தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்
email id tkgowri@gmail.com
கிருஷ்ணனை தோட்டத்தில் எனக்காக காத்திருக்கச் சொன்னேனே ஒழிய, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அங்கே எப்படிப் போவது என்று புரியவில்லை. கிருஷ்ணன் அரைமணி நேரத்திற்கு முன்னால் அத்தையிடம் “தோட்டத்திற்குப் போய் வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு போனது காதில் விழுந்தது. அவன் அப்படிச் சொன்னது அத்தையிடம் சொல்லிக் கொள்வதற்காக இல்லை. என்னை எச்சரிப்பதற்காக. ஏன் என்றால் சாதாரணமாக கிருஷ்ணன் வெளியே போகும் போது போய் வருகிறேன் என்று சொல்லுவானே ஒழிய எங்கே போகிறேன் என்று சொல்லும் வழக்கம் இல்லை.
ராஜியின் வயதை ஒற்ற பெண்கள் சிலர் அவளைப் பார்க்க வந்திருந்தார்கள். ராஜி என் கையைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. அவர்கள் எல்லோரும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது எழுந்து கொள்ள முற்பட்டேன். ராஜி கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.
சுந்தரி வந்தவர்களுக்கு மந்தார இலையில் காராபூந்தியும் லட்டுவும் கொடுத்துக் கொண்டிருந்தாள். என்னிடம் கொடுக்கப் போன போது வேண்டாமென்று மறுத்துவிட்டேன்.
“ராஜி! உள்ளே போய் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்கிறேன். தலையை வலிக்கிறது” என்றேன்.
ராஜி என் கையை விட்டுவிட்டாள். “போய் படுத்துக்கொள். தலையை ரொம்ப வலிக்கிறதா? சாரிடான் போட்டுக் கொள்கிறாயா?” பதற்றத்துடன் கேட்டாள்.
“மாத்திரை எதுவும் தேவையில்லை. சற்றுநேரம் படுத்தால் தானே குறைந்துவிடும்” என்று எழுந்து கொண்டேன்.
அங்கிருந்து வெளியேற முடிந்ததற்கு நிம்மதியாக இருந்தது. சூட்கேஸிலிருந்து தோட்டத்திற்கு சம்பந்தப்பட்ட பேப்பர்களை எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டேன். ராஜி மற்ற பெண்களுடன் கொல்லையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அத்தையும் அங்கேதான் இருந்தாள். மற்ற உறவினர்கள் சிலர் அங்கே இங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
சுந்தரி மட்டும் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் பார்வை ஒவ்வொரு வினாடியும் என்னை வேட்டையாடாமல் இருந்திருந்தால், அத்தை மற்றும் ராஜியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியிருப்பேன். ஒருக்கால் நான் தோட்டத்திற்கு போகிறேன் என்று சொன்னால் “நானும் வருகிறேன்” என்று சுந்தரி புறப்பட்டு விடுவாளோ என்று பயமாக இருந்தது.
வீட்டை விட்டு வெளியே வந்ததும் வேகவேகமாக தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். எந்த விதமான ஆடம்பரங்களும் இல்லாத அந்த பட்டிக்காட்டில் கையில் பேக்கை மாட்டிக்கொண்டு நடந்து போவது எனக்கே பாந்தமாக இருக்கவில்லை.
நடுவில் யார் வீட்டிலிருந்தோ வெளியேறிய மங்கம்மா எதிரே வந்தாள்.
“என்னடீ பெண்ணே! இந்த நேரத்தில் கிளம்பியிருக்கிறாயே? எங்கே?” என்று கேட்டாள்.
“தோட்டத்திற்குதான். சும்மா பார்த்துவிட்டு வரலாம்னு.” நிற்காமல் நடந்து போய்க் கொண்டே பதில் சொன்னேன்.
