பாரதிராமன்
புதுமைகள் நிறைந்து சிறக்கும் காலமிது; மனித ஆளுமை முந்தைய எல்லைகளைக் கடக்கின்ற காலம்;மாற்று இதயமும் சிறுநீரகம் போன்றவைகளையும் பொருத்தி மரணத்திலிருந்து உயிர்களை மீட்கும் காலம்; சினை முட்டைகளையும் விந்தணுக்களையும் உடலுக்கு வெளியே சேர்த்துவைத்துப் பின்னர் கருப்பையிலிட்டு குழந்தைகளைப் பிறப்பிக்கும் காலம் !
மனிதனின் ஆளுமைக்குட்பட்ட கவிதை இயக்கத்திலும் மாற்று உறுப்புக்களைப் பொருத்தியும், வெளிச்சேர்க்கைமுறைகளைக் கையாண்டும் உயிர் கொடுக்க முடியுமா என்ற சிந்தனை எனக்குள் எழ, சங்கப் புலவர் கண்ணன்சேந்தனாரும் சமரசப் புலவர் இராமலிங்க சுவாமிகளும் என் நினைவில் தோன்றினர்.
அவர்களுடைய சில கவிதைவாிகளைப் பெயர்த்தெடுத்து என் சொற்களோடு பொருத்தி ஒரு புதுக் கவிதையை உயிர்ப்பிக்கமுடியுமா என்ற முயற்சியில் விளைந்ததே இது!
முன்னதாக, திணைமொழி ஐம்பதில் கண்ணன்சேந்தனாாின் பதினெட்டாவது கவிதை:-
‘கதிர் சுடக் கண்ணுடைந்து முத்தம் சொாியும்
வெதிர் பிணங்கும் சோலைவியன் கானம் செல்வார்க்
கெதிர்வன போலிலவே யெல் வளையோ கொன்னே
உதிர்வன போல வுள. ‘
‘என் கையில் உள்ள ஒளியுடைய வளையல்களோ கதிரவன் மிக்க வெப்பம் வீசுதலால் கணுக்கள் உடையப்பெற்று முத்துக்களைச் சிந்தும் மூங்கில் புதர்கள் கலந்து காண்கின்ற சோலைகளையுடைய பொிய காட்டின் வழியே செல்ல விரும்பிய நம் தலைவர்க்கு உடன்படுவனபோல் இல்லாமல் வீணே உதிர்வனபோல் கைகளினின்று கழன்று விழுகின்றன. ‘-என்று பிாிவால் வாடும் தலைவி தன் தோழியிடம் கூறுவதான செய்தி இது.
இனி, இராமலிங்கசுவாமிகளின் திரு அருட்பாவிலிருந்து ஒரு பாடல்:-
‘ காடுவெட்டி, நிலம் திருத்தி, காட்டெருவும் போட்டு
கரும்பை விட்டு, கடு விரைத்து, களிக்கின்ற உலகீர்,
கூடுவிட்டுப்போயினபின் எது புாிவீர் ? எங்கே
குடியிருப்பீர் ? ஐயோ, நீர் குறித்தறியீர், இங்கே
பாடுபட்டார், பயனறியீர், பாழ்க்கிறைத்துக் கழித்தீர்.
பட்டதெல்லாம் போதும், இது பரமர் வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்ப மிகப்பெறுவீர்
எண்மை யுரைத்தேனல நான் உண்மை உரைத்தனனே. ‘
இது எளிதில் விளங்கக்கூடிய பா. வாழ்வை வீணடிப்பதை விடுத்து உலகத்தோரை இறைவன்பால் நாட அழைக்கும் பா,
இவ்விரண்டு பாடல்களோடுகூட என்னிடம் சில சொற்கள் களையிழந்தவைகளாக உயிர்த்துடிப்பைத்தேடிக் காத்திருக்கின்றன. அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டு மாற்றுறுப்புகளைப் பொருத்தியாவது அவைகளை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு பாக்களிடமும் அனுமதி பெறுகிறேன்.
இனி என்ன, கவிதை மேசையில் இவ்விரு பாடல்களும் என் சொற்களும் கிடத்தப்பட்டு அறுவைச் சிகிச்சைக்குத் தயார் !
பொறுமையான சிகிச்சைக்குப்பின் ———————————–:
‘ கதிர் சுடக் கண்ணுடைந்து முத்தம் சொாியும்
வெதிர் பிணங்கும் சோலைவியன் கானம் ‘
‘ வெட்டி, நிலம் திருத்தி, காட்டெருவும் போட்டு,
கரும்பை விட்டு, கடுவிரைத்து, களிக்கின்ற ‘
கதை கடிந்துடன் விதைக்கச் சொன்னார்
வீாிய சோளத்தை விவசாய அதிகாாி, மீசையை உருவி!
கஞ்சிச் சோளத்தோடு கவிதைச் சொற்களையும் விதைக்க
சங்கப் புலவர் கண்ணன் சேந்தனார் நின்று
சந்தப் புலவர் சாமி வள்ளலார் வரை
வந்த தமிழ்க் கவிதை புதிதாய்
நந்தம் விதைப்பிலும் நன்கு விளையுது பார்!
ஒரு கவிதை புதிதாய்ப் பிறந்துவிட்டது!
உறுப்புகளைத் தானம் செய்த பாடல்களில் இன்னும் சில சொற்கள் உயிர்த் துடிப்புடன் உள்ளனவே, அவற்றையும் பயன்படுத்தலாமே, வீணடிக்காமல், என்று முடிவெடுத்து முயற்சி செய்ததில் சிகிச்சை மேடையில் இன்னொரு கவிதையும் பிறந்தெழுந்தது:-
‘எதிர்வன போலிலவே யெல் வளையோ கொன்னே
உதிர்வன போல வுள ‘ என வருந்தி பெண்டிர் நீவிர்
வீடு ‘விட்டுப்போயினபின் எது புாிவீர் ? எங்கே
குடியிருப்பீர் ? ஐயோ, நீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டார், பயனறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெல்லாம் போதும். இது ‘ தேர்தல் ‘வரு தருணம் ‘
ஓட்டுப் போட ‘வருவீரேல் இன்பமிகப்பெறுவீர் ‘.
வீசப்பட்ட வாக்குறுதிகளில் வேண்டியதை
வசப்படுத்த வாய்ப்பான தருணம் வருவீர்,வருவீர்!
உதிராத ‘ யெல் வளை ‘யும் பெறுவீர், பெறுவீர்!
‘எண்மை யுரைத்தேனல நான் உண்மை உரைத்தனனே. ‘
கண்ணன் சேந்தனாரும் கவி வள்ளலாரும்
மண்ணாகிப் பெயர்ந்து மீட்டும் கூடு பாய்ந்து
கண்ணாகி உயிர்ப்பித்த கவிதையே சாட்சியாக.
இவ்விரண்டு கவிதைகளிலும் மேற்கோள் குறிகளுக்குள் அடைக்கப் பட்டுள்ளவை பழைய கவிதைகளிலிருந்து அப்படியே எடுத்தாளப்பட்ட வாிகள்.புதிய வாிகளுடன் அவற்றை இணைத்துப் பதிய வைத்து புதிய கவிதைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
சிகிச்சை வெற்றி! கவிதை ?!
———————————————————————————