த.அரவிந்தன்
உள்வாங்கிக் கொள்ள தாமதமானது. நிமிட நேரத்திற்கு முன்தான் நடந்திருக்கவேண்டும். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இரத்தம் தெறித்திருக்கிறது. மாட்டியப் புத்தகப் பையோடு பாதிச்சாலையில் கிடக்கிறான். பள்ளிக்கூடம் போகிற வழியில் அடிபட்டிருக்கிறான். உச்சந்தலையில் அடி. கசிகிற இரத்தம் முகத்தில் ஓடி உடலையே நனைத்திருக்கிறது. வெள்ளைச்சீருடை என்பதற்கான அடையாளம் சிறிதும் தெரியவில்லை. சிறு முனகல்கூட இல்லை. ஓடுகிற இரத்தத்தையும், வராத சத்தத்தையும் வைத்து பார்க்கிறபோது தவறாக நினைக்கத் தோன்றுகிறது. நெருங்கிப் பார்த்தால் தவறாக நினைத்ததற்காக மனம் நெருடுகிறது. வயிறு ஏறி இறங்குகிறது. கழுத்து நரம்பில் துடிப்பு தெரிகிறது. மூச்சுக்காற்றால் போராடுகிறான். உயிரினும் மேலாய் தன் உயிருக்குப் போராடுகிறான். அந்தப் போராட்டத்தின் வலியை அவன் பெற்றோர்களால்தான் உணர முடியும். அலற முடியும். பெருங்குரலெடுத்து அழமுடியும். ஒவ்வொரு துளி
இரத்தத்தையும் இழக்கும் வலியையும் பார்ப்பவர்களுக்கு உணர்த்த முடியும். புழுதியில் புரண்டுஉருண்டு மண்வாரி இறைத்து அடித்துப் போட்டு போனவனுக்குச் சாபமிட முடியும். மற்றவர்களால் முடியாது.
உயிரிலிருந்து உணர்ச்சியைப் பிரித்து பதுக்கி வைக்க எல்லோரும் பழகிக்கொண்டார்கள். தேவைப்படுகிறபோது பதுக்கியதைப் புதுப்பித்து பயன்படுத்துகிற சாமர்த்தியமும் இருக்கிறது. தன் இரத்தங்கள் என்று இவர்கள் கருதிக் கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சுயநிகழ்வுகளை மட்டும் பின்நோக்கிப் பார்ப்பவர்கள், இரத்தத்தின் பரிணாம வளர்ச்சியைப் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. அந்தச் சாமர்த்தியம் என்னிடமும் இருக்கும் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததே இல்லை. மனிதநேயம் செத்துப்போய்விட்டதாகவும் அது என்னிடமே கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருப்பதாகவும் நினைத்திருந்தேன். நேரடிக் களத்தில் எனது மனிதநேயத்தின்
உயிருக்கும் ஊசலாட்டம். முன்பே தெரிந்திருந்தால் இந்த வழியாக வந்திருக்கமாட்டேன். போக்குவரத்து இல்லாத குறுக்குச்சாலைகளின் வழியாக வருவதுதான் வழக்கம். குறுக்குச்சாலைக்கு வழியே இல்லாத வழியில் வந்து மாட்டிக் கொண்டேன். இறுதிநிலையில் இருந்த மனிதநேயம் அடிபட்டவனைப் பார்த்ததும் எனது இரு சக்கர வாகனத்தை
நிறுத்த வைத்துவிட்டது. எட்டுமாதக் கர்ப்பமாய் இருக்கும் எனது தங்கையை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்கிறேன். மருத்துவமனையில் காண்பித்து, தங்கையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு விரைய வேண்டும். அலுவலகத்திற்குத் தாமதமாகவோ, திடீரென விடுப்போ எடுக்கமுடியுமா? ஆடம்பரச் செலவுகள்
செய்கிறளவிற்குச் சம்பாதிக்கிற, தூசி படாத ஆடைகளை அணிகிற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கால் நீட்டியிருக்கிற தனியார் துறை அலுவலகத்தின் சாதாரண அடிமைதானே நான். என்ன செய்ய? பாசாங்கு பதைப்புடன் நிற்கிற கூட்டத்தில் ஒருவனாய் நின்றுகொண்டேன்..
குட்டிக்கரணம் போடும் குரங்கைப் பார்ப்பதற்குக் கூடுவதுபோல கூட்டம் கூடுகிறதே ஒழிய அடிபட்டவனைத் தூக்குவதற்கு யாரும் முன்வரவில்லை. தலையை நுழைத்து கூட்டத்தில் எட்டிப் பார்க்கின்றனர். சோக இழையோடு பதிவு செய்து வைத்திருப்பதுபோல “அச்சச்சோ ‘ சத்தம் எழுப்புகின்றனர். உடனே நழுவிவிடுகின்றனர். போக்குவரத்துக் காவலர்கள் யாரும் அருகில் இருப்பதாகவும் தெரியவில்லை. விபத்து நடக்கிற இடங்களில் எல்லாம் நின்றிருந்தால் அவர்களால் அரசாங்கத்திற்கு நட்டம் வரலாம். கைகளோடு கைகள் பேசி வருமான உறவுகள் அதிகரிக்கிற இடமாகப் பார்த்துதான் நின்றிருப்பார்கள். அடிபட்டவனுடைய பள்ளிச் சீருடையைப் பார்த்தாவது அவன் படிக்கும் பள்ளியை அறியலாம். எதிர்வீட்டுக்காரனின் பெயரே தெரியாமல் நகர வாழ்க்கை வாழ பழகிக்கொண்டுவிட்டேன். அறியாத இடத்தில் எந்தப் பள்ளிக்கூடம் என்பதை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பேன்? அருகில் உள்ள கடைக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வெளியில் வந்துகூட அவர்களால் பார்க்கமுடியவில்லை. போகிற வருகிறவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்கிற அளவுக்கு பொட்டலம் மடிக்கிற அவசரம் அவர்களுக்கு. எதிரில் உள்ள அஞ்சலகத்திற்குத் தினமும் வருகிறவர்களுக்கும், அங்கு பணியாற்றுகிறவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தொலைதூர உறவினர்களின் கடிதத்திற்குப் பசை ஒட்டுவதைவிட இதுவொன்றும் பெரிய விஷயமில்லை. மனிதநேயத்தை வெளிப்படுத்துவதற்கு அச்சச்சோ சத்தத்தைத் தூரத்திலிருந்து எழுப்பிவிட்டால் போதும் என்பது அவர்கள் நினைப்பு. அடிபட்டவனின் சட்டைப்பையில், புத்தகப்பையில் தேடினால் அவனைப் பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தேடி எடுக்கிறளவு எனக்குத் துணிவு இல்லை. இளங்காலை வெயில் வேறு வியர்வையின் வழியே கூட்டத்தில் நிற்பவர்களில் குளித்தவன் யார்? குளிக்காதவன் யார்? என்பதைக் காட்டிக்கொடுக்கிறது. வண்டியில், பேருந்தில் போகிறவர்கள் எல்லாம் ஏதோ பார்க்கமுடியாத அவசரத்தில் இருப்பதற்காக வருத்தப்படுவதுபோல அச்சச்சோ சத்தம் எழுப்பி சன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு போகிறார்கள். “நடிக்காதீங்கடா’ என்று எல்லோரையும் பார்த்து கத்த வேண்டும்போல் இருக்கிறது.
என் உள்மனது உடனே என் பக்கம் திரும்பிக்கொண்டது. “முதல்ல நீ நடிக்கிறத விடுடா’ என்று குரைக்கத் தொடங்கிவிட்டது. இந்த உள் மனதிற்கு வேலையே இல்லை. உள்ளேயிருந்து குரைக்கத்தான் அதற்குத் தெரியும்.
எல்லாம் முடிந்தபிறகு சொல்லிச் சொல்லி காட்டி வருத்தத் தெரியும். வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது. நிகழ்வு நடக்கிறபோதே தவறாக நடக்காமல் தடுத்து நிறுத்தி சரியாகச் செயல்பட வைக்கிற எண்ணம் அதற்கு ஒருநாளும் இருந்ததாகத் தெரியவில்லை. என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிற எனக்கு ஒருவழியைக் காட்ட வேண்டுமா? இல்லையா?
அதைவிட்டு கடப்பாரையைக் கொண்டு இப்போதே குத்தத் தொடங்கிவிட்டால்? உள்மனதோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறளவுக்கு இப்போது எனக்குப் பொறுமையும் இல்லை. இரத்தத்தைக் கண்டாலே எனக்கு மயக்கம் வேறு வரும். இதோடு என் தம்பி இதுபோல எங்காவது அடிபட்டு கிடக்கிறானோ என்கிற பயம் வேறு புதிதாய்ச் சேர்ந்துகொண்டது. அவனோடு தொடர்புகொண்டு பேசிவிடலாம். இருக்காதென உடனே நம்பிக்கையும் பிறக்கிறது.
வீட்டில் வேறு யாராவது அடிபட்டிருப்பார்களோ?… குழப்பம். ஒரே குழப்பம். சிறப்பு அனுமதி பெற்று ஏதோ இருட்டிருவில் மூளைக்குள் இதுவரை சந்திக்காத புதுவித குழப்பம் புகுந்துவிட்டது போல இருக்கிறது. ஏதோ பழைய கட்டடத்தை இடிக்க வெடிகுண்டு வைத்து வெடிக்கையில் சுவர்களெல்லாம் பொலபொலத்துக் கொட்டுவதுபோல உடலுறுப்புகள் எல்லாம் உடைந்து விழுவது போலவும் இருக்கிறது.
எல்லோரையும்போல் கூட்டத்திலிருந்து விலகி வாகனத்தை எடுத்துக் கொண்டு போய்விடலாம். தெரிந்த முகம் எதுவும் இல்லை. மனிதநேயம் பற்றி பிறகு எங்காவது வீராவேசமாய் பேசுகிறபோது இதை உதாரணமாகக் காட்டிப் பழிப்பதற்குச் சாட்சிகள் இல்லை. மனசாட்சியும் தங்கையும் மட்டுமே சாட்சிகள். மனசாட்சி என்பது இருட்டுப் பிரதேசத்தில் பறக்கிற சிறுசிறு மின்மினிப் பூச்சிகள்தானே. இந்தப் பூச்சிகளின் கடுகளவு வெளிச்சத்தைப் பார்த்து ரசிக்கலாமே தவிர, அந்த வெளிச்சத்தைக் கொண்டு பகலைப் படைத்துவிட முடியாது. மேலும் மனசாட்சியைக் கட்டுப்படுத்திப் பொய் சொல்லவைக்கவும் தெரியும் என்கிறபோது வேறு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது. தங்கை எங்கும் காட்டிக்கொடுக்க மாட்டாள். முழு நம்பிக்கை இருக்கிறது. கிளம்பிவிடலாம். முடிவுசெய்துவிட்டேன். நழுவுகிற வித்தையா தெரியாது. வாகனத்தில் ஏறச் சொல்லி தங்கையைப் பார்க்கிறேன் . அழுதுகொண்டிருக்கிறாள். இரத்தவெளியாய் கண்கள் சிவக்க கண்ணீர் விடுகிறாள்.
” பாவமா இருக்குப்பா … சின்னப் பையன்…. புத்தகப் பையோடு கிடக்கிறான்… ஏதாவது செய்ப்பா… செத்துடப்
போறான். ஏதாவது செய்ப்பா.”
