வசந்த காலம்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


அன்புள்ள….

உனக்கும் எனக்கும்
புதுப்பெயர் கிடைத்தது

நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
இப்படிச்
சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது

சொல்லிக்கொள்வதும்
வழக்கம்தான்

ஆனால்
நாம்
வாழ்ந்ததுதான் வாழ்க்கை

நம்மை
இணைத்து வைத்தவர்கள்
நம்மை நினைக்கவில்லை

காரணத்தோடுதான்
இணைத்தார்கள்
காரணத்தோடுதான்
மறந்தார்கள்

உன்னோடு என்னை
இணைத்துப்பேசியதை
நான் விரும்பினேன்

அது என்
புகழின் அடர்த்தியை
அர்த்தப்படுத்தியது

உன் துணை
என்
அடையாளத்தை
ஆழப்படுத்தியது

என்னால் நீ
கண்டெடுக்கப்பட்டாய்

கண்டநாள்முதல்
எனக்கு எல்லாநாளும்
கண்கொள்ளா நாள்தான்

வரவு செலவு
கணக்குப்பார்க்காமல்
காலத்தில் நம்மை
செலவு செய்தோம்
காலப்பதிவேட்டில் நம்மை
வரவு வைத்தோம்

இருப்பில் கணக்கு
குறைதிருந்தாலும்
இருத்தலில் இருவரும்
வரலாறு ஆனோம்

கையிலெடுத்துக்
கொஞ்சிக் கொஞ்சி
சுவாசங்களாய் கரைந்த என்னை
எடைபோடத்தவறியது
நட்டம்

அணுஅணுவாக அனுபவித்த
என் எடை
கூடியிருப்பது லாபம்

இனிவரும் காலங்களில்
நானும் நீயும்
தேனீயும் மலருமாகவா
வாழப்போகிறோம்
தெரியாது

தனிமையில் இனி
உன்னை
தவப்பார்வையுடன் கவனிப்பேன்

என் களைப்பைப்போக்கும்
மூலிகையாக உன்
முகம் தெரியும்

வாலிபம் வழங்கும்
காயகல்பமாய்
உன்
அகம் விரியும்

miimii

கடந்த காலங்கள்
நாம்
கடத்திய காலங்கள் அல்ல
நம்மைக்
கடத்திய காலங்களும் அல்ல

நாம்
நடத்திய காலங்கள்
அதை
வசந்தகாலம் என்பதைவிட
வாழ்ந்தகாலம் என்கிறேன்
சரியா… ?
—-
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