நேசமுடன் வெங்கடேஷ்
சென்ற வாரம், கே.பாலசந்தரின் ‘ஒரு கூடை பாசம்’ என்ற மேடை நாடகத்தைப் பார்த்தேன். இதைப் போன்ற சபா நாடகங்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்களுக்குப் போயிருக்கிறேன். நகைச்சுவைத் துணுக்குகள்தான் அங்கே முக்கியம் என்பதால், கதையோ, காட்சிகளோ, காட்சி அமைப்போ, இன்ன பிற நாடக அம்சங்களோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அதையெல்லாம் சீரியஸ்ஸான நாடக முயற்சிகளாக யாரும் எடுத்துக்கொள்வது மாதிரியும் தெரியவில்லை. அதனால், விமர்சிக்கவும் ஒன்றும் இல்லை.
கே.பாலசந்தரின் நாடகத்தைப் பற்றிய விமர்சனத்தை கல்கியில் எழுதியிருக்கிறேன். அடுத்த இதழில் இடம்பெறும் என்று நினைக்கிறேன்.
இந்த நாடகத்தைப் பார்த்தபின், நான் மட்டுமல்ல, என் குடும்பம் முழுவதும் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துபோனோம். என் இளைய மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒவ்வொரு முறையும் மேடையில் காட்சி மாறும்போதும், ‘ஏன்ப்பா, மேடையில் கரண்ட் போயிடுச்சா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். மனைவிக்கோ தாங்க முடியவில்லை. பாதியிலேயே எழுந்துபோய்விடலாமா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மூத்த மகளோ, தலையில் அடித்துக்கொள்ளாத குறை. ‘என்னப்பா இவ்வளவு ப்ரிமிட்டிவ்வா இருக்காங்க?’ என்கிறாள் அவள்.
இந்த நாடகத்தைப் பற்றி எனக்குப் பல வருத்தங்கள் உண்டு. முக்கியமாக, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாதது, இயக்குநரின் மேடையைப் பயன்படுத்தும் ஞானம். மேடை என்பது ஒரு பெரிய ஸ்பேஸ். அதை நீங்கள் ஒரு ஓவியத்துக்கான கேன்வாஸ் என்று எடுத்துக்கொண்டால், அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா? இந்த நாடகத்தில் எல்லோரும் மேடை நடுவே வந்து பேசுகிறார்கள். அல்லது, இருக்கையில் உட்கார்ந்துகொண்டு பேசுகிறார்கள். என்னதான் நீங்கள் அதை A Delightful Romantic Drawing Room Comedy என்று விளம்பரப்படுத்தினாலும், எந்த டிராயிங் ரூமில் நாம் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருக்கிறோம்?
மேடையை முழுவதும் பயன்படுத்தும் வித்தையை நான் ந.முத்துசாமியின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன். நவீன நாடகத்தைப் பொறுத்தவரை, முத்துசாமியும் இ.பா.வும்தான் என் குருக்கள். 1980களின் கடைசியில் சின்னக் கல்லூரிப் பையனாக ஓர் ஓரங்க நாடகத்தை எழுதிக்கொண்டு, முத்துசாமியிடம் போய் நின்றேன். அப்போது, கூத்துப்பட்டறையின் பயிற்சிகள் அனைத்தும் தீவுத்திடலில் இருந்த ஓர் சிறிய அரங்கத்தில் நடைபெறும். இன்று திரையில் புகழ்பெற்று இருக்கும் பல நடிகர்கள் அங்கே நாடகப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு இருப்பார். என் நாடகப் பிரதி, சென்னையின் தண்ணீர் பிரச்னையைப் பற்றியது. அதுமட்டும்தான் இப்போது ஞாபகம் இருக்கிறது. அந்தப் பிரதி அப்புறம் எங்கோ தொலைந்துபோய்விட்டது.
அதற்கு முன்னர் மீட்சி இதழில் (என்று நினைக்கிறேன்), அம்பை ஒரு நாடகம் எழுதியிருந்தார். பெண்கள் பிரச்னையை மையப்படுத்தி எழுதப்பட்ட அந்த நாடகம், வட்டவடிவ அரங்கமைப்பில் நடத்தக்கூடியதாக எழுதப்பட்டிருந்தது. அதனால் உந்துதல் பெற்று, என் ஓரங்க நாடகத்தை எழுதியிருந்தேன். நாடகப் பிரதியைப் படித்த முத்துசாமி, என் முதிர்ச்சியின்மையைப் புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆனால், ஏதும் சொல்லாமல், மெல்ல என் நாடக ஈடுபாட்டையும் வாசிப்பையும் கேட்க ஆரம்பித்தார். பின்னர், நிறைய படிக்கச் சொன்னார். பல நாடக ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னார். என் நாடக ஈடுபாடு அப்படித்தான் ஆரம்பித்தது.
அதன்பிறகு தொடர்ந்து நாடகங்கள் பார்க்க ஆரம்பித்தேன். நாடகப் பிரதிகளைப் படிக்க ஆரம்பித்தேன். தமிழில் ‘வெளி’ என்ற நாடக இதழை ரங்கராஜன் கொண்டு வந்தார். மிகப் பிரமாதமான இதழ் அது. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, இ.பா.வின் ’மழை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ’ஒளரங்கசீப்’, ‘இராமாநுஜர்’, ’இறுதி ஆட்டம்’, ’கொங்கைத் தீ’ என்று தொடர்ந்து படித்தவன், பாதல் சர்க்காரின் நாடக்ங்கள், ஞாநி, பிரபஞ்சன், இன்குலாப், எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோர் எழுதிய நாடகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் அப்சர்ட் தியேட்டர் என்று சொல்லப்படும் நாடக வகை என்னை மிகவும் ஈடுபாடு கொள்ள வைத்தது. ஐனஸ்கோ முக்கிய ஆசிரியர்.
தமிழ் நாடகப் பிரதிகளில் என்னை மிகவும் பாதித்தவர் இந்திரா பார்த்தசாரதிதான். அவரது நாடகங்கள் நடிக்கவும் படிக்கவும் உகந்தவை. படிக்கும்போதே, கண்முன்னே காட்சிகள் விரியும். மேலும், அவர் தன் நாடகங்களுக்கு எழுதும் முன்னுரைகள் அவ்வளவு வலுவானவை. கொங்கைத் தீ நாடகத்துக்கு இ.பா. ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரத்தின் நவீன நாடக வடிவம், கொங்கைத் தீ. ஊழ் பற்றிய என் கருத்துகளை, அந்த முன்னுரையைப் படித்துத்தான் கட்டமைத்துக்கொண்டேன்.
எத்தனை நாடகக் குழுக்கள் அப்போது சென்னையில் உற்சாகமாக இயங்கின? ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நவீன நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். நண்பர் ராமானுஜம் ‘ஆடுகளம்’ என்றொரு குழு நடத்தினார். செய்திவாசிப்பாளர் நிஜந்தன் ஒரு நாடகக் குழுவை வைத்திருந்தார். பின்னர் ‘மெளனக் குறம்’ என்றொரு நாடகக் குழு இருந்தது. மதுரையில் நிஜ நாடகக் குழு இருந்தது. இன்னும் பல நாடகங்கள் அப்படியே மனத்தில் நிற்கின்றன. ந.முத்துசாமியின் இயக்கத்தில், ‘இங்கிலாந்து’ என்றொரு நாடகம் நடந்தது. அவ்வளவு அழகிய நாடகம். பின்னர் அதையே அன்மோல் வெல்லனி என்றொரு இயக்குநர் நடத்தினார். பெரிதாக மனத்தைக் கவரவில்லை.
சுபமங்களாவின் நாடக விழா, என் நாடக ஆர்வத்துக்கு இன்னும் சுவை கூட்டியது.
இன்றைக்கு, சென்னையில் உதாரணமாகக் காட்டக் கூட ஒரு நவீன நாடகத்தைக் காணோம். ஒரு நாடகப் பிரதி மேடையில் நடிக்கப்படும்போது, அது ஜீவன் கொள்ளத் தொடங்குகிறது. காட்சி ரீதியான ரசனையை எனக்கு நாடகங்கள்தான் சொல்லித் தந்தன. நடிகர்களின் உடல்மொழி, ஈடுபாடு, மேடையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, குரல் ஏற்ற இறக்கம், மேடையில் இருக்கும் பொருள்கள், ஒளி, ஒலி என்று ரசனை அங்கே கட்டமைக்கப்படுகிறது.
மேடை என்பது வெறுமனே வசனம் பேசிவிட்டுப் போகும் இடமல்ல. ஜோக் அடித்துவிட்டுப் போகும் இடமும் அல்ல. அது பார்வையாளர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஒரு சூழ்நிலையை, ஒரு நிலைமையைப் பல அடுக்குகளில் பொருள் புரிந்துகொள்ள வைக்கும் இடம், மேடை. பார்வையாளர்கள் தங்களை மறந்து மேடையோடு ஒன்றிப்போக வேண்டும். இன்றைக்குத் திரைப்படங்களுக்கு விஷுவல் பியூட்டி என்று ஒன்றைச் சொல்கிறார்கள். அதை மேடையில் கொண்டு வரும்போது, பார்வையாளர்களுக்கு கிடைக்கும் ரசனை நிறைவு என்றென்றும் நிலைத்து நிற்பது.
இன்றைக்கு நாடகப் பிரதிகள் கூடப் படிக்கக் கிடைக்கமாட்டேன் என்கிறது. சித்தன் பிரசாத் நடத்தும் யுகமாயினி இதழில் ஒரு நாடகப் பிரதி வெளியானதைப் பார்த்தேன். மற்றபடி வேறு எந்த பெரிய இதழும், சிறுபத்திரிகையும் நாடகங்களை வெளியிடக் காணோம். இது பங்குச் சந்தையின் சுழற்சி முறை போல், ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது போலிருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் நிறைய புது நாடக மேடை ஏற்ற முயற்சிகள், நாடகப் பிரதிகளை வெளியிடும், புதிய குழுக்களை ஆரம்பிக்கும் முயற்சிகள் இருந்தன. இப்போது, கட்டுரைகளின் காலம் போல் இருக்கிறது. சுழற்சியில் மீண்டும் நாடகங்களுக்கும் ஒரு காலம் வரும். எப்படி எஃப்.எம். வந்து மீண்டும் வானொலிக்கு உயிர் கொடுத்ததோ, அப்படியே நாடகங்களிலும் ஒரு புதுமை வரும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.
=======================
- காலை வாரி விடுதல் …..
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !
- திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து
- உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்
- மீண்டும் நாடகம் வருமா?
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி
- ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்
- வேத வனம் விருட்சம் 58
- காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )
- தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:
- உயிர் தொங்கும் வாழ்க்கை
- இன்றின் கணங்கள்
- பொய்யாகிப் போன ஒரு பொழுது
- போகிற போக்கு…
- நட்பு
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி
- பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6
- தாத்தா பேரன்
- பொழுது விடிந்தது
- முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)
- முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்
- முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்
- நினைவுகளின் தடத்தில் – (37)
- ஆன்மீக வியாபாரிகள்
- செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- காணும் கடவுள்கள்
- இருந்து …இறந்தது…….
- எனது டயரிக் குறிப்பில் வார்த்தை
- என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்
- கோ.கண்ணன் கவிதைகள்:
- நிஜம்