மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


போக்கிரி’யென்று ஒரு குழந்தையைச் செல்லமாக தாய் கொஞ்சலாம். நாதா என்ற நேற்றைய நாயகி, ‘போடா போக்கிரி’ என்று செருப்பைக் காட்டினால்கூட தப்பில்லை நவீன காதல் அகராதிப்படி அது அன்பின் மொழி. ஆனால் பத்திரிகையாளர்கள் அரசியல்வாதியை ‘போக்கிரி’ என சொல்லலாமா? சொல்லலாம் என்கிறார் வாரச் சஞ்சிகையொன்றின் ஆசிரியர். வார இதழின் பெயர், ‘மரியான் (Marianne), ஆசிரியர் பெயர் ஜான்- பிரான்சுவாஸ் கான். கடந்த வாரத்தில், இதழின் அட்டையில் பிரான்சு அதிபர் சர்க்கோஸியின் மூர்க்கத்துடனான முகத்தைப் போட்டு, “Le Voyou de la Republique’ அதாவது ‘பிரெஞ்சு குடியரசின் போக்கிரி’ யென்று விளாசியிருக்கிறார். அதிபர் சர்க்கோசியைப் போக்கிரி என்றழைக்க அவருக்கு மூன்று காரணங்கள் இருந்தன.

மூன்றாவது காரணம்: வளர்ந்த நாடுகளில் முதலாளித்துவம் நேரடியாக தனிமனிதர்களின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை என்ற வகையில் அணுகவேண்டிய பிரச்சினை. பொதுவாக பிரெஞ்சு இதழாளர்கள் போலிகளல்ல, எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அரசுடன் சமரசம் செய்துகொள்பவர்களில்லை. பரிவர்த்தனை ஊடாக உறவைப்பேணுபர்களில்லை அதாவது “மற்றவரைக்கொண்டு எனது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளவேண்டுமெனில், அவர்களுடைய தேவைகளை என்னைக்கொண்டு பூர்த்திசெய்துகொள்ளவேண்டுமென்கிற” ஹெகெல் மொழியிலான “குடும்ப முதலாளிய சமூகம்” என்ற அமைப்பைச் சார்ந்து பிரெஞ்சு இதழியலுலகம் இல்லை.

இரண்டாவது காரணம்: ‘வொர்த்’ விவகாரம் (Woerth Affair) கொஞ்சம் வொர்த்தான விவகாரமுங்கூட. பிரான்சு நாட்டின் தொழில் அமைச்சரான வொர்த்தின் முழுப்பெயர் ‘Eric Woerth’. அண்மைக்காலம்வரை பிரான்சு நாட்டின் நிதிமந்திரி. ஊழல் அவரது நிதிமந்திரியாக இருந்தக் காலத்தைச் சார்ந்தது. எரிக் வொர்த் நிதிமந்திரி மட்டுமல்ல அவரது அரசியல் கட்சியின் பொருளாளருங்கூட. இங்கேதான் பிரச்சினை வெடித்தது. அரசியல் கட்சிகள் பெரிய நிறுவனங்களின் நிதிஉதவியைக் கோரி பெறுவது எல்லா நாடுகளிலும் நடைபெறுவதுதான். ஆனால் பிரான்சுநாட்டில் அது வெளிப்படையாக நடைபெறவேண்டும். இங்கே நடப்பதனைத்தும் வெளிப்படையாக நடைபெறுகிறதென்று சொல்லவில்லை. ஆனால் 90 சதவீதம் அப்படித்தான் நடக்கிறது. இப்பிரச்சினை அமெரிக்காவின் முன்னாள் அதிபரான நிக்சனை சிக்கவைத்த ‘வாட்டர் கேட் ஊழலுக்கு இணையானது. உண்மையில் இது Woerth Affair அல்ல ‘Woerth- Bettencourt Affair’ ஓர் அரசியல் பொருளாதார ஊழல். கடந்த ஜூன்மாதம் 16ந்தேதி ‘Mediapart’ என்ற பிரெஞ்சு இணைய இதழ் ஒரு தொலைபேசி உரையாடலை வெளியிட்டது. தொலைபேசியின் உரையாடலிலுள்ள குரலுக்குச் சொந்தக்காரர் பிரான்சு நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான L’Oreal உரிமையாளரும், முதலாவது செல்வந்தருமான திருமதி லிலியான் பெத்தங்க்கூர். உரையாடலை ஒலிப்பதிவு செய்திருந்தவர் அப்பெண்மணியின் உதவியாளர்களிலொருவர். வரி ஏய்ப்பு செய்த பணத்தில் ஷெஷல்ஸ்நாட்டில் தீவொன்றையும், சுவிஸ் நாட்டில் வங்கியொன்றில் பலமில்லியன் யூரோவை போட்டிருக்கும் விபரமும் ஒலிப்பதிவு செய்திருந்த உரையாடலிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இப்பெண்மணிமீது நாட்டின் வருமான வரித்துறை ஏற்கனவே எடுத்திருந்த நடவடிக்கைகளின் முடிவில் அவர்மீது தவறில்லையென தீர்மானித்து 35மில்லியன் யூரோவை திருப்பி அளித்திருந்த நிலையில், உரையாடல் ஒலிப்பதிவு அரசியல்-மற்றும் நிதித்துறையில் பெரும் சூராவளியை உருவாக்கியது. தவிர வருமான வரித்துறை, நாட்டின் நிதி அமைச்சர் கீழிருக்கும் இலாக்காவாகும். சம்பவம் நடந்தபோது நிதி அமைச்சராக இருந்தவர் ‘எரிக் வொர்த்’. இந்த மனிதர் அதிபர் சர்க்கோசியின் அரசியல் கட்சியான UMPயின் (Union pour un mouvement populaire) பொருளாளருங்கூட. அமைச்சரின் மனைவி ·ப்ளோரன் வொர்த் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் பங்குதாரர், ஒரு நிதி ஆலோசகர். இந்த அம்மாள் அதாவது நிதி அமைச்சரின் மனைவி, L’Oreal உரிமையாளரான ல்¢லியான் பெத்தான்கூரின் நிதி ஆலோசகருங்கூட. அதற்கென அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் வழக்கமாக அப்பணிக்கு வழங்கும் தொகையைக்காட்டிலும் பல மடங்கு அதிகம் என்கிறார்கள். அடுத்தடுத்து மீடியாபார்ட் வழியில் வேறு சில இதழ்களும் சில தங்கள் பங்கிற்கு துப்பறிந்து தகவல்களை வெளியிட்டன. இத்தகவல்களின் உபயம் லிலியான் பெத்தாங்க்கூரின் கணக்காளர் பெண்மணி. இவருடைய தகவலின் படி பலமுறை காகிதஉரைகளில் வைத்து இலட்சக்கணக்கான யூரோக்கள், அதிபர் தேர்தலுக்கு முன்பாக எஜமானி அம்மாளிடமிருந்து எரிக் வொர்த் கைக்குப் போயிருக்கிறது. பிரான்சு நாட்டுச் சட்டப்படி தனிநபருக்கு 4600 யூரோவும், அரசியல் கட்சியென்றால் 7600 யூரோமட்டுமே அதிகப்பட்சமாக நன்கொடையாக ஒருவர் கொடுக்கமுடியும், அத்தொகையையும் காசோலைகளாக இருக்கவேண்டுமென்பது விதி.

இன்னொரு அதிர்ச்சித் தகவலும் உண்டு, அதாவது மைச்சர் எரிக் வொர்த் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே அவரது துணைவியாரை L’Oreal அதிபர் நிதி ஆலோசகராக அமர்த்திக்கொண்டார் என்கிறார்கள். லிலியான் பெத்தாங்கூருக்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சிக்கு நிதி உதவி செய்த வேறு சில நிறுவனங்களுக்கும் நிதிஅமைச்சகத்தின் ஆசி கிடைத்திருக்கிறது. ஆதாரத்துடன் புலனறிந்து அவ்வப்போது சஞ்சிகைகள் (அவற்றுள் மரியானுமொன்று )செய்திகள் வெளியிட்டபோதிலும் எர்க் வொர்த் அசைந்துகொடுக்கவில்லை. எல்லாம் முறைப்படி நடந்ததென என சாதிக்கிறார். அதிபர் சர்க்கோஸியும் எரிக் வொர்த்தின்மேல் தமக்கு முழு நம்பிக்கையுள்ளதென்கிறார். நந்திக்கு சிவலிங்கம் சாட்சிசொல்லும் சாட்சிகள் நாம் அறியாததா என்ன? நியாயம்தானே. இதுபற்றிய விசாரணையை மேற்கொண்டுள்ள குற்றவியல் நீதிபதியோ சர்க்கோசியின் நண்பர். நீதிதுறைசார்ந்த சங்கங்களும், அமைப்புகளும், எதிர்கட்சிகளும் சுதந்திரமான நீதி விசாரனை உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். இந்நிலையில் கருத்து கணிப்புகள் அதிபர் சர்க்கோஸிமீதான நம்பிக்கையை மக்கள் முற்றாக இழந்துவிட்டதை மீண்டும் உறுதிசெய்ய, வழக்கம்போல பிரச்சினையை திசை திருப்ப சர்க்கோசி கையிலெடுத்துக்கொண்ட பிரச்சினை உள்நாட்டு பாதுகாப்பு.

முதற்காரணம்: ‘பிரெஞ்சுக்குடியரசின் போக்கிரி’ என்று மரியான் இதழ் அட்டையில் சர்க்கோசி வர்ணிக்கப்படுவதற்கானப் பிரதானக் காரணம் அண்மையில் அதிபர் தாம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ள சட்டம். நிக்கோலா சர்க்கோசி என அழைக்கப்படும் சர்க்கோசி தொடக்கத்தில் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர். அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டுகளென்கிற இடதுசாரிகளை வெல்ல அவர் கையாண்ட ஆயுதம், சட்ட ஒழுங்கு. இடது சாரிகள் வந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமென்றும், குற்றங்கள் அதிகரிக்குமென்றும் மக்களை நம்பச்செய்து பதவிக்கு வந்தவர். கடந்த மூன்றாண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. இவரை நம்பி வாக்களித்த இனவாத மக்களின் வாக்கு மீண்டும் தீவிர வலதுசாரிகளுக்குப் போய்விடுமோ என்ற அச்சம் வேறு. ஏற்கனவே புர்க்காவைத் தடை செய்யவேண்டுமென விரும்பி அதிபர் அதற்கான சட்ட வரைவுக்கு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், நாட்டில் குற்றங்களை குறைக்கவென்று புதிய யோசனைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி இனி அந்நியர்கள் குற்றமிழைத்தால் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள், அடுத்து இளஞ்சிறார்களின் செய்யும் குற்றங்கள் நிரூபிக்கபட்டால், அக்குற்றங்களுக்கான தண்டனைப் பெற்றோர்களுக்கு வழக்கப்படும். இந்த அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டே ‘பிரெஞ்சு குடியரசின் போக்கிரி’ என்று எழுதியது. கட்டுரை ஆசிரியர் ஜான்- பிரான்சுவாஸ் அதிபருக்குத் தானளித்த அடைமொழியைக் கீழ்க்கண்டவகையில் நியாயப்படுத்துகிறார்:

” ஒழுக்கத்தையும், நேர்மையையும் அறியாத ஓர் அதிபரின் கையில் பிரெஞ்சுக்குடியரசு இன்றிருக்கிறது. நாட்டின் கருத்துக்கணிப்பு அவரை மோசமான இடத்தில் நிறுத்தியிருக்கிற நிலையில் தமது சீர்குலைவைத் தடுப்பதற்கென வழக்கமான தந்திரங்களை – அதாவது அடுக்குமொழிகள், அடாவடிகள், சகிக்கவொணாத செயல்களை அவர் மேற்கொண்டிருக்கிறார். இம்மனிதரின் தகாதசெயலுக்கு முதல்பலி நாட்டின் குடிமகன். தற்போதைய நிலையில் நம் மக்களிடம் மூன்று கேள்விகளை முன்வைக்கிறேன்:

1. பிரெஞ்சுக் குடியரசின் அரசியல் சட்டத்தினுடைய முதற் பிரிவு பூர்வீகம், இனம், நிறப்பேதமின்றி சட்டத்தின்முன் அனைவரும் சமமென்கிறது. இதனை சீர்குலைக்க நினைக்கிறார். நாட்டின் குடிமக்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்?

