மீனவ வாழ்க்கை

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

சேவியர்


உப்புக்கடலின் கரையோரம்
தினமும் நடக்கிறது கண்ணீர் வாழ்க்கை.

வலைகளுக்குள் மீன் தேடி,
கடல் போடும் தூண்டிலில்
அவ்வப்போது உயிர் துறக்கும் மீனவர்கள்…

நாளைய வாழ்வை
கயிறு கட்டி இழுக்கும்
கட்டு மரங்களின் முதுகில்..
கடல் நீரில் முகம் நனைத்து
கண்ணீரில் கடல் கழுவி
நழுவிப்போகும் நிமிடங்களைத் துரத்தும்
சாரமற்றுப் போன
ஓர் உப்பு வாழ்க்கை.

சந்தை வீதிகளின்
கடல் மீன்களெல்லாம்
மீனவனின்
வியர்வை கழுவித் தான் விற்கப்படுகின்றன…

ராட்சச அலைகளோடு ரகசியம் பேசி
இடர்களோடு தொடர் ஒப்பந்தம் செய்து
முத்துக் கனவுகளோடு நடப்பதென்னவோ
செத்துப் பிழைக்கும் சிப்பி வாழ்க்கை தான்…

பசிக்கும் போது கடல்….
வசிக்கும் இடம் கடல்
சுவாசிக்கும் காற்று கடல்…
இந்த மொத்த மக்களும்
நேசிக்கும் ஒரே கடவுள் கடல் தான்…

வறண்டு போகும் வயிறுகளும்
ஈரமாகிப் போன இரவுகளுமாய்
கடல் தீண்டும் வேளைகள்
மறக்காமல் மனம் வேண்டுவதெல்லாம்
மாலையில் கரை தாண்ட வேண்டுமென்பது தான்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்