மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

ஆ. மணவழகன்


என்னை விட்டு
எங்கே சென்றுவிடப் போகிறாள்…
கலக்கமே இல்லாமல்,
கையசைத்து நடக்கிறேன்….!

எத்தனை எத்தனை
முகங்கள்,
நடைபாதையிலும் – ரயில்
பெட்டிகளிலும்… !

ஏக்கமும்… எதிர் பார்ப்பும்…
காதலும்… கண்ணீரும்…
கலக்கமும்…கர்வமும்…
கையசைப்பில் காட்டியபடி,
ஆயிரமாயிரம் உணர்வுகள்…
அங்கங்கே திட்டுத்திட்டாய்…!

படபட சத்தத்தில்
பின்னோக்கிய என் கனவுகள் – என்னைப்
பிரித்துப் போட்டுப் புதிதாய் வேய்ந்த – உன்
நினைவுகள்…!

கைகோர்த்து…கதைபேசி…
காலார நடந்து… கால்பதித்த அத்தனையும்…
என்னுள்,
கல்வெட்டுகள்…!

இறுதிப் பெட்டி
என்னிடம் கேட்டது,
இருக்கவா ? பறக்கவா ?
இறுகிய இதயம்
என்றும் போல் சிரிக்க..

தொலைவில்.. வெகுதொலைவில்…
தொலைதூரத்தில்… தொலையும் புள்ளியாய்…
உன்னைச் சுமந்த இரயில்…!

இலையுதிர் காலத்து மரமாய்…
இருந்த இடத்தில் நான்…!
எல்லாம் என்னை விட்டு!

சன்னலுக்குள் – உன்
முகம் மட்டும்,
வேருக்கு நீராய் – என்
வேதனைக்குத் தாயாய்…!

ஆனந்தமும் – என்
ஆசையும்;
பகிர்தலும் – எனக்கான
பந்தியும்;
உணர்வும் – என்
ஒட்டுமொத்த உயிரும்…!
ஒரே ஒரு ஊதல் ஒலியில்
என்னிடமிருந்து வேராய்…- என்னை
அநாதையாக்கிய பேராய்…!

மீண்டும்
வசந்தம் வரும் நாளுக்காய்…
வந்தவழி நடக்கிறேன்…

என்னைச் சுமந்து இரயிலும்…
இரயிலைச் சுமந்து நானும்…!

a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்