விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

இளைய ஜீவா


விஷ்ணுபுரம் நாவல் குறித்து தமிழகத்தில் அது வெளிவந்த போது எழுந்த பல சந்தேகங்கள் இப்போதுதான் இணைய விவாதங்களில் எழுவதை காணமுடிகிறது.இவை குறித்து இங்கு பலவாறாக பேசி ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டது.மதுரையிலும் தஞ்சையிலும் நடந்த விவாத கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.இது பற்றிய கட்டுரைகளையும் படித்தேன்.சில விசயங்களை என் தரப்பாக சொல்லலாம் என்று பட்டது.

1] விஷ்ணுபுரம் ஏன் தமிழ் பண்பாடு பற்றி அதிகம் பேசவில்லை ?

விஷ்ணுபுரத்தின் கரு என்ன ?அது விஷ்ணுபுரத்தை பற்றிய நாவல். விஷ்ணுபுரம் வடக்கிலிருந்து வந்த மஹாவைதிகனான அக்னிதத்தன் அவனது சொல்லை நிலைநிறுத்தும் பொருட்டு அச்சொல்லை கல் வடிவமாக மாற்றியதனால் உருவானது என்று நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது.அதாவது இந்நாவல் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி பேச வரவில்லை இதன் இலக்கு தமிழ் நாட்டின் மீதான வைதிகப் பண்பாட்டு ஆக்கிரமிப்பு மட்டுமேயாகும்.அதனுடன் தொடர்புள்ள அளவில் மட்டுமே இது மற்ற விஷயங்களை பற்றி பேசுகிறது.ஆகவே தமிழ் பண்பாட்டின் ஒட்டுமொத்த காட்சி இதிலில்லை என்பது பொருந்தாகூற்று மட்டுமேயாகும்.

2] விஷ்ணுபுரம் வைதீக பண்பாட்டின் ஆக்கிரமிப்பை பெரிதுபடுத்திகாட்டுகிறதா ?

நமது புராணங்களின் மீது அதே புராணக் கற்பனை உத்தியை பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சிதான் விஷ்ணுபுரம்மதில் உள்ள எல்லா விசயங்களுக்கும் புராணங்களிலும் காவியங்களிலும் முன்மாதிரி உண்டு. அக்னிதத்தனை நாம் அகத்தியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் குறித்த ஐதீகத்துடன் ஒப்பிடுவது நலம் பயக்கும்.தமிழ் பண்பாட்டின் மூல ஊற்றாக வருணிக்கபடுபவர் அகத்தியன்.சோதிடம்,மருத்துவம்,சிற்பம்,ஆகமம் ஆகியவற்றின் முதல் நூல்கள் இவர் எழுதியவையாக சொல்லபடுகின்றன.இவரே தமிழின் முதல் இலக்கண நூலை எழுதியவர்.மட்டுமல்ல காவிரியே இவரது கமண்டலத்தில் இருந்து பிறந்ததுதான்.இவர் வடக்கிலிருந்து வந்தவர்.இதே போல கேரள மண் முழுக்க வடக்கில் இருந்து வந்த பரசுராமன் மழு வீசி உண்டாக்கியதுதான்.இவ்வாறு ஐதீகங்களை வைத்துப் பார்த்தால் வடக்கின் ஆக்கிரமிப்பு கிட்டத்தட்ட முழுமையாகவே இருந்திருப்பது தெரிகிறது.இத்தனை வருடம் இம்மாதிரி ஐதீகங்கள் எப்படி நீடித்தன என்பதும் யோசிக்கவேண்டிய விசயம்தான். இதைபற்றி யோசிக்காமல் அகத்தியனை தமிழ் வேடம் போட வைக்கவே நாம் இதுகாறும் முயற்சி செய்துள்ளோம் அல்லவா ?விஷ்ணுபுரம் எடுத்து பேசுவது இந்த விசயத்தைதான்.

ஆனால் இந்நாவலில் அக்னிதத்தன் அந்த அளவு பெரிதுபடுத்தப் படவில்லை.அவன் இங்கு வந்து இங்கிருந்த ஒரு கருத்தியல் தேவையை தீர்த்து வைத்து அதற்கு பிரதியுபகாரமாக பாண்டியனிடம் இருந்து சில சலுகைகளையும் அதிகாரங்களையும் பெற்றான் என்று மட்டுமே காணப்படுகிறது.அவனது அதிகாரம் செல்லுபடியாவது விஷ்ணுபுரத்துக்கு உள்ளே தான். அதுவும் குறியீட்டு ரீதியன அதிகாரம்தான்.அதாவது ஜெயமோஹன் வட /வைதீக ஆதிக்கத்தை குறைத்து தான் காட்டுகிறார்.இது ஒருவேளை தமிழ் அரசியல் சூழல் காரணமாக எடுத்த கவனமாக

இருக்கலாம்.இல்லை உண்மையிலேயே வைதீக பண்பாட்டு அதிகாரம் மேலோட்டமானது என்று அவர் நினைக்கலாம்.ஆனால் நாவலின் முக்கிய குறைகளில் ஒன்றாக இதை நான் காண்கிறேன்.

3] விஷ்ணுபுரம் வைதிக பண்பாட்டை சிலாகிக்கிறதா ?

இது வெறுமே இதன் பெயரையும் அட்டையையும் மேலோட்டமான கதையையும் வைத்து முடிவுசெய்யபடுவது ஆகும்.நாவலில் வைதீக மரபின் கவித்துவ அம்சம் நன்றாகவே காட்டபடுகிறது.ஆனால் அதன் அதிகார அரசியலில் உள்ள குரூரமும் அதர்மமும் ஆணவபோக்கும் அபத்தமும் மிக உக்கிரமாக காட்டபடுகிறது என்பதை பல பக்கங்களில் நேரடியாகவேகாணலாம்.இது வைதீக மரபின் அதிகார அரசியலின் 4 அம்சங்களை தோலுரித்துக் காட்டுகிறது .அவையாவன.

அ] எல்லாகருத்துக்களையும் ஐதீகமாக மாற்றிவிடுவது.அதற்கு எதற்றான கருத்துக்களையும் சேர்த்து ஐதீகமாக ஆக்கிவிடுவது.நமது காலகட்டத்திலேயே பெரியாரும் காஞ்சி பெரியவரும் ஓரே சமயம் ஐதீகமாகிவிட்டார்கள் என்பதைக் காணல்லம்.

ஆ] ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி சமூகபிரிவுகளை உருவாக்கி அவற்றுக்கு அப்பிரிவை பொறுப்பாக ஆக்குவது. இதனால் அதிகாரம் உண்மையில் யாரிடம் உள்ளது என்பதே தெரியாமல் இருக்கும்.உதாரண்மாக நாவலில் வரும் வைதீக ஆட்சியாளர்கள் வன்முறையை கையாள்வதேயில்லை.அதை பிறரை வைத்து செய்யவைக்கிறார்கள்

இ] எதிர் தரப்புகளுக்கு தன் உள்ளேயே இடம் தந்து அவற்றை தோற்கடிப்பது.இது விஷ்ணுபுரம் முழுக்க நடந்தபடியே உள்ளது என்பதை காணலாம்.சங்கர்ஷணன்,பிங்கலன் ,காசியபன் எல்லாருமே வைதிக மரபின் பகுதிகளாகிவிடுகிறார்கள்

ஈ]எல்லா உலகியல் நோக்கங்களுக்கும் அடிப்படையாக உலகியலை மறுக்கும் ஒரு மைய தத்துவத்தை வைத்து அதை மட்டும் மாற்றாமல் காலத்துக்கு ஏற்ப புதுப்பித்தபடியே இருப்பது.

விஷ்ணுபுரத்தின் சிறப்பே அது எதையும் ஒற்றைப்படையாக சொல்லவில்லை என்பதுதான்.வைதீகமரபில் அற்புதமான கவித்துவமும் குரூரமான ஆதிக்க கருத்தும் பின்னிப் பிணைந்து இருப்பதை அது மாறி மாறி சொல்கிறது.உண்மையில் நாவல் முன்வைக்கும் புதிரே இதுதான்.இதை புரிந்து கொள்ளாமல் வசதியான ஒரு பக்கத்தை மட்டும் எடுத்து இஷ்டப்படி பேசுகிறார்கள் பலர் .

4]விஷ்ணுபுரத்தில் தமிழ் பண்பாட்டு அம்சமே இல்லையா ?

தமிழ் பண்பாடு பற்றிய உதாசீனமான பார்வையில் இருந்து எழக்கூடிய வினா இது.வைதீக மரபை எதிர்கொள்ளும் முக்கிய அம்சமாக இதில் தொடர்ந்து தமிழ் பண்பாட்டின் பல முக்கிய அம்சங்கள் வந்தபடியே உள்ளன.யானை குதிரை சாஸ்திரங்களும் சரி சிற்பவியலும்சரி தமிழ் மரபுநூல்களைசார்ந்துதான் காணப்படுகின்றன.உண்மையில் ஒரு பண்பாட்டுபடையெடுப்பிற்கு பிறகு எவை தவிர்க்க முடியாமல் எஞ்சுகிறதோ

அவை தான் இங்கு வரமுடியும்.நாவலில் வரும் எல்லா மலைகளுக்கும் நதிகளுக்கும் தூய தமிழ் பெயர்கள் இருந்த விசயம் சொல்லப்படுகிறது[ஹரிததுங்கா- பசும்குன்றம் ,சோனா -பவளவரி] .ஆனால் இன்று தமிழ்நாட்டில் பல மலைகளுக்கும் நதிகளுக்கும் தமிழ் பெயர்கள் முற்றிலுமாக மறைந்து விட்டிருக்கின்றன.[தாம்ரவர்ணியின் தமிழ் பெயர் என்ன ?] பண்டைய தமிழ் நாட்டு வாழ்வியலின் ஒரு சித்திரம் இந்நாலில் உள்ளது.இது பெரும்பாலும் மணிமேகலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.இந்நாவலில் மறைக்கப்பட்ட ஒரு தமிழ் வரலாற்றின் சித்திரம்

மெலிதாக கூறப்படுகிறது.அது தமிழ் காப்பியங்களை அடியொற்றி கற்பனைசெய்யப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானது.ஆனால் இது முக்கியமாக கவனம் கொள்வது எப்படி அதிகார அரசியல் வைதீக மரபினுள் இயங்கியது என்பதைப்பற்றித்தான்.

5]விஷ்ணுபுரம் ஏன் சம்ஸ்கிருத மரபுக்கு முக்கியம் தருகிறது ?

விஷ்ணுபுரம் வைதீக அதிகாரம் பற்றிய நாவல் என்பதனால் அது சம்ஸ்கிருதத்தை பற்றி மட்டுமே பேசமுடியும்.மேலும் பல காலம் இந்தியா முழுக்க சம்ஸ்கிருதமே தத்துவ விவாதத்துக்கான மொழியாக இருந்துவந்துள்ளது.காந்தார தேசம் முதல் கன்னியாகுமரி வரை இருந்து வந்து கூடும் பண்டிதர்கள் வேறு எந்த மொழியில் பேச முடியும் ?விஷ்ணுபுரத்து ஞான சபை காஞ்சீபுரத்தில் இருந்த அபிதர்மபரிஷத்தின் மாதிரியில் படைக்கப்பட்டது என்று நாவலில் ஆசிரியர் குறிப்புதருகிறார்.நமது தத்துவ கலைச் சொற்கள் முழுக்க சம்ஸ்கிருதத்திலேயே இது வரை காணப்படுகின்றன.சைவ சித்தாந்த மரபு கூட அந்த சம்ஸ்கிருத சொற்களையே தமிழ் உச்சரிப்பில் பொருத்தி பயன்படுத்தியது.[ஸ்வபக்ஷம்-சுவக்கம்,பரபக்ஷம்-பரபக்கம் போல] சொல்லப்போனால் விஷ்ணுபுர ஆசிரியர்தான் பல முக்கிய வார்த்தைகளை முதல்முறையாக

தமிழ்படுத்தியுளார் .இதுபற்றி சைவசித்தாந்த அறிஞர் ராஜசேகரன் கூட தன் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

6]விஷ்ணுபுரம் போல ஒரு ஊர் தமிழகத்தில் இருந்ததுண்டா ?

ஜெயமோஹன் சிரமப்பட்டு விஷ்ணுபுரத்தை மலைகளுக்கு அப்பால் கொண்டுபோயிருக்கவே வேண்டாம்.சோழ மன்னர்களின் கையெட்டும் தூரத்துக்குள் தான் ஸ்ரீரங்கம் உள்ளது.எப்போதுமே அது ஒரு தனி அரசாங்கமாகத் தான் இருந்துள்ளது.[கோயிலொழுகு நூல்களில் வைதிகர்கள் வரிவசூல் செய்தமைக்கும் மரணதண்டனை விதித்தமைக்கும் தனி ராணுவம் வைத்திருந்தமைக்கும் ஆதாரம் உள்ளது] விஷ்ணுபுரத்தின் அமைப்பு ஸ்ரீரங்கத்தையே முன்மாதிரியாக கொண்டுள்ளது

7]விஷ்ணுபுரம் ஆழ்வார்களையும் பாண்டிய மன்னர்களையும் அவமதிக்கிறதா ?

அதிகாரம் சார்ந்த எவரையுமே விஷ்ணுபுரம் நல்லவர்களாக காட்டவில்லை.ஆகவே தான் அதில் பாண்டியனும் ஆழ்வாரும் அப்படி வருகிறார்கள்.உண்மையில் பழைய மன்னர்கள் பற்றி நம்மிடம் உள்ள சித்திரங்கள் கல்கி சாண்டில்யனால் உருவாக்கப்பட்டவை .அதிகார அமைப்பின் உச்சத்தில் இருப்பவர்கள் அவ்வாறு தான் இருக்கமுடியும்.பாண்டியன் சதிகாரன் ,போகி என்றெல்லாம் [நான் சித்த வைத்திய குடும்பத்தில் பிறந்தவன்.பல முக்கிய நோய்கள் மன்னர்களுக்கு வருபவை என்று குறிப்பு உண்டு.அவற்றில் வெக்கை நோய்கள் தான் அதிகம்]

சொல்லப்படுகிறது.ஆனால் அவன் சடங்கு/மரபுகளுக்கு அடிமை என்றும் காட்டபடுகிறது.எனக்கு இதுதான் நம்பகமான சித்திரமாக படுகிறது.அப்படி இல்லாவிட்டால் அம்மன்னன் மஹாபுருஷன் என்றுதான் பொருள்.உண்மையான ஆழ்வார் [ஆழ்ந்தவர்]நாவலில் வருகிறாரே.திருவடியாழ்வார்.பித்தும் கவிதையும் கலந்த இசைக்கோலங்கள் தானே ஆழ்வார்பாடல்கள் ?ஆழ்வார்கள் ஒரு வைதீக மறுப்பு எழுச்சியின் விளைவுகள் தானே ?திருவடியாழ்வார் அப்படித்தான் காட்டபடுகிறார் ?ஆனால் அவரது எழுச்சியில் இருந்தும் அதே மதமரபுதான் பிறந்தது என்பதுதான் விஷ்ணுபுரம் காட்டும் வரலாற்று சோகம் ?

8] விஷ்ணுபுரம் வரலாற்று நாவலா ?

வரலாற்றின் ஒரு காலகட்டத்தை விவரிக்க விஷ்ணுபுரம் முயலவில்லை.ஆனால் அது வரலாறு இயங்கக் கூடிய விதம் பற்றி ஒரு விரிவான சித்திரத்தை தருகிறது.ஆகவே அது ஒரு வரலாற்று நாவல்தான். நாவலின் முதல் பகுதியில் வரும் ஐதீகமனிதர்கள் எல்லாரும் இரண்டாம் பகுதியில் நிஜ மனிதர்களாக வருகிறார்கள்.நிஜ மனிதர்கள் அனைவரும் மூன்றாம் பகுதியில் ஐதீகங்கள் ஆகிவிடுகிறார்கள்.வரலாறு என்பது

ஐதீகங்கள் மூலம் எப்படி நெசவு செய்யபடுகிறது என்று காட்டும் நாவல் இது.

அதேபோல நேரடியாக தத்துவ போராட்டங்கள் நடந்த காலமான 5 ம் நூற்றண்டு முதல் இஸ்லாமிய படையெடுப்பான 13ம் நூற்றண்டு வரையிலான தமிழக வரலாற்றை நாவல் குறிப்பாக காட்டுகிறது.பல உட்குறிப்புகள் மிக முக்கியமானவை.உதாரணமாக பெளத்த மதம் வரும்போது வணிகர்கள் ஆதிக்கம் பெறுகிறார்கள்.பக்தி இயக்கம் வரும்போது மூன்றாம் தள ஜாதிகள் ஆதிக்கம் பெறுகிறார்கள் என்றுகாட்டபடுகிறது.

ஆயினும் விஷ்ணுபுரத்தின் வரலாற்று பார்வையின் முக்கிய அம்சம் அது பழங்குடி மரபுக்கு தரும் முக்கியத்துவம் தான்.இது இந்நாள் வரை பிற ஆசிரியர்கள் கவனிக்காத ஒரு கோணம்.எப்படி தமிழ் பண்பாட்டை வைதீகம் தோற்கடித்ததோ அதேபோல தமிழ்பண்பாட்டால் தோற்கடிக்கப்பட ஒரு பெரும் பழங்குடி பண்பாடு எல்லா வரலாற்றுக்கும் அடியில் உள்ளது .விஷ்ணு புரண்டு படுக்கும் பிரளயம் வரும் போது மிஞ்சுவது அது மட்டுமே என்று காட்டுகிறது இந்நாவல்.இப்படி ஒன்றை ஒன்று வெட்டும் 3 அடுக்குகளாக நாவல் வரலாற்றை சித்தரிக்கிறது.

அதேபோல வரலாறு போராலோ மற்ற விசயங்களாலோ ஙுருவாவது இல்லை என்று நாவல் காட்டுவதும் முக்கியமானது.வரலாறு கருத்துக்களினால் ஆனது என்று காட்டுகிறது இந்நாவல்.ரிக் வேதம் முதல் கடைசியில் தாந்த்ரீகம் வரை கருத்துக்கள் மூலம் நகரும் வரலாறு இதில் காட்டபடுகிறது.

9]விஷ்ணுபுரம் சிதறிக்கிடக்கிறதா ?

நவீன நாவல்களை அதிகம் படிக்காத ஒருவருக்கு அஓஅடிதோன்றலாம்.நேரடியாக ஒரு கதைக்கோடு இதில் இல்லை.ஆனால் வாசகனின் கற்பனையில் அது உருவாக முடியும்.உண்மையில் நாம் வரலாற்றை அறிவது இப்படி துளிகளாகதானே ?தொகுத்துக் கொள்வது நாம் தானே ?முக்கியமான உலகபுகழ் பெற்ற நாவல்களை பார்த்தால் இப்படி பட்ட விரிந்தபடியே போகும் வடிவம் இருப்பது தெரியவரும். போரும் அமைதியும் கூட வடிவமற்ற நாவல் என்று சொல்லபடுகிறது.உலிஸஸ் நாவலுக்கு பிறகு சிதறி கிடக்கும் வடிவமே முக்கியமானதாக ஆகிவிட்டது.

மேலும் முக்கியமான விஷயம் விஷ்ணுபுரம் ஒரு புராணம் போல எழுதப்பட்டுள்ளது.எல்லா புராணங்களும் உதிரி விஷயங்களின் தொகுப்புகளாகவே காணப்படுகின்றன.

10]விஷ்ணுபுரம் விஷ்ணுவை முன்னிறுத்துகிறதா ?

நாவல் படித்து முடிக்கும்போது தெரியும் நாவல் வெங்காயம்யுரிப்பதுபோல விஷ்ணுவை பிரித்து பிரித்து ஆராய்ச்சி செய்து கடைசியில் அது விஷ்ணுவே அல்ல என்ற இடம் வரை போகிறது

உண்மையில் இந்த விசயங்கள் எல்லாம் இந்நாவலில் ஒருசில பக்கங்கள் மட்டுமே.இது தனிமனிதர்களின் ஆன்மீக தேடலின் கதை.அதற்கும் வரலாற்றுக்கும்கைதீக மரபுக்கும் உள்ல உறவு குறித்த நாவல் இது.இந்த கேள்விகள் எல்லாமே பெரிய தீவிரமான நாவல்களை கூர்ந்து படித்து விவாதிக்காதவர்களால் எழுப்பப் படுபவை .இவற்றை கடந்த பிறகே நாவல் மீது உண்மையான வாசிப்பும் கூரிய விமரிசனமும்

சாத்தியமாக முடியும்.

Series Navigation

இளைய ஜீவா

இளைய ஜீவா