ஒற்றையடி பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்த எனக்கு தொலைவில் தோட்டமும், மரங்களும் தென்பட்டன. அந்த தோட்டத்தை, அதன் சுற்றிலும் இருந்த முள் வேலியைப் பார்த்ததும் என் இதயம் வேகமாக துடித்தது. இப்போ இந்த தோட்டம் கிருஷ்ணனுக்கு மட்டுமே சொந்தம். வேறு யாருக்கும் அதன் மீது அதிகாரம் இல்லை. அந்த நினைப்பே எனக்கு சந்தோஷமாக இருந்தது.
தோட்டத்தில் அடியெடுத்து வைக்கும் போதே கிருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்று கண்ணாலேயே தேடினேன். தொலைவில் அரசமரத்தடி சுற்றிலும் கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்திருந்தான். அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்திருந்ததால் என் வருகையை உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை.
மெதுவாக ஓசைப்படுத்தாமல் அடிமேல் அடிவைத்து அவனுக்கு பின்னால் நெருங்கி வந்தேன். திடீரென்று குரல் கொடுத்து அவனை திடுக்கிடச் செய்ய வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் அருகில் போன பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவனுக்கு எதிரே சாமந்திப் பூக்கள் நிரம்பி கூடை இருந்தது. அதிலிருந்த பூக்களை எடுத்து கையிலிருந்த கத்தரிக்கோலால் அதனுடைய காம்புகளைச் சீராக கத்தரித்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது போலும். எப்போதும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பான்.
நான் பேக்கை திண்ணையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு கைகளை நீட்டி அவன் கண்களை மூடினேன்.
ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கிருஷ்ணன் திடுக்கிட்டதை நான் உணராமல் இல்லை. என் கைகளை தொட்டுக் கொண்டே “யாரு?” என்றான்.
“சொல்லு பார்ப்போம்” என்றேன் குரலைத் தாழ்த்தி.
நான் தான் என்று தெரிந்தாலும் தெரியாதது போல் முழங்கை வரை தடவிப் பார்த்தான். பிறகு சிரித்துக்கொண்டே “வேறு யாரு? இந்தத் துணிச்சல், என்னிடம் இந்த உரிமை வேறு யாருக்கு இருக்கு?” என்றான்.
“குணாதிசயங்களை சொன்னால் போறாது. பெயரைச் சொல்லிதான் ஆகணும்.”
“சொல்லவில்லை என்றால்?” தூண்டிவிடுவது போல் கேட்டான்.
ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “கைகள் எடுக்கப்பட மாட்டாது” என்றேன்.
“நல்ல க¨தான். இன்று இரவு மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பதால் விட்டுவிட்டேன். இல்லாவிட்டால் உன்னுடன் பந்தயம் வைத்துக் கொண்டு இரவு முழுவதும் உன்னை இங்கேயே உட்கார வைத்திருப்பேன். இப்போ சாத்தியம் இல்லை. சரி… சொல்லிவிடுகிறேன். ச..த்ய…பா… மா!”
“அசல் பெயர் சொல்லணும். செல்லப்பெயர், பட்டப்பெயர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.”
“அசல் பெயரே அதுதான். குழந்தை பிறந்ததும் பெயர் வைப்பது நம் குடும்பங்களில் வழக்கமாகிவிட்டது. ஆனால் வளர்ந்த பிறகு குணத்தை, சுபாவத்தை அறிந்த பிறகு பெயர் வைக்கணும். மூக்கின் மீது கோபம், மென்மையான மனம், குறும்பு கலந்த பேச்சு எல்லாம் கொண்ட பெண்மணி நீதான்.”
“இந்த மீனா பாராட்டுகளைக் கண்டு மயங்கமாட்டாள். அதை முதலில் நீ தெரிந்துகொள்ளணும்.”
“பார்த்தாயா! உன் பெயரை நீயே சொல்லிவிட்டாய்.” கலகலவென்று சிரித்தான்.
அந்தச் சிரிப்பு என் மனதில் கிச்சு கிச்சு மூட்டி விட்டது போல் இருந்தது. என்னையும் அறியாமல் அவன் தலையை மார்போடு அணைத்துக் கொண்டேன்.
“என்ன இது?” என்றான்.
நான் சட்டென்று அவன் கண்களை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு தோள்களைப் பிடித்து தொலைவுக்கு தள்ளி விட்டேன். “நீ ரொம்ப கெட்டவன். எதிராளி சொன்னதை அவர்களுக்கே திசை திருப்புவதில் மன்னன். உன்னிடமிருந்து விலகியிருப்பது நல்லது.” புடவையில் இல்லாத தூசியை தட்டிக் கொண்டே சொன்னேன். என்னையும் அறியாமல் நான் செய்த காரியத்தை அவன் உணர்ந்து விட்டான் என்ற உண்மை எனக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்தேன்.
அதற்குள் பூக்கூடைகளை எடுத்துச் செல்ல ஆட்கள் வந்து விட்டார்கள். கிருஷ்ணன் ஒரே ஒரு கூடையை வைத்துக் கொண்டு மற்ற கூடைகளை அவர்களுடைய தலையில் ஏற்றிவிட்டான். அவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து அவர்களிடம் தந்தான். நான் பேக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். தான் இரண்டு நாட்கள் வரையில் தோட்டத்திற்கு வரப்போவதில்லை என்றும், அந்த இரண்டு நாட்களில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ கிருஷ்ணன் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஆகட்டும் சாமி.”
“அப்படியே செய்கிறோம்.” அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து தொலைவாக பூஞ்செடிகள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டேன். எதிரே சாமந்தி செடிகளின் மனை இருந்தது. மலர்ந்தும் மலராத பூக்களுடன் அந்த இடம் முழுவதும் மஞ்சளும் பச்சையுமாக கண்ணுக்குக் குளுமையாகக் காட்சியளித்தது.
சுற்றிலும் பார்வையிட்டேன். உட்கார்ந்து கொள்வதற்கு தோதான இடம் தென்படவில்லை. சற்று தொலைவில் வைக்கோலை காயப் போடுவதற்காக பிரித்துப் போட்டிருந்தார்கள். செருப்பை ஓரமாக விட்டுவிட்டு வைக்கோல் மீது உட்கார்ந்து கொண்டேன்.
என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. போர் நடக்கும் போது ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் துணிந்து ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டிய தளபதியின் நிலையில் இருந்தேன்.
தோட்டத்தைப் பற்றி கிருஷ்ணனிடம் தெரிவிப்பது நான் நினைத்த அளவுக்கு சுலபமான காரியம் இல்லை. முடிந்த வரையில் விளையாட்டாக பேசி, தமாஷ் செய்து அப்பாவியைப் போல் மெதுவாக விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
கிருஷ்ணன் ஆட்களை அனுப்பிவிட்டு நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். அவன் கைகளில் இரண்டு சாமந்தி பூக்கள் இருந்தன.
“பூ வேண்டுமா மீனா?” என்றான்.
வேண்டும் என்பது போல் தலையை அசைத்தேன். எடுத்துக் கொள் என்பதுபோல் கையை நீட்டினான்.
“நீயே வைத்துவிடு.” அவன் பக்கம் தலையைத் திருப்பினேன்.
“நானா? ஊஹ¤ம்” என்றான்.
“மாட்டாயா? ஏன்?”
அவன் பதில் சொல்லவில்லை. நான் கண்களை அகல விரித்துப் பார்த்தேன். “அட ராமா! என்னைத் தொட்டால் தோஷம் ஏதாவது ஒட்டிக்கொள்ளுமா? இல்லை உன் சுந்தரிக்கு அநியாயம் செய்து விட்டாற்போல் ஆகிவிடுமே என்றா?”
தூண்டிவிடுவது போல் நான் பேசிய பேச்சை அவன் புரிந்த கொண்டுவிட்டான் போலும். பதில் பேசவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தான்.
“போகட்டும். நீ தலையில் வைக்க மாட்டேன் என்றால் பரவாயில்லை. எனக்கு வேண்டாம்” என்றேன்.
நான் எதிர்பார்த்தது போல் எடுத்துக் கொள்ளச் சொல்லி அவன் வற்புறுத்தவும் இல்லை. தலையில் வைக்கவும் இல்லை. அந்தப் பேச்சு அத்துடன் முடிந்து விட்டது போல் வேறு பக்கம் தலையைத் திருப்பினான். “ஏதோ சொல்லப் போவதாகச் சொன்னாயே? சீக்கிரமாக சொல்” என்றான்.
“நீ இப்படி அவசரப்படுத்தினால் அசலுக்கே சொல்ல மாட்டேன்.”
அவன் பின்னால் திரும்பினான். மாலை நேரத்து வெயில் எங்கும் பரவியிருந்தது. மஞ்சள் நிற வெயிலின் வெளிச்சத்தில் என் எதிரே நின்றிருந்த கிருஷ்ணனுடைய உருவம் ரொம்ப கம்பீரமாக, பார்க்கத் தெவிட்டாததாக இருந்தது.
என்ன நினைத்துக்கொண்டானோ என்னவோ, வந்து என் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான். “உன்னுடன் இதுதான் பிரச்னை. ஒரு வார்த்தை பேசினால் குறைவு, இரண்டு பேசினால் அதிகம் என்பாய். சரி… உன் இஷ்டம் வந்த போதே சொல்லு” என்றான்.
நான் உடனே எதுவும் சொல்லவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை.
பேக்கை மடியில் வைத்துக் கொண்டு கைகளை முழங்காலை சுற்றிலும் பிணைத்தக் கொண்டு தோட்டத்தை பரிசீலித்தபடி உட்கார்ந்திருந்தேன்.
கிருஷ்ணன் வலது முழங்கையை பின் பக்கமாக தரையில் ஊன்றி சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தான். ஆழ்ந்த யோசனையில் இருப்பதுபோல் தென்பட்டான். என் கூந்தலை அலங்கரித்து இருக்க வேண்டிய சாமந்தி பூக்கள் அவன் கைகளில் இதழ் இதழாக பிரிந்து கொண்டிருந்தன.
“அய்யோ! எதற்காக பூவை பிய்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றேன்.
“நீதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே?”
“வேண்டாம் என்று நான் சொன்னேனா?”
“ப்ளீஸ் மீனா! என்னை அலைக்கழிக்காதே. உனக்கு புண்ணியம் கிடைக்கட்டும். விஷயம் என்னவென்று சீக்கிரமாக சொல்லு. வீட்டிற்குப் போகணும்.”
“சரி, சொல்லி விடுகிறேன். நீ கண்களை மூடிக்கொள்.” சீரியஸாக சொன்னேன்.
“நானா? எதுக்கு?”
“நல்ல பிள்ளையாக சொன்னபடி கேட்டால் வேலை சீக்கிரமாக முடியும். குறுக்கே கேள்விகள் கேட்டால் தாமதம் ஆகும். பிறகு உன் விருப்பம்.”
கிருஷ்ணன் ஒரு நிமிடம் ஆர்வத்துடன் என் மனதில் இருப்பதை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் கண் இமைக்காமல் என் முகத்தை பார்த்தான்.
நானா அவனுக்குப் பிடி கொடுக்க போகிறவள்? முறுவலுடன் பார்தேன். கிருஷ்ணன் தன் கையில் இருந்த சாமந்தி இதழ்களை என் தலையில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டான்.
“என்ன இது?” என்றேன், தோள் மீதும், மடியிலும் விழுந்த இதழ்களை உதறிக்கொண்டே.
“கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைத்து என்னை மணமகன் ஆக்கினாய் இல்லையா? மணமகன் யார் தலையிலாவது அட்சதை போட வேண்டாமா?”
அவன் சொன்ன தோரணைக்கோ இல்லை அந்த செயலுக்கு பின்னால் இருந்த உணர்வுக்கோ என் கன்னங்கள் சிவந்தன.
“நீ என் கண்களை நேராகப் பார்த்தாய் என்றால் இதுபோல் ஏதாவது குறும்பு வேலை செய்யத் தோன்றும். இனிமேல் அப்படிப் பார்க்காதே” என்றான்.
“சரிதான். என்னையே குற்றவாளியாக்கி விட்டாயா?”
