முள்பாதை39

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

பஸ்ஸை விட்டு நாங்கள் இறங்கும் போது சாமிகண்ணு எங்களுக்காகக் காத்திருந்தான். கீழே இறங்கியதும் ஆழமாக மூச்சு எடுத்துக் கொண்டேன். இரவு வேளையில் இது போன்ற வெட்ட வெளியை நான் என்றுமே பார்த்தில்லை. எங்கும் பரவியிருந்த நிலவின் வெளிச்சத்தில் காற்றுக்கு இலைகள் உரசும் சத்தம், சுவற்றுக் கோழிகள் எழுப்பும் ஒலி இரண்டும் சேர்ந்து வித்தியாசமான இசையைப் போல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இங்கிருந்து வீட்டுக்குப் போவதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த நேரத்திற்குள் கிருஷ்ணனிடம் நிலத்தைப் பற்றிச் சொல்லி விடவேண்டுமென்று முடிவு செய்தேன். வீட்டுக்குப் போய்விட்டால் திருமணச் சந்தடியில் அதற்கான நேரமும், வாய்ப்பும் கிடைக்காமல் போகலாம். நாங்கள் வண்டியை நெருங்கும் போது சாமிகண்ணு சொன்னான்.
“சாமீ! குஞ்சம்மா மரத்தடியில் உட்கார்ந்து இருக்கிறாள். ஆஸ்பத்திரியிலிருந்து மகளை அழைத்துக் கிட்டு வந்திருக்கிறாள்.”
மரத்தடியிலிருந்து நடுத்தர வயதிலிருக்கும் பெண் ஒருத்தி தலையில் மூட்டையுடன் எங்களை நோக்கி வந்தாள்.
“என்ன குஞ்சம்மா! லக்ஷ்மியை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்து வருகிறாயா? அவளுக்கு இப்போ உடம்பு தேவலையா?” கிருஷ்ணன் விசாரித்தான்.
“என்ன செய்யட்டும் சாமி! வீடடில் குழந்தைகள் தனியாக இருக்காங்க. அங்கே ஆஸ்பத்திரியில் துணைக்கு யாரும் இல்லாமல் இருக்க மாட்டேன்னு லக்ஷ்மி ஒரே அழுகை. டாக்டரம்மாவிடம் கேட்டேன். பரவாயில்லை, வீட்டுக்கு அழைத்துப் போன்னு மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்தாங்க.”
“லக்ஷ்மி எங்கே?” கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான்.
“அதோ! மரத்தடியில் இருக்கிறாள்.”
“இந்தக் குளிர்காற்றில் வெட்ட வெளியில் உட்கார வைத்திருக்கிறாயா? வண்டி அங்கே வரட்டும். சாமிகண்ணூ! லக்ஷ்மியை ஏற்றிக் கொண்டு வா” என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணனைப் பார்த்ததும் மாடுகள் அடையாளம் கண்டு கொண்டு விட்டது போல் கழுத்து முன்னால் நீட்டின. கிருஷ்ணனும் மாடுகளின் முதுகில் தடவிக் கொடுத்தான்.
“எதுக்கு சாமி? வண்டியை மறுபடியும் திருப்புவானேன்? இங்கேயே அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு குஞ்சம்மா மரத்தடிக்குப் போனாள். குஞ்சம்மாளின் தோளில் சாய்ந்து கொண்டு பலவீனமான தோற்றத்தில், அடியெடுத்து வைக்கவும் சிரமப்பட்டுக் கொண்டு இளம் பெண் ஒருத்தி எங்களிடம் வந்தாள்.
சாமிகண்ணு மாடுகளின் கழுத்தில் கட்டிய கயிற்றை அவிழ்த்து விட்டான். வண்டியின் முன்பாகம் உயர்ந்து பின்பாகம் தரையைத் தொட்டது. குஞ்சம்மா மகளை ஜாக்கிரதையாக வண்டியில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொண்டாள்.
“என்ன ஆச்சு அந்தப் பெண்ணுக்கு?” தாழ்ந்த குரலில் கேட்டேன்.
“குழந்தை பிறந்து இறந்து விட்டது. பிரசவம் கஷ்டமானதில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள்.” கிருஷ்ணனும் தாழ்ந்த குரலில் பதில் சொன்னான்.
நான் அந்தப் பெண்ணின் பக்கம் பார்த்தேன். பதினெட்டு வயது இருந்தால் அதிகம். அதற்குள் கல்யாணம், குழந்தை பிறப்பு, இறப்பு எல்லாமே முடிந்துவிட்டன. இதுவரையில் அழகாகத் தென்பட்ட சூழ்நிலை திடீரென்று மாறிவிட்டது போல் இருந்தது.
அவர்கள் இருவரும் எங்களுக்கு இடைஞ்சம் ஏற்படுத்தி விட்டதற்கு சங்கடப் படுவதுபோல் அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டார்கள். நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வண்டியில் இன்னும் இடம் இருந்தது. ஆனால் கிருஷ்ணன் எங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொள்ளவில்லை. வண்டியுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.
குஞ்சம்மாள், லக்ஷ்மி இருந்ததால் கிருஷ்ணனிடம் நான் சொல்ல நினைத்த விஷயம் அப்படியே தங்கிவிட்டது. நான் எதிர்பார்த்ததை விட ஊர் சீக்கிரமாக வந்துவிட்டாற்போல் இருந்தது. ஊர் எல்லையை அடைந்ததும் குஞ்சம்மாவும், லக்ஷ்மியும் இறங்கிக் கொண்டார்கள். “வணக்கம் சாமி… வணக்கம் அம்மா!” குஞ்சம்மாள் விடைபெற்றுக் கொண்டாள்.
கிருஷ்ணன் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். நிலவின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது. ஏதோ சீரியஸாக யோசித்துக் கொண்டிருப்பதுபோல் கிருஷ்ணன் மௌனமாக இருந்தான்.
“என்ன யோசிக்கிறாய்?” என்று கேட்டேன்.
“ஒன்றுமில்லை.”
“உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் என்று நினைத்தேன்.”
“சொல்லு.”
கொஞ்சம் கூட ஆர்வமில்லாமல் அவன் கேட்ட தோரணைக்கு எனக்குக் கொஞ்சம் கோபம்கூட வந்தது. “இப்போ வேண்டாம். அப்புறமாக சொல்கிறேன்.”
உடனே சொல்லித்தான் தீரணும் என்று அவன் பிடிவாதம் பிடிக்கவில்லை. அவன் கேட்கா விட்டாலும் சொல்லிவிட வேண்டும் என்ற உத்வேகம் எனக்கும் இருக்கவில்லை. வீட்டின் முன்னால் வண்டி வந்து நின்றது. வண்டி வந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை போலும். யாரும் வெளியே வரவில்லை. கிருஷ்ணன் முதலில் இறங்கினான். பிறகு கைகொடுத்து என்னை இறக்கிவிட்டு உள்ளே போனான். நான் வண்டியை விட்டு இறங்கி கீழே போட்டிருந்த செருப்பை அணிந்துகொண்டு உள்ளே நுழையும் போது ராஜி ஓடி வந்தாள்.
“அண்ணீ!”
அவள் பார்வையில் இருந்த மகிமையோ இல்லை அவள் குரலில் வெளிப்பட்ட நெருக்கமோ தெரியாது. என்னையும் அறியாமல் இரு கைகளையும் நீட்டினேன். அடுத்த நிமிடம் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டிருந்தோம்.
“நீ… நீ வரமாட்டாய் என்றுதான் நினைத்தேன்.” அவள் கண்களில் நீர் தளும்பியதை கவனித்தேன்.
“வர மாட்டேன் என்று எப்படி நினைத்தாய்? அப்பா டெலிகிராம் வேறு கொடுத்திருந்தாரே?” என்றேன்.
“டெலிகிராம் வந்ததால் மதியம் முழுவதும் எதிர்பார்த்தோம். தனியாக வருகிறாய் என்பதால் நேரத்தோடு வந்து விடுவாய் என்று நினைத்தோம். எங்களுக்கு எப்படி தெரியும் உன்னை வரவேற்க இந்த துரையே சுயமாக தஞ்சாவூருக்குப் போயிருக்கிறான் என்று?” குற்றம் சாட்டுவது போல் சொன்னாலும் அவள் கண்களில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
அதற்குள் அத்தையும், அவள் பின்னால் ஐந்தாறு பெண்டுகளும் வந்தார்கள். கிருஷ்ணனைப் பார்த்ததும் அத்தை சொன்னாள். “என்ன கிருஷ்ணா? தாஞ்சாவூருக்குப் போயிருந்தாயா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே. நாளை காலையில் கல்யாணச் சடங்குகளைத் தொடங்கணும். உன்னைக் காணவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.”
“போகணும் என்று நானும் முதலில் நினைக்கவில்லையம்மா.” முணுமுணுத்தபடி சொல்லிவிட்டு கிருஷ்ணன் அங்கிருந்து போய்விட்டான். ராஜி அங்கிருந்த பெண்டுகளை “எங்க சித்தி… இது அத்தை… இது பெரியம்மா” என்ற உறவு முறையைச் சொல்லிவிட்டு அறிமுகப்படுத்தினாள்.
“வந்தவங்களை முதலில் கால் அலம்பிக் கொள்ளச் சொல்லு.” பின்னாலிருந்து குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன். ஏறத்தாழ எங்க வயதில் இருக்கும் பெண் ஒருத்தி சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த பக்கத்தில் வைத்தாள். நான் கேள்விக்குறியுடன் ராஜியின் பக்கம் பார்த்தேன்.
“எங்க அண்ணி சுந்தரி. அண்ணி! இது எங்க மாமாவின் மகள் மீனா.” ராஜி அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“குடிக்கத் தண்ணி வேண்டுமா?” பணிவு கலந்த குரலில் சுந்தரி என்னிடம் கேட்டாள். தேவையில்லை என்து போல் தலையை அசைத்தேன்.
சுந்தரியை பரிசீலிப்பது போல் தலைமுதல் கால்வரையில் பார்த்தேன். பார்க்க நன்றாகத்தான் இருந்தாள். ஒரே ஒரு குறை என்னவென்றால் பார்த்ததுமே கொஞ்சம் குள்ளம் என்று யாருக்குமே தோன்றும். சுண்ணாம்பு போன்று வெளுத்த நிறம். பூசினாற் போன்ற தேகவாகு. நெற்றியில் பெரிதாக வைக்கபட்டிருந்த குங்குமப்பொட்டு வயதுக்கு மீறிய கம்பீரத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
ராஜியின் கையைப் பற்றிக் கொண்டு உள்ளே சென்றேன். வீட்டின் சூழ்நிலையே மாறிவிட்டாற்போல் இருந்தது. வீட்டின் முன்னால் பந்தல் போட்டு தரையில் புதிய பாய்களை விரித்திருந்தார்கள். அவற்றின் மீது ஏறத்தாழ இருபது பேர் வரிசையாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இந்தக் கோடியில் ஒன்றும், மறுகோடியில் ஒன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. கொல்லையில் இருந்த கத்தரி, தக்காளி செடிகளை எடுத்துவிட்டு தரையை சமனப்படுத்தியிருந்தார்கள். ஒரு ஓரமாக பெரிய விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. சமையல்காரர் சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
கொல்லை கதவுக்குப் பக்கத்தில் சாய்வு நாற்காலியில் வயதான பெரியவர் ஒருத்தர் அமர்ந்திருந்தார். ராஜி அவரை சின்ன தாத்தா என்று அறிமுகப்படுத்தினாள். கிருஷ்ணன் அவருக்குப் பக்கத்தில் ஸ்டூலில் அமர்ந்தபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். வீடு முழுவதும் வித்தியாசமான மணம் பரவியிருந்தது. பச்சை தென்னங்கீற்றுகளில் வாசனை, வீட்டுக்கு புதிதாக அடித்த சுண்ணாம்பின் நெடி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பின் மணம் எல்லாமாகச் சேர்ந்து திருமணத்திற்கே உரிய சூழ்நிலையை உருவாக்கியிருந்தன.
“குளிக்கிறாயா?” ராஜி கேட்டாள்.
“வேண்டாம்.”
அதற்குள் ராஜியை யாரோ அழைத்தார்கள். “ஒரு நிமிஷம்… வந்துவிட்டேன்.” என்கையை விட்டுவிட்டு ராஜி உள்ளே ஓடினாள். உறவினர் நிறையபேர் வந்திருந்தார்கள். நாளை மறுநாள் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு இப்பவே வருவானேன்? இவ்வளவு பேருக்கு சாப்பாடு, மற்ற ஏற்பாடுகளைச் செய்ய செலவும் அதிகமாகும் இல்லையா என்று தோன்றியது.
சற்று நேரம் கழித்து கிருஷ்ணன் பெட்டியைத் திறந்து துணிமணிகளை எடுத்து எல்லோருக்கும் காண்பித்தான். ராஜிக்கு புடவைகள் பிடித்திருந்தன.
“எல்லாம் உங்க அண்ணியின் செலக்ஷன்தான்” என்றான் கிருஷ்ணன்.
நான் அவனை முறைத்தபடி பார்த்தேன். நட்பு கலந்த முறுவல் அவன் இதழ்களில் மலர்ந்தது.
எல்லோரும் புடவைகளை பிரித்துப் பார்த்தார்கள். டிசைனும், தரமும் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். “சுந்தரி! இங்கே வந்து புடவைகளைப் பார்த்துவிட்டு போ.” அத்தை தனிப்பட்ட முறையில் அழைத்தாள்.
“இதோ வருகிறேன்” என்று குரல் கொடுத்தாளே ஒழிய உடனே வரவில்லை.
நானும் வந்தது முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுந்தரி எல்லோருடனும் சேர்ந்து உட்கார்ந்து கொள்ளவில்லை. அனாவசியமாக வெட்கப்படவோ, ஒதுங்கியிருக்கவோ இல்லை. பம்பரமாக சுழன்றபடி எதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தாள். சமையல்காரருக்கு வேண்டியதைத் தானே எடுத்துத் தந்தாள். தனக்குத் தெரியாதவற்றை அத்தையிடம் கேட்டுக் கொண்டாள். வீட்டில் அவள் உரிமையாகப் பழகும் விதத்தை, பொறுப்பாக வேலைகளைச் செய்யும் தோரணையைப் பார்த்தால் இந்த வீட்டுக்கு வரப்போகும் மருமகள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். திருமணம் முடிந்து பல நாட்களாகி, பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கும் மனுஷி என்றுதான் நினைப்பார்கள். அங்கே உட்கார்ந்திருந்த ஓரிரு பெண்டுகள் மும்மமுரமாக வேலை செய்தபடி வீட்டில் நடமாடிக் கொண்டிருந்த சுந்தரியைப் பார்த்து “வீட்டு வேலைகள் தெரிந்த பெண்ணாக இருக்கிறாள். கமலா கொடுத்து வைத்தவள்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. நான் எதிர்பார்த்தது போல் சுந்தரி தோற்றத்தில் சுமாராக இல்லாமல் எங்கள் எல்லோரையும் போல் இருந்தது எனக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.
இங்கே வரும் வரையில் ஆர்வத்துடன் இருந்த எனக்கு, இங்கே வந்த பிறகு ஏனோ அவ்வளவு உற்சாகமாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் வீட்டிற்கு வந்திருக்கும் முன்பின் அறியாத உறவினர்களின் கூட்டமாக இருக்கலாம். இல்லை கிருஷ்ணனை முன்னாடியே ரயில் நிலையத்தில் சந்தித்து விட்டதாலும் இருக்கலாம். எது என்று எனக்கே தெளிவாகப் புரியவில்லை.
ராஜியும் நானும் பேசிக்கொண்டு இருக்கும் போது சுந்தரி வந்து “இலை போட்டாச்சு. சாப்பிட வாங்க” என்று அழைத்தாள். எழுந்து போனோம். ஆண், பெண் எல்லோருமாக சேர்ந்து இருபது பேராவது இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரே வரிசையில் இலை போட்டுப் பரிமாறியிருந்தார்கள்.
“தாத்தா! முதலில் நீங்க உட்காருங்கள்” என்றான் கிருஷ்ணன்.
“யார் உட்கார்ந்தால் என்ன கிருஷ்ணா? இந்த விட்டுக்கு மூத்தவன் நீ. முதலில் நீ உட்கார்.” தாத்தா வலுக்கட்டாயமாக கிருஷ்ணனை உட்கார வைத்தார்.
கிருஷ்ணனுக்கு வலது பக்கத்திலிருந்து ஆண்களும் இடது பக்கத்திலிருந்து பெண்களும் உட்கார்ந்து கொண்டார்கள். நாங்கள் போன போது ராஜி, என்னையும் தவிர எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். கிருஷ்ணனுக்கு இடது பக்கத்தில் எனக்கும், ராஜிக்கும் என்பது போல் இரண்டு இலைகள் காலியாக இருந்தன.
“ராஜீ! நீ உங்க அண்ணன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்.”
நானும் ராஜியும் சாப்பிட வந்து கொண்டிருந்த போது கையில் நெய் கிண்ணத்துடன் நின்றிருந்த சுந்தரி ராஜியை எச்சரித்தாள்.
நான் எங்கே கிருஷ்ணன் பக்கத்தில் உட்கார்ந்து விடுவேனோ என்பதற்காக செய்த எச்சரிக்கை அது. எனக்கு ஆத்திரமாக வந்தது. ராஜி எனக்கு முன்னால் இருந்தாலும் நான் வேண்டுமென்றே கிருஷ்ணனுக்கு பக்கத்தில் இருந்த இலையின் முன்னால் உட்கார்ந்து கொண்டேன். ராஜி என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சாப்பாடு பரிமாறத் தொடங்கினார்கள்.
“சுந்தரி! நீயும் உட்கார்ந்து கொள். பரிமாறுவதற்கு ஆடகள்தான் இருக்கிறார்களே” என்றாள் அத்தை.
“அடுத்த பந்தியில் சாப்பிடுகிறேன்.” ரொம்பப் பணிவாகச் சொன்னாலும் அந்த குரலில் வெளிப்பட்ட திடத்தை என்னால் உணர முடிந்தது.
உணவு வகைகளை இரண்டாவது முறை பரிமாற வந்த போது கிருஷ்ணன் தனக்கு வேண்டாமென்றும், என்னுடைய இலைக்கு பரிமாறச் சொல்லியும் சொல்லிக் கொண்டிருந்தான். நான் வேண்டாம் வேண்டாம் என்று கையை நீட்டி தடுத்துக் கொண்டிருந்தேன். பரிமாற வந்தவன் அடுத்த இலைக்கு நகர்ந்து விட்டால் “உன்னைத்தான். இந்த இலைக்கு போடச் சொன்னேனே.” கிருஷ்ணன் சத்தமாகக் குரல் கொடுப்பான். நான் வேண்டாமென்று தடுத்தாலும் நிறைய பரிமாறிவிட்டு போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு தடவை இதே போல் சாதம் அதிகமாகப் பரிமாறிவிட்டு போய் விட்டான் சமையல்காரன். நான் கிருஷ்ணன் பக்கம் திரும்பி கோபமாகப் பார்த்தேன். “என்ன? உங்க நிலத்தில் அரிசி அதிகமாக விளைகிறதா?”
“அம்மணீ! அரிசி விளையாது. நெல்தான் விளையும். தங்களின் கருணையால் விளைச்சலும் நன்றாகவே இருக்கு.” கண்களில் குறும்புத்தனம் கொப்புளிக்க கிருஷ்ணன் முறுவலித்தான்.
அந்தக் கண்களில் தென்பட்ட குறும்பு, அந்த முறுவலில் தென்பட்ட பிரியம் இவை இரண்டும் சேர்ந்து இவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவன் என்ற எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தன.
சாப்பாட்டுக்கு நடுவில் கிருஷ்ணன் தண்ணீர் குடிக்கும் போது நான் பதற்றப்படுவது போல் நடித்துக் கொண்டே “அய்யோ! அது என்னுடைய டம்ளர். நான் குடித்த தண்ணியை நீ குடித்துக் கொண்டிருக்கிறாய்” வேண்டுமென்றே உரத்தக் குரலில் சொன்னேன்.
என் கத்தலுக்கு மிரண்டு விட்டவன் போல் கிருஷ்ணன் தண்ணீர் குடிப்பதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு டம்ளரை பார்த்தான். “எல்லா டம்ளர்களும் ஒரே மாதிரியாக இருக்கு. எப்படி அடையாளம் கண்டுகொள்வது?”
“இப்படி ஏதாவது நடக்கும் என்று பயந்துதான் என்னுடைய டம்ளரில் அடையாளம் வைத்திருந்தேன். அதன்மீது கோடு இருக்கும் பார்” என்றேன்.
கிருஷ்ணன் டம்ளரை திருப்பிப் பார்த்தான். தலையை ஆட்டிக் கொண்டே சீரியஸாக சொன்னான். “என்னடா தண்ணீர் இவ்வளவு இனிப்பாக இருக்கிறதே என்று பார்த்தேன். இது உன்னுடைய டம்ளர்தான்” என்று சொல்லிக் கொண்டே டம்ளரை கீழே வைத்தான்.
எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். நான் சட்டென்று சுந்தரியின் பக்கம் பார்த்தேன். அவள் முகம் சீரியஸாக இருந்தது. அருகில் வந்து கிருஷ்ணனுடைய டம்ளரை எடுத்துவிட்டு வேறு டம்ளரை வைத்துவிட்டு போனாள். கண்ணாடி டம்ளர்! இந்த முறை அவன் தவறு செய்ய முடியாது.
எனக்குச் சிரிப்பு வந்தது. வேடிக்கையாகவும் இருந்தது. மனதில் ஏதோ ஒரு மூலையில் சந்தோஷமாகவும் இருந்தது.
சாப்பாடு முடிந்த பிறகு நானும், ராஜியும் குழந்தைகளுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டோம். தலையணை இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது என்று சொன்னதும் ராஜி உள்ளேயிருந்து தலையணை கொண்டு வந்தாள். பெண்டுகள் ஒவ்வொருத்தராக வந்து படுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். சிலபேர் உட்கார்ந்து கொண்டு பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். சாமிகண்ணு நடுவில் ஒரு தடவை வந்து பெட்ரோமாக்ஸ் விளக்கிற்குப் பம்ப் அடித்துவிட்டு போனான். சாரதி பற்றி சொல்லச் சொல்லி ராஜி என்னைப் பிடுங்கி எடுத்தாள். நானும் வாய்க்கு வந்தபடி இல்லாதததை ஜோடித்து சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் சிரத்தையாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
“இனி தூங்குங்கள். மறுபடியும் காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ளணும்.” சின்ன தாத்தா வந்து ஊர்கதைகளை பேசிக் கொண்டிருந்த பெண்டுகளை எச்சரித்துவிட்டு போனார்.
“மணி என்ன இருக்கும்?” ராஜி கேட்டாள்.
வாட்சை பார்த்துவிடு “பதினொன்றரை ஆகிறது” என்றேன். ராஜி கண்களை மூடிக் கொண்டாள். சற்று நேரத்தில் தூங்கியும் விட்டாள். என் கையைப் பிடித்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ராஜியைப் பார்த்தேன். கல்மிஷமற்ற அம்முகத்தைப் பார்க்கும் போது இதைவிட நல்ல வாழ்க்கைக்கு அவள் தகுதியானவள் என்று திரும்பத் திரும்ப தோன்றியது.
வேடிக்கை என்னவென்றால் அவள் முகத்தில் எந்த விதமான அதிருப்தியும் தென்படவில்லை. கிடைத்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பது, கிடைக்காதவற்றை நினைத்து வருத்தப்படாமல் இருப்பது இவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் கண்களை மூடிக் கொண்டு உறங்குவதற்கு முயற்சி செய்தேன். தூக்கக் கலக்கமாக இருந்ததே தவிர தூக்கம் வர மறுத்தது. சாரதியின் நினைவு வந்தது. நான் ஊட்டிக்குப் போகப் போவதாக சொன்ன போது அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. நான் நினைக்கும் அளவுக்கு சாரதி முட்டாள் இல்லையோ?
