சின்னக்கருப்பன்
**
‘அம்மா ‘ அருள்பாலித்து எல்லோரும் கடா வெட்டாமல் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டுத்தான் சாமி கும்பிட வேண்டும் என்று திருவாக்கும் கூடவே போலீசுக்கு ஆளை உள்ளே தள்ள அனுமதிவாக்கும் அளித்திருக்கிறார்.
‘தீ மிதிப்பதை ‘ காட்டுமிராண்டித்தனம் என்றும், குங்குமம் வைப்பதை காட்டுமிராண்டித்தனம் என்றும் சொன்ன திராவிட இயக்கத்தின் ஒரிஜினல் மார்க் கழகத்தலைவர் இன்று ஜெயலலிதா கடாவெட்டுத் தடைச்சட்டம் போடுவதை கண்டிக்கிறார்.
அவ்வாறு கலைஞர் தீ மிதிப்பதை காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னபோது அதனைக் கண்டித்த பாஜக, இந்து முன்னணி இதர வகையறாக்கள் இன்று ஜெயலலிதா கடாவெட்டுவதை தடுக்க முனைந்திருப்பதை ஆதரிக்கிறார்கள். (விஹெச்பி வேறு நிலைப்பாடு. அது இந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது)
கண்ணகி சிலை தூக்கியதற்கு ஆதரவு, கடா வெட்டுவதை நிறுத்துவதற்கு ஆதரவு என்று ஞாநி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓலை எழுதிக்கொண்டிருக்கிறார். ‘பேரையூர் மனித உரிமை மீறலுக்கும் ‘ எதிராக நிச்சயம் எழுதி ஜெயலலிதா அதனை நிறுத்தியதை ஆதரித்திருப்பார் என்றே கருதுகிறேன். அது பற்றி விவரம் தெரியவில்லை.
ஞாநியின் கட்டுரையை தீம்தரிகிட இதழில் பார்க்க நேர்ந்தது. கடா வெட்டு தடுப்பு சட்டத்தை பாராட்டியிருக்கிறார்.
எந்த இடத்திலும் சாமிக்கு படைத்து விட்டு சாப்பிடுவது முட்டாள்தனம் என்று இல்லை. சாமிக்கு கடா வெட்டி சாப்பிடுவது முட்டாள்தனம் என்று இருக்கிறது
ஞாநி (மற்றும் பெரியாரின் படி) உலகில் இரண்டே வகைதான் ஒன்று அயோக்கியர்கள் இரண்டாவது முட்டாள்கள், ( ஞாநியும் பெரியாரும் எந்த வகையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை)
சங்கரும் சுஜாதாவும் அயோக்கியர்கள் என்று முடிவு கட்டிவிட்டார் ஞாநி. எனக்கு அப்படிப்பட்ட பாகுபாடு எல்லாம் இல்லாததால், நான் ஞாநியை மக்கள் நலம் விரும்பும் பத்திரிக்கையாளர் என்று நிர்ணயிக்கிறேன். சங்கரையும் சுஜாதாவையும் நம் ஊரின் மடிசஞ்சித்தனமான கலாச்சாரத்தை உடைக்க முயற்சிக்கும் நல்ல கலைஞர்கள் என்று நிர்ணயிக்கிறேன். என்ன கொஞ்சம் ஆணாதிக்கச் சிந்தனையை மொத்தமாக உதற முடிந்திருக்காது. இருந்தால் என்ன ?
