மாலன்.
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பதிலை நான் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை என்ற மனக் குறையோடு உங்கள் கடிதம் துவங்குகிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை என்றால் இவ்வளவு விாிவாக நான் பதிலெழுதி இருக்க மாட்டேன். இப்போதும் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.தனிப்பட்ட முறையில் எனக்கு எழுதப்படுகிற கடிதங்களுக்கே நான் பதிலெழுதுவது இல்லை என்ற மனக் குறை என் நண்பர்களுக்கு உண்டு.
பொதுவாக ஊடகங்களில் என்னை விமர்சித்து அல்லது ‘அர்ச்சித்து ‘ எழுதப்படுகிறவைகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. அவை என்னைப் பற்றி என் வாசகர்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணங்களைச் சிதைப்பதாக இருப்பதால் நான் அவற்றிற்கு நான் பதில் எழுதியே ஆகவேண்டும் என்று என் நண்பர்கள் வற்புறுத்துவதுண்டு. அப்படி இருந்தும் நான் எழுதுவதில்லை.
எனக்குக் குறைவாகவே கிடைக்கும் அவகாசங்களை நான் வேறு விதமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
முதலிலேயே ஒன்றைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். உங்கள் கடிதத்தில் பல இடங்களில் ‘ஏற்க இயலாது ‘, ‘ என் அறிதல்கள் என்னை அனுமதிக்கவில்லை, ‘ ‘என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ‘ என்று காணப்படுகிறது. கடிதம் இறுதியில் கார்க்கி-லெனின் – ஸ்டாலின் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி, எழுத்தாளனுக்கு யாரோ கட்டளை இடுவது பற்றிய குறிப்புகளோடு முடிகிறது. நான் உங்களை என் முன் கடித்தத்தில் வைத்துள்ள கருத்துக்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உங்களை மட்டுல்ல, யாரையும் யாருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று நான் வற்புறுத்துவதில்லை. அவரவருக்கான முடிவுகளை அவரவருக்குக் கிடைக்கும் வெளிச்சத்தில் அவரவர் முயற்சியின் மூலம் தேடிக் கண்டடைகிறார்கள் என்பது என் எண்ணம். ‘ நீரளவே ஆகுமாம் நீராம்பல் ‘ என்பது என் சகாக்களிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்.
கருத்து சுதந்திரத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவன் நான்.அதற்காக என் எழுத்துக்கள் மூலம் மட்டுமன்றி வீதியில் இறங்கிப் போராடியவன். அதன் காரணமாக தளைப்படுத்தப்பட்டவன். PUCL போன்ற அமைப்புக்கள் மூலம் செயல்பட்டவன். நான் வெகுஜன இதழியலை நோக்கி வந்ததற்கு, இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையும் அதன் பின் விளைவுகளும் ஒரு காரணம்.. நகர வாழ்விலிருந்து ஒதுங்கி தஞ்சாவூாில் இலக்கியம் பயில்பவனாக வாழ விரும்பிய என்னை main stream மிற்கு இழுத்து வந்தது இந்திரா காந்தியின் கருத்து மறுப்பு அரசியல். அடுத்தவர் மீது என் கருத்துக்களைத் திணிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.
நான் பணியாற்றி வரும் ஊடகங்களில் எல்லாம் இயன்றவரை எல்லோரும் எழுத இடமளித்திருக்கிறேன். தினமணியிலும், குமுதத்திலும், குங்குமத்திலும், தலையங்கங்கள் மூலம் என் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பும் அதிகாரமும் இருந்ததால், மற்றப் பக்கங்களை மற்றவர்கள் எழுதக் கொடுத்திருக்கிறேன். துரதிருஷ்டவசமாக, தலையங்கங்களில் எழுதியவர் பெயரை வெளியிடும் மரபு கிடையாது. அதனால் பெயரோடு பிரசுரமாகும் கட்டுரைகளை எழுதியவர்களை சூரர்களாகவும், மற்றவர்களை சும்பர்களாகவும் கருதுகிற மனோபாவம் பாமரர்களிடம் இருக்கிறது.
நான் விவாதங்களில் நம்பிக்கை கொண்டவன். தினமும் தொலைக் காட்சியில் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பவைகள் குறித்து அந்தத் துறையோடு தொடர்புள்ளவர்களை அழைத்து விவாதித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கருத்துக்கள் எத்தகையதாக இருந்தாலும் அவை அப்படியே மக்கள் முன் வைக்கப் படுகின்றன. சன் செய்தித் தொலைக் காட்சியில் மட்டுமல்ல், அரசாங்க ஊடகமாக இருந்த தூர்தர்ஷனிலிருந்து ஆரம்பித்துப் பின் சன் தொலைக் காட்சியிலும், இப்போது சன் செய்தித் தொலைக் காட்சியிலும் இதை செய்து கொண்டிருக்கிறேன்.
இதைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ நிர்பந்தமோ எனக்குக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இதைச் செய்யாமல் இருந்தால் பல சிரமங்களை நான் தவிர்க்கலாம். என்னோடு எழுத ஆரம்பித்த சகாக்களைப் போல சொந்த பிரபல்யத்திற்காக நான் எழுதிக் களித்துக் கொண்டு இருக்கலாம். அடிப்படையில் கேளிக்கை ஊடகமாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் கொண்ட ஒரு ஊடகத்தை, கேளிக்கையில் நாட்டம் கொண்ட ஒரு சமூக சூழலில், செய்தி சார்ந்த, விவாதம் சார்ந்த தளமாக மாற்ற என் உழைப்பையும் சிந்தனையையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
என்றாலும் இலக்கிய விவாதங்கள் எனக்கு அயர்வை ஏற்படுத்துகின்றன. அதற்குக் காரணம் நம் இலக்கியவாதிகள். திறந்த மனத்தோடு அவர்கள் விவாதங்களுக்கு வருவதில்லை. ஏற்கனவே வந்துவிட்ட முடிவுகளோடு வருகிறார்கள். அந்த முடிவுகள் பற்றிய கேள்விகள் எழுகிறபோது, அதை நேருக்கு நேர் எதிர் கொள்ள விரும்பாமல், வார்த்தை விளையாட்டில் ஈடுபடுகிறார்கள்.
நீங்களே ஒரு உதாரணம்.
‘கலாசாரம் குறித்துப் பொது வழக்கில் உள்ள விளக்கங்களை உங்களிடம் நான் எதிர் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கலாசாரம் என்பது குறித்து கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாகரட்டாசிலிருந்து, நம் சமகால அறிவு ஜ ‘வீ நாகர்ஜ ‘னன் வரை ஏராளமான விளக்கங்கள் குவிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் விளக்கங்களையோ சுருக்கங்களையோ நான் உங்களிடம் வேண்டவில்லை. என்னுடைய கேள்வி மிக எளிமையானது: கலாசாரம் மீது உங்கள் பார்வை என்ன ? ‘
இது நான் என் கடிதத்தில் எழுப்பிய கேள்வி. இதற்கு நீங்கள் சொல்லி இருக்கும் பதில் என்ன ?
‘கலாசாரம் என நான் உணர்வதை எதிர் கொள்ள நேரும் பலவித தருணங்களை முதலில் தொகுத்துத் தந்து விட்டு, அவற்றுக்குப் பொதுவான ஒரு வரையறையை அளிக்க நான் முயன்றுள்ளதாகவே எனக்குப் படுகிறது. அவ் வரையறையை அத் தருணங்களுக்கு முழுக்க விாித்துப் பொருள் கொள்வது சாத்தியம்தான் ‘
அதாவது உங்கள் அனுபவங்களைஅவரவர் தங்கள் பார்வையில் பொருள் கொண்டு, ஒரு ‘ ‘பொது ‘ வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பொது வரையறை இன்னதென்று நீங்கள் திட்ட வட்டமாக உஙகள் வார்த்தைகளில் சொல்லி விட மாட்டார்கள். இது மழுப்பல்/பம்மாத்து இல்லையா ?
இதற்கு நீங்கள் சொல்லும் காரணம் (சால்ஜாப்பு ?) என்ன ?
‘ஒரு படைப்பிலக்கியவாதி திட்டவட்டமான விடைகளை எது குறித்தும் முன் வைக்கத் தயங்குவான். ‘
அப்படியானால் இதுவரை படைப்பிலக்கியவாதிகள், இலக்கிய விவாதம் உள்பட பல்வேறு விஷயங்களில் திட்டவட்டமாகத் தொிவித்த கருத்துக்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? அல்லது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எழுதியிருப்பவர்களை (பாரதியார் உள்பட) படைப்பிலக்கியவாதிகள் என்று நீங்கள் கருதவில்லையா ?
சாி, கலாசாரம் என்றால் என்னவென்று திட்டவட்டமான விடை ‘படைபிலக்கிய ‘ வாதிக்கு இருக்காது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் என் கடமை தமிழ்க் கலாசாரத்தின் மீதே இருக்கிறது என்று பிரகடனப் படுத்துபவருக்கு இருக்க வேண்டுமா இல்லையா ? அவர் யார் என்று கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அது தாங்களேதான்!
இலக்கியவாதிகள் எப்படி கேள்விகளை சந்திக்க நேரும் போது நழுவுகிறார்கள் என்பதற்கு மறுபடி உங்களிடமிருந்தே இன்னொரு உதாரணம்:
நான் என் முதல் கடிதத்தில் எழுப்பிய கேள்விகள் என்னென்ன என்பதை மறுபடி ஒரு முறை பாருங்கள். ( வாசகர்களும் பார்க்கலாம். அதற்கான link: http://www.thinnai.com/ar0120021.html) அவற்றில் பதிலளிக்கப்படாதவற்றை இங்கு தந்துள்ளேன்.
மொழி, இடம் சார்ந்து ஒரு கலாசாரம் இருக்க இயலும் எனில், diasporaவை எப்படி வகைப்படுத்துவீர்கள் ?
வாழ்வியலின் அடிக்கட்டுகளான மனித உறவுகள், பாலுறவுகள் குடும்ப அமைப்பு, குடும்ப உறவுகள், திருமணம், இவை மொழி சார்ந்த கலாசாரத்தில் தீர்மானிக்கப்படுகிறதா ? பொருளியல் சார்ந்த பண்புகளால் நிச்சியக்கப்படுகிறதா ?
தமிழில் வாசகனுக்கும் சிற்றிதழ்களுக்கும் இடையே உள்ள உறவு எந்தக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறது ? அதற்கு அரசியல் கலாசாரத்தில் இணை உண்டா ?
இப்போது சொல்லுங்கள்.கடிதத்தைப் பொருட்படுத்திப் படிக்கதாது யார் ?
உண்மை என்னவெனில் உங்கள் பதில் கலாசாரத்திற்கும், அரசியல், பொருளியல் இவற்றிக்குமான தொடர்புகள் குறித்து மெளனம் சாதிக்கிறது. அதை நினைவூட்டும் பொருட்டே, என்னுடைய கடிதத்தில், கேரளத்தின் தாய்வழிச் சமூகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அது செளகாியமாக திட்டம் போட்டு திசை திருப்பி, அதற்கு பதிலளிக்க மறுத்து நழுவுகிறீர்கள். ஏனெனில் கலாசாரத்திற்கும் அரசியல், பொருளியலுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய முற்பட்டால், கலாசாரம் என்பது சில அமைப்புக்களை நிறுவ, பாதுகாக்க, முன் வைக்கப்படும் விழுமுயங்களே என்ற என்னுடைய ‘எளிமையான ‘ முடிவுகளுக்கே வந்து சேர்வீர்கள்.
‘திட்டவட்டமான விடைகளைத் தரத் தயங்குகிற படைப்பிலக்கியவாதிகள் ‘ வார்த்தை விளையாட்டுக்களில் இறங்கத் தயங்குவதில்லை.
உங்கள் கடிதமே ஓர் உதாரணம்.
‘அன்றாட வாழ்க்கை முதல், செவ்விலக்கியம் வரை பரந்து கிடக்கும் ஒரு அடிப்படையாகவே நான் கலாசாரத்தைக் காண்கிறேன் ‘ என்கிறது உங்கள் கடிதம். இன்னதென்று நீங்கள் குறிப்பிடாத அந்த அடிப்படையைத்தான் நான் விழுமியங்கள் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். வாழ்க்கையை , வாழ்க்கை சார்ந்த அமைப்புக்களைப் பாதுகாக்க, பராமாிக்க முன்நிறுத்தப்படும் விழுமியங்கள். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப வாழ்க்கையும் அமைப்புக்களும் மாறுவதால் மாறும் விழுமியங்கள்.
நீங்கள் குறிப்பிடும் அடிப்படை, விழுமியங்கள் இல்லை என்றால் வேறு என்ன ?
‘மொழியை கலாசாரத்திலிருந்து பிாித்துவிட முடியாது; மொழி என்று சொல்லும் போது நான் சொற்களை அல்ல, சொற்களுக்கு அர்த்தம் தரும் அகமொழியை குறிப்பிடுகிறேன் ‘ என்கிறீர்கள்.
சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மொழியை, தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்று குறிக்க இயலாது என்பது வெளிப்படை. அப்படிக் குறிக்க இயலாத பட்சத்தில், தமிழ்க் கலாசாரம், மலையாளக் கலாசாரம் என்ற மொழி சார்ந்த கலாசாரங்களும் கற்பிதங்களே.
மொழியைக் கலாசாரத்திலிருந்து பிாித்துவிட இயலாது என்று இப்போது எழுதும் நீங்கள்தான் உங்களது முந்தைய கடிதத்தில் ‘ இடம் மொழி ஆகிய ஒன்றின் அடிப்படையில் கலாசாரத்தை வரையறுத்துவிடக்கூடாது ‘ என்றும் எழுதினீர்கள். இதில் எது சாி ?
இடம் மொழி ஆகிய ஒன்றின் அடிப்படையில் கலாசாரத்தை வரையறுத்துவிட முடியாது என்றால் தமிழ்க் கலாசாரத்தின் மீது கடமை ஆற்ற விரும்பும் நீங்கள் தமிழ்க் கலாசாரத்தை எப்படி வரையறுக்கிறீர்கள் ?
உங்கள் கருத்துக்களை விளக்க நீங்கள் விளக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் இந்த விவாதமே, ‘தமிழ்க் கலாசாரத்தின் மீதுதான் என் கடமை உள்ளது ‘ என்ற உங்கள் பிரகடனத்திலிருந்துதான் கிளைத்தது.
தமிழ் இலக்கியத்தின் மீதுதான் என்கடமை இருக்கிறது என்று நீங்கள் அறிவித்திருந்தால், நான் இந்த விவாதத்தைத் துவக்கியிருக்க மாட்டேன்.
இலக்கியத்திற்கும், கலாசாரத்திற்குமான நுட்பமான வேறுபாடு உங்களுக்குப் புலனாகவில்லை என்பதைத்தான் உங்கள் பதில்கள் காட்டுகின்றன. புாிந்திருந்தால், கலாசாரம், மொழி, இலக்கியம் இவை குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசமாட்டார்கள்.
88888888888
இலக்கியத்திற்கும் கலாசாரத்திற்குமான வேறுபாட்டின் நுட்பம் உங்களுக்குப் புாிந்திருக்கிறதா என்று நான் சந்தேகம் கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. கலாசாரம் குறித்த அடிப்படையான கேள்விகளை நான் எழுப்பியதும் எனக்கு உடனடியாக தனியாக ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தீர்கள். அதில்,
‘ தங்கள் கேள்விகள் குறித்து இனிமேல்தான் நான் விாிவாக யோசிக்க வேண்டும் ‘ என்று எழுதி இருந்தீர்கள். நீங்கள் அதுவரை யோசிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அது குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் அறியாதவராக இருந்திருக்கிறீர்கள் என்று எண்ண இடம் தருகிறார்ப்போல் இதையும் எழுதி இருந்தீர்கள்:
‘ கலாசாரம் குறித்து எவருமே திட்டவட்டமாக ஏதும் யோசித்திருக்கமாட்டார்கள். அது மிகப் பொதுப்படையான சொல். வழக்கத்தில் இல்லையா ? ‘
தமிழ்க் கலாசாரத்தின் மீதுதான் என் கடமை இருக்கிறது என்று பிரகடனப்படுத்தும் ஒருவர் அது குறித்து விாிவாக யோசித்தது இல்லை, அது குறித்து எழுதப்பட்டவற்றை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சி அளித்தது.
அந்தக் கடிதத்தை மேல படித்துக் கொண்டு போன போது அந்த அதிர்ச்சி மேலும் கூடியது:
தமிழ்க் கலாசாரத்தின் மீது தன்க்குள்ள கடமையின் வெளிப்பாடுதான் சொல் புதிது என்னும் சிற்றிதழ் என்று சொல்லும் நீங்கள் சிற்றிதழ்கள் குறித்தும் அந்தக் கடிதத்தில் இப்படி எழுதி இருந்தீர்கள்:
‘சிற்றிதழ்கள் சார்ந்து உங்களுக்கு இருப்பதைவிட ஆழமான சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் எனக்கு உண்டு. நான் சிற்றிதழ் நடத்துகிறேன், அது வேறு வழியில்லாமல். ‘
தமிழ்க் கலாசாரத்தின் மீதுதான் தன் கடமை இருக்கிறது என்று கருதும் ஒருவர் அது குறித்து யோசித்தது இல்லை என்பது மட்டுமல்ல், அதன் வெளிப்பாடாக அவர் கருதும் சிற்றிதழ் மீது அவருக்கு ஆழ்ந்த அவநம்பிக்கைகள் இருக்கிறது!. அதுவும் யாருக்கு ? அதை நடத்துபவருக்கே!
88888888888
சிற்றிதழ்கள் தேவை இல்லை என்று நான் சொல்வது போன்ற பாவனையில் நிறையவே எழுதி இருக்கிறீர்கள். நான் எழுதியிருந்தது என்ன ?
எந்த மொழியிலும் சிறுபத்திாிகை தேவைதான். பிாிட்டாஷ் மெடிகல் ஜர்னல் போல ஒரு குழு தங்கள் பணி/ தொழில் குறித்த கண்டுபிடிப்புக்களை, சிக்கல்களை, தீர்வுகளை தங்களுக்குள் விவாதித்துக் கொள்ள அவை தேவை.
என்றுதான் எழுதியிருந்தேன். இதைப் புாிந்து கொள்வதில் உங்களுக்கு என்ன சிக்கல் என்று புாியவில்லை. ( வேண்டுமானால், இதை மலையாளத்தில் மொழி பெயர்த்து அனுப்பட்டுமா ?)
என்னுடைய எளிமையான மொழியில் நான் தொிவித்திருக்கும் இதே கருத்தைத்தான்,
‘ சிற்றிதழ்கள் இலக்கிய கருத்துக் குழுக்களாகவே என்றும் இருந்துள்ளன ‘ என்று நீங்கள் உங்கள் மொழியில் குறிப்பிடுகிறீர்கள்.
இன்று இலக்கிய சிற்றேடுகள் ஒரு இணை ஊடகமாக இல்லை. என்று நான் எழுதும் போதே அவை அப்படி இருக்க வேண்டும் என்ற விழைவும் அதில் இழையோடுகிறது என்பது எந்த அனுபவம் உள்ள வாசகனுக்கும் புாியும். தீவிரமான மாற்றுத் தரப்புகளை வெளியிட சிற்றிதழ்கள் வேண்டும் என்ற உங்கள் கருத்திற்கும் இதற்கும் என்ன அர்த்த ாீதியில் என்ன வேறுபாடு ? இவை நீங்கள் என் கடிதத்தை எவ்வளவு ‘பொருட்படுத்தி ‘ படித்திருக்கிறீர்கள் என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக் காட்டு!
அமொிக்க வர்த்தக மையத் தாக்குதல் குறித்து பிரபல ஊடகங்களில் அதன் கலாசார, அரசியல் பின் புலம் குறித்த விவாதங்கள் அதிகம் இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள். இது தொடர்பாக சன் செய்தி தொலைக்காட்சியையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மற்ற ஊடகங்கள் பற்றி நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. ஆனால் சன் செய்தி தொலைக்காட்சி, ஆப்கான் போர் குறித்து மூன்று தளங்களில் பல விவாதங்களை நடத்தியது.கலாசாரம் குறித்து இரு விவாதங்கள் நடந்தன. கலாசாரங்களின் மோதல் என்ற நூலை எழுதிய மாநிலக் கல்லூாி பேராசிாியர் டாக்டர்.விஸ்வநாதன் கலந்து கொண்டு பல கருத்துக்களை முன் வைத்தார். அரசியல் தள்ம் குறித்த விவாதத்தில், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் அமைப்பின் தலைவர் பேராசிாியர் ஜவாஹருல்லாஹ் கலந்து கொண்டு விவாதித்தார். யுத்தம் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பது குறித்த விவாதத்தில், அகில இந்தியக் குழந்தைகள் நல கவுன்சிலின் தலைவியாக இருந்து வரும் திருமதி ஆண்டாள் தாமோதரன் பங்கு கொண்டார். இந்த விவாதங்கள் தவிர, யுத்த தந்திர இயல் அடிப்படையில், பேராசிாியர் டாக்டர்.லாரன்ஸ் பிரபாகர் கலந்து கொண்ட விவாதங்கள் பல நடந்தன. செய்தி அடிப்ப்டையில், இந்து நாளிதழில் பணியாற்றும், அதில் தலையங்கங்கள் எழுதும், மூத்த பத்திாிகையாளரும், சென்னை பத்திாிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு.கே.வி.கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். இவை தமிழில் நடந்த விவாதங்கள். இவை தவிர, ஆங்கிலத்தில், அமொிக்க தூதர் டாக்டர். பேராசிாியர். பிளாக்விலுடன் ஒரு பேட்டி, சென்னைப் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு இயல் பேராசிாியர் டாக்டர். கோபால்ஜி மாளவியாவுடன் ஒரு விவாதம் ஆகியவை ஒளிபரப்பப்பட்டன. இவர்களெல்லாம் இலக்கியவாதிகள் அல்ல. ஆனால் தத்தம் துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நீண்டகாலமாக உழைத்து வருபவர்கள். அவர்கள் சிறு பத்திாிகைகளைச் சார்ந்த அறிவுஜ ‘விகளாக இல்லை என்பது அவர்களது குற்றம் அல்ல.
சிறுபத்திாிகை குறித்த விவாதத்தில் காலமாகிவிட்ட சி.சு.செல்லப்பாவையும் இழுத்திருகிறீர்கள். அவர் உயிரோடு இருந்த காலங்களில் அவ்ர் மீதான விமர்சங்களை நீங்கள் பகிரங்கப்படுத்தியதாகத் தொியவில்லை. உங்கள் கருத்துக்களுக்கு பதில் சொல்ல அவர் இப்போது உயிரோடு இல்லாத நிலையில், அவர் மீது விமர்சனங்கள் வைப்பது எந்த அளவிற்கு நாகாீகமானது என்று எனக்குத் தொியவில்லை.
கருத்துக்களை விவாதிக்க மறுத்த அவரது பிடிவாதம்தான் பல சிறுபத்திாிகைகள் தோன்றக் காரணமாக அமைந்தன என்றும் எழுதி இருக்கிறீர்கள்.இலக்கிய சிற்றேடுகளின் வரலாறு பற்றி உங்களுக்கு எவ்வளவு தொியும் என்பதை உங்களது இந்த வாி காட்டுகிறது 1959ம் ஆண்டு ஜனவாி மாதம் துவங்கிய எழுத்து, 1970 ஆண்டு ஜனவாி மாதம் வரை 12 ஆண்டுகள் ( 119 இதழ்கள்) நடந்தது. அது நின்ற பிறகுதான், எழுத்து இல்லாத குறையைப் போக்க, 70களில் கசடதபற, ஞானரதம்,அஃ, வாசகன், சதங்கை, நீலக்குயில், தெறிகள்,வானம்பாடி, பிரஞ்ஞை, வைகை, பாலம், கொல்லிப்பாவை, சுவடு, விழிகள், யாத்ரா, இலக்கிய வெளிவ்ட்டம்,சிகரம், இன்று, தர்சனம், காற்று, படிகள், விவேக சித்தன், வேள்வி, வண்ணங்கள், உதயம் என்று வேறு எந்த பத்தாண்டிலும் (decade) வெளிவராத அளவிற்கு இலக்கிய சிறுபத்திாிகைகள் வெளிவந்தன.
( இந்தப் பெயர்கள் அனைத்தையும் நினைவிலிருந்து தந்திருக்கிறேன். ஒன்றிரண்டு விட்டுப் போயிருக்கலாம். சம்பந்தப்பட்ட நண்பர்கள் மன்னிக்க வேண்டும்)
எழுத்து நடந்து கொண்டிருந்த போதே, மாற்றுக் கருத்துக்களை வைப்பதற்கு, சாந்தி (இடதுசாாிப் பத்திாிகை 1965 ஏப்ரல் வரை நடந்தது) சரஸ்வதி ( 1962 வரை) கணையாழி ( 1965ல் துவக்கப்பட்டது) தீபம் ( 1965ல் துவக்கப்பட்டது) தாமரை, செம்மலர் போன்ற பத்திாிகைகள் இருந்தன. எழுத்து நடந்து கொண்டிருந்த காலத்தில் க.நா.சு. 1964 ஜனவாியில் இலக்கிய வட்டம் இதழை ஆரம்பித்தார்.1968 அக்டோபாில் நடை தோன்றியது.
நீங்கள் கூறுவது போல நேற்றின் எல்லா சிற்றிதழ்களும் வரலாறாகி விடவில்லை. புகழப்படுவதில்லை.ஓய்வு பெற்ற உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிாியரைப் போல எல்லோருக்கும் நல்ல சர்ட்டிபிகேட் கொடுக்கும் வல்லிக் கண்ணன் கூடஇந்த க.நா.சுவின் இதழ் பற்றியும், நடை பற்றியும் , என்ன கூறுகிறார் என்பதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்:
‘இலக்கியவட்டம் அதன் வளர்சிக்க்காலத்தில் இலக்கிய ரசிகர்கள் படித்துப்பாராட்டக் கூடிய ஒரு பத்திாிகையாக இருந்ததே தவிர, ‘ எழுத்துபோல இலக்கிய வரலாற்றில் அழுத்தமான பதிவுகளை உண்டாக்கிவிடவில்லை. ‘
‘அதன் காலத்தில் அது ( நடை) இலக்கியத்தையோ எழுத்தாளர்களையோ பாதிக்கும்படியான சாதனைகள் எதையும் புாிந்துவிடவில்லை ‘
எழுத்தில் என்ன வெளிவந்தது, அது என்ன சாதித்தது என்பதை, என் நல்லூழ் காரணமாக, நண்பர் ஞானக் கூத்தனிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் நானே எழுத்தில் எழுதத் துவஙகியவன்தான். என்னுடைய முதல் கவிதை எழுத்தில்தான் பிரசுாிக்கப்பட்டது. பதினைந்து வயதிலிருந்து அதனுடைய வாசகனாகவும், நிறைய கருத்து முரண்பாடுகளோடு திரு.செல்லப்பாவின் நண்பனாகவும் இருந்திருக்கிறேன்.
அனுபவம் மூலம் அல்லாது, புத்தகங்கள் மூலம் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயலும் உங்களுக்கு செல்லப்பாவின் சாதனை என்ன என்று ஒரு மேற்கோள் மூலமே உணர்த்த விரும்புகிறேன்:
‘ உலகத் தமிழ் மாநாட்டின் உபயோகமென்ன என்று கேட்ட போது அப்படியானதொரு மாநாட்டில்தான் சி.சு.செல்லப்பாவை சந்திக்க முடிந்தது; எழுத்து என்ற பத்திாிகையைப் பார்க்கக் கிடைத்தது.நவீனத் தமிழ் இலக்கியத்தின் கதவை அது திறந்துவிட்டது என்று பொருள்பட ஃபிரான்ஸ ‘வா குரோ என்ற பிரஞ்சு நாட்டு அறிஞர் ஒருமுறை கூறியிருந்தார் ‘ ( மேற் கோள் இந்தியா டுடே இலக்கிய மலர் 2002ல் ரவிக்குமார் எழுதிய கட்டுரையிலிருந்து பெறப்பட்டது)
இதையும் வல்லிக் கண்ணனின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எழுத்து என்ன செய்தது என்று கொஞ்சமாவது உங்களுக்குப் புாியும்.
ஆனால் இந்த விவாதம் நேற்றைய சிற்றிதழ்கள் குறித்ததல்ல.இன்று இலக்கிய சிற்றிதழ்கள் எந்த நோக்கத்திற்காகத் துவக்கப்படுகின்றன ? எப்படி நடத்தப்படுகின்றன ? என்பது குறித்தது. நீங்கள் விரும்புவது / சொல்வது போல, சிறுபத்திாிகைகள் கருத்துக் குழுக்களாக இல்லை. சுய உதவிக் குழுக்களாக, படைப்பாளிகள் கவனம் பெற, அங்கீகாரம் பெறத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் துடிக்கும் முயற்சியாக இருகின்றன என்பது பரவலான அபிப்பிராயம்:
இது குறித்து குமுதம் வெளியிட்டிருக்கும் கிண்டல் இது:
‘ எழுதுவதை யாரும் பிரசுாிக்காவிட்டால் தற்கொலை எண்ணம் தேவையில்லை. மகிழி,தொட்டாற் சுருங்கி, நெஞ்சி, படி, மருவி இது போன்ற பத்திாிகை ஆரம்பித்து, அதில் பச்சை பசசையாய் எழுதலாம். செலவு கட்டுப்படி ஆகாதுதான். ஆனாலும் காரசாரமாக எல்லாவற்றையும் வெறுப்பாக திட்டி எழுதி பிரபலமாகலாம்.பிரபலமானதும் பத்திாிகையை மூடிவிடுவது சிறந்தது.வேறு பத்திாிகைகளில் போட ஆரம்பித்து விடுவார்கள். ‘
(கின்ஸி-30 நாட்களில் எழுத்தாளர் ஆவது எப்படி ? -குமுதம் 25.2.2002 )
குமுதத்தை நீங்கள் இடது கை சுண்டு விரலால் ஒதுக்கிவிடலாம். ஆனால் நிறப்பிாிகை என்ற சிற்றிதழின் ஆசிாியராக இருந்த ரவிக்குமார் சொல்வதை நிராகாித்து விட முடியாது:
‘இந்த சிற்றிதழ்கள் இத்தனை எண்ணிக்கையில் வெளிவருவதற்கு தத்துவ விளக்கங்களை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்தான். ஆனால் அது நம் கற்பனையாகவே எஞ்சிப் போகும். ஒவ்வொரு இளம் படைப்பாளியும் தான் கவனம் பெற ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியமென்றாகிவிட, அத்தகையான வட்டங்கள் இப்படியான சஞ்சிகைகளால் உருவேற்றப்படுகின்றன. ‘
‘ வெகு சில சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கே உண்மையில் வாசகன் என்ற சிலர் உண்டு என்பது ரகசியமல்ல ‘ என்ற உங்களுடைய வாக்கு மூலமும், எழுத்தைப் பிரசுாிக்க யாரும் முன் வருவதில்லை அதனால் பத்திாிகை ஆரம்பிக்கிறோம் / நடத்துகிறோம் என்ற ஞாநி மற்றும் உங்களுடைய கூற்றுக்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
உங்கள் எழுத்தை நீங்களே அச்சிட்டுப் பார்த்து மகிழ்ந்து கொள்வதற்கான உாிமை உங்களுக்கு உண்டு. அதை உஙகளுடைய பணத்தில் செய்து கொள்வது சாலச் சிறந்தது. மடிப்பிச்சை ஏந்துவதும், உண்டியல் குலுக்குவதும், தங்கள் எழுத்திற்கு தாங்களே புனிதங்கள் கற்பித்துக் கொள்வதும் அறிவு முதிர்ச்சியின் அடையாளமாகத் தோன்றவில்லை.
888888888
என் எழுத்தைப் பிரசுாிக்கப் பத்திாிகைகள் இல்லை என்ற உங்களைப் போன்றவர்களது கூற்று எத்தனை தூரம் சாரமுள்ளது ?
ஞாநியின் கண்ணகி சிலை- ரயில் பயணம் கட்டுரைகள் எதில் வெளிவந்தது ? அதற்கு கண்டனம் தொிவித்த அருணாசலத்தை அவர் அலசிப் பிழிந்த கட்டுரை எதில் வந்தது ? இரண்டும் துண்டு நோட்டாசாக அச்சிடப்பட்வில்லை. ஜூனியர் விகடன், விடுதலை ஆகிய வெகுஜன இதழ்களில்தான் வந்தன. ‘விஷ்ணுபுரத்திற்கு பொிய வணிக இதழ்கள் கவனம் தந்திருக்காவிடில் அந்த நாவலே புறக்கணிக்கப்பட்டிருக்கும்; அதைப் பற்றி நம் சிற்றிதழ் சூழலில் பொருட்படுத்தும் தகுதி உடைய ஒரே ஒரு விமாிசனம் கூட வரவில்லை ‘ என்ற உங்களுடைய கூற்று ஒன்றே வெகுஜனப் பத்திாிகைகள் காத்திரமான விஷயங்களில் கவனம் செலுத்துவதிலை என்ற உங்களுடைய கருத்தை மறுக்கும்.
நல்ல விஷய்ங்களை வெகுஜனங்களிடம் கொண்டு செல்வதுதான் உங்களது மெய்யான ஆர்வம் என்றால், அதை நீங்கள் வெகுஜனங்கள் இயங்கும் தளங்களுக்கு வந்துதான் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நீங்கள் தயாாில்லை.சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று சொல்லுகிறீர்கள். சமரசமே செய்து கொள்ளாமல் வழ்பவர் அல்ல நீங்கள். உங்களுக்குப் பிாியமானவர்களுக்காக தனி வாழ்வில் சமரசம் செய்து கொள்ளத் தயங்குவதில்லை. உங்களுக்கு சமூக நலன் மீது மெய்யான அக்கறை இருந்தால், உஙகள் குழந்தைகளுக்காகத் தனி வாழ்வில் சமரசம் செய்து கொள்வதைப் போல இங்கும் சமரசம் செய்து கொண்டு செயல்பட முன் வருவீர்கள். ஆனால் உங்களுக்கு சொந்த நலன்கள் அல்லது ஈகோதான் முக்கியம், அதனால்தான் உங்களை முன் நிறுத்திக் கொள்ளும் சிறுபத்திாிகைகளைத் துவக்கி நடத்துகிறீர்கள்.
சாி, ஒரு வாதத்திற்காக, வெகுஜனப் பத்திாிகைகள் உங்களது அறிவு சார்ந்த கருத்துக்களை வெளியிடுவதில்லை என்றே வைத்துக் கொள்வோம். அந்த சூழ்நிலையிலும் உங்கள் கருத்தை வெளியிட்டு எல்லோரையும் உய்வித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நினைத்தால், அதை உங்கள் சொந்த முதலீட்டில் அல்லவா செய்ய வேண்டும் ? அடுத்தவர் காசிலாவது சிற்றிதழ் கொண்டுவர வேண்டுமா ? விற்ற பணத்தை வசூலிக்க முடியாத சூழ்நிலையில் இனி நான் சொந்தப் பணத்தைப் போட மாட்டேன், ஆனால் அடுத்தவர் பணத்தில் பாயசம் காய்ச்சுவேன் என்பது எப்படி நியாயமாகும் ?
அடுத்தவர் காசிலாவது சிற்றிதழ் கொண்டுவர வேண்டுமா ? ராஜம் கிருஷ்ணன், இமையம் போல உங்கள் கருத்துக்களை நேரடியாக நூலாகக் கொண்டு வ்ரலாமே ? கூட்டங்கள் போட்டு அதை வெளிப்படுத்தலாமே ? இணைய இதழ்களைப் ப்யன்படுத்திக் கொள்ளலாமே ? ஞாநியின் கட்டுரை, கட்டுரைக்கு வந்த கண்டனத்திற்கு பதில், பதிலுக்கு வந்த கிண்டல், கிண்டலுக்கு எதிரான வியாக்யானம், இந்த விவாதம் எல்லாம் மின்வெளியில், திண்ணை என்ற மிஞ்சிகையில் தானே நடந்து கொண்டிருக்கிறது ? இப்போதிருக்கிற மிஞ்சிகைகளைப் பயன் படுத்திக் கொள்ள விரும்பாவிட்டால், நீங்களே ஒரு இணையப் பக்கத்தைத் துவக்கலாமே. இலவசமாக domain தரும் அமைப்புக்கள் பல இணையத்தில் உள்ளன.
நவீன கருத்தியல்களைப் பேசுகிற உங்களுக்கு நவீன தொழில் நுட்பத்தைப் பயன் கொள்வதில் மனத் தடை இருக்காது. ஆனால் மிஞ்சிகைகளுக்கு தமிழ்நாட்டு வாசகர்கள் குறைவு. உங்களுக்கு வாசகர்கள் வேண்டும். அவர்களின் கை தட்டல் வேண்டும். அதனால் அச்சு வெளியை நாடுகிறீர்கள். அதாவது உஙகளுக்கும் வாசகர்களின் எண்ணிக்கைதான் அடிப்படை.இன்னும் அப்பட்டமாக சொல்லப் போனால், உங்களுக்கு தமிழ் நாட்டு வாசகர்களும், இலங்கைத் தமிழர்களின் காசுகளும் வேண்டும். அதற்காக சிறு பத்திாிகை என்ற பம்மாத்து.
அதையும் தவிர, நீங்களே நடத்தும் சிறு பத்திாிகைகளில்தான் உங்களை முன்னிறுத்திக் கொள்ள இயலும். மிஞ்சிகைகளில் அது சிரமமானது.
8888888888
உங்கள் எழுத்தைப் படித்து உங்களது சிறுபத்திாிகை நோக்கி வாசகர்கள் வருகிறார்கள் என்பது உண்மை எனில் அது மகிழ்ச்சியான செய்தி. இப்படிப்பட்ட வலசைதான் (migration) நிகழ வேண்டும் என்பது என் விருப்பம். உங்களது இந்தக் கருத்தினடைப்படையில் பார்த்தால் உங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகாித்திருக்க வேண்டும். அதிகாித்திருக்கிறதா ?
உங்கள் புத்தகங்கள் விற்கிற எண்ணிக்கையில் உங்கள் சிறுபத்திாிகை விற்கிறதா ? இல்லையெனில் ஏன் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா ? உங்கள் சிற்றிதழுக்கு சந்தா கேட்டு 500 கடிதம் எழுதினால் 12 சந்தாக்களே ஏன் வருகின்றன ? சந்தாக்களை விட வசைக் கடிதங்கள் ஏன் அதிகம் வருகின்றன ?
உண்மை என்னவெனில், வெகுஜன இதழ் வாசகனுக்கு தரமான எழுத்தின் மீது வெறுப்பேதும் கிடையாது. அதிலென்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூட அவர்களில் சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் சிற்றிதழ்களில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் கணிசமாகவே விற்பனை ஆகின்றன. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு உலர்ந்த தத்துவார்த்த, academic விவாதங்களில் ஆர்வம் கிடையாது. நம் சமூகத்திற்குப் பின் நவீனத்துவத்தின் தேவை என்ன, அது நம் சமூகத்தில் எப்படி செயலாற்றுகிறது, ந்மது அன்றாட வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பது குறித்து உங்களது கட்டுரை அமைந்திருந்திருக்குமானால் அதை எந்த வெகுஜனப் பத்திாிகையும் புறக்கணித்திருக்காது என்றே நான் எண்ணுகிறேன்.
இன்றுள்ள சூழ்நிலையில் வெகுஜன இதழில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது வெகுஜனங்களின் மொழியில், அவர்கள் வாழ்வோடு தொடர்புடையதாக அமைய வேண்டும்.
888888888
இன்று பல சிற்றிதழ் எழுத்தாளர்கள் ஜனரஞ்சகத்தை எதிர்ப்பது ஒரு போலியான மேட்டுக்குடி மனோபாவத்தை ( elitisism) பெறுவதற்கே. ஜன ரஞ்சகத்திற்கு மாற்று எலிடிசம் அல்ல. இங்கு நடப்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, நான் எலியட்டை, எாிக் ஃபிராமை, சார்த்தரை, போர்ஹேயை, மார்கசை உச்சாிப்பவனாக்கும் என்ற மனோபாவம் ஒரு வித நோய்க் கூறான மனோபாவம். இது வரலாற்றில் சமூகத்தை வைத்துப் பார்க்காத அபெளதீகப் பார்வை.
மக்களுக்கான இயக்கத்தை நடத்தும் பொருட்டு செயல்பட்டுவரும் ஒரு இளைஞன், போலீசிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, தலமறைவாக, நாளடைவில் அவனுக்கும் மக்களுக்குமிடையேயான தொடர்பு நலிவடைகிறது. எந்த மக்களுக்காக அவன் தொண்டாற்ற விரும்பினானோ அவர்களிடமிருந்தே அவன் அன்னியப்பட்டுப் போகிறான். இது மிருணாள் சென் இயக்கிய பதாதிக் என்ற திரைப்படத்தின் கதை.
நம்முடைய சூழலின் மீது வெறுப்புக் கொண்டு சிறு பத்திாிகை என்ற மறைவிடத்தில் தஞ்சம் கொண்டு, யாருக்காக எழுத விரும்பினோமோ அவர்களிடமிருந்தே அன்னியப்பட்டு நிற்கப் போகிறோமா ?
888888888
இந்தக் கேள்வியை நான் இப்போதல்ல, 76லிருந்து நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் எழுப்பி வருகிறேன். 80களின் துவக்கத்தில் படிகள் என்ற சிற்றிதழோடு தொடர்புடைய இலக்கு அமைப்பு சென்னை வில்லிவாக்கத்தில் நடத்திய கருத்த்ரங்கில் ( அதில் பல தரப்பையும் சார்ந்த எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள்) பகிரங்கமாகவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்.(அன்று நான் எந்த வெகுஜன ஊடகத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. கணையாழி ஆசிாியர் குழுவில் இருந்தேன்) இது குறிந்து அன்று நான் வாசித்த கட்டுரை எழுபதுகளில் கலை இலக்கியம் (பதிப்பு: காவ்யா பெங்களூர்) என்ற நூலில் இருக்கிறது.
நான் கண்டடைந்த விடைகளைக் கொண்டு இன்றுவரை நான் செயல் பட்டு வருகிறேன். இதனால் தமிழ் எழுத்துலகில் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் எனக்கு மகிழ்ச்சி தருவதாகவே அமைந்திருக்கின்றன.
நல்ல இலக்கியம் அறிந்த எழுத்தாற்றலும் சிந்தனை சக்தியும் கொண்ட சிற்றிதழ் எழுத்தாளர்களிடம் நான் கோருவதெல்லாம் இதுதான்: உங்களது பலங்களை வெகுஜன ரசனையை மேம்படுத்துவதற்கான ஒரு பாலமாகப் பயன்படுத்துங்கள், அவர்களிடமிருந்து விலகி நிற்பதற்கான தகுதியாக அவற்றைக் கருதிக் கொள்ளாதீர்கள்.
88888888888
செவ்வியல் இலக்கியமே கூடாதென்றோ, அது வெகுஜனங்களுக்கு எதிரானது என்றோ நான் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஷேக்ஸ்பியர், கம்பன், பாரதி உள்பட உள்ள எல்லா செவ்வியல் இலக்கியங்களும் வெகு ஜன அங்கீகாரம் பெற்றவையே.
ஆனால் ஒருவன் ஒரு படைப்பை எழுத உட்காரும் போதே, நான் செவ்வியல் இலக்கியம் படைக்கப் போகிறேன் என்று கையில் காப்புக் கட்டிக் கொண்டு எழுத உட்கார முடியாது. அது செயற்கையானது.
ஒரு சமூகம் கால வெளியில் தனது சொத்துக்களாக சேமித்துக் கொள்ளும் படைப்புக்களே செவ்வியல் இலக்கியங்கள் ஆகின்றன. அவை தேவைதான். ஆனால் நான் என்னளவில், ஒருசமூகம் தன்னை இனம் கண்டு கொள்ள, செயலூக்கம் பெறத் தூண்டும் படைப்புக்களை பொிதும் மதிப்பேன். அவற்றின் சமூக முக்கியத்துவம் செவ்வியல் இலக்கியங்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவை அல்ல.
888888888
நண்பர் ஞாநியின் தந்தையாரைக் குறித்து நீங்கள் எழுதியுள்ளவை எவ்வளவு தகவல் பிழைகள் நிறைந்ததாக இருக்கிறது என்பதை ஞானியே குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையில் உள்ள பல்வேறு தகவல்களும் நான் மேலே சுட்டிக் காட்டியுள்ள செதிகளும் நீங்கள் நுனிப்புல் மேய்பவர் என்பதையும், மேம்போக்காக விஷயங்களை அறிந்து கொண்ட நிலையிலேயே அது குறித்துக் கருத்துத் தொிவிக்கக் கூச்சப்படாதவர் என்பதையும் உணர்த்துகின்றன. நான் ஆசிாியப் பொறுப்பில் பணியாற்றிய எந்தப் பத்திாிகையிலும், உங்களுடைய எழுத்துகளை ஏன் பிரசுாித்ததில்லை என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு இப்போது புலப்பட்டிருக்கும். நான் உங்கள் எழுத்துக்களை நிராகாித்ததன் காரணமாக ஏற்பட்ட மனச் சாய்வின் (Bias) காரணமாக எழுந்த அபிப்பிராயம் என்பதால் அவற்றை நிராகாிக்கிறேன்.
ஞாநியின் அறிவிப்பிற்கு தொிவித்துள்ள எதிர்வினையிலும், என் இதழியல் பணிகள் குறித்து எழுதி உள்ளீர்கள்.நான் உங்கள் எழுத்துக்களை நிராகாித்ததன் காரணமாக ஏற்பட்ட மனச் சாய்வின் (Bias) காரணமாக எழுந்த அபிப்பிராயம் என்பதால் அவற்றை நிராகாிக்கிறேன். தங்களை அங்கீகாிகாதவர்களை காழ்ப்போடு விமர்சிப்பதும், சொறிந்து கொடுப்பவர்களைத் துதி பாடுவதும் சிறுபத்திாிகை எழுத்தாளர்களது மனோபாவம் என்பது ஊரறிந்த ரகசியம். உண்மைகள் என் தரப்பில் நிற்கின்றன. இன்று வெகுஜன ஊடகங்களில் முக்கிய பொறுப்புக்களில் செயல்பட்டு வருபவர்களில் சிலரேனும் நான் ஆசிாியத்துவம் செய்த திசைகள் இதழிலில் அறிமுகம் ஆனவர்கள் என்பது ஊடக உலகம் அறிந்த உண்மை.
என் கீழ் பணியாற்றியவர்களது திறமைகளை நான் பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருந்திருக்கலாம். ஆனால் எவரையும் நான் தற்கொலைக்குத் துரத்தியது இல்லை.( மேலும் விவரங்களுக்கு உங்களது தினமணி நண்பர்களைக் கேளுங்கள்.)
8888888888
குளத்தில் எறியும் கல், தற்காலிகமாக அலைகளை எழுப்பலாம். ஆனால் அது அலைகள் எழுப்பிய குளத்திலேயே சில கணங்களில் மூழ்கி மறைந்து விடும். ஆனால் நீருக்குள் வேர் கொண்டு எழும் அல்லி, தண்ணீர் உயரும் போது உயர்ந்து குறையும் போது தாழ்ந்து நீருடேனே இருந்து வரும்.
கல்லாக இருப்பதும், மலராக இருப்பதும் அவரவர் தேர்வு.
8888888888
உங்கள் கடிதத்தில் வாதத்திற்காக வாதம் புாிவது என்கிற போக்கே மேலிட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. விஷய்ங்களைப் புாிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலை விட, ‘என்னுடையது ‘ என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஞானியின் அறிக்கைக்கு எழுதி உள்ள எதிர்வினையில், ஆதரங்களின் அடிப்படையில் அல்லாமல், காதில் விழும் தகவல்களின் அடிப்படையில் பொது அரங்கில் ஒருவரை இகழ்ந்துரைக்கும் போக்கும் காணப்படுகிறது.
இந்த மாதிாியான ஒருவருடன், கலாசாரம் போன்ற பன்முகம் கொண்ட பொருள் பற்றி ஆழ்ந்து விவாதிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே இது குறித்து நான் இனி உங்களுடன் விவாதித்து என் பொழுதுகளை வீணடிக்க மாட்டேன்.
மூடிய கைகளோடு கை குலுக்குவது எப்படி ? மூடிய மனங்களோடு விவாதிப்பது எப்படி ?
என்றும் அன்புடன்,
மாலன்.
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் – 2
- அணுப் பிணைவு சக்தி – அவனியின் எதிர்கால மின்சக்தி
- குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்
- மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)
- மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa)
- பிஜி கேரட் சூப்
- பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )
- வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)
- திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002
- எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)
- பகைவன்
- முயற்சி
- இரு நகைப்பாக்கள்
- குட்டாஸ் – 2
- பயங்கரவாதம்
- பாவனை முகங்கள்
- நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்
- எது கவிதை ?
- அரச சவம்
- மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?
- 23 சதம்
- கலி காலம்
- சமரசமன்று : சதியென்று காண் !
- அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
- காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?
- திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்
- மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.
- மேலோட்டமான சிந்தனைகள்; ஆழமான அவ நம்பிக்கைகள். இதுதானா ஜெயமோகன் ?
- பூனை வளர்த்த வரதராஜன் கதை
- நாடும் கோவிலும்
- தற்காலக் காதல்
- பம்பரமே – பராபரமே
- போர்க்காலமான பூக்காடு
- சமத்துவம்
- தூக்கம்.
- இறுதியாய் ஒரு கேள்வி…!
- சில நாட்களில்