போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

சு.சண்முகேஸ்வரி


இந்த உலகத்திலேயே மிகவும் சுலபமான விஷயம் அறிவுரை சொல்வதுதான். கஷ்டமான விஷயம் அதன்படி நடப்பது என்பார்கள். கேரள எழுத்தாளர் சுகுதகுமாரி சொல்வது மட்டுமல்ல, அதன்படி நடப்பவரும்கூட! சமூகத்தின் இழிவுகளைக் குறை கூறி, நிறைய புத்தகம் எழுதி, விருதுகள் குவித்து, காலம் கழிக்கும் சாதாரண எழுத்தாளராக மட்டும் இருக்க இவரால் முடியவில்லை. சமூகத்தின் அழுக்குகளை, அபலைப்பெண்களின் கதறல்களை, இயற்கையின் நாசத்தை கவிதைகளாக, கட்டுரைகளாக மக்களுக்கு எடுத்துரைப்பதோடு, தானே போராட்டக் களத்தில் குதித்துப் பல வெற்றிகளும் பெற்றவர்.

திருவனந்தபுரத்தில் தென்னை மரங்கள் சூழ இருக்கிறது சுகதகுமாரியின் வீடு. அறிமுகம் இல்லாவிட்டாலும்கூட கூச்சமின்றி சிரிக்கும் மலர்த் தோட்டத்தைத் தாண்டிப் போகும்போதே சொல்லாமல் வந்து குடியேறுகிறது சந்தோஷம் நம் மனதில்.

கணவரை இழந்திருக்கிற துக்கத்திலும் வயதாவதின் இயல்பிலும் கொஞ்சம் தள்ளாடி நடக்கிறார். ஆனால், பேசத் தொடங்கினால் உடுத்தியிருக்கிற வெள்ளை புடவையைப் போலவே எளிமையும் தெளிவுமான பேச்சு சுள்ளென்று பாய்ந்து நமக்குள் புதுவேகத்தை புகுத்துகிறது.

” இந்தக் காலத்துப் பொண்ணுங்க முப்பத்தஞ்சு வயசு வரைக்கும்கூட கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க. கேட்டா, ‘கல்யாணம், குழந்தை, குட்டினு ஆயிட்டா, நமக்குனு ஒரு விலாசத்தை உண்டாக்க முடியாது’ சொல்வாங்க. உங்களுக்குத் தெரியுமா? நான் சாதிக்க ஆரம்பிச்சதே கல்யாணத்துக்கு அப்புறம்தான். பதினெட்டு வயசுக்குள்ள கல்யாணம். அப்புறம் கணவர்தான் என்னை கை தூக்கிவிட்டார். என்னுடைய அத்தனை போராட்டங்களுக்கும் சமூகசேவைகளுக்கும் ஊக்கம் தந்தது அவர்தான்!” எனும்போதே கணவர் பற்றிய ஞாபகங்கள் கண்களின் ஓரம் தேங்கி நிற்கின்றன.

சாகித்ய அகாடமி விருது, கேரளாவின் மிகப் பிரபலமான வயலார், ஓடக்குழல் விருதுகள் உட்பட கிட்டதட்ட 44 விருதுகளை வென்றிருக்கிறது சுகதகுமாரியின் கவிதைகள்.

” அந்த விருதுகளைவிட நான் ரசித்தது சமூகத்தைத் žர்திருத்தும் பாதையில் நடை போட்டபோது என்னைக் குத்திய ‘முட்களை’த்தான்! அந்த ஒவ்வொரு முள்ளையும் எடுத்து ஒடித்து, அதன் கூர்மையை நாசமாக்கும் வரைக்கும் எனக்கு உறக்கமே இருந்ததில்லை” என்றவர் சட்டென சில வருடங்கள் பின்னோக்கிப் போனார்.

” என் வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கிய வருடங்களில் ஒன்று 1985. அதுலயும் குறிப்பிட்ட அந்த ராத்திரியை என்னால் மறக்கவே முடியாது. எங்கிருந்தோ ஒரு போன்கால் வந்தது. ‘ திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பாருங்களேன்’ என்று பெயர் சொல்ல விரும்பாத அந்த நண்பர் என்னை உசுப்பிவிட்டார். எனக்கு தெரிந்த சிலரோடு உடனே அங்கு போனேன். அப்போது, மருத்துவமனை மூடப்பட்டிருந்தது. உறவினர்கள்கூட நோயாளிகளைப் போய்ப் பார்க்க முடியாத நிலை. அனுமதிக்க மறுக்க வாட்ச்மேனை பொருட்படுத்தாமல் உள்ளே நிழைந்தோம். அங்கே கண்ட காட்சியைக் பார்த்து கதறிவிட்டேன்.

இடுக்கு முடுக்கான அறைகளுக்குள் அரைநிர்வாணமாக சில உருவங்கள். அவர்கள் மனநோயாளிகள். அழுக்கும் அலங்கோலமாக, சுவரிலும் தரையிலும் அசிங்கம் பண்ணிவைத்து, அவர்களின் தலைமுடி எல்லாம் ஜடை ஏறிப்போயிருந்தது. அறையின் ஒரு மூலையில் ஒரு குழி. அதில்தான் அவசரக் கழிவு நடந்தாக வேண்டும். தரையில் எலும்பும் தோலுமாக கிடந்த ஒருவர், மெதுவாக அசைந்து ‘பசிக்குது’ என்று கத்த… அடுத்தடுத்து அத்தனை அறைகளிலிருந்தும் ‘பசிக்குது, பசிக்குது’ என்ற அழுகுரல்கள் பேரோசையாய் எழும்ப… ஜயோ! என் வாழ்நாளில் மறக்க முடியாத காட்சி அது.

நாங்கள் மருத்துவமனைக்குள் நிகழ்ந்த விஷயம் தெரிந்து ஒரு டாக்டர் ஓடோடி வந்தார். எங்கள் முகத்தைப் பார்க்கக்கூடத் திராணியில்லாமல், ‘அரசாங்கம் பணமே தராம நாங்க எப்படி நல்ல ஆரோக்கியமான சூழல் உருவாக்க முடியும்? மருந்துக்கும் சாப்பாட்டுக்கும்கூட பணம் பத்தலை’ என்று தலையைச் சொரிந்தார். வெளியே வந்தோம். பத்திரிக்கையாளர்களை அழைத்தோம். சமூகநல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டோம். போலீஸ’ல் புகார் கொடுத்தோம். விளைவு… ‘கேரளாவில் இருக்கும் அத்தனை அரசாங்க மருத்துவமனைகளும் žர்படுத்தப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை ஒரு பெரும் புயலைப் போல கேரளம் முழுக்கவும் சுழன்றடித்தது.

மாணவ, மாணவிகளில் தொடங்கி சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள்வரை பலரும் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். வேறுவழியே இல்லாமல் மருத்துவமைகள் சுத்தப்படுத்தி, பெயிண்ட் அடித்து, நோயாளிகளைக் குளிக்க வைத்து, அவர்களுடைய முகத்தை அழகுபடுத்த ஆரம்பித்தது அரசாங்கம்.

அந்த காலக்கட்டத்தில் எனக்குள் வேறொரு எண்ணமும் ஒடியது. அரசாங்கத்தையே குறை சொல்லிக்கொண்டிருக்காமல், மனநோயாளிகளுக்காகவும் ஆதரவற்றவர்களுக்காகவும் நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக ‘அபயம்’ என்கிற கிராமத்தை உருவாக்கினோம். மாநில அரசும் நிலம் கொடுத்து, மத்திய அரசும் இரக்கம் உள்ளவர்களும் நிதி உதவி செய்தார்கள்.

‘அபயம்’ கிராமத்தில் இப்போது எட்டு இல்லங்கள் உள்ளன. ஏழைப்பெண்கள், வயதானவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு என்று தனித்தனியே விடுதிகள் கட்டியிருக்கிறோம். மனநோயாளிகளுக்கு மருத்துவமனை இருக்கிறது…” என்று சுகதகுமாரி சொல்லும்போது, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் நினைவு வருகிறது நமக்கு. இவரது இந்த முயற்சியால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் எந்த தெருவிலும் பிச்சைக்காரர்களோ, மனநோயாளிகளோ தென்படுவதில்லை.

சுகதகுமாரியின் ‘அபயம்’ கிராமத்தில் தங்கிப் படித்த ஆதறவற்ற பிள்ளைகளில் பலர் இன்று இன்ஜினியர், டாக்டர், டீச்சர் என்று சமூகத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். அத்தனை பேரும் தெருவிலிருந்து தூக்கி வரப்பட்டவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் குழந்தைகள்!

சுகதகுமாரி தொடர்ந்தார்… “கோழிக்கோட்டுல ஊர்க்காரங்க ஒண்ணுசேர்ந்து ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிச்சு, குழந்தைகளோட அவளை ஊரை விட்டு ஓதுக்கி வெச்சுட்டாங்க. நான் போனேன். என்னைப் பார்த்ததும் ‘புள்ளைங்க பசியால துடிக்கறத பார்க்க முடியலமா. அதான் தப்புப் பண்ணிட்டேன்’னு அந்தப் பொண்ணு கதறி அழுதா. அவளை அழைச்சுகிட்டு வந்தேன். இப்ப ‘அபயம்’ல கைத்தொழில் செஞ்சு சந்தோஷமா இருக்கா. அவ குழந்தைங்க நல்லாப் படிக்கிறாங்க.

ஒரு பொண்ணு கெட்டுப் போகணும்னா, கண்டிப்பா ஒரு ஆண் உதவி செஞ்சிருக்கனும் தானே? ஆனா, சமூகம் பெண்ணை மட்டும் ஒதுக்கி வைக்குது. இந்த இழிவான நிலைமை மாறணும்னா, பெண்களாகிய நாம் எந்த நிலைமையிலும் உடலை விற்கக்கூடாது. நாமதான் நம்மோட சுயமரியாதையை காப்பாத்திக்கணும்” என்கிறார் ஆக்ரோஷமாக.

எந்தப் பிரச்சனை என்றாலும் மக்களோடு கைகோர்த்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கி வெற்றி பெறும் சுகதகுமாரிக்கு எதிரிகளும் ஏராளம். சித்தூர் அருகில் ஓலிப்பான என்ற இடத்தில் எஸ்டேட் ஓனர் ஒருவர் மரங்களை வெட்டுச் சாய்த்துக் கொண்டிருப்பாதாக தகவல் வர, பத்திரிக்கையாளார்களோடு போயிருக்கிறார். அந்தக் காட்டுப்பகுதியில் ஏகப்பட்ட ஆயுதங்களோடு எதிர்ப்பட்ட முரட்டுக் கும்பல் ஒன்று ‘திரும்பிப் போ’ என்று வெறியாட்டம் போட்டிருக்கிறது. ஆனாலும் கலங்காமல் நின்று, தன் எண்ணத்தை நிறைவேறிவிட்டே வந்திருக்கிறார் சுகதகுமாரி.

பல சவால்களை எதிர்கொண்டு இயற்கையைக் காக்கத் துணிந்த சுகதகுமாரிக்கு ‘விருகஷ் மித்ரா’ (மரங்களின் நண்பன்) விருது வழங்கி கௌரவித்துள்ளது கேரள அரசு.

சு.சண்முகேஸ்வரி

sham_crist@yahoo.com

================================================================

Series Navigation

சு.சண்முகேஸ்வரி

சு.சண்முகேஸ்வரி