ம(ை)றந்த நிஜங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

முகவை ப.குமார்


புதிய மண்பானையில்
மாக்கோலமிட்டு
வீட்டின் முற்றத்தில்
புதிய அரிசிகொண்டு
பொங்கலிட்ட -அந்நாள்
உப்புக்கரிக்கும்
உடல் வியர்வைகள் பட்டு
விளைந்த நெல்கொண்டு
செய்த பொங்கல்
இனிப்பாக இருந்தது
சர்க்கரையினால் அல்ல
கட்டாந்தரையில்
படுத்திருந்த எருதின்
கயிற்றைப்பிடித்து
தலைக்கு மேலிருக்கும்
தண்ணீர் நிறைந்த
ஆழத்தில் ஆற்றுக்கு
ஓட்டிச் சென்று
நீச்சல் கற்ற -அந்நாள்
எருதுக் கொம்புகளை
ஊசி முனைகளாக்கி
கழுத்தில் பணத்தையும்
கொம்பில் துண்டையும் கட்டிவிட்டு
மீசையிருந்தா புடிங்கடா என
முழக்கமிட்ட -அந்நாள்
தாத்தா பாட்டியையும்
தனக்கு முதியோரையும்
வணங்கிவிட்டு வரும்போது
அவர்கள் கொடுக்கும்
கால்ரூபாய் அரைரூபாய்
இவற்றை
நான் மறந்து விட்டேனா ?
மறைத்து விட்டேனா ?
பண்பாட்டின் வளர்விடம்
போற்றிப் பாட
நாகரீகத்தின் வளர்விடம்
மறைத்தும் மறந்தும் விடுகின்றன
கூடவே நானும்.
—————————

kumsu_in@yahoo.com

Series Navigation

முகவை ப.குமார்

முகவை ப.குமார்