மொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது?

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எல்லாம் இருக்கிறது, இருக்கவேண்டும். அண்மையில் சொல்வனம் இணைய தளத்தில் நாஞ்சில் நாடன் பெயர் சூட்டல்பற்றி சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நன்றாக இருந்ததுதென சொல்லத் தேவையில்லை. சில எழுத்தாளர்களை கூடுதலாக நேசிப்பதுண்டு அவர்களில் நாஞ்சில் நாடன் ஒருவர். அவரது இலக்கிய ஆளுமைக்கிடையே வெளிப்படும் பண்பாட்டுடனான கோபம் என்னை வசீகரிப்பதுண்டு. ஒரு புத்தி ஜீவியின் நியாயமான கோபம் அது. பொதுவாகவே உலக அதிகாரத்தை எதிர்த்து வசைபாடுபவர்களைக்காட்டிலும் உள்ளூர் அதிகாரத்தை நடுநிலையில் நாகரீகமான மொழியில் சொல்லவேண்டியதை தயங்காமல் சொல்பவர்களை நேசிக்கிறேன். ஜெயகாந்தனுக்கு அந்த துணிச்சலிருந்தது.

நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதிய கட்டுரையோடு இப்பகுதிக்குச் சொந்தமிருக்கிறது. பெயர்கள் ஓயாமல் பேசுபவை. அந்தக் காலத்தில் பொடிக்கு காரம், மணம் குணம் நிறைந்ததென விளம்பரம் செய்வார்கள். பெயர்களும் ஒருவகையில் பட்டணம்பொடிதான் சில பெயர்களைச் சொல்லும்போது தும்மல் வருகிறது. அ·ரிணைகளென்றால்கூட பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்தது, கவனத்திற்குறியது, தவிர்க்கமுடியாதது, மறக்கக்கூடாதது, இரண்டொரு சொற்களில் அதனை விவரித்திடமுடியாதது என்கிறபோது பெயருக்கான அவசியம் நேர்கிறது. பத்து நாய்கள் தெருவில் போகலாம், நம் வீட்டுவாசலில் ஒரு நாய் அல்லது நமக்குத் தோழமையாக ஒரு நாய் என்றால் பெயர் அவசியம். அந்தப்பெயர் தோராயமாக ஒன்றைத் தெரிவிக்கிறது குறிப்பால் நமக்கு உணர்த்துகிறது, அக்குறிப்பு தெரிவிக்கும் சமிக்கைகள் உண்மையில் அப்பெயர் தாங்கிய சரீரத்தோடு பொருந்துகிறதா என்பது பார்த்தும், பழகியும் அறிவது. பிறகு அம்மனிதர் செத்தப்பின்னரும் அவரைப் பெயரால் சுமந்து கொண்டு திரிகிறோம். மனிதருக்குப் பெயர்சூட்டுவதென்பது ஊகவர்த்தக முதலீடுபோல, இலாபத்தை எதிர்பார்த்துத்தான் பெற்றோர்கள் முதலீடு செய்கிறார்கள். கவர்ச்சிகரமான பெயர்கள் இலாபத்தை அதிகரிக்கச்செய்யலாம் என்பது நம்பிக்கை, அதாவது நம்பிக்கை மட்டுமே.

பொதுவாக ஐரோப்பியர்களுக்குக் குடும்பப்பெயரென்று ஒன்றுண்டு, தமிழர்களுக்குப் பொதுவாக அப்படியில்லை. பிரான்சைப் பொறுத்தவரை ஒவ்வொறு மனிதர்களுக்கும் இரண்டு பெயர் உண்டு. ஆங்கிலத்தில் முழுப்பெயர் (Full name) என்பதைப் பிரெஞ்சில் Nom et Prenom என்று வரும், அதாவது ஆங்கில வழக்குப்படிப்படி பார்த்தால் Name(Second name) and Christian name (First name). மேற்கத்திய நாடுகளில் Christian name என்பதே ஒருவரின் சொந்தப்பெயர் அவருடைய Name என்பது குடும்பப்பெயர். உதாரணமாக Gros என்பது குடும்பப்பெயரெனில் தலைமுறை தலைமுறையாக அச்சந்ததிவழிவந்த ஆண்கள் அனைவரும் Grosக்கள்தான். அனைவருக்கும் சொந்தபெயர் ஒன்றிருக்கும். உதாரணமாக தாத்தா Gros Pierre என்றால் மகன் Gros Vincent ஆக இருப்பார், பேரன் Gros David ஆக இருப்பார். அவர்கள் வீட்டிலிருக்கும்போது பியர், வேன்சான், தாவித் ஆக இருப்பார்கள். ஆனால் புதிய இடத்தில் பிறறிடம் நன்கு அறிமுகம் ஆகாதவரை உத்தியோக பூர்வமான அவர்களுடைய பெயர் Gros ஆகவே இருக்கும். இந்தியாவி பொதுவாக ஒரு தவறு நேர்வதுண்டு. Name என்ற இடத்தில் நமக்குக் குடும்பப்பெயர் இல்லையென்றாலும் தந்தை பெயரை மட்டுமாவது போடவேண்டும் மாறாக அதிலேயே தந்தை பெயரின் முதல் எழுத்தையும் போட்டு, நம்முடைய பெயரையும் அதில் சேர்த்து எழுதப்பழகி, Name என்றால் சொந்தப்பெயர் என்று புரிந்து கொண்டிருக்கிறோம். இங்குள்ள பிரெஞ்சு தமிழர்கள் பலரும் தங்கள் இந்தியப்புரிதலுடன் பிரெஞ்சு விண்ணப்பதை பூர்த்திசெய்தவர்கள். அவர்கள் Nom ( Name) என்ற இடத்தில் தந்தை பெயரின் முதலெழுத்தைப்போட்டு தங்கள் பெயரை எழுதிக்கொண்டிருப்பார்கள். Prenom (Christian name) இடத்தை நிரப்பமாட்டார்கள். பிரெஞ்சு பிறப்பு அலுவலகங்களில் உங்களுக்குச் சொந்தப்பெயர்களில்லையா எனக்கேட்பார்கள். இவர்கள் ‘இல்லை’ என சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வியப்பாக இருக்கும் பெயரில்லாமல் கூட இருக்க முடியுமா என நினைப்பான், பக்கத்தில் உள்ளவனிடம் சொல்வான், தனது அதிகாரியிடம் ஓர் ஐந்து நிமிடங்கள் ஆலோசனை செய்வான், கடைசியில் புன்னகைத்துக்கொண்டே திரும்புவான். ‘இல்லை’ என்று அந்த புதுச்சேரி மனிதருக்குப் பெயர் சூட்டிவிடுவான். உங்களுக்கு ‘இல்லை’ண்ணு வைத்திருக்கேன் சம்மதமா என்பான். இவர்கள் புதுச்சேரியிலிருந்து புதிதாகப் பிராசுக்குள் வந்தவர்களில்லையா, அநேகருக்கு அவன் பேசிய பிரெஞ்சு புரிந்திருக்காது தாத்தா தலையாட்டியிருக்கார், அப்பா தலையாட்டியிருக்கார், நாமும் தலையாட்டினாத்தான் பிழைக்கமுடியுமென்று தமிழனுக்குத் தெரியாதா என்ன? விளைவாக இராமசாமி மகன் ‘இல்லை’ பீட்டர் மகன் ‘இல்லை’ ஹமீது மகன்’இல்லை’ யென புதுச்சேரி தமிழர்களில் ‘இல்லை’கள் இருக்கிறார்கள். தமிழனுக்கு ஒட்டுமொத்தமாக ‘இல்லை’ண்ணு பெயர் வைத்தால்கூட எனக்குப் பூரண சம்மதம். சில புதுச்சேரிகாரர்களுக்கு இவ்வுண்மை ஒரு கட்டத்தில் உரைத்தது. பெயரில்லாமல் எப்படி? எனவே நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். நீதிமன்றத்தில் பிரெஞ்சுப் பெயர்கள் வைத்துக்கொள்ளவிரும்பினால் நல்லதென யோசனை வழங்கப்படும். புதுச்சேரி தமிழர்களும் பிரெஞ்சுப் பெயர்களைச் சூட்டிக்கொண்டால் பிரெஞ்சுக்காரர்களாக ஆகிவிடலாமென நினைத்தவர்கள் அநேகம். ஆக பல புதுச்சேரி தமிழர்கள் ரொபெர் ராமசாமி, சம்தி தினகரன், சவியெ அருணாச்சாலம் என்றெல்லாம் பெயர்வைத்திருப்பார்கள். இப்பெயர் மாற்றங்கள் அவர்கள் வாழ்வில் ஏதாவது பலன் சேர்த்திருக்கிறதா என்றால் இல்லை. இந்திய, பாகிஸ்தான், பாங்களா தேஷ், பிலிப்பைன், ஆப்ரிக்க நாடுகளின் முஸ்லீம்மக்களுக்கு அரபு நாடுகள் என்ன மரியாதை கொடுக்கிறதோ அதைத்தான் மூன்றாவது உலக நாடுகள் விடயத்தில் கிறிஸ்துவர்களேயென்றா மேற்கத்திய நாடுகள் கடைபிடிக்கின்றன. பெயரைப் பார்த்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பான். நேரில் பார்த்ததும், இவர் நம்ம ஆசாமி அல்லவென்று புரிந்துகொள்வான். இந்தியாவைக்காட்டிலும் மனித உயிர்கள் ஓரளவு மரியாதையுடனேயே நடத்தப்படுகின்றன என்பது மட்டுமே ஆறுதலான விடயம். .

மனைவி என்னைக் கடைக்கு அழைத்துப்போவதில்லை. அவளுக்கு நிதானமாக சென்று திரும்பவேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது அவளுக்குத் தேவை. எனக்கு அது போனோம் வந்தோமென நடத்தவேண்டிய சடங்கு. சட்டென்று தீர்மானித்துவிடுவேன். நன்மை தீமை இரண்டுமிருக்கிறது. அதனாலேயே அவள் என்னை அழைத்துச் செல்வதில்லை. மாறாக புத்தகக்கடைக்குச்சென்றாலும், நூலகத்திற்குச் சென்றாலும் ஏற்கனவே தீர்மானித்திருந்த புத்தகத்தைத் தவிர்த்து புதிதாக தேர்வு செய்யவேண்டுமெனில் கொஞ்சம் கூடுதலாக நேரம்வேண்டும். ஏற்கனவே தெரிந்த புத்தகத்தை எடுத்து வர நூலகத்திற்கு சென்றாலோ அல்லது புத்கக் கடைக்குச் சென்றாலோ பிரச்சினைகளில்லை, அதிட்டமிருந்து தேடிப்போன புத்தகம் கிடைத்தால் உடனே வந்து விடுவேன், மாறாக வந்ததற்கு ஏதேனும் ஒரு புத்தகம் எடுதே ஆகவேண்டுமென நினைத்தால், பின் அட்டையில் குறிப்புகளை வாசிப்பேன், இல்லையெனில் குத்துமதிப்பாக ஒரு பக்கத்தை புரட்டியோ அல்லது புத்தகத்தின் கடைசிப்பக்கத்தை – கடைசிவரிகள் எனக்கு முக்கியம், வாசிப்பேன். நூலின் தொடக்கத்தை வாசித்துப்பார்க்க ஆர்வம் கொண்டதில்லை. மேற்கண்ட இரண்டு முயற்சிகளில் புதிய எழுத்தாளரென்றால் எங்காவது சட்டென்று ஒருவித Originality சிக்கவேண்டும்.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை புத்தகக் கடைக்குசென்றபோது L’Entreprise des Indes’ என்ற நூலைப் புரட்ட நேர்ந்தது. ஆசொரியர் எரிக் ஒர்செனா(Erik Orsenna). இவரை நான் அறிய நேர்ந்தது இதுதான் முதல் முறை. உண்மையில் அப்பெயரை இணைய தளத்தில் தட்டி பார்த்தபோது விஷயமுள்ள ஆசாமி என்பது புரிந்தது. இன்றைய தேதியில் நான் அறிந்திருக்கும் பிரெஞ்சு படைப்பாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. உங்களுக்குத் தெரிந்த பிரெஞ்சு எழுத்தாளர்கள் எனக்கு தெரியாமலிருக்கலாம். புதுச்சேரியில் ஒருமுறை நண்பர் ஒருவர் பிரெஞ்சுக் கவிஞர் ஒருவர் பெயரைச் சொல்லி தெரியுமாவென்றார்? தெரியாதென்றேன் உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தேனே, என்றார். சட்டென்று இரண்டு நாட்களுக்கு முன் படித்திருந்த குறுந்தொகை ஒன்றை ஞாபகபடுத்திக்கொண்டு கொல்லன் அழிசியைத் தெரியுமாவென்றேன். கவிதை நினைவுக்கு வரவில்லை ஆனால் படித்திருக்கிறேன் என்றார். அவர் கூறியது உண்மையாக இருக்கலாம், ஆனால் எனக்கு பிரெஞ்சு படைப்புலகத்தைப் பற்றிய ஞானம் குறைவென்று எழுத வெட்கமில்லை. உண்மையும் அதுதான். எரிக் ஓர்செனாவுக்கு மீண்டும் வருகிறேன், எனக்கு அவர் புதியவர். வழக்கமாக புதியவர்களின் நூல்களைத் தேர்வுசெய்ய கையாளும் உத்தியுடனேயே தேர்வு செய்திருந்தாலும், அப்புத்தகத்தை வாங்க நேர்ந்ததற்கு நாஞ்சில் நாடன் கூறுவதுபோல நூலாசிரியர் தேர்வு செய்திருந்த பெயரும் ஒரு காரணமாக இருக்கலாம். நூலின் பெயரை, ” Entresprises des Indes” என பிரெஞ்சில் கூறினாலும், இங்கே ‘Entresprises’ என்ற சொல்லை ஒரு பன்மை பெயர்சொல்லாக எண்ணி பொருள்கொள்ள கூடாது, ஒரு வினையுரிசொல்லாக பொருள்கொள்ளவேண்டும். தவிர நூலில் இந்தியா என்ற சொல், நூல் கதைசொல்ல வரையறுத்துக்கொண்ட காலத்தில் ஒரு கண் காணாத பிரதேசம். கொலம்பஸ் ஹைத்தியை ஜப்பானென்றும், அமெரிக்காவை இந்தியாவென்றும் நம்பி காலூன்றிய காலம். ஆனாலும் எதிர்காலத்திய விபரீதங்களை குறிப்பாக காலனிய எதிர்பார்ப்புகள், மனித வரலாற்றில் நாகரீகம் பண்பாடு இவற்றுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கொடூரங்கள் ஆகியவற்றை நாவல் விவரிக்கிறது. நாவலைப் பற்றித் தனியாக ஒரு கட்டுரை வேண்டும் என்பதாலும் இங்கே அதைக்குறித்து முழுதும் எண்ண மில்லை. நாவலின் பெயர் குறித்த பிரச்சினை இது, நாவலுக்கும் பெயருக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது இல்லை என்று இரண்டையும் சொல்லலாம் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது நாவலாசிரியர் தத்துவவாதி என்பதால், இல்லை திட்டவட்டமாக சொல்ல முடிவதில்லை. பெயரைக் கொண்டு ஏமாற்றும் வேலைகளும் நிறைய. இது வர்த்தக உலகமில்லையா? போலிகள் எண்ணிக்கை அதிகம். நுகர்வோனுக்கு தனக்கான சரக்கை தேர்வு செய்கிறபோது கூடுதல் கடமைகள் இருக்கின்றன. சௌந்தர்யா என்ற யெபர்கொண்டபெண்ணெல்லாம் அழகாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. அவர்கள் உடமை நல்ல பெயரை தேர்வுசெய்கிறார்கள். பையன்களும் தரகர் பேரை சொன்னவுடனே தலையாட்டலாம். எனக்குக்கூட வாலிபவயதில் சரசு என்ற பெயரைக்காட்டிலும் சரசா என்ற பெயர் ஈர்த்திருக்கிறது. பெயர்கள் ஒரு பலம் அவ்வளவுதான்.

————————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா