போர்க்காலக் கனவு

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

திருமாவளவன்



அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த
நீண்ட இரவுகள்
இரவெல்லாம் கனவு
கனவில் இராஜநகரியின்
நெடுமுடிக் கோபுரமிரண்டும்
நொறுங்கிப் பொடிபட
நீறுகவிந்த சிதை நடு நின்று
விரிசடை சிலுப்பி
நெடுந்தாள் பரப்பி
போர்த்தி தினவெடுத்த அரசனின் சன்னதம்
சூரன் யார் ? எவன் அரசன்
என்பதறியா முப்பத்து முந்நூறுகோடி தேவரும்
பூதகணங்களும் நடுங்க
உச்சங் கொள்கிறது
உருத்திரனின் உக்கிரத் தாண்டவம்
நெற்றிக் கண்ணிலிருந்து
நிரவித் ததும்பும்
எரிமலைக்குழம்பு
தீயின் நாவும் சதை பொசுங்க எழும் நாற்றமும்
வீசும் இடிபாடுகளிடையே
குருதி வழியத் தனித்திருக்கின்றேன் நான்
வானை நிறைத்து மொய்கிறது
ராஜாலிப் பறவைகள்
சவக்களை படிந்த முகத்துடன்
தன் சவக்குழியை தோண்டுகிறான்
அந்திச் சூரியன்
தொலைவிருந்து
சிறு கீற்றாய் தொடங்கி
வியாபித்து
மிகநெருங்கி விரிகிறது
சுடலைக் குருவியின் துயரப்பாடல்
தனித்து தெரிகிறது எனது குரல்

Series Navigation

திருமாவளவன்

திருமாவளவன்