மாற்றம்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

பாரி பூபாலன்


காலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. எழுந்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்று சனிக்கிழமை. வேலைக்குப்போகத்தேவையில்லை. போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மேலே பார்த்தபடி படுக்கையிலேயே படுத்துக் கிடந்தான். எவ்வளவு நேரம் இப்படியே படுத்துக்கொண்டு மேலே பார்த்துக்கொண்டிருப்பது ? அவனுக்கு போரடித்தது. சுப்புணி கூட இருந்தவரையில் அவனுக்கு இப்படி போரடித்ததில்லை. இப்போது தனியாக இருந்துகொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. டிவியைப் போடலாம் என்றால் அதில் காலையிலேயே ஒன்றும் பார்க்கிறமாதிரி இருக்காது. ரொம்ப நேரம் படுத்துக்கொண்டே இருக்கவும் முடியவில்லை.

சரி எழுந்திருக்கலாம் என்று முடிவு செய்து எழுந்து பல் விளக்கச் சென்றான். பல்லைப் பொறுமையாக விளக்கினான். ஒன்றும் அவசரமில்லை. தேய் தேய் என்று தேய்த்து முடிந்து கழுவிக்கொண்டதும், கீழே சென்றான். மணியைப்பார்த்தால் ஆறரைதான் ஆகியிருந்தது. மெதுவாக இங்குமங்குமாய் நடந்துகொண்டு அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்தான். சோபாவில் படுத்துக்கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அதுவும் பிடிக்கவில்லை. அதை தூக்கி எறிந்து விட்டு டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தான். அதிலும் ஆர்வமில்லை அவனுக்கு.

நேரம் சீக்கிரமாய் ஆக மாட்டேன் என்கிறது.

‘சுப்புணி! திருட்டுப்பையன். கல்யாணத்தைப் பண்ணித்தொலைச்சுட்டான். அதனாலே தனியா வேற வீடு பாத்துகிட்டுப் பொயிட்டான். இருந்தாலும் சனி ஞாயிறு அவன் வீட்டுக்குப்போய் கதைபேசிட்டு வந்தாதான் பொழுது ஒருமாதிரியா போகுது. ‘

மனதுக்குள் அவனது சிநேகிதனைத் திட்டிக்கொண்டிருந்தான்.

‘சுப்புணி இந்நேரம் எழுந்திரித்திருப்பானோ ? எழுந்திரிச்சிருந்தா காலையிலேயே அவன் வீட்டுக்கு போகலாம். அங்கு போய்ப் பேசிக்கொண்டிருக்கலாம். ‘

போனை எடுத்து சில எண்களை அமுக்கினான்.

சுப்புணி வீட்டில் போன் அடித்தது. நாலைந்து மணி அடித்ததும் தூங்கிக்கொண்டிருந்த சுப்புணி பாதித்தூக்கத்தில் போனை எடுத்தான்.

‘அலோ… ‘

பக்கத்தில் படுத்திருந்தவளுக்கு தூக்கம் கெட்டு விடக்கூடாதென்று குரலைத் தாழ்த்தியே பேசினான் சுப்புணி. கல்யாணம் ஆகி சில மாதங்கள்தான் ஒடியிருக்கிறது. அவளின் தூக்கத்தை உதாசீனப்படுத்த இன்னும் தைரியம் வரவில்லை.

‘டேய் இன்னும் தூக்கமா ? ‘

‘என்னடா ? ஏதும் முக்கியமா சேதியா ? என்னா காலையிலேயே போன் ? ‘

‘ஒன்னும் இல்லே. எழுந்துட்டு போரடிக்குது. என்னா செய்றதுன்னு தெரியலை. அதான் அடிச்சேன் போனை. எழுந்திரிடா ‘

‘ஒனக்கு வேறே வேலை இல்லே. பேசாம படுத்துத் தூங்குடா. இன்னிக்குதான் கொஞ்சம் நிம்மதியா தூங்கமுடியும். அவ நல்லா தூங்கிகிட்டு இருக்கா. சத்தம் கேட்டு அவ வேறே எழுந்திருச்சுடப்போறா. ‘

சொல்லி போனை வைத்து விட்டு மறுபடியும் தூங்கப்போனான் சுப்புணி.

அவனுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. வருடக்கணக்காய் சுப்புணியுடன் ஒன்றாகத் தங்கி இருந்தவன். கூடத்தங்கியிருந்தபோது, சனிக்கிழமைகள் இப்படி போரடிக்காது. காலையில் எழுந்து அவனை அடித்து உருட்டி எழுப்பி உட்கார வைத்து விடுவான். பின் இருவருமாய்ச் சேர்ந்து ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். சமையல்கட்டில் வேலையை பங்கு போட்டு சாப்பாடு ஏதாவது செய்து சாப்பிடுவது முதல் வெளியில் கிளம்பி கடைகள் லைப்ரரி என்று ஊர் சுற்றுவது வரை ஒன்றாய்ச் செய்து கொண்டிருப்பார்கள். இருவருக்கும் வேலை வெவ்வேறு இடத்தில் இருந்தாலும், பள்ளியிலிருந்து ஒன்றாய்ப்படித்ததால் ஏற்பட்ட சிநேகம் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. அவனுக்கு சுப்புணி பக்கத்தில் இருந்தால் போதும். நேரம் போவதே தெரியாது. சுவையாய்ப் பேசுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்.

பேசாமல் கிளம்பி அவன் வீட்டுக்குப் போகலாமா ? அவன் யோசித்துக்கொண்டிருந்தான். சரி, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் ஒரு பத்து மணிக்குப் போனால் சாயந்திரம் வரை அங்கே பேசிக்கொண்டு இருந்துவிட்டு வரலாம்.

அப்படி இப்படியென்று ஒரு வழியாய் நேரத்தைத் தள்ளினான். மணி பத்தானவுடன் இருப்புக் கொள்ளாமல் கிளம்பி காரை எடுத்துக்கொண்டு விரைந்தான். வருகிறேன் என்று போன் செய்து சொல்லக்கூடத் தோன்றவில்லை அவனுக்கு.

‘ட்ரிங்க்க்க்க்…. ‘

வீட்டு அழைப்பு மணி அடித்ததைக்கேட்டு சுப்புணிக்குச் சிறிது எரிச்சல்.

‘யாராக இருக்கும் காலையிலேயே ? கண்ணனாக இருக்குமோ ஒரு வேளை! ‘ முகத்தில் தெரியும் எரிச்சலை மறைத்துக்கொண்டு கதவைத்திறந்தான்.

‘என்னடா எழுந்தாச்சா ? ‘

பேசிக்கொண்டே அவனைத் தள்ளிக்கொண்டு உரிமையுடன் உள்ளே போய் உட்கார்ந்தான்.

‘என்னடா போன் பண்ணிட்டு வருவேன்னு பாத்தேன். ‘ சுப்புணியால் அவன் வருவதால் வருத்தமில்லை. ஆனால் முழுமையான சந்தோஷமுமில்லை. அவனது மனைவி ஏதாவது சொல்லிவிடுவாளோ என்கிற பயம் இருந்தது. அதே நேரத்தில் அவனைக் கடிந்து கொண்டால் அவன் எங்கே தப்பாக எடுத்துக்கொள்வானோ என்கிற பயமும் இருந்தது.

‘எதுக்கு வீனா ஒரு போன். நேராவே போயிடலாம்னு கிளம்பி வந்துட்டேன். சரி என்ன பண்ணலாம் இன்னிக்கு ? எங்காவது வெளியே போலாமா ? ‘

என்ன பண்ணலாமா ? சுப்புணிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இவனுக்கு எப்படி புரியவைப்பது ? நான் இன்னும் பழைய சுப்புணி இல்லை. கல்யாணம் ஆகிவிட்டது. இனிமேல் பழைய மாதிரி இருவரும் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்க முடியாது. என்னைச் சார்ந்து இருக்க ஒருத்தி வந்துவிட்டாளே. அவள் தன்னுடன் செல்ல வேண்டும் என நினைப்பாளே! எனக்கு அவனிடமிருந்து கழட்டிக்கொள்ளவேண்டும் என நினைப்பில்லை. இருந்தாலும் எப்போதும் அவன் நம்முடன் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. அவனுக்காய்த் தெரியவேண்டும். இதனை எப்படி அவனுக்குப் புரியவைப்பது ? சுப்புணிக்கு அவனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

குளித்து முடித்தவள் தயாராகி கீழே வந்தாள் அவள். வந்து உட்கார்ந்தவனைப் பார்த்ததும் சிறிது அதிர்ச்சி. இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் அவனை வாங்க என்று கூறி வரவேற்றாள்.

சமையல் அறையில் நுழைந்தவளைப் பின் தொடர்ந்த சுப்புணியை பாவமாய்ப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ‘ஒங்க •ப்ரண்ட் காலையிலேயே வந்தாச்சு. இன்னிக்கு பொழுது உருப்பட்ட மாதிரிதான். ‘ என்று கூறாமல் கூறுவது தெரிந்தது.

‘என்ன டிபன் இன்னிக்கு ? ‘ வந்தவன் சமையல் கட்டுக்குள் கூட வந்துவிட்டான்.

‘தோசை போடப்போறாடா. உக்காரு சாப்பிடலாம். ‘

‘சரி சாப்பிட்டு என்ன பண்ணலாம். ஷாப்பிங் போலாமா ? ‘

அவளுக்கு அவன் பேசுவதைக்கேட்க கேட்க எரிச்சல் இன்னும் அதிகரித்தது.

‘சரியான முட்டாளாய் இருப்பானோ ? கொஞ்சம் கூட இங்கிதம் தெரிய மாட்டேங்குதே. ஷாப்பிங் அவன் தனியா போய்கிட்டா என்ன ? சனி ஞாயிரானா சனியன் மாதிரி வந்து ஒட்டிக்குதே ‘

வெளியில் சொல்ல முடியவில்லை அவளுக்கு. அவளது ஆதங்கம் அவளுக்கு. வார நாட்களில் வேலையே கதியென்று கிடக்கும் சுப்புணியின் அருகாமை சனி ஞாயிறுகளில்தான் கிடைக்கிறது. அதையும் குழப்படி செய்ய இவன் வந்துவிட்டால் என்னென்று சொல்வது ? வெளிப்படையாக அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. சுப்புணியும் அவனும் ரொம்ப காலத்து சிநேகிதர்கள் என்று அவளுக்குத்தெரியும். அந்த சிநேகிதத்தை அவள் கெடுக்க விரும்பவில்லை.

பொறுமையுடன் சில தோசைகளைச் சுட்டு அவர்கள் தட்டில் போட்டாள். நண்பர்கள் இருவரும் பேசிச்சிரித்துக்கொண்டே ருசித்துச் சாப்பிட்டனர்.

அவன் சாப்பிட்டு முடிந்ததும், ‘சரி நீங்க ஒக்காருங்க. நான் தோசை போட்டுத்தாரேன். ‘

‘நீ விடுடா. அவளே போட்டுக்குவா. ‘

‘இல்லேல்லெ இருக்கட்டும் ‘ என்று கூறி வலுக்கட்டாயமாக தோசை போட்டுக் கொடுத்தான்.

அன்று நாள் முழுவதும் அவன் அங்கேயே இருந்தான். சுப்புணியுடன் உட்கார்ந்து சன் டிவி பார்த்துக்கொண்டே கதையடித்தபடியும் சாப்பாட்டு நேரத்தில் கிடைத்த சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டபடியும் அவனுக்கு பொழுது அங்கே நன்றாகக் கழிந்தது. சுப்புணிக்குத்தான் தன் மனைவியைப்பார்க்க பாவமாக இருந்தது. அவள் பொறுமையாக சமையல் செய்தபடியே இருந்தாள். அடிக்கடி உள்ளே சென்று அவளுக்கு கோபம் வரக்கூடாதென்பதற்காக சில வார்த்தைகள் ஆறுதலாய் பேசிவிட்டு வந்தான்.

வந்தவன் இரவானதும் வீட்டுக்கு கிளம்பினான்.

‘சரி நாளைக்குப் பாக்கலாமா ? ‘

‘சரிடா ‘

அவன் கிளம்பியதும், சுப்புணி யோசித்தான். அவனுக்கு தர்மசங்கடமாய் இருந்தது. ஒருபுறம் தன் மனைவி. புதிதாய் வந்தவள். தன்னைத்தவிர வேறு யாரையும் தெரியாதவள். இன்னொரு பக்கம் நீண்ட காலமாய் ஒன்றாய்ப் படித்து, ஒரே வீட்டில் வசித்து பழகிய தோழன். அவளுக்காக அவனது நட்பைத்துண்டித்துக்கொள்ளவும் அவனுக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் வாராவாரம் அவன் இங்கு வந்து ஒட்டிக்கொள்வதை தொடரவும் மனமில்லை.

யோசித்துக் கடைசியில் போனை எடுத்து சுழற்றினான். அவன் இன்னும் வீடு போய்ச் சேர்ந்திருக்க மாட்டான். பேசாமல் அவனது போனிலே பேசி வைத்து விடலாம். அவன் வந்து கேட்டுக்கொள்ளட்டும்.

சுருக்கமாய் ஒரு செய்தியை அதில் விட்டுவிட்டு போனை வைத்து விட்டான். அவன் இதை வைத்து புரிந்துகொண்டால் நல்லது.

வீடு சேர்ந்த அவன் போனில் மினுக் மினுக் என்று ஒளிர்ந்து கொண்டிருந்ததைப்பார்த்து அதிலொரு பட்டனை அமுக்கி செய்தி என்னவென்று கேட்டான். சுப்புணியின் செய்தி இருந்தது.

‘கண்ணா, சுப்புணி பேசரேண்டா. நாளைக்கு நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன். அவ எங்கியோ போகனுங்கிறா. அவளை அழைச்சுகிட்டு பொயிட்டு வரனும். அதனாலே வீட்டுலே இருக்க மாட்டோம். நீ வேறே எதுவும் வேலை இருந்தா பாரு. நாம அடுத்த வாரம் பாக்கலாம். ‘

அதில் இருந்த செய்தி அவனுக்குப் புரிந்தது.

அதைக் கேட்டவிட்டு ஒரு பெருமூச்சுடன் அதை அழித்துவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

சோர்வாய் சோபாவில் சாய்ந்து கொண்டு டிவியை ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

***

pariboopalan@hotmail.com

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்

மாற்றம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

பொன். முத்துக்குமார்


‘எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ‘
களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்;
‘என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ?
சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ‘
என்றபடி பவ்யமாய் விசாரிப்பார்
கோயிலுக்கு மரம்கொடுக்க
அனுமதியின்றி எங்கள்
கூரைவீட்டுக் கொல்லைக்குள் புகுந்து
மரம் வெட்டிய விவகாரத்தில்
அப்பாவை ‘போடா ‘ என்று விளித்து
என் பதினைந்து வயதில்
என்னிடம் அறைவாங்கி
என்னை உதைத்த
கலியமூர்த்தி;
‘நல்லா யிருக்கியாப்பா ?
அண்ணன் சொன்னான் நீ வந்திருக்கிறதா ‘
என்றபடி ஈரமாய் குசலம் விசாரித்த –
ஓய்வுபெற்றபிறகு
வெறுமையும், தளர்வுமாய்
முன்பற்களிழந்து வலம்வரும் –
கன்னத்திலறைந்து
குவியதூரம் போதித்த
எட்டாம் வகுப்பு ராஜாராமன் சார்
டிகிரி படித்துவிட்டு
ஊர்சுற்றிக்கொண்டிருக்கும்
தன் மகனை நினைவுபடுத்துவார்.
‘கொளத்தங்கர வாத்யார் பையன்;
என்னடா பொடியா எங்க வந்த ? ‘
என்று
நான் டவுசர் நழுவும் வயதில்
டயர் உருட்டிக்கொண்டு போன
அக்பர்பாய்கடையில் விசாரித்த
விடலைகள் தற்போது
புன்னகையோடு வணக்கம்வைத்து
தலையாட்டி
வேகமாய் சைக்கிள் மிதித்துப்போகும்.
யிவ்வளவுக்குமிடையில்
வெளிதேசத்திலிருந்து
வருடங்கள் கடந்து
ஊர்திரும்பியிருக்கும் நான்.

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்