பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

பா.சத்தியமோகன்


2331.

நிலையான மாமடம் என்று

திருப்பாட்டினுள் குறிக்கப் பெற்ற பதிகத்தை —

கோவிலில் வீற்றிருக்கின்ற பெரும் பொருளான இறைவரைத் —

துதித்துப் புகழும் பதிகத்தைப்

பண்ணுடன் பாடி வணங்கி

பொன்னி மாநதிக்கரையினில் (காவிரி) மீளவும் வந்து சேர்ந்தார் ;

சொன்னவாறு இறைவரை அறியக்கூடிய பிள்ளையார் —

திருத்துருத்தியில் இறைவரைத் தொழுதார்.

( “தொழுமாறு’’ எனும் பதிகம் திருவழுந்தூரில் அருளினார்)

2330.

அலைகளுடைய காவிரிப் புனல் சூழ்ந்த திருத்துருத்திதனில்

‘‘வரைத்தலைப் பசும்பொன்’’ எனும் வளமையுடைய திருப்பதிகம் பாடி

தனது உடலால் நிலம் பொருந்தப் பணிந்தார்

பின்-

உலவும் அக்காவிரி ஆற்றின் கரையில்

திருமூவலூர் இறைவரைப் பணிந்தார்.

2333.

உருகிய மொழியினால்

மூவலூர் உறையும் முதல்வரை துதித்தார்

மேவிய காதலால் போற்றினார்

விருப்பத்துடன்

மலர்களை அலம்பும் குளிர் நீர் வயல்கள் சூழ்ந்த

சீகாழியின் (புகலி) தலைவரான சம்பந்தர்

பொய்கைகள் சூழ்ந்த மயிலாடுதுறை வந்தார்.

2334.

மிகுந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையில்

செல்வம் மிக்க அந்தணர்கள்

தொண்டர்களுடன் கூடி

எதிர்கொண்டு வரவேற்கும்படியாக

கொல்லையில் வாழும் மான்கன்றை கையில் உடைய இறைவரின்

கோயிலுள் புகுந்து இறைஞ்சினார்

எல்லை இல்லாத இன்பம் பெருகிட எழுந்தார்.

2335.

வள்ளல் தன்மையுடைய பிள்ளையாரின் உள்ளம்

பரிவு கொண்டு உருகி

வெள்ளம் தாங்கிய சடையரான இறைவரை

விளங்கும் சொல்பதிகத்தால் பாடினார்

தெளிந்த

இனிய இசை கூடிய திளைப்புடன் வெளியே வந்து

வளமுடைய அந்தப் பதியில் மகிழ்ந்து இருந்தார்.

2336.

அத்தலத்தினின்று நீங்கியபின்

அழகு சூழும் சூலப்படை கொண்ட வீரரான இறைவரின்

‘’திருச்செம்பொன் பள்ளி’’ எண்ணினார்

பிறகு

மெய்த்த காதலுடன்

திருவிளநகர் உடைய இறைவரின் திருவடிகளை

அடியார்களுடன் கூடிப்பணிந்து

இசையுடன் திருப்பதிகம் பாடினார்.

( ‘‘மருவார்’’ எனத் தொடங்கும் பதிகம்

திருச்செம்பொன் பள்ளியில் அருளப்பட்டது)

2337.

நிறைவான வேதத்தலைவரான பிள்ளைவேந்தர்

திருப்பதிகம் பாடிய திருவிளநகர் என்ற அப்பதி பணிந்து

பிறகு

திருப்பறியலூர் வீற்றிருக்கும்

கொன்றை இதழ்களும் தும்பையும் அடம்ப மலரும் சூடும்

சிவந்த சடை உடைய சிவனாரின்

திருவீரட்டானம் அடைந்து வணங்கினார்.

2338.

சிவபெருமானின் திருப்பறியலூர் வீரட்டத்தைப் பணிந்து

பொருந்திய அன்பால் அங்கு நின்றார்

பிறகு

கடலின் கரையினை மேவினார்

அரவம் அணிந்த இறைவரின் பதிகள் பல சென்றார்

முன் நின்று வணங்கினார்-

சிரபுரத்தவரான பிள்ளையார்

திருத்தொண்டர்களால் வரவேற்கப்பட்டார்.

( ‘‘கருத்தன’’ எனத் தொடங்கும் பதிகம் திருப்பறியலூரில் அருளினார்)

2339.

தொண்டர்கள் களிப்படைய

திருசேட்டக்குடி சென்று பணிந்து அங்கு

மணம் கமழும் பூக்களுடைய வயல்கள் நிறைந்த

சோழநாட்டின் பெரும்பதிகள் கலந்து வணங்கினார்

சமண சாக்கியர் கொள்கைகள் பழுதெனக் காட்டி

உலகம் உய்யும் நெறி காட்டும்

பவள வாயுடைய பிள்ளையார்

கொடிகள் கட்டப்பட்ட தருமபுரம் அடைந்தார்.

( ‘‘வண்டிரைக்கு’’ எனத் தொடங்கும் பதிகம் திருவேட்டக்குடியில் அருளினார்)

2340.

தருமபுரம் என்பது

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் பிறப்பிடம் ஆதலால்-

அவரது சுற்றத்தினர் வந்து எதிர் கொண்டு

அடி வணங்கி வாழ்த்தினர்.

அதைக்கண்டு பெருமை கொண்ட பெரும்பாணர்

அவர்களுக்கு

ஆளுடைய பிள்ளையார் அருளிய அரிய திருப்பதிகங்களை

தம் யாழில் இட்டுப் பயிற்றப்பெறும் பெரும் பேறு பெற்றார்.

(யாழினில் பாடுதல்- சம்பந்தர் தாளம் இட,

அதனைத் தொடர்ந்து யாழில் அப்பதிகம் இசைத்தல்)

2341.

உறவினர்கள் அதனைக்கேட்டு

“திருப்பதிகத்தில் கிளர்ந்த ஓசை அளவு பெறும்படி

யாழ் எனும் இசைக்கருவியில் நீவீர் அமைத்து வாசிப்பதால்

உலகெலாம் அந்த இசை வளர்வது நிகழ்கின்றது”

என விளம்பியதும்

உளம் நடுங்கிய திருநீலகண்டப் பெரும்பாணர்

ஞானசம்பந்தப் பெருமானின் திருவடிகளில் வணங்கிச் சொல்லியது:-

2342.

“அளவிற்கு உட்படாத திருப்பதிக இசை

கருவியிலும் அளவுபடாத வகை கொண்டது

அதனை

இவர் தவிர

உலகினரும் தெரிந்து அறிந்து உய்யுமாறு

உணர்த்தும் பண்பால்

பலரும் புகழும்படி

திருப்பதிகம் பாடி அருள்கின்ற பேறு பெற்றால்

பண்பினால் நீளும் அந்த இசையினை

யாழில் அடங்காத நிலையை

நான் எடுத்துக் காட்டப் பெறுவேன்” என்று

பிள்ளையாரிடம் சொன்னார்.

2343.

வேதநெறி வளர்ப்பவரான பிள்ளையாரும்

காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவரின் திருமுன்பு நின்று

திருப்பதிகத்தின் உண்மைத்திறம்

புவியில் உள்ளோர் கண்டபாட்டினாலோ (வாய்ப்பாட்டு)

கருவியாலோ

வேதங்களில் இசைநூல்களாலோ

நாதவகை முயற்சியினாலோ

அடங்காத வகையை

அறியக்காட்டுமாறு

“மாதர் மடப்பிடி” எனத் தொடங்கும் பதிகத்தை

வானவரும் வணங்குமாறு பாடினார்.

2344.