வயிற்றிலிருக்கும் பிள்ளை கொடுக்கும் உணர்ச்சி. எல்லோரின் வறட்சிநேயங்களைத் தாண்டி அவளை அழ வைத்துவிட்டது. பிறக்கப்போகிற தன் பிள்ளை, தன் கணவன், தன் அண்ணன், தன் தம்பி இதுபோல் எங்காவது அடிபட்டு தூக்குவதற்கு நாதியற்று கிடப்பார்களோ என்று நினைத்துப் பார்த்திருக்கலாம் அவளும். என்ன செய்வதெனப் புரியாமல்
தானே நானும் தவிக்கிறேன். யாராவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால் பணம் கொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறேன். என்னைவிட வயதில் மூத்தவர்கள் எல்லாம் நிற்கிறபோது நான் எப்படி முன்னால் போய் நிற்க முடியும். இதுபோல வேறு எங்கும் மூத்தவர்களுக்காக விட்டுக்கொடுத்ததில்லை என்கிற நினைவு வேறு என்னை இடையில் வந்து மிரட்டிச் செல்கிறது. ஒருவேளை நான் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தால் வழக்கு விசாரணை என்று
நாளை நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். யார் அடித்துப் போட்டு போனார்கள்? வாகனத்தின் எண் என்ன? எவ்வளவு வேகத்தில் வாகனம் வந்தது? யார் மீது தப்பு? அடிபட்டவன் வலதுபுறமாக வந்தானா? இடது புறமாக வந்தானா? என்று நீதிபதிகள் கேள்வி மேல் கேள்வி கேட்கலாம். எனக்கு ஒன்றுமே தெரியாதே. வழக்கு விசாரணைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டுதான் போகமுடியும். நீதிமன்றம் செல்கிறேன். விடுப்பு வேண்டும் என்று நிறுவனத்தாரிடம் கேட்கமுடியாது. ஏதோ கொலை குற்றம் செய்துவிட்டு நான் நீதிமன்றத்திற்குப் போவதாக நினைக்கக்கூடும். நீதிமன்றத்திற்குச் செல்வதால் நிறுவனத்தின் மானம் போய்விட்டதாக எனது பகையாளிகள் யாராவது நிறுவனத்தாரிடம் புகார்கூறி பழி தீர்த்துக்கொள்ள கூடும். என் வேலை பறிபோகும். நினைக்கவே பயமாக இருக்கிறது. கிளம்பு. சீக்கிரம் கிளம்பு. இடத்தைவிட்டு என் தங்கை நகர்வதாக இல்லை. முன்பைவிட அதிக சத்தத்துடன் அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுவதைப் பார்த்து ஓடி வந்த ஒரு பூக்காரக் கிழவியும் மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள்.
“யாரு பெத்த புள்ளையோ தெரியலையே… படிக்கப்போற புள்ளைய அடிச்சிப் போட்டுட்டு போயிருக்கானே…
நாசமாப் போறவன்… யப்பா இரத்தம் போய்க்கிட்டே இருக்கு.. புள்ளையத் தூக்குங்கப்பா… பக்கத்துல கோமதி ஆஸ்பத்திரி இருக்குப்பா. தூக்குங்கப்பா….”‘
ஒரு பயலும் அசையவில்லை தூக்கச் சொல்லி என் தங்கை என்னைத் தள்ளிவிட்டுவிட்டாள். மேடையில் தள்ளிவிடப்பட்டவன் தனக்குத் தெரிந்த முறையில், குரலில் ஏற்ற இறக்கத்தைச் சரியாக வெளிப்படுத்த முடியாவிட்டாலும் கத்தி கூச்சல்போட்டு நடிக்க முயலுவதுபோல சமாளிக்கத் தொடங்கினேன்.
“”தள்ளி நில்லுங்க… காத்த விடுங்க… யப்பா ஆட்டோ…ஆட்டோ” கைதட்டி அழைத்தேன்.
கூடிநின்ற கூட்டத்துக்கு இப்போதுதான் உயிர் வந்தது போலிருக்கிறது. ஆட்டோவை அழைப்பது சுலபமான வேலையாக நினைத்திருக்கலாம்.
“”ஆட்டோ…ஆட்டோ” எல்லோரும் சேர்ந்து கலவரக்குரல் கொடுத்தார்கள். அருகில் வருவதும், அடிபட்டவனைப் பார்த்ததும் ஏதோ தாக்க வருபவர்களிடம் இருந்து தப்பித்துப் போவதுபோல மிரண்டு தலைதெறிக்க ஆட்டோக்காரர்கள் பறப்பதுமாக இருந்தனர். வராத சில ஆட்டோக்காரர்களை ஆவேசம்கொண்டு அடிக்கவும் ஓடியது இதுவரை அமைதியாக இருந்த கூட்டம். மிரட்டல் எதுவும் பயனளிக்கவில்லை. இந்த நேரத்தில் தானாகவே முன்வந்த அந்த ஆட்டோக்காரன் எனக்குக் கதாநாயகனாகவே தெரிந்தான். அவனிடம் பதற்றம் எதுவும் தென்படவில்லை. மாட்டிக்கொண்டோமே
என்கிற தவிப்பும் தெரியவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் யார் பணம் தருவார்கள் என்பதையெல்லாம் அவன் யோசித்ததாகத் தெரியவில்லை.
“தூக்குங்க… யார் கூட வர்றது…” என்றான். ஆட்டோக்காரர்களை மிரட்டினீர்களே வாங்கப் பார்க்கலாம் என்பதுபோல இருந்தது அவன் பேசியது.
வாயடைத்துப் போனது கூட்டம். ஒரு சிலர் நழுவினர். “வா’ என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்கிற மிதப்புடன் சிலர் நின்றிருந்தனர். இப்போதுதான் சரியாய் கவனிக்கிறேன். கூட்டத்தில் ஒரு பையன் நிற்கிறான். முன்பே ஒருமுறை கண்ணில் தென்பட்டான். அவன் செய்கையை உள்ளாழ்ந்து யோசிக்கவில்லை. முன்னால் நிற்பவர்களின்
தலைகள் தன் தலையை மறைத்துவிடும் என்கிற நம்பிக்கையுடன் மறைந்து நின்று எக்கிஎக்கிப் பார்க்கிறான். பயத்தில் முகமெல்லாம் வியர்த்துப் போயிருப்பது தெரிகிறது. நான் கவனிப்பதைப் பார்த்ததும் மேலும் பயப்படுவதை அவன் கண்கள் காட்டுகின்றன. ஒருவேளை இவன்தான் அடித்துப்போட்டிருப்பானோ? சின்னப் பையனாக வேறு இருக்கிறான். கூட்டத்திலிருந்து நழுவ எத்தனிக்கிறான். தலைகள் அசையக்கூடியவை. அவற்றை நம்பி பின்னால் நிற்கக்கூடாது
என்பதை இப்போது அந்தச் சிறுவன் தெரிந்திருப்பான். சிறுவனுக்கு முன்னால் நின்ற மூன்று பேர் கலைந்து போயினர். சிறுவன் முழுதாய் தென்பட்டான். இப்போது புரிந்தது அவன் பயந்ததிற்கான காரணம். அடிபட்டவனும், அவனும் ஒரே பள்ளிச்சீருடை போட்டிருந்தனர். இருவரும் ஒரே பள்ளி ஒரே வகுப்பாக இருக்க வேண்டும். விபத்தில் யாராவது
பாதிக்கப்பட்டு, அதற்குக் காரணமானவன் ஆரோக்கியமாக இருக்கிறபட்சத்தில் பெரும்பாலும் அந்த இடத்தில் இருக்கமாட்டான். மனிதநேயம் உள்ளவன்தான் இருப்பான். அடிபட்டவனைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பான். இல்லாதவன் இடத்தைவிட்டு முதலில் ஓடிவிடுவான். அந்தப் பையனைப் பார்த்தால் விபத்தை ஏற்படுத்தியவன்
போல் தெரியவில்லை. அவன் சட்டையில் இரத்தக்கறை எதுவும் தெரியவில்லை. அதேசமயம் அவனுக்கு என்ன நடந்தது?
எப்படி நடந்தது? என்று தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் பயப்படுகிறான். இப்போது விசாரித்துக் கொண்டிருக்க முடியாது. பாதி பொய் கலந்த உண்மைதான் வெளிப்படும். உடலிலிருந்து உறவை முறித்துக் கொள்ள அவசரப்படுகிறது அடிபட்டவனின் உயிர். சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினால், அடிபட்டவன் யார் என்றே தெரியவில்லை என ச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
“உன் ஃப்ரெண்டுதான… ஏறி ஆட்டோவுல உட்காரு ஆஸ்பத்திரிக்குப் போவோம்.” இருவரையும் முன்பே தெரிந்ததுபோல சற்று மிரட்டல் தொனியில் சொன்னேன்.
