முறையாய் முப்பால் குடி!

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

பசுபதி


அள்ளிப் பருகிட வாரீர்! — திரு
வள்ளுவர் நல்கும்முப் பாற்சுவை தேரீர்!

பாலன் அழுவதைப் பார்த்தாள் – ஞானப்
. . பாலைச்சீ காழியில் பார்வதி வார்த்தாள் !
ஞாலச் சிசுகண்டு நொந்தார் — முப்
. . பாலைப் பரிவுடன் வள்ளுவர் தந்தார் ! (1)

முறையாய்க் குடித்திடல் வேண்டும் — அந்த
. . முப்பால் முதலில் அறம்வர வேண்டும் !
அறவழி ஈட்டாத செல்வம் — ஓடும்
. . ஆற்றினில் உப்பெனக் கைவிட்டுச் செல்லும் ! (2)

இல்லறத் தேரினை ஓட்டு ! — பொருள்
. . இன்பம் பரிகள் இரண்டையும் பூட்டு !
கல்விசொல் நேர்வழி செல்ல — உன்
. . கைக்கடி வாள அறத்தினை மாட்டு ! (3)

இன்பத்துள் இல்லறம் உச்சம் — பொருள்
. . இல்லானை இல்லாள் கருதுவாள் துச்சம் !
நன்றே பொருளின்ப நாட்டம் — அது
. . ஒன்றே குறியெனின் வாழ்க்கையே வாட்டம் ! (4)

எண்ணொன்று சூன்யம்முன் வந்தால் — மதிப்பு
. . ஏறிடும் என்றே கணிதமும் கூறும் !
இன்பமும் செல்வமும் சூன்யம் — அவை
. . முன்னர் அறம்வரின் வாழ்வே தழைக்கும் ! (5)

குஞ்சினை வீட்டில் வளர்க்க — பறவை
. . குச்சி இரைகளைத் தேடுதல் வேண்டும் !
கொஞ்சமும் அண்டாது ‘வீடு ‘ — நாம்
. . ‘குச்சி ‘கள் தேடலே வாழ்வெனக் கொண்டால் ! (6)

முன்னோரின் மெய்ஞ்ஞான ஜாடி — நம்
. . முன்னேற்றப் பாதையைக் காட்டிடும் ஆடி !
செந்தமிழ்ப் பண்பாட்டுச் சிற்பம் — இதில்
. . தேடினால் காணா அழகுகள் சொற்பம் ! (7)

வள்ளுவர் வாக்கினை ஆய்ந்தால் — நம்
. . வாழ்வின் நெறிகள் விழுப்பொருள் யாவும்
தெள்ளத் தெளிந்திடும் பாரீர் ! — அதைச்
. . செந்தமிழ் வேதமாய்ப் போற்றிட வாரீர்! (8)

*~*~o0o~*~*
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி