முள்பாதை 6

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

எப்போதும் ரிக்ஷாவில் கூட ஏறாதவளை வலுக்கட்டாயமாக ராக்கெட்டில் உட்கார வைத்து பூமியை பிரதட்சிணம் செய்து வரச் சொன்னால் எப்படி பயந்து போவாளோ, அது போல் மிரண்டு விட்டிருந்த எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வரத் தொடங்கியது. நான் பயந்து விட்டது போல் எனக்கு நினைவு தப்பவில்லை. காதுகளில் ஹோவென்று ஒலித்துக் கொண்டிருந்த சத்தமும் குறைந்து விட்டது. உலகம் முழுவதும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது.
கம்பார்ட்மெண்ட் வாசலில் நின்று அப்பாவிடம் விடைபெற்றுக் கொண்டு மறுபடியும் என் இடத்திற்கு வந்து உட்கார்ந்து கொள்வதற்குள் என் மனதில் இவ்வளவு நேரமாக இருந்து வந்த சஞ்சலம் தானே அடங்கிவிட்டது. ரயில் பயணம் செய்து அவ்வளவாக பழக்கம் இல்லாததால் அதன் ஆட்டத்தில் என் உடலை நிலையாக வைத்துக் கொள்வதற்குக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. நான் உட்கார வேண்டிய சீட்டிற்கு எதிரில் கோட்டு சூட்டு ஆசாமி ஒருவன் உட்கார்ந்திருந்தான். தங்க •ப்ரேம் மூக்குக் கண்ணாடியை அணிந்திருந்தான். கண்களாலேயே என்னை விழுங்கி விடுவதுபோல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன்.
ரயிலின் ஆட்டத்திற்குக் கீழே விழுந்துவிடாமல் சமாளித்துக் கொண்டே வந்த நான் திடீரென்று சூட்டு ஆசாமியின் மீது விழப்போனேன். எப்படியோ சமாளித்துக்கொள்ள முயன்றேன். ஆனால் அந்த முயற்சி முழுவதுமாக பலிக்கவில்லை. எதிரே உட்கார்ந்திருந்த மாமியின் மடியில் போய் விழுந்தேன். நான் விழப் போவதை முன்கூட்டியே ஊகித்து விட்டவள்போல் மாமி என் தோள்களைப் பற்றி தாங்கிக் கொண்டாள்.
“ஐ யாம் சாரி. மன்னித்துக் கொள்ளுங்கள்.” அவசர அவசரமாகச் சொன்னேன்.
பதிலுக்கு மாமி புன்முறுவல் பூத்தாள். மாமியின் பக்கத்தில் இருந்த என் சீட்டில் அமர்ந்து கொண்டேன். எதிரே இருந்த சூட்டு ஆசாமி நல்ல வாய்ப்பு ஏதோ கை நழுவி விட்டது போல் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். உன் பாழாய் போன புத்தி எனக்குத் தெரியாதா என்பதுபோல் அலட்சியமாக தலையைத் திருப்பிக் கொண்டேன்.
வழக்கம்போல் நகத்தைக் கடித்துக் கொண்டே ஓரக்கண்ணால் என் பக்கத்தில் இருந்த மாமியை கவனித்தேன். நாவல்பழ வண்ணத்தில் சுங்குடிப் புடவையில் மாடிசார் கட்டில் இருந்தாள். மூக்கில் எட்டுக்கல் பேசரி, காதுகளில் வைரத்தோடு அணிந்திருந்தாள். எனக்கும் மாமிக்கும் நடுவில் பெரிய வெங்கல கூஜா இருந்தது. மாமி நான் கடைக்கண்ணால் பார்ப்பதை கவனித்து விட்டாள் போலும். முறுவலுடன் “எங்கே போகிறாய்?” என்று கேட்டாள்.
“தஞ்சாவூர்.”
“அங்கோ யார் இருக்காங்க?”
“அப்பாவோட தங்கை இருக்கிறாள்.”
பிறகு மாமி எதுவும் கேட்கவில்லை.
“நீங்க எந்த ஊருக்குப் போறீங்க?” நான் மாமியிடம் கேட்டேன்.
“ராமேஸ்வரம்.”
“அங்கே யார் இருக்காங்க?”
“என்னுடைய மகள்.”
மேற்கொண்டு என்ன கேட்பது என்று எனக்குப் புரியவில்லை. இதுவே அம்மாவாக இருந்தால் உங்க மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்? சம்பளம் எவ்வளவு என்று கேட்பாளோ என்னவோ. எனக்கு எதுவும் கேட்கத் தோன்றவில்லை.
