பேரழிவுச் சூலாயுதம்!

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

சி. ஜெயபாரதன்


யாமறிந்த
பேரழிவுப் பூத ஆயுதங்களில்
பூமிதனில்
சுனாமிபோல் காணவில்லை!
பனிரெண்டு நாடுகளில் மாந்தரை
குத்தூசி போல் ஊடுறுவி
இழுத்து வந்ததை
இன்றுவரைப் பார்த்ததில்லை!
நாமெல்லாம்
பாமரராய், அறியாத பாலர்களாய்
அப்பாவிகளாய்
பாதுகாப்பின்றி
ஏது அறிவிப்பின்றி
கடற்கரையில்
ஆயிரம் ஆயிரம்
உயிர்களைப் பறிகொடுத்து,
தப்பினோர்
அனாதைகளாய், அகதிகளாய்
வாழ்ந்திடுதல் முறையோ
சொல்லீர்!

யாமறிந்த
கடற்கரையில்
சூறாவளி வருமுன்
காற்றடிக்கும்! கடல் குமுறும்!
மேகம் இடிக்கும்! மின்னல் வெடிக்கும்!
பேய்மழை ஓங்கி அடிக்கும்!
வீட்டுக்குள் ஓடி
பூட்டுப் போட்டுக் கொள்ளலாம்!
யாமறியா
கடற்கரையில்
தென்றல் வீசும்! திரைகடல் பாடும்!
தேனிலவு பொன்முலாம் பூசும்!
வேனிற் கால
வெயில் அடிக்கும்! வேர்த்துக் கொட்டும்!
சங்கநாத மகுடி ஊதி
பொங்கலைகள் கரையேறி
படமெடுப்பதை
பள்ளியிலே படித்திலோம்!
பாயும் முன்பு
அலை அரக்கி
தலை வணங்கி
திரை கடலுக்குள் மறைவதை
கரைகளிலே கண்டிலோம்!

யாமறியா
திரைகடலில்
திமிங்கலம்
கரைமேல் ஏறி
மீனவரைக் கவ்விச் செல்லும்!
வேங்கை போல் பாய்ந்து
வீட்டுச் சிறுவரை
வேட்டை யாடிச் செல்லும்!
இராணுவ உடையின்றி
இரகசியப் படைபோல் நடித்து
நரபலி செய்வதை
வரலாற்றில் அறியோம்!
பூனை போல் பதுங்கி
புலியைப் போல் தாக்கி
யானை போல் மிதிப்பதை
மாநிலத்தில் கண்டிலோம்!

யாமறியா
பாதாள பைரவி,
வேதாள சுனாமி,
கடற்கரையில்
இனத்தைப் பார்த்தோ,
ஜனத்தைப் பார்த்தோ,
மதத்தைப் பார்த்தோ,
நிறத்தைப் பார்த்தோ,
குணத்தைப் பார்த்தோ,
மொழியைப் பார்த்தோ,
வயதைப் பார்த்தோ
ஊரைப் பார்த்தோ
காலன் விருந்துக்கு
ஓலை
அழைப்ப வில்லை!

சுனாமியின் அரிவாள்
முனை மழுங்கிப் போனபின்
மனிதரின்
மூளை கூர்மை ஆனதடா!
நயாகரா அருவி மடை திறந்து
உலக விழிகளில்
நைல் நதி ஓடுமடா!
கண்ணீர்த் துளிகள் ஆறாய்ப் பெருகி
நிதி வெள்ளம் திரண்டதடா!
உதவிக் கரங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து
நீண்ட போது
இமயத்தின் சிகரம் தாழ்ந்ததடா!
குமரியின் சிரம் உயர்ந்ததடா!
குலத்துக் கோர் நீதி கூறும்
மனுநீதி
மறந்து போனதடா!
பொதுத் துயரைப் பங்கிட்டு
பேரழிவைக் கையாள,
சீரழிவைச் சீர்ப்படுத்த
உலகக் கரங்கள் ஒருங்கிணைத்து
உதவச் செய்தான்,
புதுநீதி
செதுக்கி வைத்த அகிலச்
சிற்பி!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 1, 2004)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா