தெற்குக் கோட்டைக் காவலன்.

பீஷ்மர்: சொல்.

வீரன்: காசி நாட்டு இளவரசி இப்போதுதான் சென்றார்கள். ரதம் எங்கும் நிற்காது புண்பட்ட பன்றி போல சென்றது.

வீரன்: அவர்களுடைய ரதம் ஒரு உப மண்டபத்தைத் தாண்டியபோது அங்கே தூங்கிக் கொண்டிருந்தஒரு பரதேசித்துறவி எழுந்து நின்று கைகளை நான் நோக்கி விரித்து அபசகுனமாக சில சொற்களைக் கூறியதாக சொல்கிறார்கள்.அவனை நம் வீரர்கள் உடனே கைதுசெய்துவிட்டார்கள்…

பீஷ்மர்: என்ன சொன்னார் அவர் ?

வீரன்: தங்களைப்பற்றி..

பீஷ்மர்: உம்

வீரன்: தங்களுக்கு இறுதி நாள் குறிக்கப்பட்டு விட்டதாக.

பீஷ்மர்: பிறகு ?

வீரன்: (தயங்கி) பிறகு என்னவோ பித்துச் சொற்கள் . . . அதை நானும் கேட்டேன்.

பீஷ்மர்: என்ன ?

வீரன்: பேடி என்பவன் வாழ்க்கைக்கு ஒரு பார்வையாளன் மட்டுமே என்றான். கடவுள்களும் பிசாசுக்களும் பேடிகள் என்றான். பிறகு மிக அபத்தமாக ஒரு வரி . . .

பீஷ்மர்: சொல்.

வீரன்: தன் ஆடிப் பிம்பத்தாலேயே ஒருவன் கொல்லப்பட முடியும் என்றான்.

பீஷ்மர்: அப்படியா சொன்னான். மீண்டும் சொல் . . .

வீரன்: தன் ஆடிப் பிம்பத்தாலேயே ஒருவன் கொல்லப்பட முடியும்.

பீஷ்மர்: அவர் எங்கே ?

வீரன்: இழுத்து வருகிறேன்.

பீஷ்மர்: வேண்டாம். அவரை உரிய மரியாதைகளுடன் நமது விருந்தினர் இல்லத்துக்கு இட்டுச் செல். மாலை விசித்திர வீரியனின் சபையில் அவர் எழுந்தருளட்டும். நம் நாட்டுக்கு வரும் ரிஷிகளுக்கு அளிக்கப்படும் எல்லா உபச்சாரங்களும் மரியாதைகளும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். விசித்திர வீரியன் அவருக்கு பாதபூஜை செய்து அவர் ஆசியை பெற வேண்டும்.

வீரன்: (குழப்பதுடன்) உத்தரவு.

பீஷ்மர்: நீ போகலாம்.

(வீரன் தலை வணங்கி திரும்புகிறான்)

பீஷ்மர்: நில். (குரல் தழைய) அவரை நான் சந்திக்க விரும்பவில்லை.

வீரன்: அப்படியே

(வீரன் செல்கிறான் பீஷ்மர் கனத்த நடையுடன் திரும்பி மெல்ல அரங்கில் உலவி உறைந்து நிற்கிறார். அவரது அவர் தோளைத் தொடுகிறது.)

நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ.

பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்)

நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன.

(பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் முழங்குகின்றன.]

பீஷ்மர்: கனவுகள்! அல்லது பிரமைகளா ? ஒரு கணத்தில் ஒரு முழு வாழ்வே நிகழ்ந்து முடிந்துவிடுகிறது.(பெருமூச்சுடன்) அப்படியென்றால் மொத்த வாழ்வே ஒரு கணநேரப் பிரமைதானா ? யாருடைய பிரமை ? முடிவற்ற காலப்பிரவாகம் . . . அதுவும் ஒரு கணம்தான் ? தேங்கி உறையும்போது காலத்தின் பெயர் என்ன ? என் மனத்தில் எதுவுமில்லை இந்த அர்த்தமற்ற சொற்கள் தவிர. எண்ணங்கள் எல்லைமீறும்போது மொழி இல்லாமலாகிறது. மொழியற்ற வெளியில் நாமறிந்த எதுவுமே இல்லை…

(நிழல்கள் மிக மெல்ல அசைந்தாடுகின்றன.]

பீஷ்மர் : ஆனால் ஒரு முகம் . . . ஒரு சொல் . . . கரையாமல் எஞ்சுகிறது . . .

நிழல்கள்: [ கிசுகிசுப்பாக ] அம்பை . . . அம்பை . . .

பீஷ்மர்: கோடானுகோடிமுறை நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டாயிற்று. ஆனால் உதடுகள் அச்சொல்லை மறுக்கின்றன.

நிழல்கள்: அம்பை . . . அம்பை . . .

பீஷ்மர்: இது என்ன நாள் ? விடியப் போகிறது போலும் நட்சத்திரங்கள் இடம் மாறிவிட்டனர். ஆனால் நாள் என்றால் என்ன பொருள் ? இந்தப் படுக்கையில் . . .

(ஒலிகள் மாறுபடுகின்றன. மணியோசை முழங்க ஒரு புரவிவீரன் செந்நிறக் கொடி பறக்க அரங்கை மெல்ல கடந்து செல்கின்றான். பறவைகளின் ஒலிகள். கோழி கூவும் ஒலி. புலர்காலைச் சங்கொலிகள். முரசங்களின் ஒலிகள். பின்பு மஞ்சள் நிற கொடியுடன் ஒரு குதிரைவீரன் அரங்கை கடந்து செல்கிறன். போர் வீரர்கள் போடும் பலவிதமாக ஒலிகள் எழுகின்றன. ஆயுதங்கள் தயாராகின்றன. குதிரைகள் கனைத்தும் யானைகள் பிளிறியும் ஒலியெழுப்புகின்றன. குதிரைவீரன் ஒருவன் வெண்கொடியுடன் செல்கிறான். போர்முரசு தம் தம் என ஒலிக்கிறது. சங்குகள் இரைகின்றன. கொம்புகள் பிளிற போர்க்களப் பேரோசை எழுந்து உச்சத்தை எட்டி அரங்கை நிரப்புகிறது.]

பீஷ்மர்:அத்தனை ஒலிகளும் இணைந்து ஒற்றைப்பேரொலியாக .. ஒரே குரல் என வீரிடுகின்றன… எதையோகூவிச்சொல்கின்றன… எதை ? எதை ?

(ஒலிகள் குவிந்து ஒரே ஒலியாக மாறி, ஆனால் இனம் தெரியாமல், கூச்சல் போல ஒலிக்கின்றன)

பீஷ்மர்: எங்கேயோ கேட்ட குரல் . . . நன்கு பழக்கமான வார்த்தை

(ஒலி உருவம் பெறுகிறது. அந்த ஒலிக்கு நிதானமாக நிழல்கள் நடனமிடுகின்றன)

குரல்: ரத்- தம்! ரத் – தம்! ரத் – தம்! [ நிழல்கள் வெறிநடனமாடுகின்றன. நடனம் லேகம் பெற்று ஒரு தருணத்தில் பின்னணிகூடக் குரல்களை வெல்கிறது ] ரத்- தம்! ரத் – தம்! (மெளன மந்திரமாக) ரத் – தம்! ரத் – தம்!

பீஷ்மர்: நிழல்களின் குரல் (பெருமூச்சுடன்) கேட்ட குரல். கூரிய அம்புகளின் நுனிகளில் இச்சொல் ஒளிர்வதை கண்டதுண்டு. ராஜதந்திர உரைகளின் மென்மையில் இது மின்னுவதைக் கண்டதுண்டு. வேள்விப் புகையிலும், களஞ்சியத்தின் தானியங்களின் ஆவியிலும் இச்சொல்லே மணக்கிறது . . . பொன்னில், பெண் விழியில் . . . எத்தனை பயங்கரமான சொல்!

நிழல்கள்: (மெளன மந்திரமாக) ரத் – தம்! ரத் – தம்!

பீஷ்மர்: சமாதான காலங்களில்கூட கொல்லரின் உலைகள் ஓய்வதில்லை. துருத்திகள் சீற சம்மட்டிகள் அறைபட இரும்பு கூர்மை கொண்டபடியே இருக்கிறது. மண்ணின் ஆழத்தில் கொதிக்கும் எரிகுழம்பு அது. ரத்தத்தில் மூழ்கிச் சிவக்கும்போது அதன் பயணம் நிறைவு பெறுகிறது போலும். உலைச்சுடரின் செஞ்சீறலை இப்போது நினைவுறுகிறேன். எத்தனை குரோதம்! எத்தனை வேகம்! யாருடைய குரோதம் அது ? யார் மீது ?

(நிழல் ஒன்று பீஷ்மரின் அருகே நெருங்கி குனிந்து நடனமிடுகிறது)

நிழல்: நான்! நான்! நான்!

பீஷ்மர்: என்ன சொல்கிறாய் ?

நிழல்: நான் உயிருடனிருந்தபோதும் சரி நிழலாக மாறிய பிறகும் சரி இந்தச் சொல்லை என் அகம் ஓயாது சொன்னபடியே இருந்தது.

பீஷ்மர்: அது மனதின் இயல்பு. ஆனால் இதோ கூத்தாடும் மற்ற நிழல்கள் . .

.

நிழல்: அத்தனை பேரும் ஒரே சொல்லையே சொல்கிறோம். நான்! நான்! நான்! (சிரித்து) ஆனால் அவை இணையும்போது ரத்தம் ரத்தம் என்று ஒலிக்கின்றன.

பீஷ்மர்: உன்னால் எப்படி என்னுடன் உரையாட முடிகிறது ? நானும் நிழலாகி விட்டேனா ?

நிழல்: இன்னமும் இல்லை. (உரக்கச் சிரித்து) ஆகவேதான் உனக்கு இத்தனை கேள்விகள்.

(அலறியபடி ஒரு நிழல் ஓடிவருகிறது)

பீஷ்மர்: யார் அது ?

ஓடிவந்த நிழல்: நான் என் உடலில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன். இதோ சற்றுமுன்புதான். என் உடல் அங்கே மண்ணை அணைத்து குப்புறக் கிடக்கிறது.

முதல் நிழல்: ஏன் கூவுகிறாய். நிழலாட்டத்தில் எந்த நிழலுக்கும் தனியடையாளம் இல்லை தெரிந்துகொள்!

ஓடிவந்த நிழல்: நண்பர்களே, உடலின்மையின் எடை என்னை அழுத்துகிறது. என் ஆசைகள் கோபங்கள் குரோதங்கள்பற்றுகள் அனைத்தும் அங்கே விழுந்து கிடக்கின்றன. இனி எனக்கு என்ன பொருள் இருக்கிறது ?

இன்னொரு நிழல்: நீ எஞ்சுவதே ஒரு பொருள் இருப்பதற்கான ஆதாரமல்லவா நண்பனே ?

ஓடிவந்த நிழல்: ஆம். (குழம்பி) நான் என்று எப்போதுமே என்னை உணர்ந்த ஒரு பிரக்ஞை . . . அதுதான் இப்போது மிஞ்சியிருக்கிறது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி . . .

முதல் நிழல் : அது எப்போதுமே வேடிக்கைதான் பார்த்தது. அதற்கு வேறெதுவுமே தெரியாது.

ஓடிவந்த நிழல்: ஏன், நண்பர்களே ஏன் ?

முதல் நிழல்: இன்னும் சில கணங்கள் தான் பிறகு நீ கேள்விகள் கேட்க மாட்டாய். நிழல் என்றால் என்ன என்று எண்ணுகிறாய். ? இந்த அரங்கில் சிறு பகுதியிலேயே ஒளி விழுகிறது. இந்த நாடகம் நடக்கிறது. மீதியெல்லாம் நிழல். முடிவேயில்லாத நிழல்….

(பின்னணியில் பேரொலி. வாழ்த்துக்கள். அலறல்கள். . .)

பீஷ்மர்: என்ன ? என்ன அது ?

நிழல்: ஒரு மகாரதன் வீழ்ந்திருப்பான். அவன் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவான். அவன் சடலம் மட்டும் உங்கள் மொழியில் அழுகாமல் மிதந்து கிடக்கும்.

(கலகலவென்ற ஒலியுடன் பறவைகள் சில கடந்து செல்கின்றன)

நிழல்: (அண்ணாந்து) அவை என்ன தெரிகிறதா ?

பீஷ்மர்: பறவைகள் – ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை.

நிழல்: நீங்கள் தொடுக்கும் அம்புகளின் ஆத்மாக்கள் அவை. காலகாலமாக அவை கட்டுண்டு கிடந்தன. ஒற்றை இலக்குக்காக தவம் கிடந்தன. இலக்கு என்ற பெரும் சுமையில் அவற்றின் சிறகுகள் நசுங்கின. இலக்கை எட்டியவை எட்டாதவை அனைத்துமே இப்போது விடுதலை பெற்றுவிட்டன. இலக்கின்றிப் பறத்தலின் இன்பத்தில் அவை திளைக்கின்றன.

பீஷ்மர்: ஆமாம். இலக்கின்றி . . .

நிழல்: என்ன சொல்ல வருகிறாய் ?

பீஷ்மர்: ஒன்றுமில்லை.

(சிவப்புக் கொடிபறக்க ஒரு குதிரைவீரன் கடந்து செல்கிறான். நகரா முழங்குகிறது. கொம்புகள் ஆர்க்கின்றன.)

பீஷ்மர்: இன்று முடிவது எத்தனை நாளின் போர் ?

நிழல்: உனக்கென்ன நாளும் கணமும் ? நீ மரணத்தை தொட்டாயிற்று.

(போர் ஓயும் ஒலிகள். ஒரு குதிரை வீரன் கரிய கொடியுடன் செல்கிறான்.)

பீஷ்மர்: இரவு செல்கிறது. காலத்தின் கரியகடலுக்கு ஒரு சிற்றோடை போல

நிழல்: நிழல்களின் உலகு!

(பெண்குரல் ஒன்று வலியுடன் முனகுகிறது)

பீஷ்மர்: யார், யாரது ?

நிழல்: (நகைத்து) கேட்டதில்லையா இந்த ஒலியை ? தாலாட்டை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள் இல்லையா ?

பீஷ்மர்: யார் ?

நிழல்: பிரித்வி. உன்னை தாங்குவதனால் தரித்ரி. பூமாதேவி . . . (வலிமிக்க முனகல்)

பீஷ்மர்: ஏன் ?

நிழல்: இக்களத்தில் இலக்கு தவறிய எத்தனை லட்சம் அம்புகள் அவள் உடலில் தைத்தன என்று யோசித்துப்பார் . ..

.

பீஷ்மர்: உண்மை.அதை நான் எண்ணியதேயில்லை

நிழல்: பாண்டவர்களும் கெளரவர்களும் இப்போது போரிட்டுக் கொண்டிருப்பது அவளுடன்தான். பெற்று முலையூட்டி தென்றலாய் தழுவி நறுமணங்களால் தாலாட்டி வளர்த்த பூமியுடன். ஆண்கள் விண்ணையே பார்க்கிறார்கள். மண்ணைப்பார்ப்பவர்கள் பெண்கள் மட்டும்தான்.

(அரங்கின் ஒலிகள் மாறுபடுகின்றன. இரவுக்குரிய ஒலிகள். கழுதைப்புலிகளும் நாய் நரிகளும் எழுப்பும் ஒலிகள். நிழல்கள் இருளில் கரைகின்றன.)

பீஷ்மர்: விண்மீன்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. மின்னும் கோடானு கோடி விழிகள். வானம் இன்று தெளிவு போலும். வானம் தெளிவுற தெளிவுற அவை வந்தபடியே உள்ளன. (சற்று நேர இடைவெளிக்குபின்) வானமே ஒற்றைவிண்மீனின் ஒளிபரப்பாக மாறக்கூடிய பூரணத்தெளிவு என ஒன்று உண்டா என்ன ?

(காலடிகள்)

பீஷ்மர்: அஞ்சலி செலுத்த வருகிறார்கள் போலும்.

(இரவின் ஒலிகளை மீறி ஒரு தொலைதூரக் கதறல் எழுகிறது. பெண் குரல். இழந்துவிட்ட மகனுக்காக அது மனம் சிதறிக் கூவி அரற்றுகிறது.)

பீஷ்மர்: கெளரவர்களும் பாண்டவர்களும் சேர்ந்து போர் தொடுத்தது இந்த அன்னையரிடமும் தான்.

நிழல் :மண்ணை மட்டுமே பார்க்கும் பேதைகள்; இல்லையா ?

(கர்ணன் அரங்கில் நுழைகிறான்)

கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன்.

பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக.

கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை.

பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும்.

கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது.

பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை.

கர்ணன்: பிதாமகரே.

பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . .

கர்ணன்: பிதாமகரே நான் இங்கு வந்தது தங்களை வணங்க. தங்கள் ஆசி எனக்கு இல்லை என நான் நன்கு அறிவேன். தேரோட்டியின் மகன் அரியணையில் அமர்ந்ததை நீங்கள் ஏற்கவேயில்லை. உங்கள் ஏளனத்தையும் வெஞ்சொற்களையும் ஏற்றுத்தான் இந்நாள் வரை வாழ்ந்திருக்கிறேன். ஆயினும் உங்களை வந்து வணங்கவேண்டும் என்று என் மனம் சொன்னது. ஏனெனில் . . .

பீஷ்மர்: வணங்கி விட்டாயல்லவா ? நீ போகலாம்.

கர்ணன்: பிதாமகரே, இதைச் சொல்லாமல் இருந்தால் என்னால் எஞ்சிய வாழ்நாளை பெருஞ்சுமையுடன்தான் கழிக்க முடியும் . . . நான் உங்களை என்றுமே என் தந்தையின் இடத்தில்தான் வைத்திருந்தேன். உங்கள் வசைகள் எனக்குள் உள்ளூர ஆனந்தத்தை அளித்தன. அவை என்மீது படியும் உங்கள் கவனத்தின் தடயங்கள் என்று எண்ணுவேன். இந்தப் பிரபஞ்சத்தில் எனக்கென யாரும் இல்லை என்று உணரும் தருணங்கள் உங்கள் வசைச் சொற்களுக்காக அடங்காத தாகத்துடன் நான் அங்க நாட்டிலிருந்து வருவதுண்டு.

பீஷ்மர்: உன் மீதிருந்து நீங்காத பிரியம் கொண்ட இன்னொருவர் இவ்வுலகில் உண்டு கர்ணா. அதை நீ அறிவாயா ?

கர்ணன்: [பீஷ்மரின் குரல் மாறுபாட்டை உணர்ந்து] பிதாமகரே நீங்கள்….

பீஷ்மர்: குந்தி உன் தாய் என உனக்குத்தெரியுமா ?

கர்ணன்:தெரியும். ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் .. பிதமகரே உங்களுக்கு எப்போது இது தெரியும் ?

பீஷ்மர்: தேரோட்டி மகனாக நீ வந்து நின்ற கணமே எனக்குத் தெரியும். நீ, உன்முகம். உன் தந்தையையும் நான் அறிவேன்.

கர்ணன்: யார் அது ?

பீஷ்மர்: அதை நீ அறியவே போவதில்லை. ஐதீகங்களையும் நீ சூரியனின் புதல்வன்.

கர்ணன்: பிதாமகரே . . . நெறிமீறிப் பிறந்தவன் என்பதனாலா என்னை வெறுத்தீர்கள் . . .

பீஷ்மர்: (கோபத்துடன்) நிறுத்து.

கர்ணன்: (பதைப்புடன்) பிதமகரே.

பீஷ்மர்: யார் வெறுத்தது உன்னை ? (குரல் உடைய) கர்ணா என் வாழ்நாள் முழுக்க கனிவையும் காதலையும் வெறுப்பின் வடிவில் மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது எனக்கு . . . நான் சபிக்கப்பட்டவன். பெரும் சாபத்துடன் இவ்வுலகுக்கு வந்தவன். இந்தக் கரங்களில் ஒரு குழந்தையை நான் இதுவரை ஏந்தியதில்லை. (எழ முயன்று) அருகே வா (கை நீட்டுகிறார்)

கர்ணன்: பிதாமகரே என்னை மன்னியுங்கள் நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

பீஷ்மர்: (தொடமல்) இல்லையேல் வேண்டாம். இந்தக் கரங்களால் உன்னைத் தொட வேண்டாம்.

கர்ணன்: உங்கள் ஆசி கிடைத்தால் இப்பூமியில் நான் இழந்தவை முழுக்க சமன் பெற்று விடும் . . .

பீஷ்மர்: உன் தலைமீது கரம் வைத்து நான் என்ன சொல்வது ? நீண்ட ஆயுளா ? அரச போகமா ? புகழா ? – கர்ணா உனக்கென காத்திருப்பது என்ன ? நீ தலைமுறை நினைவுகளில் ஓயாத குற்ற உணர்வு மட்டும்தானா ? குழந்தை, உன்னைக் காணும்போதெல்லாம் என் அடிவயிறு பதைபதைத்தது எதனால் என்று நீ இப்போதாவது அறிகிறாயா ? உன்னைப் பார்க்கையில் என்மீதும் நான் சுமக்கும் இந்த வம்சபரம்பரை அடையாளங்கள்மீதும் கடும் துவேஷம் என்னில் நுரைத்தெழும். அதை உன்மீதே உமிழத்தான் நான் பழகியிருக்கிறேன். பின்பு ஆயுதசாலைக்குத் திரும்பி என் நெஞ்சின் மையமெனத் தெரியும். சரபிந்துமீது அம்புகளை ஏவுவேன். ரத்தம் வடிய, நிணம் சிதற . . .

கர்ணன்: அதிலெனக்கு இம்மியும் துயரம் இல்லை பிதாமகரே. பிறப்பில் ஒரு பிழை நிகழ்வது எளிய விஷயம்தானே ? உடல் ஊனம், மன ஊனம் . . . இந்தப் பிழைபட்ட கதாபாத்திரத்தில் இருந்து கொண்டு மிகச்சிறந்த நடிப்பை நான் வழங்கியிருக்கிறேன். அது போதும்.

பீஷ்மர்: மீண்டும் மீண்டும் நீ உன்னைச் சூழ்ந்திருப்பவர்களை உன் பெருந்தன்மையால் வென்று முன் செல்கிறாய். அவர்களை மேலும் சிறுமையாக்குகிறாய். குழந்தை, அதிரதனின் பின்னால் கையில் சம்மட்டியுடன் நீ வந்து நின்ற அந்த முதல் கணத்தில் உன் ஒளிமிக்க பார்வையாலேயே என்னை நீ வென்று விட்டாய். என்னை ஒரு புழுவாக உணரச் செய்தாய். இதோ இறுதியில் உன் அன்னையை. இனி களத்தில் உன் சகோதரர்கள் அனைவரையும் . . .ஆனால் உன் உள் மனதில் ஒரு தழல்த் துளி மிச்சமில்லையா என்ன ?

கர்ணன்: நீங்கள் கூறுவது என்ன என்று எனக்குப் புரியவில்லை பிதாகமரே

பீஷ்மர்: பற்பல வருடங்களுக்கு முன்பு கங்கை நதிக்கரையில் பரதவர் குலத் தலைவனும் என் தந்தையும் சாட்சி நிற்க நான் ஒரு சபதம் எடுத்தேன். எனக்குரிய அனைத்தையும், பிற்பாடு எனக்கு கிடைக்கவிருந்த அனைத்தையும் அந்தக் கணத்தில் துறந்தேன். ஆனால் அந்தச் செயல் மூலம் என்னைச் சுற்றியிருந்த அனைவரை விடவும் நான் உயர்ந்தேன். எந்த தருணத்திலும் அவர்களால் புறக்கணித்துவிட முடியாத அறத்தின் உருவமாக மாறினேன். ஆம், ஒரு வகையில் துறந்தவற்றைவிட பலமடங்கு அடைந்தேன். ஆனால் அன்றிரவு – குழந்தை, இதை என் வாழ்நாளில் முதன்முறையாக உன்னிடம் கூறுகிறேன் – நான் இழந்த மணிமுடிக்காக அன்று கண்ணீர் விட்டேன். இழக்க நேர்ந்த பெண்ணுக்காக பிறகு. வயது ஏற ஏற அச்சுமை பெருகியது. என் பிறக்காத குழந்தைகளுக்காக இந்தக் கரங்கள் ஏங்கின. பிறக்க நியாயமேயில்லாத பேரக்குழந்தைகளுக்காக இந்த முதியதோள்கள் எத்தனையோ தனித்த, கதைத்த, இருண்ட இரவுகளில் கண்ணீருடன் குலுங்கியிருக்கின்றன. (குரல் ஓங்க) நான் அடைந்தவை எல்லாம் வெற்றுப் பிரமைகள் என்று எண்ணியிருக்கிறேன். என் தோள்களில் எஞ்சும் இந்த வெறுமையுணர்வு . . . இலைகளும் பூக்களும் கால்களும் இல்லாத வெற்று மரக்கிளைகள் போன்ற இக்கரங்கள் . . . ஒரு பேரக்குழந்தையை தோளிலேற்றி அதன் மென்சருமத்தை உணர்ந்திருந்தால் என் ஆத்மா நிறைவுற்றிருக்குமா ? தெரியவில்லை. வெறும் உணர்வெழுச்சிகள் . . .

கர்ணன்: பிதாமகரே தங்கள் உணர்வுகள் தங்களிடமில்லை.

பீஷ்மர்: ஆம். எத்தனையோ வருடம் நான் போட்டு, காத்த அரண்கள் இன்று என்னிடமில்லை. நான் ஒரு மரமே அல்ல. முளைக்காது போன விதை மட்டும்தான். வானின் ஒலியும் மண்ணின் ஈரமும் காற்றின் மணமும் அறியாமல் கெட்டியான ஓட்டுக்குள் தனக்குள் தான் எனச் சுருங்கி ஓண்டிய வெற்று விதை. அதனால்தான் எனக்கு மனிதர்களின் கண்ணீர் புரியாமல் போயிற்றா ? என் உதிரத்தில் பிறந்த குழந்தைகள் இவர்கள் என்றால் ஒருவேளை இப்படி போர் புரிந்து அழிய விட்டிருக்கமாட்டேனா ?

கர்ணன்: இதில் நீங்கள் என்ன செய்திருக்க முடியும் ?

பீஷ்மர்: உண்மை. நான் என்ன செய்திருக்க முடியும் ? ஆனால் நான் இன்னமும் கனிந்திருக்கலாம். இன்னமும் கண்ணீர் விட்டிருக்கலாம் . .

கர்ணன்: தங்கள் கண்ணீர் என்னை துன்புறுத்துகிறது பிதாமகரே.

பீஷ்மர்: நீ ஒரு கணமேனும் இதே உணர்வுகளை அடைந்தில்லையா ? ஒவ்வொருமுறையும் நீ அர்ச்சுனன் மூன் தோல்வியை ஏற்றுக் கொண்டாய்.

கர்ணன்: நேர்மாறாக, பிதாமகரே. நான் வெளியே எரிந்து கொண்டிருக்கும்போதும் உள்ளே குளிர்ந்தடங்கிக் கொண்டிருந்தேன். கொடுக்கும்போது நான் பெற்ற மகிழ்வை அடையும் போது பெற்றதேயில்லை.

பீஷ்மர்: நீ வள்ளல். வள்ளலாகவே பிறந்தவன்.

கர்ணன்: அனைத்தையும் நான் பிறருக்கு அளிக்கும் நேரம் வரும் பிதாமகரே. வம்சத்தையும் குலத்தையும் அளித்துவிட்டேன். குந்தி வந்து கேட்டபோது வெற்றியை அளித்துவிட்டேன். இந்திரன் வந்து கேட்டபோது உயிரையும் ….இனி எஞ்சுவது ஒரு கடன். அதை துரியோதனனுக்கு அளித்துவிட்டால் என் வருகை நிறைவு பெறுகிறது . . .

பீஷ்மர்: ஏன் உன் அருகாமை என் உணர்வுகளை கூசிச் சுருங்க வைத்தது என்று இப்போது புரிகிறது. உன்னிடமிருந்து விடுபட்டவையெல்லாம் கனிகள் மரங்களை விட்டுச் செல்வது போல சென்றன. என்னை விட்டுச் சென்றவை பிஞ்சுகள் போல கசியும் காயங்களை விட்டு விட்டு . . .

கர்ணன்: தங்களை வணங்கிச் செல்ல வந்தேன்.

பீஷ்மர்: உனக்கு என் ஆசிகள்.

(கர்ணன் வணங்கி விடைபெறுகிறான்)

பீஷ்மர்: ஒரு முள் விலகியது போலிருக்கிறது. (வலியுடன் அசைந்து) அம்மா . . .

(நிழல்கள் திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்க்கின்றன. இரவுக் களத்தில் ஒலிகளில் வெகு தொலைவில் வேறு ஒரு மரணமுனகல்)

பீஷ்மர்: பூச்சிகள் எங்கும் நிரம்பி விட்டன. ஈசல்களா ? ஈசல்கள் எப்படி வரும், மழை பெய்யாமல் ? (கைகளை வீசி) ஆம் ஈசல்கள் தான். ஆனால் மழை . . . ! உதிர மழையில் எழுந்தவையா இவை ?

(ஒரு நிழல் எழுந்து ஏளனமாகச் சிரித்து அவர் அருகே வருகிறது)

நிழல்: அவை ஈசல்களல்ல மூடா. அவற்றை தர்மங்கள் நியாயங்கள் என்பர் அறிவுடையோர். பார், அவற்றின் இறகுகளில் உதிரத்தின் செந்நிற ஒளியை

(நிழல்கள் கூவிச் சிரிக்கின்றன)

பீஷ்மர்: போதும் நிறுத்துங்கள்.

(நிழல்கள் அமைதியடைகின்றன)

பீஷ்மர்: எத்தனை சிறிய வாழ்வு. ஒருநாள் புழு. மறுநாள் பறவை. அவ்வளவுதான். அவற்றின் உலகில் உணர்வுகளும் ஏக்கங்களும்கூட. அத்தனை சிறியவையாக இருக்கக் கூடும் . . . மிகச் சிறியவையாக. ஓர் இமைப்புக்குள் ஓடிமறைபவையாக . . .

(மிக மெளனமாக குதிரை வீரன் ஒருவன் செந்நிறக் கொடியுடன் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வெண்ணிறக் கொடி. மீண்டும் சிவப்பு. மீண்டும் கரிய கொடி.)

பீஷ்மர்: (தொடர்ந்து) சிறியவை என்றால் காலம் சிறிதாகிவிடுமா ? யானையின் காலம் என் காலத்தைவிடப் பெரிதா ? இந்த விண்மீன்களின் காலம் எது ? காலம் எத்தனை இருண்ட, எடைமிக்க சொல்!

(மீண்டும் கொடிகள் ஓடி மறைகின்றன)

பீஷ்மர்: இதே சொற்களை முன்பொருமுறை சொன்னேன். வெகுநாள் முன்பு . . . வபுஷ்டி நதியின் கரையில் . . .

(பீஷ்மரை அவரது நிழல் நெருங்கி வருகிறது)

துல்லியமான நதி நீரின் ஓட்டத்தைப் பார்த்து நின்ற போது . . . ஆம் இதே சொற்களை !இந்த நதியின் காலம் எது என . . . அப்போது நீரிலிருந்து என் ஆடிப்பிம்பம் எழுந்து வந்தது.

நிழல்: பீஷ்மா இதோ உன்னருகே மிக அருகே உள்ளது அந்த இடம். அந்த தருணம் . . . மீண்டும் ஒரு வாய்ப்பு.

பீஷ்மர்: எங்கே. ?

நிழல்: எழுக.

பீஷ்மர்: (எழுந்து) எங்கே ?

நிழல்: இதோ (பீஷ்மர் தன் உடைகளை களைகிறார். தாடியையும் தலை மயிரையும் களைத்து நிழலிடம் தந்து பட்டாடையும் கச்சையும் நகைகளையும் அணிந்து இளமைத் தோற்றம் கொள்கிறார்)

நிழல்: இதோ இந்த மெல்லிய திரைக்கு அப்பால் உள்ளது வபுஷ்டி நதியின் கரை. நீ மீண்டும் அங்கே செல்ல முடியும் நீ உன் வாழ்வில் தவறவிட்ட கணங்களில் ஒன்று அது . . .

(பீஷ்மர் ஒரு காலடி எடுத்து வைக்க அரங்கின் ஒளி மாறுபடுகிறது. நீரின் கலகல ஒலி. ஒளியின் நடனம்)

பீஷ்மர்: இந்த நதிக்கரையில் இப்படி நின்றது நாற்பது வருடங்களுக்கு முன்பு. அன்று தோள்களில் நான் அடையப்போகும் வெற்றிகள் திமிறிக் கொண்டிருந்தன. இன்று அடைந்த வெற்றிகளின் பாரம் (குனிந்து) அதே நதி. அதே மென்நீல நீரோட்டம். நிழல்களாடும் ஆழம். நதிக்கு காலம் இல்லையா என்ன ? ஒவ்வொரு கணமும் காலமின்மைதான் அதில் ஓடிக்கொண்டிருக்கிறதா ? என் முகம். அது நான் விரும்பியது போல இல்லை. நான் சொல்லாத சொற்களாலானதாக மாறிவிட்டிருக்கிறது அது.

(எதிரே நீர் பிளக்கும் ஒலியுடன் ஒருவன் எழுகிறான்)

பீஷ்மர்: யார், நில் (அம்பை உருவுகிறார்)

எழுந்தவன்: என் பெயர் சிகண்டி. பாஞ்சால மன்னனின் வளர்ப்பு மகன்.

பீஷ்மர்: அப்படி ஒரு வளர்ப்பு மகனைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லையே . . .

சிகண்டி: மகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பீஷ்மர்: நீதானா அது ? இங்கு என்ன செய்கிறாய் ?

சிகண்டி: இங்குதான் நான் என் நாட்களைக் கழிக்கிறேன். இந்தக் காட்டிலுள்ள பழங்குடி மக்கள் சிறந்த வில்லாளிகள். இவர்களிடம் பயிற்சி பெறுகிறேன்.

பீஷ்மர்: (இகழ்ச்சியுடன்) நீ களம் புகுந்தால் எந்த ஆண்மகன் எதிர்க்க முன்வருவான் ?

சிகண்டி: என் எதிரியும் என்னைப்போலத்தான்.

பீஷ்மர்: அப்படியென்றால் சரி (சிரித்தபடி) யார் அவன் ?

சிகண்டி: அவன் பெயர் பீஷ்மன். அஸ்தினபுரியின் பிதாமகன் அவன் என்கிறார்கள்.

பீஷ்மர்: (ஒரு கணம் திகைத்து) உன் தாயின் பெயர் என்ன ?

சிகண்டி: அம்பை. காசி மன்னன் மகள்.

பீஷ்மர்: அவனுக்கு மணமாயிற்றா என்ன ?

சிகண்டி: இல்லை. தாங்கள் யார் ?

பீஷ்மர்: நான் ஒரு ஆயுதப்பயிற்சியாளன்.

சிகண்டி: யாருக்கு ?

பீஷ்மர்: அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கு.

சிகண்டி: ஆம். தங்களைப் பார்த்தபோதே தெரிந்தது, பெரும் வீரர் என்று. தாங்கள் எனக்கு திருணதாரண அஸ்திர வித்தையை கற்றுத்தர இயலுமா ? தங்களுக்கு அடிமையாகிறேன்.

பீஷ்மர்: எதற்கு ?

சிகண்டி: அது மிக அபூர்வமானது என்றார்கள். நான் அத்தனை விற்பயிற்சிகளையும் பெற்றாக வேண்டும். ஒரு போர் வரும். அன்று நான் பீஷ்மனின் மார்பை பிளப்பேன்.

பீஷ்மர்: நீயா ? பீஷ்மரையா ?

சிகண்டி: ஆம். ஏனெனில் நான் பிறந்ததே அதற்காகத்தான். நான் எய்யப்பட்டுவிட்ட அம்புதான் உத்தமரே. என்னை எய்தவள் என் அன்னை. அவள் இன்றில்லை.

பீஷ்மர்: என்ன ஆயிற்று ?

சிகண்டி: (சாதாரணமாக) எரி புகுந்துவிட்டாள்.

பீஷ்மர்: அவள் உன்னிடம் என்ன சொன்னாள் ?

சிகண்டி: நீங்கள் அஸ்தினபுரிக்காரர் என்பதனால் அறிந்திருப்பீர்கள். அம்பையின் ஆத்மாவை எள்ளி நகையாடினான் பீஷ்மன். எரியும் நெஞ்சுடன் அவள் முதலில் பாஞ்சால மன்னனை நாடி வந்தாள். காசியில் சுயம்வரத்திற்கு வந்த பெரிய மன்னன் அவன்தான். தன்னை ஏற்கும்படி அவனிடம் மன்றாடினான். பீஷ்மர் மீதுள்ள அச்சத்தால் அவன் அவளை ஏற்கப் பயந்தான். பிறகு அன்று சுயம்வரத்திற்கு மன்னர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று யாசித்தாள். அவள் வேண்டியது ஒரு குழந்தையை. தன் நெஞ்சின் நெருப்பை வளர்த்து அதில் பீஷ்மனை பலியாக்கும் ஒரு வாரிசை. எவருமே அதற்கு முன் வரவில்லை. ஏனெனில் பீஷ்மன் எதையுமே மன்னிக்காதவன். நிகரே இல்லாத வில்லாளி.

பீஷ்மர்: ஆம் அப்படித்தான் கேள்விப்பட்டேன்.

சிகண்டி: உடைந்த நெஞ்சுடன் அவள் காட்டுக்குச் சென்றாள். அவன் தலைமயிர் சடையாயிற்று. உடல் கறுத்து செதில்களேறின. நகங்கள் நீண்டு வளர்ந்தன. அவள் கண்கள் மட்டும் இரவில் சிறுத்தையின் கண்கள் போல சுடர்விட்டன ….

பீஷ்மர்: உன் தந்தை யார் ? (பொறுமையின்மையை மறைக்க சகஜபாலனை காட்டி) சூதர்கள் பாடாத கதாநாயகன் ?

சிகண்டி: யாரோ . . . ஒருவேளை ஏதோ காட்டு மிராண்டி. அவர்களிடம்தான் ஒருபோதும் அணையாத வன்மம் உறங்குகிறது… தர்மங்களாலும் கருணையாலும் நனையவிடப்படாத உக்கிரமான வன்மம். நான் பிறந்தபோது என் தாய்க்கு பித்து மிகவும் முற்றியிருந்தது. ஊர் ஊராக என்னை தூக்கிக் கொண்டு அலைந்தாள். மிருகங்கள் குட்டிகளை வளர்ப்பதுபோல ஊட்டினாள், பாதுகாத்தாள். அவள் காசி மன்னன் மகள் என யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. தெருக்களில் பிச்சையாக கிடைத்ததை உண்டாள் புழுதியில் படுத்து தூங்கினாள். நான் பெண் என்று அவள் அறிந்ததே வெகுநாள் கழித்து எனக்கு ஆறு வயது இருக்கும்போதுதான். அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முழு நிலவு நாள் அது. கிராமத்துக்கு வெளியே சுடுகாட்டின் ஓரம் ஓர் இடிந்த கல்மண்டபத்தில் அவள் இருந்தாள். ஊருக்குள் பிச்சையாக பெற்ற உணவுடன் நான் திரும்பி வந்தேன். அவள் மெல்ல தனக்குள் முனகியபடி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தாள். சன்னதம் கொள்ளப் போகிறவள் போல . . .

(சிகண்டிக்கு பின்னால் ஒளி விழும் இடத்தில் அம்பை தள்ளாடியபடி வந்து அமர்வதை பீஷ்மர் காண்கிறார். சிகண்டி அதை அறிவதில்லை. அம்பை பயங்கரக் கோலத்திலிருக்கிறாள். முகத்தின்மீது சடைமுடிக் கற்றைகள் தொங்கியாடுகின்றன. கண்கள் சுடர்கின்றன)

சிகண்டி: அவள் அப்படி இருப்பதுண்டு. விறகை கருக்கி நொறுக்கி உண்ணும் தீ போன்றது அவளில் எரியும் அந்தக் குரோதம்.

(அம்பை கைகளை முஷ்டி பிடித்து நெரிக்கிறாள். உறுமுகிறாள். முனகிக் கொள்கிறாள். இடைவிடாது பெருமூச்சு விடுகிறாள். ஒரு வனதெய்வம் போலிருக்கிறாள்)

சிகண்டி: அன்று நான் உணவை அவளருகே வைத்துவிட்டு மெல்ல விலகினேன்.

அம்பை: (தலைதூக்கி சிகண்டியை உற்றுப் பார்க்கிறாள்) யார் நீ ?

சிகண்டி: நான் சிகண்டி . . .

அம்பை: [கூவலாக] யார் ?

சிகண்டி: ஆம், இப்பெயர் அவளறிந்ததல்ல. அவள் போட்டதல்ல…பிச்சை அளிக்கும் ஊர்க்காரர்கள் போட்டபெயர்…

அம்பை: (சட்டென்று கனிந்து) மகனே . . .

சிகண்டி: (குழம்பி) அம்மா நான் . . .

அம்பை: மகனே நீ யார் தெரியுமா ? நீ காசி மன்னனின் மகள் வயிற்றில் பிறந்தவன்.

சிகண்டி: அம்மா நான் உன் பெண்.

அம்பை: இல்லை நீ ஆண். நான் சொல்கிறேன் நீ ஆண் (வெறி ஏற) நீ ஆண்தான். நீ ஆண்தான். நீ ஆண்தான் . . .

சிகண்டி: ஆம் அன்னையே நான் ஆண்தான்.

அம்பை: மகனே நீ செய்ய வேண்டிய கடன் ஒன்று உள்ளது. உன் பிறவி நோக்கமே அதுதான்.

சிகண்டி: சொல்லுங்கள் அன்னையே; காத்திருக்கிறேன்.

அம்பை: (தணிந்த மெல்லிய குரலில்) இருபது வருடங்களாக முயல்கிறேன். என்னுள் எரியும் இந்த நெருப்பை அணைக்க என்னால் முடியவில்லை. இதை அணைக்க வேண்டுமென்றால் நான் காலத்தில் பின்னால் நகர வேண்டும். நான் அவன்முன் மண்டியிட்ட அந்தக் கணத்திற்கு மீண்டும் சென்று அக்கணமே அங்கேயே செத்து உதிர வேண்டும். இல்லை. இந்த நெருப்பு அப்போதும் அணையாது. இது எனக்குரிய அனைத்தையுமே எரித்து விட்டது. உடலையும் உயிரையும் ஆத்மாவையும் சாம்பலாக்கி விட்டது. என் மறுபிறப்பிலாவது இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். [தழுதழுத்து] என் விடுதலை உன் கரங்களில் இருக்கிறது…

சிகண்டி: நான் என்ன செய்ய வேண்டும் அன்னையே.

அம்பை: நீ அஸ்தினபுரியின் பிதாமகன் பீஷ்மனை கொல்ல வேண்டும்.

சிகண்டி: கொல்கிறேன்.

அம்பை: (திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்த்து) நீயா ? நீ . . . உனக்கு அவர் யாரென தெரியுமா ?

சிகண்டி: யாராக இருந்தாலும் சரி.. உங்கள் சொல் எனக்குக் கட்டளை…. நீங்கள் என்னிடம் பேசிய முதல் சொற்கள் இவை…

அம்பை: உன்னால் முடியுமா ? உன்…. ஆனால் உன்னால் முடிந்தாக வேண்டும் … எனக்கு வேறு எவரும் இல்லை.

சிகண்டி: நான் அதற்காக மட்டுமே வாழ்வேன்.

அம்பை: நீ அவனை களத்தில் கொல்ல வேண்டும். அவனுடைய கவசங்கள் மூடிய மார்பை உன் அம்புகள் பிளக்க வேண்டும்.

சிகண்டி: ஆம் அது நடக்கும்.

அம்பை: மகனே . . . நீ

சிகண்டி: ஐயமே தேவையில்லை அன்னையே. அது நடக்கும். விண்ணில் நிறைந்துள்ள தெய்வங்கள் அறிக. மண்ணில் நிரம்பியுள்ள மூதாதையர் அறிக. பஞ்சபூதங்கள் அறிக. இது உண்மை.

அம்பை: (ஆழ்ந்த அமைதியுடன்) ஆம். நீ அதை செய்வாய். (பெருமூச்சுடன் எழுந்து) நீ பாஞ்சால மன்னனிடம் செல். இதோ இந்த மோதிரத்தைக் காட்டு. உன்னை அவர் தன் குழந்தையாக ஏற்பார். (ஒரு மோதிரத்தை நீட்ட சிகண்டி பெற்றுக் கொள்கிறான்) மீதிக் கதைகளை சூதர் பாடல்களே உனக்குக் கூறும்.

சிகண்டி: நான் உங்களுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் அன்னையே.

அம்பை: இந்தப் பிறவியை நீ எனக்காக அளிக்கிறாய் மகனே. கடன் இனி என்னுடையதுதான். வரும் ஏழு பிறவிகளில் நான் உனக்கு சேயாகி இந்தக் கடனை கழிப்பேன். அதுவன்றி உனக்குத்தர இந்த அன்னையிடம் என்ன இருக்கிறது ? (விம்மி அழுகிறாள். அழுகை வலுத்து உக்கிரமான ஓசையற்ற குலுங்கல்களாக நீடிக்கிறது.)

சிகண்டி: (ஆறுதல் கூறும்விதமாக) பாஞ்சாலத்திற்கு தாங்கள் வருகிறீர்களல்லவா ?

அம்பை: (மெல்ல அமைதியாகி) இல்லை. என் பயணம் இங்கே முடிகிறது. (கை சுட்டி) இது காட்டாளர்களின் மயானம். சற்றுமுன் அந்தச் சிதையில் எரிபவன் முகத்தைப் பார்த்தேன். அவனுடன் நானும் எரிந்தாக வேண்டும்.

சிகண்டி: அம்மா!

அம்பை: உனக்கு வெற்றி கிடைக்கட்டும். என்னை மன்னித்துவிடு குழந்தை. (நடந்து செல்கிறாள். சிகண்டி பதற்றமும் பதைப்புமாக நிற்கிறான். ஆனால் பின் தொடர்வதில்லை. அம்பை சென்று மறைந்த திசையில் தீ சுடர் விட்டெழும் ஒலி. பெண் குரல் கதறல். பின் அமைதி.)

சிகண்டி: பாஞ்சாலனின் வளர்ப்பு மகள் ஆனேன். ஆனால் எவரும் எனக்கு வில்வித்தை கற்பிக்கவில்லை. எனவே இந்த காட்டுக்கு ஆண் வேடமிட்டு வந்து இவர்களிடம் வில்வித்தை பயின்றேன். அவர்கள் என்னை கண்டடையலாகாது என்பதனால் வைத்தியர் ஸ்தூனகர்ணருக்கு பெரும் பணம் தந்து என்னை ஆணாக்கிக் கொண்டேன்.

பீஷ்மர்: உன் இலக்கு நிறைவேறட்டும்!

சிகண்டி: தங்கள் ஆசி. சற்றுமுன் தாங்கள் ஓர் அம்பின் வால் நுனிமீது மறு அம்பை எய்து நிறுத்தக் கண்டேன். அதன் பெயர் திருணதாரண அஸ்திரம். அது மிக அபூர்வமானது. பரசுராமர் உருவாக்கியது. அதை நீங்கள் எனக்கு கற்பிக்க வேண்டும்.

பீஷ்மர்: நீ எப்படி அதைக் கோரலாம் ?

சிகண்டி: நியாயத்தின் பெயரால். அதைக் கொண்டே நான் பீஷ்மரைக் கொல்ல முடியும் என்று உன் மனம் கூறுகிறது. என் கதையை உங்களிடம் நான் கூறியது இதற்காகத்தான்.

பீஷ்மர்: நியாயம். அதன் பெயரில் கேட்டால் நான் மறுக்க முடியாது. வா.

சிகண்டி: (பாதங்களை வணங்கி) வணங்குகிறேன் ஆசாரியரே.

பீஷ்மர்: குலைந்து அவனை தொடப் போய் தவிர்த்து) உனக்கு வெற்றி கிடைக்கட்டும்

நிழல்: (பீஷ்மரை தோளில் தொட்டு) அவனிடம் சொல். நீ யாரென்று சொல் . . .

பீஷ்மர்: உன் அம்புகளை எடுத்துக் கொள்.

நிழல்: அவன் உன் மகன். உன் மகன். அவனைத் தொட்டால் உன் உதிரத்தில் பூக்கள் மலரும். மூடா தொடு அவனை.

சிகண்டி: (வில்லை தொடுத்து) சரி.

பீஷ்மர்: திருணதாரணம் என்பது புற்சரடுகளைப் போல அம்புகளை தொடுக்கும் கலை. இது உன் கட்டை விரலில் உள்ளது. உன் கட்டை விரலைக் கொண்டு நாணில் தெறித்து நிற்கும் அம்பின் சாய்வை கணிக்க வேண்டும்.

(அம்புப் பயிற்சியின் பலவிதமான அசைவுகள்)

பீஷ்மர்: ஒரே இலக்கை அணுகூட மாறாமல் மீண்டும் மீண்டும் தாக்கும் வித்தை இது. இதன் சூத்திரம் இதுதான் (காதில் கூறுகிறார்) இம்மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒன்றைக் குறிக்கும். முதல் எழுத்து அம்பின் பின்னிறகு. இரண்டாமெழுத்து கட்டைவிரல். மூன்றாம் எழுத்து காற்று .நான்காம் எழுத்து நாணின் ஒலிபேதம் . . .

நிழல்: மூடா சொல். இப்போதாவது சொல். நீ என் மகள் என அவளை மார்போடணைத்துக் கொள் . . .

பீஷ்மர்: எங்கே அம்பை விடு பார்க்கலாம்.

சிகண்டி: (அம்பை எடுத்து கண்மூடி தியானித்து எய்கிறான்) சரிதானே குருநாதரே (மீண்டும் மீண்டும் மீண்டும் அம்புகள்)

பீஷ்மர்: மிகச்சரி (ஒரு பெரும் மரம் முறிந்து பேரோலத்துடன் விழும் ஒலி) உன் இஷ்ட தெய்வம் நீ வில்லேந்துகையில் வந்து விடுகிறது

போலும். முதல் முறையாக இதை இத்தனை துல்லியமாக செய்தவன் பார்த்தன் மட்டுமே.

சிகண்டி: என் இஷ்ட தெய்வம் என் அன்னைதான். உன் உடலில் பெண்மையின் வடிவாக அவள் குடியிருக்கிறாள்.

பீஷ்மர்: உனக்கு வெற்றி கிடைக்கும். இந்த அம்புமுறையை நீ பீஷ்மரின் மார்பை பிளப்பாய்.

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்)

நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய்.

பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம்.

நிழல்: ஏன் ?

பீஷ்மர்: ஏனெனில் இது காலத்தின் இக்கரை. இங்கு இருந்து நாம் கூவும் எதுவும் மறுகரையில் ஒலிக்காது. (அம்புப்படுக்கையில் கால்களை நீட்டிக் கொள்கிறார்) ஆனால் இந்த அம்புகளின் எரியும் வலியை நான் என் உடல் முழுக்க உணர்ந்து கொண்டிருந்தேன் அப்போது.

நிழல்: நான் கூறுவது எதுவுமே உனக்குப் புரியவில்லை. உணர்வுகளின் போது மனிதர்கள் மூடர்களாகிறார்கள்.

பீஷ்மர்: உணர்வுகள் இல்லாதபோது அவர்களிடம் இருப்பவை வெறும் சொற்கள். அர்த்தமற்ற சொற்கள்.

நிழல்: எழுந்திரு. நீ கூற வேண்டிய சொற்களை கூறிவிடு. இல்லையேல் இந்த அம்புப்படுக்கையில் நீ மரணமின்றி கிடப்பாய்.

பீஷ்மர்: அதோ அங்கு . . . யார் அது ?

நிழல்: யார் ?

பீஷ்மர்: (எழுந்து) ஒரு சூதன். ஆனால் வேறு வகையாக உடையணித்தவன்.

நிழல்: ஆம் அவன் சூதன்தான். அவனைப் பார்த்தால் . . .

பீஷ்மர்: அவன் பாடுவது ஓர் ஆடுகளத்தில் அவனைச் சுற்றி நடனமிடுகிறார்கள். அது ஏதோ திருவிழா.

(அரங்குக்கு வெளியே திருவிழா ஒலிகள். சிரிப்புகள் மத்தளம் முழங்க இருவர் மெல்ல நடனமிட ஒரு சூதன் கையில் தாளக்கோலை மெல்ல குலுக்கியபடி பாடிக் கொண்டு வருகிறான்.)

சூதன்: குருகுல பீஷ்மன் – அவன்

இணையிலா வீரன்.

குருகுல பீஷ்மன் – அவன்

இணையிலா வீரன்.

(கை தூக்கி காட்ட அமைதி)

ஆகவேதான் பீஷ்ம பிதாமகர் தன் வில்லை மடியின்மீது வைத்து இருகரங்களையும் கட்டியபடி அமைதியாக தேர்ந்தட்டின்மீது அமர்ந்திருந்தார். மேகங்கள் இல்லாத தூய வானம் போன்றிருந்தது அவர் மனம். அந்த வானம் தெளிந்த குளிர்ந்த தடாகத்தில் பிரதிபலிப்பது போலிருந்தது அவர் முகம். அர்ச்சுனன் காண்டாபத்தை வைத்து விட்டு அவரை கை கூப்பி வணங்கினான். பின்பு காண்டாபத்தின் நாண்களை ஏற்றி அம்புகளை எய்யத் தொடங்கினான். அம்புகள் முதிர்ந்த மரத்தில் மாலையில் அணையும் பறவைகள் போல பிதாமர் பீஷ்மரின் அகன்ற மார்பிலும் புஜங்களிலும் சென்று தைத்தன…. பாட்டன் மீது ஏறிவிளையாடும் குழந்தைகள்போல அவை அவரை மொய்த்துக் கொண்டிருந்தன…

(பாடல் தொடர்கிறது)

குருகுல பீஷ்மண் – அவன்

இணையிலா வீரன்

இமய மலைச் சிகரம் – அவன்

சடை விரித்த பேராலம்…

(பாடியபடி சூதர்கள் கடந்து செல்கிறார்கள்)

பீஷ்மர்: வேறு ஏதோ காலம். வேறு ஏதோ சூதர்கள். மனிதர்கள் மறைகிறார்கள். கதைகள் மறைவதில்லை.

நிழல் நீ இந்தக் கதைகளில் ஒன்றில் நீ சொல்லாமல் போன சொற்களை சேர்த்து விடலாம்.

பீஷ்மர்: காலத்தின் ஒரு கணத்தில் தவறவிடப்பட்டவை; காலம் முழுக்க சென்றபடியே இருக்கட்டும் என்கிறாயா ?

நிழல்: பிறகு எப்படி நீ இறப்பது ?

பீஷ்மர்: அச்சொற்களும் சமானமான வேறு எவற்றையோ நான் சொல்லும்போது.

நிழல்: யாரிடம் ? எங்கே ? எதைப்பற்றி ?

நிழல் 2: வீண்! வீண்! எல்லாம் வீண்!

பீஷ்மர்: இல்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது. இந்த எண்ணம் எழுகையிலேயே எனக்குள் ஒரு முகம் தெளிவுறத் தெரிகிறது அது அவன் முகம்.

நிழல்: யார் ?

பீஷ்மர்: அந்த யாதவன். கண்ணன்.

நிழல்: துவாரகை மன்னன் . . .

பீஷ்மர்: ஆம். ஆனால் அவனுக்கு மட்டுமே இந்த உதிர வெறியாட்டை மாபெரும் மனித நாடகமாகமட்டும் பார்க்க முடிகிறது. அன்று அம்பு மழை பொழிந்த களத்தில் இள வெயிலில் கண்டேன், அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்திருப்பதை.

நிழல்: அவன் சதி செய்பவன். போரிடுபவனல்ல.

பீஷ்மர்: வெல்பவனாகவும் தோற்பவனாகவும் ஒரே சமயம் உணர்பவன் அவன் . நான் இருக்கும் இந்தப் பித்து வெளிக்கு வந்தால் பிறர் மனம் சிதறி அழிவார்கள். அவன் மட்டுமே சிரிப்பான்.

நிழல்: கொல்லும் சிரிப்பு.

பீஷ்மர்: காலத்தின் சிரிப்பு அது. அவன் இங்கு வரக்கூடும். அவனிடம் நான் எதையோ கூறக்கூடும் . . .

நிழல்: பாவனைகளில் உன்னை நீ தாலாட்டுகிறாய்.

பீஷ்மர்: இல்லை. அவன் அனைத்தும் அறிந்தவன். என்னைக் கொல்லும் வழியென்ன என்று கேட்டு யுதிஷ்ட்டிரரை என்னிடம் அனுப்பியவன். யுதிஷ்ட்டிரன் ஒரு தூதுப்புறா போல அசட்டுத்தனமான பணிவுடன் என்முன் வந்து நின்றபோது நான் அவன் சிரிப்பைக் கேட்டேன்.

நிழல்: உனக்கு மீண்டும் ஒரு தருணம் வாய்த்தது.

பீஷ்மர்: ஆம். அப்போதும் நான் அதைக் கூறவில்லை. ஆனால் அந்தத் தருணத்தில் நான் சொன்னவை எதுவும் தருமனிடம் கூறப்பட்டவை அல்ல.

நிழல்: என்ன கூறினாய் ? ஒருவேளை அச்சொற்களில் நீ தேடும் அந்த மாற்றுச் சொற்கள் இருக்கலாம்.

பீஷ்மர்: ஆம். ஆனால் நான் களைத்துவிட்டேன். என் உடலை ஒரு திரவம் போல பூமியின்மீது படரச் செய்து படுத்துவிட வேண்டுமென்று மட்டுமே விழைகிறேன்.

நிழல்: எழுந்திரு. நீ சென்றாக வேண்டும். அந்தச் சொற்களை மீண்டும் தொட்டு அளைந்து தேடிப் பார்த்தாக வேண்டும்.

பீஷ்மர்: என்னை விட்டுவிடு.

நிழ: உனக்கு மரணம் மட்டுமே ஓய்வாக அமைய முடியும் . . .

பீஷ்மர்: ஆமாம். மரணம். அதையன்றி வேறு எதையுமே நான் இக்கணம் விழையவில்லை.

நிழல்: எழுந்திரு.

(பீஷ்மர் ‘ஆ ‘ என்று முனகியபடி எழுகிறார் . வயோதிக உடையை மாற்றாமலேயே தள்ளாடி நடக்கிறார்)

நிழ: அதோ பாடி வீடு. போர் ஓய்ந்து வீரர்கள் காயங்களை கழுவிக் கொண்டிருக்கும் மாலை நேரம்.

(காயமடைந்த வீரர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள். குதிரைகள் நடக்க கொண்டு செல்லப்படுகின்றன. உணவு சமைக்கப்படும் ஒலிகள். வீரர்கள் சிலர் ஒரு பெரிய அண்டாவுடன் செல்கிறார்கள். வளைந்த ஆயுதங்களை அள்ளி ஒருவன் செல்கிறான். அனைவரும் பீஷ்மரை வணங்கி செல்கின்றனர்)

பீஷ்மர்: போர்க்களத்து மாலை நேரத்திற்கே ஓர் அமைதி இருக்கிறது. தீராத கடும் நோய் இடைவெளி விடுகையில் வரும் உல்லாசம் போல.

ஒரு வீரன்: பிதாமகரே விட எல்லையில் எழுபது யானைகள் காயம்பட்டு விட்டன.

பீஷ்மர்: துதிக்கைக் காயம் எவ்வளவு ?

வீரன்: பதினெட்டு.

பீஷ்மர்: அவற்றை மட்டும் விலக்கி மூலைக்கு கொண்டு செல். நாளை போரின்போது அவற்றுக்குப் பின்னால் நிற்கும் நமது படைகளிடம் எரியும் பந்தங்கள். இருக்கட்டும். தீயால் சுடப்பட்டு அவை பாண்டவர் படைகளுக்குள் விரட்டப்பட்டும்.

வீரன்: உத்தரவு

(இன்னொரு வீரன் உள்ளே வந்து வணங்குகிறான்.)

பீஷ்மர்: யார் வந்திருப்பது.

வீரன்: இந்திரப்பிரஸ்த மன்னர், குருவம்சத் தோன்றல், பாண்டவர்களில் முதல்வர் . . .

பீஷ்மர்: வரச்சொல் – தனியாக

(பீஷ்மரின் முகத்தில் குழப்பம் பரவுகிறது. தாடியை உருவியபடி நடக்கிறார். தருமன் எளிய உடையில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி வருகிறான்.)

தருமன்: (வணங்கி) பிதாமகருக்கு வணக்கம்.

பீஷ்மர்: தருமம் வெல்க. (ஆசியளிக்கிறார்)

தருமன்: எந்தையே இந்தப் போர் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. வெல்ல முடியாத பிதாமகர்களும் வித்தையே கற்பித்த குருநாதர்களும் எதிரே அணிவகுக்கையில்….

பீஷ்மர்: நீ பார்த்தசாரதியின் உபதேச மொழிகளை கேட்கவில்லை போலும்.

தருமன்: அது வில்லாளிகளுக்குரியது பிதாமகரே. நான் எளிய மனிதன்.

பீஷ்மர்: நாளை பாரத வர்ஷத்தை ஆளவிருப்பவன்.

தருமன்: அந்த ஆசை எனக்கில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தப் போர் எப்படித் தொடங்கியது என்பதை இப்போது எண்ணியே பார்க்க முடியவில்லை. சிந்திக்கும் தோறும் அந்த துவக்கப்புள்ளி காலத்தில் பின்னகர்ந்து போகிறது. எங்கள் இளமைப்பருவத்திற்கு . . . அதற்கும் முன்னால் . . . எங்கள் தந்தையர் வாழ்வுக்கு . . . ஒருவேளை எங்கள் குலத்தின் விதையிலேயே இந்தப் போர் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று படுகிறது.

பீஷ்மர்: (இகழ்ச்சியுடன்) களத்திலும் உனக்கு தத்துவ விசாரம் தானா ?

தருமன்: நான் கோழையாக இருக்கலாம். ஒரு போதும் நான் அதை மறைத்ததில்லை. பிதாமகரே வீரம் என்பது என்ன ?சுயநலம் நிரம்பிய வன்முறை அவ்வளவுதானே ?

பீஷ்மர்: இல்லை அதன் மறுபெயர் துணிவு.

தருமன்: துணிவு என்று எதுவும் இல்லை. அச்சம் இல்லாத மனிதன் யோகி. அவன் ஒருபோதும் போரிடுவதில்லை. அவனுக்கு எதிரிகள் இல்லை

.

பீஷ்மர்: விதுரநீதி உன் மூளைக்குள் நிரம்பிவிட்டது.

தருமன்: பிதாமகரே உங்களிடம் விவாதிக்க நான் வரவில்லை. இந்தப் போர் என்னை மீறி தொடங்கிவிட்டது. என்னை மீறி நடந்து கொண்டிருக்கிறது. அதன் தலைமை இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். கோபுரம் மீது அமர்ந்த எளிய பறவை போல. என்னைச் சுற்றி அழியும் துயரமும் துயரமும் பெருகுகின்றன. இன்று நான் விரும்புவதெல்லாம் ஒன்றுதான், இந்தப் போர் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் முடிந்துவிட வேண்டும். வெற்றியோ தோல்வியோ சீக்கிரம் அது நிகழும் என்றால் அழிவு குறையும் அவ்வளவுதான்.

பீஷ்மர்: நீ தோல்வியை ஏற்கலாமே.

தருமன்: உங்களுக்குத் தெரியும். நான் இங்கு எதையும் தீர்மானிக்க முடியாது.

பீஷ்மர்: வேறு யார் யாதவ மன்னனா ?

தருமன்: இல்லை குந்தியும் திரெளபதியும்.

பீஷ்மர்: (சட்டென்று இறுகி) ஆம். இப்போது உனக்கு என்ன தேவை ?

தருமன்: போர் நாட்கணக்கில் நீள்கிறது. உங்களை வெல்ல அர்ச்சுனனால் முடியவில்லை. இருபுறமும் படைகள்தான் அழிகின்றன.

பீஷ்மர்: ஆம் அவனால் என்னை கொல்ல முடியாது. நான் அவனை கொல்லமாட்டேன்.

தருமன்: பிறகு எப்படி போர் முடிவது ?

பீஷ்மர்: அதுதான் விஷயமா ? உன்னை அனுப்பியவன் யார் ?

தருமன்: உங்களுக்குத் தெரியும் . . .

பீஷ்மர்: அவன் என்ன கேட்கச் சொன்னான்.

தருமன்: உங்கள் மரணம் எப்படி நிகழும் என்று . . . அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று கேட்டு வரச் சொன்னார்.

பீஷ்மர்: (உரக்கச் சிரித்து) அப்படியல்ல. அவன் சொன்ன வார்த்தைகள் வேறு.

தருமன்: (யோசித்து) ஆம் . . . நீங்கள் இறக்க விரும்பும் விதம் என்ன என்று கேட்கச் சொன்னான்.

பீஷ்மர்: எவர்முன் நான் தோற்பேன் என்று இல்லையா ?

தருமன்: ஆம்.

பீஷ்மர்: என்னைக் கொல்பவன் ஒருபோதும் தீராத அவப் பெயரை, அதன் முடிவிலா நரகத்தை அடைவான் என்றால்கூட அதைச் செய்யத் துணிபவன் உங்களில் யார் ?

தருமன்: பிதாமகரே . . .

பீஷ்மர்: என்னைக் கொல்வதன்றி அதன்மூலம் அவன் எதையுமே அடையமாட்டான் என்றாலும் அதற்குத்துணிபவன்….

தருமன்: வெற்றியில்லாத போருக்கு எந்த சத்திரியன் முன் வருவான்.

பீஷ்மர்: வருபவன் உண்டு. யாதவன் உன்னிடம் சொன்னது என்ன ?

தருமன்: இதைப்பற்றி ஏதும் கூறவில்லை.

பீஷ்மர்: அவன் சொன்ன சொற்களையெல்லாம் நினைவுகூர்.

தருமன்: எவ்வளவோ சொற்கள்.

பீஷ்மர்: இந்தத் தருணத்திற்குப் பொருந்தாத எதையோ அவன் சொன்னான். அதுதான் மிகப்பொருந்துவது…

தருமன்: இல்லையே . . . (நின்று) ஆம் , அவன் சிகண்டியைப் பற்றி சொன்னான்.

பீஷ்மர்: சிகண்டியா, யார் அது ?

தருமன்: பாஞ்சாலனின் வளர்ப்பு மகன் அல்லது மகள். அவனை யாதவன் இருபிறப்பாளன் என்று இளநகையுடன் கூறினான்.

பீஷ்மர்: அவன் என்ன செய்ய வேண்டும் என்றான். ?

தருமன்: ஒரு செயலின் பொருட்டு மறுபிறப்பு கொள்பவன் அதை செய்து முடிக்காமல் விடுவதில்லை என்றான்.

பீஷ்மன்: (பெருமூச்சுடன்) அதைத்தான் எதிர்பார்த்தேன். தருமா என்னை உன் தம்பியால் கொல்ல முடியாது. இந்த சிகண்டி என்னைக் கொல்வான். அவனை முன்னிறுத்தி போர் புரியச் சொல்.

தருமன்: ஏன் ?

பீஷ்மர்: பெண்கள், பிராமணர், அலிகள் ஆகியோரிடம் நான் போரிடமாட்டேன். ஆயுதத்தை இறக்கி விடுவேன்.

தருமன்: உங்கள் கவசங்களைப் பிளக்கும் அம்பு வலிமை அவனிடம் உண்டா.

பீஷ்மர்: பாறையை புல் பிளக்கும்.

தருமன்: புரியவில்லை பிதாமகரே.

பீஷ்மர்: உன் தம்பிக்கும் யாதவனுக்கும் புரியும். சிகண்டிக்குத் தெரியும். நான் இதைச் சொன்னதாக மட்டும் அவர்களிடம் சொல்.

தருமன்: (பெருமூச்சுடன்) நானறியாத இந்த ஆட்டத்தில் வெறும் பகடையாக உணர்கிறேன்.

பீஷ்மர்: (நகைத்து) அல்லது திருவிழாவை பதைத்துப் பார்க்கும் உற்சவ மூர்த்தி

தருமன்: போதும் பிதாமகரே, இதெல்லாம் என்ன ? ஏன் அந்தப் பேடி உங்களைக் கொல்ல வேண்டும் ?என்ன அர்த்தம் அதற்கு ? அவனுக்கும் உங்களுக்கும் என்ன உறவு ?

பீஷ்மர்: அவன் (திடுக்கிட்டு அமைதியாகி) இது ஒரு கேலிக்கூத்து மட்டும்தான் தருமா. உனக்கு இது புரியாது.

தருமர்: ஆம். புரியாததனால்தான் நான் இன்னும் தர்மத்தில் நம்பிக்கையுடனிருக்கிறேன் போலும்.

பீஷ்மர்: யாதவனிடம் கூறு (நிதானித்து) உடைந்த ஆடியில் முகம் பார்ப்பவன் தன் மரணத்தைக் காண்கிறான்.

தருமர்: சொல்கிறேன்.

(வணங்கி விடைபெறுகிறான். நிழல் நெருங்கி வருகிறது)

நிழல்: என்ன சொன்னாய் ?

பீஷ்மர்: உடைந்த ஆடியில் முகம்பார்ப்பவன் தன் மரணத்தைக் காண்கிறான். ஏன் அதைச் சொன்னேன் ?

நிழல்: அதில் உள்ளது உன் மரணத்தின் ரகசியம்.

பீஷ்மர்: நான் சொன்ன சொற்கள்தான். ஆனால் வேறு ஏதோ நாடகத்தில் நான் கேட்டவை போலிருக்கின்றன. எனக்கு புரியவில்லை. ஒருவேளை யாதவனுக்குப் புரிந்திருக்கும் அவனுக்குத் தெரியும் . . .

நிழல்: உனது மனம் அவனையே நாடுகிறது.

பீஷ்மர்: அவனுக்குத் தெரியாதது இல்லை.

(வெளியே இசை, நடன ஒலிகள். சிப்ளாக்கட்டை ஒலிக்க ஒரு கிழக்குரல் கதை சொல்கிறது)

குரல்: இவ்வாறாகவே யோகபுருஷனான பீஷ்மர் தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்தார். சூரியன் உத்தராயணத்தை அடைந்துவிட்டது. மகாபாரதப் போரின் ஐம்பத்திரண்டு நாட்கள் ஐம்பத்திரண்டாயிரம் கொடும் கனவுகளைப்போல கடந்து சென்றன. ஆச்சாரியரான துரோணர் மறைந்தார். மகாரதனான கர்ணன் தேரடியில் விழுந்தான். சல்லியனும் ஐயத்ரதனும் மறைந்தார்கள். அபிமன்யுவின் பிஞ்சு உடல் குருஷேத்ர ரணபூமியில் விழுந்தது. முடி மன்னர் வணங்கிய மாமன்னனாகிய சுயோதனன் தொடை பிளந்து துடித்து துடித்திறந்தான். அவனது சகோதரர்கள் அனைவருமே கொலையுண்டனர். லட்சோப லட்சம் உயிர்கள் தங்களை அந்த ரணபூமியில் தங்களை பலி தந்தன. அது போன்ற ஒரு பெரும்போர் முன்பு நடந்ததில்லை. பின்பு நடக்கவில்லை. இனி நடக்கப் போவதும் இல்லை. தர்மமும் அதர்மமும் எல்லைகள் அழிந்து மோதிய பெரும் போர்.

(பேசியபடியே பாகவதர் மேடைக்கு வருகிறார். கூடவே சில கேள்வியாளர்கள்.)

அன்பர்களே அந்தப் போரின் இறுதியில் எஞ்சியதென்ன ? விதவைகளின் கண்ணீர். குருதி படிந்த சிம்மாசனம். வெறுமை நிறைந்த வீதிகளுடன் பாழடைந்த நகரம். நீர்க்கடன்களால் கனத்து குளிர்ந்த நீர்நிலைகள்… மகத்தான விஷயங்களுக்காகவே பெரும் போர்கள் துவங்குகின்றன. ஏனெனில் மகத்தானவையே மக்களை போரை நோக்கி கவர்ந்திழுக்கின்றன. ஆனால் போர் முடியும்போது கீழ்மைகள் மட்டுமே எஞ்சுகின்றன.

எத்தனை பெரும்போர். மரணமே காற்றாக திசைகளை மூடியிருந்த ஐம்பத்திரண்டு நாட்கள்…

தர்மம் வென்றதா ? வென்றதெனில் இன்று ஏன் இன்னமும் அதர்மம் வீற்றிருக்கிறது ?

வென்றது எது ? அன்பர்களே, வென்றது வல்லமை. வில் வல்லமை ,சொல் வல்லமை. எங்கு வில்லும் சொல்லும் முயங்குகின்றதோ அங்கு வெற்றி உள்ளது என்று காட்டியது அந்த பெரும்போர்.

(பார்வையாளர் ‘ஆகா ‘ என்கிறார்கள்.)

அந்த ரணகளத்தின் நடுவே இன்னும் பொருள் தெரியாத ஒரு சொல் எனக் கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். தன் குழந்தைகளை ஒருவரை ஒருவர் கொன்றொழிப்பதைக் கண்டு படுத்திருந்தார். பேரர்கள் விளையாடக் கண்டு முன்றில் மஞ்சத்தில் ஓய்வு கொள்ளும் பாட்டனைப் போல. வம்ச பரம்பரைகள் கருகிய வெம்மையிலிருந்து மெய்ஞானத்தின் சாரத்தை அவர் கற்றார். அன்பர்களே அந்த மெய்ஞானம் எத்தனை மகத்தானதாக இருக்க வேண்டும்!

(பார்வையாளர் சிரிக்கிறார்கள்)

அந்த மெய்ஞானத்தை அவர் தன் வாரிசு அர்ச்சுனனுக்குச் சொன்னார். பீஷ்மகீதை! வென்றவனின் கீதைக்கு பதிலாக அமைந்த தோற்றவனின் கீதை.

(சிரிப்பு)

பிறகென்ன ? உயிர்தியாகம்தானே ? உத்தராயண நாள் முழுமை பெற்றது. சூரியன் வடதிசைக் கோட்டில் பொருந்தினான். மகாபுருஷனான பீஷ்மர் தன் உடலை யோகத்தில் அமர்த்தினார். ஒவ்வொரு உறுப்பாக யோகத்தில் மூழ்கும்போது அவற்றில் தைத்திருந்த அம்புகள் உதிர்ந்து அப்பகுதி அழகு பெற்றது கைகள். தோள்கள் மார்பு தொடைகள். பிறகு அவரது மனம் யோகத்தில் ஆழ்ந்தது. அதிலிருந்து எத்தனை அம்புகள் உதிர்ந்தன என யார் அறிவார்.

பின்பு அவரது சிரம் உடைந்து தெறித்தது. அவரது உயிர்ப்பறவை விண்ணை நோக்கிப் பாய்ந்தது. நாளில்லா நாழிகையில்லா நொடியில்லா பெரும் கால வெளி நோக்கி . . .

(பீஷ்மர் நெளிந்து துடிக்க ஆரம்பித்து உடல் உதறி வலிப்பு கொள்கிறார். ஆ!! என அலறுகிறார். அவரைச் சுற்றி நிழல்கள் நடமிடுகின்றன. வெண்கொடிகளும் செந்நிறக் கொடிகளும் கருநிறக் கொடிகளும் ஏந்திய வீரர்கள் சுழன்று வருகின்றனர். அவர்களுடன் பாகவதரும் கலந்து கொள்கிறார். அர்த்தமற்ற ஒரு ஒலிச்சூழல், உடற்சுழல்)

பீஷ்மர்: அம்மா! அம்மா

(நிழல் நடனம் அடங்குகிறது)

பீஷ்மர்: தாகம்! தாகம்!

(தருமரும் அர்ச்சுனனும் முன்வர பீமன் தொடர பாண்டவர்கள் வருகிறார்கள்.)

பீஷ்மர்: யார் ? யார் நீங்கள் ?

தருமன்: தாத்தா இது நான் தருமன்!

பீஷ்மர்: யார் ? தருமனா ? யார் நீ ?

தருமன்: தாத்தா ?

அர்ச்சுனன்: (கோபத்துடன்) பிதாமகரே இவர் இந்திரப்பிரஸ்தத்தின் அதிபர். இவர் பெயர் தருமசேனர். இவரது பிரஜை நீர்.

பீஷ்மர்: தண்ணீர்.

தருமன்: தம்பி சற்று சும்மா இரு. (குவளை நீரை நீட்டுகிறான்)

பீஷ்மர்: (பதறி) ரத்தம்! (உடல் வெடவெடக்க எழ முயல்கிறார்)

பீமன்: (அவரைப் பற்றி) பிதாமகரே . . . இதோ பாருங்கள். தண்ணீர் . . . (உரக்க) கங்கை நீர்.

பீஷ்மர்: இது அவளுடைய உதிரம் !அவளுடைய உதிரம் . . . சிவப்பு நிறம் . . .

தருமர்: (வலுக்கட்டாயமாக நீரை புகட்டியபடி) தளர்ந்து விட்டார்.

பீஷ்மர்: (நீர் அருந்தியதும் புத்துணர்ச்சி பெற்று மெல்ல நிதானமாகி) தருமா நீயா ?

தருமர்: ஆம் தந்தையே

பீஷ்மர்: இது எத்தனை நாள் ?

பீமன்: போர் முடிந்துவிட்டது.

பீஷ்மர்: (கணநேரத்தில் அனைத்தையும் ஊகித்து) சுயோதனன் ?

பீமன்: மாண்டான்

பீஷ்மர்: (பரிதவிப்புடன்) என் மகன் திருதராஷ்ட்ரன். அவன் எப்படியிருக்கிறான்.

(அனைவரும் அமைதியடைந்து தங்களுக்குள் பார்க்கிறார்கள்)

பீஷ்மர்: எப்படி இருக்கிறான் அவன் ? என் குழந்தை. அவன் என்ன செய்கிறான் ?

பீமன்: (மூர்க்கமாக) இப்போது சற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறார். விரைவில் தெளிவடைவார்.

பீஷ்மர்: (அவனை பரிதவிப்புடன் பார்த்து) நீ . . . நீ குலாந்தகன். குருகுலத்தின் எமன் . . .

பீமன்: ஆம், அது என் மெய்கீர்த்தி

பீஷ்மர்: (வாயடைந்து) இதற்காகத்தானா ? (மனம் உடைந்து வீரிடுகிறார்) இதற்காகத்தானா ? எம்பிரானே எல்லாம் இதற்காகத்தானா ?

(பாண்டவர்கள் அவர் அழுவதை பரிதவிப்புடன் பார்த்து நிற்கிறார்கள்.)

அர்ச்சுனன்: பிதாமகரே ,தாங்கள் தர்மம் என்ன என்பதை அறிந்தவர்.

பீஷ்மர்: இல்லை. என் அகந்தை அது. நான் தர்மத்தை அறிந்ததே இல்லை. அதன் பாதை என் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் பாதத் தடங்களைக்கூட நான் கண்டதில்லை. நானறிந்ததெல்லாம் என் அகங்காரத்தை மட்டும்தான்.

அர்ச்சுனன்: இங்கு தங்களிடம் தர்மஞானம் பெறுவதற்காக வந்திருக்கிறோம்.

பீஷ்மர்: எனக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. (கண்ணீருடன்) என் துயரை சொல்லி அழுவதற்குக்கூட என்னிடம் மொழியில்லை.

தருமன்: உங்களிடம் தர்ம உபதேசம் பெற்று வரும்படி யாதவக் கிருஷ்ணன் எங்களை அனுப்பினான்.

பீஷ்மர்: (பிரமித்து) யார் யாதவனா ? என்னிடமா ?

தருமன்: ஆம்.

பீஷ்மர்: தர்ம உபதேசம் என்றா சொன்னான்.

தருமன்: இல்லை. தங்கள் சொற்களை கேட்டு வரும்படி கூறினான்.

பீஷ்மர்: சொற்களை ? வெறும் சொற்களையா ? (மெதுவாக அமைதி கொண்டு) ஆம் சொற்கள் மட்டும்தான்.

அர்ச்சுனன்: ஆம் பிதாமகரே.

பீஷ்மர்: நான் உணர்பவற்றைச் சொல்கிறேன். இவை தர்மங்களா என்று எனக்குத் தெரியாது. ஒரு வயோதிகன் மரணத்தை முன்னிறுத்திச் சொல்பவை இவை.

தருமன்: சொல்லுங்கள் பிதாமகரே

பீஷ்மர்: எப்போதும் தலையில் மணிமுடியுடனும் கவசங்களுடனும் இருந்த ஒரு மன்னன் இருந்தான். அவனை எவராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் தன் குழந்தையின் மென்மையான சருமத்தை அவன் உணர்ந்ததே இல்லை. அந்த கவசத்திற்குள் அவன் இறந்தான். மட்கி அழிந்தான். அயினும் அக்கவசம் தன் பழக்கத்தால் நடமாடியது. நாட்டை ஆண்டது. அதை தர்மம் தவறாத மன்னர் என்றனர் சூதர்கள்.

தருமன்: புரிகிறது தந்தையே.

பீஷ்மர்: நியமங்களில் கடுமையான ஒரு உபாத்யாயன் இருந்தான். தன் சீடர்களை தண்டிக்க அவன் வாளை வைத்திருந்தான். அவனுடைய நூல்களிலெல்லாம் உதிரம் படர்ந்திருந்தது.

தருமன்: ஆம் தந்தையே.

பீஷ்மர்: களத்தில் உதிரத்துடன் உடைந்து விழுந்த ஒரு கதை மீது மண் படிந்தது. அதில் விதைகள் முளைத்து மெல்லிய மலர்கள் விரிந்தன. அவற்றைத்தேடி மென்மையான பட்டாம்பூச்சிகள் வருவதைக் காண்கிறேன்…

தருமன்: ஆம் தந்தையே. மலர்களால் கைவிடப்பட்ட இடம் ஏதும் எங்கும் இல்லை.

பீஷ்மர்: நீ போகலாம். (கண்களை மூடிக் கொள்கிறார்.)

பீமன்: என்ன சொல்கிறார் ? உளறுகிறாரா ?

அர்ச்சுனன்: ஏதோ தர்ம விசாரம். அதற்குத்தான் இங்கு பஞ்சமே இல்லை.

(போகிறார்கள்)

பீஷ்மர்: அம்மா!

(நிழல் எழுந்து வருகிறது)

நிழல்: சொல்லி முடிக்கவில்லையா ? உன்னுள் எரியும் அந்த ரணம் எந்த அம்பின் நுனியில் ?

பீஷ்மர்: இல்லை. இன்னுமில்லை.

நிழல்: உத்தராயணம் முழுமை பெற்றாகிவிட்டது. இன்னும் என்ன ?

பீஷ்மர்: தெரியவில்லை. ஆனால் இன்னும் என் மறுகரை தெரியவில்லை. . .

நிழல்: (பொறுமையிழந்து) நீ விளையாடுகிறாய். மனங்களையும் உணர்ச்சிகளையும் வைத்து விளையாடும் மாபெரும் தெய்வங்களை சதுரங்கத்திற்கு அழைக்கிறாய்.

(செந்நிறக் கொடியுடன் வீரன் செல்கிறான். தொடர்ந்து களைத்து துவண்டு விழுந்து உடலை இழுத்தபடி கரிய கொடி வீரன்)

பீஷ்மர்: கனத்த இரவு. குளிர்ந்த இரவு. இந்த இரவுக்கு தெரியும்.

(இரவின் ஒலிகள் எழுகின்றன. நாய் நரிகளின் உளைகள். கழுதைப்புலி முகர்ந்தபடி வருகிறது.)

பீஷ்மர்: போ . . . போ

கழுதைப்புலி: கர்ர் (சீறி பின்வாங்கி பதுங்கி) கர்ர் . . . (பற்களை காட்டி) ஹிஹிஹிஹி!

பீஷ்மர்: இது மிகச் சரியாக வந்துவிட்டது.

கழுதைப்புலி: (தலைதூக்கி) என் வயிற்றுக்குள் மரணம் குடியிருக்கிறது. என் நாசியில் வாயு அதற்கு சேவை செய்கிறது.

பீஷ்மர்: இன்றிரவா ?

கழுதைப்புலி: ஆம், இன்றிரவு. இன்றிரவு உன் உடலை நான் உண்பேன்.

பீஷ்மர்: உனக்கு சாந்தி கிடைப்பதாக!

(நிழல்கள் மெல்ல இணைந்து மரணதேவி பிறந்து வருகிறாள்.)

மரணதேவி: குழந்தை!

பீஷ்மர்: தாயே. . .

மரணதேவி: இன்னும் சில நாழிகைகளுக்குள் உன் ஆத்மா தயாராகிவிடும்.

பீஷ்மர்: தாயே என் மனம் இன்னும் அதே தத்தளிப்புடன் இருக்கிறது.

மரணதேவி: உனக்கு சுற்றும் எப்போதும் விடைகள் கனிந்து காத்திருந்தன குழந்தை. நீ அவற்றை காணவில்லை. ஏனெனில் உனக்குப் பசியில்லை. இன்று உன் பசி கனிந்துவிட்டது.

பீஷ்மர்: தாயே, நீயே ஏன் எனக்கு பதில் கூறக்கூடாது ? நீயறியாத பதில்களா இந்த வாழ்வில் ?

மரணதேவி: (சிரித்து) நான் வாழ்வின் மறுகரை. உன்னைப் பொறுத்தவரை குளிர்ந்த மென்மையான ஒரு தொடுகை. ஒரு இதமான அணைப்பு. அவ்வளவுதான். எனக்கென வடிவோ மொழியோ இல்லை. கணந்தோறும் பிறக்கும் முடிவற்ற தேவதை நான்.

(கலைந்து மறைகிறது)

பீஷ்மர்: விண்மீன்கள் நடுங்குகின்றன. இரவு மூச்சடக்கி காத்து நிற்கிறது. அரங்கு தயாராகிவிட்டது. வரப்போவது யார் ?

(காலடியோசைகள்)

பீஷ்மர்: அவன்தான். விடையே வடிவானவன். விஸ்வரூபன்.

(ஓங்கும் சங்கொலி. மணியோசை. அரங்குக்கு வருபவன் சிகண்டி)

பீஷ்மர்: (அவனை கவனித்து கோபத்துடன்) நீயா, இங்கு ஏன் வந்தாய் ?

சிகண்டி: இங்கு வரவேண்டுமென்று பட்டது. மன்னிக்க வேண்டும்.

பீஷ்மர்: (ஏமாற்றமும் ஆற்றாமையும் வெறிகூட்ட) போ. போய்விடு . . . உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை.

சிகண்டி: உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டுமென நான் எண்ண ஆரம்பித்து எத்தனையோ வருடங்களாகின்றன. அன்று ஆற்றின் கரையில் நீங்கள் எனக்கு அம்பு வித்தை கற்றுத்தந்து மீண்ட மறுவருடமே உங்கள் முகத்தை அறிந்து கொண்டேன். அஸ்தினபுரிக்கு வருவது குறித்து கனவு கண்டு கனவு கண்டு நாட்களை கழித்தேன். கால்கள் துணியவில்லை.

பீஷ்மர்: இப்போது மட்டும் ஏன் வந்தாய் ?

சிகண்டி: நேராக களத்தில் உங்களை சந்தித்தேன். உங்களை வீழ்த்தினேன். [தயங்கி ] உங்கள் மீதான அம்புகள் எல்லாமே என்னிலும் எங்கோ வந்து தைத்தன. நான் என் ஆடிப்பாவையுடன் போர் புரிவதுபோன்ற பிரமைக்கு ஆளானேன்.. இங்கு நீங்கள் மரணத்தை எதிர்நோக்கி கிடப்பது அறிந்து சற்று தொலைவில் உங்களை ஒவ்வொரு கணமும் எண்ணியபடி நானும் காத்திருந்தேன். நீங்கள் இறவாமல் நான் இறக்க முடியாது ….இதோ இக்கணம் அமைந்தது. என் கால்கள் என்னை இங்கே கொண்டு வந்தன.

பீஷ்மர்: [எரிச்சலுடன் ] உனக்கு என்ன வேண்டும் ?

சிகண்டி: பிதாமகரே. என் ஆத்மாவை இப்போது அலைக்கழிக்கும் கேள்வி ஒன்று உண்டு. எங்கும் அதன் விடையை நான் கண்டடையவில்லை. இதோ இங்கு உங்களிடமிருந்து மட்டுமே அதை கண்டடைய முடியுமென எனக்குப் பட்டது. . .

பீஷ்மர்: (வெறுப்புடன்) நீ என்னிடம் தாங்கமுடியாத வெறுப்பையே உண்டு பண்ணுகிறாய்.

சிகண்டி: எனக்கும் உங்களைப் பற்றிய எண்ணமே நெருப்பால் சுடுவது போலத்தான் இருக்கிறது. (அருகே வந்து) ஒருவரை ஒருவர் வெறுத்தபடி, அந்த வெறுப்பினாலேயே ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டபடி இத்தனை வருடங்களைக் கழித்திருக்கிறோம் . . . நம் இருவருடைய விதிகளும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளன.

பீஷ்மர்: உன்னுடைய வீண் பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை.

சிகண்டி: நான் விஷயத்திற்கு வருகிறேன் பிதாமகரே . . . நீங்கள் அறிந்திருப்பீர்கள் நீங்கள் களத்தில் வீழ்ந்த அன்றே நானும் கொல்லப்பட்டேன். மாபெரும் வில்லாளியான அஸ்வத்தாமா என்னை தன் முழங்கும் அம்புகளுடன் எதிர்கொண்டார். ஆனால் குருஷேத்திரமே திகைக்கும்படி நான் அவரை எதிர்த்துப் போரிட்டேன். அவரை அம்புகளால் நெளியச் செய்தேன். தேரையும் கொடியையும் உடைத்து வீசினேன். பின்பு அவரது அம்பு என் மார்பைத் துளைத்தது. தேர்த்தட்டில் நின்றிருந்த என்னை பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கரம் ஒன்று அள்ளி எடுத்து மார்போடு சேர்த்து கொண்டது.

பீஷ்மர்: வீரமரணம்! (இகழ்ச்சியாக) அது எவருக்கும் எளிதுதான்.

சிகண்டி: (கவனிக்காமல்) வீரர்களுக்கான மரணம். அதோ சற்று அப்பால் என் உடல் இன்னமும் கிடக்கிறது. ஏனெனில் இன்னும் என் உடலில் இருந்து முழு உயிரும் பிரியவில்லை.

பீஷ்மர்: ஏன் ?

சிகண்டி: அதமர்களுக்கு ரகசிய உறுப்புகள் வழியாக உயிர் பிரியும் என்று உபவேத விதி. என் உயிர் வழி தேட முடியாது தவிக்கிறது போலும்

.

பீஷ்மர்: சீ நீசா. உன் மொழி நாற்றமெடுக்கிறது.

சிகண்டி: (சிரித்து) பிதாமகரே நீங்கள் பேசும் தர்மங்களும் எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றன. (சற்று சிந்தனை வயப்பட்டு) மரணம் பரவிய சிவந்த பூமியில் கிடந்தேன். நாயும் நரியும் கடித்து இழுக்கும் பிணங்களுக்கு மத்தியில் பிணமாக. அப்போது என் முன் மரணமூர்த்தி தோன்றியது மனித உடலும், பன்றியின் முகமும், இரு கரங்களிலும் உழவாரமும் கழுமுனையும் கொண்ட ஒரு விபரீத வடிவமாக.

பீஷ்மர்: (வியப்புடன்) மரண தேவதையா ?

சிகண்டி: ஆம், கழிவுகளை அகற்றும் தெய்வத்துக்கு அது உகந்த தோற்றம்தான் என எண்ணிக்கொண்டேன்.

(சிகண்டிக்குப் பின்னால் அந்த தெய்வம் உருக்கொள்கிறது)

சிகண்டி:அதன் வாயிலிருந்து எழுந்த கடும் துர்நாற்றம் என்மீது படர்ந்தது.

(பன்றி போல அந்த தெய்வம் உறுமுகிறது.)

சிகண்டி: (கைகளால் முகம் மறைத்து) பிண நெடி.

தெய்வம்: நூறு நூறு யுகங்களாக செத்து மட்கிய மனிதர்களின் நெடி அது.

சிகண்டி: பிணங்கள் . . .

தெய்வம்: பிணங்களல்ல மூடா. பிணங்களை மண் உண்டு விடுகிறது. உப்பாக மாற்றி மரங்களுக்கும் செடிகளுக்கும் தந்துவிடுகின்றது. அவை மலர்களை நிரப்புகின்றன. நறுமணம் பொழிகின்றன. இது அம்மனிதர்களின் காமமும் குரோதமும் மோகமும் நைந்து மட்கிய சேற்றின் வீச்சம்.

சிகண்டி: என்னை எடுத்துக்கொள். என் பணி முடிந்தது.

தெய்வம்: உன்னிடம் குரோதம் இல்லையா ?

சிகண்டி : இருந்தது.ஆனால் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை . இப்போது என்னிடம் இருப்பது இலக்கை அடைந்த அம்பின் மெளனம் மட்டுமே

தெய்வம் : நீ வீர மரணம் அடைந்தவன். வீர சுவர்க்கத்துக்கு உரிமை உடையவன் . ஆனால் …. [ குழப்பத்துடன் ] சொற்கம் என்பது என்ன ? நீ என்ன நினைக்கிறாய் ?

சிகண்டி : இன்பங்கள் மட்டுமே நிறைந்த ஓர் இடம்

தெய்வம்: சரி , சொற்கத்தில் நீ அடைய விழையும் இன்பங்கள் என்ன ?

சிகண்டி : இந்த மண்ணில் ஒருபோதும் சாத்தியமாகாத பேரின்பங்கள்….

தெய்வம் :சரியாக சொன்னாய் [நகைத்து] அவை என்ன ? [அவனைக் கூர்ந்து பார்த்து ]உன் ஆசைகள் என்ன ?

சிகண்டி : [திகைத்து ] எனக்குத்தெரியவில்லை .என்னால் எதையுமே எனக்குள்ளிருந்து தொட்டெடுக்க இயலவில்லை .

தெய்வம்: இதுதான் பிரச்சினையே…. நீ இறந்து விழுந்த போது உன்னைத்தேடி வந்த என் முதல் தூதர்கள் அதிர்ந்து போனார்கள். இங்கே அவர்கள் எதையுமே காணவில்லை. அவர்களால் உடலை காணமுடியாது . ஆத்மாவின் ஆழத்தை மட்டுமே காண்பவர்கள் அவர்கள் . இங்கு அவர்கள் சூனியத்தையே கண்டார்கள் …..

சிகண்டி : எனக்கு உன பேச்சு சற்றும் புரியவில்லை…

தெய்வம்: மகனே உனக்கு மனித மனங்களைப் பற்றி தெரியாது. கண்ணற்றவன் அறியும் சமுத்திரம் நீ கண்டது . ஒலிகள் அலைநுரைத் துளிகள் , அவ்வளவுதான். மனிதர்களுக்குள் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆழியின்மீது சூரியன் உதிப்பதேயில்லை

சிகண்டி: நான் அதை உணர்ந்திருக்கிறேன். சில சமயம் சொற்களுக்கப்பாலிருந்து மெல்லிய கடலிரைச்சல் ஒன்று எழுவதைக் கண்டிருக்கிறேன்…

தெய்வம்: அகங்காரமும் காமமும் இரு பெரும் பாம்புகள் போல முடிவின்றி இணைசேர்கின்றன அங்கு. ஒவ்வொருவருக்கும் அவரவர் அந்தரங்கக் கனவுகளால் தனியாக சொற்கம் உருவாக்கபடுகிறது என நீ அறிந்திருப்பாய். ஏனெனில் இரு மனிதர்கள் ஒருபோதும் ஒரு துளி மகிழ்ச்சியையேனும் விட்டுக் கொடுக்காமல் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ முடியாது…

சிகண்டி : அங்கு வேறு எவருமே இருப்பதில்லையா ?

தெய்வம்: உண்மையில் இல்லை . இருப்பது அவர்களுடைய ஆசைகள் சூழ்ந்துள்ள ஆடிகளில் பட்டு பெருகும் பிம்பங்கள்தான். ஆனால் அவர்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமானவர்களெல்லாம் பிடித்தமான விதங்களில் மட்டும் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள். சொற்கம் என்பது ஒரு பெரும் பிரமை. உண்மையில் அது மனிதர்கள் இங்கு வாழும் வாழ்க்கையின் மறு பக்கம். இங்கே அவர்களுக்குள் இருக்கும் உலகம் அங்கே வெளியே விரிந்துவிடுகிறது. இங்குள்ள வெளியுலகம் அங்கே உள்ளே துடித்துக் கொண்டிருக்கும்…

சிகண்டி: இத்தனை துக்கங்களும் சிக்கல்களும் கொண்ட இவ்வுலகமா ? ஏன் ?

தெய்வம்: பிரியமானவை மட்டும் பிரியத்துக்குரிய விதத்தில் அமைந்த உலகில் அனுபவம் எப்படி வித விதமான வடிவங்களைக் கொள்ள முடியும். ? மனிதர்களுக்கு வெற்றி தேவை. வெற்றிக்கு எதிரி தேவை. எதிரி மீது வெறுப்பு தேவை . வெறுப்பிலிருந்தே விருப்பத்தை அடையாளம் காணமுடியும் … [ தலை நிமிர்த்தி தீர்க்க தரிசன பாவனையில் ] காமகுரோத மோகங்களை உள்ளிருந்து ஊறவைக்கும் மிக அந்தரங்கமான ஓர் உலகமாக இந்த மண்ணுலகம் அவர்களுக்குள் இருக்கும். அங்கு இம்மண்ணுலகுக்காக அவர்கள் அந்தரங்கத்தில் ஏங்கிக் கொண்டிருப்பார்கள்..

சிகண்டி: மனிதர்களை எண்ணி சிரிக்கத்தான் தோன்றுகிறது.

தெய்வம்: என் கடமை உன்னை உனக்குரிய சொற்கத்துக்கு கொண்டு செல்வது . உன் சொற்கம் எதனால் ஆனது ?

சிகண்டி : நான் இப்போது ஏறத்தாழ ஆண்தான்.

தெய்வம் : ஆண்களின் சொற்கம் மிக எளிமையானது . பெண் உடல்கள் நிரம்பி வழிவது அது . பேரழகிகள் முதல் பெரும் குரூபிகள் வரை எண்ணற்ற பெண்கள் . அங்கு ஒவ்வொரு கணமும் ஒரு பெண்ணுடலால் ஆனது என்றால் நீ நம்பமாட்டாய். முடிவில்லாத புணர்ச்சி. இடைவேளையில் இளைப்பாற ஓர் எதிரி — அவ்வளவுதான். அழகில் ஆபாசத்தையும் ஆபாசத்தில் அழகையும் கண்டு மகிழ்ந்தபடி ….

சிகண்டி : நான் என்னை பெண்ணாகவும் உணர்ந்ததுண்டு .

தெய்வம்: பெண்களின் உலகம் மேலும் எளியது . இருவகை ஆண்கள் . சொல்லை ஆயுதமாக்கிய அழகர்கள். லிங்கத்தை ஆயுதமாகக் பலசாலிகள் . ஒருவரை ஒருவர் இடமாற்றம் செய்து, ஒருவன் சலிக்க மற்றவன் முன்வந்து, அவள் மனதையும் உடலையும் புணர்ந்து புணர்ந்து… சொற்கம் என்பது சில வேட மாற்றங்களிடன் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரே செயல்தான்..

சிகண்டி : போதும்!

தெய்வம்: உண்மையில் இரு சொற்கங்கள்தான் உள்ளன. அவற்றின் நகல்கள்தான் மாற்றி மாற்றி வினியோகிக்கப்படுகின்றன. ஒன்றில் மனிதர்கள் பிறிதில் நிரம்பிக் கொள்ளத் துடிக்கிறார்கள்… இன்னொன்றில் தங்களை நிரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள் . என்றாவது பிரம்மாவுக்கு கைத்தவறு நிகழ்ந்து இவை ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டால் இரண்டுமே முடிவின்மையில் ஸ்தம்பித்துவிடும்.

சிகண்டி : என் சொற்கம் இது இரண்டுமல்ல.

தெய்வம் : ஆம் , அதுதான் இங்கே நான் வரக் காரணம் . உனக்கு சில நாட்களை அளிக்கிறேன் . அதற்குள் நீ கண்டடைய முடியுமா உனது சொற்கம் எதுவென ?

சிகண்டி: நான் என் உடலில் இருந்து மட்டும்தான் தொடங்க முடியுமா ?

தெய்வம்: பெரும்பாலும் அப்படித்தான். உன் உடல்தானே நீ ? பிறிதெல்லாம் அதிலிருந்து முளைப்பவைதானே ?

[தெய்வம் மறைகிறது . சிகண்டி திரும்புகிறான் ]

பீஷ்மர் : அருவருப்பூட்டும் ஒரு ஆபாசக்கதை. உன் மனதில் உள்ள நரகலையே உன் தெய்வங்களும் சொல்கின்றன..

சிகண்டி: ஆம், அது எப்போதுமே அப்படித்தானே ? [சிரித்து ] தெய்வங்களிடம் நாம் பொய்சொல்ல முடியாது. தெய்வங்களின் வலிமையே அதில்தான் இருக்கிறது..

பீஷ்மர்: [வெடித்து ] போடா ![ ஆவேசத்துடன்} போ போய்விடு நீசப்பிறவியே …

சிகண்டி : [பொருட்படுத்தாமல் ] ஆகவே நான் முதலில் காலத்தில் ஊடுருவி என் அன்னையைச் சென்று பார்த்தேன் . அது ஒரு சுயம்வரமேடை …..

பீஷ்மர் : மூடா . நிறுத்து. நீ அங்கே நுழையக் கூடாது ….

சிகண்டி: நான் எப்போதுமே அந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன் … [திரும்புகிறான் . அரங்கில் சுயம்வரமேடை உருக்கொள்கிறது. மன்னர்கள் அணிவகுக்கிறார்கள் . வெளியே மெல்ல மங்கல வாத்தியங்கள் ஒலிக்கின்றன]

நிமித்திகன்: ஜய விஜயீபவ!

(அரங்குக்கு வெளியே வாழ்த்தொலிகள் முழங்குகின்றன)

நிமித்திகன்: இன்று சுக்ல பஞ்சமி. மகாமங்கல நாள். பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் இந்நாள் ஒரு பொன்னாள் என்று குறிக்கப்படும். ஏனெனில் கங்கையின் முடிவற்ற கருணையால் அமுதூட்டப்பட்ட காசி நாட்டின் அதிபர் தோல்வியறியா பெருங்குலத்து முதல்வர் மாமன்னர் . . பீமசேனரின் புதல்விகள் அம்பைதேவி, அம்பாலிகா தேவி, அம்பிகா தேவி ஆகியோரின் சுயம்வர நாள் என இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாரத நாட்டின் அத்தனை ஷத்ரிய குலங்களிலிருந்தும் இங்கே வீரர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை காசிநாட்டு செங்கோல் பணிந்து வரவேற்கிறது.

(முரசொலி: வாழ்த்துக் கூக்குரல்கள்)

சிகண்டி :நான் என் அன்னையின் மிக அருகே சென்றேன். அது வேறு ஒரு வெளி . அங்கே நானும் அவளும் மட்டும்தான். பிற அனைவருமே சுவர் ஓவியங்கள் போல …

[வாழ்த்தொலிகள் எழ அம்பை கோல்காரன் துணைவர கையில் மாலையுடன் அரங்கில் பிரவேசிக்கிறாள்)

சிகண்டி :இதுதான் அவள் சுமந்தலையும் சொற்கம் போலும். இங்கு அவளன்றி அனைத்துமே நிழல்கள்..

[அம்பையை அவள் நிழல் தொடர்கிறது]

அம்பை: [நிழலிடம்] இவர்களில் யார் அழகன் ?

நிழல் :ஆண்களில் அழகற்றவர்கள் இல்லை . அதற்குரிய தருணம் அமையவேண்டும் ….. இவனைப்பார் . பெண்மை கலந்தவன். இவனை வெட்கப்படச் செய்தால் அழகன்..

அம்பை : பாரதவர்ஷமே திரண்டிருக்கிரது…

நிழல் : ஆண் உடல்கள், அவ்வளவுதான்..

அம்பை: எத்தனை மன்னர்கள், எவ்வளவு மெய்கீர்த்திகள்!

நிழல்: தோள்கள்.. மார்புகள்.. புஜங்கள் ..அடிவயிறுகள் ..தொடைகள் … மீசைகள்.. உதடுகள் .. காமம் ஒளிரும் கண்கள்…இவன் கரிய நிறமுள்ளவன், உயர்மானவன்….

[அம்பை மாலையுடன் மன்னர்கள் வரிசையை மிக மெல்ல நடன பாவனையுடன் கடந்து செல்கிறாள் . ஒவ்வொரு மன்னனும் மெல்ல எழுந்து அவளருகே நெருங்கி அவளை தொடாமல் முயங்கி பின் களைத்து மூச்சிளைத்து மெல்ல சரிந்து விழுந்து எழுந்துவந்து பழையபடி நிற்கிறார்கள்]

அம்பை: என் கையசைவுக்கு காத்திருக்கும் உடல்கள். நான் விரும்பினால் பெற்றுக் கொள்ளக்கூடிய அவர்களுடைய குழந்தைகள்….

நிழல்:இவர்கள் உன்னை மட்டுமே புணரமுடியும்…. [சிரித்து] என்னையும் புணர்பவநே உன்னை நிறைக்கமுடியும்…

கோல்காரன்: இவர் வங்க மன்னர் மகாபலன். இவருடைய வலிமை படகுகளில் உள்ளது. கங்கையையே தன் பாய்களால் மூடிவிடுமளவுக்கு படகுகளுக்கு உரிமையாளர். இவரது துறைமுகத்தில் திறைப்பணம் மரக்கால்களால் அள்ளப்படுகிறது என்பர் சூதர்.

நிழல்: வயிறு பருத்தவன் …. குள்ளன்..

அம்பை: உன் உடல் நிழலால் ஆனது. அதை அவன் எப்படி தழுவ முடியும் ? .

நிழல்: ஏன் அவனது நிழல் என்னை அணுகட்டுமே ?

அம்பை:நிழல்களும் நிழல்களும் புணர்ந்து உருவாவது கரிய வெளிமட்டுமே..

ஒரு மன்னன்: இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் நடையில் போர்க்குதிரையின் நிமிர்வும் மிடுக்கும் உள்ளது.

இன்னொருவன்: எழுந்து படபடக்கும் தீத்தழல் போலிருக்கிறாள். அந்தபுரத்துக்குள் அடைபடும் பெண்ணல்ல இவள்.

முதல் மன்னர்: அக்கினி ஆக்கவும் செய்யும். அழிக்கவும் செய்யும்…

அம்பையின் நிழல் :நான் இவர்களை அழைக்கிறேன் …

அம்பை:சீ உனக்கு வெட்கமே இல்லை.

நிழல்: நிழல் நிழல்களுடன் சேர விரும்புகிறது .அந்த துடிப்பு மட்டுமே அதில் உள்ளது

[நிழல்கள் போல ஒவ்வொரு மன்னராக எழுந்து சென்று அந்த நிழலை முயங்கிச் களைத்துச் சரிகிறார்கள். ]

நிழல்: உண்டு முடித்த கனிகளின் ஓடுகள்….

அம்பை : உண்டு தீராத கனி உன் உள்ளே பழுத்த காமம்தான் …

நிழல்:காமமே அதுதான்… பசியை அடக்காத பெருவிருந்து…

மன்னன் ஒருவன்: காட்டை உண்டு முன்னேறும் நெருப்பு . . .

இரண்டாம் மன்னன்: அவள் சால்வனையே நெருங்குகிறாள்.

அம்பை: அவன் சால்வன் .அவன் கண்களில் ஆசை கொதிக்கிறது. எனக்கான ஆசை. என் ஆசையை விட என்னைத்தூண்டுவது எனக்கான ஆசைதான்…..

நிழல்: அவன் உன்முன் தன்னை படைக்க காத்திருக்கிறான் .அவன் நிழல் வெறுமையாக நிற்கிறது …

[வெளியே கூக்குரல்கள் எழுகின்றன . உலோகக் கதவுகள் பிளக்கும் பேரோசை ]

வெளியே குரல்கள்: பீஷ்மர்! பீஷ்மர்!

காசிமன்னன் குரல் : பீஷ்மரே தாங்கள் . . .

பீஷ்மரின் குரல் : காசி மன்னரே உன் பெண்களை நான் இராட்சத மணமுறைப்படி கவர்ந்து செல்லவிருக்கிறேன். [அம்பு அம்பையின் கையிலிருந்த மாலையை விழச் செய்கிறது.]

அம்பை : [அதிர்ச்சியுடன் ] இல்லை. இதை நான் அனுமதிக்க மாட்டேன். இது என் உலகம்… இங்கு எவரும் அத்து மீற முடியாது…(கதறியபடி சால்வனை நோக்கி ஓடுகிறாள்) அந்த . . . இதை தடுக்க யாருமில்லையா ? [மயங்கி விழுகிறாள் நிழல் அவளை தூக்கிச் செல்கின்றது ]

சிகண்டி : பிதாமகரே இதுதான் நான் கண்டது .

பீஷ்மர் : காலமே மனிதனுக்கு மிகப்பெரிய ஆடை . [கோபத்துடன்] நீ என்னை நிர்வாணமாக்க முயல்கிறாய்..

சிகண்டி: [சிரித்து ] நிர்வாணமே முக்தி என்பார்கள்.

பீஷ்மர் : உன் இழிபிறவிக்குரிய குரூரம் உன்னிடம் இருக்கிறது.

சிகண்டி :பிதாமரே எழுங்கள். இதோ காலத்தின் சிறிய மாயத்திரை . அப்பால் உங்கள் பழைய நாட்கள் . நான் உங்களை அங்கு காணவிழைகிறேன்.

[பீஷ்மரை அவரது நிழல் எழுப்புகிறது.அவர் உதற முனைகிறார் .ஆனால் நிழல்கள் அவரை வேடம் அணிவித்து இளைய பீஷ்மராக்குகின்றன.அஸ்தினபுரி அரண்மனை. வெளியே அரண்மனைக்குரிய ஒலிகள்.]

பீஷ்மர் : [அமைதியிழந்தவராக உலவி ]யாரங்கே ?

[வீரன் ஒருவன் வந்து பணிகிறான்]

பீஷ்மர் : விசித்திர வீரியன் பள்ளியறைக்கு சென்று விட்டானா ?

வீரன்:ஆம் ஆச்சாரியாரே

பீஷ்மர்: இளவரசிகள்..

வீரன் : ஆம். ஆனால்..

பீஷ்மர்: என்ன ?

வீரன்: மூத்த இளவரசியார் அழுதுகொண்டிருக்கிறார்கள்..

பீஷ்மர் :அழட்டும் .. நீ போகலாம்.

[பீஷ்மரின் நிழல் அவரை தொடர்கிறது ]

நிழல்: அவள் யாரையோ எண்ணித்தான் அழுகிறாள்…

பீஷ்மர்: வெற்றிகொள்ளப்பட்டவர்கள் அழுவதுண்டு..

நிழல் :வெற்றிகொள்ளப்பட்ட பெண் அழுவதில்லை.

பீஷ்மர்: [சற்று துணுக்குற்று ] என்ன சொல்கிறாய் ?

நிழல் ; அவள் உன்ன்னை வெற்றிகொள்ள தன் ஆயுதங்களையெல்லாம் எடுக்கவேண்டும் , அதுதான் உயிர்களின் நாடகம். இவள்… இவள் உன் வெற்றியை சற்றும் பொருட்படுத்தவில்லை …

பீஷ்மர்: அவள் எனக்கு ஒரு பொருட்டல்ல…

நிழல்: தன்னைப் பொருட்படுத்தாத பெண்ணைப்பற்றி அப்படிச் சொல்லத் திராணி கொண்ட ஆண்மகன் எவனுமில்லை…

பீஷ்மர்: சரி நீ போ .இன்றிரவாவது நான் தூங்கவேண்டும்…

நிழல்: இன்றிரவு நீ தூங்க முடியாது …

பீஷ்மர்: நீ போ

நிழல்: நான் நிழலல்லவா ?

பீஷ்மர்: ஆ! என்ன வதை இது.

நிழல்: ஆண்களின் காமம் ஆண்குறியிலும் அகங்காரத்திலும் குடிகொள்கிறது…. நீ …

பீஷ்மர்: நிறுத்து

நிழல்: தனித்த இரவுகளின் எதையும் தடைசெய்யமுடியாது பீஷ்மா. [அழுத்தமாக] உனது காமம் அகங்காரத்தில் மட்டுமே குடிகொள்கிறது. நீ கன்னி உடலில் நுழையும் லிங்கம் போல அந்த சுயம்வரப் பந்தலில் நூழைந்தாய். அப்போது உன் அகங்காரம் உயிர்துடிப்பு கொண்டு நின்றது….

பீஷ்மர்: என்ன அபத்தம் ! நல்லவேளை இச்சொற்களை மூன்றாம் மனிதர்கள் அறிவதில்லை …

நிழல்: அந்தப்போர் ஒரு புணர்ச்சி . நீ வென்றாய் . ஆனால் நீ ஆட்கொண்ட பெண் அமைதி கொள்ளவில்லை…

பீஷ்மர்: [கண்களைமூடிக் கொண்டு] இந்த இரவிலும் என் மனம் பித்துக்குள் செல்கிறது போலும்…

நிழல்: நீ நித்ய பிரம்மசாரி . மகாவிரதன். எனவே உன் காமத்துக்கு முகம் இல்லை . முகமின்மை ஒரு பெரும் சுதந்திரம் அல்லவா ? அதற்கு எல்லைகளே இல்லை .

பீஷ்மர் : [கண்களை மூடி] இல்லை . நான் என் எண்ணங்களை வெல்வேன். என்னை மீட்டெடுப்பேன்…..

நிழல் : கற்பனைகளின் காமம் கட்டுகளற்றது. உனக்குத்தெரியுமா பருவுலகின் மிருககாமம் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும்.கற்பனையுலகில் அடக்கப்படாது திமிறி அலையும் ஆபாசமான அகங்காரத்தை உன்மீது மோதும் பருவுலகு மட்டுமே தடுக்கும்….

பீஷ்மர்: [பொறுமை இழந்து ] ஆ! [தனக்குள்] புண்பட்ட மிருகம் போல அலறுகிறேன். புண் எங்கே ?

நிழல் [அழுத்தமாக] உனது வேடத்தில்

பீஷ்மர்: [குனிந்து முகம் பொத்தி அமர்ந்து ] இந்த இரவில் நான் நூறாயிரம் முறை செத்து பிறக்கிறேன்…

நிழல் : உன்னுள் ஊன் நெடி தேடி காடுமுழுக்க முகர்ந்தலையும் ஆயிரம் வனமிருகங்கள் . இவ்வரண்மனையின் அந்தப்புரங்களின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மணற்பருவும் உன்னை அறியும் .உன் ஆத்மா உழன்றலையும் இடங்கள் அல்லவா அவை ? பெண்கள் பருவமடைந்த மறு கணமே உன் பார்வையை அடையாளம் கொண்டுகொள்கிறார்கள் .பெண்குழந்தைகள் உன் கரங்களின் தொடுகையை தனித்தறிகிறார்கள் …உனது காமம் புற்றிலிருந்து வழிந்திறங்கி ஓசையின்றி பரவும் நாகம். அதன் உறக்கமில்லாத வைரமணிக் கண்கள் இருளில் ஒளிர்கின்றன. சிறு சீண்டலிலும் அது வெருண்டு படமெடுக்கிறது..

பீஷ்மர் [சரேலென எழுந்து அறையை பார்த்து ] யார் ? யார் இதற்குள் ?

நிழல்: யாருமில்லை. நான் உனது நிழல் . உன் ஆத்மா ஓலமிடுகிறது நான் நான் என. நீ அதை தர்மம் தர்மம் என சொல்லக் கற்றுக் கொண்டாய். ஆனால் அந்தரங்கத்தில் அச்சொல் போகம் போகம் என்று ஒலிக்கக் கேட்டாய்…

[பீஷ்மர் பித்து தெரியும் பார்வையுடன் சுற்றி வருகிறார் . பதறுகிறார். தடுமாறுகிறார் ]

நிழல்: உன்னுடைய தேவைதான் என்ன பீஷ்மா ? ஒரு..

[பீஷ்மர் அலறியபடி நிழல் மீது பாய்கிறார். அது சிக்கவில்லை . பிடிக்கு கிடைப்பவன் சிகண்டி]

சிகண்டி: பிதாமகரே என்ன இது ?

பீஷ்மர்: [அடையாளம் காணாமல்] யார் ? [காய்ச்சல் கண்டவர் போல நடுங்குகிறார்]

சிகண்டி: இது நான். சிகண்டி.

பீஷ்மர்: நிழல் நிழல்கள்… [பிரமைகொண்டவர் போல ] நிழல்கள் எங்குமே…அவைதான்

சிகண்டி: பிதாமகரே…

பீஷம்ர்: நீயா ? நீ ? அங்கே , என் இருண்ட சயன அறையில்….

சிகண்டி: நமக்கு இப்போது காலமில்லை, இடமில்லை. நாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே….

பீஷ்மர்: நீ என்னை இருண்ட பாதாளங்களுக்கு இட்டுச் செல்கிறாய். என் ஆத்மாவில் இருளையும் விஷத்தையும் நிரப்புகிறாய்…

சிகண்டி: அவை ஆத்மாவின் பாதாளங்கள்….[நிமிர்ந்து இருண்ட மூலை ஒன்றை நோக்கி தியான பாவம் கொண்டு நின்றபடி] அவளை நான் மீண்டும் கண்டேன்… அவள் ஒரு ரதத்தில் உங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கூந்தல் அவிழ்ந்து பறக்க, ஆடைகள் படபடக்க…

[அரங்கிற்கு அப்பால் குதிரைகளின் ஒலிகள்.]

சிகண்டி: குதிரைகளின் தசைத்திரட்சிகள் மீதே அவள் பார்வை லயித்திருந்தது. இறுக்கமான திரண்ட தசைநார்கள்…

[அரங்கில் அம்பை ரதத்திலேறியவளாக பிரவேசிக்கிறாள்]

சிகண்டி: அவள் முகம் வியர்த்திருந்தது . அங்கே எந்த பாவனைகளும் இல்லாமல் காமம் சிவந்து ஒளிவிட்டது….

[குதிரை ஒன்று எழுகிறது .தன் முகமூடியை கழற்றுகிறது]

அம்பை : யார் நீ ?

குதிரை: நான் ஹயக்ரீவன். நீ என்னை காமத்துடன் பார்த்தாய்…

அம்பை: [தடுமாறி] இல்லை….

ஹயக்ரீவன்: நீ எதையுமே என்னிடம் ஒளிக்க முடியாது. என் தசைகளைக் கண்டு காமம்கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை….உனக்கு இக்கணம் வேண்டும் முகம் என்ன [ ஒரு உத்தரீயத்தை வாங்கி அணிந்து ] இதோ நான் சால்வன்…

அம்பை: அவன் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் நான் பீஷ்மரை அடைந்தபிறகு அவனை பீஷ்மர் என் பாதங்களில் வீழ்த்துவார். அவன் தலையை நான் என் பாதங்களால் தொடுவேன் .அப்போது எனக்கு நான் விரும்பும் போகத்தின் உச்சம் கிடைக்கும்

ஹயக்ரீவன்: [ஏளனமாக] ஆ. உன் மனம் முதிர்ந்துவிட்டது . காமத்தில் தன்னகங்காரம் கலந்துவிட்டது [ தாடியை அணிந்துகொண்டு] அப்படியானால் நான் இப்போது பீஷ்மன்…

அம்பை: நான் வெல்வது வரைத்தான் பீஷ்மர் என் ஆண்மகன் . அதன் பிறகு என்னை சிரிக்கவைக்காத, என் உடலில் அலைகளை விரியவைக்காத , முதியவன்…

ஹயக்ரீவன்: பெண்ணே உனது தேவை என்ன ?

அம்பை: உனது தொடைச் சதைகளில் திமிறும் அந்த வல்லமை மட்டும்… மனித உருக்கொள்ளாத வெற்றுத்தசை….

ஹயக்ரீவன்: ஆம். அதுதான். உயிரின் ஆதிதாகம்…[பயங்கர கனைப்பொலியுடன் குதிரை எழுகிறது . அதன் பின் இன்னொரு குதிரை முகமூடியுடன் வருகிறது .குதிரைகள் சூழ்ந்து நடனமிடுகின்றன. நடுவே விரித்த கூந்தலுடன் நெளிந்தாடும் அம்பை ஆடியபடியே அவர்கள் சென்று மறைகின்றனர்]

சிகண்டி: அவள் ஒரு பயங்கர வனதெய்வம் போலிருந்தாள்…

பீஷ்மர்: [பெருமூச்சுடன்] நாம் காண்பதெல்லாம் நமது விருப்புகளையும் வெறுப்புகளையும்தான்…….

சிகண்டி: உண்மைகளை ஊனக் கண் காண்பதேயில்லை. அகக்கண் தவறவிடுவதுமில்லை…

பீஷ்மர்: [கண்களைப்பொத்தி ] போதும். இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது….

சிகண்டி: அதன் பிறகு அவள் உங்கள் அரண்மனைக்கு வந்தாள்.

பீஷ்மர்: சால்வன் அவளை ஏற்கமாட்டான் என நான அறிவேன்….அவள் என் முன் வந்தபோது என் மனம் குதூகலித்தது… அன்று அஸ்தினபுரியின் அரண்மனையில்..

[பீஷ்மர் திரும்புகிறார் .ஒளியும் ஒலியும் மாறுகின்றன ]

பீஷ்மர்: அவள் சால்வனை விரும்புவதை என் முன் சொன்னபோது என் ஆத்மாவில் எரியம்பு ஒன்று தைத்தது . அதை அவளுடைய கண்ணீரே அணைத்து மருந்தாக முடியும் என்று அறிந்தேன். வன்மம் முறுகிய மனம் ஒரு கணம் கூட தூங்கவில்லை . அவளிடம் சொல்லவேண்டிய சொற்களை பல்லாயிரம் முறை உள்ளூர மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி இருநாட்கள் சென்றன. அதன் பின் அவள் வந்தாள்..

[அஸ்தினபுரியின் அரண்மனைத்தோற்றம் உருவாகிறது]

பீஷ்மர்: அமாத்யரே.

அமாத்யர்: [வந்து ] அடியேன்.

பீஷ்மர்: காசிநாட்டு இளவரசி திரும்பி வருவதாகச் சொன்னார்கள். அவளை நேராக இங்கு இட்டுவரச் சொல்லுங்கள்.

அமாத்யர்: உத்தரவு (செல்கிறார்)

பீஷ்மர்: நாடகத்தின் மறுபக்கம் இனிமேல்தான் போலும்.

(வெளியே குரல்: காசி நாட்டு இளவரசி அம்பாதேவி வருகை)

பீஷ்மர்: புயல் வருவது போல! ஆம் அப்படித்தான் . அவள் இயல்பு அது

[கதவு படாரென திறந்து அம்பை வந்து பீஷ்மர் முன் நிற்கிறாள்]

பீஷ்மர்: இளவரசிக்கு வணக்கம்.

அம்பை: [கடூரமாக] நான் வணக்கங்கள் கொள்ள வரவில்லை. [அழுகையும் ஆங்காரமுமாக கைநீட்டி] நீங்கள் தர்மம் என்ற பேரில் அகங்காரத்தை திரையிட்டு மறைத்த கோழை. என்னை தீராத அவமானத்துக்குத் தள்ளிவிட்டார்கள்….என்னை அந்த அற்பன் முன் புழுவென உணரச்செய்தீர்கள்…

பீஷ்மர்: [அமைதியாக] அது நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை..

அம்பை: [உரக்க] நிறுத்துங்கள்! உங்களுக்கு மிக நன்றாக தெரியும் , பாரதவர்ஷத்தில் எந்த மன்னனும் உங்களை எதிர்க்கத்துணியமாட்டான் என்று . நீங்கள் என் ஆத்மாவை பகடையாக்கி விளையாடினீர்கள். என்னை என் ஒவ்வொரு அணுவையும் அருவருக்கச் செய்தீர்கள்….[கிரீச்சிட்டு கத்தி] நீங்கள் என்னை கொன்று விட்டார்கள்… உங்கள் முன் இக்கணமே செத்துவிழவேண்டுமென்றே இங்கே வந்தேன்..[குறுவாளை உருவுகிறாள்] பலமுறை இறந்து நைந்த என் ஆத்மா இங்கே விடுதலைகொள்ளட்டும். என் பிணம் உங்கள் காலடியில் விழட்டும்…[குத்தப்போகிறாள்]

பீஷ்மர்: [அவள் கரங்களைப்பற்றி தழுவி திடமான குரலில் ] அதற்கு உனக்கு உரிமை இல்லை. ஏனெனில் நீ நான் வென்ற உடைமை.

அம்பை: [மகிழ்ச்சியின் ஆவேசத்துடன் உடல் நடுங்க] என்ன சொல்கிறீர்கள் ?

பீஷ்மர்: ஆம்

அம்பை: [அவர் காலடியில் சர்ந்து] என் தெய்வமே ! என் குருவே! [குமுறி அழுகிறாள்]

பீஷ்மர்: [கம்பீரமாக] எழுந்திரு. இக்கணம் முதல் நீ எதற்கும் அழமாட்டாய் [அவளை தொட்டெழுப்பி கனிவாக சிரித்தபடி ] பேதைத்தனமே பெண்களுக்கு பேரழகைத்தருகிறது…

அம்பை: [வெட்கி சிரித்து] விளையாடும்போதுதான் ஆண்கள் அழகர்களாகிறார்கள்…[இருவரும் சிரிக்கிறார்கள்]

[ஒளி மாறுபடுகிறது. ]

பீஷ்மர்: நான் உன் அடிமை. நீ போடும் கட்டளைகளை நிறைவேற்றுகையில் மட்டுமே முழுமை அடைபவன்.

அம்பை: உங்களுக்கு அஸ்வசாஸ்திரம் தெரியுமல்லவா ?

பீஷ்மர்: நன்றாகவே…

அம்பை: பரிகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது ஒருபோதும் சளைப்பதில்லை. ஏனெனில் அது எப்போதுமே தன் முழு சக்தியையும் செலவழித்துவிடுவதில்லை. அது மட்டுமே முதுமையிலும் வல்லமை இழக்காதது .. [வெட்கி] நான் உங்களை அப்படி எண்ணிக் கொள்வதுண்டு..

பீஷ்மர்: ஆகா! [சிரித்து] பெண்களின் உலகில் இப்படிப்பட்ட கற்பனைகள் உண்டென நான் அறிந்ததேயில்லை .

[நிழல் பீஷ்மருக்கு ஒரு குதிரைமுகமூடியை அளிக்கிறது. அதை அவர் அணிந்து கொள்கிறார். குதிரை ஒன்றின் கனைப்பு அப்பால் கேட்கிறது]

பீஷ்மர்: குதிரையின் முதுகு அமரப்படுவதற்காகவே உருவானது தேவி…

அம்பை:[ குதூகலித்து சிரித்தபடி ] வேண்டாம்

பீஷ்மர்: ஏறிக்கொள்!

[அம்பை பீஷ்மரின் தோள்களை அணைத்துக் கொள்கிறாள். தன் முந்தானையால் சுழற்றி வீச சவுக்கு அடிபடும் ஓசை எழுகிறது. பீஷ்மர் சிரிக்கிறார்.அவள் சிரிப்பும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது]

அம்பை: அங்கே அந்த திசை நோக்கி… உங்களால் முடியுமென்றால் ….

பீஷ்மர்: நீ கைசுட்டினால் தூரங்கள் ஒரு பொருட்டேயல்ல…[சவுக்கொலி . சிரிப்புகள் ]

சிகண்டி: [உரத்த குரலில் வெடித்து ] நிறுத்துங்கள் [கடும் குரோதத்துடன் வாளை உருவி அவர்கள் நடுவே நீட்டி] போதும் இந்த ஆபாச நாடகம்!

[இருவரும் திடுக்கிட்டு பிரிந்து விலகிக் கொள்கிறார்கள்.]

அம்பை: [குழப்பத்துடன்] இது யாருடைய கனவு ? நான் எப்படி இங்கே வந்தேன் ?

பீஷ்மர் :[திடுக்கிட்டு] என்ன நடந்தது ? [கூசி] ஆ !கனவா அது ? நானா ? எத்தனை கீழ்மை!

சிகண்டி: [உடைந்த குரலில் ]நான் யார் என இப்போது தெரிந்துகொண்டேன். காமங்கள் முயங்கும்போது மனிதர்கள் பிறக்கிறார்கள். நான் அகங்காரங்கள் முயங்கிப் பிறந்த அர்த்தமற்ற பிண்டம்….காமங்களினாலானது சொற்கம் . என்னுடையதோ மோதி அசைவற்று காலத்தில் உறைந்த இரு அகங்காரங்களின் சூனிய மையம்… அங்கு சலனமே இல்லை .

அம்பை: மகனே..

சிகண்டி: [அருவருத்து ] சீ விலகு .. நான் உன் மகனல்ல.

பீஷ்மர்: நீ என் மகள்

சிகண்டி: விலகி நில்லுங்கள். இது வெறும் தசை. உங்களில் பாதி,அவளில் பாதி… என் இரு உடல்களின் நடுவே தூர்க்கமுடியாத பெரும்பாழ்வெளி ஒன்றை உணர்கிறேன்.[ சிகண்டி மெல்ல முன்னகர அவனுக்கு பின்னால் நிழல்கள் அணிவகுக்கின்றன] இந்த வெற்றிடம் எது தெரிகிறதா ? கோடானுகோடி ஆண்களும் பெண்களும் இப்பூமியில் அன்றாடம் புணர்கிறார்கள். எங்கே ? தங்கள் தன்னகங்காரங்கள் சமரசம் செய்து கண்டடைந்த சிறுவெளியில். கொந்தளிக்கும் கரியகடல் நடுவே சிறு தீவில் ஒதுங்கிய இருவர்போல. அங்கே ஒருவரை ஒருவர் கண்டு ஒரு கணம் பிரமித்து, அருவருத்து, அஞ்சி, சுருங்கி மீண்டும் தங்கள் அகங்காரங்களின் எல்லைகளுக்குள் வந்து மூடிக் கொள்கிறார்கள் [உரக்க] உங்களுக்கு அந்த வெளி வாய்க்கவேயில்லை. உங்களுக்கிடையே எப்போதுமிருந்தது அந்த தூரம். கரிய இருளால் நிரப்பபட்ட பேரழுத்தம் நிரம்பிய வெறுமை..

[நிழல்கள் மெல்ல நடனமிட ஆரம்பிக்கின்றன]

சிகண்டி: நான் பிறந்த இடம் அதுதான். என் உடலின் நடுவே அது உள்ளது. ஆறாத காயம்போல .எதையும் பார்க்காத துடிக்கும் கண்போல. எதையும் சுட்டாத விரல்போல . ஒரு கரிய இடைவெளி … இந்த உடல் ஒரு புதிர் போல என்னை எப்போதும் வதைக்கிறது….

அம்பை: [துயரத்துடன்] அது என் தவறுதான் குழந்தை. என்னை மன்னித்துவிடு…

சிகண்டி: [ஆங்காரத்துடன் கைகளை உரசியபடி ] யார் நீங்கள் ? நீ பெண்ணாகவில்லை. அவர் ஆணாகவில்லை . சொல்லப்படாத ஒரேஒரு சொல்லால் உடலை ஊமையாக்கிக் கொண்ட இருபால் வடிவங்கள்…

பீஷ்மர்: [கடும் கோபத்துடன்] அடேய்…

சிகண்டி: உங்கள் வில் அதோ கிடக்கிறது… [உரக்க சிரித்து] பிணத்தைக் கொல்ல முடியாதல்லவா ? மறந்து விட்டேன். நீங்கள் சொல்லை ஏவலாம்….

பீஷ்மர்: சீ, விலகு…

சிகண்டி: நீங்கள் உணர்வது என்ன தெரியுமா ? இயலாமை. காலமெல்லாம் நீங்கள் உணர்ந்த இயலாமை. உறுப்பின் இயலாமை அல்ல உங்கள் பால்திரிபுக்கு காரணம். உணர்வுகளின் இயலாமை… பேடி பேடி [ வெறிகொண்டு சிரித்து] பேடிகள் காற்றில் புணர்ந்து பெற்ற பெரும்பேடி…. பேடிகளுக்கென ஒரு சொற்கம் செய்யசொல்வோம் .அங்கு சொல்லப்பட முடியாத சொற்கள் உண்ணப்பட முடியாத உணவுகள் தழுவப்பட முடியாத பெண்கள்… அங்கே நாம் மூவரும் செல்லலாம்…. நமக்காக காத்திருப்பது அதுதான். இதோ எனக்குப் பின்னால்…

[பின்னணியில் நிழல்கள் வெறித்த பார்வையுடன் நடனமிடுகின்றன]

சிகண்டி: [கைநீட்டி] வருக .. இதுதான் தருணம் .இனி இது வாய்க்கப்போவதில்லை …. ஒருபோதும்…..

[நிழல்கள் அழைக்கின்றன. ‘ வருக ! ‘ ‘வருக ! ‘]

அம்பை: இல்லை! [பயந்து பின்னகர ஒரு நிழல் அவளைப் பிடித்து முன்னே தள்ளுகிறது] ஆ! விட்டு விடு!இல்லை…

[நிழல்களால் தள்ளப்பட்ட பீஷ்மர் இணைந்துகொள்ள, ஒரு நடனம் ஆரம்பிக்கிறது . புணர்ச்சியின் நிலைகள் .,பாம்பு நெளிவுகள். உக்கிரமான தாபம் மிக்க அசைவுகள். ஒளி மாறிமாறிவிரிய , பின்னால் பேரண்டங்கள் வெடித்து பிறந்து ஒளிர்ந்து எரிந்தழிய, காலம் நாட்களாக யுகங்களாக ஓடிமறைய , பெருகிப் பெருகி உச்சம் கொள்ளும் சிவசக்தித் தாண்டவம் . பிளந்து சரியும் இடியோசைகள். துடிதுடிக்கும் மின்னல்கள். பின்பு பெருமழை. நனையும் எரிமலைகள். பின்பு ஓயும் அலைகளில் எஞ்சித் தத்தளிக்கும் கரிய சிற்றொளி. பின்பு தூய மணியோசையாக முளைத்தெழும் காலத்தின் முதல் சுழி .

தொலைவில் நரி ஒன்று ஊளையிடுகிறது

நிழல்கள் அடங்குகின்றன.

பீஷ்மரும் அம்பையும் இரு முனைகளிலாக சிதறி விழுகிறார்கள். அரங்கில் இருள் நிறைகிறது. பிறந்த குழந்தையின் முதல் அழுகுரல். மென்மையும் கருணையும் கொண்ட அன்னையின் தாலாட்டு. சொற்களில்லை. ‘ரூரூரூ … லூலூலூ ‘ குழந்தை அழுகை மெல்ல மழலை ஒலிகளாக மாறுகிறது.

அரங்கில் ஒரு மெல்லிய தீபச்சுடர் மட்டும் எழுகிறது.

குழந்தைக் குரல் ‘ அம்மா ‘

தாய்மை மிக்க பதில் ‘ என்னடா கண்ணா ? இங்கே வா ‘

குழந்தைக் குரல் ‘அம்மா எனக்கு பயமாக இருக்கிறது ‘

தாயின்குரல்: அம்மா இருக்கிறேனல்லவா ?என்ன பயன் என் ராஜாவுக்கு ?அருகே வா [கொஞ்சும் ஒலிகள்]

ஒளி விரிகிறது .காலை ஒளி . மரங்களின் கிளைகள் இளங்காற்றிலாடுகின்றன. பறவைகள் கலைசலாக ஒலிக்க நீரில் ஓசை.

பீஷ்மரும் அம்பையும் இரு திசைகளிலிருந்து மரக்கிளைகளை விலக்கி , நீரைத்தாண்டி வருகிறார்கள் .

மென்மையான மணியோசையுடன் அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள்.]

பீஷ்மர்: [கனிந்த குரலில் ] உன்பெயர் என்ன ?

அம்பை [வெட்கி ] அம்பை .நீங்கள் யார் ?

பீஷ்மர் : நான் பீஷ்மன் .[அவளை நெருங்கி] என் மனதில் வினோதமான ஒரு உத்வேகம் எழுகிறது . நான் உன்னை முன்பே கண்டிருக்கிறேன். உன்னை நன்கு அறிவேன்.. [பெருமூச்சுடன்] இதே இடத்தில் இதேபோல எத்தனையோ முறை நாம் நின்றிருப்பதாக என் மனம் பிரமை கொள்கிறது

அம்பை: [தலைகுனிந்து] ஆம். எனக்கும்தான். இதே சொற்களை நீங்கள் என்னிடம் எத்தனையோமுறை சொன்னதுபோல …

[பீஷ்மர் அவளருகே சென்று மெல்ல அவளை தீண்டுகிறார் .

மரங்களிலெல்லாம் மலர்கள் எழுகின்றன. அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள். ]

மரங்கள்: நீங்கள் யார் ?

பீஷ்மர்:நான் ஓர் ஆண்

அம்பை:நான் ஒரு பெண்

மரங்கள்: இந்தப்பதிலன்றி வேறு எந்த சொல்லை நீங்கள் சொல்லியிருந்தாலும் நாங்கள் கற்பாறைகளாக மாறி மெளனம் கொண்டிருப்போம் . காலகாலங்களாக இக்கேள்வுக்கு மட்டும் ஒரே விடைதான்

[மரங்கள் விலகி குழந்தைகளாகின்றன. கலகலவென குழந்தைகளின் குரல்கள். சிரிப்பு . ‘ அம்மா ‘ என்று கூவியபடி ஒருகுழந்தை அவள்மீது மோதுகிறது ]

குழந்தை :அம்மா அவன் என்னைபிடிக்க வருகிறான்!

குழந்தை: போடி என்னுடைய அம்மா!

அம்பை :ஓடாதே விழுந்துவிடுவாய்!

குழந்தை: அம்மா பக்கத்திலே நான்தான் நிற்பேன்

குழந்தை: போடி நான்தான்

குழந்தை:அம்மா இவனைப்பார்

அம்பை:[பூரிப்புடன்] இதோபார், சண்டை போடக்கூடாது…

[குழந்தைகள் ஆடி கூத்தடிக்கின்றன. மெல்ல அவ்வொலி மங்கி அகல்கிறது. குழந்தைகள் விலகி மரங்களாகின்றன. பீஷ்மரும் அம்பையும் இரு மரங்களாக மாறி கைகளை காற்றுக்கு வீசி நிற்கின்றனர். அரங்கு மாலை ஒளி கொள்கிறது .

மரக்கூட்டங்களை விலக்கி ஒரு இளஞனும் இளம்பெண்ணும் இரு திசைகளிலிருந்து வருகிறார்கள் . ஒருவரையொருவர் மணியோசை ஒலிக்க கண்டுகொள்கிறார்கள்.]

இளைஞன்:உன்பெயர் என்ன ?

பெண்:அம்பை .நீங்கள் ?

இளைஞன்: என் பெயர் பீஷ்மன்

[பீஷ்மரும் அம்பையும் சிரித்தபடி மலர்களை உதிர்க்கிறார்கள். இளைஞனும் இளம்பெண்ணும் செல்கிறார்கள் ]

அம்பை : [விலகி வந்து ] எத்தனை எளிமையான நாடகம்

பீஷ்மர்: ஆம் . இலைகளைப்போல, சருகுகளைப்போல…

[மரங்கள் கலைந்து மறைகின்றன. அவர்கள் மட்டும் அரங்கில் எஞ்சுகிறார்கள். நிழல்கள் முன்வந்து அவர்களுடைய நரைமுடிகளை முதுமையை அளிக்கின்றன.]

பீஷ்மர்: [அணிந்தபடி ] இலைகளை உதிர்த்துவிட்டு வசந்தத்தை எதிர்கொள்ளும் மரங்கள் போல் ஒவ்வொன்றையும் அப்போதே உதிர்த்துவிட்டு முன்னகர்கையில் முதுமையும் இனிமையாக மாறிவிடுகிறது .

அம்பை: ஆம். [கனிந்து சிரித்து] உதிரும் சருகுகள் புது மலர்களுக்கு உப்பாகும் என்பார்கள் …

[இருவரும் பிரிகிறார்கள். பீஷ்மர் மீண்டு வந்து படுக்கிறார்]

நிழல்: என்ன ஆயிற்று உன் வினாக்கள்…

பீஷ்மர்: [சிரித்து] வினக்களா ? இந்த காடுமுழுக்க கோடானுகோடி மலர்கள் மலர்ந்திருக்கின்றன….எந்த வினாக்களும் இல்லாமல்

[ஒளி மாறுபடுகிறது. இரவு. போர்க்களம். ஊளைகள்.]

பீஷ்மர்: [ அண்ணாந்து ] கரியவெளி ! தானன்றி வேறற்ற பெரும்பாழ் !

நிழல் : இப்போது நீ கிளம்பமுடியும் அல்லவா ?

பீஷ்மர்: ஆம், எனக்கு இப்போது எடையே இல்லை. காற்றுக்கு ஒப்புக்கொடுத்த எளிய சருகு…[ அண்ணாந்து ] உயிர்களும் காலமும் சென்றுசேரும் கடல். எதுவுமே எஞ்சாத இருண்ட பெருவெளி..

[சிகண்டி எதிரே நிற்கிறான், ஆனால் அவன் மீது வேறுவிதமான ஒளி கவிந்திருக்கிறது ]

சிகண்டி: [அமானுடமான ஒரு பெரும் குரலில்] அது தன்னைத் தானுண்டு தனக்குள் பூரணம் பெற்றவனால் மார்பில் தாங்கப்படும் சிறுபதக்கம் .

பீஷ்மர்: நீ ?

சிகண்டி: ஆம், நான்தான்

[ அவனுக்கு பின்னால் நிழல்கள் அணிவகுக்கின்றன. மெல்ல, கச்சிதமான அசைவுகளுடன். ஒன்றுமீது பிறிது ஏறி உயர்ந்து பற்பல தலைகளும் கால்களும் கைகளும் கொண்ட ஒற்றைப் பேருருவத் தோற்றம் கொள்கின்றன. ஒரு கரத்தில் சங்கு மறுகரத்தில் சக்கரம். ஊன்றிய கதாயுதம். இன்னொரு கரத்தில் தாமரை. பல்வேறு ஆயுதங்கள். கடல்நீலப் பேரொளி அவன் மீது சுடர தொலைவில் பாஞ்சஜன்யம் முழங்குகிறது]

ஓங்கி உலகளக்கும் பெருங்குரல்: அனைத்து தர்மங்களையும் கைவிடுக !

என்னையே சரணடைக!

[பீஷ்மர் மெல்ல எழுந்து கனவில்போல வணங்கியபடி நடந்து சிகண்டிமுன் மண்டியிடுகிறர் . ஒளி மாறுபடுகிறது . நிழல்கள் இறங்கி பிரிகின்றன. தனித்து நிற்கும் சிகண்டி குனிந்து பார்க்கிறான். மூலையில் நிழல்கள் கூடி மிருத்யுதேவி தோன்றுகிறாள் .மெல்ல பீஷ்மரை தூக்கி கொண்டுசென்று அவரது படுக்கையில் கிடத்துகிறாள். அவள் தன் முகமூடியை எடுக்கும்போது அது அம்பை என தெரிகிறது. தலைமாட்டில் அமர்ந்து குழந்தையை தூங்கச்செய்வதுபோல மெல்லமெல்ல தட்டி தூங்கச்செய்துவிட்டு ஓசைகேட்காத காலடிகளுடன் அம்பை வெளியேறுகிறாள்.

அரங்கில் சிகண்டி தனித்து நிற்கிறான். ஆனால் சாதாரணனாக குழப்பம் கொண்ட மனிதனாக ]

சிகண்டி : பிதாமகரே..[அருகே சென்று குனிந்து பார்த்து ] பிதாமகரே….

[பீஷ்மர் இறந்துவிட்டிருக்கிறார் .சிகண்டி அவரை விட்டு விலகுகிறான்.]

சிகண்டி : வானில் தேவர்கள் மலர்மாரி தூவவில்லை. நட்சத்திரங்கள் இடம் மாறவில்லை . ஒரு சருகு உதிர்ந்தது போல…. ஒன்றுமே நிகழவில்லை… மெளனமான இரவு .கோடானுகோடி முந்தைய இரவுகளைப்போலவே இன்னொரு இரவு…[ பெருமூச்சுடன்] ஆனால் நான் ?

[வெகு தொலைவில் ஒரு அழுகை ஒலி. ]

சிகண்டி: [ இருளை நோக்கி ]ஈந்த இருட்டுக்கு அப்பால் என்ன ? . இருட்டுக்கு தெரியுமா ? எங்குள்ளது என்னுடைய சொற்கம் ?

[மெளனம் . அழுகையொலி மட்டும் கேட்கிறது ]

சிகண்டி: அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவனின் கடைசி இடம் எது ?

[ இருளில் ஒரு நரி ஊளையிடுகிறது . சோகமும் தனிமையும் மிக்க குரல் .

ஒரு கணம் அதை கவனித்து ,பெருமூச்சுடன் சிகண்டி இருளில் நடந்து மறைகிறான் . மறுபக்கம் வழியாக கழுதைப்புலி முகர்ந்தபடி அரங்கில் நுழைகிறது]

****

jeyamohanb@rediffmail.com

jeyamohanb@hotmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்