மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

மதுமிதா


மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – மதுமிதா

அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அ.முத்துலிங்கம் சிறுகதைகள், உண்மை கலந்த நாட்குறிப்புகள் போன்ற பல நூல்களும் கடிகாரம் எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் தொகுப்பு நூலும் அளித்தவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

அவருடைய ‘வியத்தலும் இலமே’ நேர்காணல் நூல் வாசித்ததிலிருந்து அ. முத்துலிங்கம் அவர்களை நேர்காணல் செய்யும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எங்கே அவரை சந்திப்பது? அவர் கனடாவில் அல்லவா இருக்கிறார். ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ வாசித்தவுடன் நூல் குறித்து அவருக்கு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஒருநாள் அவரிடம், இந்நூலை வாசிக்கையில் பல கேள்விகள் தோன்றின கேள்விகள் அனுப்பினால் பதில் அளிக்க இயலுமா எனக் கேட்டு மடல் எழுதினேன். 5 நாட்கள் எந்த பதிலும் இல்லை. பிறகு ஒருநாள் உடனுக்குடன் பதில்மடல் வருவதைக் குறித்து கவலைப்படாமல் எத்தனை கேள்விகள் அனுப்பினாலும் பதில் தருவதாய் எழுதியிருந்தார். அதுபோல் பதில்களையும் அனுப்பி வைத்தார். இலக்கிய உலகிலும், இணையத்திலும் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். பல விருதுகள் பெற்றவர். உலக வங்கியிலும் ஐநா சபையிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இங்கே அவரது அனுபவம் பேசுகிறது.

1. ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நாவலை இப்படித்தான் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டு ஆரம்பித்தீர்களா? எழுத எழுத வடிவம் துலங்கியதா?

சில வருடங்களுக்கு முன்னர் சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிப் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றை சொன்னார். ‘சிறுகதை என்றால் வசனங்களை அழகாக செதுக்கி செதுக்கி அமைக்கலாம். நாவல் பெரிய பரப்பு, வசனத்தில் கவனம் செலுத்தமுடியாது.’ ஆங்கிலத்தில் இருப்பதுபோல சுயசரிதை நாவல் ஒன்று எழுத எனக்கு விருப்பம். அத்துடன் எழுத்தாளர் சொன்னதுக்கு மாறாக செதுக்கியதுபோல வசன அமைப்பும் நாவலில் வரவேண்டும் என விரும்பினேன். நாவல் என்றால் இறுதியில் ஓர் உச்சக்கட்டம் இருக்கும். அது செயற்கையானது. உண்மை வாழ்க்கையில் அலைபோல உச்சக் கட்டம் அவ்வப்போது வந்து போகும். அதன் விளைவுதான் இந்த நாவல். இதை ஆரம்பத்தில் இருந்து வாசிக்கத் தேவையில்லை. எங்கேயிருந்தும் தொடங்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தனியாகவும் நிற்கும், சேர்ந்தும் இருக்கும். நாவலை வாசித்த சில நண்பர்கள் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் என்றார்கள். ‘இதைச் சேர்த்திருக்கலாமே, இதை விட்டுவிட்டீர்களே’ என்றார்கள் சிலர். அவர்களிடம் நான் எப்படி சொல்வேன் 600 பக்க நாவலை 287 பக்கங்களாக சுருக்கியிருக்கிறேன் என்று. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்னும்போது நாவலை நிறுத்திவிடுவதுதானே புத்தி. பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் இருந்தார். அவர் தனக்கு பிடித்த நாவல் ஒன்றை படிக்க விரும்பினால் அவரே ஒன்றை எழுதிவிடுவாராம். நண்பர்களிடம் அப்படிச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

2. இந்த நூல் முழுக்க உங்கள் நினைவிலிருந்து எழுதிய நாட்குறிப்புகள் தாமே. தலைப்பினை ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்று கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு வாசிக்கையில் அனைத்தும் உண்மை என்றே தோன்றுகிறது. புனைவு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று உணர்கிறேன். இத்தலைப்பினைத் தேர்ந்தெடுக்க பிரத்யேக காரணம் இருக்கிறதா?

சுயசரிதைத் தன்மையான நாவல் என்று அழைப்பதுதான் பொருத்தம். நீங்கள் சொல்வதுபோல ஒருசத வீதம் கற்பனை இருந்தாலும் அது புனைவுதான் என்று ஆகிவிடுகிறது. எழுதும்போது எனக்கே பல சமயங்களில் எங்கே புனைவு முடிகிறது எங்கே உண்மை தொடங்குகிறது என்பதில் சந்தேகம் தோன்றிவிடும். இந்த நாவல் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை துண்டு துண்டாக உடைத்துவிட்டு மீண்டும் திருப்பி ஒட்டிவைத்தது போல என்று சொல்லலாம். சில துண்டுகள் கிடைக்கவில்லை ஆனாலும் முழுக்கண்ணாடி
போன்ற ஒரு தோற்றம் கிடைக்கும். நீங்கள் பார்க்கும்போது அதில் உங்களுடைய முகம்தான் தெரியவேண்டும். என்னுடையது அல்ல.

3. நைரோபியில் வாழ்ந்த சமயம் ஐஸாக் டென்னிஸனை பாதி மொழிபெயர்த்து அதை எரித்துவிட்டீர்கள். பின்னர் எரித்துவிட்டோமே என்று ஒருமுறை கூட
வருந்தவில்லையா?

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியதை திருப்தி வராமல் எரிப்பது ஒன்றும் புதுமையானது அல்லவே. ரஸ்ய எழுத்தாளர் கோகொல் தன் இறுதிக் காலத்தில் அவர் எழுதிய Dead Souls இரண்டாம் பகுதியை எரித்தார். Franz Kafka தனது எழுத்தை எரித்துவிடும்படி நண்பரிடம் சொன்னார். ஆனால் நான் எரித்தது என்னுடைய சொந்த எழுத்து அல்ல; மொழிபெயர்ப்புத்தான். திருப்தி ஏற்படாததால் எரித்துவிட்டேன்.

4 ஐஸாக் டென்னிஸனின் நாவல் அல்லது சிறுகதைகளை மறுமுறை மொழிபெயர்த்தீர்களா?

நான் அந்தச் சம்பவத்துக்கு பிறகு ஐஸாக் டெனிஸனை மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கவே இல்லை. அவருடைய Out of Africa நாவலை இன்னும் ஒருவரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த நாவலை படித்தபோது பலமுறை அதில் காணும் சொற்சித்திரங்களை வியந்ததுண்டு. அது அருமையான இலக்கியம், அதற்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது எப்படி என்பது எனக்கு புரியவே இல்லை. சமீபத்தில் ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிய ஒரு குறிப்பை எங்கேயோ படிக்க நேர்ந்தது. அவருக்கு 1954ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘இந்தப் பரிசு ஐஸாக் டெனிஸனுக்கு
கிடைத்திருந்தால் நான் மேலும் சந்தோசப்பட்டிருப்பேன்.’ எங்கேயாவது நோபல் பரிசு பெறும் எழுத்தாளர் அப்படி சொல்வாரா? அப்பொழுதுதான் ஐஸாக் டெனிஸன்
உண்மையிலேயே ஒரு பெரிய எழுத்தாளர்தான் என்பதை நான் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

5. கிகீயு மொழியில் இலக்கியங்கள் உண்டெனில் பேசப்பட்ட அல்லது பேசப்படும் நூல், எழுத்தாளர் குறித்து ஏதாவது சொல்லமுடியுமா?

எனக்கு தெரிந்து கிகீயு மொழியில் பழைய இலக்கியங்கள் இல்லை. கென்யாவின் மத்திய பகுதியில் கிகீயு இனத்தவர் வாழ்கிறார்கள். பல ஆயிரம் வருடங்கள் இது பேச்சு மொழியாகவே இருந்தது. பிறகு ஆங்கில எழுத்துருவை பயன்படுத்தி எழுதத் தொடங்கினார்கள். ஆகவே பழைய இலக்கியங்கள் எழுத்துருவில் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

Ngugi Wa Thiongo என்பவர் கென்யாவில் பிறந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவருடைய Weep Not Child (தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தேம்பி அழாதே பாப்பா நாவல்) The River Between நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை. அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் அவர் பேராசிரியராக பணியாற்றுகிறார். வேறு ஒருவரும் செய்யாத ஒரு விசயத்தை இவர் செய்தார். ஆங்கிலத்தில் இவர் எழுதிய புத்தகங்கள் நல்ல விற்பனையாகி இவருக்கு புகழையும் பணத்தையும் சம்பாதித்து கொடுத்தன. ஒடுக்கப்பட்ட தன் இனத்தின் விடுதலைக்காக தான் எழுதும் எழுத்து எதற்காக ஆங்கிலமொழியில் இருக்கவேண்டும் என்று யோசித்தார். இனிமேல் கிகீயு மொழியில் மட்டுமே எழுதுவேன் என்று
சபதம் எடுத்து அப்படியே கிகீயு மொழியில் எழுதவும் தொடங்கினார். அந்த மொழியில் யார் புத்தகம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப் போகிறார்கள். ஆகவே அவர் கடைசியாக எழுதிய நாவலை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதன் பெயர் Wizard of the Cow. ஆங்கிலத்தில் எழுதி புகழ் சம்பாதித்துவிட்டு தன் சொந்த
மொழியில் எழுதியவர் இவர் ஒருவரே. அந்த வகையில் இவரிடம் எனக்கு மதிப்பு கூடியிருக்கிறது.

6. இயேசு அராமிக் மொழியில்தான் பேசினாரா? வேறு என்ன மொழியில் எல்லாம் பேசியிருக்கிறார்? ஆதார நூல்கள் ஏதும் உள்ளனவா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யேசு பெத்லஹாமில் பிறந்து நாசரத்தில் வளர்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் சாதாரண மக்கள் அராமிக் மொழியை
பேசினார்கள். கல்வியாளர்களும், மதகுருமார்களும் ஹீப்ரு மொழியை பேசினார்கள். சில வருடங்களுக்கு முன்னர் மெல் கிப்சன் என்பவர் எடுத்த Passion of Christ படம் வந்திருந்தது. அதில் யேசுவும் சாதாரண மக்களும் அராமிக் மொழியில் பேசுவார்கள். மதகுருமார்கள் ஹீப்ரு மொழியில் பேசுவார்கள். ரோம வீரர்கள் லத்தீன் மொழியில் பேசுவார்கள். படம் முழுக்க ஆங்கில மொழிபெயர்ப்பு வாசகம் கீழே ஓடிக்கொண்டிருக்கும்.

7. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கனடா சொர்க்கம் என முடிதிருத்துபவர் சொல்கிறார். ஒடுக்கப்பட்டவருக்கு கனடா என்ன வகையில் சொர்க்கம் எனச் சொல்ல முடியுமா?
ஒடுக்கப்பட்ட, கீழ்மைபடுத்தப்பட்ட, உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்து கனடாவில் வாழும் மக்கள் அதை சொர்க்கம்போல உணர்வார்கள். அதைத்தான் அந்த முடிதிருத்தும் நண்பர் சொன்னார். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வந்தவர். கனடாவில் சம உரிமை இருக்கிறது. தனிமனித சுதந்திரம் உள்ளது. மத, இன, மொழி நிற வேறுபாடுகள் கிடையாது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். ஒரேயொரு சின்ன உதாரணம். ஒரு நாட்கூலி வேலையாளும் ஒரு லட்சாதிபதியும் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு காத்திருக்கிறார்கள். ஒரு சிறுநீரகம் இருவருக்கும் பொருத்தமாக கிடைக்கிறது. நாட்கூலிக்காரரின் பெயர்
முதலில் இருக்கிறது. சிறுநீரகத்தை அவருக்கே பொருத்துவார்கள். லட்சாதிபதி அடுத்ததிற்காக காத்திருப்பார். இருவருக்குமே சிகிச்சை இலவசம். இங்கே வித்தியாசம் காட்டுவதில்லை, யாவரையும் சமமாகவே நடத்துவார்கள்.

8. தனிநாடு இல்லையென்பது மட்டுமே மொழி அழிதலுக்குக் காரணமாக முடியுமா?

அந்த முடி திருத்துபவர் சொன்னது இதுதான். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 வருடங்கள் முன்பாகவே அராமிக் மொழியும் ஹீ£ப்ரு மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சம வயது. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன்னர் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. இன்று 5 மில்லியன் மக்கள் ஹீப்ரு மொழியை பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். காரணம் அவர்களுக்கு ஒரு நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் பெயர் இஸ்ரேல். அங்கே அரசகரும மொழி ஹீப்ருதான். யேசு பேசிய அராமிக் மொழிக்கு ஒரு நாடு உருவாக்கப்படவில்லை. ஆகவே அராமிக் மொழி இன்றோ நாளையோ அழிந்துவிடும் நிலையில் உள்ளது. நாடு வேறு, மாநிலம் என்பது வேறு. ஒரு மொழிக்கு நாடு கொடுக்கும் பாதுகாப்பை ஒரு மாநிலம் கொடுக்கமுடியாது. உதாரணமாக அமெரிக்காவின் ஒரு மாநிலமான 13 லட்சம் சனத்தொகை கொண்ட ஹாவாயை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே அரசகரும மொழி ஆங்கிலமும் ஹவாயும். ஆனால் வர வர ஹாவாய் மொழி அழிந்துகொண்டு வருகிறது. இப்பொழுது 30,000 மக்களே ஹாவாய் மொழியை பேசுகிறார்கள். இன்னும் நூறு வருடங்களில் ஹாவாய் மொழி இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஐஸ்லாண்ட் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய சனத்தொகை ஆக 300,000 தான். இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு மொழி இருக்கிறது. அதன் பெயர் ஐஸ்லாண்டிக். அந்த நாடு இருக்கும்வரைக்கும் அந்த மொழிக்கு அழிவே இல்லை.

9 ஆதி இலக்கியம் கில் காமேஷ் ஈராக்கில் பிறந்ததா? எதைப் பற்றியது? களிமண் தட்டைகளில் அது இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றதா?

உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் என்று அழைக்கப்படுவது மெசெப்பொத்தோமியா, இப்போதைய ஈராக். இந்த நாகரிகம் கிறிஸ்து பிறப்பதற்கு
5000 வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது. இங்கேதான் கி.மு 1700 அளவில் ஹமுராபி என்ற மன்னன் ஆண்டு உலகத்தின் முதல் சட்டத்தை தொகுத்தவன். உருக் என்ற தேசத்தை கில்காமேஷ் என்ற அரசன் கி.மு 2750 – 2500 அளவில் ஆண்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். அவனைப் பற்றிய காவியம் அதற்கு பின்னர் எழுதப்பட்டது. இதுதான் உலகத்திலேயே எழுத்தில் பாதுகாக்கப்பட்ட ஆதி காவியம். இது எழுதப்பட்டது சுமேரியர்களின் ( cunieform) ஆப்பு எழுத்தில். இன்றுவரை இவை 11 மண் தட்டைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கில்காமேசை ஆங்கிலத்தில் பல தடவை மொழிபெயர்த்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான Stephen Mitchell என்பவருடைய மொழிபெயர்ப்பைத்தான் நான் படித்தேன். ஒரு ஜோசுவா மரத்தின் கீழ் அவர் நின்றபோது காவியத்தின் முதல் வரிகள் மின்னல்போல தன் மூளையில் இறங்கியதாகக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து மீதி வரிகளை எழுதினாராம். தமிழ் நூல்கள் பல ‘உலகு’ என்று ஆரம்பிக்கும். கம்பராமாயணம், திருக்குறள், சேக்கிழாருடைய
பெரியபுராணம். கில்காமேஷ¤ம் அப்படியே ஆரம்பிக்கிறது.

The one who saw all
I will declare to the world
The one who knew all
I will tell about.

இந்த நூலைப் படித்த பிறகு இதன் தமிழ் மொழிபெயர்ப்பு வந்திருக்கிறதா என்று விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் க.நா.சு பல வருடங்களுக்கு
முன்னரே இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கில்காமேஷ் பல இடங்களில் எங்கள் பழைய புராணங்களைப் படிப்பது போலவே இருக்கும். கடவுள் அம்சம் கொண்ட மனிதன், மிருக பலம் கொண்ட மனிதன், கடவுளிடம் முறையிடும்போது அவர் ஆணை வசப்படுத்த கணிகையை அனுப்புவது. அடிப்படையில் இரண்டு ஆண்களுக்கிடையில் ஏற்படும் நட்பை சொல்வது.

கதையின் சுருக்கம் இதுதான்:

காவிய நாயகனான கில்காமேஷ் உருக் தேசத்தை ஆண்ட கொடிய அரசன். அவனுடைய அட்டூழியம் தாங்காமல் மக்கள் கடவுளிடம் முறையிட அவர் எங்கிடு என்ற மிருக மனிதனை சிருட்டிக்கிறார். எங்கிடுவை மயக்கி போருக்கு அழைத்துவர பேரழகியான கணிகையை அனுப்புகிறார்கள். கில்காமேசுக்கும் எங்கிடுவுக்கும் இடையில் துவந்த யுத்தம் ஆரம்பமாகி முடிவில்லாமல் நீடித்ததால் அவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். மாபெரும் செயல்கள் செய்வதற்காக இருவரும் தேசயாத்திரை சென்றபோது வழியில் ஒரு
ராட்சசனைக் கொல்ல கடவுளர்கள் எங்கிடுவை பழி வாங்கிறார்கள். அவன் இறந்துபோக கில்காமேஷ் துக்கம் தாங்காமல் நீண்டநாள் புலம்புகிறான். இறுதியில்
கில்காமேஷ் ராச உடைகளை களைந்தெறிந்துவிட்டு மிருகத் தோலை அணிந்து மரணம் பற்றிய ஆத்ம விசாரத்தில் நாட்களைக் கழிக்கிறான்.

10. சூனியக்காரன் அத்தியாயத்தில் வரும் மூதாட்டி உயிரிழக்கும் முன்பு சொன்ன கடைசி இரண்டு வார்த்தைகள் என்னவென்று நினைவிருக்கிறதா?
இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்கையில், பிறிதொரு நாளில் இவற்றை நினைவுகூரும் தருணங்களில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு சம்பவம் நடக்கும்போது அது பெரிய சம்பவம் என்பது அது நடக்கும்போது தெரிவதில்லை. இன்று அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன செய்வேன் என்று யோசித்துப் பார்த்தால் இன்றும் அதையேதான் செய்திருப்பேன் என்று தோன்றுகிறது. நடுக்கடலில் வேறு என்னதான் செய்யமுடியும்?நபகோவின் லொலிற்றா நாவலைப் படித்த ஒரு பேராசிரியர் அதை ஒரு வார்த்தையில் வர்ணித்தார். Helplessness, அதாவது நிர்க்கதி. அந்த நிலையில்தான் அந்த மூதாட்டி இருந்தார். அவருடைய மகனும் இருந்தான். நானும் இருந்தேன். பல வருடங்கள் கழித்து நினைத்துப் பார்க்கும்போதும் வேறு எதாவது செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மனம் நெகிழ்ச்சியடைகிறது. அந்தப் பெண் மெண்டே மொழியில் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். என்ன கூறியிருப்பார்? ‘வணக்கம் விருந்தாளியே’ என்று சொல்லியிருப்பார். அல்லது ‘மகனைக் கூப்பிடு’ என்று
சொல்லியிருப்பார் அல்லது ‘சென்று வருகிறேன்’ என்று சொன்னாரோ, யாருக்கு தெரியும். அந்தப் புதிர் விடுபட்டிவிட்டால் அந்த நினைவும் மறைந்துவிடும் என்று
நினைக்கிறேன்.

11. ஆப்பிரிக்காவில்தான் அதிக காலம் கழித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு நாடு என மாற்றிச் செல்ல நேர்கையில் மொழிப்பிரச்சினையை எப்படி சமாளித்தீர்கள்?

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மாறும்போது மொழிப்பிரச்சினை ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இருபது வார்த்தைகளை மனப்பாடம் செய்துவிட்டால் எப்படியும் சமாளித்துவிடலாம். மீதியை ஆங்கிலத்திலும் சைகை மொழியிலும் பார்த்துக்கொள்ளலாம். அதிலும் என் மனைவி சாமர்த்தியசாலி. எப்படியோ புதுப்புது வார்த்தைகளை மனனம் செய்து புதுநாட்டுக்கு போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே சந்தைக்கு போய் பேரம் செய்து சாமான் வாங்கும் அளவுக்கு அறிவை வளர்த்திருப்பார். ஆனால் நாங்கள் உண்மையில் சிரமப்பட்டது சூடான் நாட்டில்தான். அங்கே அரபு மொழி பேசினார்கள். ஆங்கிலக் கலப்பில்லாத சுத்தமான அரபு மொழி என்றால் அதை அங்கேதான் பார்க்கலாம். மற்ற நாடுகளில் கார், சைக்கிள், பாங், ஹொட்டல், ரோடு போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால் புரிந்துகொள்வார்கள். ஆனால் சூடானில் கார் என்று
சொன்னால் புரியாது, பிளேன் என்று சொன்னால் புரியாது, ஹொட்டல் என்று சொன்னால் புரியாது. அரபு மொழியில்தான் சொல்லவேண்டும். நிறைய அங்கே சிரமப்பட்டோம். ஒரு புது ஆங்கில வார்த்தை வந்தால் உடனுக்குடன் எப்படி ஓர் அரபு வார்த்தையை உண்டாக்கிவிடுவார்களோ தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. ஒரு முறை நான் சென்னையில் ‘உப்பு, உப்பு’ என்று சொன்னேன். ஒருவருக்கும் புரியவில்லை. ‘சால்ட்’ என்றதும் எல்லோருக்கும் புரிந்தது. அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

12. ஆப்பிரிக்காவில் சியாரோ லியோனின் கிழக்குப் பகுதி வைரம் விளையும் பகுதி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். வைரம் தேடும் தாய், மகள் குறித்தும் எழுதியிருக்கிறீர்கள். இதுபோன்ற விஷயங்கள் நீங்கள் எழுத வேண்டுமென உங்களைத் தேடி வருவதாக நினைக்கிறீர்களா? நிகழ்ச்சிகள் உங்களுடைய எழுத்தில்
எவ்விதம் முழுமை பெறுகின்றன?

பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதாகத் தோன்றியிராது. வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியின் போது
அந்த ஞாபகம் திடீரென ஒரு மின்னல்போல கிளம்பி வெளியே வரும். மணலிலே புதைத்து வைத்த ஆமை முட்டை சூரியனின் வெப்பம் கிடைக்கும் சரியான ஒரு
தருணத்திற்கு காத்திருப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் இலக்கிய சிருட்டி நடக்கும். ஒரு சிறு தூண்டலில் இது நிகழும். ஓர் ஏழை வேலைக்காரச் சிறுமிக்கு எதிர்பாராத விதமாக ஒரு பட்டுப் பாவாடை கிடைக்கிறது. அவள் தன் கிழிந்த உடைய களைந்துவிட்டு பட்டுப் பாவாடையை அணிந்து சுழன்று சுழன்று ஆடுகிறாள். ஆடை அவள் உடலைச் சுற்றி மூடுவதும் அவள் எதிர்ப்புறம் சுழல மற்ற திசையில் மூடுவதுமாக அவள் அன்று முழுக்க சுழன்று விளையாடினாள். அவள் அழகு இரண்டு மடங்கு கூடியது. அவள் கண்கள் மின்னின. இப்படி ஓர் ஆசிரியர் வர்ணித்து எழுதியிருந்தபோது என்னுடைய மனக்கண் முன்னால் அந்த ஆப்பிரிக்க தாயும் மகளுமே தோன்றினார்கள். அவர்களுடைய புகைப்படம் பல வருடங்களாக என்னிடம் இருந்தது. இப்பவும் எங்கேயாவது பழைய ஆல்பங்களில் இருக்கும். அந்தப் பெண்களின் கண்களில் மின்னிய மகிழ்ச்சியை வேலைக்காரச் சிறுமியின் கதை நினைவூட்டியது. அதைப் படிக்காவிட்டால் நான் ஆப்பிரிக்க தாயையும் மகளையும் மறந்துபோயிருப்பேன்.

13.எந்தவொரு பகுதியிலும் அது துன்பமான நிகழ்வாக இருந்தாலும், அதை பாஸிடிவாக அழுத்தமாக தெளிவான நடையில் சுவாரஸ்யமாகச் சொல்கிறீர்களே,
இப்படி எழுத பிரத்யேகப் பயிற்சி ஏதும் செய்தீர்களா?

அமெரிக்காவில் நோர்மன் மெய்லர் என்ற ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர்தான் முதன்முதலில் உண்மைக் கதை ஒன்றை சுவாரஸ்யமாக கற்பனைக் கதைபோல எழுதி இலக்கியப்படுத்தியவர். அது ஒரு கொலைகாரனைப் பற்றிய உண்மைக் கதை, பெயர் The Executioner’s Song. அந்த நூலுக்கு புனைவுப் பிரிவில் புலிட்ஸர் பரிசு கிடைத்தது. அந்த வகைப்பட்ட எழுத்தை creative nonfiction என்று சொல்கிறார்கள். அவருக்கு முந்திய காலம் கட்டுரை என்றால் கடுமையான மொழியில் இருக்கும். படிப்பதற்கு
சுவாரஸ்யமாக இருக்காது. அவரைத் தொடர்ந்து அப்படியான கட்டுரைகளை பலர் எழுதினார்கள். மார்க் பவ்டன், அதுல் கவாண்டே போன்றவர்களைச் சொல்லலாம். ஓட்டக்காரர்களை எடுங்கள். சிலர் 100 மீட்டர் ஓட்டத்தில் சிறப்பாக செய்வார்கள். சிலர் 400 மீட்டர் ஓட்டம், சிலர் சிலர் 1000 மீட்டர். இன்னும் சிலர் மரதன் ரேசில் மாத்திரம் ஓடுவதற்கு தங்களை தயார் செய்வார்கள். 100 மீட்டர் ஓட்டக்காரர் 400 மீட்டர் ஓடுவதில்லை. 400 மீட்டர் ஓட்டக்காரர் மரதன் ஓடுவதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறமையை கோருவது. எழுத்திலும் அப்படித்தான். ஒரு நல்ல எழுத்தாளர் தான் எந்த வகை எழுத்தில் பிரகாசிப்பார் என்று தெரிந்துவைத்து அதிலே பயிற்சி செய்து
சிறப்படைய முடியும். இப்படித்தான் நானும் ஒருவகை எழுத்தை தெரிவு செய்து அப்படி எழுதிக்கொண்டு வருகிறேன். இன்னுமொன்றுண்டு. உலகத்தில் இரண்டு வகையான
இலக்கியப் புத்தகங்கள் இருக்கின்றன. படிப்பதற்கு உதவாத மோசமான மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை நான் சொல்லவில்லை. ஒன்று, பக்கம் திருப்பிகள். ஒருவர் படிக்க ஆரம்பித்தால் அவர் பக்கத்தில் இருப்பவருக்கு வேகமாக பக்கம் திருப்பும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். இரண்டு, படிக்கும் ஆளை சத்தம்போட வைக்கும் புத்தகம். பக்கம் திருப்பும் சத்தம் இராது ஆனால் படிப்பப்வர் ‘ஆ, ஓ’ என்று ஒலி எழுப்பியபடி படிப்பார். அவர் படித்து ரசிக்கும் ஒலி.எனக்கு பக்கம் திருப்பிகள் பிடிக்காது. எழுத்தின் அழகை
அவை ரசிக்கமுடியாமல் செய்துவிடும். நான் இரண்டாம் வகை புத்தகங்களையே தேர்வுசெய்து படிக்கமுயல்வேன். அதுபோலவே எழுதவும் முயற்சிக்கிறேன். ஒரு சொற்தொடரை, வசனத்தை, வார்த்தையை வாசகர் ரசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். அவர் எழுப்பும் ‘ஆ, ஓ’ சத்தம்தான் ஆகக் கிடைக்காத பரிசு என்று நினைக்கிறேன்.

14.எழுதி வைத்த பிறகு திருத்தம் செய்ய வேண்டும், எடிட் செய்யவேண்டுமென சொல்வதுபோல எழுதி அடித்து சரிசெய்து சரியான பார்மட் வரும்வரை
காத்திருந்து அளிக்கிறீர்களா?

