முனைவர் சி.சேதுராமன்
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,
E.Mail. sethumalar68 yahoo.com
இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கால வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது. தாம் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்கள், இயற்கை பற்றிய செய்திகள் போர் குறித்த செயற்பாடுகள் ஆகிய அனைத்தையும் பாடலில் புலவர்கள் பொதிந்து வைத்துள்ளனர். இன்ப வாழ்விற்கு ஏதுவாகிய பொருளையும் அந்த வாழ்க்கையினை உடையோர் இயற்றும் அறத்தினையும் புறம் என்று பண்டைத் தமிழ்ச்சான்றோர் வகுத்துக் கொண்டனர். முல்லைப்பாட்டானது அகப்பொருளை மட்டுமல்லாது பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கின்றது.
வழிபாடும் சகுனமும்
தங்களுக்கு நேர்ந்த துன்பத்தைத் தவிர்க்கும்படி வழிபடு தெய்வத்தை வணங்கி வேண்டிக்கொள்ளும் வழக்கம் சங்ககாலத் தமிழர்களிடம் இருந்தது. நெல்லையும், மலரையும் தெய்வத்தின் முன்னே தூவி நின்று வணங்கி வரம் கேட்பார்கள். இதனைத் தொல்காப்பியர், ‘‘விரிச்சி கேட்டல்’’ என்று கூறுகின்றார். பழந்தமிழர்களுக்கு இன்றைக்கு இருப்பது போன்றே தெய்வ வழிபாட்டிலும் சகுனத்திலும் நம்பிக்கை இருந்த்து. இதை முல்லைப் பாட்டில் இடம்பெறும் ஒரு நிகழ்ச்சி தெளிவுற எடுத்துரைக்கின்றது. மாரிக்காலம் வந்துவிட்டது. தலைவனைக் காணவில்லை. தலைவி மனம் வெதும்பியிருக்கிறாள். அதைக்கண்ட அவளுடைய செவிலித்தாய், கைத்தாய் முதலியவர்கள் ஊர்க்குப் புறத்தேயுள்ள திருமாலின் கோயிலுக்குப் போனார்கள். அங்கு நாழியிலே கொண்டுபோன நெல்லையும் புது முல்லை மலர்களையும் கலந்து தூவி மாயோனிடம் நல்வாக்குக் கேட்டு நின்றனர்.
இச்சமயத்தில் சிறய தாம்பிற் பிணைத்திருக்கும் இளங்கன்றுகள் தங்கள் தாய்ப்பசுக்களைக் காணாமல் வருந்துகின்றன. அக்கன்றுகளின் துயரைக்கண்ட ஆயர்மகள் பிடரியிலே கைகளை வைத்துக்கொண்டு அக்கன்றுகளுக்கு ஆறுதல் கூறினாள். கோல்பிடித்த கோவலர்கள் பின்னே வர இப்பொழுதே உங்கள் தாய்மார்கள் வந்துவிடுவாரகள் என்று கூறினாள். இச்சொற்களை திருமாலை வணங்கி நின்ற தாய்மார்கள் கேட்டனர். உடனே மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து நாங்கள் நன்மொழி கேட்டு வந்தோம். போருக்குப்போன உன் தலைவன் வெற்றியுடன் விரைந்து வருவான். பகைவர்களிடம் திறைபெற்றுத் திரும்பி வருவான். நீ வருந்தாமல் இரு என்று தலைவியிடம் கூறினர் என்பதை,
‘‘அருங்கடி மூதூர் மருங்கிற்போகி
………………………… ………………… ………
பருவரல் எவ்வம் களை மாயோய்! ’’
என்ற வரிகள் உணர்த்துகின்றன.
பாசறையில் பெண்கள்
பாசறையில் வேனிற்பாசறை, கூதிர்ப்பாசறை என்று இரண்டு பாசறைகள் உண்டு. இதனைத் தொல்காப்பியர்,
‘‘கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதல் வென்றிக் கண்ணிய மரபினும்’’
என்று மொழிந்துள்ளார். பண்டைக்காலத்து அரசர்கள் போர் செய்தற்கு கூதிர்பருவம், வேனிற்பருவம் ஆகிய இரண்டு பருவங்களைத் தெரிவு செய்து போர் மேற்சென்றனர்.
முல்லை காடும் காடுசார்ந்த பகுதியாதலால் அப்பகுதியில் காவல் பொருட்டு வேடர்கள் படையை அமைத்திருத்தலும், அந்த வேடர்கள் காட்டில் சிறுசிறு அரண்களை அமைத்துக் கொண்டு காவல் செய்வர். போர் மேற்சென்ற மன்னர்கள் முன்னர் இவ்வேட்டுவரை வென்று அவர் அரண்களை அழித்து அக்காட்டில் தம் பாசறையை அமைத்துக் கொள்வர்.
பாசறையைச் சூழ முள்ளால் வேலி அமைப்பர். ஒரு முடிவேந்தன் படை முழுவதும் அடங்க வேண்டுதலின் கடல் போன்ற பரப்புடையதை பாசறை என்றார் ஆசிரியர். பெண்கள் பாசறைக்குச் செல்லும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தது. அரசன் போருக்குப் போகும்போது அவர்களையும் அழைத்துச் செல்வான். அப்பெண்கள் இரவுக்க்காலத்தில் அரசனுடைய படுக்கையறையைப் பாதுகாக்கும் காவலர்களுக்குத் துணை செய்வார்கள். விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் தற்காப்புக்காக வாளை வைத்திருப்பார்கள்.
சிறு வளையல்களை முன்கையிலே அணிந்திருக்கின்றனர். அவர்களுடைய தலைமயிர் அவிழ்ந்து முதுகிலே கிடக்கின்றது. இரவைப் பகலாக்கக்கூடிய அவ்வளவு ஒளி பொருந்திய வாளை இடுப்பிலே தொங்க விட்டிருக்கின்றனர். இத்தகைய வீரப்பெண்கள் எண்ணெய் சிந்துகின்ற குழாய் வடிவமான நீண்ட பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு திரிகின்றனர். பாவையின் கையிலே எரிகின்ற விளக்கு அணையும் போதெல்லாம் அவைகளை மீண்டும் கொளுத்துகின்றனர். இதனை,
‘‘குறுந்தொடி முன்கைக் கூந்தல் அம்சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஔவாள்
விரவு வரிக்கச்சின் பூண்ட மங்கையர்
கையமை விளக்கம் நந்து தொறும் மாட்ட’’
என நப்பூதனார் மொழிகிறார். இதிலிருந்து பழங்காலத்தில் பெண்கள் போர்க்களம் புகுந்து வாள் போர் செய்யும் வலிமை உடையவர்களாக விளங்கினர் என்பதனை அறியலாம்.
யானைப் பாகர்கள் செயல்கள்
யானைப் பாகர்கள், யானையை அடக்க வடமொழிச் சொற்களாலாகிய பரிபாஷைகளைப் பயன்படுத்தினர். அந்த வடமொழிச் சொற்களை அவர்கள் படித்துத் தெரிந்து கொண்டவர்கள் அல்லர். கேள்வி (செவி) வாயிலாகவே கேட்டுத் தெரிந்து கொண்டனர். இன்றும் யானைப் பாகர்களின் நிலைமை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுண்மையை ஒரு யானையை அடக்குவதைப் பற்றிக் கூறுவதன் மூலம் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். உண்ண மறுத்த யானையை யானைப் பாகர்களாகிய இளைஞர்கள் பரிபாஷையினைக் கூறி உண்ணுமாறு செய்த்தை,
‘‘காவர் நின்ற
தேம்படு கவுள சிறுகண்யானை
. . . . . . . . . . . . . . .
கல்லா இளைஞர் கவளம் கைப்ப’’
என்ற முல்லைப்பாட்டின் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
மெய்க்காப்பாளர் செயல்கள்
மன்னன் உறங்கும்போது அரசனின் திருமேனியைக் காத்தற்குரியவர்கள் மெய்க்காப்பாளர்களாவர். உயர்ந்த ஒழுக்கமுடையவராக அவர்கள் இருக்க வேண்டும். மெய்க்காப்பாளர் அரசன்பால் முன்னர் பற்பல பணிசெய்து அவன் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்து, பின்னர் மெய்க்காவற் பணியில் அமைக்கப்படுவராகலின் அவர்கள் பெருமூதாளராய் இருத்தல் இயல்பாயிற்று.
முல்லைப்பாட்டில் ஆசிரியர் மெய்க்காப்பாளர் நீண்ட நாக்கினையுடைய ஒளி பொருந்திய மணியின் ஒலி சிறிது சிறிதாக அடங்கிய நள்ளிரவிலே புனலிக் கொடி படர்ந்த சிறு தூறுகள் காற்றில் அசைந்தாற்போல தலையைத் துகிலாலே போர்த்துக்கட்டி வலை வெண்கட்டையால் மூடிய நல்லொழுக்கம் உடைய முதிர;ந்த காவலர்கள் உறக்கத்தால் ஆடியும் அசைந்தும் நின்றனர் என்பதனை,
‘‘நடுநா ஔமணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடு கொடிபடாஅர்
. . .. . . . . . . . . . .. . . . .
பெருமூதாளர் ஏமம் சூழ’’
என்று நப்பூதனார் மொழிகிறார்.
நாழிகைக் கணக்கர்
நாழிகையை அளந்து அறியும் (நேரத்தை அறிந்து கூறக் கூடியவர்கள்) பொய் பேசுதல் அறியாத நாழிகைக் கணக்கர் மன்னனைக் கையால் தொழுது காணும் ஒழுக்கம் உடையவராய் அவன் புகழ் விளங்க வாழ்த்தினர். பின்னர் அவர்கள் கடல் சூழ்ந்த உலகில் பகைவரை வெல்லும் செயலை மேற்கொண்டோனே! குறுகிய நீரையுடைய நாழிகை வட்டினிலே நாழிகை இத்துணை என்று அறிந்து கூறினர். இதனை நப்பூதனார்,
‘‘பொழுது அளந்தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர; தோன்ற வாழ்த்தி
குறுநீர்க் கன்னல் இணைத்து என்று இசைப்ப’’
என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். பாத்திரத்தில் நீர்விட்டு அதனை ஒரு சிறு துளை வழியாக சிறிது சிறிதாக கசியவிட்டு அந்நீரினை அளந்து பொழுதினைக் காணும் கருவியாகலின் நாழிகை வட்டிலைக் குறுநீர்க் கன்னல் என்றார். இதனை நீர்க் கடிகாரம் என்று கூறலாம். நீரின் அளவினை வைத்து பொழுதினை அளந்தறிவதற்குப் பயன்படுவதே நீர்க்கடிகாரம் ஆகும். பழந்தமிழர் இத்தகைய கடிகாரத்தைப் பயன்படுத்தியதை முல்லைப் பாட்டு நவில்வது சிறப்பிற்குரியது.
யவனர் செயல்கள்
கிரேக்க நாட்டினரைத் தமிழர;கள் யவனர; என்ற பெயரால் அழைத்தனர். பாசறையிலே அரசனுக்குக் காவலாயிருந்த யவனரைப் பற்றி முல்லைப் பாட்டாசிரியர் தெளிவுற எடுத்துரைக்கிறார். அவர்கள் சட்டையணிந்தவர்கள் கண்டோர் நெஞ்சிலே கலக்கத்தை உண்டாக்கும் தோற்றமுடையவர்கள் ஆற்றல் அமைந்த உடலை உடையவர். யாருக்கும் அஞ்சாத ஆண்மை உடைய கண்னெஞ்சர் என்பதனை,
‘‘மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்’
என்று முல்லைப்பாட்டு உரைக்கிறது. அக்காலத்தில் அரசர்கள் தமது அந்தப்புரத்தில் அந்நிய நாட்டு ஊமையர்களையே காவலாக வைத்திருப்பார்கள். அந்தப்புர இரகசியங்கள் வெளிபடாமல் இருப்பதற்காகவே இங்ஙனம் செய்வர். இத்தகைய அந்நிய நாட்டினரை, ‘மிலேச்சர்’ என்னும் பெயரால் அழைத்தனர்.
உடம்பில் உள்ள கண், கை, கால் முதலிய உறுப்புகளின் மூலமாகவே தம் உள்ளக் கருத்தை உரைப்பார்கள். வாயாற்பேசும் வல்லமையற்றவர்கள்; சட்டை போட்டவர்கள். அந்நிய நாட்டினர் பக்கத்திலே காவலாக நிற்கின்றனர் என்பதை,
‘‘உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர் உழையராக’’
என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.
