மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

ஞாநி


மஞ்சுளா நவநீதன் என்ற பெயரில் உலவும் நபரை ஒரு பொருட்டாக மதித்து பதில் எழுத வேண்டிய அவசியமே இல்லை என்ற முடிவை நோக்கி என்னை அவர் தள்ளி வருகிறார். காரணம் அவர் இதழியலையும் பொது விவாத தளத்தையும் புரிந்துவைத்திருக்கும் விதங்கள் என்னுடைய புரிதலுக்கு முற்றிலும் விலகியும் அப்பாற்பட்டும் இருக்கின்றன. பெரியாரின் தாய்மொழி தெலுங்கு என்று முதலில் எழுதியது அவர்தான். அது தவறு என்று சுட்டிக் காட்டியபின்பு அது எதுவாக இருந்தாலும் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று விசித்திரமாக விவாதத்தை திசை திருப்புகிறார். ஒரு பொது விவாதத்தில் பங்கு பெறுபவருக்கு, ஒரு இதழியலாளருக்கான அடிப்படை தகுதி என்பது என்னை பொறுத்த வரை நேர்மை. தான் ஒரு தகவல் தொடர்பாக தவறு செய்தது சுட்டிக் காட்டப்பட்டால், உடனே அதி ஒப்புக் கொண்டு வருத்தமோ மன்னிப்போ கே ‘ருகிற நேர்மை.இது இல்லாதவரான இந்த நபர், இதழியலில் ஒரு உத்தி என்று தன் flippancyயை நியாயப்படுத்தி கெளரவப்படுத்தவும் பார்க்கிறார். ஞாநியின் அம்மாவும் மனைவியும் போய் கோயிலில் கும்பிடும் அம்மன்கள் யார் என்று மறுபடியும் தன் flippancyயைத் தொடருகிறார். ஞாநிக்கு மனைவி உண்டா என்று கூட அவருக்குத் தெரியாது.(கிடையாது). ஞாநியின் அம்மா கோயிலுக்குப் போவார்களா என்றும் அவருக்குத் தெரியாது.( போவதில்லை). சும்மா தடாலடியாக எழுதுவது வெற்று அரட்டைத்தனம். நந்தனில் கூறப்பட்டதற்கு நான் எழுதியதைப் பற்றி நந்தனைப் படிக்காமலே கமெண்ட் அடிப்பதும் அப்படிப்பட்ட அரட்டைதான். கருணாநிதியின் முரசொலி அலுவல்கத்தில் , புதையல் வாரப் பகுதியை ஓராண்டு காலம் நான் வெளியிலிருந்து எடிட் செய்ததனால், கருணாநிதியின் பல தார மணத்துக்கு ஆதரவாளனாகி விடமாட்டேன். அவரை கலப்புத் திருமணம் செய்தவர் என்று பாராட்டி தினமனி சென்ற ஆண்டு எழுதியபோது எந்தப் பெயராலும் பல தார மணத்தை நியாயப்படுத்தாதீர்கள் என்று கண்டித்து நான் தினமணிக்கு கடிதம் எழுத்னேன்.அதை தினமணி வெளியிட மறுத்துவிட்டது. கனிமொழியைப் போல நானும் என் அப்பாவின் மற்றொரு ‘மனைவி ‘க்குப் பிறந்த குழந்தைதான். அதனால் நான் என் அப்பாவின் பல தார மணத்தை ஆதரிப்பவனாகிவிட மாட்டேன். அவரது நினவாக நான் வெளியிட்ட சிறு நூலில் கூட தந்தையாக சிறந்து விளங்கிய அவர், கணவராக மொசமானவராக இருந்தார் என்று குறித்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் பொது அரங்கிலும் இதழியலிலும் தனி வாழ்க்கையிலும் நேர்மை முக்கியமானது. ம்.ந வின் எழுத்தில் அது இல்லை.

தொடர்ந்து பெரியாரின் அடையாளம் பார்ப்பன எதிர்ப்பு மட்டும்தான் என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது கெப்பல்ஸ் உத்தி. என்னைப் பொறுத்த வரையில் பெரியார் பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். கடவுள், மதம், சாதி, பெண்ணடிமைத்தனம் இவற்றிலிருந்து சமூகம் விடுபட வேண்டும் என்ற பெரும் நோக்குடன், தமது காலகட்டத்தின் உடனடி தேவைகளை இணைத்துப் போராடியவர். அவருடைய பல சிந்தனைகளுடன் எனக்கு உடன்பாடு உண்டென்பதால் நான் அவருக்கு உரிமை கொண்டாடுவது குரு-சீட உறவாகாது.

பெரியார் தொடர்பாக எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் முன்னரே பதில் தரப்பட்டாயிற்று என்பது நுட்பமாக வாசிக்கத் தெரிந்த எவருக்கும் புரியும். ம.ந புரியாதமாதிரி நடிப்பவர். உண்மையில் கேள்விகளுக்கு பதில் தராமல் திசை திருப்புபவர் அவரே. ‘மஞ்சுளா நவநீதன் ஆணோ, பெண்ணோ எனக்குத் தெரியவில்லை. பெண்ணாக இருந்தால், பெயருடன் ஆணைச் சேர்த்துக் கொள்ளும் அடிமைப் பார்வையை விட்டு விடட்டும். ஆணாக இருந்தால் பெண் பெயரில் இருக்கத் தேவையில்லை. ‘ என்று நான் சொன்னதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.

flippant ஆகவும், தவறைத் திருத்திக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவராகவும் உள்ள ஒரு நபரைத் தொடர்ந்து வெளியிட திண்ணை.காமுக்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். ஆனால் அத்தகையவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு என் தினக்கூலி வாழ்க்கையின் அன்றாட ஜீவனத்துக்கான நேரத்தையும் விரயமாக்கிக் கொள்ள எனக்கு எந்தக் காரனமுமில்லை. இதுவே கடைசி.

***

Series Navigation

ஞாநி

ஞாநி