நான் அடிக்கடி யோசிக்கும் விசயம் ஒன்று உண்டு. கம்பனிடம் ஒரு கம்புயூட்டர் இருந்திருந்தால் அவனுடைய படைப்பு எப்படி இருந்திருக்கும். இப்பொழுதெல்லாம் கம்புயூட்டரில் தட்டச்சு செய்யலாம்; வெட்டி ஒட்டலாம். இடம் மாற்றலாம். வார்த்தைகளை தேடி மாற்றலாம். எத்தனைதரம் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரில் திருத்தி எழுதலாம். ஆனால் கம்பர் ஓலையில் எழுத்தாணியால் எழுதினார். முழுச் செய்யுளையும் மனதிலே கவனம் செய்த பின்னர் ஓலையில் எழுதினார் என்று சொல்கிறார்கள். அதிலே
அவர் அடிக்கவோ திருத்தவோ திருப்பி எழுதவோ இல்லை. அவர் பாடிய 22,000 பாடல்கள் முன்னுக்கு பின் முரணாகவும் இல்லை. இது மனித நிலையில் சாத்தியமே
இல்லை. ஒரு தவநிலையை எட்டி அவர் படைத்திருக்கிறார் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த நிலை எல்லோருக்கும் கிட்டுவதில்லை. சில கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்குமே கிட்டுகிறது. ஆனால் பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள் எழுத்துக்களை பலதடவை திருப்பி திருப்பி செதுக்கி எழுதுகிறார்கள். சு.ரா, அசோகமித்திரன், மார்க் ட்வெய்ன், ஏர்னஸ்ட் ¦?மிங்வே போன்றவர்கள் திருப்தியான உருவம் கிடைக்குமட்டும் திருத்தங்கள் செய்தார்கள்.முதல் எழுத்தில் நாம் விரும்பிய உருவம்
கிடைப்பதில்லை. அந்த உருவம் கிடைக்க கொஞ்சம் பாடுபடவேண்டும். பல தடவைகள் திருத்திய பிறகும் மனதிலே தோன்றியது பேப்பரில் வராமல் போவதும் உண்டு.

Series Navigation

மதுமிதா

மதுமிதா

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

மதுமிதா


15. உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும்
சரியாகவில்லையா? இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா?

மேசன் சங்கம் 600 வருடங்களாக இயங்கி வருவதாகச் சொல்கிறார்கள். உலக நாடுகள் முழுவதிலும் அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். தற்போதைய அங்கத்தவர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க இந்தச் சங்கம் வியாபித்து இருக்கிறது. எனக்கு இந்தச் சங்கத்துடன் ஒரு தொடர்பும் கிடையாது. உலகப் பிரபலமான பலர் இதில் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவை நான் விட்டபோது என்னுடைய தொடர்பும் முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

16. உலகத்தின் பல்வேறு இடங்களில் பயணம், வாழ்க்கைமுறை மாற்றம் இல்லையென்றால், உங்கள் படைப்பு எத்திசை நோக்கி பயணப்பட்டிருக்கும் என
எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா?

நான் அதுபற்றி நிறைய தடவை சிந்தித்திருக்கிறேன். என்னுடைய சிறுகதை தொகுப்பு ‘அக்கா’ 1964ல் வெளிவந்தது. அதற்கு பின்னர் நான் வெளிநாடு போய்விட்டேன், இலங்கைக்கு திரும்பவே இல்லை, அவ்வப்போது விடுமுறைக்கு போனதோடு சரி. கிட்டத்தட்ட 25 வருடங்கள் நான் எழுதவில்லை. தமிழ் நூல்களோ பத்திரிகைகளோ படிக்க கிடைக்கவில்லை. அப்பொழுது இணையமும் இல்லை. ஆனாலும் நான் ஆங்கில நூல்களைப் படிப்பதை நிறுத்தவில்லை. பெரிய இடைவெளிக்கு பிறகு திரும்பவும் எழுத வேண்டி வந்தது. நான் இலங்கையை விட்டு புறப்படாமல் தொடர்ந்து எழுதியிருந்தால் என்னநடந்திருக்கும்? என்னுடைய எழுத்து இன்னும்சிறப்பாக அமைந்திருக்குமா, சொல்லமுடியாது.
உலகத்தில் பயணங்களும், பலநாட்டு அனுபவங்களும் ஓர் எழுத்தாளனுக்கு முக்கியமானவை. இலக்கியம் என்றால் என்ன? ஒரு துளி சம்பவத்தை எடுத்து பெருக்கி உலக அனுபவமாக மாற்றுவதுதானே. வைரம் அரித்த இரண்டு பெண்களின் கதை உலகத்தின் எந்த நாட்டிலும் நடந்திருக்கலாம். மிதவையில் இறந்த கிழவியின் கதையும் எந்த ஒரு நாட்டிலோ நடந்திருக்கலாம். அந்த அனுபவங்கள் உலகத்துக்கு பொதுவான அனுபவங்கள். என்னுடைய மொழி சிறந்தது, கலாச்சாரம் சிறந்தது, இனம் சிறந்தது போன்ற குறுகிய சிந்தனை பயணத்தின்போது அடிபட்டு போய்விடுகிறது. எல்லாவற்றிலுமே சிறப்பான அம்சம் உண்டு என்ற எண்ணம் உண்டாகுகிறது. ஆப்பிரிக்காவில் மரங்கள்
பொதுவானவை. யார் வேண்டுமென்றாலும் யார் வீட்டு மரத்திலும் பூக்களை, காய்களை, பழங்களை ஆய்ந்துகொள்ளலாம். மரங்கள் கடவுளுக்கு சொந்தமானவை, ஆகவே பொதுவானவை. எவ்வளவு பெரிய தத்துவம். தமிழிலே ‘உவன்’ என்ற வார்த்தை உண்டு. வேறு ஒரு மொழியிலும் அப்படி வார்த்தை இல்லை. ஆகவே தமிழ் சிறந்த மொழியா?
அல்கொங்குவின் மொழியில் ‘நான், நாங்கள்’ போன்ற வார்த்தைகள் இல்லை. ‘நீ’ மட்டும்தான் இருக்கிறது. ஆகவே அது தாழ்ந்த மொழியா? ஒவ்வொரு நாட்டிலும்
உள்ள தனித்தன்மை, மனிதப் பண்பு, மொழி, கலாச்சாரம் அவற்றின் உயர்வு கண்ணுக்கு படுகிறது. எழுதும்போது அது ஒரு பொதுத்தன்மையை பெறுகிறது. அதுதான்
இலக்கியத்தின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன்.

17. பாதிக்கிணறு, அம்மாவின் பாவாடை, அம்மா திருவிழாவில் தொலைந்தது, பேச்சுப்போட்டியில் உங்களுக்கு பரிசு கிடைக்காத நாளில் அது குறித்து
அம்மா எதுவும் கேட்காமல் உங்களை உணவு உண்ணச் செய்தது என அம்மா குறித்த உங்கள் பதிவுகள் ஆழமான அன்பை வெளிப்படுத்தும் பெண்ணின்
ஆளுமையை வெளிப்படுத்துகிறதே. அவர் குறித்த நினைவுகள் முழுக்க பதிவு செய்யவில்லை என்று தோன்றுகிறதா?

அம்மாவைப்பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. எதை எழுதுவது எதை விடுவது என்பதுதான் பிரச்சினை. சமீபத்தில் ஒரு நாவலைப் பற்றிய விமர்சனம் படித்தேன்.
‘இந்த எழுத்தாளர் ஒரு காட்டை வர்ணிக்கப் புகுந்தால் ஒவ்வொரு மரமாக வர்ணித்து தீர்த்துவிட்டுத்தான் நிறுத்துவார்’ என்று எழுதியிருந்தது. ஒரு மரத்தை மட்டுமே வர்ணித்து காட்டை முன்னே நிறுத்துவதுதான் எழுத்து. அம்மாவைப் பற்றிய பதிவு போதும் என்றே நினைக்கிறேன். அம்மா இறந்தபோது எனக்கு வயது 13தான். ஆனால் இன்றுவரை ஒருநாள் ஒருமுறையாவது அம்மாவை நினைக்காமல் என் நாள் கழியவில்லை.

18. தந்தை குறித்து இதே அத்தியாயங்களில் வந்தாலும் சீத்தலைச் சாத்தனார் போல தலையில் அடித்துக்கொள்ளும் அப்பாவே அதிகம் முன்நிற்கிறார்.
உங்கள் வாசிப்புக்கு, எழுத்துக்கு உங்கள் சகோதரியின் வாசிக்கும் பழக்கமும் வித்திட்டதா?

எங்கள் வீட்டில் அக்காதான் தவறாமல் நாவல்களும் வாரப் பத்திரிகைகளும் படித்தார். எல்லாம் இரவல் வாங்கியது. அவர் படித்தபடியால் நானும் படித்தேன். என் வாசிப்பு பழக்கம் அவரைப் பார்த்து ஆரம்பித்ததுதான். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன். நீங்கள் குருவிக்கூட்டைப் பார்த்தால் சில குருவிக் குஞ்சுகள் எப்பவும் வாயை திறந்து கூட்டுக்கு வெளியே தலையைநீட்டிக்கொண்டிருக்கும். தாய் பறவை உணவு கொண்டுவரும்போது அது தவறிப்போமோ என்ற பயம்தான் காரணம். நானும் அந்த பறவைக் குஞ்சுபோலத்தான். எங்கே எந்த விசயமாவது தவறவிட்டுவிடுவோமோ என்பதுபோல வாயை திறந்தபடி காத்திருப்பேன்.

19. கல்கியின் எழுத்துநடையின் பாதிப்பு ( நகைச்சுவை மிகுந்த நடை, வரலாற்றுப் பிண்ணனியுடன் காட்சிப்படுத்துதல், சுவாரஸ்யமாக செய்திகளை
அளித்தல்) அவருடைய மறைவிற்குப் பிறகு இன்றைய காலகட்டம் வரை உங்களின் எழுத்துகளில் மட்டுமே பார்க்கக்கூடியதாகத் தெரிகிறதே. நீங்கள் அதை
உணர்கிறீர்களா? வேறு யாரேனும் இது குறித்து உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா?

கல்கியை நான் பள்ளிப் பராயத்தில் ஆர்வமாகப் படித்தது உண்மை. அவர் எனக்கு எழுதிய ஓர் தபால் அட்டையை நீண்டகாலமாகப் பாதுகாத்துவைத்திருந்தேன். ஆனால்
அவரைப்போல எழுதவேண்டும் என்று நான் முயற்சித்தது இல்லை. அவருடைய சாயலில் எழுதுவதாகவும் நினைத்ததில்லை. யாரும் சொன்னதும் கிடையாது. அவருடைய நடையும் எழுத்தும் முற்றிலும் வேறு விதமானது என்றே நினைக்கிறேன்.

20. விமான நிலையத்தில் தலையில் பாதுகையைத் தூக்கிச் செல்லும் சித்திரம் இன்னும் கண்முன்னே தெரிகிறது. பாதுகாப்புக்காக சப்பாத்துகளைக் கண்காணிப்பது இன்னும் தொடர்கிறதா?

நான் அடிக்கடி பயணம் செய்வேன். வருடத்தில் பத்து தடவையாவது விமான பாதுகாப்பு கடவையில் சப்பாத்தைக் கழற்றி தூக்கிக்கொண்டு கடக்கும் பயணிகளுடன் நானும் காணப்படுவேன். உலகம் முழுக்க பயணிகளுக்கு இதுதான் விதி. உலகத்தில் விமானப் பயணத்தில் அதிக மாற்றம் உண்டாக்கியது பின் லாடன் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில்லை, நான் சொல்லுவேன் அது ரிச்சார்ட் ரீட்தான் என்று. சப்பாத்தில் குண்டுவைத்து அதைக் கொளுத்த முற்பட்டவன். அவன் இப்பொழுது அமெரிக்க சிறை ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறான். இன்று உலகத்து விமானப் பயணிகள் எப்படி பயணம் செய்யவேண்டும் என்பதை தீர்மானித்தது அவன்தான். உலகத்தில் விமானப் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகள் அவனை நாளுக்கு ஒருகணமாவது நினைவுகூருவார்கள்.

21. காதலித்து மணம் செய்துகொண்ட மனைவி, பணிக்கென சென்ற இடங்களில் பேச்சு மொழியைக் கற்று எல்லாவற்றிலும் உறுதுணையாய் இருந்து சுமுகமாக
இல்லறம் நடத்தியவர், நீங்கள் பணிஓய்வு பெற்ற போது எனக்கு எப்போது ஓய்வு (நோபல் பரிசு பெற்ற காப்ரியலின் மனைவி மேர்சிடிஸ் உங்களுடன் இத்தனை
வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த சாதனைக்காக நோபல் பரிசு தரவில்லையென்றது போல) என்று ஒரு மில்லியன் டாலர் கேள்வியினைக் கேட்டவர், உங்களின் படைப்புகள் நன்றாக இருக்கிறதென ஒரு வரியுடன் விமர்சனத்தை முடித்துக்கொள்பவர், உங்கள் எழுத்துப்பணியில் சிரமம் தராத அவரின் ஆகச் சிறந்த குணமாக நீங்கள் கருதுவது?

என் மனைவி அபூர்வமாக நான் எழுதுவதை படிப்பார். அதைவிட அபூர்வமாக எப்போதாவது நல்லாயிருக்கு என்று ஒரு வார்த்தையை உதிர்ப்பதுண்டு. (உலகப் புகழ்
பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோயிசின் மனைவி நோறா கணவனின் எழுத்தை படித்ததே இல்லை. ஆனால் படிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பாராம்.) நான் மனைவியிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. அவரிடமுள்ள அற்புதமான குணம் பொறுமை. வீட்டை அப்பழுக்கின்றி சுத்தமாக வைத்திருப்பது அவருக்கு முக்கியம். ஒரு தூசி கிடந்தால் அதை அப்புறப்படுத்தாமல் நகரமாட்டார். நான் எதிரான பழக்கம் உள்ளவன். தூசிகளை உண்டாக்கத்தான் தெரியும். ஒரு புத்தகத்தை படிக்க எடுத்தால் அதை
திரும்பவும் எடுத்த இடத்தில் வைக்க முயற்சித்ததில்லை. வீடு முழுக்க ஒரு கட்டத்தில் பாதி படித்த புத்தகங்கள் திறந்தபடி இறைந்துகிடக்கும். குறிப்பு புத்தகங்களும் போட்டது போட்டபடி கிடக்கும். மனைவி பொறுமையாக அவற்றை எடுத்து உரிய இடங்களில் அடுக்கி வைப்பார். அதே பொறுமையுடன் நான் அவற்றை மீண்டும் கைப்பற்றி விட்ட இடத்தை தேடிப்பிடித்து படிக்கத் தொடங்குவேன். யாருக்கு பொறுமை அதிகம் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.

22. யுவராசா பட்டம் அத்தியாயத்தை கடைசியில் மேலாளர் வந்த இடத்துடன் அனைவரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்க நீங்கள் கோப்பில் முகம்
புதைத்திருப்பதாய் முடித்துவிட்டீர்கள். கையாளப்பட்ட பணம் குறித்து நீங்கள் எடுத்துச் சொன்னீர்களா? என்ன ஆனார் முதன்மை இயக்குநர்? படபடக்கும்
ஆர்வத்துடன் பல வழிகளில் வாசகர்கள் சிந்திக்கட்டும் என்று அத்துடன் முடித்துவிட்டீர்களா?

அது மோசமான ஓர் அனுபவம். நான் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்தேன். வாசகர்கள் புத்திசாலிகள், அவர்கள் ஊகித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.

23. உங்கள் ஐயா சொன்னதில் ஒன்று உண்மையானது. மற்றொன்று பொய்யானது என்று போகிறபோக்கில் சொல்வது போல் சுளுவாக எழுதிவிட்டீர்கள். அது
அளிக்கும் கனமான சுமையை இறக்கி வைக்க இயலவில்லை. வாசிக்கையில் ரணமாய் வலிக்கிறது. இவ்வளவு இயல்பாக வலியில்லாதது போல எப்படி
எழுதினீர்கள்?

ஐயா சொன்னதில் ஒன்று உண்மையானது, ஒன்று பொய்த்தது என்பதைக் கண்டுபிடிக்க நான் 50 வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. நான் நடந்ததை எழுதினேன். சில ஞாபகங்கள் தூரக் கண்ணாடியால் பார்க்கும்போது துல்லியம் கொண்டுவிடுகின்றன. பழையதை அசை போடும்போது அவை மனதை அசைத்துவிடுவதும் உண்மை. எழுத்து என்பது ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்துவதுதானே. புறநானூற்றில் ஓர் உவமை வரும், மறக்கமுடியாதது. எல்லோரும் அணிலைப் பார்த்திருப்பார்கள். எல்லோரும் வெள்ளரிக்காயையும் பார்த்திருப்பார்கள். ஆனால் அந்தப் புலவருக்குத்தான் ‘அணில் முதுகு வரிபோல கோடுபோட்ட வெள்ளரிக்காய்’ என்று சொல்லத் தோன்றுகிறது. அங்கேதான் இலக்கியம் பிறக்கிறது. சாதாரண விசயம் நாங்கள் வியக்கும் இலக்கியமாகிவிடுகிறது.

24. உங்கள் இசை அனுபவம் இன்னும் தொடர்கிறதா?

இசை அறிவு என்பது எனக்கு மிகக் குறைவு. ஒரு வகை தவளை இருக்கிறது. பாம்பு அதைப் பிடிப்பதுபோல அபாயம் வரும்போது அது காற்றைக் குடித்து உப்பி
தன்னை இரண்டு மடங்கு பெரிசாக்கிக்கொள்ளும். என் எழுத்தும் அப்படி ஒரு தோற்றத்தை கொடுத்திருக்கலாம். இசை ஞானத்தை வளர்த்திருக்கவில்லையே என்ற
ஆதங்கம் எனக்கு உண்டு.

25. புத்தாயிரத் தொடக்கத்தைக் கொண்டாட நமீபியாவில் லோர்ரியின் சிறுத்தைக் காப்பகத்தைத் தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதுபோன்று நீங்கள் வேறு எங்கேனும் போய்ப் பார்க்க நினைத்த இடம் பார்க்க இயலாமல் இருக்கிறதா? இச்சிறுத்தைக் காப்பகத்தைத் தேர்ந்தெடுக்க வேறு ஏதேனும் முக்கிய காரணம் உண்டா? (இன்னொரு அத்தியாயத்தில் நாவலில் விலங்கினும் மக்களைக் காண்கையில் குரூசோ மிரண்டு போவான் என்று எழுதியிருப்பீர்கள். அதுபோல மக்கள் நடுவில் இருப்பதை விடவும் விலங்குகளிடையில் இருக்கலாம் என நினைத்தீர்களோ) அதற்குப் பிறகேனும் வெல்வெட்சியா தாவரத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்ததா?

வாழ்நாள் முழுக்க ஞாபகம் வைத்திருக்கக்கூடிய ஓர் இடத்தை தேர்வு செய்யவேண்டும் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. வெல்விட்சியா மிகவும் அபூர்வமான
பாலைவனத் தாவரம். மிகச் சிலரே அதைப் பார்த்திருப்பார்கள். சமீபத்தில் என்னுடைய மகன் பூமியின் ஆதிப் பாலைவனம் என்று சொல்லப்படும் நமீபியா பாலைவனத்தை கால்நடையாக 14 நாட்கள் நடந்து கடந்தான். அப்போது இந்த தாவரம் பலதைக் கண்டதாகக் கூறினான். இது ஒரு சுயநலம் பிடித்த தாவரம். தனக்கு கிட்ட வேறு தாவரம் முளைக்கக்கூடாது என்று தன்னைச் சுற்றி நிலத்தில் ஒரு நச்சுத் திரவத்தை பரப்பி வைக்கும். அதேபோல துரோகி தாவரம் ஒன்று ஸொலமன் தீவுகளில் உண்டு, பெயர் strangler fig tree. இதற்கு தானாக நிலத்திலே வளரத் தெரியாது. மரத்திலே விழுந்த விதையிலிருந்து வளர்ந்து கிடுகிடென்று மரத்தைச் சுற்றிபிடிக்கும். விழுதுகளை இறக்கி நிலத்திலிருந்து உணவை எடுக்க பழகிய பின்னர் உயிர் கொடுத்த தாய் மரத்தை நசுக்கி கொன்றுவிடும். மனிதர்களைப்போல மரங்களிலும் பலவகை உண்டு.

26. ஏதாவது ஹாபி உண்டா? பிராணிகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகமா? ஆப்பிரிக்காவில் முயல்கள் வளர்த்தபின்பு வேறு வளர்க்கவில்லையா?

ஆப்பிரிக்காவில் இருக்கும்போது பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்று முயல் வளர்த்தோம், கிளி வளர்த்தோம் இன்னும் லவ் பேர்ட்ஸ் நிறைய வளர்த்தோம். பல வருடங்களாக வீட்டில் நாய்கள் வளர்த்தோம். ஆனால் கனடா வந்த பின்னர் ஒன்றுமே வளர்ப்பதில்லை. நாங்கள் அடிக்கடி பயணம் செல்வதால் அவற்றை பார்த்துக்கொள்ள மாற்று ஏற்பாடு செய்வது பிரச்சினையானது. ஆகவே செல்லப் பிராணி வளர்ப்பதில்லை. தோட்டத்திலும் வீட்டிலும் மரங்கள் செடிகள் பூக்கன்றுகள் வளர்க்கிறோம்.

