மாண்டூக்யோபநிஷதம்.

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

ருத்ரா


ஓடும் மேகங்களே

சற்று நில்லுங்கள்

நான் காளிதாசன் அல்ல

விரக தாபத்தை

விரவி

உனக்கு கவிதையெழுத.

வைரமுத்து அல்ல

உன்னைக்கிழித்து

காதலிக்கு

ரவிக்கை தைக்க.

நான் ரவிவர்மா அல்ல

உன்னைக் குழைத்தெடுத்து

சகுந்தலையை

தூரிகை வழியே

பிறப்பித்து வைக்க.

பிக்காசோவும் அல்ல

உன் ‘ஜியொமிதி ‘ உருவங்களில்

உணர்ச்சியின்

புடைப்பு ஓவியங்களை

படைத்து வைக்க.

டி.எஸ் எலியட் அல்ல

அந்த ‘உள்ளீடற்ற ‘

வெறுங்கூட்டு மனிதனுக்குள்

வார்த்தைகளின்

மின்னல் ரசம்

பாய்ச்சி வைக்க.

நான்

டாக்டர் பென்ரோஸ ‘ம் அல்ல

ஸ்டாஃபன் ஹாக்கிங்கும் அல்ல

வானம் வழியே

பிரபஞ்சத்தின்

சல்லடைக்குள் புகுந்து

அந்த ‘கருங்குழி ‘களின்

கணித சூத்திரங்கள் எனும்

கண்ணி வெடிகளை அகற்றும்

விளையாட்டில்

மண்டைகாய்ந்து கொள்ள.

நான் அவன் அல்ல.

அந்த மொட்டைமாடியில்

படுத்துக் கொண்டு

மேகப்பொட்டலத்தை

அவள் வீசிய

கைக்குட்டையாய்

கனவு கண்டு கொண்டிருப்பதற்கு.

நான் அவள் அல்ல

அந்த சன்னல் வழியே

மேகங்கள் எனும்

பஞ்சுமிட்டாய் வனத்திடையே

அவனை

ருசித்துக்கொண்டிருப்பதற்கு.

அதோஅந்த

இருட்டுச்சகதியில்

உழன்று கொண்டிருக்கும்

‘மாண்டூகம் ‘ நான்.

வறட்டுக்குரல்கள்

மொய்க்கும்

கும்பமேளாவில்

குடியிருக்கும்

தவக்களை நான்.

விடிகின்ற சூரியனை

வழிமறிக்கும் மேகங்களே

ஓடிப்போங்கள்.

ஓடுமுன்

எனது ‘மாண்ட்டூக்யோபநிஷதம் ‘

கேளுங்கள்.

மூன்றுதோல் போர்த்திய

இந்த ‘ஓங்காரம் ‘

உறுமும்

உட்பொருள் கேளுங்கள்.

ஜாக்ரதம் எனும்விழிப்பு.

ஸ்வப்னம் எனும் கற்பனை.

ஷ ‘ஷ ‘ப்தி எனும்

விழிப்புணர்ச்சியுடைய

கற்பனை.

துரீயம் எனும்

நான்காவதாய்

ஒரு ‘தவளைப்பாய்ச்சல் ‘.

இப்போது

நீ கழன்று கொண்டுவிட்டாய்.

இந்த பிரபஞ்சத்தை

ஜூஸ் போட்டுக் குடி!

……………….

‘ஒன்றுமே புரியவில்லையா ?

வேண்டாம்.

அகரம்

உகரம்

மகரம் எனும்

ஓங்காரத்தின்

மூன்று தீயுமே

உனக்கு

காதல்..காதல்..காதலே தான் !

அவள் கண்ணில் முதல் தீ.

உன் நெஞ்சில்

பற்றியது மற்றொரு தீ.

அந்த நினைவு சுடும் தீ

இன்னொரு தீ.

இருவர்

ஒருவராய் ஆகிடும்

நான்காவது பாய்ச்சலில்

பரமாத்மாவிடம்

ஜீவாத்மாவுக்குக் காதல் ‘

……………….

ப்ரஹ்ம்மோபதேசம்

முடித்து

புறப்பட்ட தவளை

அந்தோ!

அந்த வரப்பில்

ஒரு எருமைமாட்டின்

கால் குளம்பில்

மிதிபட்டு நசுங்கி..

அதோ..அதன்

தீனக்குரலில்

இன்னும் கேட்கும்

ஒரு மாண்டூக்யோபநிஷதம் !

Series Navigation

ருத்ரா

ருத்ரா