வண்புகலி வேதியனார் ஆகிய சம்பந்தர்

“மாதர் மடப்பிடி” எனத் தொடங்கி வனப்புடன் பாடி

பண் பயில்கின்ற திருக்கடைக்காப்புச் சார்த்தி முடித்தார்

அங்கு சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்

யாழ்க்கருவியினில் முன்பு போல

அப்பதிக இசையை இசைக்கப் புகுந்தார்

அப்பதிக இசை

யாழ் நரம்பில் வைத்து வாசிக்க அடங்காமல் போயிற்று.

2345.

அப்பொழுது

திருநீலகண்டயாழ் இசைப் பெரும்பாணர்

வாசிப்பதை விட்டார்

உடலில் பயமும் பரிவும் உற்றார்

பிள்ளையார் திருவடிகளில் விழுந்து எழுந்து நோக்கி

“இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்தின் இசையை

யாழில் இசைப்பேன் என்று சொல்லி

கருவியை நான் தொடுதலால்தானே இப்படி உண்டானது”

எனத் தெளிந்து

அதற்கேற்ப செயல் செய்வாராகி-

2346.

“முறுக்கிக்கட்டியதால் புடைக்கும் நரம்பு கொண்ட யாழினால்

இக்குற்றம் உண்டானது” என

அதனை முறிக்க ஓங்கியதும்

உலகம் செய்த பாக்கியத்தின் மெய்வடிவாய் உள்ள

பாலறா வாயரான பிள்ளையார்

பாணரின் செயல் தடுத்து —

“ஐயரே! பொருந்திய இசைநூலில் விதித்த அளவுப்படி

நீவீர் இயற்றும் இந்த யாழ் கருவியைத்தாரும்” எனப்பணிந்து

அதனைத் தம்கையில் வாங்கிக் கொண்டார்.

2347.

“ஐயரே! நீவீர் இந்த யாழை முறிப்பது ஏன் ?

ஆளுடைய பிராட்டியுடன் கூடிச்

சிவந்த சடை உடையாரின்

திருவருளின் பெருமையெல்லாம் தெரிவதற்கு

நம்மிடமுள்ள இக்கருவியின் அளவு அடங்குமோ ?

நம் இயல்புக்குத் தக்கவாறு

இவ்வையகத்தோர் அறியும்படியாக

இந்த கருவியின் அளவுக்குள் அமையும் நிலையில்

இயற்றுவதே வழக்கமாகும்” என்றார்.

2348.

“சிந்தையால் அளவுபடுத்தப்பட முடியாத இசைப்பெருமை

செயலால் அடைய முடியுமோ!

நீவீர் இந்த யாழினைக் கொண்டு

இறைவர் திருப்பதிக இசையை

இதனுள்

பொருந்தி வந்த அளவில் பாடி வாசீப்பீராக” எனப்

பாணனாரின் கையில் கொடுத்தார் புகலி மன்னர்

பெற்றுக்கொண்ட நீலகண்டப் பெரும்பாணர்

அதனைத் தலை மீது வைத்து ஏற்றுக் கொண்டார்.

2349.

சேர்கின்ற சுற்றத்தாருடன் பெரும்பாணர்

ஆளுடைய பிள்ளையாரின்

மலர் போன்ற திருவடிகளை போற்றி வணங்கினார்.

தோணிபுரத் தோன்றலாரான ஞானசம்பந்தரும்

ஒப்பிலாத பெரும் சிறப்புகளை அவர்களுக்கு அளித்தார்

தொண்டர்களுடன் அப்பதியில் இனிதே அமர்ந்திருந்தார்

பின்பு அவர்

நெடுங்கை மதயானை உரித்த சிவனாரின்

பிறபதிகளை பணிவதற்காகச் சென்றார்.

2350.

தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த

வயல்களையுடைய சோழநாட்டின்

பெரிய பதிகள் பலவும் அடைந்து

மங்கையொரு பாகத்தரான சிவனாரின்

பிற பதிகள் பலவும் மகிழ்ந்து போற்றினார்

சிவந்த கைகளில் மானையும் மழுவும் ஏந்தும்

சினமுடைய விடையினரான சிவனாரின்

அருள் மிகுந்த “திருநள்ளாறு” எனும் தலத்திற்கு

இசை பொருந்திய பாணருடன்

அந்தணர் தலைவரான பிள்ளையார் சேர்ந்தார்.

2351.

திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் இறைவரின்

திருத்தொண்டர் கூட்டம் நயந்து சென்றது

எதிர் கொண்டு விரும்பி

ஞானசம்பந்தரை வரவேற்றுக் குலவியது

தெளிவான கங்கை ஆறு சூடிய சடையுடைய இறைவரின் திருமுன்பு

செல்வம் வளரும் கோபுரம் இறைஞ்சி

வலம் வந்து

ஞான உணர்வு மிகுந்த பிள்ளைப் பெருமான்

வணங்கி எழுந்தார்.

2352.

உருகுவதற்கு காரணமான அன்புறு காதலால்

மனம் உருகி

அதனால் நனைந்து ஈரம் பெற்றவர் போல

பொருந்திய திருமேனி முழுவதும்

முகிழ்ந்த மயிர்ப்புளகம் வளர்க்கும் நீரென

திருநயனத்தில்

அருவி போன்று வழிகின்ற ஆனந்தக்கண்ணீர்

அலையுமாறு நின்று ஒப்பிலா பதிகமான

“போகமார்த்த பூண் முலையாள்” எனத் தொடங்கிப் போற்றினார்.

( நயனம் –
கண்கள்)

2353.

யாழ் நரம்பில் பொருந்தும்படி

இயல் தமிழும் இசைத் தமிழும் கூடும்படி

அளவற்ற கற்பகாலங்கள்

விண்ணுக்கு அப்பாலும் நிலை பெற ஓங்கும்

திருக்கடைக்காப்பு சாத்தி அருளினார்

செங்கண் உடைய

பாம்பணியுடைய மார்பரான இறைவரின் திருவடி துதி செய்தார்.

புறமுற்றம் அடைந்தார்

“உலகம் துதிக்கும் பெரும்பாணரை

யாழில் இயற்று” என பாலறாவாயர் பணித்தார்.

2354.

பிள்ளையார் திருத்தாளம் கொண்டு பதிகம் பாட

பின்பு

பெரும் பாணர்

தெள்ளிய அமுதமான

இன்னிசைத் தேன் பொழியும் நரம்புகளுடைய யாழை

பண் அமைதி சிறக்கச் செய்து

பதிக இசை அமைத்துப் பாடும்போது

உலகினர் களி கூர்ந்தனர்

விளங்கும் சண்பை வள்ளலார் (பிள்ளையார்)

திரு உள்ளம் கொண்டு

தொண்டர்களுடன் அங்கு தங்கியிருந்தார்.

2355.

நிலைத்த திருநள்ளாற்று மருந்தான இறைவரை

வணங்கிப் புறப்பட்டார்

மணமுடைய நல்லநீர் பொருந்திய

காவிரி பாய்ந்து

பல வளங்களும் தரும் சோழநாட்டின் அருகிலுள்ள

பல தலங்களும் போற்றினார்

செந்நெல் வயல்களிலே செந்தாமரை மலர்கள்

மாதர் முகம் போன்று பூக்க இடம் தருகின்ற

திருச்சாத்தமங்கை எனும் பழம் பதியை நெருங்கினார் —

சைவசிகாமணியான பிள்ளையார்.

2356.

நிறைந்த செல்வமுடைய

திருசாத்தமங்கைதனில் வாழும் திருநீலநக்க நாயனாரும்

சைவ அந்தணரான பிள்ளையார் எழுந்தருளும் செய்தி கேட்டு

பெரு வாழ்வு அடைந்தவராகி

வழி எல்லாம் விளக்கம் செய்து

எங்கும் இடை இடையே

நெருங்கிய தோரணங்களும்

வாழை , பாக்கு மரங்களையும்

ஆங்காங்கே நிறைகுடம் தூபதீபம் அமைத்து —

வரவேற்க வேண்டிய முறைப்படி வந்து எதிர் கொள்ள

ஞானசம்பந்தர்

முதல்வனார் கோயில் சார்ந்தார்.

2357.

அயவந்தி எனும் அக்கோயிலில் அமர்ந்து அருள் செய்யும்

இறைவரின் திருக்கோயில் பக்கம் சார்ந்து

தேவர்கள் உய்யும் பொருட்டு

வந்தனைகள் செய்து

திருமுன்றிலின் பக்கமாக வலம் வந்து உள்ளே புகுந்தார்

சிவப்புமயமான மதிச்சடைகொண்ட சிவபெருமானின் திருமுன் தாழ்ந்தார்.

இந்த வையம் முழுதும் செய்த தவத்தால்

இப்புவி மீது வந்து தோன்றிய அந்தணரான சம்பந்தர்

தம் செங்கையினைத்

தலை மீது குவித்து வணங்கி எழுந்து நின்றார்.

2358.

போற்றி இசைக்கும் பாடல்களால்

மேலும் மேலும் பொங்கி எழும் அன்பினால்

கண்ணீர் பொழிந்து விம்மினார்

காளையூர்தி மீது வீற்றிருக்கும் இறையவர் திருமுன் நின்று துதித்தார்

அளவுக்கோ எல்லைக்கோ உட்படாத

சைவத்திரு நீற்று நெறி விளக்கும் அந்தணரான பிள்ளையார்

திருநீலநக்க நாயனாரின் இல்லத்தில் தங்கினார்

அன்பர்களோடு இன்பம் பொருந்தி உண்டு அருளினார்.

2359.

நீண்ட திருநீலநக்க நாயனாரின்

பெரிய இல்லத்தில் விருந்து அமுது செய்தார்

நல்ல நீர்மையுடன் பாடும்

திருநீலகண்ட யாழ்பாணரும் உடன் தங்கினார்

அங்கு பள்ளி அமந்து ஆடும் இறைவரின்

அயவந்தியினைப் பணிவதற்கு அன்பர்களுடன் சேர்ந்து சென்று

நாடிய நட்புடைய நீலநக்க அடிகளுடன்

இறைவனது கழலில் தாழ்ந்து-

2360.

குற்றமற்ற அரிய அமுதம் போன்ற இறைவரை

அழகிய இளம் கொம்பு போன்ற அம்மையாருடன் வணங்கி வாழ்த்தினார்

ஆடி மறைகளின் பொருளால்

அரிய தமிழின் திருப்பதிகம் பாடத் துவங்கினார்

வேத ஆகம விதிப்படி ஒழுகும் திருநீலநக்கரின்

பெரும் சிறப்புக்கள் நிகழுமாறு

திருநீற்று நெறித் தொண்டர்கள் போற்றும்

புனித இயல் இசை உடைய பதிகம் அருளிச் செய்தார்.

(“திருமலர்க் கொன்றை” எனும் பதிகம் திருச்சாத்தமங்கையில் அருளினார்)

2361.

பாலறாவாயரான ஞானசம்பந்தர்

போற்றிய காதலால் பணிந்து

அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து

பொருந்திய நட்பு கொண்ட நீலநக்க அடிகளின்

விருப்புடைய ஆசையினால் அங்கு தங்கியிருந்த நாளில்

பாம்பு அணிந்த சிவனாரின் பிறபதிகளும் பணிவதற்கு ஆசை எழ

அன்பினால் அங்கங்கு செல்வாராகினார்

அறிவும்

உள்ளத்தில் எழும் கருத்தும் ஒன்றேயான திருநீலநக்கரிடம்

மகிழ்வுடன் விடைபெற்றார்.

— இறையருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்