27. பல நாடுகளில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் 5 தேசத்து எழுத்து, எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

இது ஒரு நீளமான பதிலைக் கோரும் கேள்வி. பதில் பக்கம் பக்கமாக எழுதலாம். கீழே சொல்லும் எழுத்தாளர்களை எல்லாம் நான் சந்தித்திருக்கிறேன்.
இன்றுவரை அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். இந்தக் கணக்கில் இலங்கை
இந்திய எழுத்தாளர்களை நான் சேர்க்கவில்லை.

அ) சிமமண்டா ங்கோசி.
இளம் நைஜீரியப் பெண். இவர் இதுவரை இரண்டு நாவல்களும் பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். Half of a Yellow Sun, Purple Hibiscus என்ற இரண்டுமே
புகழ் பெற்ற நாவல்கள். இவருடைய சிறுகதைகள் முன்மாதிரியானவை. இதற்கு முன்னர் வந்திருக்கும் சிறுகதைகளை விஞ்சியிருக்கும். சமீபத்தில் அமெரிக்காவின் Genius விருது $500,000 இவருக்கு கிடைத்தது. இவர் நைஜீரியாவில் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த பரிசுச் செய்தி தொலைபேசியில் வந்தது. அப்பொழுது அவர்
நிருபர்களிடம் சொன்னார் ‘அமெரிக்கா என்னுடைய தூரத்து மாமா மாதிரி. என்னுடைய பெயர் அவருக்கு ஞாபகமிராது; ஆனால் அடிக்கடி pocket money
கிடைக்கும்.’

ஆ) மொகமட் நசிகு அலி
ஓரு சிறுகதை தொகுப்பு மட்டும் எழுதியவர், The Prophet of Zongo Street. ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய சிறுகதைகள் பிரபலமான ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. நியூ யோர்க்கர், நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவார். இசையமைப்பதிலும் ஆர்வம் உண்டு. சமீபத்தில் இவர் இசையமைத்த படம் ஒன்று ஒஸ்கார் பரிந்துரையில் சிறந்த நடிகர் பிரிவில் தேர்வாகியிருந்தது. படத்தின் பெயர் The Visitor. ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏ.ஆர்.
ரஹ்மான் பரிசு பெற்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்.

இ) கார்ல் இயக்னெம்மா
இவர் அமெரிக்கர், எழுதிய நூல்கள் The Expeditions, On the Nature of Human Romantic Interaction. இவருடைய சிறுகதை Best American Short Stories ல்
தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். ஆராய்ச்சி நேரம் தவிர மீதி நேரம் எழுதுகிறார். முடிவடையாத பல சிறுகதைகள் தன் மேசையை நிறைந்திருப்பதாக சமீபத்தில் என்னிடம் கூறினார். சிறுகதை எழுதுவதில் புதிய உத்தியை புகுத்தி அதை இன்னொரு தளத்துக்கு உயர்த்தியவர். இந்த நூற்றாண்டின் சிறுகதை போக்கையே மாற்றிவிடும் சக்தி இவர் எழுத்துக்கு இருக்கிறது.

ஈ) டேவிட் பெஸ்மொஸ்கிஸ்
கனடிய எழுத்தாளர். ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வெளியிட்டார், பெயர் Natasha. ஆனால் அதிகப் புகழ் பெற்றவர். பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. டைம்
பத்திரிகை இவருடைய எழுத்தை புகழ்ந்து எழுதியது. சமீபத்தில் இவர் திரைக்கதை எழுதி இயக்கிய Victoria Day படம் வெளியாகியிருக்கிறது. கான் திரைப்பட விழா
பாரிசில் நடைபெறுவதுபோல சண்டான்ஸ் திரைப்பட விழா வருடா வருடம் அமெரிக்காவில் நடைபெறும். அந்த விழாவில் இந்த படம் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உ) டேவிட் செடாரிஸ்.
பாரிசில் வசிக்கும் அமெரிக்க எழுத்தாளர். பல நூல்கள் எழுதியிருக்கிறார், Me Talk Pretty One Day, Dress Your Family in Corduroy and Denim, Barrel Fever, Naked.
பல விருதுகள் பெற்றவர். இவருடைய புத்தகங்கள் பல மொழிகளில் இன்றுவரை ஏழு மில்லியன் நூல்கள் விற்பனையாகி இருக்கின்றன. 2008 டிசெம்பரில் இவர்
ரொறொன்ரோ வந்திருந்தார். 2000 பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கத்தில் தோன்றி தன்னுடைய புத்தகத்தில் சில பக்கங்களை ஒரு மணி நேரம் வாசித்தார். இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு இரண்டு டிக்கட்டுகள் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். என் வாழ்நாளில் ஓர் எழுத்தாளருக்கு இத்தனை வாசகர்கள் டிக்கட் வாங்கி வந்ததை நம்பமுடியவில்லை. பலர் டிக்கட் கிடைக்காமல் திரும்பி போனார்கள். இதை இவருக்கு கிடைத்த கௌரவமாக நான் நினைக்கவில்லை, ஓர் எழுத்தாளருக்கு கிடைத்த கௌரவமாகவே
நினைக்கிறேன்.

28. உங்களின் புகைப்படங்களில் நூலை அல்லது ஒரு பத்திரிகையை வாசிப்பது போலவே போஸ் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு பிரத்யேகமான காரணம்
ஏதும் உண்டா?

லியர்னாடோ டாவின்ஸி வரைந்த மோனா லிசா நேர்கொண்ட பார்வையும் பாதிப் புன்னகையும் கொண்டவர். உலகத்திலே அதிக மக்கள் பார்த்து மகிழ்ந்த அந்தப் பெண்மணி ஓவியத்திலிருந்து நேரே பார்க்கலாம், சிரிக்கலாம். உலகத்திலேயே அதிக மதிப்புள்ள ஓவியம் என்று அதைக் கூறுகிறார்கள். நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. நான் விழித்திருக்கும் நேரத்தில் பாதி நேரம் ஏதாவது படித்தபடி இருக்கிறேன். புகைப்படக்காரர் வந்தபோது நேரத்தை மிச்சப்படுத்த படித்துக்கொண்டிருக்கலாம். அடுத்த தடவை மோனாலிசாவை தோற்கடிக்கும் ஒரு புன்னகையை தரலாம் என்றிருக்கிறேன். மோனாலிசாவின் 500 வருடப் புகழ் அத்துடன் முடிந்தது.

29. உங்கள் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?

எழுதுவதை நிறுத்துவேன் என்று சொல்லமாட்டேன், குறைப்பேன்; வாசிப்பை கூட்டுவேன். இரண்டு வருடங்கள் முன்பு ஒரு கூட்டத்தில் அலிஸ் மன்றோ (கனடா எழுத்தாளர்) தான் எழுதுவதை நிறுத்தப்போவதாக அறிவித்தார். ஆனால் மறுடியும் எழுத ஆரம்பித்துவிட்டார். இப்போழுது 82 வயது காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (நோபல் பரிசு பெற்ற
எழுத்தாளர்) தனக்கு களைப்பு வருகிறெதென்றும் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் அவரால் நிறுத்த முடியாது, மீண்டும் எழுதுவார்.
ஏனென்றால் களைப்பிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி எழுதுவதுதான்.

அன்புடன்
மதுமிதா

Series Navigation

மதுமிதா

மதுமிதா