திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
அவர் எப்போதுமே போல றிமோட்கொன்றோலரும் கையுமாகத்தான் இப்போதும் இருக்கிறார். கர்ண கடூரமான தாளவாத்தியப் பின்னணியில் ஒரு சண்டைத் தமிழ்ப்படம் டாவியில் போய்க் கொண்டிருக்கிறது. இனி அவர் எழும்பின பாடுதான். எதுவும் காதில் ஏறாது. ஓம் ஓம் என்று வாய் சொல்லுமே தவிர கண்களும் கவனமும் படத்தில்தான் இருக்கும். போட்டு வைத்துக் கொண்டு காத்திருக்கும் எரிச்சலில் சாப்பிட வாங்கோவன் என்று கத்தினால் இதில கொண்டாவன் என்றுதான் பதில் வரும்.
இப்படித்தான் ஒருநாள் வாளை மீன் தீயலோடு சோற்றைக் குழைத்து டாவி கவனத்தில் அள்ளிப் போட்டிருக்கிறார். முள்ளு தொண்டையில் சிக்கி, சத்தம் வராமல் கண்ணாலும் மூக்காலும் பெருக்கி திக்குமுக்காடிப் போனார். இரண்டு பிடி சுடுசோறு விழுங்கச் செய்த பின்தான் முள்ளுக் கழன்றது. முள்ளு என்று கவனம் காட்டியும் மூளையில் தைக்கவில்லை.
எல்லாம் நான் விட்ட பிழை. டாவி வாங்கும் பிரேரணையை அவர் கொண்டு வந்த அப்பவே மூஞ்சியை நீட்டியிருக்க வேண்டும். அது அவரை சாங்கோபாங்கமாய் மயக்கி விடும் என்ற அனுப+தி எனக்கிருக்கவில்லை. லோன் எடுத்த பணத்தை டாவியில் முடக்காமல் கையில் வைத்திருந்தால் அவசரத்திற்கு உதவும் என்று சொல்லிப் பார்த்தேன். இதுவும் அவசியந்தான் என்றார். சொன்னது நியாயமாகத்தான் தெரிந்தது.
டாவியை லக்சரியென்று எண்ணிவிடாதே – அது நெசசிற்றி. முழு லோகத்தையுமே நம் வீட்டிற்குள் கொண்டு வரும் சாதனம். பிபிசி, சீஎன்என் செய்திகள் இருந்த இடத்திலிருந்தே நாட்டு நடப்புகளை நமக்குச் சொல்லித் தரும். பிரபஞ்ச விசித்திரங்களை தரிசிக்க வைக்கும் டிஸ்கவரி. மொத்தத்தில் இது ஒரு என்சயிக்கிலோபிடியா. முக்கியமாக, மகளுக்கு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து வைக்க ஆசைப்பட்டாயல்லவா! லைவ்வாக எவ்வளவு நாட்டியங்கள் எத்தனை கச்சேரிகள்!.. .. .. இந்த மணிப்பிரவாள வசியப் பேச்சில் நான் தடுமாறிப் போனது என்னவோ உண்மைதான். என் பரதநாட்டிய ஆர்வத்தைக் குறிபார்த்து அடித்த துருப்பு. மகளுக்கு தவழுகிற வயசு என்பது கூட எனக்கு மறந்து விட்டது.
பிள்ளையைச் சாட்டி வாங்கினாலும், தவறிக்கூட நாட்டிய நிகழ்ச்சிகளில் அவர் மினக்கெட்டதில்லை. எப்போதும் சினிமா. போதாக்குறைக்கு வாடகை வீசிஆரின் பவனி வேறு. அதிலும் அரைத்த மாவையே அரைக்கும் சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், அம்மன் கோயில் கிழக்காலே என்று தமிழ் மசாலாக்கள். படமென்று குந்தினால் கதிரையில் வேர் விட்டுப்போகும். நாற்பதாயிரம் நாசம். பொன்னான நேரமும் மண்.
வீட்டுவேலைகளை எவ்வளவு பவுத்திரமாய்ப் பார்த்த மனுசன்! முற்றம் கூட்டி தண்ணீர் தெளிப்பார். குளிக்க, இறைத்து விடுவார். உடுப்புக் காயப் போடுவார். தேங்காய் துருவுவார். அம்மியில் சரக்கு அரைத்துத் தருவார். மார்க்கட் போய் கறிபுளி வாங்கி வருவார். இப்போது எதற்கெடுத்தாலும் ஒரு அலுப்பும் சலிப்பும் முணுமுணுப்பும். எல்லாம் தரித்திரியம் பிடித்த டாவி வந்த மூகூர்த்தம்.
டாவியால் மற்றவருக்கு எப்படியோ, நிச்சயமாக எங்களுக்குத் தீமைதான். இல்லாட்டில் தங்கச்சியின் சடங்கிற்கென அப்பா கேட்ட கையோடு சுளையாக காசைத் தூக்கிக் கொடுத்திருக்கலாம். தங்கச்சியும், இவ்வளவிற்கும் மாப்பிள்ளையோடு கனடாவிற்குப் போய் கடிதமும் போட்டிருப்பாள். அவளைக் கரையேற்றி விட்டிருந்தால் அப்பாவின் பாரம் நீங்கியிருக்கும். பாவம் அப்பா. அக்காவின் திருமணத்தோடு இருந்த கொஞ்சநஞ்ச செல்வமும் வற்றிவிட்டது.
டாவி, அன்ரனா, ரிசீவரோடு கையிலிருந்ததெல்லாம் சதம் மிச்சமில்லாமல் தொலைத்த பிறகு ஒருநாள் அப்பா வீட்டிற்கு வந்தார். மருமகனை தலையில் தூக்கி கூத்தாடும் சுபாவம் அவருக்கு .
மகளுக்குக் கேட்டு வந்திருக்கு தம்பி. அல்லுத்தொல்லையில்லாத குடும்பம். மாப்பிள்ளை கனடாவில நல்ல வேலையாம். வாற ஆவணியில வந்து தாலிகட்டி கூட்டாற்றுப் போறதாம். ரொக்கம் இரண்டு கேட்கினம். எங்கட சொரியல் காணியை வித்து ஒன்டரை ஒப்பேத்திப் போடலாம். மிச்சம் ஐம்பதுக்குத்தான் யோசனையாயிருக்கு
நான் இவரைப் பார்க்க, இவர் நிலம் பார்த்தார். உதவியென்றால் ஓடி ஒளிக்கிற ஆளில்லை. ஆனால் வெறும் கையை வைத்துக் கொண்டு எப்படி முழம் போடுவார்!
ஒன்டுக்கும் யோசிக்காம போயிற்று வாங்க மாமா. ரெண்டு கிழமைக்குள்ள காசுக்கு ஒழுங்கு பண்றன் என்று அவர் சொல்ல, அப்பா ஆறுதல் பெருமூச்சு விட்டார். அப்பா போனதும் சட்டையை மாட்டிக் கொண்டு இவர் வெளிக்கிட்டுப் போனார்.
நாங்கள் அடுத்தடுத்து மூன்று பேரும் பெண்பிள்ளைகள். பெண்பிரசைகளைப் பெற்றவருக்குத்தான் சீதனத்தின் சீரழிவு விளங்கும். எங்கட சனத்தை இந்த நோய் பிடித்தாட்டுகிற மாதிரி வேறு யாரையும் பிடித்திருக்காது. பொருளாதார சாஸ்திரத்தில் குறைச்சலாயிருக்கிற சரக்கிற்கு கிராக்கி அதிகம் என்று படித்திருக்கிறேன். ஆண் பிறப்பு விகிதம் ஒரு காலத்தில் குறைந்து போக, கல்யாண வியாபாரம் தளைத்தோங்கிவிட்டது. அது தொடங்கி, ஆணைச் சார்ந்து கீழ்ப்படிந்து அடங்கி ஒடுங்கி கொழுகொம்பில் படர்கிற கொடி போல வாழ வேண்டியவள்தான் பெண் என்ற நேர்மையற்ற கருத்தும் வலுவும் பொலிவும் பெற்றுவிட்டது.
கல்வியிலும் தொழிலிலும் ஆண்களோடு சரிக்குச்சரியாக பெண்கள் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருப்பது அடுக்காது. புனிதமான திருமண பந்தத்தில் புகுந்து விட்ட வர்த்தக சிந்தனைகளைக் களையெடுக்க வேண்டும். சீதனம் கேட்டு சித்திரவதை செய்பவரை சிறையில் தள்ள சட்டம் வரவேண்டும். அப்போதுதான் பெண்களைப் பெற்றவர்களின் கஷ்டம் விடியும்.!
என் சிந்தனை விரிந்து படர்ந்து கொண்டிருந்த போது வெளிக்கிட்டுப் போனவர், திரும்பி வந்தார். பாங்க் மனேஜரோட கதைச்சிற்றன். வீட்டு உறுதியை வங்கியில் வைத்து லோன் எடுப்போம் என்றார்.
காசு அவசரத்துக்குக் கிடைக்காட்டி என்ன செய்யிறது ?
டாவியை விப்பம் என்று சாதாரணமாகச் சொன்னார்.
அரிசிப்பொரியோடு திருவாதிரையாய் டாவியை கைகழுவி விடக் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதென்று மனம் சொல்லிற்று. அந்த ஆறுதல் நீடிக்கவில்லை. இரண்டு மாதமாகிறது. வங்கிக் கடன் இன்னும் அமையவில்லை. டாவியும் அசையவில்லை. அவர் வழக்கம் போலவே அலுங்காமல் குலுங்காமல் டாவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்பா வந்து, முற்றத்தில் நின்று கூப்பிட்டார். முகம் ப+த்திருந்தது. இந்தத் தபாலைப் பாரனை, இதில போயிற்று ஓடியாரன் என்று இரண்டு கடிதங்களைத் தந்துவிட்டுப் போனார். ஒன்று, தங்கச்சி கொப்பிப் பேப்பரைக் கிழித்து அவசரத்தில் எழுதிய கடிதம். தங்கச்சி என்ன எழுதியிருக்கப் போகிறாள். இன்றைக்கு நாங்கள் பருப்புக்கறியும் கிழங்குப் பிரட்டலும். நீ என்ன கறி என்று கேட்டிருப்பாள். எயர்மெயில் யார் அனுப்பியிருப்பார்கள்!
பிரித்து வாசிக்க வாசிக்க நெஞ்செல்லாம் முட்டிக் கண்கள் நிரம்பிக் கொண்டு வந்தது. தங்கச்சிக்குப் பேசின மாப்பிள்ளை குணாளன் கனடாவிலிருந்து எழுதியிருக்கிறார்.
என் தந்தையார் இரண்டு லட்சம் ரொக்கம் கேட்டதால் பேச்சுக்கால் இழுபறியில் இருப்பதாக அறிந்தேன். உங்கள் கஷ்டத்தை என்னால் உணர முடியும். சொந்தக் காலில் நின்று குடும்பத்தை நடத்தக் கூடிய நம்பிக்கை எனக்குண்டு. அக்காமாருக்கு சீதனம் கொடுத்துக் கட்டி வைத்ததால் அதற்குப் பதிலாக எனக்கும் வாங்க வேண்டும் என்று அப்பா கருதியிருக்கக்கூடும். அவருடன் டெலிபோனில் கதைத்துவிட்டேன். நீங்கள் சீதனத்திற்காகக் கஷ்டப்படாமல் எங்கள் வீட்டாரோடு கலந்து கதைத்து, ஆவணி பத்துக்குள் நாள் பார்த்து ஆக வேண்டியதைப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தேகம் ஆச்சரியத்தில் உறைந்து போயிற்று.
உங்களைத்தானே இங்க கொஞ்சம் வாங்க.. .. இரண்டாவது தரமும் கூப்பிட, படம் முடியப் போகுது இங்க வாவன் என்று பதில் வந்தது.
தங்கச்சி கடிதம் அனுப்பியிருக்கிறாள் பாருங்க
என்னவாம் ?
வாசிக்கிறன் கேளுங்க.. .. அன்புள்ள அக்காவிற்கு, நீயும் அத்தானும் ஐம்பதாயிரம் புரட்ட எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்
வாசிப்பதைக் கவனியாமல் படக் கிளைமாக்சில் லயித்திருந்தார் அவர்.
என்ன கேக்கிறீங்களா ?
ஓம் ஓம்
எங்க, நான் வாசிச்சதை சொல்லுங்க பாப்பம்
அவர் டாவியிலிருந்து கண்ணை எடுக்காமலே, நான் வாசித்ததை ஒரு எழுத்தும் தவறாமல் அப்படியே திரும்பச் சொன்னார். நான் கடிதம் தொடர்ந்தேன்.
அக்கா, எங்கள் கஷ்டத்திற்கு விடிவு காலம் வந்திருக்கு. லோனுக்கு ஓடித்திரிஞ்சு கஷ்டப்பட வேண்டாமென்று அத்தானிடம் சொல்லவும். இன்றைக்கு வந்த எயர்மெயில் உனக்கு விபரம் சொல்லும். அத்தானிடமும் காட்டி விட்டு திருப்பி அனுப்பவும். தங்கச்சி சத்தியராணி
தொடர்ந்து எயர்மெயிலையும் வாசித்து முடிக்க, படமும் முடிந்து சுபம் போட்டார்கள். அவர் எதுவும் சொல்லாமல் எழுந்து போய் மேல் கழுவிக் கொண்டு வந்து சட்டையை மாட்டினார்.
இந்த ராயிருட்டில எங்க வெளிக்கிடுறீங்கள்
மனேஜரின்ர வீட்டை போய் லோன் தாறீங்களா இல்லையா, இரண்டத்தா ஒன்டு கேட்டுட்டு வரப் போறன்
இனி என்னத்திற்கு லோன் ?
என்னத்துக்கா ? சத்தியராணியின்ர கல்யாணத்தில எனக்குக் கவனம் இல்லையென்டு நினைச்சிற்றாய் என்ன ?
அதுதான் சீதனம் வேனாம் என்டு மாப்பிள்ளை எழுதியிருக்கிறாரே
மாப்பிள்ளை எழுதியிருக்கிறாரா!.. .. எப்ப ?
அவரையும் டாவியையும் நான் மாறி மாறிப் பார்த்தேன்.
தினக்குர
- வரம்
- உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)
- நவீன எழுத்தாளனின் தலைவிதி
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
- அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்
- அறிவியல் துளிகள்-24
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]
- ‘மே-தை மாதம் ‘
- செந்தமிழ்ப் பாட்டன்
- ‘கவிதையும் கழுதையும் ‘
- நானும்…. நீயும்
- தொடக்கம்
- படுகை
- வேண்டும், வேண்டும்…
- மழை
- அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?
- இந்தியா- சீனா நட்பு மலர்கள்
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1
- எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
- ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு
- தற்காப்புக்காக
- போதை