நாகரத்தினம் கிருஷ்ணா
ரங்கநாதன் ‘ஜாகிங் ‘ இல் இருந்தார். பிரான்சு ராணுவத்தில் ‘கப்ரல் ஷேஃப் ‘ கயிருந்து, இன்றைக்கு ஓய்விலிருந்தபோதும் தொற்றிக்கொண்ட பழக்கம்.
காலை மணி ஏழு, பிப்ரவரி குளிர்காலமென்பதால். பாரீஸ் இன்னும் இருட்டுத் தழுவலின் சுகத்திலிருந்தது. கடந்த மூன்று நாட்களாகப் பனியும், மழையும் மாறிமாறிப் பெய்து ஓட்டப்பாதையை சொத சொதப்பாக வைத்திருந்தன. குளிர்காற்று முகத்தில் சுளீரென்று அறைய, ஓடிக்கொண்டிருந்தார்.
மனத்தில், அதிகாலையிலேயே பரபரப்பு உட்கார்ந்து கொண்டது. ‘அதிதாஸ் ஸ்வெட்ஸ் ‘ ஐயும் மீறி நனைந்திருந்தார். காரணம் ஜாகிங் அல்ல. ஒரு கடிதம். காதற் கடிதம். நாற்பத்தேழுவயதில், பெண்வாடை வேண்டாமென நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு திரியும், இந்த விசுவாமித்திரருக்கு எவளோ ஒரு மேனகை, பெயரை ஒளித்துக் கொண்டு, காதல் மடல் வரைகிறாளாம். இவரும், இரண்டு நாளைக்கு ஒருமுறை, அந்தக் கடிதத்தை எதிர்பார்த்து பரபரப்புகுள்ளாகிவிடுவார்.
ஜாகிங்கை முடித்துக்கொண்டு அவரது குடியிருப்பிற்குத் திருப்பியபோதும், அதற்குப் பிறகு ‘பாத் டப்பை ‘ சுடுநீரில் நிரப்பி, உடல் வலி தீர அமிழ்ந்து கிடந்தபோதும், எழுந்து ‘பாத் ரோப் ‘ அணிந்து சுடச்சுட தேநீர் தயாரித்துக் குடித்தபோதும் முழுக்க முழுக்க அந்தக் கடிதம் மட்டுமே அவர் கண்ணில் நின்றது.
காலை மணி பத்து. வெளிக்கதவைச் சார்த்திகொண்டு தட தடவென, இரண்டிரண்டு படிகளாக இறங்கிக் கீழ்த்தளத்திற்கு வந்தார். எதிர்பார்த்ததுபோலவே, கடிதங்களை உரியவர்களின் அஞ்சல்பெட்டிகளில் போட்டுக்கொண்டிருந்த தபாற்காரர், இயந்திரத் தனமாக ஒரு ‘போன் ழூர் ‘( காலை வணக்கம்) சொல்லிவிட்டு இஇவருக்கான கடிதங்களைக் கொடுத்தார்.
இருந்தது. இவர் எதிர்பார்த்த அந்தக் கடிதம் இருந்தது. வழக்கம்போலப் பெண்களுக்கே உரிய கையெழுத்துடன், ‘ மிஸியே. ரங்கநாதன், 20- அவென்யூ வில்ஸன், 75020 – பாரீஸ் ‘ என இவரது முகவரி எழுதப்பட்டுத் தெளிவாக இருந்தது. அந்தக் கடிதத்தைப் பரபரக்கும் மனத்துடன் தனியாகப் பிரித்து, ஓவர் கோட்டில் பத்திரப்டுத்திக்கொண்டு திரும்பியபோது கரீன் எதிர்ப்பட்டாள்.
கரீன் கீழ்த்தளத்தில் வசிப்பவள். கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு, இரண்டு பிள்ளைகளோடு இருப்பவள். விவாகரத்துச் செய்ததற்கான காரணமாக இவரிடம் அவள் சொன்னது, ‘இவள் கூப்பிட்ட சைனீஸ் ரெஸ்டாரெண்டுக்கு அவன் வரவில்லையாம் ‘. ஏதோவொரு காரணம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், ரங்கநாதனும் கரீனும் சற்றுத் தள்ளியிருந்தே தங்கள் அன்றாடங்களை மிகச் சுருக்கமான உரையாடல்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்..
ரங்கநாதனின் முகத்திலிருந்து எளிதாக அவளால் யூகிக்கமுடிந்தது.