இங்கே இத்தனை உறவினர்கள் இருக்கிறார்கள். இவர்களுடன் அம்மாவும் அப்பாவும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அம்மா ஒரு அபிப்பிராயத்திற்கு வந்து விட்டால் அந்த பிரம்மா வந்தாலும் அதை மாற்ற முடியாது. அப்பாவைப் போன்று சாது சுபாவம் கொண்டவன் கணவனாக அமைந்தது அம்மாவின் அதிர்ஷ்டம்தான்.
பலவிதமான யோசனைகளில் மூழ்கியிருந்த எனக்கு “ராஜீ!” என்று சுந்தரி அழைக்கும் குரல் கேட்டது.
அந்த அழைப்பிலும் வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட அதிகாரம், பெரியமனுஷி என்ற தோரணை வெளிப்பட்டன. சுந்தரியின் குரலை கேட்டதும் கண்களை திறக்கப் போனவள் தூங்குவது போல் பாவனை செய்தேன்.
“ராஜேஸ்வரி! உன்னைத்தான். தூங்கிவிட்டாயா?” பக்கத்தில் இருப்பவர்களின் தூக்கம் கெட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை அந்த குரலில் எதிரொலித்தது.
“உங்க அண்ணாவுக்குத் தலையணை வேண்டும்.” கொடுத்தாகணும் என்பது போல் சொன்னாள்.
உறக்கத்தில் இருந்த ராஜி பதில் சொல்லவில்லை. விழித்துக் கொண்டிருந்தும் நான் குரல் கொடுக்கவில்லை.
சுந்தரி ஒரு நிமிடம் அப்படியே நின்றாள். நாங்கள் உறங்கி விட்டோம் என்று நினைத்து போய் விடுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. குனிந்து மெதுவாக என் தலையை உயர்த்தி தலையணையை எடுத்துக் கொண்டு ஓசைப்படுத்தாமல் போய்விட்டாள். சுந்தரியின் தைரியத்திற்கு வியப்படைந்தேன். வருங்காலக் கணவனுக்கு சின்ன இடைஞ்சல் கூட ஏற்படக்கூடாது என்று அவள் எடுத்துக் கொண்ட உரிமையைப் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. பரவாயில்லை. சுந்தரி ஆயிரம் கண்களுடன் கிருஷ்ணனை பொக்கிஷமாக பாதுகாப்பாள். அவனுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வாள் என்று தோன்றியது.
ரொம்ப நேரம் கழித்து வீடு முழுவதும் நிசப்தமாகவிட்டது. எல்லோரும் உறங்கி விட்டார்கள் போலும். அத்தையும் இன்னொரு மாமியும் தாழ்ந்த குரலில் அடுத்த நாள் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எல்லோரும் தூங்கியாச்சா?” அப்பொழுதுதான் அங்கே வந்த கிருஷ்ணனின் குரல் கேட்டது.
“ஊம்” என்றாள் அத்தை பதில் சொல்வது போல். சற்று நேரம் கழித்து அத்தையின் குரலும் கேட்கவில்லை. தூங்கிவிட்டாள் போலும். எத்தனை முயற்சி செய்தாலும் தூக்கம் வராததால் கண்களைத் திறந்து பார்த்தேன். தொலைவில் கிருஷ்ணன் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்ருந்தான். நடுநடுவில் இடது கையில் இருந்த பேப்பர்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அன்று வாங்கிய பொருட்களின் செலவு கணக்கை சரி பார்க்கிறானாக இருக்கும். கன்னத்தில் கையை வைத்து ஒருக்களித்து படுத்திருந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் உட்கார்ந்து கொள்ளும் விதத்தில், நிற்பதில், நடப்பதில் ஒருவிதமான கம்பீரம் தென்பட்டது. சற்று முன் சாப்பிடும்போது அவனுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. தன்னைவிட பெரியவர்களுடன் எவ்வளவு பண்புடன் நடந்து கொள்வானோ அதேபோல் தன்னைவிட சிறியவர்களிடம் அன்பை, நெருக்கத்தைக் காட்டுவான். இன்று தஞ்சாவூரில் அவனுடன் சேர்ந்து கழித்திருக்காவிட்டால் அவனிடம் மறைந்திருக்கும் மற்றொரு மனிதனைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காதோ என்னவோ. என் வருகையை தெரிவித்து டெலிகிராம் கொடுத்த அப்பாவுக்கு மனதிலேயே நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
கணக்கு எழுதுவதில் மூழ்கியிருந்த கிருஷ்ணனுக்கு நான் விழித்துக் கொண்டிருப்பதோ, அவனையோ கவனித்துக்கொண்டு இருப்பதோ தெரியாது. நான் விழித்துக் கொண்டிருப்பதை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. சற்று நேரம் கழித்து “அம்மா!” என்றபடி எழுந்து உட்கார்ந்து கொண்டேன். கிருஷ்ணன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து “என்ன ஆச்சு?” என்றான் பதற்றத்துடன்.
“கழுத்து வலிக்கிறது” என்றேன் கழுத்தை நீவிக்கொண்டே.
“சுளுக்கிக் கொண்டு விட்டதா?”
“தலையணை கிடைக்கவில்லை. தலைக்கு உசரம் இல்லை என்றால் எனக்கு தூக்கம் வராது” என்றேன் அலுத்துக் கொள்வது போல்.
கிருஷ்ணன் கையிலிருந்த பேப்பர்களைக் கீழே வைத்துவிட்டு உள்ளே போனான். நான் உட்கார்நதபடியே சுற்றிலும் பார்வையிட்டேன். எனக்கு சற்று தொலைவில் அத்தையின் பக்கத்தில் சுந்தரி படுத்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் அங்கே இல்லை என்றால் கிருஷ்ணனை கொல்லைப்புறம் அழைத்துச் சென்று நிலத்தைப் பற்றிய சமாசாரத்தை சொல்லியிருப்பேன். இது சரியான நேரம் இல்லை என்று தோன்றியது. பின்னால் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் கிருஷ்ணன் திரும்பி வந்தான். அவன் கையில் தலையணை இருந்தது. “இதோ” என்று நீட்டினான்.
“வேறு யாருக்காவது தேவைப்படுமோ என்னவோ” என்றேன் தயங்குவது போல்.
“யாருக்கும் தேவைப்படாது. எடுத்துக் கொள்.”
கையை நீட்டி வாங்கப் போனவள் நினைப்பை மாற்றிக்கொண்டு தலைக்கு அடியில் வைக்கச் சொல்வது போல் தலையை லேசாக உயர்த்தினேன். கிருஷ்ணன் தலையணையை தலையின் கீழே வைத்தான். போகப் போனவன் நின்று “ஏன்? தூக்கம் வரவில்லையா?” என்றான்.
“ஊஹ¤ம்.”
“காரணம் என்னவோ?”
“தஞ்சை பெரிய கோவில், நாம் சேர்ந்து சுற்றியது எல்லாம் நினைவுக்கு வருகிறது.” செல்லம் கொஞ்சுவது போல் பார்த்தேன்.
கிருஷ்ணனின் கண்களில் மின்னல் தோன்றி மறைந்தது. என் முகத்தை ஆழ்ந்து நோக்கினான். என் முகத்தில் அவனுக்கு என்ன தென்பட்டதோ தெரியாது. கன்னத்தில் லேசாக தட்டிவிட்டு “கண்களை மூடிக்கொள். தூக்கம் தானாகவே வரும். நான் மந்திரம் போட்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டான். அவன் மறுபடியும் அங்கே உட்கார்ந்து கொள்ளவில்லை. பேப்பர்களை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்று விட்டான். நான் ஒருக்களித்து படுத்துக் கொண்டேன். தொலைவில் சுந்தரி தொண்டையை செருமிக்கொள்ளும் சத்தம் கேட்டது. தான் விழித்துக் கொண்டு இருப்பதைக் குறிப்பாக உணர்த்துகிறாள் போலும்.
கிருஷ்ணன் கன்னத்தில் தட்டிவிட்ட இடத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டேன். அவன் மந்திரம் போட்டானோ இல்லையோ தெரியாது. இந்த முறை நான் அதிகம் முயற்சி செய்யாமலேயே தூக்கம் என்னைத் தழுவிக் கொண்டுவிட்டது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்