மன்னனின் அன்பு நிலை
பாசறையில் மெய்க்காப்பாளர், நாழிகைக்கணக்கர், யவனர், மிலேச்சர் போன்றோர் சூழ இருந்த மன்னனின் மனநிலை பற்றியும் நப்பூதனார் முல்லைப்பாட்டில் உரைத்துள்ளார். வினைமுற்றியிருந்த தலைமகன் முன்னாளில் பகைவர் எறிந்த வேல் நுழைந்தமையால் புண் கலந்தது. அதனால் வருத்தமுற்றுத் தம் பெண் யானைகளை மறந்த களிறு பெண் யானைகளை நினைத்தும் யானைகளின் பெரிய கைகளை வெட்டி வீழ்த்தித் தாம் அணிந்த வஞ்சின மாலைக்கு வெற்றி உண்டாகும்படி செஞ்சோற்றுக்கடன் கழித்த மறவர்களை நினைத்தும், காவலாக இட்ட தோற்பரிசையும் கிழித்துக் கொண்டு அம்புகள் புகுந்து அழுத்தினதால் புல்லை உண்ணாமல் செவிகளைச் சாய்த்து நிற்கும் குதிரைகளை நினைத்தும் வருந்தும் மன்னனின் மனநிலையை எடுத்துரைக்கின்றார். மன்ன்ன் தன்னலமின்றி அனைவர் மீதும், அஃறிணை உயிர்களிடத்தில் கூட அன்பு கொண்டவனாகவும், கருணை மிக்கவனாகவும் திகழ்ந்தான் என்பதை இம்முல்லைப் பாட்டின் வழி நாம் நன்கு உணரலாம்.
பழங்காலத்தில் தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை, காலட்படை என்ற நால்வகைப் படைகள் இருந்தமையும் இம்முல்லைப்பாட்டால் அறியலாம். மக்கள் அக்காலத்தில் பாவை விளக்குகளைப் பயன்படுத்திய செய்தியும், பல அடுக்குகளை உடைய மாளிகைகள் கட்டப்பட்டிருந்த்தையும் முல்லைப் பாட்டு நமக்கு உணர்த்துவது குறிப்பிடற்குரிய ஒன்றாகும். பாவை விளக்குகள் என்பது இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் திருமகள்(காமாட்சியம்மன் விளக்கு) போன்றதெனக் கூறலாம்.
மழைக் காலத்தில் மலர்ந்த மலர்கள்
மழைக் காலத்தில் காட்டில் கண்ணையும் மனதையும் கவரும் வண்ணம் பலவகையான மலர்கள் பூத்திருந்தன. நிறைந்த இலைகளை உடைய காசாஞ்செடிகள் மையைப் போன்று மலர்ந்திருந்தன.
“செறியிலைக் காயா அஞ்சனம் மலர“
என்று நப்பூதனார் இதனைக் குறிப்பிடுகிறார். மேலும்,
“முறியிணர்க் கொன்றை நன்பொன்கால“
எனத் தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை நல்ல பொன்போன்ற மலர்களைச் சொரிந்தது.
“கோடல் குவிமுகை அங்கை அவிழ“
வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் உள்ளங்கையைப் போல் மலர்ந்தன.
“தோடார் தோன்றி குருதி பூப்ப“
தோன்றிச் செடிகள் இரத்தம் போன்று மலர்ந்திருந்தன என மழைக்காலத்தில் மலரும் மலர்களைப் பற்றி முல்லைப்பாட்டு எடுத்துரைக்கிறது.
அக நூலாக இருப்பினும் பழந்தமிழரின் பழக்க வழக்கங்களை உணர்த்தும் பண்பாட்டுப் பெட்டகமாக முல்லைப் பாட்டு திகழ்கின்றது. காயா, கொன்றை, வெண்காந்தள், தோன்றி, ஆகிய மழைக்கால மலர்கள் பற்றிய அரிய செய்திகள் இம்முல்லைப் பாட்டில் இடம்பெற்றிருப்பதும், யவனர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பும் இடம்பெற்று தமிழர்கள் செம்மாந்த வாழ்க்கையை வாழந்தனர் என்பதற்கு முல்லைப் பாட்டு சான்று பகர்கின்றது எனில் மிகையாகாது.
- முள்பாதை 25
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- வேத வனம் விருட்சம் 81
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- முன் முடிவுகளற்று இருப்பது
- நினைவில் நின்றவள்
- வீட்டோடு
- கவன குறிப்பெடுத்தல்..!
- தொட்டி மீன்
- சதையானவள் .
- மரணத்தின் வாசல்..
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- சு.மு.அகமது கவிதை
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
- இவர்களும் சுவர்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13