‘என்ன மறுபடியும் கடிதமா ? வாங்களேன். காப்பி கொதித்துக் கொண்டுதானிருக்கிறது. குடித்துக்கொண்டே பேசலாம் ‘ என்ற கரீனின்அழைப்பு, அந்தக் கணத்தில் ரங்கநாதனுக்குத் தேவையாயிருந்தது. பின்தொடர்ந்து சென்றார். அப்பார்ட்மெண்டின் வெளிக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள், வரவேற்பறையிலிருந்த சோபாவில் இவரை இருக்கச் செய்தாள்.
‘என்ன கொடுக்க ?.. பியரா ?.. இல்லை காப்பியா ? ‘
‘மெர்ஸி.. எனக்குப் காப்பி போதும். வழக்கம்போல எஸ்பிரஸ்ஸோ ‘
அவள் அகன்றவுடன், கடிதம் ஞாபகத்திற்கு வந்தது. அவசர அவசரமாக உரையைக் கிழித்துப் படிக்கத் தொடங்கினார்.
‘போன்ழூர் மோன் அமூர் (என்னுடைய காதலருக்கு)!
எப்படி எழுதுவது ? என்ன எழுதுவதுன்னு தெரியலை. உங்கள் நினைப்பே கூடாதுண்ணு நினைக்கிறேன். சுத்தமா அழிச்சுடனும்னு நினைக்கிறேன். முடியலை. மனம் மட்டுமல்ல, இப்போதெல்லாம் எனது உடலும் சேர்ந்து தகிக்குது. மறுபடி மறுபடி உங்களுக்கு ஏதேனும் எழுதணும்னு தோணுது. எழுதறேன். உங்க பார்வைமட்டும் என் எழுத்துக்களில் விழுந்தால் போதாது. உங்கள் விரல்களின் ஸ்பரிசமும் அவற்றில் விழணும். நேற்று சூப்பர் மார்கெட்டில் பெண் கேஷியரிடம் கொஞ்சம் அதிகமாகவே நீங்கள் வழிவதைப் பார்த்தேன். இனியப்படி உங்களை நான் பார்க்கக்கூடாது. இப்படியே எத்தனை நாளுக்கு கடிதம் எழுதுவது ? ஒருநாள் நிடாரென்று உங்கள் முன் தோன்றப் போகிறேன். உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கபோகிறேன். சுற்றிலுமுள்ளவர்களை அலட்சியம் செய்து, என் உதடுகள் வலிக்கும்வரை முத்தமிடப் போகிறேன்……. ‘
‘என்ன அந்த முகம் தெரியாத பெண்ணோட கடிதத்தை படிக்கிறீங்களா ? ‘ ஒரு கப் காபியை எதிரிலிருந்த சின்ன மேசையில் வைத்துவிட்டு, கரீன் கேட்டாள்.
கடிதத்தை மடித்துக்கொண்டு அவளிடம் அசடு வழிந்தார்.
‘ உய்(ஆமாம்). இந்தக் கடிதத்திலும் அவள் யார் ? னு சொல்லிக்கலை. இந்த இரண்டு மாதமா இருபது கடிதங்கள் வந்திருக்குது. பேரில்லை. தொலைபேசி எண்ணில்லை. முகவரி இல்லை. குறைந்தபட்சம் ஒரு போட்டோவையாவது அனுப்பி வைச்சிருக்கலாம். எதற்காக இந்த விளையாட்டோ ? ச்சே… ‘
‘ சே பிஸார் (ஆச்சரியமாயிருக்கு)! ரங்கநாதன் ஒண்ணு சொல்லட்டுமா ? உங்களைப்பற்றி இப்படித் தெளிவா எழுதறாள்ன்னா, எனக்கென்னமோ அவள் உங்களுக்கு அறிமுகமானவளாகத்தான் இருக்கணும் ? யோசித்துப் பார்த்தீங்களா ? ‘
திடுக்கிட்டு ரங்கநாதன் அவள் கண்களைப் நேராகப் பார்த்தார்.
‘சத்தியமா நானில்லை. என்னைச் சந்தேகிக்க வேண்டாம். அப்படி ஏதாச்சுமிருந்தா நான் லெட்டரெல்லாம் போட்டுக்கொண்டிருக்கமாட்டேன். நேரா படுக்கைக்குக் கூப்பிட்டிிருப்பேன் ‘ என்று கண் சிமிட்டிய கரீனிடம் சொல்லிக்கொண்டு, தனது அப்பார்ட்மெண்ட் இருக்கும் முதல்தளத்திற்கு மீண்டும் படிகளில் ஏறியபோது ரங்கநாதனிடம் சோர்வு இருந்தது.
மெள்ள வெளிக்கதவைத் திறந்துகொண்டு, அறைக்குள் நுழைந்து, கட்டிலில் விழுந்தார். அந்தக் கடிதத்தை மீண்டும் பிரித்து, விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.
