மனமொழி

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

காஞ்சனா தாமோதரன்


கலிஃபோர்னிய இளவெயில். மென்காற்று. ஏறியிறங்கும் சாலையோரப் பாதையில் நடப்பதே மலையேறுவது போல் உற்சாகமூட்டியது. என் கூட வந்த மரியா அப்படி நினைக்கவில்லை. நீங்களும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று என்னைக் கேட்டு முடிப்பதற்குள் அவருக்கு மூச்சு வாங்கிற்று. மீண்டும் பேசாமல் நடந்தார். அவரது ஒன்பது வயது மகனுக்கு எந்தச் சிரமுமில்லை. வாயால் வாகன ஒலியெழுப்பியவாறு அவன் அங்குமிங்கும் வளைந்து வளைந்து ஓடும் சுதந்திரத்தில், அந்தத் தெரு முழுதும் தன்னது என்கிற தோரணை தெரிந்தது.

மெக்ஸிக்கோவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் வாழும் பகுதி அது. மதியச் சாப்பாட்டுக்கும் அதைத் தொடரும் சிறு ‘சியெஸ்டா ‘வுக்குமான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது தெருவின் வெறிச்சோடிய அமைதியில் தெரிந்தது. தெருக்கோடிக் கடை மூடுவதற்குள் சில சாமான்கள் வாங்கத்தான் இந்த அவசர நடை.

இந்த மக்களின் ‘சியெஸ்டா ‘ வழக்கம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் காலத்துத் தாயகத்தில் வீட்டுப் பெரியவர்களும் பெண்களும் மதியத்தில் உறங்கும் வழக்கம் ஞாபகம் வந்தது. காயும் வெயிலில் கரையும் காக்கைகளும் அப்பாக்களும் பெரிய வகுப்புப் பிள்ளைகளும் வயல்காட்டில் உழைப்பவர்களும் மட்டுமே தூங்காதவர்கள் அப்போது. பள்ளியின் துவக்க வகுப்புகளில், தட்டி மறைத்த சன்னல் வழியே பாயும் இருளில், சிறு சிறு பாய்களில் சுருண்டு படுத்துத் தூங்கியதாய் ஞாபகம்–இடது பக்கமாய் ஒருக்களித்து, இதயத்துக்கும் மண்ணுக்குமிடையே ஓரங்குல இடைவெளியுடன். ஆசிரியையின் குரல் தணிந்தாலும் அதில் எப்போதுமிருக்கும் கோபம் நீங்குவதில்லை. பேசாதீர்கள். மெல்ல மூச்சு விடுங்கள். தூங்குங்கள். தூங்குவது போல் பாவனை செய்து அரைக்கண் திறந்து பார்த்தால் தெரிவது இன்னும் சில அரைக்கண் புன்னகைகள்.

மீண்டும் கலிஃபோர்னியா. மெக்ஸிக்க மரியா. மரியாவின் மகன். எதிரே பிரத்தியேகப் பேரங்காடி.

அங்காடியின் உள்புறம் மெக்ஸிக்கோவில் நான் பார்த்த கடைகள் போலிருக்கிறது. பளிச்சென்ற வண்ணங்கள். சுவர்களை நிறைக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள். உறியடி போல் விளையாடுவதற்காக விட்டத்திலிருந்து தொங்கும் ‘பின்யாட்டா ‘க்கள் (பலவண்ணக் காகிதங்களினால் ஆன கழுதைப் பொம்மைகள்). மெக்ஸிக்க இசை. மெக்ஸிக்கப் பொருள்கள். இரட்டைக் கலாச்சார மாறுவேடம் பூண்ட அமெரிக்கப் பொருள்கள். ஸ்பானிஷ் ஒலிகள்.

மரியாவின் சினேகிதிகள் சிலரைச் சந்திக்கிறோம். என்னைக் காட்டி அவர்கள் ஏதோ தீவிரமாய்க் கேட்பது புரிகிறது. உங்கள் கைத்தொலைபேசியை மறைத்து வையுங்கள், அமெரிக்கக் குடியேற்றத் துறையிலிருந்து உளவு பார்க்க வருபவர்கள் வைத்திருக்கும் ‘ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் ‘ போலிருப்பதால் சினேகிதிகள் சந்தேகித்துப் பயப்படுகிறார்கள் என்கிறார் மரியா. தன் தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்த (அந்தக் காலத்தியப் பெரிய அளவு) கைத்தொலைபேசியைப் பையின் ஆழத்துள் தள்ளுகிறேன். இங்கிருப்பவர்களில் சிலர் சட்டபூர்வ அனுமதியில்லாமல் தேச எல்லைக்கோட்டைத் தாண்டி வந்தவர்கள் என்று தாழ்ந்த குரலில் விளக்குகிறார் மரியா. தனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறார். அவர் ஒரு பையையும் அவரது மறுப்பை மீறி நான் ஒரு பையையும் சுமந்து மீண்டும் மலையேறுகிறோம். என் பையில் முளைத்திருக்கும் கொத்துமல்லி இலைக்கட்டு மணக்கிறது. பையன் முன்னால் ஓடுகிறான்.

ஸ்பானிஷ் கலாச்சார வேருள்ள ‘ஹிஸ்பானிக் ‘ மக்கள். மெக்ஸிக்கோ, போர்ட்டோ ரீக்கோ, தென்னமெரிக்க நாடுகள், க்யூபா முதலிய இடங்களிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். வேர் ஒன்றானாலும் கிளைக்கலாச்சார வேறுபாட்டு நுணுக்கங்கள் பொதிந்தவர்கள். கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா, இலினாய் (சிக்காகோ), நியூஜெர்ஸி போன்ற மாநிலங்களில் அதிக அளவில் குடியேறியவர்கள். இப்போதைய ஜனத்தொகையில் சுமார் பத்து சதவிகிதம். எண்ணிக்கையில் அதிவேகமாய் வளர்ந்து வரும் சிறுபான்மையினர்; 2025-இல் இவர்கள் மொத்த ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கோ நான்கில் ஒரு பங்கோ ஆகலாம் என்கிறார்கள் கணக்கெடுப்பவர்கள்; இவர்களைப் புரிந்து கொள்வது முக்கியம் என்கிறார்கள். மானுடவியல் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிக் குழு தயாராகிறது. நானும் போகிறேனே என்கிறேன். இதற்கு நீங்கள் எதற்கு என்கிறது தலைமையிடம். ‘ஆர்வம் ‘ என்ற பதில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்படாது–தெரியும். இழுபறிக்குப் பின், தற்சமயம் இரண்டு நாட்களுக்கு மட்டுமென்ற அனுமதி.

ஆய்வுக்குழு மதியச் சாப்பாட்டுக்குப் போயிருக்கிறது இப்போது. நான் மரியாவுடன் இருப்பதாய்ச் சொல்லி அவர்களுடனான நேரத்தை நீட்டிக் கொண்டேன். அது தவறென்பது இப்போது புரிகிறது. வீட்டில் மிச்சமிருப்பதைச் சேர்ந்து சாப்பிடுகிறேன் என்று நான் கெஞ்சுவது எடுபடவில்லை. சாமான் வாங்கக் கடைக்குப் போக வேண்டியிருக்கிறது. விருந்தோம்பலில் இவர்களும் சளைத்தவர்கள் இல்லை.

வரவேற்பறையில் ‘கோக் ‘ உறிஞ்சியபடி பையன் என்னிடம் பேச்சுக் கொடுக்கிறான். துருதுருக்கும் கண்களைப் பார்த்தால் ‘சியெஸ்டா ‘ எடுக்கப் போகிறவன் மாதிரி தெரியவில்லை. எலுமிச்சஞ்சாறை என்னிடம் கொடுத்து விட்டு மரியா சமையலறைக்குள் புகுந்து விட்டார். எண்ணெயில் ஏதோ பொரியும் சப்தமும் மணமும் வீட்டை நிறைக்கின்றன.

அறையின் ஒதுங்கிய மூலையில் மேரியின் சிலையும் மலர்களும் உள்ளிட்ட கர்ப்பக்கிரக அமைப்பைக் காட்டுகிறான் பையன்.

–இது என்னதென்று தெரியுமா ?

–தெரியும்.

–எப்படி ? உங்கள் நாட்டுக்கும் இதுதான் கடவுளா ?

–இந்தக் கடவுளையும் தெரியும். எங்கள் பள்ளிக்கூடத்தில் கும்பிட்டார்கள். என் உறவினர்களில் சிலரும் கும்பிடுகிறார்கள்.

–உங்கள் பள்ளிக்கூடத்தில் ஸ்பானிஷ் உண்டா ?

–இல்லை. என் தாய்மொழியும் ஆங்கிலமும் மட்டும்தான்.

–உங்கள் தாய்மொழியில் ஏதாவது சொல்லுங்கள், பார்ப்போம்.

சொன்னேன்.

–உங்கள் மொழியிலும் ஸ்பானிஷ் ‘ற ‘ வருகிறதே! இந்த ‘க்ரிங்கோ ‘க்களுக்கு அந்த ஒலி பிடிபடுவதில்லை, நாக்கைச் சுழற்றி உச்சரிக்க முடிவதில்லை. உங்களால் முடிகிறது. ( ‘gringo ‘: அயல்நாட்டவர், குறிப்பாக அமெரிக்கரும் பிரிட்டிஷரும்.)

நான் சாதனைப் பெண்ணாய் உணர்ந்து சிரித்தேன். என் சிரிப்பின் காரணம் புரியாமல், கொஞ்சம் தயக்கத்துடன் பையனும் சேர்ந்து சிரித்தான்.

–ஸ்பானிஷ் நன்றாய்ப் பேசுவாயா ?

–வீட்டில் ஸ்பானிஷ் மட்டும்தான். ஸ்பானிஷ் தொலைக்காட்சி. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரும் பேசுவது ஸ்பானிஷ். பள்ளிக்கூடம் போகும் வரை ‘க்ரிங்கோ ‘ மொழி எனக்கு முழுதாய்த் தெரியாது.

–திடாரென்று ஆங்கிலம் படிப்பது கடினமாய் இருந்ததோ ?

–இல்லை. அதே எழுத்துகளை ஆங்கிலத்தில் வேறு மாதிரி உச்சரிப்பது வினோதமாய் இருக்கிறது….ஹ்ம்ம்…..நான் ஒரு இரகசியம் சொல்லட்டுமா ?

குழந்தைகளின் இரகசியங்கள் எனக்குப் பிடிக்கும். அது இரகசியமே இல்லையெனப் புரியும் காலம் வரை அதை அவர்கள் பொத்திப் பாதுகாக்கும் இனிமை இன்னும் கொஞ்சம் பிடிக்கும். சரி சொல் பார்க்கலாம் என்றேன்.

–அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆங்கிலம் சரியாய் வராது….கீச்சுக்குரலில் உச்சஸ்தாயிக்குப் போகும் உயிரெழுத்துக்களும் அடித்தொண்டையில் கரகரக்கும் மெய்யெழுத்துக்களுமாய்…..

–நிறைய வருடங்கள் ஸ்பானிஷ்ஷிலேயே பேசியிருக்கிறார்கள் இல்லையா, அதனால்தான்.

–நீங்களும் உங்கள் தாய்மொழியில் மட்டும்தானே பேசியிருப்பீர்கள்…. ‘க்ரிங்கோ ‘ ஆங்கிலம் இல்லையானாலும், உங்கள் ஆங்கிலம் தெளிவாய் இருக்கிறதே.

என் தாயகத்தின் காலனீயச் சரித்திரத்தை அவனுக்கு விளக்குவது அப்போது முக்கியமல்ல என்று பட்டது. ஏதோ சொல்ல வருகிறானே சொல்லட்டும்.

–அப்பா அம்மா ஸ்பானிஷ் பற்றிச் சொல்ல வந்தாயே……

–அவர்கள் ஆங்கிலம் பற்றி. அவர்கள் ‘க்ரிங்கோ ‘க்களிடம் ஆங்கிலம் பேசினால் எனக்குக் கஷ்டமாய் இருக்கும்.

–ஏன் ?

–உச்சரிப்பு, இலக்கணம் ஒன்றுமே சரியிராது. ‘ஏ ‘ ‘ஆ ‘ என்று கண்ட ஒலிகளையும் போட்டு இழுத்து இழுத்துப் பேசுவார்கள். ‘க்ரிங்கோ ‘க்களிடமிருந்து எவ்வளவு வித்தியாசம்….

–ம்ம்ம்…..சொல்லு.

–ஓர் இரவில் காருக்கு கேஸலீன் (பெட்ரோல்) போடப் போனோம். அப்பா அங்கிருந்த இளம் உதவியாளப் பையனிடம் பேசிக் கொண்டிருந்தார். என்ன சொன்னார் என்பது நினைவில்லை. ஆனால், அந்த ஒலிகளை என்னால் மறக்கவே முடியாது. அவரது வார்த்தைகள் எல்லாம் தட்டுத்தடுமாறிக் கலந்து குழம்பி ஒரே வார்த்தையாய்–என் காலடியில், பச்சையும் நீலமுமாய் மழைநீர் மேல் மிதக்கும் கேஸலீன் மாதிரியே. அவர் சொல்ல நினைத்ததின் மீதியை அவசரமாய்ச் சொல்லி முடித்தார். நிதானமாய்ச் சொல்லுவதற்குத் தைரியம் இல்லாதது மாதிரி. கடைசி வரியை முடிக்கும் போது ‘என்னைப் புரிந்து கொள்ளத் தயவு செய் ‘ என்று கெஞ்சுவது போல் ஒரு தொனி.

–நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?

–சாலை வாகனங்களின் விளக்குகளைப் பார்த்துக் கொண்டு நான் நின்றேன். எதையும் கேட்க எனக்கு விருப்பமில்லை. ஆனால், அந்த ‘க்ரிங்கோவின் ‘ குரல் காதில் விழுந்தது. எவ்வளவு உறுதியாய்ப் பேசுகிறான். என் அப்பாவின் குரலில் இல்லாத நம்பிக்கையுடன் எப்படிப் பேசுகிறான்.

அவன் குரல் நடுங்கிற்று. ஒன்பது வயதுப் பையனை எப்படித் தேற்றுவது, தேற்றுவதை அவன் விரும்புவானா, தேற்றுதல் தேவையா என்பது புரியவில்லை. எங்கள் பெண்குழந்தையைச் சில வருடங்களே (அப்போது) வளர்த்திருந்த குறுகலான அனுபவம் இந்தத் தருணத்துக்குப் போதவில்லை.

–காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கிப் போகும் போது அப்பா என் தோள் மேல் செல்லமாய்க் கையைப் போட்டார். என் உடம்பெல்லாம் பூச்சி ஊர்வது போலிருந்தது. அவரது பிடியிலிருந்து விலகினேன். விளையாட்டாய்த் துள்ளிக் குதிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே இருளில் ஓடினேன்…..

–உனக்கு உன் அப்பா அம்மா மேல் வருத்தமா ?

–இல்லை. இப்போது நான் சந்தோஷமாய்த்தான் இருக்கிறேன்.

–அதெப்படி ?

–என் வீட்டுக் கதவைத் திறப்பதும் மூடுவதும் முக்கியமானது. வெளியே பயமுறுத்தும் ‘க்ரிங்கோ ‘ மொழி. உள்ளே ஆனந்தமான ‘எஸ்பான்யோல் ‘–ஸ்பானிஷ். இப்போது புரிந்திருக்கிறது.

–அது சந்தோஷமானதா ? எனக்குப் புரியவில்லையே.

–வீட்டுக்கு உள்ளேதான் என் தனி உலகம். வித்தியாசமான ஒலிகளினால் ஆன உலகம். அப்பா அம்மாவின் ஸ்பானிஷ் எவ்வளவு இயல்பாகக் காற்று மாதிரி வருகிறது. அவர்கள் பேசும் ஸ்பானிஷ் என்னிடம் என்ன சொல்லுகிறது தெரியுமா ?

–என்ன ?

— ‘அந்தக் ‘க்ரிங்கோக்களிடம் ‘ பேசாத வார்த்தைகளை உன்னிடம் மட்டும்தான் பேசுகிறேன். நீ எங்களுக்கு நெருக்கமானவன். அயலான் இல்லை. நீ எங்களில் ஒருவன். குடும்பத்தின் ஒரு பகுதி. ‘

‘யாவரும் கேளிர் ‘ என்று பாடிப் போனவர் இந்தப் பையனின் உலகத்தில் வாழ்ந்தவர் இல்லை.

மரியா அறைக்குள் வரவும் பேச்சு நின்றது. ‘என் இரகசியம், சொல்லாதே சரியா ? ‘ என்ற புன்னகைப் பார்வையுடன் பையன் எழும்பிப் போனான்.

* * * * * *

அன்றைய நாளின் வேலையை முடித்துக் கொண்டு ஆய்வுக்குழு வெளியேறியிருந்தது. நான் இங்கிருந்தே நேராய் விமானநிலையத்துக்குப் போவதாய் ஏற்பாடு. முழு இரவுப் பிரயாணம், வீடு போய்ச் சேர அதிகாலை ஆகிவிடும்.

மரியா கொல்லைக் கொடியில் உலர்த்திய துணிகளை உருவி மடித்து வைத்துக் கொண்டிருந்தார். வெள்ளைத் துணிகளின் வெண்மை கண்ணைப் பறித்தது. வெள்ளை உடுப்புகள் வெள்ளையாகவே இருந்தால் மேல்வர்க்கம் என்று அர்த்தப்படும், எங்கள் நாட்டில் துணி கிழிந்தாலும் பரவாயில்லை வெண்மையானால் போதுமென்று கல் மேல் ஓங்கி அடித்துத் துவைப்போம், என்று இன்னொரு மெக்ஸிக்கன் பெண்மணி நேற்றுச் சொன்னது நினைவுக்கு வந்தது.

–உங்கள் வீட்டில்தான் ‘ட்ரையர் ‘ இருக்கிறதே, மரியா ? ஏன் கொடியில் காயப் போடுகிறீர்கள் ?

–சூரிய ஒளியில் காய்ந்த துணிகள் ‘மொடமொட ‘வென்று இருப்பதைப் பாருங்கள். ஒரு தனி மணமும் வருகிறதென்று என் கணவர் சொல்லுவார். பரவாயில்லை, தொட்டுப் பாருங்கள்.

தொட்டுப் பார்த்தேன். ஒரு கணம். கொடியில் ஆடிக் கொண்டிருக்கும் துணிவரிசையும் காக்கைகளும். மஞ்சள் தேய்க்கும் கல்லும் துணி துவைக்கும் கல்லும் கிடக்கும் கிணற்றடி. கிறீச்சிடும் தண்ணீர் ஏற்றம். சந்தனச் சோப்பின் வாசம். குளித்த ஈரச்சேலையைத் தென்னங்காற்று தொடும் குளிர்ச்சி. கணம் மீண்டும் தொலைவானது.

–மரியா, உங்கள் பையன் என்னவாக வேண்டுமென்று விரும்புகிறீர்கள் ?

–எஞ்சினியர், டாக்டர், அல்லது உங்களை மாதிரி ஆக வேண்டும். மெக்ஸிகோவை விட இங்கே வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்கள் உலகத்தை விட்டுப் பையன் வெளியேற வேண்டும்.

–உங்களுக்கு அந்நியமாகி விட மாட்டானா ?

–மெக்ஸிகோவிலிருக்கும் என் பெற்றோர் என்னைக் கூட இப்போது அந்நியக் கண்களுடன்தான் பார்க்கிறார்கள். அதெல்லாம் தவிர்க்க முடியாதது. என் மகனால் ‘க்ரிங்கோ ‘க்களை விட மேலே போக முடியும். இல்லையானால், இங்கே வர நானும் என் கணவரும் பட்ட பாடெல்லாம் வீண்.

–நிச்சயம் முன்னேறுவான். கவலைப்படாதீர்கள்.

அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டு மரியா விடை கொடுக்கிறார். பையன் ஒரு புன்னகையுடன் கைகுலுக்குகிறான்; உங்களுக்கு எழுதுவேன் என்கிறான். நான் வெளியேறும் போது எதிர்ப்படும் மரியாவின் கணவர் தலைசாய்த்து மரியாதை செலுத்துகிறார். மரியாவும் கணவரும் வாசலில் நின்று கையசைத்து விட்டு உள்ளே செல்கிறார்கள். பையன் மட்டும் பாதித் திறந்திருக்கும் வலைக்கதவை மெல்ல ஆட்டிக் கொண்டு வாசலில் நிற்கிறான்.

வலைக்கதவின் வழியே அவர்கள் வீட்டு ஒலிகள் கேட்கின்றன. ஸ்பானிஷ் தொலைக்காட்சியும் குடும்பத்தினரின் உரத்த ஸ்பானிஷ் பேச்சுகளும் சப்தத்தில் போட்டியிடுகின்றன. காரை இயக்காமல் சன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி மெளனமாய் உட்கார்ந்திருக்கிறேன். என்றோ யாரோ கைப்பிடித்து வழிகாட்ட, பிஞ்சுவிரலால் சுளவு அரிசியில் ‘அ ‘ என்ற ஒலியைப் பதிவு செய்தது ஏனோ நினைவில் தோன்றி மறைகிறது. மரியா பையனைக் கூப்பிடுவது கேட்கிறது. தாய்மொழியில். ‘உள்ளே வா. வெளியே பேசுவது போல் அல்லாமல் பேசி இருக்க. ‘

(1990 குறிப்புகளிலிருந்து.)

Kanchanat@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்