ரிஷியின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

ரிஷி


’ரிஷி’யின் கவிதைகள்:

1) வழியும் மொழியும்

கிளைபிரியும் பாதைகள் முளைத்த புள்ளியை
நன்றியோடு நினைவுகூர்ந்தவாறே முன்னேறிச் செல்லும் மனம்.
களைத்துச் சோரும் பாதங்கள் கன்றிப் போனாலும்
காலரை மணிநேரம் கண்ணில்படும் மரநிழலில் இளைப்பாறிய பின்
மீண்டும் தொடருமேயன்றி யொருநாளும் கைவிடப்படாது பயணம்.
எல்லாம் இன்பமயம்; எங்கும் துன்பமயம்.
தங்கும் பயம் மனதில் பொங்குமாக்கடலாய்.
விடலைப்பருவத்திலும் வயோதிகத்தின் நுழைவாயிலிலும்
நடந்து நடந்து நடந்து நடந்து தானே
கடந்துகொண்டிருக்கிறேன், கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன் என் வழியை.
பதற்றமும் பரவசமுமாய் கழியும் பயணப்போக்கில்
இன்றளவும் பழகிலேன் முன்மொழியவும், வழிமொழியவும்.

2) பெண்

சிலருக்குக் கண், சிலருக்கு மண்
இவருக்கு மயிர், அவருக்கு பயிர்
இன்று வரம், நாளை மரம்
சொல்லுக்கு மைல்கல், செயலுக்கு மண்ணாங்கட்டி
ஒரு கணம் பத்தரைமாற்றுத் தங்கம், மறுகணம்
பித்தளைக்கும் மங்கலாகும்….

மண்ணும் வீணல்ல, மயிரும் வீணல்ல.
மரத்தின் பெருமை ஊரறியும், உலகறியும்.
பித்தளைப் பாத்திரங்களில் தான் பெருமளவு தயாராகிவருகிறது
வயிற்றுக்குச் சோறு.
மைல்கல்லோ, மண்ணாங்கட்டியோ –
மண்ணிலும் கல்லிலுமே நிலவளம் நிரூபணம்.
சொல்லித் தீராதிருக்கும் இன்னும் பிறவேறும்.
எதுகைமோனைக்குள் அடங்கிடாது இகவுலகும் அகவுலகும்.
வரிகளுக்குள் ஊடுருவினால் தானே புரியும் உயிரின் மகத்துவம்!

3) வாக்குகளின் வலிமை

இருபதாண்டுகளுக்கு முன்னர் கசிந்த விஷவாயு இன்னமும்
தீராத்தாகத்தோடு உறிஞ்சித்தீர்த்துக்கொண்டிருக்கிறது-
குறிப்பாக ஏழைகளின் உயிர்களை.

இன்றைய மரபணுமாற்றப் பயிர்களும்.

வாக்குகளின் வலிமையில் சில குடும்பங்களுக்கு இமயமலைகள்
உடைமையாகிவிடுகின்றன.
ஒருவேளை பறவைகளின் இறக்கைகளும்கூட.

ஊசிப்போன மருந்திலும் ஊசியிலும்
ஊசலாடிக்கொண்டிருக்கும் மனித உயிர்களின் மீட்பராக
கூவிக்கூவிக் கடைவிரித்திருப்போரிலும் கலந்திருப்பார்
கொள்ளை லாபமே குறியாய் சிலர்.

விற்பனைப்பையின்றியே அரண்மனைகளில்
அமர்ந்தது அமர்ந்தபடி ஆள்சேர்த்துக்கொண்டிருக்கும்
விளம்பரப்பிரதிநிதிகளிடம்
(அன்னாடங்காய்ச்சிகளுக்கென்று சிலர் ; அம்பானிகளுக்கென்று சிலர்)
ஆயிரக்கணக்கில் வந்து ஆயிரக்கணக்கில் தந்து
பெற்றுச் செல்கின்றனர்
கத்தரித்து ஒட்டப்பட்ட சிறு பொட்டலங்களில்
உள்ளுறை ஆன்மாவை.

அவரவருக்கான குற்றவுணர்வுகளிலிருந்தெல்லாம் விடுபட
அதி எளிய வழி
அடுத்தவரை குற்றங்களின் கட்டாயக் குத்தகைக்காரர்களாக்கிவிடுவது.

ஒரு சொல்லின் இன்மையில் உயரும் மனிதகுலம் என்பது உண்மையானால்
உலகின் அதி உன்னத அற்புதம் அதுவாகத்தான் இருக்கமுடியும்
என்று ஏங்கிச் சோரும் நெஞ்சில் உருள்கிறது
கொஞ்சமே கொஞ்சம் படித்த ’போர்ஹே’யின் ’அலெஃப்’.

(

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

ரிஷி

ரிஷி