என் யோசனைகள் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தன. நான் போகும் போது அத்தை என்ன செய்து கொண்டிருப்பாள்?
நான் நேராக வாசலில் நின்று “அத்தை!” என்று குரல் கொடுப்பேன். அத்தை கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு வருவாள். குழந்தைகள் கூட்டமாக முன் அறையில் வந்து நிற்பார்கள். எல்லோரும் வியப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சினிமாவில் வருவதுபோல் அத்தையின் கால்களைத் தொட்டு வணங்குவேன். “நான்தான் மீனாட்சி, உங்க அண்ணாவின் மகள்” என்பேன்.
“அடி கண்ணே!” என்று என் தோள்களைப் பற்றி எழுப்பி கன்னங்களை வழித்து திருஷ்டி முறிப்பாள். ரயில் ஆட்டத்துடன் என் எண்ணங்கள் அலையாய் எழும்பிக் கொண்டிருந்தன.
“உங்க அப்பா என்னவாக இருக்கிறார்?”
மாமி கேட்ட கேள்விக்கு இந்த உலகிற்கு வந்தேன். “லாயராக இருக்கிறார்.”
“பெயர்?
“ஆனந்தராவ்.”
அதற்குப் பிறகு மாமி பல கேள்விகள் கேட்டாள். பொறுமையாக பதில் சொன்னேன். சற்று தொலைவில் ம•ப்ளரை கழுத்தில் சுற்றிக் கொண்டு உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த பெரியவரை காண்பித்து “அவர்தான் எங்க வீட்டுக்காரர். அவருக்கு உங்க அப்பாவை நன்றாகவே தெரியும். ஒரு தடவை உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்திருக்கிறார்” என்றாள்.
“அப்படியா?” என்றேன்.
அப்பாவுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. ஆனால் நிறைய பேரை தெரியும். பரோபகாரியாக இருக்கும் அப்பாவுக்கு தெரிந்தவர்கள், நலம் விரும்பிகள் நிறைய பேர் இருப்பதில் வியப்பு எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் அப்பாவைக் கடவுளுக்குச் சமமாக போற்றுவார்கள். உலகத்தாரின் பார்வையில் நல்ல மனிதராக அடையாளம் கண்டுகொள்ளப்படும் அவருடைய சுபாவம் அம்மாவின் பார்வையில் சாமர்த்தியக் குறைவாக தென்படும். இந்தக் காலத்தில் திறமை என்றால் என்ன? பெரிய பதவிகளை சம்பாதிக்கணும். சாமர்த்தியம் என்றால் என்ன? மற்றவர்களைத் துன்புறுத்தி பணம் சம்பாதிக்கணும். இந்த இரண்டும் இல்லாதவர்கள் அம்மாவின் பார்வையில் வெறும் தத்திகள்.
நான் இன்னாரென்று தெரிந்த பிறகு மாமி நிறைய பேசினாள். மாமியின் பெயர் பட்டம்மாள். அக்கம் பக்கத்தில் எல்லோரும் பட்டா மாமி என்று அழைப்பாளர்களாம். கணவர் ஸ்டேட் பாங்க் ஆ•ப் இந்தியாவில் காஷியராக இருக்கிறார். ஒரே மகளாம். ராமேஸ்வரத்தில் இருக்கிறாள். மாப்பிள்ளை வருடத்திற்கு ஒரு முறை கூட மனைவியைப் பிறந்த வீட்டுக்குப் பத்து நாள் தங்குவது போல் அனுப்பி வைக்க மாட்டானாம். அதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இவர்களே போய் பார்த்துவிட்டு வருவார்களாம். மாமி தங்களுடைய வீட்டு விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். மாமியிடம் பேச்சுத் திறமை இருந்தது. எதிராளிக்கு சலிப்பு தட்டாமல் பேசக்கூடிய சாமர்த்தியம் இருந்தது. போர் அடிக்கும் என்று நினைத்திருந்த நேரம் சீக்கிரமாகக் கழிந்துவிட்டது. எனக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மாமி நகர்ந்துகொண்டு என்னை படுத்துக் கொள்ளச் சொன்னாள். படுத்ததும் உறங்கி விட்டேன்.
விடியற்காலை வேளையில் தஞ்சாவூர் ஸ்டேஷன் வரப் போகிறது என்று மாமி என்னை எழுப்பிவிட்டாள். ரயில் பிளாட்•பாரத்தில் வந்து நின்றது. மாமி தன்னுடைய முகவரியை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தாள். பத்து நாட்களுக்குப் பிறகு தான் சென்னைக்குத் திரும்புவதாகவும், கட்டாயம் தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும் திரும்பத் திரும்பச் சொன்னாள். கட்டாயம் வருவதாக வாக்குறுதி தந்தேன். அங்கே ரயில் கொஞ்ச நேரம் நிற்கும் என்பதால் மாமி, மாமா எனக்கும் சேர்த்து இட்லி காபி வரவழைத்து என்னை சாப்பிடச் சொன்னார்கள். மாமா ரயில்வே போர்டரை அழைத்து என் பெட்டி படுக்கையை ஒப்படைத்தார். மாமியிடம் விடை பெற்றுக்கொண்டேன். போர்டரின் பின்னாலேயே நடந்து போய்க் கொண்டிருந்த நான் என்னையும் அறியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தேன். மாமி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். விடைபெற்றுக் கொள்வது போல் கையை உயர்த்தி அசைத்தேன். மாமியும் கையை அசைத்தாள். ஊருக்குத் திரும்பிய பிறகு மாமியின் நினைவு எனக்கு இருக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்தக் காட்சி மட்டும் என் இதயத்தில் சாசுவதமாகப் பதிந்திருக்கும்.
என் பெட்டி படுக்கையைத் தூக்கி வந்த போர்டர் நல்லவனாக இருப்பான் போலும். பஸ்ஸ்டாண்ட் போவதற்கு ரிக்ஷாவை தானே அழைத்து பேரம் பேசினான். அதற்கு நன்றி தெரிவிப்பது போல் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலிக்கு இரண்டு ரூபாய் சேர்த்துக் கொடுத்தேன். மலர்ந்த முகத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு “ஜாக்கிரதையாக அழைத்துப் போ” என்று ரிக்ஷாக்காரனை எச்சரித்தான். ரிக்ஷா வேகமாக போகத் தொடங்கியது. ஊரு முழுவதும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. சாலையில் மக்கள் நடமாட்டம் இன்னும் தொடங்கவில்லை. ரிக்ஷாக்காரன் பஸ்ஸ்டாண்டிற்குக் கொண்டு போய் சேர்த்தான்.
ரிக்ஷாவை விட்டு இறங்கியதும் கூலியாட்கள் சூழ்ந்து கொண்டார்கள். நான் போக வேண்டிய ஊரின் பெயரைச் சொன்னதும் ஒருத்தன் “பஸ் ரெடியாக இருக்கு. சீக்கிரம் வாங்கம்மா” என்று சொல்லிக் கொண்டே சாமான்களைத் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தான். ரிக்ஷாக்காரனிடம் பேரம் பேசியதைவிட ஒரு ரூபாய் கூடவே கொடுத்தேன். ஆனால் ரயில்வே போர்டரைப் போல் இவன் முகம் மலரவில்லை. மேலும் ஒரு ரூபாய் கொடுப்போமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே “வாங்கம்மா. பஸ் கிளம்பப் போகிறது” என்று கூலி சத்தமாகக் குரல் கொடுத்தான். என் எண்ணத்தை கைவிட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தேன். பஸ்ஸில் ஏறத்தாழ எல்லா இடங்களும் நிரம்பியிருந்தன. ஓரிரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. “மெலட்டூருக்கு போகணும். எங்கே இறங்கணுமோ நீங்கதான் சொல்லணும்.” கண்டக்டரிடம் சொன்னேன். “சரி” என்றார் கண்டக்டர். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே இருந்த சீட்டில் நார்மடி புடவையும், நெற்றியில் வீபூதி கீற்றும் அணிந்திருந்த பாட்டி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். பாட்டி போன்ற பெரியவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாமல் எழுந்து கொண்டு பாட்டிக்குப் பக்கத்தில் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன். பாட்டி திரும்பி என்னைப் பார்த்தாள். நான் சிரிக்கப் போனேன். பாடி நெற்றியைச் சுளித்துவிட்டு எங்கே நான் தன் மீது பட்டுவிட்டால் தீட்டாகி விடுமோ என்பது போல் சற்று நகர்ந்து உட்கார்ந்தாள். பாட்டியின் இந்த செய்கை என் மனதில் சுருக்கென்று தைத்தது. தலையைத் திருப்பிக்கொண்டு மற்ற பயணிகளை பார்வையிடத் தொடங்கினேன். அவர்களுக்கு நடுவில் நான் வேறு நாட்டிலிருந்து வந்தவள்போல் வித்தியாசமாக தென்பட்டுக் கொண்டிருந்தேன்.
எல்லோரும் ஆர்வத்துடன் ஏதோ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பஸ் புறப்பட்டது. கொஞ்சம் தூரம் வந்ததோ இல்லையோ கண்டக்டர் பெல்லை அடித்து வண்டியை நிறுத்தினார். யாரோ ஒரு ஆசாமி ஓடிந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டான்.
“என்ன அவசரம்? நல்ல வேளை, பிடி கிடைத்து விட்டது. இல்லாவிட்டால் கீழே விழுந்திருப்பீங்க.” கண்டக்டர் உரிமையுடன் கடிந்துகொண்டே டிக்கெட்டைக் கிழித்து அவனிடம் கொடுத்தார். “பரவாயில்லை. எனக்குப் பழக்கம்தான்” என்று சொல்லிக்கொண்டே முன்னால் போகப் போனவன் திடீரென்று என் அருகில் நின்றுகொண்டு என்னையே பார்க்கத் தொடங்கினான்.
யதேச்சையாக நிமிர்ந்து பார்த்த எனக்கு எரிச்சலாக இருந்தது. அவன் பார்வை என்னை விழுங்கி விடுவது போல் இல்லை என்றாலும் அதில் இருந்த ஆச்சரியம், ஆர்வம் என்னுள் எரிச்சலை ஏற்படுத்தின. சட்டென்று பேக்கைத் திறந்து கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். இதை அணிந்து கொள்வதில் ஒரு சௌகரியம் இருந்தது. வெளியே வெயிலாக இருந்தாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பதோடு எதிரில் இருப்பவர்களை தலை முதல் கால் வரையில் விருப்பம் போல் பார்வையிடலாம். என் எதிரே இருந்த அந்த ஆசாமி ஜிப்பா, பைஜாமா அணிந்திருந்தான். பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள் போலவே அவனும் இருந்தான். அவனிடம் எனக்கு எந்த தனித்தன்மையும் தெரியவில்லை.
பஸ் மறுபடியும் புறப்பட்டது. நான் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினேன். தமிழ்நாட்டு மக்களின் ஆசார விவகாரங்களை, சமுதாயப் போக்கினைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இது போன்ற கிராமங்களுக்குப் போய் இரண்டு நாட்கள் தங்கினால் போதும். ஆண்கள் எல்லோரும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தார்கள். உடைகள் விஷயத்தில் அவர்களுக்கு அவ்வளவாக சிரத்தை இருப்பது போல் தெரியவில்லை. இங்கே இருக்கும் பெண்களுக்கு நகைகள் மீது மோகம் அதிகம் போலும். கழுத்திலும், கைகளிலும் நிறைய நகைகளை அணிந்திருந்தார்கள்.
இரவு முழுவதும் சரியாகத் தூங்காத எனக்கு ஜன்னல் வழியாக வீசும் குளிர்ந்த காற்று களைப்பை நீக்குவது போல் இருந்தது. கண்ணுக்கும் குளிர்ச்சி தருவதுபோல் சாலையின் இருபுறமும் நெற்பயிர்கள், காய்கறி தோட்டங்கள், பச்சை பசேலென்று சூழ்நிலை ரம்மியமாகஇருந்தது.
வெளியில் எவ்வளவு நிம்மதியாகத் தோன்றினாலும் உள் மனதில் ஏதோ சஞ்சலனம், ஓட்டப் பந்தயக்காரன் தான் போய்ச் சேர வேண்டிய இடம் நெருங்க நெருங்க எவ்வளவு பதற்றம் அடைவானோ என் நிலைமையும் அதே போல் இருந்தது.
நான் இப்படி ஊருக்குப் போவது அம்மாவுக்குத் தெரிந்துவிட்டால்? தெரியட்டுமே. முன்னைப் போல் நான் பயப்பட மாட்டேன். நான் இப்போ கிருஷ்ணவேணி ஆட்டி வைக்கும் பொம்மை இல்லை. லாயர் ஆனந்தராவின் ஒரே மகள் மீனாவாக்கும். இப்படி நினைத்துக் கொண்டதும் எனக்கென்று தனித்தன்மை ஏதோ வந்துவிட்டது போல் தோன்றியது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். பஸ் மறுபடியும் நின்றது.
“இதுதான் நீங்க இறங்க வேண்டிய ஸ்டாப். இறங்கிக் கொள்றீங்களா.” மரியாதை கலந்த குரலில் சொன்னார் கண்டக்டர்.
பெட்டி படுக்கையுடன் நான் இறங்கிக் கொண்டதும் பஸ் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கிளம்பிப் போய் விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகி கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டது.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்