‘…….பிறகு, .உங்களை இன்றைக்கு ‘காப்பி பாரில் ‘ பார்த்தேன். எப்பவும் போல நுரை ததும்ப எஸ்பிரஸ்ஸோவை உறிஞ்சிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் உதடுகளிலிருந்த நுரைகளை சுவைக்க ஆசை. அதற்கான காலம் வரும். ஆனால் எப்போது ? சொல்லமாட்டேன். வருவேன். திடாரென்றுவருவேன். ஆச்சரியப்படுத்துவேன். ‘
இப்படிக்கு
உங்கள்………….
கடிதத்தைப் படித்து முடித்தவுடன், ரங்கநாதன் மெளனமாக அந்தச் சந்தோஷத்தை அனுபவித்தார். கடிதத்தை உறையிலிட்டு, கடந்த இரு மாதங்களாகச் சேர்த்து வைத்திருந்த இதர கடிதங்களுடன் ஒரு சிறிய பெட்டியில் வைத்து மூடினார்.
கட்டிலில் உட்கார்ந்தவர் தன்னறைச் சுவர்களை முதன் முறையாகப் பார்ப்பதுபோலப் பார்த்தார். சுவர் முழுக்க பெண்கள் பெண்கள். மாதாஹரி, மர்லின் மன்றோ, ஸ்ரீ பிரியா, ரேகா, ஐஸ்வர்யராய், இஷாகோபிகர், ஜெனிபர் லொப்பெஸ், குளொடியா ஷிஃபர், அக்கீரா, ஷாந்தெல் என்று வரிசைவரிசையாய், இறந்தகால, நிகழ்கால கனவுக்கன்னிகளை, உலகத்தின் அத்தனை இனத்திலும், வகைக்கொன்றாய் வைத்து அலங்கரித்திருந்தார். எல்லோரையும் வரிசையாக நலம் விசாரித்தார். பக்கத்தில் கிடந்த பிரெஞ்சு வார இதழொன்றைப் பிரித்து, அதில் வந்திருந்த ‘உங்களுக்கான ஜோடியைத் தேர்வு செய்வது எப்படி ? ‘ என்றக் கட்டுரையை ஐந்தாவதுமுறையாக வாசித்தார்.
ரங்கநாதனுக்கு இந்த ஆகஸ்ட்டோடு இந்தியகணக்குபடி நாற்பதெட்டு வயது, பிரான்சு கனக்குப்படி நாற்பத்தேழு. இவருக்கு இருபத்தெட்டு வயதானபோது, இவரது அம்மா, எல்லா இந்திய அம்மாக்களைப் போலவே பிள்ளை வயிற்றுப் பேரனுக்கு ஆசைபட்டு, தனது தம்பி மகளின் சாமுத்ரிகா லட்சணத்தைக் கொஞ்சமாகவும், குண விசேஷத்தைக் கூடுதலாகவும் சிலாகித்து கடிதம் எழுதியபோது, அதை அலட்சியம் செய்துவிட்டார். முப்பதெட்டில் இவருக்குக் கல்யாண ஆசைவந்தபோது, மாமன்மகள் இந்தியாவிலேயே ஒரு ரெவன்யூ கிளார்க்குக்கு வாழ்க்கைப்பட்டு மூன்றாவது பிள்ளையையும் பெற்றிருந்தாள். இவரால் காதலிச்சுகூட ஒருத்தியை கைபிடிக்க முடியலை. இவரைச்சுற்றிப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். மனதுக்குள் வண்டி வண்டியாக ஆசை வந்திருக்கிறது. ம்.. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தமிழ்ச் சினிமா உத்திகளை கையாளத் தயக்கம் வந்துவிடும்.. ஒதுங்கிப் போய்விடுவார். அல்லது எவளாவது ஒருத்தி, இவரிடம் நெருங்கி, ஏதாவது ஒரு மொழியில் தன் காதலைச்சொல்லி, கைப்பிடித்து, வாரிசுகளைப் பிரசவித்து, வாய்க்குச் ருசியாக சமைத்து, குடித்தனம் நடத்த வந்திருக்கலாம். இல்லை. இதுவரையில்லை. காத்திருக்கிறார்.
மனம் கனத்திருந்தது. தேம்பித் தேம்பி குழந்தையைப் போல அழுதார். கட்டிலைவிட்டு எழுந்தார். கண்களை அழுந்தத் துடைத்தார். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துவைத்துக் கொண்டு சுத்தமான பிரெஞ்சில் எழுத ஆரம்பித்தார்.
‘ போன்ழூர் மோன் அமூர் (என்னுடைய காதலருக்கு)!
——————————————-
Na.Krishna@wanadoo.fr
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்