“இல்லை மீனா! உண்மையாகத்தான் சொல்கிறேன். உன்னைப் பார்த்தாலே என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா?”
முறுவலுடன் தெரியாது என்பதுபோல் தலையை அசைத்தேன்.
அவன் கண்களில் இனம் புரியாத வேதனை பளபளத்தது. “உனக்கு எப்படி தெரியும்? போகட்டும் விடு. வந்த விஷயத்தை சொல்லு. என்னை இங்கே வரச்சொன்ன காரணம் என்ன? சொல்வதற்கு விஷயம் ஏதாவது இருக்கா? இல்லை சும்மாதானா?” சந்தேகத்துடன் பார்த்தான்.
“வெட்டிப் பேச்சு ஒரு நாளும் என்னிடம் கிடையாது. கண்களை மூடிக்கொள்ள சொன்னால் நீ மூடிக்கொள்ளவில்லை. நான் என்ன செய்யட்டும்?”
“சரி சரி. குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.” கிருஷ்ணன் நல்லபிள்ளை போல் கண்களை மூடிக் கொண்டான்.
“கைகளை முன்னால் நீட்டு” என்றேன்.
நீட்டினான்.
“இரண்டு உள்ளங்கைகளை விரித்தபடி சேர்த்துக் காட்டு.” ஆணையிடுவது போல் சோன்னேன். என் இதயத்துடிப்பு அதிகரித்தது.
“பவதி பிட்சாந்தேஹி என்று கூட சொல்லணுமா?” சிரித்துக் கொண்டே உள்ளங்கைகளை சேர்த்தபடி காண்பித்தான்.
நான் சட்டென்று பேக்கை திறந்து பேப்பர்களை எடுத்து அவன் கையில் வைத்தேன்.
கையில் பேப்பர் தட்டுப்பட்டதும் திடுக்கிட்டவனாக கண்களை திறந்தான். “என்ன இது?”
“பிரித்துப் பார். உனக்கே புரியும்.”
அவன் எடுத்துப் பார்த்தான். ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கியவனின் நெற்றிப் புருவம் முடிச்சேறியதை, கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய முகம் களை இழந்ததை நான் கவனித்து விட்டேன். முழுவதும் படித்த பிறகு அவன் முகம் செக்கச் சிவந்து விட்டது. “யாருடைய வேலை இது?” நேராக என்னைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“என்னுடையதுது¡ன்.” பெருமையுடன் பார்த்துக் கொண்டே சொன்னேன். விளையாட்டாக பேசுவது போல் பேசி காரியத்தை சுமுகமாக முடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
“யாரைக் கேட்டு செய்தாய்?”
“யாரைக் கேட்கணும்? மாமன் மகள் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமைகளும் இருப்பதாக நீதான் சொல்லியிருக்கிறாயே?”
கிருஷ்ணன் பதில் சொல்லவில்லை. கோபத்தையும், ஆவேசத்தையும் வலுக்கட்டாயமாக அடக்கிக் கொள்வது போல் தென்பட்டான். மற்றொரு தடவை காகிதங்களை புரட்டி வேகவேகமாக படித்தான்.
“எங்களுடைய பணத்தை வாங்கிக் கொள்ளக்கூடாது என்பதுதானே உன்னைடய சபதம்? அதனால்….” என் வாயிலிருந்த வார்த்தை இன்னும் முடியக்கூட இல்லை.
“அதனால்? என்னுடைய சபதத்தை முறியடித்து விட்டாயாக்கும்.” தீவிரமான குரலில் சொன்ன கிருஷ்ணன் காகிதங்களை என்மீது வீசி எறிவது போல் போட்டுவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- நீலத்தில் மனம் தோயும்போது…
- தனித்தில்லை
- மானுட பிம்பங்கள்
- அகோரி
- சாத்தான் படலம் !
- மலைகள்
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- சிரிக்கும் தருணங்கள் ….!
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- முள்பாதை 42
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- சிறகும், உறவும்!
- நட்பு
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- நானை கொலை செய்த மரணம்
- மூன்றாமவன்
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)