முற்றுப் பெறாத ஒரு கவிதை

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


விளையாட்டுப் பொருளையெல்லாம்
வீணாக்கியபோது
கண்டிக்காத நீ
ஒரேயொரு பொருளைப்
பரிசாகப் பெற்றதற்கா
ஆத்திரப்படுகிறாய் ?

கவிதைப் புத்தகங்களையெல்லாம்
கிழித்தபோதும்
கண்டுகொள்ளாத நீ
ஒரு கவிதை
எழுதியதற்கா
காரணம் கேட்கிறாய் ?

தெருவில்
ஆடியதை
அனுமதித்த நீ

ஜன்னலோரம்
நிற்பதையா
தட்டிக் கேட்கிறாய் ?

ஆடு பாடு என்று
ரசித்துக் கேட்ட
அம்மா நீயா
பாடல் கேட்பதையும்
கட்டுப்படுத்துகிறாய் ?

என்னிலும்
மாற்றங்களை
உன்னிடம்
காண்கிறேன்

அம்மா
உன் மகள்
இன்னும்
குழந்தை அல்ல

உனக்கே தெரியாத
ஒரு குழந்தைக்கு
அம்மா

கவிதை
எழுதுவதையே
விரும்பாத நீ

நான் உயிரோவியம்
வரைந்ததையா
ஆமோதிக்கப்போகிறாய் ?

என் கனவுகள்
கலைவதையே
விரும்பாத நான்

எப்படி என் கருவை …

இலக்கணங்களை மீறுவதை
மரபாகக் கொண்ட
என் எழுத்து

மரபுகளை மீறுவதை
இலக்கணமாகக் கொண்ட
என் வாழ்க்கை

அன்பான என்
பழைய
அம்மாவை

புதிய அம்மா
எப்படி
எதிர்கொள்ளப்போகிறேன் ?

காத்திருக்கிறேன்
ஓர் அமைதி யுத்தத்திற்கு.
_____________________
gk_aazhi@yahoo.com

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி