பூமணி
மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு மங்கலாகத் தெரிந்தது. பார்வையைத் துடைத்துக் கொண்டான்.
பசுமை படர்ந்த கோகுலக் காடுகள். மரத்தடியில் கால்பின்னிய கோலத்தில் மாயக்கண்ணன் கண்சொருகிக் குழலூதுகிறான். நிரவிக் கிடக்கும் ஆநிரைகள் நிலைமறந்த புல்லரிப்பில் சொக்கி நிற்கின்றன. இரையசையில் பிரிந்த தாடைகள் இணையாத கிறக்கம். கடைவாயில் கள்ளத்தனமாகக் கண்ணனைப் பார்க்கும் புல்லிதழ்கள். நீர்நிலையில் நிற்பவை செவிசாய்த்து இசைக் குடிக்கின்றன. சிலவற்றின் மடியில் அருவி சுரக்கிறது. பரவசத்தில் குதூகலிக்கும் செடிகள் பருவம் தாண்டி மொட்டவுக்கின்றன.
நீலக்கண்ணனின் நெற்றிக்கு மேலே மயிலிறகு ஒயிலாட புல்லாங்குழல் வழியே பொங்கிவரும் இன்னிசை அந்தரத்தில் சொற்களைத் தூவிக்கொண்டு ரீங்கரித்துச் செல்கிறது.
‘இந்து என்று சொல்லடா
எழுந்து நிமிர்ந்து நில்லடா ‘
குட்டிபையன் தான் சுட்டிக்கண்ணனின் படத்தை ஒட்டியிருக்கணும். போட்டி வைத்தாலும் வைத்தார்கள். குழந்தைகளுக்கு ஏகக் கொண்டாட்டம். சுறுசுறுப்பு சொல்லமுடியாது.
அவர்கள் படித்த பள்ளி ஒரு இந்து அமைப்புடன் இணைந்து பாட்டுப் போட்டியை அறிவித்திருந்தது. பாடல்களை அச்சிட்டுக் கொடுத்தார்கள். அதில் எந்தப் பாடலைக் கேட்டாலும் ஏற்கனவே சொல்லிக் கொடுத்த ராகத்தில் பாடணும்.
அன்று மாலை குட்டி கும்மாளத்தில் ஓடிவந்து அம்மாவிடம் மூச்சுவிடாமல் ஒப்பித்தான். அக்காவை ஒருவார்த்தை பேசவிடவில்லை. அவன் முகம் பூத்து விரியவிரிய கண்கள் தெறித்துவிடும் பயம் அம்மாவுக்கு.
தலைக்குப் பொருத்தமான கண்கள். தலை பெரிசானது ஒரு கதை. பேறுகால வலிச்சுழல் நின்றுவிட கண்ணும் காதும் வாசலில் சிக்கிக் கொண்டன. ஊசிவலியின் துணையில் திக்கித் திணறி வெளியே வந்தான். கூம்பிப் போன தலையைத் தட்டி சீராக்கும் போது சற்றுப் படர்ந்துவிட்டது. நடுவில் குறுக்காக வாசல்நிலை பதித்த நதிப்பள்ளம். விசிறிவிட்ட காதுமடல் சுருள மறுத்துவிட்டது.
அம்மா மடியிமர்த்தி மட்டுப்படுத்தினாள்.
‘போட்டியில செயிச்சா என்ன தருவாக. ‘
‘மூணு பிரைசு. ‘
‘ஏயப்பா மூணு உண்டா ‘
‘மொதல் பிரைசு ஐநூறு ரூவா. ரெண்டாவது முன்னூறு ரூவா. மூணாவது எரநூறு. ‘
‘அப்ப நம்ம வீட்டுக்கு ரெண்டு பிரைசு வரும்னு சொல்லு. ‘
குட்டியின் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.
‘அம்மாம்மா ஐநூறு ரூவா எனக்குத்தான். ‘
‘அக்காவுக்கு முன்னூறு ரூவா குடுத்துருவொம். பெழச்சிட்டுப் போகட்டும். ‘
அக்கா ஒத்துக் கொள்ளவில்ல.
‘எனக்குத்தான் மொதல் பிரைசு. ‘
குட்டி அடம்பிடித்துச் சிணுங்கினான்.
‘பாரும்மா அவன. நான் தரமாட்டென். ‘
நிலைமை மோசமாவதைப் பார்த்து அம்மா அப்பாவைக் கூப்பிட்டாள்.
‘ஏங்க இங்க வாங்களேன். இவுக சண்டைய நம்மால தீத்துவைக்க முடியாது. ‘
அவன் வந்து விசாரணை நடத்தினான். நீண்ட பேச்சு வார்த்தைக்குப்பின் ஒரு வழியாக சமாதான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி குட்டிக்கு முதல் பிரைசு. அம்முவுக்கு ரெண்டாவது. விட்டுக் கொடுத்ததற்காக அவளுக்கு ஒரு சாக்லேட் அதிகம் கொடுக்கணும்.
எப்படியோ கைகலப்பு தவிர்க்கப்பட்டதில் அம்மாவுக்கு நிம்மதி. குழந்தைகளிடம் அக்கறையாகச் சொன்னாள்.
‘குடுத்திருக்கிற பாட்டுகள ஒண்ணுவிடாம மனப்பாடம் பண்ணுங்க. அப்பத்தான் பிரைசு கெடைக்கும். ‘
அதிலிருந்து வீட்டில் சதா ராக சஞ்சாரந்தான். அக்கா தம்பியின் ஆலாபனை கோகுல வனத்தில் எதிரொலித்தது. சன்னல் இடைவெளியில் உருண்டு புரண்டு கூடுகட்டும் அணிலுக்கு ஆச்சரியம். ராகரசிப்பில் சொகமாகச் சுருண்டு இளைப்பாறியது. சுவரில் அப்பியிருக்கும் பல்லி கீழ்வாக்கில் விழியுருட்டி நோட்டமிட்டது.பறந்துவந்து நடுவீட்டில் அமர்ந்த பஞ்சுக்குருவி குதித்துக் கூத்தாடிவிட்டுப் போனது.
என்ன வேலையாக இருந்தாலும் அம்மாவுக்குக் குஞ்சுக் குரல்கள் மீதே கவனமிருந்தது. இடையிடையே வந்து ராக ஏற்ற இறக்கங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள். அம்மியில் அவள் வாசித்த அரைப்புத் தாளம் பாடலுக்கு இசைவாக இருந்தது.
அவள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை கரிசனையாகக் கவனித்துக் கொண்டாள். மாலையில் மறக்காமல் தீனி கொடுத்தாள். அவர்கள் வராண்டாவில் நின்றால் கடிந்தாள்.
‘வெளிய நிக்காதங்க. குளிருக்குத் தொண்ட கட்டிக்கிரும். ‘
காலையில் சூடான பாலுடன் எழுப்பினாள். வென்னீரில் குளிக்க வைத்தாள். ருசியாகச் சமைத்து ஊட்டினாள்.
அவனுக்கென்றால் ஆத்திரம். அங்கயாய்த்தான்.
‘மனுசன் நாயோபேயோ அலஞ்சிட்டு வாறது தெரியலயா. நமக்கு இந்தக் கவனிப்பு உண்டுமா. ‘
அவள் கறாராகச் சொல்லிவிட்டாள்.
‘இனிமே ஒங்களுக்குத் தனியா கவனிப்பு கேக்குதோ. குடுக்கிறதத் தின்னுட்டு மொடக்கிறதுக்கில்லாம. ‘
‘சம்பாதிக்கறவனுக்கு இந்தக் கதியா. ‘
‘நம்ம சம்பாத்தியத்தப்பத்தி நம்மதான் பீத்திக்கிறணும். ‘
‘மாசம் மாசம் சம்பளத்த வாங்கி அப்படியே குடுக்கென் பாரு. ஏன் பேசமாட்ட. ‘
‘கூலிக்கு ஆளுப்புடிச்சுத்தான் இவுக சம்பளத்தச் சொமந்துட்டு வரணும். அத்தோட நிறுத்துங்க. ‘
‘போற போக்கப் பாத்தா கொழந்தைகளுக்குச் சொந்தப் பாடம் மறந்துரும் போலருக்கு. ‘
‘ஒரு வாரத்துல ஒண்ணும் குடிமுழுகிப் போயிறாது. ‘
‘அப்ப நடத்துங்க நடத்துங்க. ‘
‘நீங்கென்ன கேட்ட ஒடன நோட்ட எண்ணிக் குடுத்துறவா போறீக. முப்பது நாளைக்குப் பல்லக் கடிச்சுக்கிட்ருந்து பத்துப் பணத்தப் பாக்கவேண்டியிருக்கு. ‘
‘சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும். ‘
சட்டியே ஓட்ட பெறகு எங்கருந்து வரும். ‘
‘ஒடஞ்சு போகலயே. ‘
‘அதும் நடக்கத்தான் போகுது. குடுக்கிற சம்பளத்த ஒரு நாளைக்குக் கண்ணுல பாக்கிறதோட சரி. மறுநா அது வெண்ண உருகினமாதிரி போற போக்குத் தெரியாது. மாசக் கடைசியில ஒரு பண்டம் தட்டியிருச்சுன்னா வாங்குறதுக்கு வழியிருக்கா. பாயி கடையில சிட்டபோட்டு வண்டி ஓடுது. அவன் தண்டத்துக்குக் கணக்கெழுதி வைக்கான். குடும்பத்துல வேற என்ன வருமானம் இருக்குது. வீடு பள்ளிக்கூடம் மருந்து மாத்திரன்னு அத்தன செலவும் சம்பளத்த வச்சுச் சமாளிக்கனும்… ‘
‘கொஞ்சம் சிக்கனாருந்தா சரியாப் போகும். ‘
‘அப்படின்னா வயித்துல ஈரத்துணியத்தான் கட்டிக்கிறணும். ‘
‘கஸ்டத்துலதான் சந்தோசம் இருக்கு தெரியுமா. ‘
‘சந்தோசத்துக்கென்ன கொறச்சல். வீட்ல மூடமூடையா அடுக்கிக் கெடக்குது. ஆனா ஒரு நல்ல நாளைக்கு நாலு உருப்படிக்குத் துணியெடுக்க முடியல. என்ன விடுங்க வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்கிறவ. வெளி எடங்களுக்குப் போற மனுசன் நல்ல துணி உடுத்தணுமில்ல. அதிகாரின்னு சொல்லிக்கிறதுல மதிப்பென்ன இருக்கு. ‘
‘அப்படிப்பட்ட மதிப்பும் மரியாதையும் நமக்கு வேணாம்மா. ‘
‘நீங்க எப்படியும் போங்க. படிக்கற கொழந்தைகளச் சொல்லுங்க. மத்தவுகளப் போல நல்ல மொறையில அனுப்பனுமில்ல. ‘
‘அவுங்களுக்கென்ன. ‘
‘சும்மாருங்க. அதுக மாத்திப் போடுறதுக்கு உடுப்பு உண்டா. இருக்கிற ஒண்ணவும் தெனமும் தொவசச்சாத்தான் அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பமுடியும். அதுலயும் ஏழு கிழிசல். தச்சுத்தரலன்னா கண்ணக் கசக்குதுக. அழுத மூஞ்சியோட போனா மண்டையில பாடமெங்க ஏறும்… இப்படி நாலு காசு வந்தா அதுகளோட கஸ்டமாச்சும் தீருமில்ல. ‘
அவள் கண்கலங்கிவிட்டாள். கிண்டலில் ஆரம்பித்து கீறலில் முடிந்து கசிவது வழக்கந்தான். அவன் வாக்குறுதிகளை வாரி வழங்குவதும் அவள் வார்த்தைகளில் மயங்குவதும் புதிதல்ல. மெளனமேகம் கலைந்து மெல்லிய சிரிப்பிழையில் இணைவார்கள். கழுத்துச் சொகத்தில் அவள் சாப்பிட அழைப்பாள். அவன் ஒப்புக்கு மறுத்து உடன் படுவான். அப்போதைக்கும் கதை முடியும்.
மறுநாள் பாட்டுப் போட்டி. குழந்தைகள் நேரமிருக்கவே தயாரானார்கள். நீர் பாய்ச்சிய செடிகளைப் போல் அவர்கள் முகத்தில் குழைவான குளிர்ச்சி. கடல் நீல உடை பழசானாலும் புது அழகைக் கொடுத்திருந்தது. குட்டியின் கால் சட்டைக்குப் பின்புறம் கெட்டியான தையலிரண்டு எட்டிப் பார்த்தது.
அத்தனை பாடல்களையும் அம்மாவிடம் ஒப்பித்துவிட்டு பூஜையில் கலந்துகொண்டார்கள். வரிசை கோர்த்த தெய்வங்களுக்கு முன்னால் சிறிய மணி அதிகநேரம் முணுமுணுத்தது. அம்மா அவர்களுக்கு அழுத்தமாகத் திருநீறு பூசினாள்.
குட்டி ஓடிவந்து அலமாரிக் கண்ணனை அண்ணாந்து பார்த்தான். அந்தக் கண்ணனைப் போலவே அவன் கண்களிலும் களை ததும்பியது.
‘நேரமாச்சு கெளம்புங்க. ‘
அம்மா அவர்களை வராண்டாவுக்கு அப்பாவிடம் அழைத்து வந்தாள். அவன் ஓங்கியுயர்ந்த பப்பாளி மரத்தில் பார்வை பதித்திருந்தான். அதன் கழுத்தைச் சுற்றி பிஞ்சும் பழமுமாகத் தொங்கின. பிஞ்சு காயானால் இன்னும் கனம் கூடும். ஒல்லியான மரத்தால் அவ்வளவு பாரத்தை எப்படித் தாங்க முடிகிறது. அம்மு அவன் சிந்தனையைக் கலைத்ததாள்.
‘அப்பா போயிட்டு வாறொம். ‘
‘பையி கொண்டு போகலயா. ‘
குட்டி முந்திக் கொண்டான்.
‘இண்ணைக்குப் பாட்டுப் போட்டியாச்சே. பள்ளிக்கூடம் கெடையாதே. ‘
‘அடடா அத மறந்துட்டேனே. போட்டியில கூச்சப்படாமப் பாடணும். தெரிஞ்சதா. பயப்படக்கூடாது. பத்தரமாப் போயிட்டு வாங்க. ‘
அம்மா முனங்கிக் கொண்டே குழந்தைகளைப் பின் தொடர்ந்தாள்.
‘நம்ம எதத்தான் மறக்கல. ‘
மூவரும் படியிறங்கி மைதானத்தில் நடக்கும்போது எதிர்வீட்டு இலந்தைமரத்தில் விளையாடும் அணில் முன்னங்காலுயர்த்தி வழியனுப்பியது. அவன் பிஞ்சுகளைப் பெரிசாக்கி மீண்டும் பப்பாளியைச் சுமந்து கொண்டான்.
வேலை முடிந்து அவன் வீடு திரும்பும்போது அந்திமயங்கி விட்டது. குழந்தைகளுக்குப் பள்ளிஉடை வாங்கிவந்தான். நீண்டநாள் தவணை நிறைவேறிய மகிழ்ச்சி. அதை மனைவியிடம் கொடுத்தான்.
‘கொழந்தைகள் எங்க. ‘
‘மூத்தவ படிக்கா. குட்டி எழுதறான். ‘
‘ஓகோ போட்டி முடிஞ்சதோ. ‘
‘துணியெடுக்கக் காசு ஏது. ‘
‘போட்டியில பிரைசு வாங்கீட்டு வந்துருப்பாகல்ல. அந்தத் தெம்புதான். ‘
‘கிண்டலா. ‘
‘ஏன் போட்டி நடக்கலயா. ‘
‘எல்லாம் நடந்துருக்கு. ‘
‘என்னாச்சு. ‘
‘தேர்ந்தெடுக்கிறதுக்கு மூணு நீதிபதியாம். ‘
‘ஒவ்வொருத்தரும் மார்க்போட்டு கூட்டிப் பாப்பாங்க. ‘
‘அவங்கவங்களுக்குத் தெரிஞ்சவங்க கொழந்தைகளுக்கு அதிக மார்க் போட்டுட்டாங்களாம். ‘
‘அதெப்படி. ‘
‘அப்படித்தான் நடந்ததாம். ‘
‘இருக்காதும்மா. ‘
‘தெரிஞ்சவங்க போயி நீதிபதிக்கிட்ட குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்களாம். நமக்குத் தெரிஞ்சவங்க யாரு இருக்காங்க. நம்மதான் பள்ளிக்கூடத்துப் பக்கமே எட்டிப்பாக்கிறதில்லையே. அம்முவுக்கு கின்னா அவ்வளவு ஆத்தரம். குட்டி குமுறிக்குமுறி அழுகிறான். ‘
‘நீயே அழுதுருவ போலருக்கே. ‘
‘பெறகென்னங்க. இவ்வளவு கஸ்டப்பட்டு வெறுங்கையோட வந்தா வயித்தெரிச்சலா இருக்குதுல்ல. ‘
‘யாரு கஸ்டப்பட்டது. நீயா கொழந்தைகளா. ‘
‘எல்லாருந்தான். ‘
‘ஒவ்வொருத்தரும் இப்படித்தான் கஸ்டப்பட்ருப்பாங்க. அத்தனபேருக்கும் குடுக்கணும்னா பிரைசுக் கெங்க போறது. ‘
‘என்னருந்தாலும் மனசு ஆறமாட்டங்குது. ‘
‘தண்ணிய ஊத்தி அமத்து ஆறிப்போகும். ‘
‘அதுசரியே இந்தச் சமயத்துல காசு எங்கருந்து வந்தது. ‘
‘கடன் குடுக்க ஆளா இல்ல. ‘
‘கடன் வாங்கித் துணியெடுக்கணுமாக்கும். அப்படியென்ன அவசரம். ‘
‘கைக்குக் காசு வாறதெப்ப துணியெடுக்கிறதெப்ப. ‘
கீழே உஞ்சவிருத்திக்கிழவரின் மிருதங்கத் தாளம் கேட்டது. கார்மேகவண்ணனின் லீலைகளை நெஞ்சுருகப் பாடிக்கொண்டிருந்தார். எப்போதாவது மைதானத்தை வலம்வந்து குரலைத் தூவிவிட்டுப் போவார். அவர் இருளில் மறைந்த பின்பும் பாடலும் தாளமும் உலவிக் கொண்டிருக்கும். இவ்வளவு காலமாக அவருக்குப் போட்டியாக யாரும் வந்ததில்லை.
அவன் குழந்தைகளை அழைத்தான்.
‘அம்மு தாத்தா வந்துருக்காரு பாரு. ‘
இருவரும் ஓடிவந்தனர். அவன் ஆளுக்கொரு ரூபாய் கொடுத்தான். அதை அம்மா அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.
‘டப்பாவுல ரெண்டு எட்டணா எடுத்துட்டுப் போங்க. ‘
அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
‘வழக்கமா குடுக்கிறதுதான. ‘
‘இனிமே இதுதான் வழக்கம். ‘
திரும்பி வந்த குழந்தைகளுக்கு புது உடையைப் பார்த்ததும் பெரிய பரிசு கிடைத்த பூரிப்பு. அதை அணிந்து அழகுபார்த்து அழகுகாட்டிச் சண்டையிட்டு சமரசமாகி ஆடியடங்க அதிக நேரமானது. குட்டி புதுசிலேயே தூங்கிவிட்டான்.
மறுநாள் அதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் துயிலெழுப்பினார்கள். முரசுகளின் கணுக்கணுவான தாளமும் அதை மொத்தமாகப் பிடித்து வைத்து குப்பென்று மடைதிறக்கும் ராட்சத ஜால்ராவின் முத்தாய்ப்பும் பம்பா நதிபோல் பாய்ந்து வந்தது.
சபரிமலை தேடும் அந்த ஓங்கார நாதம் தேயத் தேய வீட்டுக்குள் வானொலியின் இசை மெல்லப் பரவியது. அவன் பக்திப் பாடல்களைக் கேட்டவாறு படுத்திருந்தான். ஒருவர் கல்வாரி மலையிலிருந்து கணீரென்று அறைகூவினார்.
‘கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார்-ஏசு
தேடுங்கள் கிடைக்குமென்றார். ‘
இன்னொருவர் மெக்காவிலிருந்து உருகினார்.
‘இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை. ‘
மற்றொருவர் ‘சுவாமிமலை….சுவாமிமலை… ‘ என்று நடுக்கத்தில் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு கானகத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளணும் போலிருந்தது அவனுக்கு. அப்போது சமையலறைக்குள்ளிருந்து அசரீரி வந்தது.
‘பாட்டுக் கேட்டது போதும். பாடத்த எடுத்துப் படிங்க. ‘
அவன் அவசரமாக எழுந்துபோய் வானொலியை நிறுத்தி விட்டு முகங்கழுவப் போனான். பள்ளிக்கூடம் தந்த பாட்டுப் புஸ்தகங்கள் உரலோரம் குப்பைக் கூடையில் கிழிந்து கிடந்தன.
நீரினால் தூக்கக் கலக்கத்தைப் போக்கிவிட்டு வரும்போது ஒரு மூலையில் அமர்ந்திருந்த அம்மு பாடத்தை சுலோகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அலமாரிக்கு முன்னால் மண்டியிட்டிருந்த குட்டி கண்ணாடியை ஒருமுறை வெறித்துவிட்டு பைக்குள் பாரத்தைத் திணிக்க ஆரம்பித்தான். கண்ணாடியில் கோகுலக்கண்ணன் குழலூதிய இடத்தில் அவன் நேற்றிரவு கஷ்டப்பட்டுக் கட்டமிட்டெழுதிய கால அட்டவணை ஒட்டியிருந்தது.
- எப்போது…
- ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்
- கவிதைகள் மூன்று
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்
- ஈரானிய சினிமா
- வாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே
- காதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)
- அறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)
- செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- சுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- காத்திருத்தல்
- இரவுக் காட்சிகள்
- கவிதைக்குள் நான்
- ஒருத்தருக்கு ஒருத்தர்
- இன்னும் ஒரு உறவு
- பதவி! பதவி!
- இன்றாவது வந்து விடு.
- பெய்பேய் மழை!
- கண்ணிவெடி
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்
- சென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)
- பங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்
- ஈரானிய சினிமா
- அனுபவ மொழிகள்
- தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)
- போட்டி