2. ஒருவன் அரசாங்கத்தின் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டும் ஒருவர்மேல் அசட்டுத் தனமாகக் கல்லெறிய அவரும் எதிர்பாராதவிதமாக இறப்பதாகவே கொள்வோம். வேறொருவன் மூதாட்டி ஒருத்தியின் வீட்டிற்குள் புகுந்து அவளைகொலைசெய்து, வீட்டிலுள்ளதைக் களவாடிச்செல்கிறானெனக் கொள்வோம். நமது அதிபர் யோசனை இரண்டாவது ஆளைப் பிரெஞ்சுக் குடிமகனாக நீடிக்க வகைசெய்கிறது ஆனால் முதலாவது நபருக்கு அத்தகைய உரிமை இல்லையென்கிறது. காரணம் முதலாவது நபரின் பெயர் Rachid பின்னவர் பெயர் Popovitch (ரஷ்யா). இப்புதிய நீதிகுறித்து நமது பாட்டிமார்கள் என்ன நினைக்கிறார்கள்?

3. பிள்ளைகள் செய்கிற குற்றங்களுக்குத் பெற்றோர்களை சிறையிலிடவேண்டுமென்கிறார் சர்க்கோஸி, இந்நிலையில் பிரான்சுக்கு தற்போதுள்ள சிறைகளின் எண்ணிக்கை போதாது. குடும்பம், பிள்ளைகள் குறித்து தீவிரமாகச் சிந்திக்கும் கத்தோலிக்க தாய்மார்கள் இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?

பிரெஞ்சுகுடிமக்களிடம் நியாயம் கேட்கும் இதழாசிரியர், அதிபர் சர்க்கோசி மீண்டும் நாட்டை இரண்டாகப் பிரிக்கிறார் என்கிறார். அதாவது 1789ல் பிரான்சு நாடென்பது ஒரு தரப்பில் பிரபுக்கள், செல்வந்தர்களென்றும் மற்றொரு தரப்பில் அடிதட்டு மக்களான கொலுவாக்களை(Gaulois)யும் கொண்டிருந்தது. அதுபோலவே இன்று ஐரோப்பியர்கள், பிறர் என பிரிக்கப்படும் சூழல் உள்ளதென குற்றம் சாட்டுகிறார். பிரான்சுநாட்டில் உண்மையான பிரெஞ்சுக்காரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிபர் சர்க்கோஸியின் தந்தை அங்கேரி நாட்டிலிருந்து வந்தவர், அவரது தற்போதைய மனைவியோ இத்தாலி நாட்டவரென்பது உதவக்கூடிய தகவல்.

நாற்காலிக்கு நல்லது கெட்டது தெரியுமா என்ன? ஜன நாயகத்தில் அரசியல்வாதிகளுக்குப் பொதுவாகவே இரு நிலைகளுண்டு. எதிர்கட்சியாக இருக்கிறபோதொன்று, ஆட்சியிலிருக்கிறபோது மற்றொன்று. எதிர்கட்சியாக இருக்கிறபோது அக்கறைகளும் கவலைகளும் மக்கள் நலன்சார்ந்ததென்று காட்டிக்கொள்வார்கள், மக்கள் நலமே மகேசன் நலமென்று எழுதுவார்கள் பேசுவார்கள். ஆனால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும், அதிகாரம் தரும் போதை அவர்களை மாற்றிவிடுகிறது. இப்புதிய அக்கறைகள் சுயம் சார்ந்து, சொந்தம் சார்ந்து இயங்க வைக்கிறது. ஆக மொத்தத்தில் அதிகாரமும் ஒருவகையில் அபின் போன்றதுதான் ஆனால் தன்னை அகத்தில் நிறுத்தியும் பிறரை புறத்தில் நிறுத்தியும் ஆனந்திக்க உதவும் வேடிக்கையான அபின். மகேசன் நலமே மக்கள் நலம்.

———————————————————————-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா