மலர்மன்னன்
—
“வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்திற்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருபினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எக்காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித வாழ்வியல் ஒழுக்க விதிகளை வகுத்திருப்பதோடு, சமூகவியல், அரசியல் எனப் பொதுத்தன்மை வாய்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக மனு ஸ்மிருதி இருப்பதால் அது ஓர் அற நூலாக மட்டுமின்றி, சட்டப் புத்தகமாகவும் நீதி நூலாகவும் ஒருசேர விளங்குகிறது.
– சுவாமி தயானந்த சரஸ்வதி
பலவாறான சர்ச்சைகளில் சிக்கி, மிகக் கடுமையான விமர்சனங் களுக்குள்ளாகியிருக்கிற மனு ஸ்மிருதியை ஆரிய சமாஜம் தலையாய நீதி நூலாக ஏற்பதாகவே சுவாமி தயானந்த சரஸ்வதி குறிப்பிடுகிறார். ஆரிய சமாஜம் நிறுவிய சுவாமி தயானந்தரின் புலமை குறித்தும் நடுநிலை குறித்தும் மாறுபட்ட கருத்து இருக்க நியாயமில்லை.
ஒரு தலைப் பட்சமான கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள மனு ஸ்மிருதி, சமுதாயத்தில் பெண்களையும் நாலாவது வருணத்தவரான சூத்திரரையும் மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதாக விமசிக்கப்படுகிறது. ஹிந்து சமயத்தைத் தூற்றுபவர்கள் அனை வருமே தஙகள் தரப்பு நியாயத்தைப் பேசுவதற்கு உடனே கையில் எடுப்பது அநேகமாக் மனுஸ்மிருதியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வேடிக்கை, ஹிந்து சமயத்தின் மீது குறை காண்பதற்காக மனு ஸ்மிருதியிலிருந்து ஏதேனும் ஒரு சில வரிகளை எடுத்தாள் பவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் மனு ஸ்மிருதியைப் படித்தவர்களாக இருப்பதில்லை. செவி வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் கண்டனம் வெளிப்படும்.
வேறு எங்கோ, எவரோ பழமொழிபோலக் குறிப்பிட்டவற்றைக் கூட மனு ஸ்மிருதியில் உள்ளனவாக மனம் போன போக்கில் சிலர் கூறுவதுண்டு. உதாரணமாக, ‘டோல், கம்வார், சூத்திர, பஹுநாரி, ஏ சப்ஜாடன் தாடன்கே அதிகாரி’ என்று ஒரு வரி துளசிதாசர் ஹிந்தியில் எழுதியுள்ள பாடல் ஒன்றில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, டோலக் என்கிற மேளம், பண்பில்லாத வர்கள், சூத்திரர், பெண்கள் ஆகியோர் அடிபடுவதற் கென்றே இருப்பவர்களாம்!
முதலில், பரம பாகவதரான துளசிதாசருக்கு இப்படியொரு வரியை எழுதுகிற கல்நெஞ்சம் இருக்குமா என்பதே சந்தேகம். நூலாசிரியர்கள் உரிமை பாராட்டவோ கண்காணிக்கவோ வாய்ப்பில்லாத பழங்காலத்தில் பிரசித்தி பெற்ற நூல்களில் பலர் தமது கருத்துகளும் இடம் பெற்றுவிட வேண்டும் என்கிற அற்ப ஆசையில் தாமும் அவற்றில் எதையாவது எழுதிச் சேர்த்து விடுவது வழக்கம். சிலர், பிரதியெடுக்கும்போது கவனக் குறை
வினாலோ, எழுத்து புரியாததால் யூகத்தின் அடிப்படையிலோ தாமாக எதையாவது எழுதிவிடுவதும் உண்டு. இதனால்தான் தொன்மையான மூல நூல்கள் பலவற்றிலும் ஏராளமான பாட பேதங்கள் காணப்படுகின்றன. வியாச பாரதம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பழம் பெரும் நூல்களிலும், ஏன் பழந் தமிழ் இலக்கியங்களிலுங்கூட இவ்வாறு ஏராளமான இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன. ஒரே நூலுக்குப் பல பிரதிகள் கிடைத்த போதிலும் அவை ஒவ்வொன்றிலும் வரிகளும் வாக்கியங்களும் வேறுபட்டுப் பெருங் குழப்பத்தை உண்டாக்கும்!
ஆனால் மூலநூல்களை ஆழ்ந்து படித்துத் தேர்ச்சி பெற்றவர் களால் நூலாசிரியர்களின் சிந்தனைப் போக்கையும், அவர்கள் மொழியைக் கையாளும் முறையையும் நன்கு அடையாளம் கண்டுகொண்டுவிட முடியும். இவற்றின் அடிப்படையிலேயே எது மூல நூலசிரியர் எழுதியது, எவையெல்லாம் இடைச்செருகல்கள் அல்லது தவறுதலாக நகல் செய்யப்பட்டவை என்பதை அவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
மூல நூலாசிரியரின் காலத்தில் மொழி கையாளப்பட்ட விதமும், அப்போது வழக்கில் உள்ள சொற்களும் ஒரு தன்மையில் இருக்கும். அக்கால கட்டத்திற்குப் பிறகு சேர்க்கப்படும் வாசகங் களில் மொழியின் போக்கும் சொற்களின் பயன்பாடும் வேறு மாதிரியாக இருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தும் இடைச் செருகல்கள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுவிடும்!
மேளமும் பண்பில்லாதோரும் சூத்திரரும் பெண்களும் அடிபடத் தக்கவர்கள் என்று துளசிதாசர் எழுதியிருப்பதாகக் கருதப்படு வதை மனு ஸ்மிருதியில் எழுதப் பட்டிருப்பதாக மேடையில் அடித்துப் பேகிகிறவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அப்படியொரு வரியே மனு ஸ்மிருதியில் இல்லை என்பதுதான் உண்மை.
‘பத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாஹா; யத்ரை தாஹா து ந பூஜ்யந்தே சர்வாஹா தத்ரபலாஹா க்ரியாஹா’
என்கிறது மனு ஸ்மிருதி ( அத்தியாயம் 3 வாக்கு 56).
‘எந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளனவோ அந்தக் குடும்பத்தில் புனிதத்துவம், நற்செயல்கள் நல்ல மக்கட் பேறு, நலன்கள் ஆகியன யாவும் ஒருசேர அமையப் பெற்று அங்கு இறையருள் பரிபூரணமாக நிலவும். பெண்டிருக்கு மரியாதை இல்லாத குடும்பத்திலோ எநதச் செயலும் விளங்காது போகும்’ என்பது இதன் பொருள்.
‘புத்ரேண துஹிதா ஸமா’ (மனு ஸ்மிருதி அத் 9 வாக்கு 130) என்கிற இன்னொரு வாக்கு பெண்களுக்குச் சாதகமாகப் பேசு கிறது. இதன் பொருள், மகன்-மகள் இருவரும் சரி சமம் என்பதுதான்.
தந்தை வழிச் சொத்தில் மகன் மகள் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் மனு கூறுகிறார் (அத் 9 130, 192).
இவ்வாறு பெண்களைப் பல இடங்களில் போற்றியும், அவர்களின் உரிமையை உறுதி செய்தும் எழுதும் மனு, அவர்களை இழிவு படுத்தியும் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றும் வேறிடத்தில் குறிப்பிடும் அளவுக்கு முன்யோசனை இல்லாதவராக இருக்கக் கூடுமா?
சாதாரண எழுத்தாளர்களே தமது எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக ஏதும் இடம் பெற்றுவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை யுடன் எழுதுகையில் ஒழுக்க விதிகள் குறித்தும் சமுதாய அமைப்பு, ஆட்சிமுறை ஆகியவைபற்றியும் நிர்ணயம் செய்யும் அறநூலை இயற்றிய மனுவைப் போன்ற ஒரு விவரம் தெரிந்த அறிஞர் முன்னுக்குப் பின் முரணாக ஏதும் எழுதுவது சாத்தியமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
வர்ணப் பிரிவுகள் நான்கெனக் கூறும் மனு, அவற்றில் ஒன்று உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்றெல்லாம் கூறவில்லை. இந்த வர்ண ஒதுக்கீடு பற்றி விவரிக்கையில், மனு பின்வருமாறு கூறிகிறார்:
’சூத்ரோ ப்ராஹ்மணதாம் ஏதி, ப்ராமணஷ்சை தி சூத்ரதாம்
க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைஷ்யாந்ததைவ ச’
(மனு ஸ்மிருதி அத் 1 வாக்கு 65)
குணவியல்பு, ஈடுபாடு, தொழில் நாட்டம் அல்லது தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் (பண்பிலும் செய்தொழில் நாட்டம் அல்லது தகுதி ஆகியவற்றில் பிராமணராக இருக்கும் ஒருவருக் குப் பிறந்திருந்தாலுங்கூட) ஒரு பிராமணர் சூத்திரர் ஆகிவிடு கிறார். அதேபோல் (குணவியல்பு, செய்தொழில் நாட்டம் அல்லது தகுதியின் அடிப்படையில் சூத்திரராக உள்ள ஒருவருக்குப் பிறந்த) சூத்திரரும் (குணவியல்பு, செய்தொழில் நாட்டம், தகுதி ஆகியவறின் அடிப்படையில்) பிராமணராகிவிடுகிறார். இது போலவே, க்ஷத்திரியர், வைசியரிலும் வர்ண மாற்றத்திற்கு வாய்ப்புள்ளது என்கிறது, இந்த மனு வாக்கு.
குணவியல்பு, ஈடுபாடு, செய்தொழில் ஆகியவற்றின் விளைவாக வர்ண மாற்றம் ஏற்படுகிறது என்பதை விவரிப்பதற்கென்றே மனு நூலில் 12 வாக்குகள் உள்ளன. அவற்றுள் ஒரு வாக்குகூட பிறப்பின் அடிப்படையில் வர்ணம் அமைவதாகக் கூறவில்லை என்பதோடு, பிறவிக்கும் வர்ணத்திற்கும் தொடர்பில்லை என்பதை யும் மிகத் தெளிவாகவே நிறுவுகிறது.
’மானார்ஹஹ சூத்ரோ அபி தஷமீங் கதஹ’ என்கிறது மனு நூலின் அத்யாயம் 2-ல் உள்ள 137–வது வாக்கு. சூத்திரர்களில் முதியோராக இருப்பவர்களுக்குப் பிற மூன்று வ்ர்ணத்தாரும் முதல் மரியாதை தரக் கடமைப்பட்டவர்கள். சூத்திரர் நீங்கலாக உள்ள பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணத்தாரில், சிறந்த பண்பிற்கும் தகுதிக்கும் உரியவர்களே அத்தகைய முதல் மரியாதைக்குரியவர்களாவார்கள் என்பது இதன் பொருள்.
மனு ஸ்மிருதியை மிகவும் ஆழமாக ஆராய்ந்து, அதற்கு ஹிந்தியில் உரை எழுதியுள்ள சுரேந்திர குமார் ஆசார்ய, மனு ஸ்மிருதியின் மொத்தமுள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகள் மட்டுமே அசலானவை என்றும் 1471 வாக்குகள் வெவ்வேறு கால கட்டங்களில் திணிக்கப்பட்ட இடைச் செருகல்கள் என்றும் உறுதியாகக் குறிப்பிடுகிறார். வர்ணங்களிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பது போலவும், பெண்கள் ஆண்களைவிட மாற்றுக் குறைந்தவர்கள் மாதிரியும் எழுதப்பட்டுள்ள வாக்குகள் பிற்காலச் சேர்க்கைகளே என்று அவர் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறார்.
ஆங்கிலேய ஆய்வாளர்களான வூலர், ஜெ. ஜெனரல்.கீத், மாக்டொனால்ட் போன்றவர்கள் மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் மிகுதியாக இருப்பதை ஒப்புக்கொள்கின்றனர். மனு ஸ்மிருதியைப் பற்றி அமரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிடு கையில், அதில் இடைச் செருல்கல்கள் உள்ளன என்று தெரிவிக்கின்றது.
ஜெர்மானியத் தத்துவஞானி ப்ரெடெரிக் நீட்சே மனு ஸ்மிருதியை மிகவும் சிலாகித்துப் பேசியிருப்பதோடு அதில் பொருத்தமற்ற இடைச்செருகல்கள் இருப்பதாகவும் கருதுகிறார். அன்னிபெசன்ட் தொடங்கி, அரவிந்தர், தாகூர், டாக்டர் ராதாகிருஷ்ணன், காந்திஜிவரை பலரும் மனு நூலில் இடைசெருகல்கள் இருப்பதை ஒப்புகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் ஆன்மிக முதிர்ச்சியில் முன்னோடியான யோகி அரவிந்தர், மனுவை ‘அர்த்த தேவ’- மனித இனத்திற்கும் மேம்பட்ட அரை தேவ புருஷர்-என்று போற்றி, மனு ஸ்மிருதியைப் பாராட்டுகிறார்.
ஆகவே சமுதாயத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் தங்கள் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் அவ்வப்போது இவ்வாறு மனு ஸ்மிருதியில் தமக்குச் சாதகமான இடைச் செருகல்களைச் சேர்த்துவிட்டிருக் கின்றனர் என்ற முடிவுக்கு வர அதிக ஆய்வு தேவையில்லை.
ஒருமுறை தயானந்தர் சூரத்துக்குச் சென்றபோது அங்கு பள்ளிக் கூடக் கல்விப் பரிசோதகராகப் பணியாற்றி வந்த ஆங்கிலேயர் டாக்டர் வான் புல்லார் என்பவரைச் சந்தித்துப் பேசினார். புல்லார் சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றிருந்தார். மனு ஸ்மிருதி யைத் தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாகக் கூறிய புல்லார், அதன் பிரதியை தயானந்தரிடம் காட்டினார். அதனைக் கண்டு தயானந்தர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
மனு ஸ்மிருதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1794-லேயே வெளியாகிவிட்டிருந்தது. கீழ்த்திசை மொழியியல் வல்லுனரும், கல்கத்தாவில் இருந்த அப்போதைய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தவருமான ஸர் வில்லியம் ஜோன்ஸ் அதனை அப்போதைய கவனர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மொழிபெயர்த்திருந்தார் (அக் கால கட்டத்தில் கல்கத்தாவே நாட்டின் தலை நகராகவும் அங்கு நிறுவப்பட்ட நிதி மன்றம் உச்ச நீதிமன்றமாகவும் அங்கீகாரம் பெற்றிருந்தன).
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமைக்குரிய ஹேஸ்டிங்ஸ், ஹிந்துக்கள் பெருவாரியாக உள்ள நாட்டில், ஹிந்துக்களின் குடிமை வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க ஹிந்துக்களின் குடிமைச் சட்டங்களைப் பயன்படுத்துவதுதான் முறையாக இருக்கும் என்று கருதினார். கீழ்த்திசை மொழியியல் வல்லுனரான வில்லியம் ஜோன்ஸ் சட்டம் படித்துத் தேறியவர் என்பதோடு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தமையால் அவரிடம் அதுபற்றி ஆலோசனை கேட்டார். தனி மனித நடத்தை, சிவில், கிரிமினல் விதிகள், ஆட்சி நெறிமுறை ஆகியவையெல் லாம் ஒருசேர இடம் பெறுள்ள அற நூல்கள் சில சமஸ் கிருதத்தில் உள்ளன என்றாலும் அவற்றுள் மிகவும் முக்கிய மானது மனு ஸ்மிருதியே என்று தெரிவித்தார், ஜோன்ஸ்.
அதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருமாறு வாரன் ஹேஸ்டிங்ஸ் கேட்டுக் கொண்டார்..
ஹீப்ரூ, பாரசீகம், அரபி ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த ஜோன்ஸ், சீன மொழியும் அறிந்திருந்தார். ஆனால், சமஸ்கிருதத்தில் அந்த அளவுக்கு அவர் தேர்ச்சி பெற்றிருக்க வில்லை. எனவே சமஸ்கிருதப் பண்டிதர்களின் துணையோடு மனு ஸ்மிருதியை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு உதவி செய்வதற்காக வந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களேயன்றி, சுய சிந்தனை யுடன் பொருத்தம் பார்த்துப் பொருள் கூறக் கூயவர்களாக இருக்கவில்லை. ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்த போதிலும் அது பற்றிய ஆய்வுப் பார்வையின்றி வெறும் கற்றுச் சொல்லிகளாக, சொல்லுக்குச் சொல் ஒரு பொருள் கூறி அவர்கள் அமைத்த வாக்கியங்களின் அடிப்படையிலேயே ஜோன்ஸ் மனு ஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து முடித்தார்.
மனு ஸ்மிருதிக்கு ஏற்கனவே வில்லியம் ஜோன்ஸின் ஆங்கில மொழியாக்கம் இருப்பதை தயானந்தர் அறியாமல் இருக்க வாய்ப்பிலை. எனினும் டாக்டர் வான் புல்லாரின் மொழி பெயர்ப்பை அவர் பாராட்டியதை அறியும்போது, ஜோன்சின் மொழியாக்கத்தை அவர் அவ்வளவாக ஏற்கவில்லை என்று கருதலாம். ஏனெனில் தயானந்தருடன் சமஸ்கிருதத்திலேயே உரையாடும் அளவுக்கு புல்லார் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஜோன்ஸ் ஓர் அவசியம் கருதி மனு ஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் என்றால் புல்லார் சுய ஆர்வம் காரண மாகவே அதைச் செய்தார். ஜோன்ஸும் ஹிந்து தத்துவ நூல் களில் மிகுந்த மரியாதையும் உயர்ந்த எண்ணமும் கொண்டிருந்த வர்தாம் என்றாலும், புல்லார் பிற ஹிந்து தத்துவ நூல்களோடு மனு ஸ்மிருதியின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்ததால் தான் அதனை மொழியாக்கம் செய்ய முடிவு செய்திருக்க வேண்டும். ஏனென்றால் மனு நூலை ஏற்கனவே ஜோன்ஸ் மொழியாக்கம் செய்துவிட்டிருப்பது அவருக்கும் தெரியும்தானே! ஒருவேளை ஜோன்ஸின் மொழிபெயர்ப்பில் அவ்வளவாகத் திருப்தியடையாததால்தான் புல்லார் மீண்டும் மனுவை மொழி யாக்கம் செய்ய முற்பட்டிருக்கக் கூடும்.
தயானந்தரின் பார்வையில் மனு ஸ்மிருதி நடுநிலை தவறாத ஒரு நீதி நூலாகவே காட்சியளிக்கிறது. தமது ஸத்தியார்தப் பிரகாசத்தின் ஆறாவது அத்தியாயத்தில் அரசியல், ஆட்சிமுறை, நீதி பரிபாலனம் ஆகியற்றை விவரிக்கும் அவர், மனு ஸ்மிருதி யில் அரச தர்மம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ள விதிமுறை களையே பெரும்பாலும் எடுத்தாள்கிறார். இன்னும் சொல்லப் போனால், தனி மனித ஒழுக்கவியல், சமூகவியல் ஆகியவற்றை விட, அரசியல் குறித்த மனு நீதி விதிகளைத்தான் அவர் அதிகம் மேற்கோள் காட்டுகிறார்.
மனு ஸ்மிருதியின் ஏழாம் அத்தியாயத்தில் உள்ள 334-338, 344-347, 350-51, 386 ஆகிய வாக்குகள், தண்டனைகள் குறித்துப் பேசுகின்றன அரசனிலிருந்து, அரச குடும்பத்தினர், அரசவைப் பிரதானிகள், நீதிபதிகள், பெற்றோர், ஆசிரியர், மனைவி, நண்பர் கள், என எவரையுமே விட்டு வைக்காமல் அனைவரும் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை ஏற்றாக வேண்டும் என்று மனு ஸ்மிருதி சிறிதும் தயக்கமின்றி வற்புறுத்துகிறது. இவ்வாறு தண்டனை வழங்குகையில், ஒரு சாமானியக் குடிமகனுக்கு அளிக்கப்படும் தண்டனையைவிட அரசனுக்கு வழங்கப்படும் தண்டனை ஆயிரம் மடங்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துகிறது. அதுவே அரசனின் அமைச்சன் என்றால் எண்ணூறு மடங்கும், அவனுக்குக் கீழே உள்ள அதிகாரி யெனில் எழுநூறு மடங்கும், அவனுக்கும் கீழ் நிலையில் உள்ள சிறிய அதிகாரிக்கு அறுநூறு மடங்குமாக தண்டனை இருக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அடிமட்டத்தில் உள்ள அரசு ஊழியனுக்குரிய தண்டனை, சாதாரணக் குடிமக னுக்கு விதிக்கப்படும் தணடனையைவிட எட்டு மடங்கு கூடுத லாக இருக்க வேண்டும் என்கிறது, மனு நீதி.
இதேபோல வர்ணாசிரமப் பிரிவுகளின் அடிப்படையிலும் விகிதா சாரப்படி தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதி செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் பொது அறிவுள்ளவன் திருடினால் திருடப்பட்ட பொருளின் பெறுமானத்தைப்போல எட்டு மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிற மனு ஸ்மிருதி, திருடியவன் சூத்திரன் எனில் பதினாறு மடங்கும், வைசியன் எனில் முப்பத்து இரணடு மடங்கும், க்ஷத்திரியன் என்றால் அறுபத்து நான்கு அல்லது நூறு மடங்கும், பிராமணன் என்றால் நூற்றிருபது மடங்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. வர்ணப் பிரிவு களின் பிரகாரம் மனு ஸ்மிருதி இவ்வாறு கூடுதலாக அபராதம் விதிப்பதற்குக் காரணமாக, திருடுவது தவறு என்பதை உணரும் அவரவர் அறிவு நிலையையே ஆதாரமாகக் கொள்கிறது..மேலும், கொலைக் குற்றம் நிரூபணமானால் அதற்கு மரண தண்டனை விதிக்கும் மனு ஸ்மிருதி, குற்றவாளி பிராமணனாக இருப்பினும், வேறு யாராக இருந்தாலும் மரண தண்டனைக் குரியவரே என்று மிகத் தெளிவாகவே அறிவுறுத்துகிறது. மரண தண்டனைக்கு பிராமணரும் விதிவிலக்கல்ல என்று மனு ஸ்மிருதி உறுதிபடத் தெரிவித்துள்ள போதிலும், மனு ஸ்மிருதியை விமர்சிக்கும் சிலர் அதனைக் கருத்தில் கொள்ளாமல், கொலைக் குற்றம் நிரூபண மான பிராமணனுக்குத் தண்டனையாக அவனது சிகையை அறுத்து நாட்டைவிட்டு விரட்டினால் போதும் என்று மனு விதி செய்திருப்பதாகக் கூறிக் கண்டிக்கின்றனர்.
மகாபாரதத்தில், பஞ்ச பாண்டவர்களின் குழந்தைகளை அசுவத் தாமன் நய வஞ்சகமாகத் தீக்கிரையாக்கிய குற்றத்துக்காக அது மிகக் கொடிய கொலைக் குற்றம் என்ற போதிலும் அவன் பிராமணன் என்பதால் அவனது சிகையை அறுத்து, நாட்டை விட்டுத் துரத்தினாலே அது மரண தண்டனைக்குச் சமம் என்று கண்ணபிரான் ஆலோசனை கூறுவான். பாண்டவர்களும் அதனை ஏற்று அசுவத்தாமனுக்கு மரண தண்டனை விதிக்காமல் சிகைய அறுத்து, விரட்டிவிடுவார்கள். மனு நூல் விமர்சகர்கள் த்மது மனு எதிர்ப்புக்கு இதனையும் ஒரு அத்தாட்சியாக எடுத்துக் காட்டுவதுண்டு.
கண்ணபிரான் அசுவத்தாமன் விஷயத்தில் அவ்வாறு சலுகை அளித்தமைகுப் பல காரணங்கள் உண்டு. சிரஞ்சீவி வரம் பெற்ற அசுவத்தாமனுக்கு மரண தண்டனை விதிப்பது பொருந்தாது என்பது ஒரு புறமிருக்க, தான் செய்த சிசு ஹத்திகளுக்காக அவன் மனம் நோவதோடு, உடல் முழுவதும் தீராத நோய் நொடிகளுடன் கால காலத்திற்கும் அலைந்து திரிவதே மரண தண்டனையைக் காட்டிலும் கொடிய தண்டனையாக இருக்கும் என்கிற எண்ணத்தோடும் கண்ணபிரான அவ்வாறு ஆலோசனை கூறியிருக்கக் கூடும்!
காலப் போக்கில் அவரவரும் மனம் போன போக்கில் நுழைத்து விட்ட இடைச் செருகல்கள் எல்லாம் களையெடுக்கப்பட்டு, அசலானதாகச் சலித்து எடுக்கப்பட்ட மனு ஸ்மிருதியைத்தான் ஆரிய சமாஜம் தலையாய அறநூலாகவும், சட்டப் புத்தகமாகவும் கருதுகிறது.
[சென்னை 18 கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ஆரிய சமாஜம் என்ற எனது சிறு ஆய்வு நூலில் (விலை ரூ. 60/-) இடம் பெற்றுள்ள கட்டுரை இது. ஸ்ரீ பாபு என்ற வாசகர் மனு ஸ்மிருதியைப் பற்றி நீங்களோ வேறு எவரேனுமோ விளக்குவீர்களா என்று விசாரித்ததால் இதே கேள்வி மேலும் பலருக்கும் இருக்கக்கூடும் எனக் கருதி இதனை அனுப்பியுள்ளேன். மனு ஸ்மிருதியின் சமஸ்க்ருத மூல நூலை ( பாட பேதங்கள் உள்ள மாற்றுப் பிரதிகளையும் சரி பார்த்து) வைத்துக் கொண்டு வரிக்கு வரி மொழியாக்கம் செய்து, முன்னுக்குப்பின் முரணாக உள்ள வரிகளைத் தர்க்க ரீதியாக விவாதித்துப் பொருத்தம் பார்த்து ஒரு தொகுப்பை வெளியிடும் விருப்பம் நீண்ட நாளாக உள்ளது. ஆனால் இப்பணியினை யாரேனும் ஸ்பான்சர் செய்தால் மட்டுமே மேற்கொள்ள இயலும். ஏனெனில் இதற்கான தொடர்பு நூல்களை வாங்குவத்ற்கும், அடையாறு பிரம்ம ஞான சபை நூலகம் முதலான நூலகங்களிலிருந்து சம்பந்தப்பட்ட நூல்களைத் தேர்வு செய்து பக்கங்களை நகல் எடுப்பதற்குமே ரூ. 25, 0000/- க்குமேல் ஆகிவிடும். தற்போது கிலாஃபத் இயக்கம் பற்றிய ஆய்வு நூல் எழுதும் திட்டத்தை மேற்கொண்டுள்ளேன். இதற்கே ரூ. 25, 000/- மதிப்புள்ள நூல்கள் தேவைப்படுகின்றன. அருமையான நூல்கள். பாரபட்சமின்றி பிற நாட்டு ஆய்வாளர்களால் எழுதப்பட்டவை. அவற்றை ஆதாரமாககொண்டு எழுதினால்தான் முழுமையாக இருக்கும். இதுவரை நான் திரட்டியுள்ள ஆதாரங்கள் போதுமானவை அல்ல. ஆனால் அத்தனை விலை கொடுத்துப் புத்தகங்கள் வாங்க வசதியில்லை! – மலர்மன்னன்]
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- பின் துரத்துதலின் அரசியல்
- மனித வாழ்க்கை
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- தேனு கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- அனுதாபத்திற்குரிய அவன்
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- எதோவொன்று
- உரோம இழை!
- மரண ஒத்திகை!
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- “பண்பின் வழியில்……………..“
- வயிற்றால் வந்தது
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- திரைகள்
- பொறித்துளி வளர்கிறது
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- இடமாற்றம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- முன்னேற்றம்
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- பக்கங்கள்
- தன்னிலை
- ப.மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)