ஞாநியும், எது யோக்கியம் எது அயோக்கியம் என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொண்டு இந்தப் பிரச்னைக்கு வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
இந்த மடிசஞ்சிக்கலாச்சாரம் நம் ஊரில் எப்போது வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அகநானூறு கவிதைகளில் எல்லோரும் மாரில் துணியில்லாமல்தான் நடமாடுகிறார்கள். படிக்கும்போது எனக்கு விரசமாகவோ அல்லது ‘சிவசிவா ‘ சொல்லவோ தோன்றவில்லை. சகிலா படங்கள் நான் பார்த்ததில்லை என்றாலும் அவற்றில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. சங்கர் செய்த தவறு இந்த படத்துக்கு ஏ முத்திரை நியாயமாக வாங்காதது. அது வாங்கியிருந்தால் யாராலும் ஏதும் சொல்ல முடிந்திருக்காது. ஏ வாங்கியிருந்தால் குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக சினிமாவுக்குப் போகாமல் தனித்தனியே சென்று பார்த்திருப்பார்கள். அவ்வளவுதான்.
சர்க்கரை பொங்கலை சாமிக்குப் படைப்பது சர்க்கரை பொங்கல் சாப்பிடுபவர்களின் வழி. ஆட்டுக்கறியை சாமிக்குப் படைப்பது ஆட்டுக்கறி சாப்பிடுபவர்களின் வழி. சர்க்கரைப்பொங்கலைத்தான் படைக்கலாம் என்று சட்டம் போட்டால் சர்க்கரை பொங்கல்காரர்கள் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அதை விட இன்னொன்று ஆட்சி பீடத்தில் உட்கார்ந்திருக்கிறது. அது யூத கிரிஸ்தவ நியமங்கள்.
பாலுறவு பாவம் என்பது இந்திய பாரம்பரியச் சிந்தனையில் கிடையாது. ஏவாள் என்ற பெண்ணால் ஆதாம் என்ற ஆண் கெட்டுப்போனதால் பெண்கள் பாவிகள் என்ற சிந்தனையும் நம்மில் கிடையாது, நம் ஊரில் மிகவும் அதிகமாகக் கும்பிடப்படும் தெய்வம் பெண் தெய்வங்கள்தாம். அந்தப் பெண் தெய்வங்களுக்கு ஆண் தெய்வங்களைப் பெற்றதால் தெய்வீகம் வரவில்லை. மாரியம்மனும் வெக்காளியம்மனும் காட்டேரியும் தெய்வங்கள். எந்த ஆண் தெய்வத்தையும் சார்ந்திருக்க வேண்டாத தெய்வங்கள்.
பாலுறவு பாவம் என்பதோ, நிர்வாணம் கெட்டது என்பதோ, மாரில் துணியில்லாமல் நடமாடுவது அசிங்கம் என்பதோ நம் ஊரில் இல்லாமல் இருந்தது. அது ஒரு காலம். ஏன் சொல்லப்போனால், ஜீன் தப்பிப்பிறந்த அரவாணிகள் கூட தங்கள் சமூகம் அறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் ஒரு திருவிழா, அவர்களுக்கும் கடவுள், அவர்களுக்கும் இடம் என்று இந்த சமூகம் கொடுத்திருந்தது. அந்த இடம் சற்று தாழ்ந்ததாக இருந்திருக்கலாம். ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்த நாட்டில் மற்ற நாடுகளில் இது போன்று பிறந்தவர்களுக்கு இருந்திருக்கும் மரியாதையைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. நிலம் சார்ந்த அந்தக் காலகட்டத்தில் அவர்கள் வாழ இந்த சமூகம் கொடுத்திருந்த இடம் பெருமைப்படக்கூடியதுதான்.
கோவிலில் சிலைகள் இருந்தன. எந்தக் கோவில் சிலைகளிலும் மாரில் துணி போட்டுப் பார்க்கவில்லை நான். கஜ்உராஹோ தொடங்கி ஸ்ரீரங்கத்து தெற்குவாசல் சிலைகள் வரை இவை பாலுறவு பற்றிய அவமான உணர்வை, குற்ற உணர்வை உண்டாக்கவில்லை. அப்படி ஒருவேளை இருந்திருந்தால் அதனைப் போக்கக்கூட உதவியிருக்கின்றன.
தெய்வீகம் என்பது அழகு. செளந்தர்ய லஹரி (அழகு வெள்ளம்) எழுதிய சங்கரர் அழகாக பெண் உருவத்தை வர்ணிக்கிறார், முலை அல்குல் உட்பட. வெள்ளைக்காரன் தன்னுடைய மறுமலர்ச்சிக் காலத்துக்கு பின்னால் கிடைத்த சொற்ப சுதந்திரத்தை வைத்துக்கொண்டு வரைந்த பெண் ஓவியங்களை ஆஹா ஓஹோ என்று புகழும் தமிழக இந்திய அறிவுஜீவிகள், செளந்தர்யலஹரி, கம்பராமாயணத்தில் இருக்கும் பெண் வர்ணனைகளைப் படித்துவிட்டு, இதுவெல்லாம் இறைவனைப்பாடும் காவியமா, இதுவெல்லாம் கவிதையா என்று அசூசை அடைகிறார்கள்.
ஒரு சுமார் 1000 வருடங்களாக இந்தியாவின் பாரம்பரியக் கல்வி அழிக்கப்பட்டு, பாரம்பரியச் சிந்தனைக் கேவலப்படுத்தப்பட்டு அடிமைப்புத்தி தலைக்கேறியவுடன், வெள்ளைக்காரன் எது சொல்கிறானோ அதுவே சிறந்தது என்று சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டோம். அதோ பார் அமெரிக்கா, இதோ பார் பாரீஸ், அங்கெல்லாம் அறிவு முழக்கம் கேட்கிறது. தமிழ்நாட்டிலோ புராணங்களில் பாலுறவு பேசப்படுகிறது என்று புலம்பும் ‘அறிவுஜீவிகளும் ‘ பகுத்தறிவு வாதிகளும் முற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள்.
எது ஒழுக்கம் எது யோக்கியம் என்ற நிலைப்பாடு எடுப்பது எளிதானதல்ல. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைத்தவிர அதில் நிரந்தரமானது ஏதுமில்லை.
ஒழுக்கம், யோக்கியம் எது என்பதை எது நாம் தொடர்ந்து இந்த உலகில் நீடித்திருக்க துணை புரிகிறதோ அது என்பது ஓரளவுக்கு சரி என்பதே என் கருத்து.
பாலுறவு என்பது குழந்தைகளுக்கு தெரியவரவேண்டிய காலத்தில் தெரியவேண்டும் என்று எண்ணுவது சரியானது. ஆனால், அது ஒரு திடார் விபத்து போலவோ, அது பலவந்தமாகவோ திணிக்கப்படும்போது மனநிலை பாதிக்கப்படுகிறது என்பதும், அது நீண்டகாலத்துக்கு குழந்தைகள் மனதில், அவர்கள் பெரியவர்களாக ஆனபின்னரும் இருந்து அவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி அவர்களை சரியான முறையில் சமூகத்தில் பங்கேற்பதை தடுக்கிறது என்பதும் அறிந்த ஒரு விஷயம்.
18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்பது இப்படி நம் சமூகம் நிர்ணயித்து சட்டமாக நாம் ஏற்றுக்கொண்டு நமது எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் ஒரு விஷயம்.
அதே சமயம், அந்த 18 வயதுப் பெண், பாலுறவு பற்றியும், உடல் பற்றியும், உள்ளுணர்வு தாண்டி பல விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் இருக்கிறது. விலங்குகளுக்கு உள்ளுணர்வு மட்டுமே போதுமானது. ஆனால், ஒழுக்க விலங்குகளான மனிதர்களுக்கு உள்ளுணர்வு தாண்டி பல விஷயங்களை சமூகம் அளித்துள்ள ஒழுக்கத்துக்கான வரையறைகள், அந்த சமூகம் அளித்துள்ள பாதுகாப்புகள் பற்றிய செய்திகள் தெரியவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஆகவே நம் கலைகள் மக்களுக்குக் கொடுக்கவேண்டிய அறிவை (எல்லாவிதமான அறிவையும்) அவர்களுக்குக் கொண்டு செல்லும் வாகனங்களாகவே இருந்திருக்கின்றன.
அவை ராமர் கதையிலிருந்து, பொன்னர் சங்கர் கதையிலிருந்து, கதா காலாட்சேபத்திலிருந்து, தெருக்கூத்திலிருந்து எல்லாமே இதை நோக்கியே இருந்துவந்திருக்கின்றன.
இந்தக் கதைகள் எல்லாம் பெரிசுகளுக்கு தெரிந்தவையே. ஒவ்வொரு வருடமும் பார்ப்பவையே. இருப்பினும், அலுப்புத் தட்டுவதில்லை. அடுத்து வரும் தலைமுறைகள் தொடர்ந்து இவைகள் மூலம் தங்கள் பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.
ஆனால், வெள்ளையர் உபயமாக நமக்கு வந்திருக்கும் மடிசஞ்சிக் கலாச்சாரத்தில், பாலுறவு பற்றி பேசுவதோ, உடலின் சில பகுதிகளைக் காட்டுவதோ அவமானகரமாக ஆக்கப்பட்டுவிட்டது. ‘இதெல்லாம் புராணமா ?இதெல்லாம் காவியமா ? இதெல்லாம் கவிதையா ? இதோ பார் முலை பேசப்படுகிறது, இதோ பார் அல்குல் பேசப்படுகிறது ‘ என்று பேசப்பட்டு, நம் காவியங்களைப் பற்றியும், நம் கவிதைகளைப் பற்றியும் நம் பாரம்பரியம் பற்றியும் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கப்பட்டு விட்டது.
உடல் எல்லாம் மூடப்பட்டு, முழங்கால் காட்டினாலே உணர்ச்சிவசப்படும் நிலையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதே காரணத்தாலேயே, சகிலா முழங்கால் காட்டி சென்னைத் தெருக்களெங்கும் உட்கார்ந்திருக்கிறார் போஸ்டர்களில். மறைக்கப்படுவதை விற்று காசு பண்ண என்ன பாரம்பரியம் வேண்டும் ?
பாய்ஸ் படத்தில் சங்கரும் சுஜாதாவும் சகிலாவின் முழங்கால் காட்டி பணம் பண்ணவில்லை. (அப்படி பண்ணியிருந்தாலும் தப்பு ஏதுமில்லை). ஆண்களின் பார்வையில், இன்றைய வளரும் பிராயம் எத்தனை அவமானங்களும் குற்ற உணர்வுகளும் நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் அதனைத் தாண்டியும் ஒருவன் வளரவேண்டியதாக இருக்கிறது, வளரவும் முடியும் என்றுமே அந்த படம் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்.
***
இதே யூத கிரிஸ்தவ பார்வையின் இன்னொரு விளைவுதான், கடா வெட்டு தடுப்பு அரசியல்.
வள்ளலாரும், புலால் உண்ணாததை போற்றிய திருவள்ளுவரும் கிரிஸ்தவ பாரம்பரியத்தில் வரவில்லைதான். ஆனால் அவர்கள் சொன்னது எல்லோருக்குமான ஒரு விஷயமா என்றும் எனக்குத் தெரியவில்லை. வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் என்ன உண்டார் ? தாவரங்களின் முட்டைகளையா ?
இந்துப் பாரம்பரியத்தில் ஈவில் என்ற ஒரு கருத்தாக்கம் உள்ளதா ? நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
சிங்கம் மானைக் கொல்வது தவறா ? எந்த இடத்திலாவது சிங்கம் மானைக் கொல்வது தவறு என்று யாரேனும் எழுதிப் பார்த்திருக்கிறீர்களா ? மனிதர்களான நாம் நம்மை மானின் இடத்திலிருந்து நினைவு தொட்ட, ஜீன் தொட்ட காலம் தொட்டு பார்க்கப் பழகிவிட்டோம். அதுவே மானிடம் நமக்கு வரும் பாசம். இருப்பினும் எந்த இந்துப் புத்தகத்திலும் சிங்கம் கெட்டது என்றோ, மான் நல்லது என்றோ படித்திருக்கிறோமா ?
