முறிப்புக் கிராமம்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

தீபச்செல்வன்


நீயும் நானும் குளத்தில்
இறங்கினோம்.

கொக்குகள் குளத்தை
குடித்து நிரம்பின
மீன்கொத்திகள்
மீன்களாக மாறி
கால்களை கொத்துகின்றன.

குளக்கட்டில்
பாட்டில் போடப்பட்டிருக்கும்
சின்னச் சைக்கிளில் இருந்த
புத்தகங்களை
காற்று படிக்கிறது.

குளத்தின் கீழ்கரை வாய்க்காலில்
தண்ணீர் குடிக்கும்
ஆடு மாடுகள்
தலைகளை திருப்பி
தண்ணீர் பாடல்களை கேட்கின்றன.

நமது கால்களுக்கள் மீன்கள்
ஓடித்திரிந்தன.

சனங்களை அள்ளி
நிரப்பி வழியும்
பேருந்தின் நடத்துனர்
வாய்க்கால் தண்ணீரை
அள்ளி எஞ்சினில்
விட்டு சூடு குறைக்கிறான்.

பேரூந்து நம்மை விலத்திப் போகிறது

புழுதி படிந்த தென்னை மரங்களில்
பழுத்து விழுந்த
ஓலைகளை
கறுப்பய்யா வாய்காலில் போட்டு
பின்னி அடுக்கிறார்.

கிடுகுகளின் குளிர்ந்த
நிழல் வீட்டில்
நாம் அருந்துவதற்காய்
பசும் பால் முட்டியிலிருக்கிறது.

முற்றி வளைந்திருக்கும்
நெற்கதிர்களை
பார்வையிட்ட செல்வரத்தினம்
சத்தமிடும் சைக்கிளில்
நெல்மணிகள் கொட்ட போகிறார்.

எப்போதாவது வரும்
வாகனங்களை விலத்தி விட்டு
நெல்மணிகளை கோழிகள்
பொறுக்கி எடுக்கின்றன
கூடுகளில் கோழிகள்
பெரிய முட்டைகள் இட்டிருந்தன.

மிளகாய் கன்றுகளுக்கு
பரமேஸ்வரி
தண்ணீர் விடுகிறாள்
மண் வெம்மை அடங்க ஈரமாகிறது.

பள்ளிக் கூடம் போகாத
சிறுவர்கள் நெல் பொறுக்கப்போக
அவர்களின் புத்தக பைகள்
சுவரை கிழித்து
வெளியில் தெரியும்
கிணியாத் தடிகளில்
கொலுவியிருந்தன.

மண்வீடுகளோடும்
ஓலைப் பள்ளிக்கூடத்தோடும்
காடுகளோடும் முடியும்
முறிப்பு வீதியில்
மேல்நிலைக் கல்விபயிலும் மாணவி
மலைநேர நிறத்தோடு
கிராமம் திரும்புகிறாள்.

வைக்கோலின் வாசனையோடு மாடுகளும்
குலைகளின் வாசனையோடு ஆடுகளும்
பட்டியில் நிறைந்தன
சனம் போக குளம் மெளனமாகிறது.

ஏற்றமான வீதியில்
நீயும் நானும் சைக்கிளை மிதிக்கிறோம்..
————————————————————————————
முறிப்பு: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஒருகிராமம்


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்