” பள்ளிக்கூடம் போகணும்…”
நான் பேசவில்லை. கூட்டம் பேசியது.
” ஏறுடா… பள்ளிக்கூடத்துல நாங்கச் சொல்லிக்கிறோம்.”
எல்லோரும் கத்திச் சொல்ல மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடாய் பயந்து ஏறினான்.
“ஆர்.கே.புரம் மெட்ரிகுலேஷன் ஸ்கூல். ஒன்பதாம் வகுப்பு. ஏ செக்ஷன்.” தகவல் சொல்லிவிடும்படி ஒருவரிடம் சொன்னான். பூக்காரக் கிழவியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.
அடிபட்டவனின் ஒரு கையை நான் பிடித்துக் கொண்டேன். கோடுபோட்ட பழுப்பு நிறச் சட்டை அணிந்த ஒருவர் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டார். ஆட்டோக்காரர் கால்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டார். இரத்தக்கறை என் சட்டையில் பட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு தூக்கும்போது மிகுதியாக இருந்தது. இதே உணர்வுடன்தான் மற்ற இருவரும் தூக்குகிறார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. இருக்கையில் கிழவியும் சிறுவனும் உட்கார்ந்திருக்க அவர்கள் கால்கள் வைத்திருந்த இடத்தில் அடிபட்டவனைத் தூக்கி வைத்தோம். வைத்தோம் என்பது பொய். போட்டோம் என்பது டங்கென்று தலை மோதிய சத்தம் கேட்டபோதுதான் தெரிந்தது.
“நீங்க வரலையா…” ஆட்டோக்காரர் கேட்டார்.
“கோமதி ஆஸ்பத்திரிக்குத்தான் நானும் வர்றேன். வேகமா போங்க.. பின்னாலேயே வர்றேன்” என்றேன்.
என் தங்கையின் எட்டுமாத வயிற்றைப் பார்த்து அவர் நம்பியிருக்க வேண்டும். என்னைப்போலவே பழுப்பு நிறச் சட்டைக்காரரும் அவரது வண்டியில் வந்துவிடுவதாகச் சொன்னார். பெரிய சத்தத்துடன் ஆட்டோ பறந்தது. வண்டியை எடுக்கிறபோது அடிபட்டவன் கிடந்த இடத்தைப் பார்த்தேன். அவன் எப்படிக் கிடந்தானோ, அதே உருவில் இரத்தம்
தரையில் கசிந்து கிடக்கிறது. இரத்தத்தில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள் என்பது எது? உள் மனத்திலிருந்து ஒரு மருத்துவமாணவன் விழித்தெழுந்து கேட்டான். சிவப்பு நிறம் மாறி இரத்தம் கறுப்பாக உறைந்துபோகிறது. தங்கையை உட்கார வைத்து வண்டியில் போகிற போது மருத்துவமாணவன் மறைந்து ஒரு கவிஞன் விழித்துக்கொண்டான். “வெள்ளையணுக்களின் சிவப்பணுக்களின் வீதியில் தன் உருவத்தில் தானே மிதந்தான்’ என்று ஒரு கவிதையின் கடைசி வரி துளிர்த்தது.
இது இடைப்பட்ட வரியாகவும் முதல் வரியாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற வரிகளை அமைப்பதற்கு மூளையின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒட்டடையாய் ஒட்டிக்கிடக்கும் வார்த்தைகளைத் தேடத் துவங்கி சிறிது தூரம் சென்றதும் எனக்கு நானே அருவருப்பாகிப் போனேன். இறுதி மூச்சை விடயிருப்பவனைக் காப்பாற்ற முயற்சிக்காமல் அவன் இரத்தத்தை நிரப்பி எழுத நினைத்ததற்காக பெரிதும் வருந்தினேன். என்னுடைய தலையில் நானே கொட்டிக் கொள்ளவேண்டும் போலிருந்தது. பழுப்புச் சட்டைக்காரர் என்னைக் கடந்து மருத்துவமனைக்குப் போனார். வேகமாக வண்டியை இயக்கினேன். மருத்துவமனை வாசலில் தங்கையை இறக்கி அவளது மருத்துவரிடம் காட்டச் சொல்லிவிட்டு வண்டியை நிறுத்துவதற்கு இடம் தேடினேன். குறுக்கு சந்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற ஏகப்பட்ட இருசக்கர வாகனங்களுக்குள் ஓர் இடத்தைப் பிடிப்பதற்குச் சிரமமாக இருந்தது. இடத்தைப் பிடித்து பதற்றத்தில் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது நான் தடுமாற, வாகனம் தவறி விழ, பக்கத்தில் நின்ற மற்ற வாகனங்கள் விழுந்துவிட்டது.
யாரும் கவனிக்காததால் திட்டு வாங்காமல் ஒவ்வொன்றாய் எடுத்து நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் வாயிலில் நுழைகையில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிற நிலையில் நிற்கிறது ஆட்டோ. பூக்காரக் கிழவி கீழே பழுப்புச்சட்டைக்காரரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அடிபட்டவன் இறந்து போயிருப்பானோ… உயிரைப் பிசைகிறது தெரிந்து கொள்வதற்குள்ளான இடைப்பட்ட நேரம்.
“ஆக்ஸிடெண்ட் கேஸ்லாம் இங்கப் பார்க்க மாட்டாங்கலாம். ராகேஷ் மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொல்லுறாங்க..” பூக்காரக் கிழவி சொன்னாள்.
“பிணத்தையா எடுத்துப் போகச் சொல்லுறாங்க…’ கோபம் என்னை நெட்டித் தள்ளியது. நெஞ்செலும்பு வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கிறது. மருத்துவமனையையே அடித்து நொறுக்கினேன். சாகக்கிடக்கிறவனுக்கு முதலுதவி சிகிச்சையைக்கூட அளிக்காத மருத்துவமனை எதற்கு இருக்கவேண்டும்? அடிபட்டவனைத் தூக்காத பொதுமக்களை விட மருத்துவர்கள் கொடியவர்கள். அரக்கர்கள். மருத்துவர்களை நாலாபுறமும் ஓடஓட விரட்டி வெட்டியும் கொன்றேன்.
“ராகேஷ் ஆஸ்பத்திரிக்குப் போவோம். நீங்க வர்றீங்களா சார்? ” என்று ஆட்டோக்காரன் பழுப்புச் சட்டைக்காரரைக் கேட்டபோது என் கற்பனை கலைந்தது. வருகிறேன் என்கிற பாவத்துடன் அவரும் தலையை அசைத்தார். தங்கையை மருத்துவமனையில் விட்டிருப்பதால் நான் வரமாட்டேன் என்று நினைத்தானா? இல்லை என் முகத்தைப் பார்த்தே தெரிந்துகொண்டானா? என்று தெரியவில்லை. என்னை எதுவும் கேட்கவில்லை. தனியாக தங்கையை விட்டுவிட்டு போகமுடியாது. திரும்பி வீட்டிற்குப் போகவும் அவளுக்குத் தெரியாது. பூக்காரக்கிழவியும் ஆட்டோவில் ஏறாமலேயே நின்றிருந்தாள்.
“ஏறி உட்காரு..” என்று கிழவியைச் சொன்னான் ஆட்டோக்காரன்.
“இல்ல… கடைய அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்”என்று இழுத்தாள்.