சிங்கம் மானைக் கொல்லவில்லை என்றால், அது பசியில் இறந்து போகாதா ? அது ‘பாவமில்லை ‘யா ?
சிங்கத்தின் இயற்கை மானைக் கொல்வது. மானின் இயற்கை, சிங்கத்திடம் மாட்டாமல் தப்ப முயல்வது. அவ்வாறு சிங்கத்திடம் இறந்து போகக்கூடிய மான்களின் எண்ணிக்கையை மீறி அதிகமாக இன உற்பத்தி செய்து தங்கள் சந்ததியை நீட்டுவது. இதில் சிங்கங்கள் அதிகமானாலும் பிரச்னை. மான்கள் குறைந்தாலும் பிரச்னை. மான்கள் அதிகமானலும் பிரச்னை. சிங்கங்கள் குறைந்தாலும் பிரச்னை. சிங்கங்களின் எண்ணிக்கைக்கும் மான்களின் எண்ணிக்கைக்கும் இடையே ஒரு சமன்பாடு இருக்கிறது (மேலதிக விபரங்களுக்கு செல்ஃபிஷ் ஜீன் – ரிச்சர்ட் டாக்கின்ஸ் புத்தகம் படிக்கவும்)
மனிதர்களுக்கு புலால் வேண்டும். மனிதர்கள் ஜீவிக்க இன்றியமையாத புரோட்டின் புரதம் மிக அதிகமாக, குறைந்த செலவில் கிடைக்கும் இடம் புலால். புலால் சாப்பிடாமல் இருக்க முடியும். தொடர்ந்து உயிர் வாழ முடியும். அது நம் சமூகத்துக்கு எந்த எதிரியும் இல்லாமல் இருக்கும்போது.
மனிதர்களுக்கு உணவே அவர்கள் குணங்களை நிர்ணயிக்கிறது. உணவு மாமிசமாக இருக்கும்போது ராஜஸ குணம் தோன்றுகிறது. காய்கறிகளை உண்ணும்போது சத்வீக குணம் தோன்றுகிறது. பழைய உணவை உண்ணும்போது தமஸ குணம் தோன்றுகிறது. இது வெறும் புத்தகம் படித்துச் சொல்லவில்லை. நீங்களே கூட பரிசோதித்துப் பார்க்கலாம்.
ஆசிரியர்கள் சத்வீக குணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் மாணாக்கர்களிடம் பொறுமையுடன் மீண்டும் மீண்டும் சொல்லித்தரும் குணம் இருக்கும். போர் வீரர்கள் ராஜஸ குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தமஸ குணம் கொண்டவர்களாக யாரும் இருக்கக்கூடாது. சோம்பேறித்தனம் வளரும்.
எங்கள் வீட்டில் சாமி கும்பிடும்போது ஆட்டுக்கறியும் சாராயமுமே வைத்துப் படைப்பார்கள். நான் ஒரு சமயம், சில காரணங்களால் சைவ உணவு உண்ண ஆரம்பித்து இரண்டு வருடங்களில் இரண்டு முறை மாமிசம் சாப்பிடும்படி ஆயிற்று. காரணம் எங்கள் குலதெய்வத்துக்குப் படைத்ததை சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக. நான் சாராயம் குடிக்கும் ஒரே சமயம், எங்கள் குலதெய்வங்களுக்குப் படைத்ததை சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக. எங்களுக்கு மாமிசமும், சாராயமுமே பாரம்பரியம். மதுவிலக்கு இருந்த காலங்களில் கூட, இரண்டு நாட்களுக்கு முன்னரே, சாராயத்தை வீட்டிலேயே தயார் செய்து வைத்து நாங்கள் கும்பிடுவோம். தீபாவளியன்று ஆட்டுக்கறி குருமாவும் இட்டலியுமே காலையில்.
ஒரு சில சமயங்களில் அம்மா பண்ணும் ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் சாப்பிடும்போது, என் பிராம்மண நண்பர்கள் பாவம் (இது வேறு பாவம்) என்று நினைத்துக்கொள்வேன், இவ்வளவு ருசியான உணவை சாப்பிடாமல் இருக்கிறார்களே என்று.
தங்கள் ஆசிரியர் தொழிலுக்காக, எளிதாக கிடைக்கும் புரோட்டானை, மிகவும் ருசியான உணவை தியாகம் செய்திருக்கிறார்கள் பிராம்மண சமூகமே. (இன்று அதனை நியாயப்படுத்தப் பேசும் எதனோடும் எனக்கு உடன்பாடில்லை)
ஒரு சமூகத்தில் எத்தனை ஆடுகள் இருக்கின்றன, எத்தனை கோழிகள் இருக்கின்றன, அவைகளை வளர்த்து உண்ண எத்தனை (சமூக ஆரோக்கிய, சமூகப் பொருளாதார) செலவு ஆகும் என்பதை வைத்தே நமது உணவு முறை அமைய வேண்டும். இதற்குள், ஜீவ காருண்யம் பேசுவது பம்மாத்தான விஷயம். ஆட்டுக்கறி மாட்டுக்கறி கோழி சாப்பிடுவதால், நமக்கு தேவையான் புரோட்டானும் கிடைக்கவில்லை, செலவும் அதிகம் (அல்லது இவைகளை மாமிசத்துக்கு வளர்ப்பதால் நீண்டகால சமூகப்பாதிப்பு) என்ற காரணங்கள் இருந்தால், நிச்சயம் இவைகளை விட்டுவிட்டு தாவரங்களிடமோ அல்லது கடல்பாசியிடமோ நமக்குத் தேவையான புரோட்டானை தேடலாம். மற்ற உயிரைக்கொல்லாத ஒரு வாழ்வு நமக்குச் சாத்தியமில்லை. சொல்லப்போனால் எந்த ஒரு உயிருக்கும் சாத்தியமில்லை. அப்படிப்பட்ட ஒரு வாழ்வு இல்லையென்பதற்காக நாம் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ள இயலாது. அதுவும் ‘ஜீவகாருண்யமான ‘ விஷயமாக இருக்காது.
வெள்ளையர் ஆண்டபோது பிரம்மசமாஜம் என்ற ஒன்று தோன்றி, கிரிஸ்துவத்தின் வடிவில் இந்து மதத்தை உருவாக்க முனைந்தது. பாதிரிமார்கள் இன்ன பிறரையும் உருவாக்கி, வெள்ளையர் பார்வையில் ‘ நாகரிகமானது ‘ எனத்தோன்றக்கூடிய ஒரு இந்துமதத்தை கட்டமைக்க முனைந்தது. அனைவரும் அறிந்ததுபோலவே இது வெற்றிபெறவில்லை. ஏனெனில் மத்திய வர்க்கத்திலிருந்து மேல்தட்டு வர்க்கத்திலிருந்தும் பிராம்மணர்களும் இன்ன பிறரும் இதற்குச் சென்றாலும் பெரும்பான்மையான (உண்மையான ) இந்து மக்களிடம் இது செல்வாக்கு பெறவில்லை. காரணம் வெளிப்படை. இதுவேதான் ஆதிகாலத்தில் பெளத்தத்துக்கும் சமணத்துக்கும் புலால் உண்ணாமையை வலியுறுத்தியபோது நடந்திருக்குமோ என்னமோ.
கோவிலில் மட்டும் வெட்டக்கூடாது என்றால், கோவில் யாருக்குச் சொந்தம் என்பதுதான் கேள்வி. ஒரு தனிமனிதன் கட்டிய கோவிலிலும், கிராமத்தார் சேர்ந்து கட்டிய கோவிலிலும் எப்படி அரசாங்கம் தலையிடலாம் ? சொந்த கடையில் ஒருவன் சாமி படம் தொங்கவிட்டு கடா வெட்டினால், அவனும் உள்ளே போகவேண்டுமா ? என்ன கூத்து இது ?
இன்று கோவில்களில் ஆடுமாடு வெட்டக்கூடாது போன்ற சட்டமும் இது போன்ற ஒரு அரைவேக்காடு முயற்சியே. இந்த சட்டத்தை எந்த ஒரு விஞ்ஞானப்பார்வையிலும் நியாயப்படுத்த முடியாது. சாமி கும்பிடுவது விஞ்ஞானத்துக்கு எதிரானது என்று வேண்டுமானால் சொல்லிப்பார்க்கலாம். அப்படியென்றால், அது சர்க்கரை பொங்கல் படையலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒன்று ஞாநி எழுதவில்லை. அப்படி ஒன்றும் ஜெயலலிதா சட்டம் போடவில்லை. அப்படி ஒன்றும் டூப்ளிகேட் சங்கராச்சாரியார் உபதேசிக்கவில்லை. அப்படி ஒன்றும் வீரமணி முழங்கவில்லை. அப்படி ஒரு சட்டம் போட்டு அதனை ஞாநி ஆதரித்தால் அது நியாயம். இவர்களுக்கெல்லாம், ‘வெள்ளைக்காரன் நம்ம கோவில்ல வந்து ஆடு கோழி வெட்டறதைப் பார்த்தா நம்மைக் கேவலமா நெனப்பான் ‘ என்ற எண்ணம் ஒருவேளை காரணமாக இருக்கலாம்.
ஆக, இது யூத கிரிஸ்தவ நியமங்களின் பாதிப்புக்குள்ளான பிராம்மணர்களின் சைவப்பிள்ளைமார்களின் சட்டங்கள். இது இன்னுமொரு ஜெயலலிதாவின் அராஜகச் சட்டம். இதனை ஆதரிக்கும் இந்துக்கள் இந்துமதம் பற்றித் தெரியாதவர்கள். இதனை ஆதரிக்கும் பகுத்தறிவுவாதிகள் பகுத்தறிவு பற்றித் தெரியாதவர்கள்.
***
karuppanchinna@yahoo.com
***
- மணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்
- வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)
- விண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822
- சூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்
- ஷார்ல் பொதலேர் (Charles Baudelaire) – 1821 -1867
- ஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா
- அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)
- மாறுதலின் இக்காலகட்டத்தில்…….
- கடவுள் எழுக!
- நெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)
- ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு
- பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)
- பெரிய கருப்பு
- வார்த்தை விளையாட்டு
- கலை வெளிப்பாடு
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]
- என்னுயிர் நீதானே !
- இணையக் காவடிச் சிந்து
- அழிவா எம் காதலுக்கா
- மண்ணில் தான்
- மனசெல்லாம் நிம்மதி
- மறுவீடு…
- தாத்தா
- இணையத்துக்கு இல்லை இணை !
- குறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)
- சிஸ்டர்
- அம்மாவின் அந்தரங்கம்
- நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி
- விடியும்! நாவல் – (17)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு
- கடிதங்கள்
- அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு
- அரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்
- யூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்
- கனடாவில் நாகம்மா -2
- வாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,
- லாந்தல் விளக்கு
- அடைப்புகளூக்கு அப்பால்….
- குமரி உலா 6
- இரவு.
- வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)
- நாகூர் ரூமி கவிதைகள்
- நிராகரிப்பில்…
- ஒரு நட்பின் முறிவு
- எண்கள்! எண்கள்!
- அவைகள்