மே தினம்

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

இரா.பிரவீன்குமார்.


நாளை மே தினம், அலுவலகம் விடுமுறை என்று, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டிருந்தது. உடன் பணிபுரியும் தொழிலாளர்களிடம் மே தினம்னா என்னப்பா? என்று வினவினேன். 20-23 வயதுடைய அந்த தொழிலாள நண்பர், தளபதி பிறந்த நாள் ஜூன் 22, தல பிறந்த நாள் தான் மே 1 என்றார். தமிழகத்தின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் அடுத்த தலைமுறை தடுமாற்றத்தில் உள்ளதை உணரமுடிந்தது. படித்த பள்ளிகளிலும் மே தின வரலாறு சொல்லிதரப்படுவதில்லை. பணிபுரியும் அலுவலகத்திலும் அவை கிடைக்க வாய்ப்பில்லை. (தொழிற்சங்கமே இல்லாத தொழிர்சாலையில் இதுபோன்ற புரட்சிகர வரலாறு சொல்லபட்டால் புதிதாக தொழிற்சங்கம் தொடங்கிவிடுவார்களோ என்ற பயம் தான் அவர்களுக்கு)

மே1 என்பது பத்தோடு ஒன்று பதினோறாவது விடுமுறையாகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையில் அந்த நாளின் பின்னே உள்ள வரலாற்று நிகழ்வை சக நண்பர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று எத்தணிக்கையில் வித்திட்டதே இக்கட்டுரை.

தொழிலாளர் புரட்சி, போராட்டம், கம்யூனிசம் என்றாலே அது தோண்றியது ரஷ்யாவோ அல்லது சீனாவோ தான் என்று எண்ணக்கூடம். ஆனால் இந்த மே தினத்திற்கான வித்து முளைத்தது அங்கல்ல. தற்போது முதாலாலித்துவம் தலைக்கும் அமெரிக்காவில்.

ஆரம்பத்தில் இங்கொன்றும் அங்கொன்றும் அமெரிக்காவில் உழைக்கும் வர்க்கத்தினரால் புரட்சிகளும் போராட்டங்களும் நடந்தன. அவை அனைத்தும் உழைப்பாளிகளின் ஊதியத்தை உயர்த்துவதற்காகவே அமைந்தது. அக்காலகட்டத்தில் “அதிகாலை முதல் அந்தி சாயும் வரை” சுமார் 12 முதல் 18 மணிநேரம் வரை உழைக்க கட்டாயபடுத்தினர். நமது IT துறையில் இப்போது கூட இந்த நிலையே உள்ளது ஆனால் அவர்களது ஊதியம் அவர்களை போராட்டத்தில் குதிக்கவைக்கவில்லை. யாருக்கு தெரியும் விரைவில் அவர்களும் களத்தில் குதிக்கலாம்.

முதன்முறையாக உழைக்கும் நேரத்தை குறைப்பதற்கான போராட்டங்களை கண்டது அமெரிக்கா. தனி தனியே நடந்த போராட்டங்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திகொண்டன. இதை தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.அத்தோடு மே1 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

சிதறி கிடந்த மக்கள் சக்தி ஒருமித்த குரலில் ஒரே நாளில் ஒரே கோரிக்கையோடு வெவ்வேறு இடங்களில் கர்ஜித்தது. மற்றவர்களை ஆட்டி வைத்துகொண்டிருக்கும் அமெரிக்கா நாடே அப்போது ஆட்டம்கண்டது. இந்த 8 மணிநேர வேலைநாளுக்கான போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக கணக்கிடப்படுகிறது. இவ்வேலைநிறுத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்கு தான் வேலைநிறுத்த இயக்கம் மிகப்பரவலாக பரவிக் கிடந்தது. மே முதல் நாள் மட்டுமல்லாமல் தொடர்ந்து மே 2, மே3 நாட்களில் மாபெறும் கண்டனபோராட்டமும் நடந்தது. இதிலும் தொழிலாளர்கள் பலர் அலை திரண்டு கலந்துகொண்டனர். இதை கண்டு அச்சம் கொண்ட காவல்துறையினர் தொழிலாளர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிகழ்வே வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் சிக்காகோ பேரெழுச்சி எனவும் அழைக்கப்பட்டது.

1889ஆம் ஆண்டு பாரீஸில் உலகெங்கிலும் உள்ள சோஷலிச இயக்கத் தலைவர்கள் மாநாட்டிற்காக ஒன்றுகூடியுருந்தனர். அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து அங்கு நடந்த 8 மணிநேர இயக்கப் போராட்டத்தை பற்றி தெரிந்துகொண்டனர். அம்மாநாட்டில் “எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலும் உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். மே முதல் நாளே சர்வதேச அளவில் இந்த ஆர்பாட்டம் செய்ய உகந்த நாள் எனவும் தீர்மானிக்கப் பட்டது.” அது வழியே மே தினம் உலகெங்கிலும் கொண்டாடபடுகிறது.

இந்தியாவில் தோழர்.சிங்காரவேலர் அவர்களே மே தினத்தை அறிமுகப்படுத்தினார். பின்னாளில் தந்தை பெரியாருடன் இணைந்து கம்யூனிச கொள்கைகளை தமிழகத்தில் பரப்பினார் சிங்காரவேலர் அவர்கள். நமது புரட்சிகவி சுப்ரமணிபாரதியும் கம்யூனிச கொள்கைகளை உள்வாங்கியதும் இவரிடம் இருந்துதான். பாரதி மரணம் அடைந்ததும் இவர் மடியில் தான் என்பதும் மற்றுமொறு தகவல்.

அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. எனினும் குவைத் போன்ற சில அரபு நாடுகளில் மே தினம் கொண்டாடபடுவதில்லை, அங்கு மே தினத்திற்கு விடுமுறையும் இல்லை.

மே தினம் என்பது வெறும் விடுமுறை தினம் மட்டுமல்ல, அதன் பின் உள்ள வரலாற்று நிகழ்வுகளையும் தியாகங்களையும் நமது இளையர்களும் உழைக்கும் நண்பர்களான நமது தொழிலாளர்களும் சிரிய அளவினும் அறிய இக்கட்டுரை பயனளித்தால் மகிழ்ச்சியே.

உலக தொழிலாள நண்பர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!

இதமுடன்

சக தொழிலாளி

இரா.பிரவீன்குமார்.

praver5@gmail.com

Series Navigation

இரா.பிரவீன் குமார்

இரா.பிரவீன் குமார்