“அதுக்கு என்ன பண்ணுறது உட்காரு…” கோபமாய்ச் சொன்னான். இவளையும் விட்டுவிட்டால் சாட்சிக்கு என்ன செய்வது என்று நினைத்தானோ என்னவோ தெரியவில்லை. தயங்கியபடியே கிழவி ஏறி உட்கார்ந்தாள். கூடப் படிக்கிற சிறுவன் கொஞ்சம் பயம் தெளிந்து உட்கார்ந்திருந்தான். “அடிபட்டவன் தண்ணி கேட்டால் வாங்கிக் கொடுத்துடாதீங்க… ஏற்கனவே இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கு’ என்று சொல்லி, பணம் ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்தேன். நான் வராததற்காக ஆட்டோக்காரன் என்னை அடித்தாலும் அடிப்பான் என்று பயந்து எதுவும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தேன். கோபத்தோடு போவது ஆட்டோ புறப்பட்டு போன வேகத்திலேயே தெரிந்தது. பழுப்பு நிறச் சட்டைக்காரரும் அவரது வண்டியை எடுப்பதற்குப் போனார். என்னுடைய மனிதநேயம் கோமதி மருத்துவமனையோடு முடிந்துபோனதற்காக உள்ளுக்குள்ளே நான் அவமானப்பட்டுக்கொண்டேன். இந்த அவமானம் கொடுக்கிற வலியைத் தூக்குத்தண்டனை கிடைத்தவர்கள்கூட அனுபவித்திடாத வலியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். யார் என்றே தெரியாத அந்தப் பழுப்புச் சட்டைக்காரர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று உள்நாக்கு உச்சரித்தது. முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு
தங்கை மருத்துவரிடம் காண்பித்து விட்டு வந்தாள். ராகேஷ் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றிருப்பதைப் பற்றிய
விவரத்தைச் சொல்லிவிட்டு வண்டியை எடுக்கப் போனேன். அங்கு வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தார் பழுப்பு நிறச் சட்டைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. இவரும் போகவில்லையா? அடப் பாவமே. என்னைப் போல இவரும் இந்த மருத்துவமனைக்கு ஏதாவது ஒரு காரியத்திற்காக வந்து ஏதோ அடிபட்டவன் மீது இரக்கம் கொண்டிருப்பது போலவே நடித்திருப்பாரா?
” ராகேஷ் ஆஸ்பத்திரிக்குப் போனீங்களா சார்…”
“போனேன். அங்கேயும் பாக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். வேறு ஏதோவொரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்களாம். அது எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல.” என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டு வேகமாகப்
போய்விட்டார். அவர் சொல்வதை வைத்து பொய்யா? மெய்யா? என்று எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அது எந்தவிதத்திலும் தேவையும் இல்லாத ஒன்று. வருத்தத்தோடு தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன்..
பூக்காரக் கிழவி வேறு ஏதாவது மருத்துவமனையோடு திரும்பியிருப்பாளோ… ஆட்டோக்காரனும் அந்தச் சிறுவனும் என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கேயாவது தண்டவாளத்திலோ, குப்பைமேட்டிலோ அடிபட்டவனைத்
தூக்கிப் போட்டிருப்பார்களோ…
” அந்தப் பையன் செத்திருப்பான் இல்லப்பா…” என்ற தங்கைக்குப் பதில் எதுவும் சொல்லாமல் வண்டியில் திரும்பி வரும்போது சாலையில் அடிபட்டவன் கிடந்த இடத்தைப் பார்த்தேன். உறைந்து கிடந்த அவன் இரத்த உருவத்தில் யாரோ பொறுப்பாய் மணல் அள்ளிப் போட்டிருந்தார்கள்.
thavaram@gmail.com
- பனிக்கரடி முழுக்கு
- பெண்புத்தி, பின்புத்தி!
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- மூடு மணல்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கிளைதாவி வரும் மின்னல்
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கவிதைகள்
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- ராட்டடூயி
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- “மலர்கொடி”
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- ஒரு ராஜா ஒரு ராணி
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- அன்புள்ள கிரிதரன்
- கத்தி குத்திய இடம்…
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- “அலமாரி”
- கடிதம்
- வேட்டை நாய்
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வருவதுதான் வாழ்க்கை
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- நண்பன்
- 27வது பெண்கள் சந்திப்பு
- யார் இவர்கள்?
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- கவிதைகள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- கவிதைகள்